சமையல்காரர் எடுத்து வந்த உணவு அப்படியே இருந்த இடத்தில் இருந்தது. பசித்தாலும், உணவை எடுத்து உண்ணத் தன்மானம் தடுத்தது கருடேந்திரனுக்கு. பசி எடுக்காததால் மேகஸினில் மூழ்கிப் போனாள் ரிதுசதிகா. அவளுக்கு எதிராகக் காலியாக இருக்கும் இருக்கையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
ஒரே ஒரு விழித் தீண்டலை, அவன் மீது செலுத்தியவள் பழையபடி பார்வையைத் திருப்பிக் கொள்ள, வலது ஐவிரல்களை தாடைக்குக் கீழ் மடக்கி வைத்தவன் முழுப் பார்வையையும் அவள் மீது செலுத்தினான். அதை உணர்ந்தாலும், மதிப்பளிக்காது அப்படியே இருந்தவள் மீதான எண்ணத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான் கருடன். அவனைப் பொறுத்தவரை இந்த நொடியில் கூட ராட்சசியாகத் தான் தெரிந்தாள் கட்டியவள்.
ஆனாலும், அவள் உதட்டின் மீதான பார்வையை எந்த ரகத்தில் சேர்ப்பது என்ற தனிக் கணக்கு, யோசனைகளுக்கு நடுவில் யோசனையாக உலா வர, ‘ச்சைக்! இவளைச் சைட் அடிக்கிறதும் ஒன்னு தான், சாக்கடையில விழுந்து எந்திரிக்கிறதும் ஒன்னு தான்.’ அந்த நினைப்பை அவமானப்படுத்தினான்.
அந்த அவமானம் பத்து நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. தன்னால் அவன் பார்வை அங்குச் சென்றது. எதையோ தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறாள் போல. அந்தத் தீவிரத்திற்கு ஏற்பப் புருவங்கள், கரையைத் தொட்டுச் செல்லும் அலையாக அடிக்கடி தொட முயற்சித்தது. இமை முடிகள் கொஞ்சமும் நகராது பிடிவாதமாக நிற்க, கருவிழிகள் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இவைகளுக்கு நடுவில், அவனுக்கு விருப்பமான அதரங்கள் வளைவதும், நெளிவதும், சற்றென்று சுருங்குவதுமாக உயிரோட்டமாக இருந்தது.
அழகுச் சிலையும், மெழுகுச் சிலையும் பல இருக்கிறது இந்த உலகில். இவள் யார், பதுமையான வெண்ணெய்க் கட்டியாய் இருப்பது! மேனியில் ஒரு இடத்தில் கூடக் கருமை இல்லை. ஒட்ட வெட்டிய கேசமும், சின்னதாக மீன் முள்ளைப் போலிருக்கும் புருவங்களும் மட்டும்தான் விதிவிலக்காக இருந்தது. பித்தளைப் பாத்திரங்களைத் துலக்கி வைத்தது போல், சுத்தமாக இருந்த தோலில் எத்தனை ஆராய்ச்சியை நடத்தினாலும் சின்னப் புள்ளியைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பணம், முழுவதும் அவள் மேனியை அலாவுதீன் விளக்காகப் பாதுகாத்து வைத்திருந்தது. இவள் அழகைப் பராமரிக்க, இவளை விடப் பணக்காரனால் மட்டும்தான் சமாளிக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தவன், ‘தன்னுடைய சம்பாத்தியம் நகப்பூச்சுக்குக் கூட உதவாது’ என்ற பெருத்த ஏமாற்றத்தை அடைந்தான். வாழ்ந்தால் இவளைப் போல் வாழ வேண்டும், என்று ஒரு நடுத்தர வர்க்கமாக நினைத்தவன்,
‘எவன் மாட்டிக்கிட்டு முழிக்கப் போறானோ?’ என அவனை நினைத்து அவனே பரிதாபப்பட்டான்.
பார்வை கையில் இருக்கும் புத்தகத்தில் இருந்தாலும், உணர்வு முழுவதும் புதிதாகத் தன்னுடன் உறவானவன் மீது தான் இருந்தது. வாழைப்பழத் தோலை உரிப்பது போல், விழியால் தன் அழகை உரித்துக் கொண்டிருக்கும் அவன் பார்வையின் அனலைத் தாங்க முடியாது,
“என்ன?” எனக் கேட்டாள்.
பதில் ஏதும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கி, இரு தோள்களையும் பந்தாவாகக் குலுக்க, கூர்மையான முறைப்பை அவனிடத்திற்கு அனுப்பியவள் புத்தகத்தில் கவனமானாள். ரிதுவின் செயல்களைக் கண்டு பட்டும் படாமல் இதழை நகர்த்தாமல் நகைத்தவன், இன்னும் வசதியாகச் சாய்ந்து கொண்டு கால்களை ஆட்டினான்.
வசதியாகச் சாய்ந்ததில் அவள் பக்கம் கால்கள் நகர்ந்தது. தன்னை உரசும் அளவிற்கு நீண்டிருக்கும் அவன் கால்கள் மீது பார்வையை நகர்த்தியவள் சினத்தை உயர்த்த, “ஈஈஈ… சாரி!” எனப் பெரிய மனது வைத்துக் கொஞ்சமாக நகர்த்தினான்.
இந்த முறை பல்லைக் கடித்துக் கோபத்தைக் காட்டினாள். அதற்குப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், சிறிது நேரம் அடங்கி அமர்ந்தவன் மீண்டும் கால்களை அவள் புறம் நீட்டினான். தன் கால் பெருவிரலை லேசாக உரசுபவன் செயலில் தீ பற்றிக் கொண்டது. நீலகண்டனின் உடல் ஆலகால விஷத்தால் நிறம் மாறியது போல், சினத்தால் சிவப்பு நிறத்தில் மாறிப் போனவள்,
“தள்ளுடா…” என அந்தக் காலை எட்டி உதைத்தாள்.
“ஒரு ஆம்பளைப் பையனை எட்டி உதைக்கிற, அறிவில்ல?”
“அந்த அறிவு உனக்கு இருக்கா? இன்னும் காலத் தூக்கி என் தலை மேல வையேன்.”
“ஓஹோ! அதான் உன் கோபமா?” என்றவன் கால்களை உயர்த்தினான் அவள் தலைக்கு.
“கால உடைச்சிடுவேன்!”
“நீங்கதான முதலாளி, தலையில வைக்கச் சொன்னீங்க.”
“முதலாளியா!”
“ஆமா முதலாளி! இன்னைல இருந்து நீங்க எனக்கு முதலாளி. உங்களுக்குச் சேவை செய்யற ஆட்டோக்காரனா, என் வாழ்க்கையை வாழ முடிவு பண்ணிட்டேன்.”
இல்லாத மூன்றாம் கண்ணைத் திறந்தவள், “என்னடா, என்ன பிளான் பண்ற?” கேட்க,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க முதலாளி.” எனக் கை இரண்டையும் கக்கத்தில் கட்டிக்கொண்டு, அநியாயத்திற்குக் குனிந்து அடிபணிந்தான்.
இப்போதுதான் அவளின் சந்தேகம் அதிகரித்தது. கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்தவள், ‘சீனாதானா’ உளவாளிப் பார்வையைக் கையில் எடுத்தாள். விழியால் ஊடுருவித் தன் உள்ளத்தில் இருக்கும் எண்ணத்தைப் படிக்கப் பார்க்கும் தன்னவள் செயல் புரிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்,
“டைரக்டா டீல் பேசிப்போமா?” என்றான்.
“அப்படி வா வழிக்கு. ஆட்டோக்காரன், அர்த்தமில்லாம அர்த்த ராத்திரில ஹாரன் அடிக்க மாட்டானே.”
“அடடடா! பழமொழி தூக்கல் முதலாளி!”
“ரொம்ப நெஞ்ச நக்காம விஷயத்துக்கு வா…”
“முதலாளி!” எனச் சினம் கொண்டவன், “தப்புத் தப்பாப் பேசாதீங்க.” என்றிட,
“உனக்கு இந்த நடிப்பு செட் ஆகலடா, அப்பட்டமா நடிக்கிறன்னு தெரியுது.” என்றாள்.
இரு கைகளையும் கட்டிக் கொண்டிருந்தவன், ஒரு கையை விலக்கி லேசாகத் தலையைச் சொறிந்தான். எவ்வளவு சொல்லியும் நடிப்பை விடாதவன் முகத்தில் புத்தகத்தைத் தூக்கி அடித்தாள். தன்னைத் தற்காத்துக் கொள்ள அதைத் தாவிப் பிடித்தவன்,
“எப்படி முதலாளி, கண்டு பிடிச்சீங்க?” எனப் பல்லைக் காட்டினான்.
“நீயும் சரி, நானும் சரி! கத்திய எடுத்துக் குத்தக் கூடத் தயங்காத ஆளுங்க. இந்த மண்டி போடுறது, மன்னிப்புக் கேட்கிறது இதெல்லாம் நம்ம சரித்திரத்துலயே இல்லை.”
தன்னைப் பார்த்த இந்தச் சில நாள்களிலேயே, அழகாக எடை போட்டு வைத்திருக்கும் தன்னவள் அறிவை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன், “எனக்கு இந்த லைஃப் செட்டாகாது. உனக்கும் இது சூட் ஆகாது. தேவை இல்லாத கல்யாண பந்தத்துல எதுக்காக வாழனும்?” என அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பரபரப்பாக மாறியது அவள் முகம்.
அதைக் கண்டவன் பேச்சை நிறுத்த, “ஏன்டா நிறுத்துற, நான் கிளம்புறேன்னு சொல்லிட்டுக் கிளம்பு. உனக்கு என்ன வேணுமோ, அதை நான் பார்த்துப் பண்றேன்.” என இப்போது அவள் நடித்தாள்.
“பணத்துக்குப் பல்லக் காட்டுற ஆளு நான் இல்லடி!”
“முதலாளி! முதலாளி…”
“ஹான், பணத்துக்குப் பல்லக் காட்டுற ஆள் நான் இல்ல முதலாளி.”
“குட்!”
“உன்கிட்ட இருந்து எனக்கு முழுசா விடுதலை வேணும். என் கன்னியப்பன் முதல் கொண்டு எல்லாமே வேணும். அதுக்கு அந்தப் பத்து லட்சத்தை முடிவுக்குக் கொண்டு வரணும். என் தம்பிய அவ்ளோ மோசமா நடத்துனது யாருன்னு தெரியணும். வெட்டியா நமக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு இருக்காம, அதுக்கான வேலைய ஆரம்பிக்கலாம். உன் மேல எந்தத் தப்பும் இல்லன்னு நிரூபிச்சிட்டு டைவர்ஸ் அப்ளை பண்ணு. என் வீட்டுப் பிரச்சினை எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, எந்தப் பிராப்ளமும் பண்ணாம மியூச்சுவலா நானும் ஓகே சொல்றேன். ரகசியமா நடந்த இந்தக் கல்யாணத்தை ரகசியமாவே நமக்குள்ள முடிச்சிப்போம்.”
அவன் சொல்லிய அனைத்தும், அவளுக்குள் இருக்கும் சிந்தனைகள் தான். அதற்கான வழிமுறைகளில் இறங்குவதற்குள் தான் இத்தனைச் சலசலப்பு. அவன் எண்ணத்திற்கு முழுச் சம்மதம் சொன்னவள்,
“எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் பேச்சு மாறக்கூடாது.” என்றிட, “நீ மாறாம இருந்தால் போதும்.” என்றான்.
“அய்ய! உன்கூடச் சேர்ந்து வாழ என்னைக்கும் எனக்கு ஆசை வராது. இந்த மாதிரி முட்டாள்தனமா யோசிக்கறதை விட்டுட்டு வேலையப் பாரு.” என்றவள் இருக்கையில் தளர்வாகச் சாய்ந்து அவனைப் போல் கால் மீது கால் போட்டுக் கொண்டு,
“ஒருவேளை, உனக்கு வரலாம்.” என்றாள் கண்ணடித்து.
“ஹாஹா… எனக்கா?” எனச் சத்தமிட்டுச் சிரித்தவன், “இந்த வீடு மூச்சு முட்டுது. அதுவும் உன்ன மாதிரி ஒருத்தியை ஒரே ஒரு செகண்ட் கூடப் பொண்ணாய் பார்க்க முடியல. என்னைப் பொறுத்த வரைக்கும், நீ ஒரு பணப்பிசாசு. உன் கூட வாழறதும் ஒன்னு தான், தூக்குப் போட்டுச் சாகுறதும் ஒன்னு தான்.” என்றவன் வார்த்தைக்கு அமைதியைப் பதிலாகக் கொடுத்தாள்.
“ஹலோ!” எனச் சொடக்கிட்டவன், “என்ன முதலாளி, அமைதியா இருக்கீங்க, டீலுக்கு ஓகேவா?” கேட்டான்.
“எல்லாம் சரிதான். ஆனா, நான் எந்தத் தப்பும் பண்ணலைன்னு நிரூபிச்சிட்டா என்னடா பண்ணுவ?”
“பொய்ய உண்மைன்னு நிரூபிக்க முடியாது முதலாளி!”
“ஒருவேளை, நான் எந்தத் தப்புமே பண்ணாம என் கழுத்துல தாலி கட்டி இருக்கேன்னு தெரிய வந்தா என்ன பண்ணுவ?” என்ற கேள்விக்கான பதிலை வெகு நேரமாக யோசித்துக் கொண்டிருந்தும் பதில் கிடைக்கவில்லை.
“திடீர்னு எங்க இருந்தோ வந்தவன், இப்படி அதிகாரம் பண்ற அளவுக்கு முட்டாளா இருந்திருக்கியேன்னு என் எண்ணம், என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுது. சம்பந்தமே இல்லாம கழுத்துல இருக்க இந்தக் கயிறு, ஒரு ஆட்டோக்காரனுக்குப் பொண்டாட்டியா நீன்னு நக்கல் பண்ணுது. எனக்கு இது எல்லாத்துக்கும் பதில் வேணும். இதுக்கான பதிலைத் தர மாதிரி இருந்தா, உன்னோட டீலுக்குச் சம்மதிக்கிறேன்.” என்றவள் பேச்சுக்கு இந்த முறை அமைதியாக இருப்பது கருடேந்திரன் முறை.
“ஹலோ ஆட்டோக்காரா…”
“சொல்லு!”
“நீ தான் சொல்லணும்!”
“ஒருவேளை, எந்தத் தப்புமே பண்ணாம நான் உன்னைக் கஷ்டப்படுத்தி இருந்தா, அதுக்கான தண்டனையா நீ என்ன பண்ணாலும் ஏத்துக்கிறேன். ஜெயில்ல போடணுமா, போடு. நாலு பேரு முன்னாடி நிக்க வச்சு செருப்பால அடிக்கணுமா, அடி. எதுவா இருந்தாலும் அதை மனப்பூர்வமா ஏத்துக்கத் தயாரா இருக்கேன்.”
“என்ன பண்ணாலும்?”
“என்ன பண்ணாலும்!”
“ம்ம், இன்னையில இருந்து நம்ம டீல் ஸ்டார்ட் ஆகுது.”
“அன்னைக்குச் சொன்னல்ல, என் வீட்ல வந்து சாணி அள்ளுன்னு. ஒருவேளை நான்தான் தப்புப் பண்ணன்னு நிரூபணம் ஆகிட்டா அதைப் பண்றேன்.”
இருவரும், பரஸ்பரமாகத் தங்களுக்குள் ஒர் ஒப்பந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
திருமணம் என்ற பந்தத்தின் ஒப்பந்தம் புரியாமல்.
***
இரவு உணவை முடித்தவன், எப்படியும் மெத்தையில் படுத்தால் அவளோடு வம்பு வரும் என்றறிந்து தரையில் படுக்கச் சென்றான். தாமரை படர்ந்திருப்பது போல் தன் மேனி முழுவதையும் மெத்தையில் படர விட்டுப் படுத்திருந்தவள், “ஓய் ஆட்டோக்காரா!” எனக் குரல் கொடுத்தாள்.
“சொல்லுங்க முதலாளி!”
“என்னடா, நீ பாட்டுக்குப் படுக்கப் போற.”
“வேற என்ன பண்ணனும்?”
“நான் தூங்குற வரைக்கும் நீ தூங்கக் கூடாது.”
“இங்கப் பாரு, ஏற்கெனவே மணி 12 ஆகப்போகுது. இதுக்கு மேலயும் வம்பு வளர்த்துட்டு இருந்தோம், விடிஞ்சிடும்.”
“அது என்னோட பிரச்சினை இல்ல.”
“எனக்குத் தூக்கம் வருது.”
“நான் தூங்காம நீ தூங்கக் கூடாது.” என்றாள் அழுத்தமாக.
“சில விஷயங்களை எவ்ளோதான் கட்டுப்படுத்தி வச்சாலும் கைய மீறி வெளிய வந்துடும். இப்பவே அரை மயக்கத்துல தான் உன்கிட்டப் பேசிட்டு இருக்கேன். சோ, மீதிப் பஞ்சாயத்தை நாளைக்கு வச்சுக்கலாம்.” என அவன் தரையில் படுத்துக் கொள்ள, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரிதுவின் பார்வையை அறியாதவன், ஒருவழியாக அன்றைய இரவை முடித்து வைப்பதற்காகக் கண் மூட, “ஹலோ!” என்றாள்.
அந்தக் குரல் காதில் விழுந்தாலும், அசையாமல் அதே நிலையில் கருடேந்திரன் படுத்திருக்க, “நான்தான் ரிது பேசுறேன்.” என்றாள்.
என்னவோ சதி செய்வதாக, அவன் உள்மனம் எச்சரித்ததின் பிரதிபலனாகக் கண்கள் சுருங்கியது. அசையாமல் படுத்திருப்பவன் முதுகை வெறித்துக் கொண்டே, “உங்க பையன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றான். உடம்பு முடியலன்னு சொல்லியும், கேட்காம ராத்திரி முழுக்கத் தூங்கக் கூடாதுன்னு தொல்லை பண்றான்.” என்றதும், அவனுக்குள் அசுர சக்தி புகுந்தது போல் தாவிப் பறந்து அவள் காதில் ஒட்டி இருந்த கைப்பேசியைப் பிடுங்கினான்.
“ஹா ஹா…”
அன்னைக்கு அழைக்கவில்லை என்பதை உறுதி செய்தவன், அவள் சிரிப்பில் கடுப்பாகிப் போனைத் தூக்கி அடிக்க, “பயந்துட்டியா…” என்று விட்டு மீண்டும் கலகலவென்று சிரித்தாள்.
முறைப்பின் தூக்கலை ஒரு படி அதிகரித்து, “பிசாசு!” என்று விட்டுப் படுக்கச் சென்றான்.
திரும்பி நான்கு அடி எடுத்து வைத்தவன், சொடக்கிடும் சத்தத்தில் அவள் பக்கம் திரும்ப, “உனக்கு செக் மேல செக் வச்சிருக்கேன். கட்டுப்பட்டு நடக்குறதைத் தவிர வேற வழியே இல்ல. நான் சொல்றதெல்லாம் செஞ்சுட்டு, என்னைத் தூங்க வச்சுட்டு, நீ போய்த் தூங்கு.” என்றவள் விழிகளில் அதிகாரத்திற்கான தோரணை மிளிர்ந்தது.
தன்னவன் அசையாமல் அப்படியே நிற்பதை வைத்துத் தன் வழிக்கு வந்து விட்டதை உணர்ந்தவள், “கால் புடிச்சு விடு.” என்றிட, அவன் உதடுகள் மேலும் கீழும் அசைந்தது. தன்னை வசை பாடுவது புரிந்தாலும் புரியாதது போல்,
‘ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தரமான பதில் உண்டு.’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் அடங்காத ஆக்ரோஷத்தைச் சிறிதும் பார்வையில் காட்டாது அவள் பக்கம் அமர்ந்தான்.
“ச்சைக்!”
மிக நெருக்கமாக அமரும் அவன் செயலைக் கண்டு அருவருக்கக் குரல் கொடுத்தவள், “தள்ளி உட்காருடா…” என்றாள்.
கருவிழிக்குள் தீ மூட்டி, எரிந்து கொண்டிருந்த ஒரு தீக்குச்சியை உருவி அவள் விழிகளை எரித்தான். அந்த நெருப்பை, ‘ஏளனம்’ எனும் நீரால் தோற்கடித்தவள்,
“என்னடா லுக்கு விடுற… என்னை மாதிரி ஆளுங்க பக்கத்துல இல்ல, பத்தடி தள்ளி நிக்கக் கூடத் தகுதி இல்லை உனக்கு. சாக்கடை மேல பட்டால் கூட, கழுவினால் போயிடும். உன் மேல இருக்க அழுக்கு பட்டா, பன்னீர்ல குளிச்சாலும் போகாது.” என்றாள்.
“அப்புறம் எதுக்குக் கால் புடிச்சு விடச் சொல்ற.”
“காலைப் பிடிக்க மட்டும் தான் உனக்குத் தகுதி இருக்கு.”
“இந்த ஆணவப் பேச்சுக்குத் தான்டி ‘புருஷன்’ என்ற பட்டத்தோட இப்படிப் பக்கத்துல உட்கார்ந்து இருக்கேன். பால்லயே குளிச்சுப் பஞ்சாமிர்தத்தால அபிஷேகம் பண்ணாலும் மிஸஸ் கருடேந்திரன்தான் உன் விதி.”
“நான் ஒத்துக்கிட்டா தான?”
“உலகத்துக்கு உன் சம்மதம் தேவையில்லை!”
“நிரந்தரம் இல்லாத ஒன்னுக்கு மதிப்புக் கொடுக்கணும்னு அவசியம் இல்ல.”
“அதேதான்! இப்போ உன்கிட்ட இருக்கற பணமும், பகட்டும் என்னைக்கா இருந்தாலும் மதிப்பில்லாமல் போகும். எந்த நிலையிலும் உன்னை விட்டுக் கொடுக்காம இருக்க உறவைத் தவிர எதுவும் இங்க நிரந்தரம் இல்லை.”
“பரதேசியா இருக்குறவனுக்கு உறவு நிலைக்காது.”
“ஒண்ணுமே இல்லாதவன் தான், சொந்த பந்தத்தோட சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கான்.”
“அதெல்லாம் கற்பனை!”
“கற்பனையாய் இருந்தாலும் மனுஷனுக்குத் தேவையான ஒன்னு.”
“இந்த ரிது சதிகாவுக்குத் தேவையில்லை.”
“அப்புறம் எதுக்காக உன் அண்ணன் செத்துப் போனதும், பைத்தியக்காரி மாதிரி அலைஞ்சுகிட்டு இருந்த.”
“ஸ்டாப் இட்!”
“பேசக்கூடத் தடுமாறுற… உன்னோட தடுமாற்றம் தான் உறவுக்கான அர்த்தம்! ஒருவேளை, உன் அண்ணன் உன் கூட இருந்திருந்தா இந்த மாதிரி எவனோ ஒருத்தன், கழுத்துல தாலி கட்டி அதிகாரமா உட்கார்ந்து பேசிட்டு இருக்க மாட்டான்.”
“பேசாத!”
“ஆமா, உன் அம்மா எங்க இருக்காங்க? நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன், அவங்களைப் பத்தின ஒரு சின்ன நியூஸ் கூட வர மாட்டேங்குது.”
“அது உனக்குத் தேவையில்லாதது.”
“என் மாமியார் பத்தி நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?”
“அவங்க மட்டும் சுயநினைவோட இருந்திருந்தா, இந்நேரம் நீ நீயா இருந்திருக்க மாட்ட.”
“பார்த்தியா… ஒரு உறவு கூட இல்லாததால தான், உன் நிலைமை இப்படி இருக்குன்னு நீயே ஒத்துக்கிட்ட.”
“உன்னைக் கூப்பிட்டது தப்புதான். நீ போய்த் தூங்கு.”
“கால் புடிச்சு விட்டுட்டுப் போறேன்.”
“தேவையில்லை!”
“தேவைப்படாததுக்கு ஆசைப்பட்டா நிலைமை இப்படித்தான் ஆகும்.”
“குத்திக் காட்டுறியா?”
“இதுக்கு மேலயும் யாரும் உன்னைக் குத்திடக் கூடாதுன்னு அக்கறைப் படுறேன்.”
“உன் அக்கறை தேவையில்லை. என்னை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்.”
“உண்மையாவே சாதிச்சு இருக்கியான்னு உன் உள்மனசைக் கேட்டுப்பார். உன்னைச் சுத்தித் தோல்வியும், தனிமையும் மட்டும் தான் இருக்குன்னு அது சொல்லும். உறவு இல்லாததால தான், என் குடும்பத்தைச் சிதைச்சு என்னை இப்படி வச்சிருக்க.”
“வாய மூடுடா! சும்மா குடும்பத்தைப் பிரிச்சுட்டேன், அது இதுன்னு பேசாத. உன்னைத் தாலி கட்டச் சொல்லி நானா சொன்னேன்? காசில்லாத உங்களுக்கு ஒன்னு நடந்தா தான் அது அநியாயம்னு இல்ல. யாருக்கு நடந்தாலும் அது அநியாயம் தான். எனக்கு நீ செஞ்ச பாவத்துக்குத் தான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கியே தவிர, என்னால இல்ல. இதுக்கு மேலயும் என்கிட்ட இதைப் பத்திப் பேசாத. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் பேசிட்டு இருக்க மாட்டேன்.” என்றவள் மடியில் இருந்த தலையணையைத் தூக்கி அடித்து விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
தன்னைத் தூங்க விடாமல் ஆர்ப்பாட்டம் செய்தவள் நிம்மதியைக் கெடுத்ததில், பெரும் நிம்மதி கருடேந்திரனுக்கு. மெல்ல அவளின் பலவீனம் புரிய ஆரம்பித்தது. தடுமாற்றத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டு, சாதுரியமாக நடிக்கும் தாலி கட்டியவளைத் தோற்கடிப்பது எளிதென்று உணர்ந்து கொண்டவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
அந்த ஆனந்தம், வந்த உறக்கத்தை விரட்டி அடித்தது. தன்னைத் தூங்கக் கூடாது எனக் கட்டளையிட்டவளைத் தூங்க விடாமல் செய்தால் என்ன என்ற பெரும் ஆராய்ச்சி அவனுக்குள் உலா வந்தது. மனமும், அறிவும் சேர்ந்து உன் இஷ்டத்திற்குச் செல் என வழிகாட்ட, மெல்ல அவள் கால் விரல்களைப் பிடித்தான்.
வேண்டாத காயங்களை மனத்தில் போட்டுச் சலித்துக் கொண்டிருந்தவள், அவன் பக்கம் பார்வையைத் திருப்ப, “காலையில எங்க அம்மாக்கு போன் போட்டு, உங்க பையன் ராத்திரி முழுக்க என் காலைப் பிடிச்சு விட்டான்னு பெருமையாச் சொல்லு. எங்க அம்மா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க.” என்றவன் உள்ளத்தில் குரோதமும், விழிகளில் அன்பும் மின்னியது.
“ப்ச்! விடு.”
கால்களை இழுக்கும் மனைவியின் கணுக்காலைப் பிடித்துத் தன் மடியில் வைத்தவன், “உண்மையா தான் சொல்றேன். எங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஏன்னா, அவங்களுக்குப் பொண்ணுங்களை ரொம்ப மதிப்பா நடத்தப் பிடிக்கும். அதுவும், அவங்களோட மருமகளை ரொம்ப மதிப்பா நடத்தணும்னு ஆசைப்படுவாங்க. பெத்த புள்ளையாவே இருந்தாலும், மருமகளுக்கு அப்புறம் தான்னு தூக்கி அடிச்சவங்க. உன்னக் கஷ்டப்படுத்தினா, எங்க அம்மா என்னை மன்னிக்க மாட்டாங்க.” என்றவன் வார்த்தையைக் கேட்டும் கால்களை விட்டுக் கொடுக்காது எடுக்க முயற்சிக்க,
வார்த்தைக்குப் பின் எடுப்பதை நிறுத்தியவள் அமைதியாகப் படுத்திருந்தாள். அதில் மெல்லிய புன்னகையைக் காட்டியவன், மற்றொரு காலையும் மடி மீது வைத்துப் பிடித்து விடத் தொடங்கினான். முதல்முறையாக, ஒரு ஆண் இதுபோன்று சேவை செய்கிறான் ரிதுவிற்கு. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குச் சலனங்கள். என்ன நினைக்கிறோம் என்பதை உணராது ஏதேதோ சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தாள்.
“ஸ்ஸ்ஆஆ…”
“என்னாச்சு?” எனப் பதறியவன் வலது கால் சுண்டு விரல் வீங்கி இருப்பதை அப்போதுதான் கவனித்தான்.
“என்ன, இப்படி வீங்கி இருக்கு?”
ரிது சதிகா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “ஆயில்மெண்ட் போடலையா?” கேட்டான்.
அதற்கும் அவள் அமைதியாகவே இருக்க, “ஆனாலும், ஒரு பொண்ணுக்கு இவ்ளோ வீம்பு இருக்கக் கூடாது.” என்றவன் மருத்துவர் கொடுத்த ஆயில்மெண்ட் எங்கே என்று விசாரிக்க, கை காட்டினாள்.
எடுத்து வந்தவன் பதமாக அந்த இடத்தை மருந்தால் மறையச் செய்ய, “திடீர்னு எதுக்கு இந்த நடிப்புன்னு தெரிஞ்சுக்கலாமா?” கேட்டவள் பார்வை அவன் மீதுதான் இருந்தது.
தலை குனிந்து இருந்தவன் நிமிர்ந்து ஒரே ஒரு பார்வையை அழுத்தமாக வீசிவிட்டு மீண்டும் குனிந்து கொள்ள, “அன்பால என்னைத் தோற்கடிக்கனும்னு நினைச்சா, தோல்வி உனக்குத்தான். உன் முன்னாடி இருக்குறது கல்லு இல்ல, பாறை! எவ்ளோ செதுக்குனாலும் உடையாது. நீ நினைக்கிற உருவத்துக்கு நிச்சயம் வராது.” என்றிட, சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் நகர்ந்து வந்தவன் விழிகளின் ஓரம் படிந்திருந்த காயத்தின் மீது மருந்தைப் பூசி விட்டு,