💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 10
இரவு வானை ஒளியிழந்த விழிகளால் நோக்கினாள் ஜனனி. அவளது முகத்தில் சிரிப்பில்லை, கண்களில் உயிர்ப்பில்லை.
இன்றோடு ராஜீவ் சென்று இரண்டு நாட்களாகி விட்டன. சென்றவனின் மூச்சுப் பேச்சும் இல்லை.
“ராஜ் போயிட்டியா?”
“ராஜ்…!!”
“எங்கே டா?”
“மேசேஜ் பாரு. உனக்கு என்ன தான் ஆச்சு?”
“ப்ளீஸ் பேசு ராஜ்”
“இப்படி பண்ணாத டா”
“பயமா இருக்கு”
“டேய் ராஜ்”
அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பி விட்டாள்.
ஒன்றுக்குக் கூட அவனது பதில் இல்லை. அனைத்திலும் மேலாக, மேசேஜைப் பார்க்கவும் இல்லை.
அழைப்பேற்றால் நம்பர் பிசி என்று வந்தது. அவன் கட் செய்கிறான் எனப் புரிந்தவளுக்கு அழுகை பொங்கியது.
“ராஜ் பேசு ராஜ்! என்னால சத்தியமா முடியல டா” என்றவள், டைரியை எடுத்து கிறுக்கினாள்.
மூடிய இமைகளுக்குள் உன் கற்பனை
கேட்கும் செவிகளுக்குள் உன் குரல்
துடிக்கும் இதயத்தினுள் உன் வதனம்
சுவாசிக்கும் காற்றில் உன் வாசனை
எப்போது வருவாய் என்ற ஏக்கத்தில்
அன்பானவன் உன்னை எதிர்பார்த்து
தவியாய்த் தவிக்கும் இந்நொடி உணர்கிறேன்,
காத்திருப்பும் கூட சுகம் தான் என!
எழுதி முடித்தவளுக்கு இருதயம் என்னவென்று தெரியாமல் படபடத்தது. மறுநாள் அவளுக்கு அழைத்தான் ராஜீவ்வின் நண்பன்.
“ஜானு! உன் கிட்ட ராஜ் பேசினானா?” எனக் கேட்க, “இல்லண்ணா! ஏன்? என்னாச்சு?” பதைபதைத்தாள் பேதை.
“உங்க வீட்டுக்கு வந்த நேரம் அவனோட அம்மா, அவங்க மாமா வீட்டுக்கு போய் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. அடுத்த மாசம் கல்யாணம் அவனுக்கு. இது தெரிஞ்சு வீட்டுல சண்டை போட்டு ராஜ் கோவிச்சுட்டு போயிட்டான்” என்று அவன் சொல்ல, ஜனனிக்கு இதயம் நொறுங்கிப் போனது.
“அவன் என் கிட்ட பேசவே இல்லண்ணா. மறுபடி உங்களை மீட் பண்ணுனா எனக்கு சொல்லுங்க” அதற்கு மேல் பேசுவதற்குத் தெம்பின்றி தரையில் அமர்ந்தவளுக்கு உயிர் பிரியும் வலி.
அவன் தனக்கில்லை என்று இதுநாள் வரை அறிந்தாலும், அது உறுதியாகத் தெரிந்து விட்டதும் தாங்க முடியவில்லை.
“ராஆஆஆஜ்” கதறியழுதாள் அவன் மீது காதல் கொண்டவள்.
“ஜானு!” எனும் ஜெயந்தியின் அழைப்பில் கண்களைத் துடைத்தவளுக்கு, கண்ணீரை அடக்குவது பெரும் போராட்டமாக இருந்தது.
வலியை அடக்கி பிறர் முன் சிரிப்பது போல் நடிப்பது வலியினும் கொடியது அல்லவா?
ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு கதவைத் திறக்க, “என்னாச்சு டா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று வினவினார்.
“ஒன்னும் இல்லம்மா. கொஞ்சம் தலை வலியா இருக்கு” என்றாள், பொங்கி வந்த அழுகையை விழுங்கிக் கொண்டு.
“ட்ரெஸ் எடுக்கப் போகனும்னு அப்பா கூப்பிட்டார்” என்ற ஜெயந்தியைத் தொடர்ந்து சென்றவளுக்கு, தன் வலியை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் தோன்றியது.
“நாம ஒரே கலர்ல ட்ரெஸ் எடுக்கலாமா?” மகிஷா கேட்க, “ம்ம்” தலையை ஆட்டி வைத்தாள் ஜனனி.
“நந்து அக்கா தான், சோளக்காட்டு பொம்மை மாதிரி தலையாட்டுறாங்கனா உனக்கு என்ன ஜானு?” காரில் அமர்ந்தவாறு கேட்க, ஜெயந்தி இருப்பதால் எதுவும் கூறாமல் சிரித்து வைத்தாள்.
“குத்துப் பாட்டு போடப் போறேன்” என மகி கூற, “வேண்டாம் டி. மெலடி ஷாங் போடு” என்று விட்டாள் நந்து.
“உனக்காக வாழ நெனக்கிறேன்” எனும் வரிகளைக் கேட்கும் போது ஜனனிக்கு, ராஜ் ஞாபகத்தில் கண்கள் கலங்கத் துவங்க, “ப்ரேக் அப் ஷாங் போடு” என மாற்றி விட்டாள் ஜனனி.
🎶 என்னைக் கொல்லாதே
தள்ளிப் போகாதே
நெஞ்சைக் கிள்ளாதே
கண்மணி!… 🎶
அதைக் கேட்கும் போது உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளை, சகோதரிகள் புரியாமல் பார்த்தனர்.
கடை வந்து விட, மாரிமுத்து ஆண்கள் பிரிவிற்கு சென்று விட்டார். ஜெயந்தி ஒவ்வொருவருக்காக உடைகள் எடுத்தார்.
“நீயும் சாரி எடுத்துக்குறியா ஜானு?” என அவர் கேட்க, “கல்யாணம் எனக்கில்ல. உங்க மூத்த பொண்ணுக்கு. அவளுக்கு எடுங்க” என்று விட்டாள் அவள்.
“நீயே பார்த்து கொடுமா” என கண்ணாடி வழியே வேடிக்கை பார்க்கலானாள் நந்திதா.
“எழில் வர்றான் டி” மகிஷா சொல்ல, இரு சகோதரிகளின் பார்வையும் அவன் மீது நிலைத்தது.
அவர்களது எதிர் வீட்டில் வசிப்பவன் எழிலழகன். இவர்களுக்கு ஏனோ எழில் என்றாலே ஆகாது. மாரிமுத்துவிற்கு அவன் மீது ஒருவகை அன்பு.
“ரொம்ப நல்ல பையன். எவ்ளோ மரிராதையா இருக்கான்” என வாயாரப் புகழ, “நம்மளை எப்போவாச்சும் இவர் புகழ்ந்திருக்காரா?” என மகியிடம் கூறுவாள் ஜனனி.
“ஆமாக்கா. ஒரு நாள் நம்ம கூட சண்டை போட்டான்ல. அவன் வீசின கல்லு நந்து மண்டையை டேமேஜ் பண்ணிருச்சு. எனக்கு அதில் இருந்து அவனைப் பிடிக்கிறதே இல்ல” என்பாள் மகி.
“வா எழில். என்ன இந்தப் பக்கம்?” ஜெயந்தியின் கேள்விக்கு, “அம்மாவுக்கு பர்த்டே வருது. சாரி வாங்கலாம்னு வந்தேன் ஆன்ட்டி” என்றவனின் பார்வை நந்திதா மீது படிந்து மீண்டது.
அவனை நோக்கி வலியோடு கூடிய பார்வையை வீசினாள் அவள். அவனோ எதுவும் பேசாமல் ஒரு பெருமூச்சுடன் கடந்து சென்றான்.
“எழில்” அவள் அழைக்க, “சந்தோஷமா இரு நந்திதா” விரக்தியாகப் புன்னகைக்க, அவளோ துடித்துப் போனாள்.
…………………
கடும் மழை பொழிந்து கொண்டிருக்க, பல்கோணியில் நின்று அதனைப் பார்த்திருந்தான் சத்யா.
அவனுக்கு மழை என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் இப்போது மழையை மீது அத்தனை வெறுப்பு.
மழையைப் பார்க்கும் போதெல்லாம் இனியாவின் நினைவு தான். அவளோடு இருக்கும் தருணங்களில் கரம் கோர்த்து மழையில் நனைவான்.
அவள் கருவுற்ற சமயம் கூட மழை பொழிந்தது. அன்றும் தூறலில் நனைந்தான், மகிழ்வு வெள்ளத்தில் தத்தளித்தான்.
வாழ்வு அப்படியே இருந்திருக்கக் கூடாதா? ஏன் அனைத்தும் மறுபக்கமாக புரண்டு போனது? அவள் ஏன் தன்னைப் பிரிந்து சென்றாள்? சந்தேகப்பட்டுப் பிரிந்து சென்றாள் தான்.
ஆனால் அதைக் கூட பொருட்படுத்தாமல், தனது குழந்தைக்காக எவ்வளவு தூரம் இறங்கிப் போனான். தேவ் அவளிடம் எவ்வளவு கூறினான்? அவனது குடும்பம் சமாதானம் செய்யத் தானே போராடியது?
ஆனால் அவள்?
அவள் தன் நிலைப்பாட்டில் சிறிதும் மாறவில்லை. அதனிலும் மேலாக, வேறு திருமணமும் செய்து விட்டாள்.
அதன் பிறகு அவளைக் கனவிலும் நினைப்பதில்லை. இன்னொருவர் மனைவியை நினைப்பது சரியல்லவே.
ஆனால் அவளோடு வாழ்ந்த வாழ்வு இடைக்கிடை ஞாபகம் வரத் தானே செய்கிறது?
இனி அவனுக்கு வேறொரு பெண் மனைவியாகப் போகிறாள், அதுவும் அவளுக்கு விருப்பம் இல்லாமல்.
“என்ன வாழ்க்கை இது? ச்சே. வெறுப்பா இருக்கு” என்றவனுக்கு ஒருத்தியின் முகம் நினைவுக்கு வந்தது.
அவள் ஜனனி!
நந்திதாவின் தங்கை. தன்னைக் கேள்வி கேட்கும் அளவுக்கு அவள் போய் விட்டாளா?
அவளை நினைக்கவே கசந்தது அவனுக்கு.
அலைபேசியை எடுத்துப் பார்த்தான். கவிதை படிக்க பிரதிலிபி செயலியினுள் நுழைய முதலில் அவன் கண்ட வாசகத்தை உச்சரித்தான்.
“காதலை விட சிறந்த பரிசும் இல்லை;
காதலை விட கொடுமையான தண்டனையும் இல்லை, இவ்வுலகில்”
“எக்ஸாட்லி! எவ்ளோ சந்தோஷத்தைத் தருமோ, அதை விடப் பல மடங்கு சித்திரவதையையும் இந்தக் காதல் தரும்” என சொல்லிக் கொண்டான் சத்யா.
அதே நேரம், “யுகி! யுகி செல்லம்” எனும் அழைப்போடு தேவன் வர, “என்ன சித்தா” துள்ளலுடன் அவன் முன் ஆஜரானான் யுகன்.
“சித்தா உனக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கேன். என்னனு சொல்லு பார்ப்போம்” கையில் இருந்ததை பின்னாலிருந்த கதிரையில் மறைத்து வைத்து விட்டுக் கேட்டான்.
“என்ன கொண்டு வந்தீங்க? சீக்கிரம் தாங்க” அவனது கைகளைப் பார்த்தவாறு கேட்டான் அண்ணன் மகன்.
“உனக்குப் பிடிச்ச ஒன்னு” என்று அந்தப் பையைத் தேட, அதைக் காணாமல் அதிசயித்தான்.
இப்போது வைத்தது அதற்குள் என்னவானது என்று யோசிக்க, “நம்ம வீட்டுல பூதம் ஏதும் இருக்கா என்ன?” என சத்தமாகவே புலம்பினான் தேவன்.
“என்ன சித்தா? ஏதோ கொண்டு வந்தேன்னு சொல்லிட்டு சும்மா இருக்கீங்க?” அவன் அவசரப்படுத்த, “நம்ம வீட்டுல பூதம் இல்லை. ஆனால் திருட்டுப் பூனை இருக்குல்ல தேவா” என்றபடி சோஃபாவில் வந்தமர்ந்தார் மேகலை.
“அட மறந்தே போயிட்டேன் மா. இதோ அந்த திருட்டுப் பூனைக்கு பாக்ஸிங் ஷாட் கொஞ்சம் கொடுக்கிறேன்” என்றவன் கதிரையின் பின்னால் ஒரு குத்து விட,
“டேய் சாப்பிட விடுடா” ஐஸ்கிரீம் கப்புடன் திரும்பிய ரூபன், தேவனைப் பார்த்து இளித்து வைக்க, “வாவ் ஐஸ்கிரீமா சித்தா?” ரூபனின் கையிலிருந்த பையினுள் கை விட்டு ஐஸ்கிரீம் கப் ஒன்றை எடுத்துக் கொண்டான் யுகன்.
“உனக்கு ரெண்டு கப் கொண்டு வந்தேன் யுகி. இந்தா இன்னொன்னு” இன்னொன்றையும் கொடுக்க, “வாவ்! சூப்பர். தாங்க் யூ சித்தா” அவன் கன்னத்தில் முத்தமிட,
“எனக்கும் முத்தம் கொடு” கன்னத்தைக் காட்டினான் ரூபன்.
“இந்தா ரூபி” முத்தமிடுவது போல் வந்து அவன் கன்னத்தில் கடித்து வைக்க, “உன்னைஐஐ” அவனது கன்னத்தை எச்சில் செய்த பின்னரே விட்டான் ரூபன்.
“ம்மா! யுகி எனக்கும் இவனுக்கும் வேறுபாடு பார்க்கிறான். அவனுக்கு முத்தம், எனக்கு கடி. பார்த்தியா?” பாவமாக ரூபன் கேட்க, “நீ அவனை கடிக்கிறதால அவன் கடிக்கிறான். நான் முத்தம் கொடுக்கிறதால அவன் முத்தம் கொடுக்கிறான். பொறாமைப்படாத டா” என்றவன் அவனிடம் இன்னொரு கப்பைக் கொடுத்தான்.
“அம்மா உனக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா வாங்கி கொடுப்பாங்க. இல்லனா சின்ன வயசுல நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவ. அப்போ நான் அழலடா” என்று தேவன் சிரிப்போடு சொல்ல, “நான் கொஞ்சம் ஸ்பெஷல் டா” காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் ரூபன்.
“இந்தாங்கம்மா. நீங்க ஒன்னு எடுத்துட்டு சத்யாவுக்கும் கொடுங்க” என்று கொடுக்க, “அப்பா ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டார்” என்றான் யுகன்.
“பொய் சொல்லாத யுகி. அவனுக்கு ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும், இதுலேயும் சாக்லேட் ஐஸ்கிரீம்னா பைத்தியம்” என்று சொன்னான் ரூபன்.
“இல்ல ரூபி ப்ராமிஸ்ஸா சொல்லுறேன். டாடி ஐஸ்கிரீம் சாப்பிட்டு பார்த்ததே இல்லை. என்னோடதால கொஞ்சமா நீட்டினாலும் வேண்டாம்னு மறுத்துடுவார். அவருக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது” ஐஸ்கிரீம் சாப்பிட்டவாறு யுகன் சொல்ல, மூவருக்கும் அதிர்ச்சியே.
வீட்டில் ரூபன், தேவனுடன் சண்டை போட்டு ஐஸ்கிரீம் சாப்பிடுபவன் சத்யா. கோபம் வந்தால் கூட அதைத் தணிக்க சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிடுவான். அப்படிப்பட்டவன் அதனை வெறுக்கிறானா?
அதற்குக் காரணம் இனியா தான் என்பது புரிந்தது. திருமணமான புதிதில் அவளோடு ஐஸ்கிரீம் கடைக்கு வாரந்தோறும் செல்வான். அவள் சென்ற பிறகும் அந்த நினைவு தீண்டுவதால் அதை முற்றாக தவிர்த்துக் கொண்டான்.
சத்யா தனக்குப் பிடித்ததைக் கூட வெறுத்து, தன்னையே தொலைத்து வாழ்வது புரிந்து “அவன் பழையபடி மாறனும்” என நினைத்துக் கொண்டனர், அவனது குடும்பத்தினர்.
தொடரும்…….!!
ஷம்லா பஸ்லி
2024-12-24