வாடி ராசாத்தி – 10
ஒருவரில் ஒருவர் ஆழ்ந்து இருந்த இருவரையும் கலைத்தது அந்த வழியே சென்ற லாரியின் சத்தம். அப்போதும் பதட்டம் ஏதும் இன்றி நிதானமாக அவளில் இருந்து மெதுவாக விலகினான் கேபி. விலகியவன், சகஜமாக அவள் கூந்தலை ஒதுக்கி, அவள் முகத்தை கர்சீப் கொண்டு துடைத்து விட்டான். அவன் செய்யும் அனைத்தையும் கண்கள் மூடி ஏற்று கொண்டாள் அம்மு. அவள் மறுப்பை மதிக்கிறவன் அல்லவே அவன்…! அதோடு இன்று அவளும் அவனில் கரைந்து இருக்க, அவளுக்கு ஒன்றும் புரியாத நிலை. அவன் அவளின் நிலையை கண்டுகொண்டு அவளை சங்கடப்படுத்தாமல் இயல்பாக அவளை நடத்த, அவனை போல் சகஜமாக இருக்க முடியாமல் தவித்தாள் அம்மு. சற்று நேரம் பார்த்தவன், அவள் சகஜமாக போவதில்லை என்று உணர்ந்து,
“உங்க வீட்டில கெஸ்ட் இருக்காங்களாம்…. என்ன, எப்படி கேட்டாலும், என் கூட இருந்தேன்னு என்னை பத்தி எதுவும் சொல்லிடாதே….” என்றான்.
எப்போதும் பேசுவது போல் இல்லாமல் அவன் மாற்றி பேச, அதுவரை இருந்த மௌனத்தை கலைத்து கொண்டு,
“என்ன புதுசா சொல்ற….?” என்றாள் கடுப்பாகி.
“அப்புறம் உன் பேர் கெட்டு போச்சுனா….? அதுவும் என் பேரோட சேர்த்து…. உன்னை என் தலையில் கட்ட பார்ப்பாங்க…. உனக்கும் உங்க அப்பாக்கும் பிடிக்காது….எதுக்கு வம்பு…. நாம நல்ல பேரோடவே இருப்போம்….” என்றான் நக்கலும் நையாண்டியுமாக.
சற்று முன் அவளுடன் இழைந்தது மட்டுமின்றி அவள் மனதையும் அவளுக்கு தெள்ள தெளிவாக உறைக்க வைத்து விட்டு எப்படி பேசுகிறான் பார் என்று மனம் சுணங்கியது அம்முவிற்கு. ஆனால் அதை காண்பித்து கொண்டால் அவள் அம்மு அல்லவே…. அதனால்,
“அப்பாடா உனக்கு அறிவு வந்துடுச்சா ஒரு வழியா….? இப்படியே இரு மாறிடதே….” என்றாள் இருந்த மொத்த கடுப்பையும் மறைத்து கொண்டு.
சில்மிஷம் நான் நினைச்ச மாதிரி தான் ரியாக்ட் பண்றா…. இப்படியே இருக்கட்டும், கல்யாணம் வரை பொழுது போகணுமே…. என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரை கிளப்பினான். போகும் வழியில்,
“யார் வந்திருக்கான்னு தெரியுமா உங்க வீட்டுக்கு?” என்று கேட்டு, தாத்தா நாராயணன் குடும்பத்துடன் வீடு பார்க்க வந்ததை சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்கள் வீடு மட்டும் பார்க்க வந்தது போல் தெரியவில்லை என்று சொன்னதையும் சேர்த்து சொன்னான்.
உள்ளுக்குள் அதிர்ந்தாலும், வெளிக்காட்டி கொள்ளாமல், “நடக்கிறது தான் நடக்கும்….” என்றாள். அவளுக்குமே ஒன்றும் புரியவில்லையே….
வேறு சிந்தனையில் இருந்த கேபியும் பெரிதாக அந்த பேச்சை வளர்க்கவில்லை. அமைதியாகவே வண்டி ஓட்டினான்.
*************
அங்கே அம்முவின் வீட்டில்,
மனைவி, மகள், மாப்பிள்ளை, கிஷோர் என குடும்பத்துடன் வந்திருந்த நாராயணன் ஏக கடுப்பில் இருந்தார். ஊரில் பெண்ணே இல்லாதது போல் மகன் இந்த பெண்ணின் மீது எதுக்கு இத்தனை பற்று வைத்து நம்மை படுத்துகிறான் என்று இருந்தது அவருக்கு.
வீடு பார்ப்பது போல் சென்று பெண்ணை பார்த்து விட்டு தான் வர வேண்டும், அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற எண்ணத்தை கொடுக்க வேண்டும். அம்முவின் திருமண விஷயத்தில் வேறு சிந்தனையே வரக்கூடாது என்றான் கிஷோர்.
“அதான் ஒரு தொகையை அட்வான்ஸ் வாங்கி நம்ம கிட்ட லாக் ஆகி இருக்காரே டா செல்வராஜ், நீ ஏன் இவ்ளோ பறக்கிற….?” எரிச்சலாகி கத்தி இருந்தார் நாராயணன் அவனிடம்.
“உங்களுக்கு தெரியாது, கேபி நினைச்சா பணம் ஒரு விஷயமே இல்லை, அதனால கல்யாண விஷயத்தில் வேற மாதிரி தான் உறுதி செய்யணும்” என்றவன் பிடிவாதமாக அனைவரையும் அன்றே நல்ல நாள் என்று அழைத்து வந்து விட்டான்.
************
அவர்கள் அனைவரும் அம்முவின் வீட்டிற்கு வந்த போது செல்வராஜ் இல்லை. வாசுகிக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. பெரியவர்களும் இவர்கள் யார் என்பது போல் பார்த்தார்கள்.
“எங்களை தெரியலையா….? இனிமே இது உங்க வீடு மட்டுமில்லை, நம்ம வீடு….” என்று சிரித்தார் நாராயணன்.
“ஓ!! வாங்க வாங்க….” புரிந்து கொண்டார் வாசுகி.
“நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க…. உங்க பொண்ணுக்கு குடுத்ததா நினைச்சுக்கோங்க, நாம எல்லாரும் தான் ஒண்ணுக்குள்ள ஒன்னு ஆக போறோமே….” நாராயணன் மனைவி வாசுகியிடம் சொன்னார்.
இவங்க என்ன இப்படி பேசுறாங்க, நம்ம வீட்டில பொண்ணை கொடுக்கிறோம்னு சொல்லவே இல்லையே….குழம்பி போனார் வாசுகி. வாசுகி அவர்களை உபசரிக்க, சொக்கலிங்கம் தகவல் சொல்ல, செல்வராஜ் விரைந்து வீட்டிற்கு வந்து விட்டார். எந்த உபசரிப்பையும் மறுக்காமல் ஏற்று கொண்டனர் கிஷோர் வீட்டில். அவன் தான் அம்முவை பார்த்து விட்டு தான் கிளம்ப வேண்டும் என்று சொல்லி இருந்தானே.
“வாங்க வாங்க, ஒன்னும் தகவல் சொல்லலையே….?” செல்வராஜ் கேட்க,
“நமக்குள்ள எதுக்கு அதெல்லாம், குடும்பமா எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்னு தான் டக்குனு கிளம்பி வந்துட்டோம்….”
“ம்ம்….சரி தான்….” செல்வராஜ் சிரிக்க முடியாமல் சிரித்து வைத்தார்.
“வாசுகி, வீட்டை காட்டுமா எல்லாருக்கும்…. அவங்களுக்கு வேலை இருக்கும்ல….” சொக்கலிங்கம் வாங்க போகிற வீட்டை பார்த்து விட்டு கிளம்புங்கள் என்பது போல் சொல்ல,
“இருக்கட்டும், ஒன்னும் அவசரம் இல்லை, உங்க பேரன் தான் சென்னையில் இருக்கான், பேத்தி வரட்டும் பார்த்திட்டு போறோம்” என்றார் நாராயணன்.
அம்மு வீட்டில் இல்லை என்றதுமே கிஷோரின் ஏமாற்றம் சொல்லில் வடிக்க முடியாது. மிகவும் ஆசையாக வந்தான். சரி வந்ததும் பார்த்து விட்டு செல்வோம் என்று மனதை தேற்றி கொண்டான். ஆனால் அவனின் ஏமாற்றம், கோபமாக மாறியது. அவன் நண்பன் கேபியையும் அம்முவையும் ஒன்றாக பார்த்தேன் என்று அழைத்து சொன்னதில் இருந்து. ஏமாற்றம், ஆத்திரம் என கொந்தளித்தாலும், மனதினில் பொறுமை பொறுமை என சொல்லி கொண்டு அடக்கமாக அமர்ந்திருந்தான் கிஷோர். இன்று அவன் நடந்து கொள்ளும் விதம் மிக முக்கியம் என்று உணர்ந்திருந்தான்.
***********
வீட்டில் இறக்கி விடுகிறேன் என்றவன், வீடு வந்து விட, காரை நிறுத்தி விட்டு அவளுடனே இறங்கி உள்ளே நடந்தான். இதுவரை அவன் வந்ததே இல்லை, இப்போது வருகிறான் என்றதும் தந்தையை நினைத்து பயந்தாள் அம்மு. அமைதியாக அவன் வந்த காரணம் இதுதான் போல் என்று நினைத்தவளுக்கு அவனை நிறுத்தவோ தடுக்கவோ தன்னால் முடியாது என்ற நிதர்சனம் புரிய அமைதியாக நடந்தாள். அவளின் எண்ணவோட்டத்தை துல்லியமாக அறிந்தவன், அவள் சொன்னதை அவளுக்கே திருப்பி படித்தான்.
“நடக்கிறது தான் நடக்கும் சில்மிஷம்….” அவனின் கேலியில், விரல்களை வாயில் வைத்து மூடு என்பது போல காட்டினாள்.
“ம்ம் இதெல்லாம் தப்பு…. நீ சொன்னதை தானே நானும் சொன்னேன்….” நடித்தான் வருத்தமாக சொல்வது போல்.
“நடிக்காத டா பண்டி…. வரணும்னு முடிவு பண்ணிட்டே….ப்ளீஸ் எங்க அப்பாவை ரொம்ப டென்ஷன் பண்ணாத….”
“உங்க அப்பா கிட்ட போய் சொல்லு மா, டென்ஷன் ஆக வேண்டாம்னு…. அடுத்தவங்க பேச்சுக்கு எல்லாம் டென்ஷன் ஆகுறது உடம்புக்கு நல்லதில்லைனு எடுத்து சொல்லு….” சிரிக்காமல் அவன் உபதேசம் செய்ய, அவன் என்ன செய்ய போகிறான் என்பதை உணர்ந்து கொண்டாள் அம்மு.
மகளுடன் உள்ளே வந்தவனை கண்டு திகைத்து போனார் செல்வராஜ். வாசுகிக்கு சந்தோஷம் தாள வில்லை. பாட்டியும், தாத்தாவும் கண் கலங்கி விட்டார்கள். மகளும் இல்லாமல், இந்த பேரனை தங்களுடன் வைத்து சீராட்ட முடியாமல் எவ்வளவு வருந்தி இருப்பார்கள். இன்று இந்த வீட்டிற்கு உரிமையாக வரும் அவனை கண்டவுடன் அத்தனை சந்தோஷம் அவர்களுக்கு!
உள்ளே வந்தவனை கண்ட செல்வராஜிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அமைதி காத்தார். அவனிடம் வரவேற்பாய் தலையை கூட அசைக்கவில்லை அவர். வந்த வேலையை பார்ப்போம் என்றிருந்த கேபி எதை பற்றியும் கவலைப்படவில்லை.
தாத்தா அவனை அறிமுகப்படுத்த, நாராயணன்,
“தம்பியை நல்லா தெரியுமே….!” என்றார் பின் அவர் அருகில் இருந்த மகனை அறிமுகப்படுத்தி வைக்க எண்ணி, இது என்று ஆரம்பிக்க, கிஷோர் தானாக,
“நான் கிஷோர்….!” என்று கை நீட்டினான்.
நீட்டிய அவன் கையை பற்றி குலுக்கிய கேபி, சிரித்து கொண்டே,
“நான் தான் இந்த வீட்டு மாப்பிள்ளை….!” என்றான் சின்ன புன்னகையுடன்.
அவன் முகத்தில் புன்னகை இருந்தாலும் கண்கள் தீவிரமாக தன்னை பார்ப்பதை உணர்ந்தான் கிஷோர். கேபி சொல்லிய வார்த்தையில் அவனுக்கு கோபத்தீ பற்ற,
“அதை நீங்களே சொல்லிக்கிறீங்களா….?” நக்கலாக சிரித்தான் கிஷோர்.
“அட இல்லைங்க, இது பிறந்ததில இருந்தே இருக்கிறதுங்க…. கேளுங்க….” சுற்றி முற்றி அவர்களை கை காட்ட, அம்மு மற்றும் செல்வராஜ் தவிர மற்ற அனைவரும் கூலாக இருந்தார்கள். கிஷோர் வீட்டினர் ஒன்றும் புரியாமல் நின்றனர்.
“சொல்லுங்க மாமா, நான் உங்க தங்கச்சி பையன், அந்த வகையில் உங்க மாப்பிள்ளைன்னு….” செல்வராஜின் பிபியை ஏற்றி இறக்கினான் கேபி. மகளுடன் வந்து இறங்கி இருக்கிறான் என்ன விஷயம் என்று தெரியாமல் பதறி கொண்டு இருந்தவர் அவனின் கிண்டல் பேச்சில் இன்னும் கடுப்பானார். அவர் பதில் சொல்லும் முன்,
“புது மாப்பிள்ளை வந்த அப்பறம் யாருக்கும் விளக்கம் தேவைப்படாது, விடுங்க பாஸ்….” என்றான் கிஷோர்.
பேச்சு ஆபத்தான கட்டத்தை நோக்கி போவது புரிந்தது செல்வராஜிற்கு, அதை திசை திருப்ப,
அம்மு, உன்னை பார்க்க தான் இவ்ளோ நேரம் வெய்ட் பண்ணாங்க, அவங்க கிட்ட போய் உட்காருமா என்றார். நாராயணன் வீட்டு பெண்களிடம் பேசுமாறு அவர் சொல்ல, இவர்கள் திருமணத்திற்கே சம்மதம் சொன்னது போல் அவர்கள் மகிழ்ந்து போயினர். அம்மு கிஷோரின் அம்மா அருகில் சென்று அமர, கிஷோரும் அவர்களை நோக்கி சென்றான். அவன் அம்முவை நோக்கி செல்வதை பார்த்த கேபி, கிஷோர் என்றழைத்து,
“நீங்க சொன்னத்துக்கு நான் இன்னும் பதில் சொல்லலையே, சொல்லவா….?”
அவன் அமைதியாக கேபியை உறுத்து பார்க்க,
“புதுசு, பழசு எதுவும் வித்தியாசம் இங்க இல்லை, எப்போதும் இங்க நான் நிரந்திரம்….” என சொல்ல, கிஷோர் முகத்தில் சிவப்பு ஏறியது.
“எங்க அம்மா எங்க மாமாவுக்கு ஒரே தங்கச்சி, நான் அவங்களுக்கு ஒரே பையன்…. அதனால் போட்டிக்கு ஆள் இல்லைங்க…. என்ன மாமா….?” கேபி மாமனையும் கூட இழுக்க, எதுக்கு இப்போ இப்படி படுத்துறான் என்று சங்கடப்பட்டார் செல்வராஜ்.
“இப்போ என்ன தம்பி பிரச்சனை….? உங்களுக்கு உரிமை அதிகம் தான் தாய் மாமன் வீட்டில், யார் என்ன சொன்னா….?” நாராயணன் பொறுக்க முடியாமல் கேட்க,
“கரெக்ட், இதை தான் நான் எதிர்பார்த்தேன்…. நான் இருக்கேன்…. என் உரிமையும் இருக்கு…. அதை தான் நான் நியாபகப்படுத்த வந்தேன்…. வரட்டுமா, அம்மு வரேன்…. நாளைக்கும் போன் பண்ணு. நானே அழைச்சிட்டு போய் அழைச்சிட்டு வரேன் எங்க போகணும்னாலும்!” அதிரடியாக அறிவித்து விட்டு நிதானமாக கிளம்பி சென்றான் கேபி.
“என்னங்க இது….? அம்மு தான் நம்ம மருமக சொன்னீங்க….? இங்க நிறைய சிக்கல் இருக்கு போலவே….?” கிஷோரின் அம்மா சட்டென்று அதிருப்தியுடன் பேசி விட, வாசுகியும் பதில் கொடுத்தார்.
“இல்லைங்க, நாங்க அப்படி ஒன்னும் உறுதி கொடுக்கலைங்க, வீடு பத்தி மட்டும் தான் நிச்சயமா சொன்னோம்.”
“இருங்க இருங்க, ஏன் எல்லாரும் இப்படி அவசரப்பட்டு பேசறீங்க…. அமைதியா இருங்க…. இன்னைக்கு வீட்டை பார்த்தாச்சு அம்முவையும் பார்த்தாச்சு…. கிளம்புங்க இன்னொரு நாள் பேசலாம்….” என்று அனைவரையும் வேறு பேச விடாமல் கிளப்பி கொண்டு சென்றார் நாராயணன்.
கிளம்பும் முன் கிஷோர் அம்முவிடம்,
“உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நான் என் பிரண்ட்ஸ் கிட்ட சொன்னப்போ, அப்படி என்ன ஸ்பெஷல் அந்த பொண்ணுகிட்டேனு கேட்டாங்க…. நீயே ஒரு ஸ்பெஷல் எனக்குனு அவங்களுக்கு தெரியாது…. இதுநாள் வரை உனக்கும் தெரியாது, ஆனா இனிமே நீ தெரிஞ்சுக்க, நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்…. எனக்கு மட்டும்….!” என்று அவளை முழுங்கி விடுவது போல் பார்த்து சொல்லி சென்றான்.
அவனின் அறிவிப்பில் பார்வையில் அதிர்ந்து அருவெறுத்து போனாள் அம்மு.