🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 11
காலையுணவை தயார் செய்து கொண்டிருந்த சித்ராவுக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்தாள் அஞ்சனா.
அவருக்கு முன்பை விட சற்று தைரியம் பிறந்திருந்தது போலும். மருமகளுடன் பேசுவார். ஆனால் அதுவும் கணவன் இல்லாத சமயங்களில் தான்.
“அத்தை! நீங்க இந்த வடை எப்படி செய்றதுனு சொல்லி கொடுங்க” ஆவலுடன் கேட்டாள் அஞ்சு.
“அடியம்மா மெதுவா பேசு. நம்ம குசுகுசு பேச்சு உங்க மாமாவோட பாம்புக் காதுல விழுந்துட போகுது. அப்பறம் என்னை வடையாக்கி பொரிச்சு எடுத்துடுவார்” வாயில் கை வைத்து ரகசியம் பேசினார்.
“மாமா அவ்ளோ கோபக்காரரா?” தன் ஐயத்தை முன்வைத்தாள்.
“கோபக்காரர்னு இல்லை. அவர் கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டான்னு ஆதங்கம் அவருக்கு. அவரோட வாக்கு பொய்யாகின ஆத்திரம் இதெல்லாம் சேர்த்து இப்படி முறைச்சுட்டு திரியுறார்.
ருத் மேல அவருக்கு உண்மையான கோபம் இல்லை. உண்மையான கோபம் வெறுப்போட உருவாகுது. அப்படி வெறுப்பு இருந்திருந்தா அவனை வீட்டுக்குள்ள கூப்பிட்டு இருப்பாரா? உன்னை தான் ஒன்னும் சொல்லாம இங்கே மருமகள்னு இருக்க விட்டிருப்பாரா?
ஆனா எல்லாத்தையும் மறந்துடவும் முடியாது அவ்ளோ சீக்கிரம். பொறுமையா அவரே ஆற அமர எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு வந்து பேசுவார்” என்று பதில் கொடுத்தார் சித்ரா.
கணவனின் குணத்தை முழுதாக அறிந்தது அவரல்லவா? அவர் கூறிய அனைத்தும் பக்குவமடைந்த அஞ்சனாவுக்கு நன்கு புரியத் தான் செய்தன.
“உண்மை தான் அத்தை. எத்தனை தப்பு பண்ணாலும், அவங்க மனசை நோகடிச்சாலும் வெறுப்புக் காட்டாம பழையபடி அன்பு காட்ட அப்பாம்மாவால மட்டும் தான் முடியும். அவங்க பாசத்துக்கு முன்னால நம்ம கைம்மாறா எதையுமே செலுத்த முடியாது. திருப்பி கொடுக்க முடியாத கடனை நாங்க எடுத்திருக்கோம் அவங்க கிட்டிருந்து”
அவள் மனம் தன் பெற்றோரை நினைத்துக் கொண்டது. தாய் மீது பாசம் என்றாலும் சிறு வயதில் இழந்து விட்டதால் அவரது இழப்பு அத்தனை தாக்கத்தை அவளுள் ஏற்படுத்தியதில்லை.
ஆனால் தந்தை அப்படியல்ல. அவளுடனே இருந்தவர். தந்தையாக மட்டுமன்றி அவளுக்குத் தாயாகவும் மாறியவர். அவரது அன்பும் இழப்பும் அவளை பெரிதும் தாக்கின. அவரது அன்பு, அரவணைப்புக்காக ஏங்கியது உள்ளம்.
அஞ்சனாவுக்கு சொந்தமென யாருமில்லை. தனியாக வாழ்ந்தவள் என்பதை மகன் மூலம் அறிந்த சித்ராவுக்கு அவள் நிலை மனதை சிதைத்தது. அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுமென எண்ணிக் கொண்டார்.
“சமையல் முடிஞ்சுருச்சு. நான் எடுத்து வைக்கிறேன். நீ போய் ருத்ராவை கூட்டிட்டு வா” அவள் மனநிலையை மாற்றுவதற்காக அனுப்பி வைத்தார்.
மாடிப் படிகளில் ஏறிச் சென்று அறையில் இருந்தவனை “சாப்பிட வாங்க” என்றழைத்தாள்.
“நான் வர மாட்டேன்” மறுப்புத் தெரிவித்தவனை புருவம் சுருக்கிப் பார்த்தாள் பாவை.
“உனக்கு டை கட்டி விட சொன்னா முடியாதுனு போயிட்ட. அப்போ நீ கூப்பிட்டா நானும் வர முடியாது” சிறு குழந்தையாக அடம்பிடித்தான் ருத்ரன்.
“இவ்ளோ நாளும் நீங்க தானே கட்டிக்கிட்டது. இப்போ என்ன புதுசா என் கிட்ட சொல்லுறீங்க?”
“இப்போ தான் உன்னை கட்டிக்கிட்டேனே. அதனால நீ கட்டி விடு” கட்டாமல் வர மாட்டேன் என்ற உறுதியோடு அமர்ந்திருந்தான்.
“அடம்பிடிச்சு காரியம் சாதிக்கிறீங்க. நீங்க சொல்லுறத எல்லாம் பண்ணுறேன்னு ஓவரா தான் ஆடுறீங்க. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு இருப்பேன்னு நெனச்சிட்டீங்களா?” அவனோடு வாக்குவாதம் புரியும் நோக்கோடு கேட்டாள் மனைவி.
தனிமையில் இருந்தவள். நான்கு சுவர்கள் சுற்றிய அறையில் அவற்றிற்குக் கூட கேட்காமல் தன் மனதிற்குள் மட்டும் பேசியபடி வாழ்ந்தவள் அவள். அவளுக்கு இவ்வாறு இவனோடு ஏட்டிக்குப் போட்டியாக பேசுவது பிடித்திருந்தது.
“அப்படினு யாரு சொன்னா? நீ ஒரு சொல் சொல்லு. உனக்காக எதையும் செய்வேன். கல்லானாலும் மனைவி புல்லானாலும் பொண்டாட்டினு இருப்பேன்” பதிலுக்கு சொன்னவனைப் பார்த்து,
“உங்க கூட பேசி ஜெயிக்க முடியாது. ஆளை விடுங்க” என்று தலையில் கை வைத்து விட்டாள்.
“உன்னை தான் எப்போவும் ஜெயிக்க வைப்பேன் அம்மு. உன் கிட்ட நான் தோற்றுட்டேனே. அதனால உனக்கு ஒரு கிப்ட் தரலாமானு யோசிக்கிறேன்” நாடியில் விரல் தட்டி யோசித்தான்.
“நீங்க ஒன்னும் தர தேவையில்ல. டைம் ஆகுது” என்றவள் அவன் கையிலிருந்த கழுத்துப் பட்டியை எடுத்து அவனுக்குக் கட்டி விட்டாள்.
அதைக் கட்டும் போது பாடசாலையின் ஞாபகம் வந்தது. அங்குள்ள சிறுவர்களுள் சிலருக்கு கழுத்துப் பட்டி அணியத் தெரிந்தாலும் அவள் மீதுள்ள அன்பின் காரணமாக “அஞ்சு டீச்சர்! டை கட்டி விடுங்க” என காலையில் வரிசையாக வந்து நிற்பர்.
அவளும் புன்னகை மாறா முகத்தோடு அப்பிஞ்சுகளுக்கு கட்டி விடுவாள். அந்த நாட்களின் நினைவுகள் தற்போது நெஞ்சில் நெருடல் தந்தன. மீண்டும் ஆசானாக பாடம் சொல்லிக் கொடுக்கும் நாள் என்று வரும் என நினைக்கையில் “அம்மு டீச்சருக்கு என் கிப்ட்” என ஒரு கவரைக் கொடுத்தான் அபய்.
அதைப் பிரித்துப் பார்த்தவளிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவள் கற்பித்த பாடசாலையின் இந்த ஊரில் கிளையில் கற்பிப்பதற்கான அனுமதிக் கடிதம் அவளைப் பார்த்து முறுவலித்தது.
“இது எப்படி?” மகிழ்வு மிகுதியில் வார்த்தைகள் வெளி வராது சதி செய்தன.
“தாமரை ஆன்ட்டி அங்கே ஸ்கூல்ல பேசினாங்க. உன் நிலமை அவங்களுக்கு தெரியுமே. அதான் உனக்கு இங்கே டீச் பண்ண அனுமதி கிடைச்சிருக்கு. ஹேப்பியா?”
பேச முடியாத நிலையில் இருந்த அஞ்சனா அவ்வினாவில் சட்டென அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
“ரொம்ம்ம்ப…! எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு அபய். தாங்க் யூ” அவனை மேலும் இறுகக் கட்டிக் கொண்டாள் காரிகை.
தன்னவளின் அதிரடி அணைப்பில் ஏற்பட்ட அதிர்ச்சி விலகு முன்னே அவளின் அழைப்பு அவனை ஆனந்த சாகரத்தின் அடியாழத்தினுள் மூழ்க வைத்தது.
“அபய்” எனும் அந்த அழைப்பை பிரத்தியேகமாக உணர்ந்தான். உள்ளம் தேவாமிர்தமாக தித்தித்தது.
அவளின் உணர்ச்சிவசப்பட்ட நிலை அறிந்து அவள் கூந்தலை மென்மையாக வருடிக் கொடுத்தான்.
திடீரென சுயநிலைக்கு வந்தவளோ “அது… அது ஏதோ தெரியாம..”அவனிலிருந்து வேகமாக பிரிந்து நின்றாள்.
“ஹேய் இட்ஸ் ஓகே. விடு”
அவளுக்கோ அவன் தன்னை என்ன நினைத்தானோ எனத் தோன்றியது.
“வேணும்னே பண்ணல. ஒன்னும் நினைக்காதீங்க” மீண்டும் அதிலே தொங்கிக் கொண்டிருக்க அவனுக்கு கடுப்பானது.
“ஓஓ! நீ இன்னும் என்னை வேற யாரோ மாதிரி தான் பார்க்கிறல்ல. அதான் யாரையோ கட்டிப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிற. ரைட்! நீ தான் என்னை புருஷனாவே ஏத்துக்கலயே” விரக்தியோடு புன்னகைத்து வெளியேறியவனைக் காண அவளுக்குத் தான் அய்யோ என்றானது.
“இப்போ என்ன பண்ணுறது? இப்படி போயிட்டாரே. கோபமாகிட்டாரா?” பல யோசனைகள் மண்டையைக் குடைய அதனை ஒதுக்கி விட்டு அவன் பின்னால் சென்றாள்.
உணவு மேசையில் இருந்த செல்வனின் எதிரில் அமர்ந்தான் ருத்ரன். அவரோ அவனைக் கண்டும் காணாதது போல் அமைதியாக
சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
“வா ருத்ரா! சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என அருகில் செல்லப் போன மனைவியின் கையைப் பிடித்து தடுத்தார் செல்வன்.
“எங்க போற? அவனுக்கு இப்போ நாம தேவையில்லையே. கூட்டிட்டு வந்திருக்கானே பொண்டாட்டியை. அந்த பொண்ணு கையால சாப்பிட சொல்லு”
தாழ்ந்திருந்த விழிகளை மேலுயர்த்தி தந்தையை நோக்கினான் மைந்தன்.
“நீங்க என் கிட்ட வர வேண்டாம்மா. உங்க ஆளையே பார்த்துக்கங்க. நீங்க என் கிட்ட வரதை நெனச்சி அவருக்கு பொறாமை” தாயிடம் சொல்ல மகனை முறைத்துப் பார்த்தார் அவர்.
அங்கு வந்த அஞ்சனா அவனுக்கு பரிமாறினாள். ஒரு பேச்சு வரவில்லை அவ்விடத்தில். இவ்வாறு அமைதியாக இருப்பது என்னவோ போல் இருந்தது அஞ்சுவுக்கு. தன்னால் தான் இப்படியோ என்றிருந்தது. அனைத்திலும் மேலாக ருத்ரனின் அமைதி அவளை ஏதோ செய்தது.
“சித்ரா! உன் பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒவ்வொரு இடமா பரவி என் கிட்ட எல்லாரும் விசாரிக்கிற நிலமைக்கு போகுது. இதுக்கு மேல சரிவராது. இன்னும் அஞ்சு நாள்ல ரிசப்ஷன் வைக்கனும். அவனுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு இன்வைட் பண்ண சொல்லு” என்று எழுந்து சென்றார் செல்வன்.
“அதை உன் கிட்டயே சொன்னா என்னவாம் இவருக்கு?” சித்ரா மகனின் காதைக் கடிக்க, அவனோ செல்வனையே பார்த்திருந்தான்.
“என்ன டா ஆச்சு?”
“ரிசப்ஷன் விஷயமா பேச இருந்தேன். பயமாவும் இருந்தது என்ன சொல்வாருன்னு. ஆனா பார்த்தியாம்மா நான் சொல்லாமலே அவர் அதை யோசிச்சு செய்ய போறார். என்ன தான் இப்படி கோபமா இருந்தாலும் அப்பாவுக்கு என் மேல பாசம் தான்” அவரை எண்ணி அவன் நெஞ்சம் நேசத்தில் நெகிழ்ந்தது.
இதெல்லாம் சித்ராவுக்குத் தெரியாதா என்ன? அவன் மீது கணவனுக்கு எத்தனை பாசம் என்று அவருக்குத் தான் தெரியும். அவரிடம் அல்லவா அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் இதனை வெளிப்படையாக மகனிடம் காட்டிக் கொள்ள மாட்டார் அவ்வளவு தான். அது அவரது இயல்பு.
அனைவரும் ஒன்று போல் இல்லையே?! தமக்கானவர்கள் மீது அன்பை வைத்துக் கொண்டு வெளிப்படையாக அதனைக் காட்டி மகிழ்பவர்கள் ஒரு ரகம். அதனை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வெளியில் சாதாரணமாக இருப்பது இன்னொரு ரகம். அப்படிப்பட்டவர்களின் செயல்பாடுகள் காட்டிக் கொடுக்கும் அவர்களது அன்பையும் அக்கறையையும். ஆனால் வாய்வழியாக சொல்ல மாட்டார்கள்.
“சரிமா நான் போயிட்டு வரேன்” தாயை அணைத்து விடுவித்தவன் வெளியில் செல்ல அவனைத் தன்னிச்சையாக தொடர்ந்து சென்றவளின் விழிகளில் ஏக்கம்.
இதனை அறியாதவனா அவன்? அவளது அருகாமையே அவனுக்கு காட்டிக் கொடுக்கும் அவளின் உணர்வை.
காரின் அருகே சென்றவன் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தான். அவன் தலையசைத்து அழைக்க வேகமாக வந்தாள்.
“நீ யாரோ மாதிரி பண்ணுறது எனக்கு கஷ்டமா இருக்கு. ஆனா இப்படி பேசாம உன்னை கஷ்டப்படுத்தவும் முடியல. இனிமே இப்படி பண்ணாத டி” கனிவுடன் வந்தது அவன் குரல்.
அவளுக்கு பேச வார்த்தையே வரவில்லை. அவன் பேசிய இந்த ஒன்றே தனக்குப் போதும் என்றிருந்தது. தலையை அசைத்தாள்.
அருகில் வந்தவன் “போய் சமத்தா சாப்பிடு. நான் போயிட்டு வரேன் அம்மு குட்டி” என்று நெற்றி முட்டினான்.
அவனின் செய்கையில் பூவாய் மலர்ந்தவளின் விழிகளைப் பார்த்து “அழகான அபாயத்தில் என்னை ஆழ்த்துகிறாய் அஞ்சன விழியே” எனக் கூறிச் செல்ல,
அவனைப் பார்த்தபடி நின்றவளுக்கு இவன் மாயவன் அல்ல அன்பில் தாயவன் என்றே தோன்றிற்று.
♡♡♡♡♡
தந்தை திருமணத்திற்கு சம்மதித்ததும் ஆலியாவுக்கு தலைகால் புரியவில்லை. நிதினை இக்கணமே சந்தித்து இந்த மகிழ்ச்சியான விடயத்தை கூற வேண்டுமென உள்ளம் பரபரத்தது.
ஆக! தந்தையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள். அவன் இருக்குமிடம் அறிந்தவள் வயலுக்குச் செல்ல வேட்டியை முழங்கால் வரை கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தான் அவன்.
அவளைக் கண்டு கொண்ட நிதின் கையசைத்து அங்கேயே நிற்கச் சொல்லி விட்டு அவளருகே வந்தான்.
“கையெல்லாம் சேறா இருக்கு. அந்த பக்கமா போய் கை கால் கழுவிட்டு வரேன்” சற்று தள்ளியிருந்த கிணற்றில் தண்ணியை அள்ளி உடம்பில் படிந்திருந்த சகதியைக் கழுவி விட்டு வந்தான்.
விம்மிப் புடைத்த தோள்கள் அவனின் கடும் உழைப்புக்கு கட்டியம் கூறி நின்றன. முகத்தில் இருந்த நீரை துண்டால் துடைத்துக் கொண்டான். விழியகற்றாமல் அவனையே ரசித்தாள் ஆலியா.
“இன்னிக்கு தான் புதுசா காணுற மாதிரி பார்க்கிற?” அவள் பார்வை உணர்ந்து கேட்டான் நிதின்.
“முன்னெல்லாம் நீ ஜஸ்ட் என் ப்ரெண்டு. உன் மேல லவ் வந்ததில் இருந்து வித்தியாசமா தெரியுற நித்தி. நீ ரொம்ப அழகாகிட்ட மாதிரி தோணுது. உன்னை விட்டு கண்ணை எடுக்கவே முடியல” அடங்காது திமிறி தன் கன்னம் தொட்ட முடிக்கற்றையை காதோரம் சொருகி விட்டாள் ஆலியா.
“நான் வித்தியாசமா தெரியுறேனோ இல்லையோ நீ வித்தியாசமா பேச ஆரம்பிச்சிட்ட. உனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால கால் பண்ணுனேன் கொஞ்சம் பேசனும்னு வர சொல்ல. நீ ஆன்ஸ்வர் பண்ணல”
“நான் போன் சுவிட்ச் ஆப் பண்ணி வெச்சிருந்தேன். உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு தான் வந்தேன். நீ என்ன பேசனும்?”
“நீ முதல்ல சொல்லு” அவள் கூறப் போவதை முதலில் கேட்க விரும்பினான்.
“அப்பா உன்னை லவ் பண்ணுறதுக்கு விருப்பம் இல்லாம இருந்தாரே. இப்போ நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார். உங்க வீட்டுல வந்து பேசுறேன்னு சொன்னார்” இதழ்களில் புன்னகை விரியக் கூறினாள் ஆலியா.
“உங்கப்பாவை வர வேணாம்னு சொல்லு ஆலியா. உன் கிட்ட இதைப் பற்றி தான் பேச இருந்தேன். அது என்னனா நம்ம இப்படியே பிரிஞ்சிடலாம்” கண்களை மூடித் திறந்தான் அவன்.
“பிரிஞ்சிடவா?” அதிர்ச்சியில் உறைந்து போனாள் அவள்.
“ஆமா! அம்மா கிட்ட நம்ம காதலிக்கிறத சொன்னேன். அவங்க வாழ்க்கையை பார்த்தே காதல் அவங்களுக்கு வெறுத்து போச்சு. உங்கப்பா வேணாம்னு சொன்னதையும் சொன்னேன். அதனால வேணவே வேணாம்னு சொல்லிட்டாங்க. அம்மாவை மீறி நான் இதுவரை ஒன்னும் பண்ணுனது இல்லை”
“இப்படி சாதாரணமா சொல்லுறியே உனக்கு கஷ்டமா இல்லையா?”
“கஷ்டமா தான் இருக்கு. ஆனா அம்மாவை கஷ்டப்படுத்த முடியாது” அவளது பார்வையை எதிர்கொள்ளும் தைரியம் அவனுக்கில்லை.
“உனக்கு அம்மா தான் முக்கியம். நான் யாரோ தான் நிதின் புரியுது. உங்கம்மா சம்மதம் முக்கியம்னா நீ லவ் பண்ண முதல் அவங்க கிடட சொல்லி இருக்கனும். அப்போ விட்டிருக்கலாம். இப்போ சொல்லி என்ன பிரயோசனம்?” அவள் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.
“உன் மேல தப்பு இல்லை. நான் தான் லவ்வுனு சொல்லி பின்னாடி வந்தேன். எப்படியோ உனக்கு நம்பிக்கையும் தந்துட்டு அதை இல்லனு சொல்ல எனக்கே வெட்கமா தான் இருக்கு. இருந்தாலும் எனக்கு வேறு வழி தெரியல. அய்ம் சாரி ஆலியா” கலங்கிய கண்களை மறைக்க முடியாது தவித்துப் போனான் அவன்.
எப்படிப்பட்ட தைரியசாலியையும் நொடியில் பலவீனமாக்கக் கூடியது இந்த அன்பு. அன்பு வாழவும் வைக்கும், சாகவும் வைக்கும் அத்துனை வல்லமை படைத்தது அன்றோ?!
“நீ இப்படி சொன்னா உடனே விட்டுட்டு போய்டுவேன்னு நெனச்சியா நிதின்?”
“போக தான் வேணும் ஆலியா. இதுக்கு மேலயும் நாம பேசிட்டு இருந்தா நமக்கு தான் கஷ்டம். எல்லாம் மறந்துரு”
“மறக்க கூடிய விஷயமா இதெல்லாம்? உன்னை அவ்ளோ லவ் பண்ணுறேன் டா. உன் கூட வாழனும்னு எவ்ளோவோ கனவு கண்டேன். ஆனா.. ஆனா அதலாம் இல்லைனு நீ சொல்லும் போது என்னால தாங்க முடியல. உன்னை தவிர யாரையும் என்னால நெனச்சி கூட பார்க்க முடியாது” ஆவேசமாக சீறினாள் அவள்.
“ஆலி ப்ளீஸ்! என் நிலமையை புரிஞ்சுக்க. அம்மா இப்படி சொல்லுவாங்கனு நான் நெனக்கவே இல்லை. இப்போ எனக்கிருக்கிற சாய்ஸ் நீயா அம்மாவாங்குறது. உன்னை கட்டிக்கிட்டா அம்மா என் கூட பேச மாட்டாங்க. என்னால அவங்களை கடைசி காலத்தில் தனியா அனாதரவா விட முடியாது.
அதனால தான் அவங்களுக்காக உன்னை விடுறேன். உன்னை ஏமாத்துறேன்னு புரியுது. ஆனா வேற ஒன்னுமே பண்ண முடியல ஆலியா. என் நிலமை அப்படி இருக்கு”
“அப்படினா உன் நிலமைக்கு ஏற்ற ஒரு பொண்ணு வந்தா அவளை கட்டிப்ப. என்னை அவ்ளோ சீக்கிரமா மறந்துட முடியுமா உன்னால”
என்ன கேட்டு விட்டாள்? மறக்கக் கூடியவளா அவள்? அவனுள் முற்று முழுதாக நிறைந்து விட்டவள் அல்லவா? அத்தகையவளை சேர முடியாது சூழ்நிலை சதி செய்வதை நினைக்க அவனுக்கு மனம் தாளவில்லை.
“வேணாம் டி இப்படி கேட்காத” அவள் முகம் பார்க்க முடியாது போனது.
“அப்படினா உன்னால நான் இல்லாம வாழுறது கஷ்டம். அந்த ஒரு விஷயம் போதும் எனக்கு. இனி உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரதுனு எனக்கு தெரியும். இதே வாயால என்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு உன்னை சம்மதம் சொல்ல வைப்பேன்” மனதினுள் உறுதியாக கூறியவளின் விழிகள் கண்ணீரோடு கலந்த புன்னகையில் பிரகாசித்தன.
தொடரும்…….♡
ஷம்லா பஸ்லி