11. நேசம் நீயாகிறாய்!

5
(5)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

 

நேசம் 11

 

தம்பி சொன்ன விடயத்தைக் கேட்ட தேன் நிலாவுக்கு இதயத்தில் மின்சாரம் தாக்கியது.

 

“உன் கல்யாண நாள் என்னை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணியிருந்தாங்க” மரத்துப் போன குரலில் சொன்னான் துருவன்.

 

“டேய் துருவா…!!” அதிர்ச்சியோடு நின்றவள், “என்னாச்சு உனக்கு? எதுக்கு அர்ரெஸ்ட் பண்ணுனாங்க?” என்று படபடத்துப் போனாள்.

 

ஏதாவது பிரச்சினையோ? என்னவாகி இருக்கும்?

போலீஸைக் கண்டால் மட்டுமல்ல, அந்த பெயரைக் கேட்டால் கூட சிறு நடுக்கம் எழுந்திடும் அல்லவா?

 

“பயப்படாதக்கா. இப்படி உட்கார்” அவளை அமர வைத்து விட்டு நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லத் துவங்கியவனது மனம் அந்த நிகழ்வை மீட்டிப் பார்க்கலாயிற்று.

 

நாளை அக்காவின் திருமணம். நண்பர்கள் சகிதம் மகிழ்வோடு கதையளந்து கொண்டிருந்தான் அவன். துருவனின் நண்பர்கள் அனைவரும் இரவு வந்திருக்க,

 

“பக்கத்தில் இருக்கிற பப்புக்கு போகலாம்” என்றான் ஒருவன்.

 

அவனது நண்பர்களில் அதிகமானோர் மேல்தட்டு வர்க்கத்தினர். அவர்களுக்கு அதுவெல்லாம் சகஜம் என்பதால் அனைவரும் சம்மதிக்க, துருவன் மட்டும் தயங்கி நின்றான்.

 

“நான் வரலடா. நீங்க போயிட்டு வாங்க. இங்கே வேலை நிறைய இருக்கு” மெதுவாக கழன்று கொள்ளப் பார்க்க, அவனது நண்பர்கள் விடவேயில்லை.

 

“நீ எதுவும் பண்ணாத. ஆனால் எங்க கூட வந்தா போதும். நாங்க ஒரு க்ளாஸ் குடிச்சு டான்ஸ் போட்டுட்டு வர்றோம்” அவன் மறுத்தும் கேளாமல் இழுத்துக் கொண்டு செல்ல, வேறு வழியின்றி அரை மனதாக சென்றான்.

 

அவனது நட்பு வட்டாரம் மதுவை அருந்தி பெண்களோடு நடனமாட அவன் மட்டும் முகச் சுளிப்போடு அமர்ந்திருந்தான். வீட்டில் சொல்லாமல் வந்தது மனதை உறுத்தியது.

 

அனைத்தும் முடிய, நள்ளிரவு ஒரு மணியாகி இருந்தது. ஒவ்வொருவரும் பைக்கில் ஏறிக் கொள்ள, துருவன் ஓட்டிய பைக்கில் அவன் பின்னால் ஒரு நண்பன் ஏறிக் கொண்டான்.

 

குறுக்கு வழியில் வந்தவர்கள் போலீஸிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். அந்த வழி கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்துவதால் இவர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு சென்றனர்.

 

துருவனைத் தவிர அனைவரும் போதையில் வேறு இருக்க, அவன் எவ்வளவு கெஞ்சியும் காவல் அதிகாரிகள் மசியவில்லை.

 

“அச்சோ இப்போ என்ன பண்ணுறது? இன்னிக்கு அக்காவுக்கு கல்யாணம் வேற. அதுவும் இல்லாம அப்பாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சிடுவார். அக்கா மொத்தமா உடைஞ்சு போயிடுவா” தலையில் கை வைத்து தொய்ந்து போய் அமர்ந்நான் வாலிபன்.

 

உறவினரை தொடர்பு கொண்டு உதவி கேட்கவும் வழியில்லை. முகூர்த்தத்திற்கு சரியாக ஒன்றரை மணித்தியாலம் மீதமிருந்தது.

 

“அக்கா என்னை தேடுவாளே. அவ கல்யாணத்தைப் பார்க்குற பாக்கியம் எனக்கில்லையா?” கண் கலங்க அமர்ந்தவனின் பார்வையில் மங்கலாகத் தெரிந்தது ஒரு உருவம்.

 

அவன் விழிகளில் பளிச்சென்ற மின்னல். வேஷ்டி சட்டையோடு மாப்பிள்ளை கோலத்தில் புயலென நுழைந்தான் ராகவேந்திரன்.

 

காவல் அதிகாரிகளிடம் ஏதேதோ பேசினான். அடுத்த முக்கால் மணி நேரத்தில் துருவன் விடுவிக்கப்பட்டான். அவன் குடித்திருக்காதது சாதகமாகிப் போனது போல.

 

செல்லலாம் என்பதாக செய்கை காட்டியவனோடு இணைந்து நடந்தவன் வெளியே வந்ததும் “ராகவ் அண்ணா” என அவனை அணைத்துக் கொண்டான்.

 

அவன் கண்களில் வழிந்த நீர் ராகவ்வின் தோள்களில் பட்டுத் தெறிக்க, “டேய் துருவா” என்று பதறிப் போய் அவன் கண்களைத் துடைத்து விட்டான்.

 

இந்த பொலீஸ் நிலையத்தில் இருக்கும் ஒருவன் ராகவ்வின் நண்பன். அவனுக்கு துருவனையும் நன்கு தெரியும். அவனைப் பார்த்ததும் உடனே ராகவ்வை அழைத்திருக்க, அவனும் பதற்றமாக ஓடி வந்தான்.

 

“என் அக்கா கல்யாணத்தை பார்க்க முடியாம போயிடுமோனு ஃபீல் பண்ணேன். வெளில தெரிஞ்சா மானமே போயிடும்னு பயந்தேன். நீங்க என்னை காப்பாற்றிட்டீங்க. தாங்க் யூ அண்ணா” கண்கலங்கிப் போனது அவனுக்கு.

 

“அதான் எல்லாம் ஓகே ஆயிடுச்சுல்ல. இனி அழுகாத. அக்கா கல்யாணத்தில் தம்பி அழுதுட்டு இருந்தா என்ன அர்த்தம்?அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை சரியில்லயோனு நெனச்சுக்க மாட்டாங்களா?” புருவம் உயர்த்திக் கேட்க,

 

“இல்ல இல்லண்ணா. அப்படி சொல்லாதீங்க. அவளுக்கு ஏற்றவர் நீங்க தான். நான் சந்தோஷமா இருக்கேன். சிரிச்சுட்டே இருப்பேன். இதோ இப்படி” இதழ் பிரித்து சிரித்துக் காட்டினான்.

 

“ஹான் அது! எப்போவும் இப்படி சிரிச்சுட்டே இருக்கனும் துரு. உன் அக்கா அதைத் தானே விரும்புவா” என்றவன் விரைவாக வண்டியைச் செலுத்தினான்.

 

முகூர்த்த நேரத்தில் தன்னைக் காணவில்லை என்று தெரிந்தால் அங்கு பூகம்பம் வெடிக்கும் அல்லவா? படபடப்புடன் எப்படியோ முகூர்த்த நேரத்திற்கு மண்டப வாயிலில் நின்றான்.

 

அத்தனை பரபரப்பிலும் துருவனைப் பார்த்து, “நடந்ததை யார் கிட்டேயும் சொல்லாத. நான் எதையாவது சொல்லி சமாளிக்கிறேன். இல்லனா எல்லாரும் டென்ஷன் ஆகிருவாங்க. இது யாருக்கும் தெரிய வேணாம், எப்போவும்” என்று அழுத்தமாக சொல்லி விட்டு உள்ளே சென்றான்.

 

நடந்ததை இருவரும் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் அக்காவிடம் எதையும் மறைத்துப் பழக்கம் இல்லாதவனுக்கு அது மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஈற்றில் சொல்லி விட்டான்.

 

“இதான் அன்னிக்கு நடந்தது. ராகவ் அண்ணா ஹாஸ்பிடல் போகல. எனக்காக போலீஸ் ஸ்டேஷன் வந்ததால கரெக்ட் டைம்கு மண்டபத்தில் இருக்க முடியாம போச்சு. நீ அவரை தப்பா நெனச்சுக்காத. அண்ணாவுக்கு நம்ம மேல அவ்ளோ அன்பு, அதுவும் உன் மேல அதிகமாவே” என்று சொல்லி முடித்தான் துருவன்.

 

தேன் நிலா இன்னும் அவ்வதிர்வை விட்டு நீங்கவில்லை. அன்று மட்டும் துருவன் அவ்விடம் இல்லாவிட்டால் அவனைத் தேடியே தாலி கட்டும் சந்தோஷமான தருணத்தை இழந்திருப்பாள்.

 

விடயம் வெளியில் தெரிந்தால் சுகுமாரனின் கோபம் அவளது அன்புத் தம்பியை கூறு போட்டிருக்கும். சுசீலாவின் புலம்பல் மிகைத்து, குடும்ப மானம் சொந்தபந்தங்களுக்கு முன் பந்தாடப்பட்டிருக்கும்.

 

இவை அனைத்தும் நிகழாமல் இருக்கக் காரணம் ராகவ் ஒருவனே. தன் தம்பிக்காக அவன் செய்ததை நினைக்க நினைக்க மனம் பூரித்தது.

 

“அக்கா! என்னக்கா யோசிக்கிற?” அவன் யோசனையாகப் பார்க்க, “எனக்கு அதை நினைக்கவே பயமா இருக்கு டா. அந்த நேரம் நீ வரலைனா என்னவாகி இருக்கும்னே தெரியல. உனக்கொன்னும் ஆகலல்ல” என்று உடன் பிறந்தவனின் கையைப் பிடித்துக் கொள்ள,

 

“எனக்கு ஒன்னும் இல்லக்கா. நீ ராகவ் அண்ணாவை மனசார ஏத்துக்கலனு எனக்கு தெரியும். ஆனால் அவர் கண்ணுல உனக்கான அன்பைப் பார்த்திருக்கேன். அதை நீயே கூடிய சீக்கிரம் புரிஞ்சுப்ப. அவர் கூட நீ சந்தோஷமா வாழனும். அதான் என் ஆசை” அவளின் தோளில் சாய்ந்தான் துருவன்.

 

“ஹலோ பாச மலர்களா!” என மீரா உள்ளே வர, “ஹேய் மீரு வா வா. நீ எப்போ வந்த?” அவளை இழுத்து தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தேனு.

 

“உங்க தம்பி ஃப்ளாஷ் பேக் சொல்லும் போதே வந்துட்டேன். உங்க பாசமழையில் நனைஞ்சா ஜலதோஷம் பிடிச்சிரும்னு வெயிட் பண்ணுனேன்” என்று கண்ணடித்தாள் மீரா.

 

அவளிடம் அன்றிரவே துருவன் அனைத்தையும் சொல்லி விட்டான்.

“லூசா உனக்கு? அந்த எருமைங்க கூப்பிட்டா உனக்கு எங்க போச்சு புத்தி? அவனுங்க கூட சரக்கடிக்க போய் எவ்ளோ பெரிய ஆபத்துல மாட்டிக்கிட்ட” என திட்டித் தீர்த்தாள்.

 

மறு கணமே “எனக்கு பயமா இருக்குடா. இனிமே அந்த மாதிரி எங்கேயும் போகாத. உனக்கு ஒன்னுனா என்னால தாங்க முடியாது” என்று அவனை அணைத்துக் கொள்ள,

 

“ஓகே தங்கம். ப்ராமிஸ்! இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்” என அவளை சமாதானப்படுத்தினான்.

 

“ஓஓ! அப்போ உங்க லவ்வர் கிட்ட சொல்லிட்டீங்க. என் கிட்ட தான் மறைச்சு இருக்கீங்க இல்லையா?” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் தேனு.

 

“அப்படி இல்லைக்கா. ராகவ் அண்ணா வேணானு சொன்னார்னு சொல்லல. இப்போ சொல்லிட்டேன்ல. என்னால உன் கிட்ட எதையும் மறைச்சு வெக்க முடியாது. சாரி டியர்” என்று அவன் சொல்ல,

 

“சரிடா சரி சரி. எல்லாமே முடிஞ்சுது. இனிமே யார் கூடவாச்சும் போனா காலை உடைச்சுடுவேன் பார்த்துக்க” என்று எச்சரித்தாள்.

 

“நீங்க எப்போ நகமும் சதையுமா மாறுனீங்க. எப்போவும் அடிச்சுக்கிட்டு தானே இருப்பீங்க மச்சி” என்று மீரா கேட்க,

 

“அப்போ நாங்க சண்டை போடுறது உனக்கு என்டர்டெயின்மென்டா இருந்திருக்குல்ல” அவளைச் செல்லமாக முறைத்தவள், “துருவா! இனிமே இவ கூட சண்டை போடு” என்றாள்.

 

“வேணவே வேணாம். உங்க கூட சண்டை போட்டா மறு நிமிஷம் சேர்ந்துடுவார். ஆனா என் மேல கோபப்பட்டா நெஜமாவே சண்டைக்கோழியா மாறிடுவார். சமாதானம் செய்யுறது ரொம்ப கஷ்டம்” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

 

இருவருடனும் பேசி விட்டுக் கிளம்பிய தேனுவின் மனமோ, “உரிமை அதிகமான இடத்தில் தான் கோபம் வேற மாதிரி வேலை செய்யும் போல. ரஷ்ய பீஸ் என் மேல கோபப்படுறதுக்கும் இதான் காரணமோ?” தீவிரமாக சிந்தனை செய்தது அவள் மனம்.

 

ஆம், அப்படித் தானே?

நம்மை நேசிக்கும் ஒருவர் நம்மிடம் ஒரு விடயத்திற்காக கோபப்பட்டு மற்றவரிடம் அதற்காக கோபப்படாவிடின் நமக்கு மட்டும் தான் இப்படியா என்று கோபம் வரும்.

 

ஆனால் நம்மிடம் இருக்கும் அதீத உரிமை உணர்வே அவர்களை அவ்வாறு கோபப்பட வைத்திருக்கும். அந்தக் கோபம் கூட சில வேளை அன்பின் வெளிப்பாடாக இருக்கக் கூடும்.

 

அவனுக்காக காத்திருந்தாள் தேனு. மனம் ஏனோ இன்று அவனை அதிகமாகத் தேடியது. ஹாஸ்பிடலில் இருந்து வந்து சேர்ந்தான் ராகவேந்திரன்.

 

அவனைக் கண்டதும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன மேடம் பார்வை பலமாயிருக்கு?” என்று கேட்டவாறு ஷூவைக் கழற்றி வைத்தான்.

 

“ஒன்னும் இல்லை சும்மா தான். இருங்க வர்றேன்” என்றவள் அவனுக்காக காபி போடச் சென்றாள்.

 

காஃபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து நீட்ட, “புதுசா காபி எல்லாம் வருது” என்று கேட்டவாறு அதனை அருந்த, “ஏன் நான் போட்டு தரக் கூடாதா?” எனக் கேட்டாள்.

 

“தம்பி உண்மையை சொன்னதும் பாசம் வந்துருச்சோனு நெனச்சேன்” என்று அவன் கூறினான்.

 

“அப்படியே வெச்சுக்கோங்க. என்னால உங்க கூட சண்டை போட முடியாது” என்றவாறு அமர்ந்து கொண்டாள்.

 

“நான் தான் சொன்னேனே. நாலு நாள் கேப் கூட தேவையில்லைனு. அது நெஜமாகிருச்சு பார்த்தியா?”

 

“ஆமாமா! நீங்க பேசுறது எல்லாமே நிஜம். நான் பேசுறது மட்டும் சுத்தப் பொய்” அவன் தன்னைக் கடுப்பேற்றுவது தெரியாமல் இவளும் வாயைக் கொடுக்க, “உண்மை தெரிஞ்சதால நான் என்னவோ எதிர்பார்த்தேன். ஆனால் ஒன்னும் இல்லை” இதழ் பிதுக்கினான் ராகவ்.

 

“என்ன எதிர்பார்த்தீங்க?” அவள் யோசனையாகக் கேட்க, “எ டீப் ஹக்” என்றவாறு எழுந்து கொள்ள, நொடியும் தாமதிக்காமல் அவனைக் கட்டிக் கொண்டாள்.

 

“தேன் மிட்டாய்” அவன் உதடுகள் அனிச்சையாய் அசைய, தான் செய்த காரியம் உணர்ந்து விலக நினைத்தவளை விடாமல் தன் கரங்களுக்குள் சிறைப்படுத்தினான் கண்ணாளன்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-17

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!