11. வாடி ராசாத்தி

5
(1)

வாடி ராசாத்தி – 11

 

அன்று இரவு உணவருந்தி விட்டு அறைக்கு செல்லும் கேபியை நிறுத்தினார் ஜெயந்தி.

 

“உங்க மாமா வீட்டுக்கு போயிருந்தியா ராஜா இன்னைக்கு….?” நேராக எந்த பாசாங்கும் இன்றி வந்தது கேள்வி.

 

ஜெயந்தியின் அதிருப்தியை உணர்ந்தாலும், அதை கண்டுகொள்ளாமல், “ஆமா பெரியம்மா….” என்றான்.

 

சென்றதற்கு ஏதாவது விளக்கம் கொடுப்பான் என்று எதிர்பார்த்த ஜெயந்திக்கு பலத்த ஏமாற்றம். அதை விழுங்கி கொண்டு,

 

“உங்க தாத்தா பாட்டி நல்லா இருக்காங்க தானே….?” என்றார். அவர்களுக்காக தான் சென்றேன் என்பது போல் ஏதாவது சொல்வான், அப்படியே பேச்சை தொடர்வோம் என்று முயற்சி செய்தார்.

 

அவனா சிக்குவான்….? “ரொம்ப நல்லா இருக்காங்க….” பிடியே கொடுக்கவில்லை அவன்.

 

அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல்,

 

“இதெல்லாம் எதுக்கு பண்றே ராஜா…. எப்போதும் போல அவங்களை வரவைச்சு பாரு போதும்…. அவங்க வீட்டுக்கு போறது எல்லாம் வேண்டாமே….”

 

“ஏன் இப்போ நான் போனதால என்ன ஆச்சு பெரியம்மா….?”

 

“இத்தனை வருஷம் உன்னை கண்டுக்காதவங்க கூட இப்போ என்ன? எல்லாருக்கும் பதில் சொல்ல முடியலை என்னால….” என்றார் கடுப்பாக. தம்பி அவங்க மாமா வீட்டோட உறவை ஆரம்பிக்குது…. அப்போ கல்யாணம் மாமா பொண்ணோடவா இல்லை அக்கா பொண்ணோடவா….? என்று ஜெயந்தியை பலர் வெறுப்பேத்தி இருக்க, அதை வெளிப்படையாக சொல்லாமல் சொன்னார் ஜெயந்தி.

 

“சொல்றவங்க கிட்ட நீங்க சொல்ல வேண்டியது தானே பெரியம்மா, நாங்க ஒன்னும் சண்டைக்காரங்க இல்லை, சொந்தக்காரங்கன்னு….”

 

அவனை ஆழ்ந்து நோக்கி, “இத்தனை வருஷம் இந்த சொந்தக்காரங்க எங்க இருந்தாங்க ராஜா….?”

 

“இங்க தான்…. எல்லார் மனசிலும் ஏதோ ஒரு தடை, அது எல்லாம் நீங்க ஒரு நேரம் வரணும்ல, அது இப்போ வந்து இருக்கு….. விடுங்க பார்த்துக்கலாம்….”

 

“இதெல்லாம் எனக்கு நல்லதாவும் படலை, பிடிக்கவும் இல்லை ராஜா….”

 

“இதில கெட்டதுனு எனக்கு எதுவும் இல்லை பெரியம்மா, நம்ம சொந்தம் அவ்ளோ தான், நான் பார்க்கிறேன்…. ஊர்ல யார் என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை….”

 

“அவங்க உள்ளூரிலே இருந்துகிட்டு உன்னை கண்டுக்கலை, இப்போவும் ராஜா மாதிரி வளர்ந்து சிறப்பா இருக்க உன்னை கொண்டாட தெரியாம இருக்காங்க…. அவங்களுக்கு எதுக்கு நீ இவ்ளோ பார்க்கிறே….?” படப்படத்தார் ஜெயந்தி.

 

“பெரியம்மா, இப்போ எனக்கு அவங்க வேணும்னு என் மனசுக்கு பட்டது, நான் போனேன்…. இனிமேலும் போவேன், பகையையா வளர்க்கிறேன்….? உறவை தானே பெரியம்மா….? சரி நீங்களே சொல்லுங்க…. இத்தனை வருஷத்தில் உங்க கூட அவங்க ஏதாவது சண்டை போட்டாங்களா…?”

 

ஜெயந்தி வேண்டா வெறுப்பாக இல்லை என்று தலையை ஆட்ட…. “அப்பறம் என்ன பெரியம்மா…. லேட் ஆனாலும் நான் நல்ல விஷயம் தான் செய்றேன்னு நினைச்சு சந்தோஷப்படுங்க ….” என்றான் குரலில் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளாமல். அவன் திருமணம் நடக்க வேண்டும், பெரியம்மாவை எதிர்த்து திருமணம் செய்ய கார்த்திக் தயார், ஆனால் அவமரியாதையோ, நோகடித்தோ செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தானே வசிக்க வேண்டும்…. அதை நியாபகத்தில் கொண்டு நடக்க முயற்சித்தான்.

 

“சரிப்பா உன் மாமா வீட்டுக்கு நீ போ, உனக்கும் நந்துவுக்கும் கல்யாணம் நடக்கும் போது வந்து மாமன் உரிமையை விட்டுறாமல், ஊருக்கு முன்னாடி உனக்கு இருக்கிற மரியாதைக்கு ஏத்த மாதிரி சீர் செய்ய சொல்லு…. நான் அப்போ சந்தோஷப்படுறேன்….” என்று அவன் திருமணம் அவனின் அக்கா மகளுடன் என்பதை மறைமுகமாக வலியுறுத்தினார் ஜெயந்தி.

 

“அவர் சீர் கொடுக்கலாமா….? அதெல்லாம் அவரை விடாமல் சிறப்பானதா கேட்டு வாங்கிடுறேன் பெரியம்மா…. நீங்க கவலையேப்படாதீங்க….” அவன் அம்முவை நினைத்துக் கொண்டு கிண்டலாக கூற, அவன் குரலில் இருந்த கேலியில் உண்மை என்னவென்று புரியாமல் ஜெயந்தியும் கொஞ்சம் திருப்தியுடன் நகர்ந்தார்.

 

மறுநாள் காலையில்,

 

தன் ஸ்கூட்டியில் ஒரு காலை நிலத்தில் ஊன்றியபடி அமர்ந்திருந்த அம்முவின் அருகில் வேகமாக வந்து தன் பைக்கை சடன் பிரேக்கிட்டு நிறுத்தினான் கேபி.

 

“அடேய், நீ சர்க்கஸ் காட்ட வேற இடமா இல்லை….” நக்கலடித்தாள் அம்மு.

 

“சர்க்கஸ் கூடாரத்துல இருந்த சிலது இங்க இருக்கவும் நான் கொஞ்சமா குழம்பிட்டேன்….” அவனும் விடாமல் வம்பு வளர்த்தான். அவன் பேசி கொண்டு இருக்கும் போதே, அம்முவுடன் செல்லவேண்டிய பெண் வந்து விட, வண்டியை எடுத்தாள் அவள். அவள் கூடவே நகர்ந்தவன்,

 

“ஏண்டி, அத்தான் நேத்து பண்ண பெர்பாமன்ஸ்க்கு பெரிசா ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்தேன்…. ஒன்னும் சரியில்லையே….” உச்சு கொட்டினான் கேபி. அவன் செய்த வேலைக்கு அவன் மாமா நிச்சயம் டென்ஷன் ஆகி இருப்பார், அதை அம்முவும் அப்படியே பிரதிப்பலிப்பாள்…. சூழ்நிலை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் என்று தான் காலையிலேயே அவளை தேடி வந்திருந்தான் கேபி.

 

“உங்களுக்கும் உங்க அக்கா மகளுக்கும் கல்யாணம் நடக்கும் போது, மாமன் வீட்டு சீரா சங்கிலி வேணுமா? மோதிரம் வேணுமா…. இல்லை புலி நகம் வைச்ச டாலர் வேணுமா…. சொல்லுங்க …. எங்க அப்பா கிட்ட சொல்லி போட சொல்றேன்” என்றாள் திமிராக அம்மு. இரவு உண்மையில் செல்வராஜிற்கும் வாசுகிக்கும் பெரிய வாக்குவாதம், மகள் வாழ்க்கையை கெடுக்க போகிறீர்கள் என்று வாசுகி அழுது தீர்த்து விட்டார். செல்வராஜிற்கு தான் வகையாய் சிக்கி கொண்டது புரிய, இருந்த கோபத்தை எல்லாம் கேபியை திட்டி தீர்த்து கொண்டார்.

 

நிலைமையில் எந்த முன்ன்னேற்றமும் இல்லை என்று உணர்த்துகிறாள் என்று புரிய, கடுப்பனாவன்,

 

“சே சே…. பாவம் எதுக்கு புலி எல்லாம் கொன்னுகிட்டு, இந்த எலிக்குட்டி மட்டும் போதும்னு சொல்லிடு என் மாமன்கிட்ட ….” என்று சொல்லிவிட்டு அவளை தாண்டி கொண்டு பறந்தான்.

 

************

 

ஒவ்வொருவர் ஒரு விதமான மனநிலையில் இருக்க, கிஷோர் மிகவும் வேகமாக இருந்தான். அவன் அப்பாவை மட்டும் நம்பி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவன், சில பல முடிவுகள் எடுத்தான். எக்காரணம் கொண்டும் அவன் அம்முவை இழக்க தயாரில்லை. அதில் முதல் படியாக,

 

அன்று அம்ரிதா ஒரு பிறந்த நாள் விழாவிற்கு புகைப்படம் எடுக்க பக்கத்து ஊருக்கு சென்றிருக்கிறாள் என்பதை தெரிந்து வைத்திருந்தவன், நேரே அவளை காண அங்கேயே சென்று விட்டான். பத்து கிலோமீட்டர் தான் எனினும், இரவு உணவு உண்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று அந்த குடும்பத்தார்கள் மிகவும் வேண்ட, அம்ரிதா கிளம்ப ஒன்பது மணி ஆகி விட்டது. அவளுக்கு தனியே செல்ல எந்த பயமும் இல்லை, ஆனால் அவள் கிளம்பும் போது சரியாக வந்து நின்ற கிஷோரை கண்டதும் உண்மையில் பயந்து போனாள் அம்ரிதா.

 

“ஹாய் அம்மு….” வேகமாக அவளை நெருங்கி வந்தான் கிஷோர்.

 

“ஹா…. ஹாய்…. எ என்ன…..” தயக்கமாக வந்தது அம்முவின் குரல்.

 

“உனக்காக தான் ரொம்ப நேரமா வெய்ட் பண்றேன்…. உன்னை பத்திரமா வீட்டில விட வேண்டியது என் பொறுப்பு.”

 

“அதெல்லாம் நானே போய்ப்பேன்…. எனக்கு பழக்கம் தான்…. நீங்க கிளம்புங்க….” இப்போது கொஞ்சம் உறுதியாக பேசினாள் அமிர்தா.

 

“எனக்கும் தெரியும் அம்மு….உன்னை பத்தி எல்லாம் தெரியும் எனக்கு…. ஆனா முன்னாடி மாதிரி இல்லை இப்போ நிலைமை…. அதனால் தான் நான் வந்தேன்….”

 

அவன் திருமணத்தை பற்றி கூறுகிறானோ என்று நினைத்தவள்,

 

“இங்க பாருங்க, நீங்களே முடிவு பண்ணி பேசாதீங்க….” என்று ஆரம்பித்தாள்.

 

“இரு செல்லம், அவரசப்படாதே…. இது நம்மளை பத்தி இல்லை…. இத்தனை வருஷம் தூரத்தில் இருந்து பொறுமையா உன்னை பார்த்திட்டு இருந்த நான் இப்போ போய் அவசரப்படுவேனா….? உனக்கு ஆபத்து மா…. இங்க பாரு….” என்று ஒரு வீடியோவை காட்டினான்.

 

அதில் இருவர், செல்வராஜ் கொடுத்த பணத்தை சீக்கிரம் தரவில்லை என்றால் பொண்ணை தூக்கிட வேண்டியது தான் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அதைக்கண்டு அதிர்ந்தவளிடம், “மாமாவோட நிலைமையை சீக்கிரம் சரி பண்ணிடலாம், நான் இருக்கேன்ல…. ஆனா உன் விஷயத்தில் கண்டுக்காம என்னால ரிஸ்க் எடுக்க முடியாது செல்லம்…. அதான் நேரே நானே வந்துட்டேன்…. நீ என் தேவதை மா….”என்றான் கிஷோர்.

 

அவன் பேச பேச, இவனே செட் அப் பண்ணி இருப்பானோ என்று வெகுவாக சந்தேகப்பட்டாள் அம்மு. ஏனென்றால் செல்வராஜ் அடாவடி செய்யும் யாரிடமும் கடன் வாங்கவில்லை. தொழில் முறை பழக்கத்தில் இருப்பவரிடம் தான் வாங்கி இருந்தார். அவர்கள் அனைவரும் செல்வராஜ் மீது அதிருப்தியாக தான் இருந்தார்களே தவிர இப்படி செய்ய மாட்டர்கள் என்பது அம்முவிற்கு உறுதி. ஆனால் இந்நேரத்தில் இவனிடம் இருந்து தப்பிப்பதும் கடினம் என்று புரிய, அவன் சொன்னது போல் அவள் வண்டியை ஓரம் நிறுத்தி விட்டு அவனுடன் காரில் கிளம்பினாள்.

 

ஏறி அமர்ந்ததுமே, அவன் கொஞ்சுவது போல் பேச ஆரம்பிக்க அம்முவிற்கு எரிச்சல் மண்டியது. இன்னொரு பக்கம் கேபியின் நினைவு வேறு, இவள் ஏதோ தப்பு செய்வது போல் தோன்ற, தவித்தாள் அம்மு.வண்டி கிளம்பி இரண்டு நிமிஷத்தில், வாட்ஸப்பில் கேபிக்கு லைவ் லோகேஷன் ஷேர் செய்து விட்டாள் அம்மு.

 

அம்முவின் நோட்டிபிகேஷன் வந்தவுடன், கவனித்து விட்டான் கேபி. எதற்கு இப்போது லோகேஷன் அனுப்பி இருக்கிறாள் என்று பதறி அவளை அழைக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை. வேலை செய்யும் போது சைலண்ட்டில் போட்டதை மறந்து விட்டாள் அம்மு. கிளம்பும் முன் வாசுகிக்கு அவளே அழைத்து சொல்லிவிட இதை மாற்றவில்லை.

 

அவள் லோகேஷன் ஊரை நோக்கி தான் நகர்கிறது என்பது தெரிந்தாலும் என்னவோ ஏதோ என்று பதறி கிளம்பினான் கேபி. பாதி வழியில் செல்லும் போதே இருவரின் வண்டியும் சந்தித்து கொள்ள, வேகமாக காரை விட்டு இறங்கி அவளிடம் ஓடினான் கேபி. ஓட்டுவது கிஷோர் என்பதையும், அம்மு நலமாக இருக்கிறாள் என்பதையும் கண்டவனுக்கு ஆத்திரம் மிகுந்தது.

 

கேபியை அந்நேரத்தில் அங்கே எதிர்பார்க்காத கிஷோர், ஆச்சர்யத்துடன் “அட, நம்ம பழைய மாப்பிள்ளை….” என்றான் கேலியாக.

 

அவனுக்கு பதில் சொல்லாமல், அம்முவை பார்த்து, “இறங்கு நான் வீட்டில விடுறேன்….” என்றான்.

 

“நீங்க போறது எதிர்பக்கம், அதோட எடுத்த வேலையை பாதியிலே விடுறது எனக்கு பழக்கம் இல்லை…. பத்திரமா அம்முவை வீட்டில விடுறேன்னு நான் தான் காத்து இருந்து அழைச்சிட்டு வரேன்…. சோ நீங்க உங்க வேலையை பாருங்க….” என்றான்.

 

அவன் காத்திருந்து அழைத்து வருகிறேன் என்றதும், கிஷோரை அவள் தான் வர சொல்லி இருக்கிறாள், அவளும் காரை விட்டு இறங்காமலே அமர்ந்திருக்க, ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தவன், மேலும் வெறி பிடித்தவன் போல், பல்லை கடித்து கொண்டு,

 

“என்னை வித்தியாசமானவனா பார்க்க விரும்புறீங்க…. நல்லது…. என்னால என்ன முடியும்னு காட்டுறேன்….” என்றபடி அவர்கள் இருவரையும் உறுத்து பார்த்து சொல்லிவிட்டு அவன் காரை நோக்கி நடந்தான் கேபி.

 

அவன் பார்வையும் சொல்லிய விதமும் அதுவரை அமைதியாக இருந்த அம்முவை அரண்டு போக வைத்தது. அவனுக்கு லோகேஷன் அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது என்று நொந்து கொண்டாள். அவன் அழைத்ததும் அவளால் இறங்கி செல்ல முடியவில்லை, அப்போது தான் அப்பா அவள் நியாபகத்தில் வந்தார்…. அவளுள் நடக்கும் போராட்டத்தில் தலையை பிடித்து கொண்டாள் அம்மு.

 

“கவலையை விடு அம்மு, நீ போய் இருந்தா நான் ரொம்ப ஹர்ட் ஆகி இருப்பேன்…. தேங்க்ஸ் அம்மு…. அவனை நான் பார்த்துகிறேன்….” என்றான் கிஷோர் அன்பொழுக….

 

அவனின் திட்டம் தெரியாமல் கிஷோரை கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டு விட்டாள் அம்மு. கொஞ்சம் வழிகிறான் மற்றபடி இவனை சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டாள். இல்லையேல் அப்பாவை சமாளித்து கொள்ளலாம் என்று கேபியின் காரில் கிளம்பி இருப்பாள்.

 

மானசீகமாக தலையில் அடித்து கொண்ட அம்மு, கடவுளே இந்த கொசு தொல்லை தாங்கலையே…. என் அத்தை மகன் நல்லவனா கெட்டவனானு எனக்கே தெரியலை…. இவன் அவனை சமாளிப்பானாம்…. கூத்து அடிக்க போறோம் ஆக மொத்தம்….என்று அந்நேரத்திலும் மனதிலே கிண்டல் அடித்து கொண்டாள்.

 

யார் யாரை என்ன செய்ய போகிறார்கள்….?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!