12. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

5
(2)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

 

👀 விழி 12

பகலுணவு சாப்பிட்டதும் சிறு வேலைகளை செய்து முடித்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்து அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் அஞ்சனா.

 

தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்தாள். அழகாக இதழ் விரித்து காற்றில் அசைந்தவற்றைக் கண்டு இன்று அவளும் அழகாக மலர்ந்து சிரித்தாள்.

 

வீட்டில் இருக்கும் போதெல்லாம் இந்த மலர்களைக் காணும் போது கவலை தொற்றிக் கொள்ளும். அவை எந்த கவலையுமின்றி இருக்கின்றன. தான் யாருமற்ற தனிமையில் இருக்கிறோமே என்று விரக்தியாக நினைப்பாள். அவற்றுடன் தன் நிலமையை பகிர்ந்து கொள்வாள்.

 

இங்கு வந்ததில் இருந்து அந்த பழக்கம் அடியோடு ஒழிந்து போயிருந்தது. மனச்சுமை தீர்க்க தன் தோட்டத்து மல்லிகை இல்லாதது காரணமா? இல்லவே இல்லை. மனதில் சுமையே இல்லாது போயிருந்தது. அதற்குக் காரணம் சுயநலமற்ற அன்பை தன் மீது சாகரமாய் சொரியும் ருத்ரன் தான்.

 

எப்படி இருந்த தன்னை இப்படி மாற்றி விட்டான்? இந்த அதிசயமாயவன் தன் வாழ்வில் எந்த தடயமும் இன்றி இமைப்பொழுதில் நுழைந்து திட்டமான தடத்தைப் பதித்து தன்னை தாரமாக்கி தனக்குத் தாயானவனாக மாறியும் விட்டானே?!

 

“அப்பா! எனக்காக வருவான்னு நீங்க சொன்ன அடையாளங்கள்ல சிலதை அவர் கிட்ட பார்க்குறேன். இவர் தான் எனக்கானவர்னு தோணுது” உள்ளுக்குள் உரையாடியவளின் முன் வந்து,

 

“இந்தாம்மா ருத்ரன் பேசுறான்” தனது அலைபேசியைக் கொடுத்து விட்டுச் சென்றார் சித்ரா.

 

காதில் வைத்து “ஹலோ” என்றாள்.

 

“அம்மு குட்டி! சாப்பிட்டியா? என்ன பண்ணுற? தனியாவா இருக்க?” மூச்சு வாங்காமல் கேட்டு விட்டான் எதிர்முனையில் இருந்தவன்.

 

“இப்படி ஒரே மூச்சுல கேட்டா நான் எப்படி பதில் சொல்லுறது? சாப்பிட்டேன். இப்போ தோட்டத்திற்கு வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன்” என்றவள்,

 

“இதைக் கேட்கவா கூப்பிட்டீங்க?” எனக் கேட்கவும் செய்தாள்.

 

“ஆமா டி. ப்ராஜெக்ட் விஷயமா வெளியே போயிட்டு சாப்பிட வந்தேன். உனக்கு கால் பண்ணுனா சுவிட்ச் ஆப்னு வருது. அதான் அம்மாவுக்கு பண்ணுனேன்”

 

“அப்போ போய் சாப்பிடுங்க” அவனுக்கு பசியாக இருக்குமே என அவள் நினைக்க,

 

“நீ என்னை அனுப்ப பார்க்கிற. நான் வெச்சிடறேன்” முகத்தை சுருக்கிக் கொண்டான் அவன்.

 

“சாப்பிட வந்ததா சொன்னீங்க. அதனால தான் போக சொன்னேன். அதுக்குனு முகத்தை இப்படி வெச்சுக்குறதா”

 

“நான் முகத்தை தூக்கி வெச்சிட்டேன்னு உனக்கு எப்படி தெரியுது”

 

“இதெல்லாம் நேரில் பார்த்தா தான் புரியுமா? நீங்க பேசுற விதத்தில் தெரியுது. ஸ்கூல்ல இப்படி தான் குட்டீஸ் என் கூட செல்லமா கோவிச்சுக்கிட்டா சிணுங்குவாங்க” மெல்லமாய் நகைத்தாள் நங்கை.

 

“நான் குழந்தைனு இப்போவாவது புரியுதே உனக்கு. அதனால இனிமே எனக்கு முடி வாரி விடனும், டை கட்டி விடனும், ஊட்டி விடனும்..” கிடைத்த சாக்கில் லிஸ்ட் போட்டான் ருத்ரன்.

 

“சரிங்க குட்டி பாப்பா. ஆனா சேட்டை பண்ணுனா அடியும் விழும். இப்போ போய் சாப்பிட்டு வேலையை பாருங்க” அன்பாக சொன்னாள் அஞ்சு.

 

“போகவே மனசில்ல டி. நான் அப்புறமா பேசுறேன். வெச்சிடுறேன் அம்மு” அழைப்பைத் துண்டித்தான் அபய்.

 

அவனோடு பேசுவது மனதுக்கு இதத்தைக் கொடுத்தது. பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது.

 

வேலைக்கு செல்லும் போதும் மனைவி நினைப்பு தான். அடிக்கடி அழைத்து சாப்பிட்டாயா? என்ன செய்கிறாய்? என்று கேட்பதாக பிரபாகரன் அவளிடம் கூறுவார்.

 

தந்தையைப் போலவே இவனும் தன்னிடம் நடந்து கொள்வது அவளுக்கு ஆச்சரியமாக அதே சமயம் ஆனந்தமாக இருந்தது. அவனது ஒவ்வொரு செய்கையும் பிடிக்கலானது.

 

தன்னை நோக்கி வரும் ஆலியாவைக் கண்டவள் ருத்ரனின் நினைவிலிருந்து விடுபட்டு “வா ஆலியா” என்று அழைத்தாள்.

 

“ருத்ரா மாமா இல்லையா?” என்று கேட்டவாறு அவளருகில் வந்து அமர்ந்தாள்.

 

“அவர் ஆபீஸ் போயிட்டார். மாமாவும் வீட்டுல இல்லை. அத்தை கொஞ்சம் தூங்கனும்னு போனாங்க. அத்தை மாமா எல்லாம் சுகமா?” என்று கேட்டாள் அவள்.

 

“இருக்காங்க” ஒற்றை வார்த்தையில் அவள் கூறிய பதில் மற்றவளின் புருவங்களை முடிச்சிடச் செய்தது.

 

“ஆலியா ஆர் யூ ஓகே?”

 

“நோ அஞ்சு. ஐ கான்ட்! ஐ கான்ட் கன்ட்ரோல்” இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை வெளியிட்டாள்.

 

அவளும் எத்தனை நேரம் தான் தாங்குவாள்? நிதினின் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தில் வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் இங்கு வந்தாள். லீலாவிடம் சொல்லலாம் என நினைத்தாலும் தாயிடம் மனதிலுள்ளதைச் சொல்ல மனம் வரவில்லை.

 

நண்பர்களிடம் சொல்ல அதை விட விருப்பமில்லை. தனது உணர்வுகளை சொல்லி ஆறுதல் தேட முனைந்த சந்தர்ப்பங்கள் பல. அதனை புரிந்து கொள்ளாமல் கேலி செய்து காயப்படுத்தி விட்டனர். அவரவற்கு நிகழ்ந்தால் அவர்களுக்குப் புரியும்.

 

புரிய வேண்டாம், ஆறுதலளிக்கவும் வேண்டாம். ஆனால் அதைக் குத்திக் காட்டி மனதை நோகடிக்கவும் வேண்டாமே?! ஆயிரம் தான் அன்பு கொண்டு ஒட்டி உறவாடினாலும் அவரவர் உணர்வு அவரவருக்கு மாத்திரமே புரியும்.

 

அதனால் அனைத்தும் வெறுத்து அத்தை வீட்டிற்கு வந்தாள். அஞ்சனாவுடன் பேசினால் இயல்பு நிலைக்கு வந்து விடலாம் என வந்தவளுக்கோ அவளின் அக்கறையான பேச்சில் மனத்திரை கிழிந்து போனது.

 

அவளின் கண்ணீரில் அதிர்ந்தாலும் எதுவும் பேசாமல் அவளாக பேசும் வரை காத்திருந்தாள்.

 

தோண்டித் துருவும் ஆராய்ச்சி ஏதும் இன்றி இருக்கும் அஞ்சனாவின் செயல் ஆலியாவுக்கு புதிதாக இருந்தது.

 

“நான் ஏன் அழுறன்னு கேட்க மாட்டியா?”

 

“நிச்சயமா கேட்க மாட்டேன். உனக்கு தோணுச்சுனா சொல்லு. இல்லைனா விட்டுத் தள்ளிட்டு இரு” அமைதிப் புன்னகையை வழங்கினாள் வஞ்சி.

 

“நீ ரொம்ப கியூட் அஞ்சு! ஆறுதல் தேடிப் போய் காயப்பட்டு நின்னதால இனி எந்த ஃபீலிங்க்ஸையும் ப்ரெண்ட்ஸ் கிட்ட கூட ஷேர் பண்ணாம இருக்கனும்னு முடிவெடுத்திருக்கேன். ஆனாலும் மனித மனம் விசித்திரமானதுல்ல. நாம நினைக்கிறது ஒரு மாதிரி. நடக்கிறது வேறொரு மாதிரி.

 

உன் கிட்டயாவது எல்லாம் சொல்லிடனும்னு தோணுது. எல்லாம் உள்ளுக்குள்ள போட்டு வெச்சிட்டு இருந்தா மனசு வெடிச்சிட போகுது” அணை கடந்த வெள்ளமாய் இன்று நிதினோடு நிகழ்ந்த உரையாடல் அவள் வாய்வழி சிலீரிட்டுப் பாய்ந்தது.

 

செவிதாழ்த்திக் கேட்ட அஞ்சனாவுக்கு அதிர்ச்சி. நிதினுக்கு ஆலியா மீது எவ்வளவு காதல் என்பதை ருத்ரன் சொல்லி சற்று அறிந்துள்ளாள். இப்போது மறுக்கிறான் என்றால் ஏதாவது காரணம் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக மனதில் பட்டது.

 

“நீ என்ன முடிவு பண்ணிருக்க ஆலியா?” அவளிடமே வினவினாள்.

 

“எனக்கு நிதினை விட முடியாது. அவனுக்கு என்னை பிடிக்கலனா விடுவது வேறு கதை. ஆனால் என்னை மனசுல வெச்சிட்டு ஒவ்வொரு காரணம் சொல்லுறான். அவனோட அம்மா ஒத்துக்காதது தான் காரணம்னா ஒத்துக்கும் வரை அவனை லவ் டாச்சர் பண்ணிட்டு தான் இருப்பேன்”

 

அவள் விழிகளில் இருந்த தீவிரம் முடிவில் மாற்றமுறாமல் இருக்கிறாள் என்பதை எடுத்துரைத்தது.

 

“நல்லா யோசிச்சு முடிவு எடு ஆலியா. உன் வாழ்க்கையில் உன் முடிவு ரொம்ப முக்கியம். இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியல. ஏன்னா இப்படி ஒரு நிலமைய நான் சந்தித்ததில்ல. அந்த அனுபவமும் இல்லை. புத்திசாலித்தனமா நீ செயற்படு. அது போதும்”

 

“கண்டிப்பா அஞ்சு. தாங்க் யூ” அவளின் கையைப் பற்றி நன்றி தெரிவித்தாள்.

 

“உங்கப்பா கிட்ட என்ன சொல்ல போற?” என்று கேட்டவளுக்கு “தெரியல. ஒரே குழப்பமா இருக்கு. முதல்ல நிதினோட அலும்பை சரி பண்ணனும். அப்போ எல்லாம் சரியாகிடும்” என பதிலளித்தாள் ஆலியா.

 

இருவரும் ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருந்தனர். ருத்ரனைச் சந்திக்க அங்கு வந்த நிதின் ஆலியாவைக் கண்டு திரும்பிச் செல்ல எத்தனித்தான்.

 

“வா நிதின்” அவனைக் கண்டு அழைத்தார் சித்ரா.

 

“சித்தும்மா” வேறு வழியின்றி உள்ளே வந்தான்.

 

அவனைக் கண்ட ஆலியாவிற்கு புன்னகை பூத்தது.

 

“போடா நான் உன் கூட கோவம். இந்த சித்தும்மாவை மறந்துட்டீல. என்னை பார்க்கவே வர மாட்டேங்கிற” கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டார் சித்ரா.

 

“வயல்ல கொஞ்சம் வேலை சித்து. ருத்ரா இல்லையா?”

 

“அவன் ஆபீஸ் போயிட்டான். அதுக்குனு இப்போ ஓடிப் போயிட முடியாது. ஜூஸ் போட்டு கொண்டு வரேன் குடிச்சிட்டு போ” அதிகாரமாக சொல்லிக் கொண்டு உள்ளே சென்ற சித்ராவைக் கண்டு மனம் நெகிழ்ந்தான் நிதின்.

 

வெள்ளந்தியான மற்றும் ருத்ரனை நண்பனாக எண்ணி அவனையே சுற்றி வரும் நிதினை சித்ராவுக்கு அவ்வளவு பிடிக்கும். அவனுக்கும் சித்தும்மா’ மீது அளவு கடந்த அன்பு.

 

காதலர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து அஞ்சனாவும் மாமியாரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டு போனாள்.

 

“ஓய் காஞ்ச பிஸ்கட்”

 

ஆலியா அழைப்பது தெரிந்தும் விளங்காதது போல் எங்கோ பார்வையை செலுத்தினான் நிதின்.

 

“மை டியர் கட்டி கரும்பு” அவன் மீசையைப் பிடித்திழுக்க ஆஆ என அலறினான்.

 

“குட்டிப்பிசாசு! நான் உன்னை ஏதாச்சும் பண்ணுனேனா? ஏன்டி? சும்மா இருக்க மாட்டியா?”

 

“சும்மா கையை வெச்சிட்டு இருக்க போரடிக்குது நிதின். உன் கூட வர போறேன். பைக்ல கம்மான் பேபி லெட்ஸ் கோ ஒன் தி புல்லட்டு’ போகலாமா” பைக்கில் செல்வது போல் சைகை காட்டினாள்.

 

“நான் ஸ்டேட்டஸ் வெச்சத சொல்லி காட்டுறியா?” முறைத்துப் பார்த்தான்.

 

“அட நல்ல வேளை ஞாபகப்படுத்தின. நாம சேர்ந்து நின்னு ஒரு செல்பி எடுத்துக்கலாம். வித் மை ஸ்வீட் ஹார்ட்னு ஸ்டேட்டஸ் போடனும்” கண்கள் மின்ன சொன்னாள்.

 

“ஆலியா திரும்ப இந்த பேச்சு எடுக்காத. உன் கிட்ட எல்லாம் முடிவா சொல்லிட்டேன்”

 

“உனக்கு மட்டும் தான் முடிவு சொல்ல தெரியுமா? நானும் முடிவா சொல்லுறேன் கேட்டுக்க. உன்னை மறக்க முடியாது. இப்போவும் லவ் பண்ணுறேன். எப்போவும் லவ் பண்ணுவேன்” வார்த்தைகளும் வன்மையாக வெளிப்பட்டதோ?!

 

“ப்ளீஸ் டி. இதையே பேசிட்டு இருந்தா கஷ்டம். மனசை மாத்திக்க”

 

“நீ உன் அம்மா மனசையும் உன் மனசையும் மாத்துற வழியை பாரு. என்னால ஒன்னையும் மாத்த முடியாது. எதையோ நீ மறைக்கிற நிதின். கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வேறு ஏதோ காரணம் இருக்கு. அதை கண்டுபிடிப்பேன். ஆனால் ஒன்னு; என்ன நடந்தாலும் இந்த காதல் என்னிக்கும் மாறாது” கண்ணோரம் கோபமும் கண்ணீரும் ஒருங்கே வழிய கூறி விட்டு உள்ளே சென்றாள்.

 

அவளைப் பார்க்க வேதனை அதிகரித்தது நிதினுக்கு.

“என்னால உன்னை கட்டிக்க முடியாதுடி. பட் ஐ லவ் யூ சோ மச்” அவன் கண்களும் கண்ணீரைச் சுரந்தன.

 

சித்ரா ஜூஸ் கொண்டு வர கலங்கிய கண்களை வெளிக்காட்டாமல் பருகி விட்டு விரைவாக விடைபெற்றுச் சென்றான்.

 

♡♡♡♡♡

 

“பொண்ணுங்க ரெடியாக போனா இவ்ளோ நேரம் ஆகும்னு அப்பா சொல்லுறது நிஜம் தான் போல” இருபது நிமிடங்கள் உருண்டோடியும் அறைக் கதவைத் திறக்காத மனைவிக்கு கேட்க சற்று சத்தமாகவே கூறினான் ருத்ரன்.

 

“இதோ வந்துட்டேன் வந்துட்டேன்” எனக் கூறியபடி வந்தவளைக் கண்டு இமை சிமிட்ட மறந்து போனான் கணவன்.

 

கடும்நீல நிற சாரியில் கூந்தலை பின்னலிட்டு இருந்தவள் பேரழகியாய் தெரிந்தாள். குண்டுக் கன்னங்களைப் பிடித்துக் கொஞ்சத் தோன்றியது.

 

அவனின் பார்வையில் வெட்கப் பூக்கள் பூக்க செந்நிறம் கொண்டது அவள் வதனம்.

அதனைத் தாங்க முடியாமல் “போகலாமா அபய்?” எனக் கேட்டாள்.

 

சிந்தை கலைந்து தலையை ஆட்டி விட்டு “அம்மு அழகா இருக்க டி. ஏஞ்சல்னு சொல்லுவாங்களே. உன்னைப் பார்க்கும் போது எனக்கு அப்படி தோணுது” எனக் கூறியதோடு நில்லாமல் அவள் முகத்தைக் கைகளால் பற்றி நெட்டி முறித்தான்.

 

அச்செயலில் அவளிதழ்களில் கீற்றுப் புன்னகை.

 

“இன்னிக்கு ஸ்கூல் முழுக்க அஞ்சனா டீச்சர் மேல கண்ணு வைப்பாங்க போல” என்று சொன்னவாறு நடக்க, கைப்பையை எடுத்துக் கொண்டு அவனோடு சென்றாள் அஞ்சு.

 

எதிர்ப்பட்ட சித்ராவைக் கண்டு “அப்பா எங்கம்மா?” என வினவினான் மகன்.

 

“ரிசப்ஷனுக்கு ஓடியாடி வேலை செஞ்சிட்டு இருக்காரு மனுஷன். உங்கப்பாவை கையில பிடிக்க முடியல” எனச் சிரித்தார்.

 

“அம்மு! என் அம்மாவுக்கும் அவருக்கும் பாசசிவ்னஸ் ஓவராகிட்டே வருதுமா. அப்பா என்னனா அம்மாவை என் கூட பேச விடாம அவர் பக்கத்தில் வெச்சுக்குறார். இவங்க அவரை கையில பிடிச்சு வைக்க ட்ரை பண்ணுறாங்க” மனைவியிடம் கண்சிமிட்டினான் ஆடவன்.

 

“உனக்கு வாய் கூடிட்டு டா படவா” அவன் தோளில் அடித்தார் தாய்.

 

“நான் இன்னிக்கு பக்கத்தில் இருக்கிற ஸ்கூல்ல படிச்சு கொடுக்க போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை” தன் காலில் விழுந்தவளைப் பிடித்து, “என்னிக்கும் நல்லா இரு. என் பையன் கூட சந்தோஷமா வாழனும் மா” அவளை ஆசிர்வதித்து வழியனுப்பினார் சித்ரா.

 

காரில் ஏறிப் புறப்பட்டனர். இருவரும் ஏதோவொரு கதையைப் பேசியபடி வந்தனர். காரை ஓட்டியவாறு அவளை அப்பட்டமாக சைட் அடித்தான் ருத்ரன்.

 

“எப்படி பார்க்கிறார் பாரேன்? எனக்கு வேற வெட்கமா வந்து தொலைக்குது” முகத்தில் படரும் வெட்கத்தை மறைக்க யன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் துவங்கினாள் அஞ்சனா.

 

பாடசாலை வந்ததும் இறங்கிக் கொண்டனர். அதிபர் அறைக்குச் செல்ல “வாங்க வாங்க” என வாய்நிறைய வரவேற்றார் ப்ரின்சிபல்.

 

பாடசாலை மாற்றல் பற்றிய விவரங்களை பேசி விட்டு “தாங்க் யூ மேம். ஐ வான்ட் டு கோ நௌ” என விடைபெற்றான் ருத்.

 

விசாரிப்புகள், பேச்சுகள் அனைத்தும் முடிந்து மூன்றாம் வகுப்பிற்கு சென்றாள். மீண்டும் பாடசாலை வாசம், சின்னஞ்சிட்டுகளின் கோஷம், அவர்களின் புன்னகை முகம் தன் வாழ்வில் குறுக்கிட்ட மகிழ்வில் கற்பித்தாள்.

 

மாணவர்களுக்கும் அவளைப் பிடித்துப் போய் “டீச்சர் டீச்சர்” என்று அவளைச் சுற்றி வர அவளுக்கு ஒரே குஷியாகிப் போனது.

 

பாடசாலை விட்டதும் வீடு திரும்ப ஆட்டோ பிடிக்க நினைத்தவள் முன் பிரசன்னமானான் கணவன்.

 

“நானே வந்திருப்பேன்ல. ஏன் வேலையை வெச்சிட்டு வரீங்க?” கடிந்து கொண்டவாறு ஏறினாள்.

 

“இந்த வழியா ஒரு வேலையாகிருச்சு. அப்படியே பிக்அப் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்” என்றவன் ஒரு சாரி கடையில் வண்டியை நிறுத்தினான்.

 

ருத்ரனுக்கு ஏற்கனவே அறிமுகமான கடைக்காரர் அவளை யோசனையாக பார்க்க “மை வைஃப் அஞ்சனா. புது சாரி டிசைன்ஸ் காட்டுங்க” என்றதும் அவரே புது டிசைன்களை காட்டினார்.

 

விலையுயர்ந்த சேலையொன்றை எடுத்துக் காட்ட அதன் விலையைக் கண்ணுற்றவள் “எனக்கு எதுக்கு இதெல்லாம்? நோர்மலா எடுங்க” என மறுத்தாள்.

 

“நான் வாங்கி தரேன். நீ வாங்கு அம்மு” என்று கூறியும் அவள் தயங்கியது அவன் மனதை ஏதோ செய்தது.

 

அவ்வளவு மதிப்புள்ள உடைகளை அணிந்திராதவளுக்கு தயக்கமாக இருந்தது. இருந்தும் அவனுக்காக வாங்கிக் கொண்டாள்.

 

அவனருகே வரப் போனவளின் கால் வழுக்கி விழப் போக அவனைச் சட்டென தாங்கிக் கொண்டான் ருத்ரன். விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அவன் இடையில் கையிட்டு அணைத்துப் பிடித்தாள் பெண்.

 

“பார்த்து அம்மு” தன் செவியோரம் தீண்டிய மூச்சுக்காற்றின் உஷ்ணத்தில் உணர்வு வரப் பெற்று சட்டென விலகியவளுக்கு அனைவரும் தம்மைப் பார்ப்பது போன்ற எண்ணத்தில் கூச்சம் கொண்டு “சாரி. தெரியாம வழுக்கிடுச்சு. சாரி அபய்” என பதறினாள்.

 

தற்போது அனைவரின் பார்வையும் தம்மீது நிலைப்பதாக உணர்ந்தான் ருத்ரா.

 

“பொண்டாட்டினு சொன்னாரு. ஆனா இந்த பொண்ணு அவரைப் பிடிச்சதுக்கு இப்படி பதறுது. உண்மையிலயே இவருக்கு கல்யாணம் ஆகிருச்சா?” ருத்ரனின் கல்யாணம் பற்றி அறியாதவர் இருவரையும் சந்தேகத்தோடு ஏறிட்டார்.

 

அப்பார்வையின் அர்த்தம் உணர்ந்த ருத்ரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வாங்கிய பிடவைக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு வெளியேறினான்.

 

காரில் செல்லும் போது மயான அமைதி. அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு புரிந்து போனது அவனுள் ஏதோ சிந்தனை அலை மோதுகிறது என்று.

 

வீடு வந்ததும் இறங்கிக் கொண்டவள் “என்னோட எதுவும் கோபமா?” தவிப்போடு அவனை நோக்கினாள்.

 

“உன் மேல கோபம் இல்லை. உனக்கு முழு விருப்பம் இல்லாம உன்னை கட்டிக்கிட்டேனேனு என் மேல தான் கோபமா வருது. அவசரப்பட்டுட்டேன் நான். உனக்காக காத்துட்டு இருந்து விருப்பத்தோட தாலி கட்டியிருந்தா மத்தவங்க முன்னால வேற யாரோ மாதிரி என்னை நடத்தி இருக்க மாட்டல்ல” புன்னகைக்க முயன்று தோற்றுப் போனான் அவன்.

 

அவளுக்கு தற்போது புத்தியில் சம்மட்டியால் அடித்தது போல் உறைத்தது. ஏதோ படபடப்பில் அனைவரும் பார்க்கிறார்களே என்ற தவிப்பில் மன்னிப்பு கேட்டு விட்டாள்.

 

இது அவனை எந்தளவு காயப்படுத்தி இருக்கும் என யோசிக்கவில்லையே?! கணவன் மனைவிக்கிடையில் இவ்வாறான மன்னிப்பு ஏதும் தேவையில்லையே. அப்படியாயின் மனதார இன்னும் அவனை கணவனாக தன்னால் ஏற்க முடியவில்லையா?

 

“நீ இன்னும் கணவனா என்னை நினைக்கல. மனைவிங்கிற உரிமையை என் கிட்டிருந்து எடுத்துக்கவும் இல்லை. உன்னை குற்றம் சொல்ல முடியாது. நான் தான் எல்லாம் பண்ணுனேன். சாரி அம்மு” வேதனையோடு சென்றான் ருத்ரன்.

 

“என் கிட்ட போய் சாரி எல்லாம் எதுக்கு?” என கேட்க வந்தவளுக்கு, தானும் தேவையில்லாத விடயத்திற்கு எல்லாம், அதுவும் மற்றவர் முன்னிலையில் மன்னிப்பு கேட்டு அவனை பிரித்துப் பார்த்து விட்டோம் என்று தெளிவாக புரிய, செல்லும் அவனையே பரிதவிப்போடு பார்த்தபடி நிற்கலானாள் அபய்யின் அம்மு.

 

தொடரும்………♡

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!