என் சொல்லின்
இயலாமைகள் யாவும்
என் நேசத்தின் வேர்கள்
என்றே அறிவாயா பெண்ணே?
—————-
இதழொற்றல் தந்த இனிமையில் கரைந்திட்ட இருவருக்குள்ளும் புதிதாய் மென்வெட்கம்.
“சரியா தான செஞ்சேன்?” அவனது கேள்வியில் இன்னும் கொஞ்சம் நாணிப்போனாள் பிரகிருதி.
“தப்பா செஞ்சாலும் எனக்குப் பிடிக்கும்” கீழுதட்டைக் கடித்து அவள் கூறிட, அவனிடம் குறுநகை.
“நெக்ஸ்ட் டைம் என் கண்ணைப் பார்ப்ப தான?” ஷக்தி மகிழவன் தீவிரமாக கேட்க,
“பாக்குறேன்” எனத் தலையசைத்தாள்.
“நெக்ஸ்ட் எப்போ?” இப்போதே அடுத்த முத்தத்திற்காக அலைபாய்ந்தது அவனது உள்மனம்.
“நீங்களே யோசிச்சுட்டு சொல்லுங்க” அவன் மீதே பந்தை எறிய, “ஆனா அடுத்தும் இதே மாதிரி லிப் டச்சிங் தானா. இல்ல இன்னும் டீப்பா போகலாமா?” அவனே உணர்ந்திடாத அவனது ஆர்வத்தை அவள் உணர்ந்திட்டாள்.
“உங்க இஷ்டம் மகிழ்…” வெளிப்படையாய் அவனைப் போல பேசிட பெண்மை தடுத்தது.
“அப்போ உனக்கு இஷ்டமில்லையா ருதிடா” நொடியில் சிறுத்துப் போனது அவன் முகம்.
“அச்சோ அப்படி இல்ல மகிழ்” எனத் தடுமாறியவள், “எனக்கு இதை எல்லாம் பேச முடியல மகிழ்” என்றாள் தயக்கமாக.
“ஏன் ருதிடா. இப்படி எல்லாம் பேச ஆக்வர்டா இருக்குமா? ஸ்ட்ரெஸ் ஆகுவியா?” குழப்பமாக வினவியனுக்கு புரிய வைக்க முயலாது திருதிருவென விழித்தாள்.
“ஸ்ட்ரெஸ் எல்லாம் இல்ல மகிழ்… எப்படி சொல்றதுன்னு தெரியல” பிரகிருதி தலையைச் சொரிய, “என்கிட்ட என்ன வேணாலும் சொல்லலாம் ருதிடா. எதையும் மறைச்சு உன் மனசுக்குள்ளவே வச்சுக்காத. அப்ப தான் ரெண்டு பேரும் புரிஞ்சுக்க முடியும்… சரியா?” என்றான் மென்மையாக.
கையைப் பிசைந்தவள், “அது… இந்த மாதிரி விஷயத்தைப் பொண்ணுங்களே பேசுனா இந்த சொசைட்டி தப்பா நினைக்கும் மகிழ்” என்றிட, முதலில் அவனுக்குப் புரியவில்லை.
“எந்த மாதிரி விஷயத்தை?”
“அது… அதான், இந்த கிஸ், அப்பறம் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்க்குள்ள நடக்குற பிரைவேட் திங்க்ஸ்… இதெல்லாம் ஃபர்ஸ்ட் பாய்ஸ் தான் பேசி ஸ்டார்ட் பண்ணனும். கேர்ள்ஸ் பேசுனா அது கரெக்ட்டா இருக்காது. தப்பாகிடும்!” விழுங்கி விழுங்கி பேசினாள்.
“ஏன் தப்பாகிடும்?” அவன் கையைக் கட்டிக்கொண்டு வினவ,
“அப்டி நாங்களே அப்ரோச் பண்ணுனா, பொண்ணுக்கு முன் அனுபவம் இருக்குமோன்னு நினைச்சுடும் இந்த சொசைட்டி. இந்த மாதிரி விஷயத்துல பொண்ணுங்க தலை குனிஞ்சு ஹஸ்பண்ட் சொல்றதை மட்டும் தான் கேட்டுக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. இப்ப உங்ககிட்ட நான் கிஸ்க்கு ஓகே சொன்னப்ப, உங்களுக்கு லைட்டா தோணல எதுவும்… என்னடா இவளே கேட்குறாளேன்னு” எனத் தலையாட்டி வேகமாய் கூறினாள்.
“ஓ மை காட்! எனக்கு தான் ஃபீலிங்ஸ் பிளைண்ட்னு நினைச்சுட்டு இருந்தேன். எனக்கு மட்டும் தான் அலெக்ஸிதைமியா இருக்குனு பார்த்தா ஒட்டு மொத்த பொண்ணுங்களுக்கும் அலெக்ஸிதைமியா தானா? இது இயற்கையா வர்றது வரை ஓகே. ஆனா செயற்கையா உணர்வுகளை உள்ளுக்குள்ள அடக்குறது வெரி டேஞ்சரஸ் திங்க் ருதிடா? லாஜிகலி, ஆணுக்கும் பொண்ணுக்கும் சேம் ஃபீலிங்ஸ் இருக்கும் தான. அதை யார் முதல்ல காட்டுனா என்ன? இந்த மாதிரி சொஸைட்டிக்காக நீ ஏன் உனக்குள்ள ஒரு மாஸ்க் போட்டுக்குற ருதிடா?” என்றவனின் குரலில் ஆதங்கம் மிகுந்திருக்க, அவளோ வியப்பாய் கண்களை விரித்தாள்.
“மத்தவங்க எப்படி வேணாலும் இருக்கட்டும். இந்த விஷயத்துல உன் மாஸ்க் எனக்கு வேணாம். நீ நீயா இரு. கிஸ்னு இல்ல… உனக்கு ஃபிஸிக்கலி என்ன தோணுனாலும் என்கிட்ட ஷேர் பண்ணு. ஓகே வா?” என அவள் கையைப் பற்றிக்கொண்டு கூறியதில், அவளுள் மென்சாரல்.
“ம்ம்” எனத் தலையாட்டியவள், “உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன் மகிழ். கேட்கட்டா?” அவள் வினவளாய் பார்க்க,
“பெர்மிஷன் என்கிட்ட கேட்க தேவ இல்ல” என்றான் அமர்த்தலாக.
அதில் புன்னகைத்த பிரகிருதி, “உங்களுக்கு என்ன ஃபீல் பண்றீங்கன்னு புரிஞ்சுக்க முடியாது தான? அப்பறம் இதை எப்படி பீல் பண்ணுவீங்க? லைக் கிஸ், ஹக், மத்தது எல்லாம்” எனத் தயக்கத்துடன் கேட்டாள்.
சில நொடிகள் அவனிடம் பேரமைதி.
நிமிர்ந்து அவனைப் பார்த்தானில்லை.
“நான் கிஸ் உணர்ந்து குடுத்தேனான்னு எனக்கு தெரியாது ருதி. படத்துல பார்த்துருக்கேன். சோ கிஸ் பண்ற வரை தெரியும். ஓரளவு இப்படி ரியாக்ட் பண்ணனும்னு லாஜிக்கலா தெரியும். எமோஷனலா ஐ கேன்னாட் கனெக்ட்” எனும்போதே அவள் முகம் வாடிப்போனது.
“பட் உணரவே மாட்டேன்னு சொல்லல. உணர முயற்சி பண்றேன். நீ நினைச்சா என்னை பீல் பண்ண வைக்க முடியும் ருதி” என்றதில் “நான் என்ன செய்றது” என்ற ரீதியில் விழித்தாள்.
“நீ எனக்கு பீலிங்ஸ் சொல்லிக்குடு. பீல் பண்ண வை!” என இயல்பாகக் கூறி விட அவளுக்கு வியர்த்து விட்டது.
“நா… நான் எப்படி மகிழ்?” அவள் திணறினாள்.
“ருதி…” அவளது கரங்களுக்கு அழுத்தம் கொடுத்தவன், “நீ பேசுற வார்த்தைகள்ல என் வார்த்தைகளும் அடங்கி இருக்கு. உன் கண்ணசைவை வச்சு உன்னை டீகோட் பண்ண ட்ரை பண்றேன். சில நேரம் ஒர்க் அவுட் ஆகுது. கிஸ், ஹக், ஃபிஸிக்கல் ப்ளஷர் இது எல்லாம் எப்படி உணருவேன்னு எனக்கே தெரியல. எக்ஸாக்டா எப்படி நடந்துக்கணும்னு புக்ல படிச்சு, படத்துல பார்த்து நான் தெரிஞ்சுக்கிட்டாலும்…” என நிறுத்தியவன், “நீ சொல்லிக்குடேன் எனக்கு. கிஸ் பண்றப்ப எப்படி இருக்கும், அதுக்கு அப்பறம் நீ எப்படி ஃபீல் பண்ணுவ, நான் என்ன பீல் பண்ணனும்னு நீ என்னை கைட் பண்ணு ருதி. நான் லர்ன் பண்ணிப்பேன்.
உன்னைப் பார்த்து தான் சிரிக்க கத்துக்கிட்டேன். நீ அழுகுறதை பார்த்து தான் ரியாக்ட் பண்ண கத்துக்கிட்டேன். அதே மாதிரி எல்லாமே உங்கிட்ட இருந்து தான் கத்துக்கணும். உங்கிட்ட இருந்து மட்டும்…” என அழுத்தம் திருத்தமாய் தன்னை வெளிப்படுத்தியவனை அயர்ந்து பார்த்திருந்தாள்.
“நான்… எப்படி மகிழ். என்னால முடியுமா?”
“உன்னால மட்டும் தான் முடியும். உன்னால என்னை டீகோட் பண்ண முடியும் ருதிடா. நீ ஹண்ட்ரட் பெர்சன்ட் பெர்ஃபக்ட்டா ஹேப்பியானா அதுவே எனக்கும் பெர்பெக்ஷன் ஃபீல் குடுத்த மாதிரி இருக்கும். யுவர் சேடிஸ்பேக்ஷன் இஸ் மைன்…” என நிறுத்தி நிதானமாக தன்னிலையைப் புரிய வைத்தவனைத் திகைப்பு அகலாது பார்த்திருந்தாள்.
தாம்பத்தியத்தின் இன்பமே கொடுத்து வாங்குவதில் தான். அவள் அவனுக்கு கற்றுக்கொடுத்தால் என்ன, அல்லது அவன் அவளுக்கு கற்றுக்கொடுத்தால் என்ன? இரண்டுமே அன்பின் பிரதிபலிப்பு தானே. இங்கு, அவனையும் அவளது ஆன்மாவாக நினைத்து விட்டால், அவளுக்கு இந்த தயக்கமும் விடைபெற்று விடும். குழப்பமும் அகன்று விடும்.
“நான் ட்ரை பண்றேன் மகிழ். கொஞ்சம் டைம் வேணும்… ஓகேவா?” எனக் கேட்டதில்,
“நிறையவே டைம் எடுத்துக்கோ. பட் எனக்கு உன்னோட வார்ம் ஃபீல் பண்ண, அப்போ அப்போ இந்தக் கையைப் பிடிச்சுக்க பெர்மிஷன் குடு…” என்றான் உரிமையாக.
“இதுக்கு எதுக்கு பெர்மிஷன். எப்ப வேணாலும் பிடிச்சுக்கோங்க…” என்றதில் அவன் விழி விரித்தான்.
“பட் உனக்கு சடனா பேனிக் ஆகும்ல?”
“வாய் வார்த்தையா ஒவ்வொரு தடவையும் கையைப் பிடிக்கவான்னு கேட்க வேணாம். என் கையைப் பாருங்க… அது நடுங்குற பீல் தெரிஞ்சா எப்போ வேணா பிடிச்சுக்கோங்க. என் கண்ணைப் பாருங்க! அது உங்களைப் பார்த்துட்டு ஒரு செகண்டுக்கு மேல தரையில புதைஞ்சுட்டா… என் சீக்ஸ் ரெட் ஆனா, கிஸ் பண்ணுங்க. பெர்மிஷன் கேட்க வேணாம்…” என்றவள் அவனை ஒரு நொடி பார்த்து விட்டு தானாக விழிகளைத் தரையில் புதைக்க, அவன் பட்டென கன்னத்தில் முத்தமிட்டு இருந்தான்.
அதிர்ந்தாலும் அது இனிய அதிர்வாகவே இருந்தது அவளுக்கு.
அவளது பார்வையில் கண்ணோரம் சுருங்க சின்னதாய் முறுவலித்தவன், “நீ இப்போ கிஸ் பண்ண சொல்லி ரியாக்ட் பண்ணுன ருதி. கரெக்ட்டா பிக்கப் பண்ணுனேனா?” என அவன் கேட்டதில், “நாட்டி பாய்…” என்று அவன் கேசத்தைக் கலைத்து விட்டாள்.
“இப்போ தான குட் பாய்னு சொன்ன?”
“ம்ம் ஆனா இந்த நாட்டி பாய் பிடிச்சுருக்கு” என்றவளின் நயனங்கள் அவனது முக வடிவை ரசனையாய் அளந்தது.
“நிஜமாவா?”
“ம்ம்…” பாவையின் வெட்கப்புன்னகையில் அவனது இதயமும் கரைந்தது.
நாள்கள் தெளிந்த நீரோடையாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள விழையும் முயற்சியுடன் கழிந்தது.
சிலநேரம் சறுக்கினாலும் பல நேரங்களில் அவர்களுக்குள் வீற்றிருந்த அன்பு அவர்களை சிற்பமாய் மாற்ற மெனக்கெட்டது.
இரு வாரங்கள் கடந்திருந்தது.
அதன்பிறகு இருவருக்குள்ளும் எந்த நெருக்கமும் இல்லையென்றாலும், கையைப் பிடிப்பதும், அவனைத் தனது மடியில் படுக்க வைத்துக் கொள்வதுமாக சிறு சிறு தொடுகையில் இருவரும் மகிழ்ந்து கொண்டனர்.
இம்முறை, பிரகிருதி அவனது மடியில் தலை வைத்துப் படுத்தபடி காதில் ஹெட் போனை மாட்டியபடி பாடல் கேட்டுக் கொண்டிருக்க, அவனோ தனது ரீடிங் நேரத்தில் அவளது கூந்தலை ஒரு கையால் வருடி விட்டுக்கொண்டே புத்தகத்திலும் கண் பதித்திருந்தான்.
இருவருக்கும் மெல்லிய கவிதையாய் நகரும் அப்பொழுதுகள்.
அன்று ‘கண்ணழகா’ பாடலை ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருந்தாள் பிரகிருதி.
என்னவோ அந்தப் பாடலும் வரிகளும் அவளது உணர்வுகளைத் தூண்டுவதாய்!
ஷக்தி மகிழவனுடன் அப்பாடலுக்காக நடனமாடுவது போல கற்பனைத் தோன்ற கன்னம் சிவந்திருந்தது.
அவன் பார்த்து விட்டால், பசக்கென்ன முத்தமிட்டு விடுவான்… எனக் கன்னத்தை தேய்த்து வேகமாக மறைத்துக் கொண்டாலும் அந்நினைவும் அவளை சிவக்க வைத்தது தான் பேருண்மை.
புத்தகத்தில் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்த அவனது கருவிழிகளை நோட்டபடிப்படியே பாடலைக் கேட்டிருந்தாள்.
இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா
என்ற வரிகளில் இதயம் நின்று இயங்கியது.
‘நானே வழி சொல்லட்டா?’ தனக்குள்ளே கேட்டபடி சிலிர்த்துக் கொண்டாள்.
“எதுக்கு சிரிக்கணும்?” புருவம் சுருக்கித் தீவிரமாகக் கேட்டாலும் அவளது தொடுகை உள்ளூர இதம் தந்தது.
“சும்மான்னாலும் சிரிக்க மாட்டுறீங்க. ரொம்பவே லைட்டான சின்ன ஸ்மைல். அது கூட அடிக்கடி இல்லையே… அதுக்காக சிடுமூஞ்சின்னு சொல்லல” என வேகமாக விளக்கமும் கொடுத்தாள்.
“எனக்கு சிரிப்பு, அழுகை இதெல்லாம் எமோஷனலா வராது ருதிடா. ஒருத்தர் கூட நேரடியா பேசும்போது, பிசினஸ் ரிலேட்டடா டீல் பண்ணும்போது அவங்க ஸ்மைல் பண்ணுனா நானும் சம்பிரதாயத்துக்கு அவங்களை இமிட்டேட் பண்ணி ஸ்மைல் பண்ணுவேன். ஆனா உங்கிட்ட தான் தானா அப்போ அப்போ ஸ்மைல் பண்ணத் தோணுது. அதுக்கு மேல எனக்கு சிரிக்க வராதுடா…” என்றவனின் வார்த்தைகளில் தான் அவள் மீது எத்தனை நேசம்!
அடர்ந்திருந்த இரு புருவங்களை தனது விரலால் சீராக்க முற்பட்டாள் பிரகிருதி.
அவளது செய்கையை தொந்தரவு செய்யாது கண்ணிற்குள் நிரப்பி அவளை உணர முயன்றபடியே, “பொது இடத்துல பேசும் போது சிரிச்சுப் பேசணும்னு நிறைய டைம் ரூல்ஸ் போட்டு இருக்காங்க. ஆனா இந்த மாதிரி நேரத்துல இப்படி ரியாக்ட் பண்ணனும். இந்த மாதிரியான பீலிங்ஸ அப்சர்வ் பண்ணனும்னு சொல்லிக் குடுக்குற அளவு அவங்களுக்கு நேரமும் இல்ல. பொறுமையும் இல்ல…” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டதில், பிரகிருதியின் வதனம் வேதனை கொண்டது.
“ஆட்டிசம் பேபியை புரிஞ்சுக்க முயற்சி செஞ்சாலே போதும். ஆனா அந்தப் புரிதல் சில பேரண்ட்ஸ்கிட்ட இருக்குறது இல்ல. ஒரு கட்டத்துல என்னை புரிய வைக்கணும்னு நான் ட்ரை பண்றதை விட்டுட்டேன் ருதிடா. இப்ப அந்த முயற்சியை உங்கிட்ட பண்ணிட்டு இருக்கேன்” எனக் கூறியதில் நெகிழ்ந்தவளுக்கு கண்ணில் நீர் சுரந்தது.
அக்கண்ணீரின் அர்த்தத்தை தவறாகப் புரிந்து கொண்டவன், “உணர்வே இல்லாம என்னால வாழ முடியும். நீ எப்படி வாழுவ ருதி. நான் உனக்கு பர்டன் ஆகிடுவேனோ?” நெஞ்சம் நடுங்க கேட்டான் ஷக்தி.
தனது கண்ணீரைப் பார்த்ததும் இப்படி தான் உளறுவான் என்று அவளும் எதிர்பார்த்தாள் தான்.
“எனக்கும் தான் நீங்க சர்ப்ரைஸ் பண்ண முடியாது. பொது இடத்துக்கு சட்டுன்னு கூட்டிட்டுப் போய் நிக்க வைக்க முடியாது. ஒரு கிஸ்க்கே நான் மனசளவுல தயார் ஆகணும். போலியான என்னோட வாழுறது உங்களுக்கும் தான் பர்டன் மகிழ்” என முடிக்கும்போதே
“நோ வே” எனக் குரலை உயர்த்தினான்.
அவன் கண்களில் சின்னதான சீறல் தெரிந்தது.
ஓர் கணம் அமைதி காத்த பிரகிருதி, “நான் பேசுறது உங்களுக்கு வலிக்குதுன்னு இப்ப நான் தான் உங்களுக்கு உணர்த்தனும் மகிழ். ஆனா எனக்கு அப்படி இல்ல. நீங்க பர்டன்னு சொல்லும்போதே இங்க பெரிய பாறாங்கல்லை போட்ட மாதிரி வலிக்குது…” எனத் தனது இதயத்தைச் சுட்டிக் காட்ட, தானாய் கலங்கி நின்றது ஆடவனின் விழிகள்.
இதுவரை எதற்காகவும் கலங்காத அவ்விழிகள் ஏன் கலங்குகிறது என்றெல்லாம் அவனுக்கும் தெரியவில்லை.
“ஓகே… நம்ம ஒன்னும் எதுக்காகவும் குறைஞ்சு போனவங்க இல்ல. நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. நம்மளே இப்ப ஒரு பேமிலி தான். இனி நம்ம ரெண்டுமே பர்டன்னு பேசிக்க கூடாது. ஓகேவா ருதிடா” எனக் கண்டிப்பாய் கூற, “அதை முதல்ல உங்களுக்கு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிக்கங்க…” எனச் சிலுப்பினாள்.
“சரி சொல்லிக்கிறேன்” ஷக்தி கூறியதும், “ம்ம்” என முகத்தைத் திருப்பினாள்.
“நான் கோபமா இருக்கேன்” உர்ரென பிரகிருதி கூற,
அவன் பரபரப்பானான்.
“ஏன் ருதிடா. என்ன ஆச்சு? என்ன செய்யணும் இப்போ நானு?” எனப் பதறிட,
“ஹக்!” என்று இரு கையையும் நீட்டினாள். இன்னும் அவன் மடி மீதிருந்து எழவில்லை அவள்.
“கோபமா இருந்தா ஹக் குடுக்கணுமா?” அவன் வேகமாக யோசிக்க,
“தெய்வமே… நான் கோபமா இருந்தா மட்டும் தான் ஹக் குடுக்கணும். இதே ப்ராஸசை ஆபிஸ்ல யார்ட்டயும் காட்டிடாதீங்க. ஈவ் டீசிங்ல உள்ள போயிடுவீங்க” எனக் கிண்டல் செய்தாள்.
“நீ சொல்றதை உங்கிட்ட மட்டும் தான் டெமோ காட்டுவேன். உன்னைத் தவிர யாரையும் ஹக் பண்ண என்னால யோசிக்க கூட முடியாது” அவன் அழுத்தமாகத் தன்னை நிரூபிக்க, அவளுக்குள் குற்றால மழைச்சாரலே குளுமையாகப் பரவியது.
“ஹக்?” மீண்டுமொரு முறை தனது பெண்ணினத்தின் மரபுகளை உடைத்தெறிந்து, தனது முகமூடியை கழற்றி வைத்தவளாக தனக்கே தனக்காக வேண்டும் ஒரு அரவணைப்பை அவனிடம் நாடி இருந்தாள்.
அப்படியே அவளை அள்ளிக்கொண்டவன், மெலிதாய் அணைத்துக் கொண்டான்.
“ம்ம்” முனகல் சத்தம் மட்டுமே வர, அவனோ தனது மொத்த பலம் கொண்டு இறுக்கினான்.
“இவ்ளோ டைட்டா இல்ல!” மூச்சு முட்டுவதைப் போல இருக்க, அவள் மிரண்டாள்.
“ஹர்ட் ஆகிடுச்சாடா” அவசரமாக அவன் இறுக்கத்தைக் குறைக்க “இல்லை மகிழ்…” என்றவளுக்கு அவனது அணைப்பினால் இதயத்தின் வேகம் அதிகரித்தது.
அவளது இதயத்துடிப்பைத் தானும் உணர்ந்தவன், “ஹே ருதி… ஹக் பண்ணுனா ஹார்ட் பீட் 20 பெர்சன்ட் இன்க்ரீஸ் ஆகுமா? ஐ கேன் பீல் யுவர் ஹார்ட் பீட். என்னவோ பண்ணுது…” உணர்வுகள் கிளர்ந்தெழ அவளது கழுத்தினுள் முகம் புதைத்தான் ஆடவன்.
ஆனால் இன்னதென பிரித்தறிய இயலவில்லை. அணைப்பு தரும் கதகதப்பின் தேவையை அவனது மூளை கட்டளையிட்டது. உடல் பெற்றுக்கொண்டது. உணர்வுகள் மட்டும் ஏன் தான் மழுங்கிப் போனதோ!
அவனுக்காய் தோன்றிய வாசகத்தில் உள்ளம் வலியை அனுபவிக்க, அவளது கூந்தலின் மணத்தை ஆழ்ந்து சுவாசித்தான். மனம் அமைதி பெற்றது. யோசனைகள் கலைந்து சென்றது.
அவனது தீண்டலில் உருகிக் கரைந்துப் போன பிரகிருதி, “என்ன பீல் பண்றீங்க?” எனக் கேட்டாள்.
“தெரியலடா. உனக்கு?”
“ம்ம்ம்… எனக்கு… வயித்துல பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருக்கு” நாணம் சூழ கூற,
“ஏன் பட்டாம்பூச்சி எதையும் முழுங்கிட்டியா?” அவன் அவசரமாக அவளை நகர்த்தி கேட்டான்.
அதில் சத்தமாகச் சிரித்து விட்டவள், “ஐயோ அதில்ல மகிழ். பட்டாம்பூச்சி பறக்குறப்ப எப்படி படபடன்னு ஒரு பீல் இருக்கும். அது மாதிரி வயித்துல ஃபீல் ஆகுதுன்னு சொன்னேன்” என்றபடி அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டாள்.
ஷக்தி மகிழவனின் இதயத்துடிப்பின் வேகத்தை கண்டறியும் ஆவல் பெற்றவளாக!
ஒரே சீராய் துடித்திருந்த அவனது இதயத்துடிப்பைக் கேட்கும்போதே ஹிப்னோடைஸ் செய்வது போல மயங்கிப் போனாள்.
“உங்க ஹார்ட் பீட் என்கிட்ட ஏதோ சொல்லுது மகிழ். என்னை அப்படியே சுருட்டி எடுத்து உங்க இதயத்துக்குள்ள உக்கார வச்சுடுறீங்களா… யாரும் என்னைப் பார்க்காத மாதிரி… யாரையும் நான் பார்க்காத மாதிரி… உங்ககிட்டவே, உங்ககூடவே அப்படியே புதைஞ்சுடணும் மகிழ்” சொல்ல சொல்ல கண்ணீர் அருவியாய் சுரந்தது.
“என்னடா ஆச்சு?” உணர்வுப்பெருக்கில் அவள் சிந்திய கண்ணீரைக் கண்டு மனம் வெந்தான்.
அவன் கன்னத்தைப் பற்றிக்கொண்டவள், “தெரியல மகிழ். அழுகை வருது. எல்லா கண்ணீரும் ஹர்ட் ஆகி தான் வரும்னு இல்ல மகிழ். தன்னோட கூட்டைக் கண்டுபிடிச்ச குயிலோட சந்தோஷக்குரல் கூட ஓலமிடுற மாதிரி தான் இருக்கும். அப்படி தான் என்னோட இந்தக் கண்ணீரும். ஐ லவ் யூ மகிழ். உங்ககூடவே என்னை வெச்சுப்பீங்க தான?” கேட்கும்போதே உள்ளம் வெடித்தது.
அவளது கூற்றின் பொருளை உணர்ந்தவன், “எனக்குள்ளவே வச்சுப்பேன் ருதிடா. யாருக்கும் தராம, என் கைக்குள்ள உன்னை அடைகாத்துக்குவேன். ட்ரஸ்ட் மீ!” என்றான் அவளது நெற்றி முட்டி.
“ஐ திங்க்… யூ ஆர் மை எவ்ரிதிங் ருதிடா. அண்ட் எஸ்… ஐ திங்க் ஐ மே பி லவ் யூ…” அனைத்தும் அவனுக்கு கனக்கச்சிதமான உணர்வின் வெளிப்பாடா என்று தெரியாது. அவள் காதலை உரைத்ததும் தானும் அவளைக் காதலிக்கிறேன் எனத் திடமாய் நம்பி அவள் கூறிய வார்த்தையை அவனும் கூறி இருக்கிறான்.
மேலோட்டமான வார்த்தைகளினூடே அக்கண்களின் ஆழத்தில் அவனது நேசத்தின் ஆழமும் உணர்ந்து கொண்டாள் பிரகிருதி.
அவனைப் புரிந்து கொண்டதன் வெளிப்பாடாய், ஷக்தி மகிழவன் தடுமாற்றாமாய் உரைத்த காதலை உள்ளுக்குள் சேமித்து வைத்துக் கொண்டாள்.