🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 12
இரவு நேரம் சாப்பிட அழைத்த மனைவியோடு டைனிங் ஹாலுக்குச் சென்றான் ராகவ்.
பாஸ்கரனும் மரகதமும் வாசலில் கதைத்துக் கொண்டிருக்க, “எவ்ளோ நேரமா பார்க்கிறேன் ராகவ். டைமுக்கு சாப்பிடனும்னு ஞாபகமே இல்லை உனக்கு” என மரகதம் கடிந்து கொள்ள,
“சாரிமா. ஹாஸ்பிடல் டீடேல்ஸ் கொஞ்சம் பார்த்ததுட்டு இருந்ததுல டைம் போறதே விளங்கல” என்று பதிலளித்தான் மைந்தன்.
“அவன் இன்னும் சின்ன பையன் இல்லைமா. அதுவும் இல்லாம அவனை தேனு பார்த்துப்பா” என்று பாஸ்கர் கூற, “அவ பார்க்கிறதுக்கு நான் குழந்தை இல்லை” என அவன் சிணுங்க,
“பெத்தவங்களுக்கு நீங்க எப்போவும் குழந்தைங்க தான். தேனுமா! என் பையனை உன் கிட்ட ஒப்படைச்சிருக்கேன். நல்லா பார்த்துக்க” என்று விட்டுச் சென்றார் மரகதம்.
அவளோ சமத்தாக தலையாட்டி வைக்க, “என்ன மேடம் எங்கம்மா சொன்னதைக் கேட்டீங்கள்ல?” கெத்தாகக் கேட்டான் கணவன்.
“ஆமாமா நல்லாவே கேட்டுச்சு. அவங்களோடு குட்டி பையனுக்கு கொட்டி கொட்டி ஊட்டி விடனுமாம். அப்பறம் புட்டிப் பால் கொடுக்கனுமாம்” முகத்தைச் சுருக்கிக் கொண்டு அவள் கூறிய தோரணையில் அவனிதழ்களில் குறுநகை பூத்தது.
“இப்போ நீ தான் குட்டி பாப்பா மாதிரி கியூட்டா பண்ணுறே” என்றவன் பார்வை அவள் மீது ரசனை மீதூறப் படிந்ததுவோ?!
அதை அறியாமல் அவனுக்கு பரிமாறுவதில் குறியாக இருந்தாள் மனைவி. அவன் சாப்பிட்டதும் சென்று விட, அவளும் சாப்பிட்டு விட்டுச் சென்றாள்.
இருவரும் தூங்கச் செல்ல, “ஆளுக்கு ஞாபகம் இல்லாம போச்சு போல. பில்லோ சுவர் கட்டுறேனு சொன்னாளே” அவன் சிரித்தவாறு கட்டிலில் சரிய,
“ரொம்ப சந்தோஷப்படாதீங்க. செய்யாததை சொல்ல மாட்டா. சொன்னதை மறக்க மாட்டா இந்த தேன் நிலா” இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள,
“பில்டப் பலமா இருக்கே. ஆனால் எனக்கு சிரிப்பா வருது. மேய்க்குறது எருமை இதுல வேற பெருமையா” என்று அவன் வாய் விட்டுச் சிரித்தான்.
அவன் பேச்சில் கோபம் மூண்டிட, அவனைத் தலையணையால் அடித்தவளோ, “ஆமாமா! உங்களை மாதிரி ஆளை கட்டிக்கிட்டு இருக்கேனே. நீங்க எருமை தான்” என்றவாறு இருவருக்கும் நடுவில் தலையணைப் பாலம் கட்ட,
“அடிப்பாவி! நான் போட்ட பந்தால என்னையே அட்டாக் பண்ணுறியா” இப்போது முறைப்பது அவன் முறையாயிற்று.
“இனிமே நீங்க என் பக்கம் வரவும் கூடாது. என்னை டச் பண்ணவும் கூடாது” என்று அவள் தீவிரமாக சொல்ல, “அபச்சாரம் அபச்சாரம். நான் டச் பண்ண மாட்டேன்” என நல்ல பிள்ளையாக கன்னத்தில் அடித்துக் கொண்டான்.
“என்னது அபச்சாரம்?” அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.
“எப்போ டச் பண்ணுவாங்க தெரியுமா?” என்று அவன் கேட்க, எங்கே என்பது போல் பார்வையை வீசினாள் தேனு.
“ஹனிமூன்ல” காதோரம் ரகசியம் பேசினான் வேங்கை.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் விழி விரித்து நிற்க, “குட் நைட் ஹனி மூன்” என்றவனோ, “டச்சு பண்ணி இச்சு கொடுப்பா ஹனிமூனுல..” என்று பாடியவாறு தூங்க,
அவன் சொன்ன சொல்லிலும், தன் காதோரம் தீண்டிய அவனின் சூடான மூச்சுக் காற்றிலும் சிலையென சமைந்திருந்து மறு நிமிடம் சுய நினைவுக்கு வந்தவளை வாரி அணைத்துக் கொண்டாள் நித்ரா தேவி.
மறுநாள் காலையில் அவள் எழும்போது கண்ணாடி முன் நின்று எங்கோ செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் ராகவ்.
“குட் மார்னிங்” சல்யூட் வைத்தவனைக் கண்டு, “இப்போ எங்கே போறீங்க?” எனக் கேட்டாள்.
“இன்னிக்கு நம்ம வீட்டுக்கு முக்கியமான கெஸ்ட் வர்றாங்க. அதான் ஏர்போர்ட் போறேன்” என்று சொன்னவாறு பர்பியூம் பூச, “யார்?” என்ற குழப்பம் பீடித்துக் கொள்ளலாயிற்று.
“ரஷ்யாவில் என் கூட படிச்ச டீம் வர்றாங்க. நகுல், லிரிஷா, அலெக்ஸ் அன்ட் தனுஜா” என்று அவன் சொல்ல, தலையசைத்து கேட்டுக் கொண்டவளுக்கு இறுதியில் சொன்ன பெயரைக் கேட்டதும் முகம் சுருங்கியது.
“தனுஜா? உங்களை லவ் பண்ணுன பொண்ணா? அவ எதுக்கு இங்கே வர்றா?” படபடவென கேட்டாள் அவள்.
“வெடிங்க்கு வர முடியல. சோ இப்போ என்னைப் பார்க்க வர்றாங்க. நீ எதுக்கு இவ்ளோ கேட்கிற?” அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
தனுஜாவின் பெயரைக் கேட்டதில் இருந்து அவளுக்கு முகம் சரியில்லை.
“நானும் கூட வரட்டுமா?” எங்கே அந்த தனுஜா அவனருகில் அமர்வாளோ என்ற எண்ணத்தில் கேட்க, “வேண்டாம்” என ஒரேயடியாக மறுப்புத் தெரிவித்தான் ராகவ்.
“எதுக்கு என்னை வர வேண்டாம்னு சொல்லுறீங்க? அந்த தனுஜா உங்க பக்கத்தில் உட்கார்றது எனக்கு பிடிக்கல”
“உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருக்கா? தனுஜா என்னை லவ் பண்ணுனா ஓகே. பட் நான் அவளை ப்ரெண்டா தான் பார்த்தேன். அன்ட் இப்போ அவளுக்கு என் மேல லவ் கிடையாது. வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ் நௌ” தன் மீது நம்பிக்கை இல்லாதது போல் பேசுவது அவனுக்கு கோபத்தைக் கொடுத்தது.
“அய்யோ நான் உங்களை எதுவும் சொல்லல. ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்துச்சு. அதான் சொன்னேன். இனி எதுவுமே சொல்லல போதுமா?” அவளும் பதிலுக்கு கத்தி விட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
“இதோ பார்! கார்ல தான் போறேன். அவங்களே நாலு பேர் வர்றாங்க. உன்னைக் கூட்டிட்டு போனா இடம் பத்தாதுனு தான் முடியாதுனு சொன்னேன்” என்று அவன் விளக்கம் கொடுக்க,
“போங்க. போய் அவங்களை ஜாலியா கூட்டிட்டு வாங்க. என் கிட்ட எதுவும் சொல்ல தேவையில்லை” உள்ளிருந்து பதிலளித்ததும், “புரிஞ்சுக்கவே மாட்டா” காலைத் தரையில் உதைத்து விட்டுச் சென்றான் ராகவ்.
விமான நிலையம் சென்று நண்பர்களை அழைத்து வந்தான் ராகவ். தனுஜா அவனருகில் அமர வந்தும், மனைவிக்குப் பிடிக்காது என்பதை நினைவில் நிறுத்தி நகுலை தன்னருகே அழைத்துக் கொண்டான்.
லிரிஷா அமெரிக்காவை சேர்ந்தவள் என்றாலும் மரியாதையாக ஸ்கர்ட் அன்ட் ப்ளவுஸ் அணிந்திருந்தாள். ஆனால் தனுஜா முட்டி வரை கவுன் அணிந்திருக்க, “என்னடி இது? காலைக் காட்டிட்டு வந்திருக்கா” மருமகளிடம் குசுகுசுத்தார் மரகதம்.
“இயற்கைக் காத்து படனும்னு திறந்து விட்டு வந்திருக்கா போல” என்று சொன்னவளுக்கு தனுஜாவைப் பார்க்கப் பிடிக்கவில்லை.
“ஹாய் தங்கச்சி” நகுல் மற்றும் லிரிஷா புன்னகையோடு பேச, “ஓஓ இவ தான் உன் வைஃப் தேன் நிலாவா?” என்று அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தாள் தனுஜா.
“ஆமா! திருமதி தேன் நிலா ராகவேந்திரன்” ராகவ்வின் தோளை கர்வத்தோடும் உரிமையோடும் பிடித்துக் கொள்ள, ‘அடிக்கள்ளி! தனுவை வெறுப்பேற்ற இப்படி பண்ணுறாளே. ஆனா பயங்கரமான ஆளு தான்’ என சிரித்துக் கொண்டான் ராகவ்.
தனுஜாவிற்கு உள்ளம் குமுறியது. தன் காதலை மறுத்த ராகவ், இப்படியொரு குடும்பப் பெண்ணை, அதுவும் பார்க்கும் போது மிக எளிமையாக தோன்றுபவளை மணந்ததை அவளால் ஏற்க முடியவில்லை.
தனுவின் மனப்போக்கு ராகவ்விற்கும் புரியவே செய்தது. விருந்தினராக வந்தவளை விரட்டவா முடியும்? செல்லும் வரை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.
தேன் நிலாவை நினைத்து அவனுக்குப் பயமெல்லாம் இல்லை. அவளது வாயைப் பற்றி அவனுக்குத் தெரியுமே. தனுஜா வாலாட்ட வந்தாலும் தேனு அவளை மடக்கி வாயடைக்கச் செய்து விடுவாள் என்ற நினைப்பு அவனுக்கு.
ராகவ் ஆண்களோடு பேசிக் கொண்டிருக்க, தேனு லிரிஷாவோடு ஒன்றிப் போய் விட்டாள். சுமுகமாகப் பேசியளை அவளுக்கு மிகவும் பிடித்தது.
தேனு அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி விட்டு தனுஜாவைத் தேட, “தனு ராகவ் கூட பேசிட்டு இருக்கா” என்று அலெக்ஸ் கூற, அவளுக்கு மனம் கொதித்தது.
“எவ்ளோ தைரியம் இருந்தா என்னை விட்டு அந்த தனுஜா கூட கூஜா தூக்குவான் அந்த ரஷ்யாக்காரன்?” அவனை அர்ச்சித்தவாறு இருவரையும் தேடிச் சென்றான்.
“ராகவ்! என்ன இருந்தாலும் என்னால காதலை மறக்க முடியலடா. நான் அலெக்ஸை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டேன். ஆனாலும் முழுமனசோட இல்லை” என்று அவள் சொல்வது தேனுவின் காதுகளில் விழ அப்படியே நின்றாள்.
“நாம ஆசைப்பட்ட எல்லாமே நமக்கு கிடைச்சிடாது தனு. யார் யாருக்கு எது சரினு கடவுளுக்குத் தெரியும். அவர் நம்மளுக்காக தெரிவு செஞ்சு தர்ற விஷயங்களை நாம ஏத்துக்க தான் வேணும். முதல்ல புரியலனாலும் ஒரு நாள் புரியும், இந்த சந்தோஷத்துக்காக தானே எல்லாத்தையும் இழந்தேன் அப்படினு. அந்த நிமிஷம் நம்ம இழப்புகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லாம போயிரும்” என்று சொன்னான் ராகவ்.
அவன் குரலில் ஏதோவொரு உணர்வு. அவன் எதையோ நினைத்து அப்படிச் சொன்னது போல் மனைவிக்குத் தோன்றியது.
‘தத்துவம் பேசுறான் இந்த வித்தைக்காரன். செம்ம டா செம்ம. அந்த தனுவுக்கு புத்தில உறைக்கிற மாதிரி சொல்லு’ மானசீகமாக அவனோடு உரையாடினாள்.
“எஸ் ராகவ். நீ சொல்லுறதும் கரெக்ட்” என்று தனுஜா சொன்னதும், அவர்களை நோக்கி ஒரு எட்டு வைத்த தேன் நிலாவின் கால்கள் மரத்துப் போகலாயின, அடுத்து தனுஜா சொன்ன விடயத்தைக் கேட்டு.
“நோ! அப்படி இருக்கவே கூடாது. நோ நோ” என்று அவள் கதற, அவ்வெண்ணத்தைப் பொய்யாக்கும் விதமாக அடுத்து ராகவ் கூறியது செவிகளுள் நுழைந்தது.
அவ்வளவு தான். உள்ளம் உடைந்து போக, கண்களில் கண்ணீர் மழை பொழிய உறைந்து போனாள் பெண்ணவள்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-11-18