🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 13
இன்னும் இரண்டு நாட்களில் ரிசப்ஷன். அலங்கார தோரணையிலும் உறவுகளின் அமர்க்களத்திலும் புத்துயிர் பெற்றிருந்தது செல்வனின் இல்லம்.
திடீரென முடிவாகி சந்தர்ப்ப சூழ்நிலையில் கோயிலில் வைத்து தம் விருப்பத்தின் பேரில் திருமணம் நடந்ததாக அனைவரிடமும் கூறியிருந்தார் செல்வன்.
ஆயிரம் தான் கோபதாபங்கள் இருந்தாலும் பிள்ளைகளை பிறரிடம் விட்டுக் கொடுப்பதில்லை பெற்றோர். ஒரே மகனின் ரிசப்ஷன் என்பதால் ஒருவர் விடாமல் பார்த்து பார்த்து அழைத்திருந்தார்.
தந்தையும் மகனும் எதிரெதிரே அமர்ந்து டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தனர். அஞ்சனா சித்ராவுடன் சமயலறையில் இருந்தாள்.
“ஹாய் டா மச்சி” பெரும் சத்தத்துடன் ருத்ரனின் அருகில் வந்தமர்ந்தான் நிதின்.
“அங்கிள்! டிவி பார்க்குறீங்களா?”
“இல்லை பேப்பர் பார்க்குறேன்” தொலைக்காட்சி திரையை விட்டு பார்வையை நகர்த்தாமல் கூறினார்.
“இது தேவையா உனக்கு? அவர் கூட வம்பு வளர்க்காம இருடா” நண்பனின் காதில் ஊதினான் ருத்ரா.
“இந்த மேட்ச் எல்லாம் பார்த்து போரடிக்குது. நாம சாங் பார்க்கலாமா?” அவரது முறைப்பைக் கண்டு “நோ நோ! உடனே கண்ணால எரிச்சுட கூடாது. உங்களுக்கு கிரிக்கெட்னா இஷ்டம் தான? அதோட சம்பந்தப்பட்ட பாட்டு தான் போடுவேன்” நல்ல பிள்ளையாய் சொன்னான்.
அப்படி என்ன பாட்டு இருக்கிறது என ருத்ரன் தீவிர யோசனை செய்யும் முன்னே அவன் பாட்டு போட்டான்.
“காதல் கிரிக்கெட்டு விழுந்துருச்சு விக்கட்டு..” என பாட்டை உயர் சத்தத்தில் ஒலிக்க விட, “இது கிரிக்கெட்டா சம்பந்தப்பட்டதா?” செல்வன் வெறியாகி விட்டார்.
அதற்குள் அங்கு வந்த சித்ரா “என்னங்க! நீங்க அன்னிக்கு பாடிய பாட்டு இதுவா இல்லையே?” என்று தன்னையும் மீறி சொல்லி விட்டு வாயை மூடிக் கொள்ள செல்வனுக்குத் தான் ஒன்றும் செய்ய இயலாத நிலை.
“என்ன சொல்லுற சித்து? அங்கிள் பாட்டெல்லாம் பாடுவாரா? சீறிப் பாயும் சிங்கத்துக்கு பின்னால் சூப்பர் சிங்கரா?” வாயைப் பிளந்து கேட்டான் நிதின்.
“ஓட்டை வாயி” மனதினுள் வெந்து கொண்டு மனைவியை முறைத்தவர் நிதினை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளி விட்டு சென்றார்.
“உன் லவ்வர் இப்படி பாட்டு பாடி தான் உன்னை இம்ப்ரஸ் பண்ணுனாரா? ஒரு வார்த்தை பேசவே அந்த யோசனை பண்ணுறார்னு தப்பா நெனச்சுட்டேனே”
“அவரைப் பற்றி எனக்கு மட்டும் தான் தெரிந்த ரகசியம் அது. உளறி வெச்சுட்டேன்னு மனுஷன் கோபமா போயிட்டாரே” உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
“அந்த ரகட் பாய்க்கு உள்ள ரொமான்டிக் ரோமியா இருக்கார் ம்ம் செம்ம சித்தும்மா” நிதினின் பேச்சில் பதற்றத்தை மீறிய வெட்கம் அவருக்கு.
“டேய் டேய் போதும்டா அம்மாவை வெச்சு ஓட்டாத. ஒன்னு கிடைச்சா ப்ரேக் போடாம ஓட்டிட்டே போயிருவ” நண்பனைக் கடிந்தாலும் அதனையும் தாண்டிய குறுஞ்சிரிப்பு அவனிதழிலும் தவழ்ந்தது.
சித்ரா உள்ளே செல்ல நிதினுக்கு குளிர்பானம் கொடுத்து விட்டு கணவனிடம் வர அவனோ அவளை ஏறிட்டும் பார்க்காமல் வாங்கிக் கொண்டான்.
அவளுக்குத் தான் அவனது பாராமுகத்தில் கண்ணைக் கரித்தது. அதனை மறைத்துக் கொண்டு நிதினுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஆலியா வந்தாளே போயிட்டாளா?” என்று கேட்டவனுக்கு, “அதை பற்றி உனக்கு என்ன கவலை? அவள் எங்கே வருவாள் எங்கே போவாள்னு நாங்க பார்த்துக்கிறோம்” தடாலடியாக பதிலளித்தான் ருத்ரன்.
அந்த வெட்டுப் பேச்சே சொன்னது அவனுக்கு தான் ஆலியாவிடம் கதைத்தது தெரிந்து விட்டது என்று.
“என்ன ஏதுனு கேட்க மாட்டேன் உன் கிட்ட. உன் சிரிப்பும் இந்த பேச்சும் பலபேருக்கு சிரிப்பை ஏற்படுத்தி சந்தோஷப்படுத்துது. ஆனால் அந்த சிரிப்போட அர்த்தமும் அதுக்கு பின்னால இருக்கும் வலியும் எனக்கு தெரியும்.
நீ ஏதோ சூழ்நிலை கைதியா சிக்கிட்டனு புரியுது. உனக்கு தோணும் போது நீயா வந்து சொல்லு. ஆனா ஒன்னு நித்தி! ஆலியா உன்னை லவ் பண்ணுறா. நீ தான் வேணும்னு ஒத்த கால்ல நிக்கிறா. மாமா விஷயம் தெரிஞ்சு மறுத்தும் விடாப்பிடியா இருக்கா. பார்த்து பண்ணு” அவன் தோளில் கை வைத்தான் ருத்ரன்.
“சாரிடா என் நிலமையை எப்படி சொல்லுறதுனு தெரியல. எல்லாம் சரி கட்டிட்டு வரேன்” வேதனையோடு கூறியவனைக் காண இருவருக்கும் கஷ்டமாக இருந்தது.
“பலகாரம் பாயாசம் சாப்பிடனும்னு வந்துட்டு என்னவோ சீரியல் டைரக்டர் மாதிரி நிக்கிற. வா வா நிஜ உலகத்திற்கு” என ருத்ரன் சொல்ல,
“ஆமாமா பலகாரம் எங்கே? பாசமா பேசினா மட்டும் போதாது பாயாசமும் வேணும்” இயல்பு நிலைக்கு மீண்டவன் தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுக் கொண்ட பின்னரே சென்றான்.
அதோ இதோவென பொழுது நகர்ந்திட ரிசப்ஷன் நாளும் வந்தது. பிரத்தியேக அலங்காரங்கள் தேவையில்லை என்று தானே செய்து கொள்வதாக கூறியிருந்தாள் அஞ்சனா.
அதன்படி இளம் ஊதா நிற லெஹெங்காவில் முடியை க்ளிப்பிற்குள் அடக்கி சிறிதை முன்னால் இட்டு, கண்ணுக்கு மை தீட்டி உதட்டிற்கு கொஞ்சம் லிப்ஸ்டிக பூசிக் கொண்டாள்.
அவளுக்கு இதிலெல்லாம் நாட்டம் இல்லை என்றாலும் மற்றவர் முன் சிறிது அலங்காரங்களுடன் இல்லா விட்டால் சரியாக இருக்காது என சித்ரா சொன்னதை ஏற்றுக் கொண்டாள்.
அறையினுள் வந்த ருத்ரனைக் கண்ணாடி வழியாக நோக்கினாள். அவளை ஒத்த நிறத்தில் குர்தா அணிந்திருந்தான். அவன் முடி வெட்டியிருந்த ஸ்டைல் இன்னும் அவன் அழகைக் கூட்டியிருந்தது.
அவனை விட்டும் பார்வையை நகர்த்த முடியாது போனது அவளுக்கு. வாட்ச்சை அணிந்தவனோ அவளருகே வந்தான்.
“அம்மு…” என்று அழைத்தும் திரும்பாமல் இருந்தாள்.
நேற்றே அவளோடு பேசினான். ஆனால் முன்பு போல் குறும்புப் பேச்சுகள் இல்லாது போயிருந்தது. அதை ஏற்க முடியவில்லை அவளால்.
அவள் தோள்களைப் பற்றி தன்னை நோக்கித் திருப்ப அவனைப் பார்க்க முடியாமல் இமைகளைத் தாழ்த்தி நின்றாள்.
“என்னைப் பார் அம்மு! என் கண்ணைப் பாரு” அவள் நாடி பிடித்து நிமிர்த்தினான்.
வெளிவரத் துடித்த கண்ணீரை இமை தட்டி அடக்கிக் கொண்டு அவனை ஏறிட்டாள்.
“இப்போ எதுக்கு அழுற? அழுதா மை வடிஞ்சு முகம் அசிங்கமாகிரும். இப்படி போனா மத்தவங்க என்ன நினைப்பாங்க? நான் சர்வாதிகாரம் பண்ணுறேன்னு நெனச்சுக்குவாங்க” என்கவே கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
நொடி நேர மௌனத்திற்குப் பின் “அம்மு குட்டி…!!” என கையை நீட்ட, உணர்வுக் குயவிலுடன் அவனிடம் தன் கையை ஒப்படைத்தாள்.
இனி கேட்கவும் வேண்டுமோ? அவளை இழுத்துத் தன் நெஞ்சுக்கூட்டில் அடக்கிக் கொண்டான் ருத்ரன் அபய்.
“அபய் நான் அன்னிக்கு” அவள் ஏதோ பேச வர, “வேணாம். நடந்து முடிந்த விஷயங்கள் இனி எதற்கு? நான் மறந்துட்டேன். நீயும் மறந்துரு” என தடை விதித்தான்.
“சரி. ஆனா இனிமேல் அதே மாதிரி பண்ணவே மாட்டேன். உங்களை என்னிக்கும் ஹர்ட் பண்ண மாட்டேன். இது என் அப்பா மேல சத்தியம் அபய்” அத்தனை உறுதியுடன் கூறியவளின் பேச்சில் அவளை இன்னும் தன்னோடு இறுக அணைத்தான்.
அந்த வார்த்தையே அவனுக்குப் போதுமாக இருந்தது. அவன் தன்னோடு சகஜமாக பேச ஆரம்பித்தது அவளுக்கும் இதமாக இருந்தது.
ரிசப்ஷன் நடைபெறும் இடத்தை வந்தடைந்தனர் இருவரும். செல்வன் முன்னால் நின்றிருந்தார். அவர் விழிகள் மகனை நோக்கின. சிறுவனாக அவர் கைப்பிடித்து பாடசாலை சென்றவன் இன்று தன்னை விட வளர்ந்து மனைவியின் கரம் பற்றி வருவது இனம்புரியா மகிழ்வைக் கொடுத்தது.
“வாங்க வாங்க. ரொம்ப அழகா இருக்கீங்க. ஜோடி பொருத்தம் பிரமாதம். வீட்டுக்கு போனதும் ரெண்டு பேருக்கும் திருஷ்டி சுற்றி போடனும்” மகனையும் மருமகளையும் அன்பு கனிய அழைத்தார் சித்ரா.
தாயிடம் புன்னகை சிந்தியவனுக்கோ தந்தையின் நேசப் பார்வை பூரிப்பைக் கொடுத்தது. அடிக்கடி இந்தப் பார்வை அவன் மீது விழாது. பாடசாலைத் தேர்வில் முதலிடம் பெற்ற போது, காலேஜில் டாப்பராக வந்த போது, பிசினஸ்மேன் அவார்ட் வாங்கிய போது என அவ்வப்போது அவனுக்குக் கிடைக்கும். அப்பார்வை அவனை உணர்ச்சிவசப்படுத்தும். அத்தனை அர்த்தமும் ஆழமும் நிறைந்தது.
“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” மனைவியோடு இணைந்து பெற்றோர் காலில் விழுந்தான் ஆணவன்.
அவர்களும் மனதார ஆசிர்வதித்தனர். தந்தையின் ஆசியில் அகம் குளிர்ந்தான். அஞ்சனாவும் மகிழ்ந்து தான் போனாள்.
மேடையில் நின்ற போது வந்த அனைவரது கண்களும் இவர்களைச் சுற்றியே இருந்தன.
கோபால் குடும்பமும் வந்திருக்க அஞ்சனாவைப் பார்த்தவருக்கோ ஏதோவொரு உணர்வு. அவள் தனக்கு மிகவும் நெருக்கமான உறவொன்றாக உள்ளுணர்வு கூக்குரலிட்டது.
ஆலியாவோ நிதினையே சுற்றி வர அவன் முறைத்துக் கொண்டு சென்றான்.
“நீ அனலடிச்சா பயந்துடுவோமா? போடா போடா” அவனிடம் வெளிப்படையாகவே சொல்ல,
“எல்லாரும் பார்க்கிறாங்க ஆலி” அடிக்குரலில் சீறினான்.
“பார்க்கட்டுமே. அடுத்து ரிசப்ஷன்ல நிக்க போற ஜோடி நாம தான்னு அவங்க தெரிஞ்சுக்கட்டுமே. ட்விஸ்ட் எதுக்கு வைக்கனும்?” ரசனைப் பார்வையை வீச, கடுகடுப்போடு காலைத் தரையில் உதைத்தான் நிதின்.
இங்கு ருத்ரனும் கடுப்பில் நின்றிருந்தான். அனைவரும் மேடைக்கு வந்து பரிசு தருவதும், போட்டோ எடுப்பதுமாகவே இருக்க தன்னவளோடு பேச முடியாததில் எழுந்த கடுப்பை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு போஸ் கொடுத்தான்.
செல்வன் மகனது திருமண விடயத்தை அறிவித்தார். அனைவரது வாழ்த்துக்களும் கிடைத்தன. இத்தனை உறவுகளைக் காணும் போது தனிமையில் வாழ்ந்த காரிகைக்கு அபரிமிதமான ஆனந்தம்.
ரிசப்ஷனுக்கு வந்திருந்த செல்வனின் தங்கை குடும்பத்திற்கோ புதுமணத் தம்பதியைப் பார்க்க வயிறு எரிந்தது. தமது ஒரே மகள் நிராவை ருத்ரனுக்கு கட்டிக் கொடுத்து சொத்துக்கு உரிமையாளியாக்கி விட நினைத்திருந்த எண்ணத்தில் மண் விழுந்ததில் ஏக கடுப்பு.
பணத்திற்காக பாசத்தை விலை பேசும் ரகம் அவர்கள். தங்கையின் குணம் தெரிந்ததால் அவ்வளவாக ஒட்டி உறவாடுவதில்லை செல்வன். அளவோடு இருந்து கொள்வார். ஆனால் உடன்பிறப்பு எனும் பாசம் எப்போதும் உண்டு.
நிராவுக்கு ஒன்றும் ருத்ரன் மீது ஆசையில்லை. ஏதோ காணும் போது சைட் அடிப்பாள், பேசுவாள் அதன் பிறகு அவன் நினைவும் இருக்காது. ஆனால் இப்போது அவனோடு இருந்த அஞ்சனாவைப் பார்த்து பொறாமை கனல் விட்டெரிந்தது.
நிதின் விலையுயர்ந்த கப்பிள் வாட்ச் பரிசளித்தான் இருவருக்கும்.
“போட்டு விடுங்க ரெண்டு பேரும்” என்றான் அவன்.
ருத்ரனிடம் கையை நீட்ட அவனைப் பார்த்தவாறு கட்டி விட்டாள். அவளது கையைப் பற்றியவன் கைக்கடிகாரத்தை அணிவித்து கையில் முத்தமிட்டான். ஓவென்று ஆர்ப்பரித்தது இளைஞர் பட்டாளம்.
அவளுக்கோ நாணத்தில் புதைந்து விடனும் போல் இருந்தது. அவளைப் பார்த்தவாறு படக்கென கண்சிமிட்ட யாருமறியாமல் மெதுவாக கிள்ளி வைத்தாள்.
“அப்படி தான். இன்னும் கொஞ்சம் மசாஜ் பண்ணி விடு” என்று காதினுள் கிசுகிசுக்க, “நான் கிள்ளுறது அப்படியா இருக்கு” தன்னைத் தானே கிள்ளி வலித்ததும் முகத்தைச் சுருக்கியவளின் பாவனையை ரசித்துப் பார்த்தான்.
சாப்பிட்டதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக பொழுது கழிய, அனைவரும் கலைந்து சென்றனர். நிதினோடு, தாய் தந்தையரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டான் ருத்ரன்.
தாயோடு அடிக்கடி போட்டோ எடுத்து “வித் மை டார்லிங்” என ஸ்டேட்டஸ் வைத்து தத்தையின் புகைச்சலுக்கு ஆளாவது வேறு கதை.
எனினும் தந்தையோடு நின்று புகைப்படம் எடுக்க சந்தர்ப்பம் அமைவது அரிதோ அரிது தான். இன்று புன்னகையோடு அவரருகே நின்றான் மகன்.
செல்வன் சென்று விடவே மனைவியோடு விதம் விதமாக போட்டோ எடுத்தான்.
“அம்மு அப்படி இல்லை. கொஞ்சம் சிரி” என இன்னும் எடுக்க, “போதும் அபய் எவ்ளோ நேரம்?” சிணுங்கினாள் செவ்வந்தியாள்.
“இந்த சந்தர்ப்பம் நம்ம வாழ்க்கையில் திரும்ப வராது அம்மு. சோ கிடைக்கிற வாய்ப்பை நல்ல பயன்படுத்திக்கனும். என்ஜாய் பண்ணனும். இந்த நாளோட மெமரீஸை மீட்டிப் பார்த்து சந்தோஷப்பட கண்டிப்பா போட்டோஸ் பியூச்சர்ல தேவைப்படும்” அவள் தோளில் கை போட்டுக் பேசிக் கொண்டிருக்கும் போதே போட்டோ எடுத்தான்.
அவன் கூறியதிலிருந்த உண்மையை அறிந்து இன்னும் புகைப்படங்கள் எடுக்க இசைந்தாள். வீட்டிற்கு செல்லும் வழியில் கடையருகே வண்டியை நிறுத்தி ஐஸ்கிரீம் வாங்கி வந்தான்.
தன் முன் நீட்டப்பட்ட ஐஸ்கிரீமைக் கண்டு விழி விரித்தவளிடம் “வாங்கிக்க அம்மு” என்க பெற்றுக் கொண்டாள்.
காரினுள் இருந்தவாறு அவன் சாப்பிட அவளோ ஏதோ யோசனையில் இருந்தாள்.
“எந்த கோட்டையை பிடிக்க இவ்ளோ யோசிக்கிற?” அவளை உலுக்க, “உங்களுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட பிடிக்குமா? சந்தோஷமா இருக்கும் போது சாப்பிடுவீங்களா?” என வினவ விழி விரிப்பது அவன் முறையாயிற்று.
“எஸ்! சந்தோஷமான ஏதாவது நிகழ்வு நடந்தா அதை ஐஸ்கிரீமோட என்ஜாய் பண்ணி முடிக்கிறது என் பழக்கம். அது என்னவோ சின்ன வயசுல இருந்தே பழகிருச்சு. உனக்கு எப்படி தெரியும்?” திகைப்பு விலகாமல் வினவினான் வேங்கை.
“அதான் ஐஸ்கிரீமை ரசிச்சு ருசிச்சு சாப்பிடற விதத்திலே புரியுதே” புன்னகையோடு சொல்ல அவனிலும் புன்னகை.
“நினைச்ச விஷயங்கள் நினைச்சும் பார்க்காத விதமா நடக்கும் போது ஏற்படுற சந்தோஷத்துக்கு அளவே இல்லை அம்மு குட்டி” அவன் குரலில் அத்தனை சந்தோஷம் தாண்டவமாடியது.
“எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு அபய். உங்கப்பா கோபமா இருக்க நான் காரணமாகிட்டேன்னு கவலையா இருந்தது. இப்போ அவரும் ஏத்துக்கிட்டார். எனக்கு இதுவே போதும்”
“ஆனா எனக்கு இது போதாதே” அவன் பார்வை அவளின் உதட்டோரம் படிந்திருந்த ஐஸ்கிரீமின் மீது படிந்தது.
“போதாதுனா என்ன பண்ணனும்?” எனக் கேட்டவளுக்கோ அவன் பார்வையில் கூச்சம் தாளவில்லை.
“என்ன பண்ணனும்னா…” நீட்டி முழக்கிக் கொண்டு அவளை நெருங்கி வர அவளோ கார் கதவில் சாய்ந்தாள்.
ஆடவனின் நெருக்கம் அவளுள் ஹார்மோன்களை ஆர்ப்பாட்டம் நடாத்த வைத்தது. இமைகளை நொடிக்கொரு தடவை மூடித்திறந்து, கருமணிகளில் ஆயிரம் சரித்திரங்களை சத்தமின்றி இழையோட விட்டு நின்றவளின் அழகினில் அவன் காதல் கட்டவிழ்ந்து பீறிட்டது.
“அ..அபய்” சத்தமேயின்றி காற்றினில் கரைந்த அவள் குரல் அவனிதயத்தில் வீணை மீட்டியது.
கள்ளச்சிரிப்பை இதழ்களில் கடைபரப்பிய ருத்ரன் கைக்குட்டையை எடுத்து அவளிதழ் மேல் பனித்துளியாய் துளிர்த்திருந்த ஐஸ்கிரீமைத் துடைத்து விட்டு விலகினான்.
இன்னும் படபடப்பு குறையாது அதே நிலையில் இருந்தவளிடம் “ஓய் அம்மு! ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டதுக்கே ப்ரீஸ் ஆகிட்டியா?” சகஜமாக பேசினான் அவன்.
“சும்மா பதற வைக்கிறீங்க”
“எதுக்கு பதறனும்? நான் கிட்ட வரவும் என்ன நெனச்ச?” புருவம் தூக்கியவனின் முகத்தில் குறும்பு அப்பிக் கிடந்தது.
“இல்லை. ஒன்…ஒன்னும் இல்லை” குரலிலும் பதற்றம் குறையவில்லை போலும்.
“அப்போ உன்னை கிஸ் பண்ண வரேன்னு நெனச்ச. அப்படி தான? உன் ஸ்வீட்டான நினைப்ப கெடுப்பானேன்?” என்று சொன்னவன் அவள் முகத்தை கன்னத்தைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பி நெற்றியில் இதழ் பதித்தான்.
முதல் முத்தம்! அதுவும் நெற்றி முத்தம்! அத்தனை ஆழமாய் உணர வைத்தது. தேகம் சிலிர்த்து அடங்கியது இருவருக்கும். முத்தத்தை வாங்கியவள் மட்டுமல்லாது வழங்கியவனுக்கும் மனம் இனிய அவஸ்தையில் அலை பாய்ந்தது.
ஒரு நிமிடமாய் நீடித்த முத்தத்தில் அவன் சர்ட்டைப் பிடித்தன அவள் கரங்கள். விலகியவன் பின்னந்தலையை கோதி தன்னை சமன் செய்து கொண்டான்.
அவளுக்கோ வெட்கம் புயலுக்குட்பட்ட ஆழிப்பேரலையாய் பொங்கியெழுந்தது. ஒரு முத்தத்திற்கும் இத்தனை சக்தியா? அதனால் இவ்வளவு ஆட்கொள்ள முடியுமா? என சிந்தித்த மனம் அடித்துக் கூறியது உணர்வை ஏற்படுத்த காரணம் முத்தம் மட்டுமல்ல! அவளை அன்பு யுத்தத்தில் தோற்கடித்தவனின் மீது தனக்குண்டான காதலும் தான் என!
காதலா?
ஒரு மனம் கேட்ட வினாவுக்கு மறு மனம் அடித்துப் பதிலுரைத்தது.
“காதல் தான்! அபய் மீது எனக்குக் காதல்”
காதல் கொண்டு தனக்காய் காத்திருந்த காதலன் மீதுள்ள காதலை உணர்ந்து கொண்டாள் காதலால் அவனது இதயத்தைக் கொள்ளை கொண்ட காதலியானவள்.
தொடரும்……..♡
ஷம்லா பஸ்லி