13 – உள்நெஞ்சே உறவாடுதே!

5
(10)

இதழ் முத்தம்
நாடவே…
இணக்கம் தாராயோ!

சிவந்த இடங்களெல்லாம்
என்னிதழ் தீண்ட…
சிவப்பே நிறமாய் கொண்ட
செவ்விதழின் சமிக்கையை
எங்கனம் அறிந்திடுவேன்!!!

——————-

அன்று, காலையிலேயே ஷக்தி மகிழவனுக்கு குறுஞ்செய்திகளும் அலைபேசி அழைப்புகளும் வந்தபாடாக இருந்தது.

அவசரமாக உணவு வேலையை முடித்து விட்டு ரேடியோ ஸ்டேஷனுக்கு கிளம்பிக் கொண்டிருந்த பிரகிருதி, “என்ன மகிழ். இன்னைக்கு ரொம்ப பிசியா?” எனக் கேட்டாள் அவன் அலைபேசியில் தலையைப் புதைத்திருப்பதைக் கண்டு.

“இன்னைக்கு என் பர்த்டே. அதான் எல்லாரும் விஷ் பண்றாங்க” என சாதாரணமாகக் கூறியதில் சரட்டென நின்று விட்டாள்.

“உங்க பர்த்டேவா?” விழி விரித்துக் கேட்டவள், “ஏன் என்கிட்ட சொல்லல” என்றாள் சட்டென சுருங்கிய முகத்துடன்.

“நீ கேட்கலையே ருதி!” அவன் புரியாது பார்த்ததில்,

“இது நமக்கு மேரேஜ் ஆனதும் வர்ற ஃபர்ஸ்ட் பர்த்டே. தெரிஞ்சுருந்தா உங்களுக்கு ஃபர்ஸ்ட் விஷ் நானே பண்ணிருப்பேன். நைட் கேக் கட் பண்ணிருக்கலாம். இப்ப ஏதோ தர்ட் பெர்சன் மாதிரி தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு?” என ஆற்றாமை பொங்கிட, உணர்ச்சிவசப்பட்டாள்.

“யார் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணா என்ன? இதுக்கு ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ற ருதி” என அசட்டையாக கேட்டவனுக்கு, அவளது உணர்வுகள் புரியவில்லை.

“ஆமா நான் தான் ஓவர் ரியாக்ட் பண்றேன்…” எனப் பொறுமை இழந்து கத்தி விட்டவள், குளியலறைக்குச் சென்று ஒரு மூச்சு அழுதாள்.

அவனுக்கென்று அனைத்திலும் முதன்மையாக தான் இருக்க வேண்டுமென்ற அதீத எதிர்பார்ப்பே இந்தச் சிறு விஷயத்தையும் அதிகமாக காயப்படுத்தியது. சாதாரணமாகவே சிறிய விஷயத்திற்கும் அதிகமாய் உணர்வுகளை கொட்டும் குணமுடையவள். தனது குறையை மறைக்க சமூகத்தின் முன் நடித்துக் கொண்டாலும், தனிமையில் சில நேரங்களில் வீறிட்டு அழுது விடுவாள்.

இப்போதோ ஷக்தி மகிழவனின் சின்னதொரு உதாசீனம் அவளைத் துடிக்க வைத்தது.

“என்கிட்ட சொல்லல… நான் அவ்ளோ தானா?” என மீண்டும் மீண்டும் அதே வாசகத்தையே தனக்குள் உருப்போட்டுக் கொண்டாள்.

மனையாளின் திடீர் மாற்றத்தில் குழம்பிப் போன ஷக்திக்கு அவள் கண்ணிலும் கண்ணீர் தெரியவில்லை. உதட்டிலும் சிரிப்பைக் காண இயலவில்லை. கோபமென்றால் தன்னிடம் சொல்லி இருப்பாளே. கோபம் என்றால், முன்னொரு முறை அவளது கண்கள் எவ்வித உணர்வும் காட்டாதிருப்பது போல இப்போது இல்லையே! பிறகென்ன உணர்வில் அவள் புகைந்து கொண்டிருக்கிறாள் எனப் புரியாதவனாக, அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.

அவள் குளித்து முடித்து வந்த போது அவன் அங்கு இல்லை. அதுவே மீண்டும் அவளை உடைய வைத்தது.

தனது சின்னதொரு செயலும் அவளை அதிகமாய் பாதிக்கிறது எனப் புரியாத ஷக்தி மகிழவன் அலுவலகத்தில் வேலையில் மூழ்கிப்போக,
லேகா அவனுக்கு அழைப்பு விடுத்தார்.

“ஹேப்பி பிர்த்டே மை டியர்!” தாயின் பிறந்த நாள் விஷ்க்கு கடமையே என நன்றி கூறியவனிடம், “மகிழ், உன் மேரேஜ்க்கு அப்பறம் வர்ற முதல் பர்த்டே. சோ நம்ம வீட்ல பார்ட்டி ரெடி பண்ணிருக்கேன். ஈவ்னிங் வீட்டுக்கு வந்துடு” என உத்தரவிட்டார்.

“மேரேஜ்க்கு அப்பறம் வர்ற பர்த்டேல என்ன ஸ்பெஷல் மா?” காலையில் தன்னவளும் இதே வார்த்தையை உபயோகித்ததில் அவனிடம் சிறு ஆர்வம்.

“இது வரை சிங்கிளா செலெப்ரெட் பண்ணிருப்ப. இப்ப உனக்குன்னு வைஃப், அடுத்த வருஷம் குழந்தை கூட வரலாம். இனி ஃபேமிலிமேனா செலெப்ரெட் பண்ண போறது தான் ஸ்பெஷல். பிரகா உனக்கு என்ன கிஃப்ட் குடுத்தா? நைட்டு கேக் கட் பண்ணீங்களா?” என அவர் விடாது கேள்வி கேட்க,

“ஓ! இதெல்லாம் செய்யணுமா?” என்றான் அவன் வினவளாக.

“அப்போ அவள் ஒண்ணுமே செய்யலையா?” லேகா லேசான கோபத்துடன் கேட்க,

“அவளுக்கு என் பர்த்டேன்னே தெரியாதுமா. அதுக்கு தான் காலைல அப்செட் ஆகிருப்பாளோ?” என்றவனுக்கு அதுவே இப்போது தான் புரிந்தது.

“பர்த்டே டேட்ஸ் கூட தெரிஞ்சு வச்சுக்காம… எப்படி தான் இருக்கீங்களோ. உனக்கு இன்னும் மெச்சூரான பொண்ணா பார்த்துருக்கணும் ஷக்தி. பிரகா இன்னும் சின்னப்பொண்ணா தான் பிஹேவ் பண்றா” எனக் குறை சொல்லி விட்டு வைக்க, அவனோ பிரகிருதி பற்றிய யோசனையில் இருந்ததில் அவரது கூற்றை கவனிக்கவில்லை.

லேகா அடுத்தப்படியாக பிரகிருதிக்கு தான் அழைத்தார்.

பார்ட்டி பற்றிய தகவலைக் கூறியதும், “இன்னைக்கு ஈவ்னிங்கேவா அத்தை” என்றாள் எச்சிலை விழுங்கி.

“இன்னைக்கு தான பர்த்டே. அப்போ இன்னைக்கு தான பார்ட்டி பண்ண முடியும்?” என்று விட்டு போனை வைக்க, கண்ணை மூடித் திறந்து தனது வேலையினுள் புதைந்தாள்.

நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டு இறுதியாக, “ரேடியோ அலையுடன் இணைந்திருங்கள், மகிழ்ந்திருங்கள்” என முடிக்கும்போதே, மகிழின் நினைவு தானாய் ஒட்டிக்கொண்டது.

தினமும் வரும் எண்ணம் தான். வேலையினூடே கூட அவனது நினைவுகள் அவளை விட்டு நொடியும் அகன்றதில்லை.

எப்போதும் அவன் நினைவு வருகையில் புன்னகை மலரும். இன்றேனோ கண்ணீர் முட்டியது.

சோர்ந்த முகத்துடனே அலுவலகம் விட்டு வெளியில் வந்தவளின் கண்ணிற்கு விருந்தானான் ஷக்தி மகிழவன்.

மரத்தினடியில் காரை நிறுத்தியிருந்தவன், கார் கதவின் மீது சாய்ந்து செடிகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, “மகிழ்?” கேள்வியுடன் வந்த தன்னவளின் குரலில் திரும்பினான்.

“ஹாய் ருதி!” புன்னகை தவழ அவளைக் கண்டதும் கண்கள் மின்னியது ஆடவனுக்கு.

அச்சிறு புன்னகை போதுமே அவளைக் கொள்ளையடிக்க!

“என்ன மகிழ் நீங்க வந்துருக்கீங்க?” சோர்ந்து போன முகம் பரவசமானது பிரகிருதிக்கு.

“அம்மா இன்னைக்கு பார்ட்டி வச்சுருக்கேன்னு சொன்னாங்க ருதிடா. உனக்கு டைம் வேணும்ல. சோ, வீட்டுக்குப் போய் நம்ம ரெப்ரெஷ் ஆகிட்டு, நீ ரிஹர்சல் பண்ணதும் கிளம்பலாம்… ஓகே வா?” என்றவனின் புரிதலில் உள்ளம் பாகாய் உருகியது.

“ஆனா மகிழ்… வீட்டுக்குப் போய் கிளம்பிட்டுப் போனா லேட் ஆகிடுமே. அத்தை ஆறு மணிக்கு வர சொன்னாங்க. இப்பவே மணி 4” என்றதில், “என் பர்த்டே பார்ட்டி. நான் போறது தான் டைம்…” அழுத்தம் திருத்தமாய் கூறியவன் அவள் அமருவதற்காக முன் பக்க கதவைத் திறந்து விட்டான் பவ்யம் கலந்த பாவனையுடன்.

இதழ் மீறிய புன்னகையுடன் காரில் அமர்ந்து கொண்டவளின் சிரிப்பு நேரம் செல்ல செல்லப் பெரிதானது.

“என்ன ருதி? ஸ்மைலிங்கா இருக்க?” அவளை ரசித்தபடி வினவினான் ஷக்தி.

“அதுவா… நீங்க என்னை பிரின்சஸ் மாதிரி நடத்துறீங்க. அதான் சிரிச்சேன்!” பெருமை பொங்க கூறியதும்,

“அப்சலியூட்லி யூ ஆர் மை பிரின்சஸ்!” எனத் தீர்க்கமாக ஒப்புக்கொண்டவன்,

“இதுக்காக சிரிக்கணுமாடா?” என்றான் புரியாதவாறு.

குதூகலம் நிறைந்த மனதுடன், “அதில்ல மகிழ்… பொதுவா, டேட்’ஸ் லிட்டில் பிரின்சஸ்னு தான் சொல்லுவாங்க. ஆனா நான் ஹஸ்பண்ட்’ஸ் லிட்டில் பிரின்சஸ்!” எனச் சிறுமி போல ஆர்ப்பரித்தாள்.

அக்கூற்று அவனுக்கும் பிடித்திருக்க, “ஹ்ம்ம்… மகிழ்’ஸ் லிட்டில் பிரின்சஸ்!” என அவனும் ஒட்டுமொத்த காதலையும் தேக்கி கூற, பிரகிருதியின் கன்னத்தில் சிவப்பின் சாயல்.

ஸ்டியரிங்கை ஒடித்து சாலையோரம் நிறுத்தியவன், அவள் புறம் சாய்ந்து கன்னத்தில் முத்தம் பதிப்பிக்க, சிலிர்த்துப் போனாள்.

தானாய் அவனது பார்வை அவளது இதழ்களின் மீது படிந்திட, “ருதி” என அழைத்தான் மெலிதாய்.

“ம்ம்!” கூச்சத்தில் பேச்செழாது பிரகிருதி தேய,” சீக்ஸ் ரெட் ஆனா சீக்ஸ்ல கிஸ் பண்ணலாம். அதே மாதிரி லிப்ஸ்ல கிஸ் பண்ண எதுவும் இல்லையா?” எனக் கேட்டதில், மேனி எங்கும் செந்நிற சாயல்.

“இன்னைக்கு பர்த்டே பேபி விஷ்! குடுத்துக்கலாம்…” என்றதும், “அப்ப தினமும் பர்த்டே செலெப்ரெட் பண்ணலாமே” குறும்பு கூத்தாட கூறினான் ஷக்தி மகிழவன்.

“ஐய… ஆசையைப் பாருங்க” அவனது புஜத்தில் அடித்திட, அவனோ அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

அவனது மார்பில் கை வைத்து தடுத்தவள், “பப்ளிக் பிளேஸ்ல நோ!” எனக் கண்களை உருட்டி விட்டு “வீட்டுக்குப் போனதும்… ஓகேவா?” என்றாள்.

“ஓகே…” என்றவன் தனது பாக்கட்டில் இருந்து சிறு நோட்பேடை எடுத்து, குறித்து வைத்துக் கொண்டான்.

“என்ன பண்றீங்க?”

“டூ – டு லிஸ்ட்ல நோட் பண்றேன்”

“அடப்பாவி…” வாயில் கை வைத்தவள் அதனை பிடுங்கிப் பார்க்க, அவனோ ஊட்டியில் முத்தம் கொடுப்பதற்கு அவள் சம்மதம் சொல்லியதைக் கூட, ஊட்டி சென்றதும் அதனை நிறைவேற்ற அதில் எழுதி இருந்தான்.

“கிஸ்ஸ கூட எழுதி வைக்கணுமா?” எனக் கேட்க வந்தவள், தனக்கு மட்டும் அவன் முத்தத்தை ஏற்றுக்கொள்ள நேரம் தந்தான் தானே! என்ற உண்மை உறைத்தது.

“உங்களுக்கு உங்க ரொட்டின் மாறக் கூடாது தான? அப்போ திடீர்னு முத்தம் குடுத்தா மட்டும் உங்களுக்கு ரொட்டின் மாறாதா? இன்னைக்கும் என்னை பிக்கப் பண்ண வர்றது உங்க டு டூ லிஸ்ட்ல இல்லையே?” என்றாள் வினவளாக.

“அஃப்கோர்ஸ், நான் ரொம்ப குழப்பிக்காம இருக்கணும்னா, எனக்கு ரொட்டின் மாறக்கூடாது. ஆனா அந்த ரொட்டின் உன்னைப் பார்க்குறதுக்காக மாறுனா, எனக்கு அது பெருசா ஸ்ட்ரெஸ் கொடுக்கல. உன் சீக்ஸ் ரெட் ஆகுறதுக்காக நாள் முழுக்க உன் முகத்தைப் பார்த்துட்டே இருக்க தோணுது. இப்பவும் உன் மைண்ட்செட் பத்தி யோசிச்சு, என் ரொட்டின் மாறுனதுல எனக்கு எந்த அழுத்தமும் வரல இங்க” என்று இதயத்தைச் சுட்டிக் காட்ட, வாயடைத்துப் போனாள்.

“பட், லேட்டா நடக்கப்போறதை டு – டூ லிஸ்ட்ல எழுதிக்கிட்டா, எனக்கு பெட்டரா பீல் ஆகும்” ஷக்தி கூறியதும், “சரி உங்க நோட்பேட்ல நோட் பண்ணிக்கோங்க. சரியா ஆறு முப்பதுக்கு உங்களுக்கு நான் கிஸ் குடுப்பேன்னு” என கீழுதட்டைக் கடித்து கூறிட, அவனது விழிகள் விரிந்தது.

“இங்க நோட் பண்ணிக்கிட்டேன். வெயிட்டிங்” என மீண்டும் நெஞ்சை காட்டிக் கூறிட, வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள்.

பின் இருவரும் வீட்டிற்கு சென்று தயாராகிட, ஷக்தி அவ்வப்பொழுது நேரத்தைப் பார்த்துக் கொண்டான்.

இன்னும் அவன் கொடுக்க வேண்டிய இதழ் முத்தமும் மீதம் இருக்கிறதே!

மணி ஆறைத் தாண்டியதும் தான் தனது அறையில் இருந்து வெளியில் வந்தாள் பிரகிருதி.

“நீங்க இன்னும் கிளம்பலையா மகிழ். போங்க லேட் ஆச்சு” எனப் பரபரக்க, அவனை வலுக்கட்டாயமாக அறையில் தள்ளி விட்டுப் புன்னகைத்தாள்.

அந்நேரம் காலிங் பெல் ஒலிக்க, அவள் எதிர்பார்த்தது தான் வந்திருந்தது.

அதனை வாங்கி சேமித்துக் கொண்டவள், ஷக்தி கிளம்பி வருவதற்காக காத்திருக்க, அவனோ சிவப்பு நிற ப்ளேசரில் அசத்தலாக வெளியில் வந்தான்.

அவனைக் கண்டு இமைக்கவும் மறந்து போனாள் பிரகிருதி.

அழகாய் இருக்கிறான் எனப் பாராட்டினால், அதை எப்படி எந்த விதத்தில் டிஃபைன் செய்கிறாய் எனக் கேட்பான் என்றெண்ணும்போது சிரிப்பு பீறிட்டு எழுந்தது அவளுக்கு.

‘அழகு குறிப்பு வரைக’ என்ற வினாவிற்கு பதில் எழுதும் பொறுமை இப்போது இல்லை.

“மணி ஆறு முப்பது” தன் முன் வந்து நின்றவனின் சிறுபிள்ளைத்தனத்தில் வெள்ளிப்பற்கள் மினுக்க நகைத்தாள்.

“மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே மகிழ்!” என அவன் முன்னே ஒரு காலை முட்டி இட்டு அமர்ந்து அவனிடம் விலையுயர்ந்த நவீன ஸ்மார்ட் வாட்ச்சை நீட்டினாள்.

கண்கள் ஒளிர வியப்புடன் மலைத்துப் போனான்.

“கிஃப்ட் எனக்கா?” அத்தனை பரவசம் அவனிடம்.

“ம்ம் உங்களுக்கே தான்!” பிரகிருதி அவனை ரசித்தபடி கூற, மெல்ல பாக்சினுள் நீட்டிக்கொண்டிருந்த கைக்கடிகாரத்தை வெளியில் எடுத்தான் ஷக்தி மகிழவன்.

அவளும் எழுந்து கொண்டு, “கையில கட்டுங்க” என்றிட, அவன் ஏற்கனவே கட்டியிருந்த கைக்கடிகாரம் இப்போது வாங்கியிருப்பதை விட அதிக விலை கொண்டது. அதனை கழற்றி சோபாவில் போட்டவன், அவளது பரிசைக் கையில் கட்டினான்.

கடிகாரத்தைக் கட்டியதுமே இதய வடிவில் பிரகிருதியின் உருவம் ஒளிர்ந்தது.

“ஹாய் மகிழ்!” பிரகிருதியின் குரலும் சேர்ந்து கேட்க, ஆச்சரியமாக புருவம் உயர்த்தினான்.

அவனது முகம் காட்டிய சிறு சிறு உணர்வுகளைக் கண்ணிற்குள் நிரப்பியவள், “இதுக்குள்ள நிறைய விஷயம் இருக்கு மகிழ்…” என்றவள் ஒரு பட்டனை அழுத்தினாள்.

“இது எமோஷன் ஹெல்பர் மோட். நீங்க கோபமா இருந்தா இதுல ரெட் ஆங்கிரி எமோஜி காட்டும், ஹேப்பியா இருந்தா ஸ்மைலிங் எமோஜி காட்டும், லவ் பீல்ல இருந்தா ஹக் பண்ற எமோஜி காட்டும். இப்படி உங்களுக்குள்ள தோணுற ஒவ்வொரு எமோஷன்க்கும் ஒவ்வொரு எமோஜி காட்டும். அதை வச்சு நீங்க என்ன ஃபீல் பண்றீங்கன்னு உங்களால கெஸ் பண்ண முடியும்” என்றதில் விழி விரித்தவன், “அது எப்படி இதுல தெரியும் ருதி” என்றான் கடிகாரத்தைப் பார்த்தபடி.

“நீங்க மனசுல கோபமா இருக்கும்போது உங்க ஹார்ட் பீட் ரைஸ் ஆகும். அது மூளைக்கு அலெர்ட்டா போகும். உங்க பாடியோட சேஞ்சஸ் வச்சு இந்த வாட்ச் உங்களை அனலைஸ் பண்ணும்.

உங்க மனசுல வர்ற ஃபீலிங்ஸ் பொறுத்து, இந்த ஸ்க்ரீன்ல சின்ன சின்ன சென்டன்ஸ் ஷோ ஆகும்.

இப்ப நீங்க அன்பா இருக்குற டைம்ல, ‘திஸ் இஸ் அபெக்ஷன். கீப் ஸ்மைலிங் அண்ட் ஹக் ஹெர்’ அப்படின்னு காட்டும்.

நீங்க கோபமா இருக்குற நேரத்துல, ‘கீப் சைலென்ஸ். டாக் ஹெர் தட், ஐ ஆம் ஆங்கிரி ஆன் யூ’ னு காட்டும்.

நீங்க சோகமா இருக்குற நேரத்துல, ‘யூ ஆர் ட்ரைன், ருதி கையைப் பிடிச்சு உன் கன்னத்துல வச்சுக்கோ. யூ ஃபீல் பெட்டெர்னு காட்டும். இப்படி உங்களோட உணர்வுகளை டிடெக்ட் பண்ற நேரத்துல நீங்க ரிலாக்ஸ் ஆகுற மாதிரி இதுல நீங்க செய்ய வேண்டிய ஆக்டிவிட்டியை காட்டிட்டே இருக்கும்.”

“வாவ்! எப்படி இதெல்லாம்?” அவன் மனதில் ஆச்சர்யம் பொங்கியதில், கடிகாரம் அலாரமிட்டது.

“நீங்க சர்ப்ரைஸா இருக்கீங்க. அதைக் காட்டுறதுக்காக ருதியை டைட்டா ஹக் பண்ணிக்கோங்க” என்று ஸ்க்ரீனில் காட்ட, “அச்சோ” என பிரகிருதியும் வெட்கத்தில் சிவந்து விட்டாள்.

“சோ இந்த வாட்ச் சொல்றதை கேட்கணும்னு நீயே சொன்னதுனால என்னால இதை மறுக்க முடியாது ருதி” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

பிரகிருதிக்கும் அவனது அணைப்பின் சுகம் இதம் தர, சில நொடிகள் அவனுடன் புதைந்து விட்டுப் பின் அவனை நகர்த்தினாள்.

“இன்னும் இருக்கு இருங்க…” என்றவளிடம் “இந்த மாதிரி வாட்ச் எல்லாம் எங்க செய்றாங்க?” என்றான் மென்புன்னகையுடன்.

“என் கூட ஒர்க் பண்ற கொலிக்’கோட ஹஸ்பண்ட் ஐடில தான் இருக்காரு. இந்த மாதிரி அட்வான்ஸ் ஸ்மார்ட் வாட்ச் கம்பெனில தான் ஒர்க் பண்றார். ஸ்மார்ட் வாட்ச்லயே, நமக்கு வேணும்ன்ற மாதிரி கஸ்டமைஸ் பண்ணிக்க நிறைய விஷயம் இருக்குன்னு ஒரு வாரம் முன்னவே என் கொலிக் சொல்லிட்டு இருந்தாங்க. அப்பவே இத நான் உங்களுக்கு கிஃப்ட் பண்ணனும்னு யோசிச்சு வச்சுட்டேன்.

அவள் ஹஸ்பண்ட்கிட்ட சொல்லி, நிறைய விஷயங்களை ஆட் பண்ண சொல்லி குடுத்து இருந்தேன். இன்னைக்கு உங்க பர்த்டேன்னு எனக்கு திடீர்னு தான் தெரிஞ்சுது. ஆனாலும் உங்களுக்கு இன்னைக்கு இந்த வாட்ச் குடுத்தே ஆகணும்னு, அந்த அண்ணாகிட்ட கெஞ்சி கதறி, தேவையான கஸ்டமைசேஷன் மட்டும் பண்ண வச்சு அனுப்ப சொன்னேன். அவங்களும் அனுப்பிட்டாங்க இப்ப தான்” என்றவளை ரசித்து தொலைந்தான் ஆடவன்.

கடிகாரம் இப்போதும் அலறியது. “யூ ஆர் இன் லவ். கிஸ் ஹெர்” என்று.

வேகமாக அவன் வாயை மூடிய பிரகிருதி, “முதல்ல இந்த வாட்ச் பத்தி முழுசா தெரிஞ்சுட்டு அப்பறமா இது சொல்றதை கேளுங்க ஓகேவா?” என்றிட, “ஓகே…” என்றவன் நல்லபையனாக நின்று கொண்டான்.

“உங்களுக்கு வார்த்தையில சொல்றது தான கஷ்டம். இந்த வாட்ச்ல சின்ன சின்ன வார்த்தைகள் (phrases) ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். அதாவது, நீங்க ஃபீல் பண்ணி சொல்ல முடியலைன்னாலும் நீங்க அதை எக்ஸ்பிரஸ் பண்ண முடியும்.

இப்ப நீங்க என்னை பார்த்துட்டே இருக்கீங்க. என்கிட்ட ஏதோ சொல்லணும்னு தோணுது. லவ் மோட்ல இருக்கீங்க. அப்ப என்ன சொல்லணும்னு ஒரு கன்ஃபியூசன் வந்தா, இதுல ‘கான்வர்சேஷன் மோட்’னு ஒரு செட்டிங் இருக்கும். அதுல போய் பாருங்க. நிறைய ஃப்ரேசஸ் இருக்கும்.

லைக், ‘இன்னைக்கு நீ அழகா இருக்க, உன்கூட இருக்க எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, ஐ லவ் யூ அ லாட், உன்னை கிஸ் பண்ணனும் போல இருக்கு, எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. எனக்கு அழணும்போல தோணுது. இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்’ இப்படி நிறைய வார்த்தைகள் வாட்ச் ஸ்க்ரீன்ல ஷோ ஆகும். இதுல நீங்க ஒன்னை சூஸ் பண்ணி என்கிட்ட சொல்லலாம். மே பி அது தான் நீங்க நினைக்கிற வார்த்தையா கூட இருக்கலாம்.

பொதுவா உங்ககூட இருந்தா நான் என்ன ஃபீல் பண்ணுவேன், நான் என்னவெல்லாம் உங்ககிட்ட சொல்ல ட்ரை பண்ணுவேன், லவ் பண்றப்ப லவரை இம்ப்ரெஸ் பண்ண என்ன மாதிரி வார்த்தைகள் யூஸ் பண்ணலாம் இப்படி எல்லாமே கலந்து ஒரு செட் ஆஃப் வார்த்தைகள், சென்டன்ஸ்னு இதுல இருக்கும். நீங்க அதை சொல்லி எக்ஸ்பிரஸ் பண்ணலாம்…” என சொல்லி முடிக்க, அவன் அவளை அமைதியாகப் பார்த்தான்.

“சோ இதெல்லாம் வச்சு நீ என்னை புரிஞ்சுக்க முடியும் தான?” ஷக்தி கேட்க, அவளிடம் அதே அமைதி.

“நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க. உங்களை புரிஞ்சுக்க இந்த வாட்ச் எனக்கு தேவை இல்ல மகிழ். இது உங்களை நீங்களே புரிஞ்சுக்க… மனசுக்குள்ள ரொம்ப புழுங்காம அட்லீஸ்ட் எக்ஸ்பிரஸ் பண்ணிட்டா உங்களுக்கு ஃப்ரீ ஆகிடும் தான? ஆபிஸ் போகும்போது, வெளி இடத்துல ரொம்ப ஸ்டப்பர்ன் ஆகாம இருக்க, இது யூஸ் ஆகும்.

என்கூட இருக்கும்போது சில நேரம் இதை யூஸ் பண்ணிக்கோங்க. பல நேரத்துல உங்களோட வார்த்தை இல்லாத தடுமாற்றம் தான் எனக்குத் தேவை!” என்றவளின் நேசம் தந்த ஆழத்தில் மூழ்கிப்போனான் ஷக்தி மகிழவன்.

“அண்ட் நமக்குள்ள சின்ன சின்ன லவ் சீன்ஸ் கிரியேட் பண்ண இது யூஸ் ஆகலாம். மத்தபடி உங்களோட வாழ, உங்களுக்குள்ள வாழ வெறும் மௌனம் போதும் மகிழ்…” என உள்ளம் நெகிழக் கூறியவள், அவனது பரந்த நெற்றி மத்தியில் தனது முதல் முத்தத்தை ஆழமாகப் பதித்தாள்.

உறவு தொடரும்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!