14, 15 – உள்நெஞ்சே உறவாடுதே!

5
(17)

அத்தியாயம் 14

என் விழியில்
உன் இமையாய்…

என் மொழியில்
உன் பதமாய்…

என் உணர்வில்
உன் உணர்வாய்…
நம் அன்பில்
நிறைந்திடுவாய்!!!

—————-

கண்ணை மூடிப் பிரகிருதியின் முத்தத்தை ஏற்றுக்கொண்ட ஷக்தி மகிழவனின் மூடிய கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டது.

“என்ன பீல் பண்றீங்க மகிழ்?” வெட்கம் மின்னப் பிரகிருதி கேட்க, அவன் கைக்கடிகாரத்தினுள் தலையைப் புகுத்தினான்.

கையைக் கட்டிக்கொண்டு அவனை ரசித்திருந்தாள் பிரகிருதி.

‘என்ன சொல்லப் போகிறான்’ என்ற ஆர்வம் மின்னியது. சில நொடிகளில் அவன் விழிகளிலும் சிறு மின்னல்.

“உன் கிஸ் உள்ளே கலவரம் பண்ணுது ருதிடா. இட்ஸ் ஆஸம்!” அவள் செட் செய்து வைத்திருந்த வாசகத்தைக் கூறியதும் அவளுள் சிலிர்ப்பு.
வார்த்தையால் அவனது உணர்வுகளை வெளிப்படுத்துவது, அவளுக்கு அதீத மகிழ்வைக் கொடுத்தது.

புன்னகைத்திருந்த பாவையின் இதழ்களின் ஈரம் ஈர்க்க, “லிப் டச்” என்றான் ரசனையாக.

கன்னம் சிவந்து தலை குனிந்தவள், “ம்ம்” எனத் தலையசைக்க, “இந்தத் தடவை என் கண்ணைப் பார்க்கணும்.” அவன் ரசித்துக் கூறியதில் மீண்டும் தலையசைத்தாள்.

ஷக்தி அவள் கன்னத்தை இரு கைகளிலும் பற்றிக் கொள்ள, மூச்சு விடவே சிரமம் எழுந்தது அவளுக்கு.

நிமிர்ந்து அவனது கண்களைக் கண்டவளுக்கு, ஒட்டு மொத்த உலகமும் உறைந்து விட்டது போலொரு பிரம்மை.

பிரகிருதியின் கண் சிறைக்குள் சிக்கிக் கொண்ட ஷக்திக்கும் பெயர் தெரியா உணர்வு. இதழ் வரியில் சிக்கித் தவித்த ஷக்தியின் அதரங்கள் முழுச் சுவையையும் ருசி பார்க்க உவகை கொண்டது.

ஆகினும், அவளது மனநிலையைக் கருத்தில் கொண்டு அவள் இதழ் மீது தன்னிதழைப் பொருந்தியவன், அந்தச் சூட்டில் உருகினான்.
தன்னை ஆழமாய் உற்று நோக்கும் கருவிழிகளை எத்தனை நேரம் தான் கண்ணிமைக்காமல் காண்பதாம்?

நாணம் பிரவாகமெடுக்க அவனிடம் இருந்து விலகியவளுக்கு, நெஞ்சமெல்லாம் பனித்துளிகள் படர்ந்த வண்ணம் இருந்தது.

“டைம் ஆச்சு. கிளம்பலாமா ருதி?”

அவன் எவ்வித உணர்வுமற்றுக் கேட்க, அம்முத்தம் தந்த தாக்கத்தை அனுபவிக்க, அவளுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

“ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்…”

“ம்ம்… ஓகே, நான் கார்ல இருக்கேன்.” என அவன் காரை நோக்கிச் சென்றான்.

ஷக்தி மகிழவனும், பிரகிருதியும் லேகா வீட்டிற்குச் செல்ல, அங்கோ உறவினர்களின் வரவால் வீடே ஜொலித்தது.

‘பார்ட்டி’ என்றதும் இருவரும் இதனை எதிர்பார்த்ததால் சற்றே இயல்பாகவே இருந்தனர்.

லேகா மருமகளை அனைவரிடமும் பெருமையாய் அறிமுகம் செய்ய, அவர்கள் வீட்டிற்கு முன் இருக்கும் லானில் தான் கேக் கட் செய்யவும் ஏற்பாடு ஆகியிருந்தது.

சிகப்பு நிற வெல்வெட் கேக்கின் வாசமும், அதிக நறுமணம் கொண்ட பிரியாணியின் மணமும், குடலைப் பிரட்ட வைத்தது பிரகிருதிக்கு.

அந்த உணவைத் தட்டில் வைத்து வம்படியாக உண்ணும்படி சொல்லும் உறவினர்கள் ஒரு பக்கம்.

லேகாவோ, மகனைப் பற்றித் தெரிந்து அவனை எதற்கும் வற்புறுத்தாது, மருமகளை அவனுக்கும் சேர்த்து உறவினர்களின் முன் சாதாரணம் போல இருக்க அதிக அழுத்தம் கொடுத்தார்.

இப்போது வரை அவளிடம், மகனைப் பற்றிய உண்மையைக் கூறாத குற்ற உணர்வு எதுவும் எழவில்லை அவருக்கு.

கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கிறான். மூளைக்காரன்! அவனை ரிஜெக்ட் செய்த பெண்கள் அனைவரும் மனசாட்சியற்றவர்கள் என்பதே அவரின் எண்ணம்.

தாயாக, மகனுக்கு நல்வாழ்க்கை அமைய வேண்டுமென எண்ணியது வரை பரவாயில்லை. ஆனால், அவனைப் பற்றிய உண்மையை மறைத்தது தவறு தானே!

அதை எல்லாம் பொருட்படுத்தாது, “பிரகா… என் ஒன்னுவிட்ட சித்தி வந்துருக்காங்க. அவங்களுக்குக் கேக் குடு.” என்று பத்தாவது முறையாக வேலை சொல்ல அவளுக்கு அழுகையே வரும்போல இருந்தது.

அந்தக் கேக்கின் மினுமினுக்கும் வண்ணமும், அவளது தாம்பத்ய வாழ்வு பற்றியும் கேட்டுக் கேலி புரிந்து, அவர்களின் ஒட்டுதலை அறிய எண்ணிய உறவினர்களின் பேச்சும் அவளுக்கு ரசிக்கவில்லை.

லேகாவால் நேரடியாகக் கேட்க இயலாததை, அவரின் உற்ற உறவினர்களின் மூலம் அவளிடம் கேட்க வைத்ததைப் பாவம் அவள் அறியவில்லை.

ஏற்கெனவே ஒரு வித அழுத்தத்தில் இருந்தவள், புன்னகை மாறாது இருக்க அரும்பாடுபட, லேகா அவளைப் பற்றி இன்னொருவரிடம் பேசும் பொருட்டு, “இவள் என் மருமக…” என அறிமுகம் செய்ய அவளது தோள் மீது கைபோட்டுக் கொண்டார்.

அதிலேயே அவளுக்கு நடுக்கம் பிறக்கத் தொடங்கியது.

மாமியாரின் கையை எடுக்க முயன்றவளுக்குத் தோல்வியே கிட்ட, சற்றே தூரத்தில் நின்று பழச்சாறு அருந்திக் கொண்டிருந்த ஷக்தி மகிழவனின் கண்ணில் விழுந்தாள்.

அவளது உடல்மொழியில், அவளின் தவிப்புகளை உணர்ந்தவன் போல வேக நடையுடன் அவளருகில் வந்தவன், பிரகிருதியின் மீதிருந்த லேகாவின் கையை எடுத்து விட்டான்.

“அவளுக்குத் தொட்டுப் பேசுனா பிடிக்காதுமா… ஸ்டே அவே ஃபிரம் ஹர்…” என்றவன் அவளைத் தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டான்.

இன்னும் நடுக்கம் நின்ற பாடில்லை பிரகிருதிக்கு.

“ஃப்ரெஷ் ஏர் வேணுமா ருதிடா?”

அவள் புறம் குனிந்து ஷக்தி கேட்க, இருவரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த லேகாவின் மீது எழுந்த பயத்தை மறைத்தபடி தலையசைத்தாள்.

“பார்ட்டி போதும்மா, நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம்.” என்றவன் மற்றவர்களின் பதிலை எதிர்பாராது மனையாளை அழைத்துக் கொண்டு கிளம்பியே விட்டான்.

காரில் அவளை அமரச்செய்து சில நொடிகள் தனிமை கொடுத்தவன், “இப்ப ஓகேவாடா?” எனக் கேட்க, கலங்கிய கண்களுடன் தலையாட்டினாள்.

“உனக்கு கம்ஃபர்ட்டா இல்லைன்னா சொல்லிருக்கலாம்ல?” அவனது கேள்விக்குப் பதில் கூறாதவளாக,

“நீங்க ஏன் எல்லார் முன்னாடியும் எனக்குத் தொட்டால் பிடிக்காதுன்னு சொன்னீங்க? எல்லாரும் என்ன நினைப்பாங்க…” என்றவளுக்கு அழுகை வந்தது.

“உனக்குப் பிடிக்காது தான? அதைத்தான் சொன்னேன். மத்தவங்களுக்காக, நம்ம ஏன் யோசிக்கணும்?” ஷக்தி புருவம் சுருக்கிப் பார்த்தான்.

“எனக்கு இருக்குற பிராப்ளம் மத்தவங்களுக்குத் தெரிஞ்சா பரவாயில்லையா?” கண்ணில் நீர் தேங்கக் கேட்டவளிடம், “யாருக்குத் தெரிஞ்சாலும் ஐ டோன்ட் கேர்!” என்றான் அழுத்தமாய்.

“ஆனா எனக்கு அப்படி இல்ல. எல்லார்ட்டயும் நான் பெர்ஃபக்ட்டா இருக்கணும்னு நினைப்பேன். என்னைப் பத்தித் தெரிஞ்சா எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்ப்பாங்க. எனக்கு ஆக்வர்டா இருக்கும்.” என மூக்கை உறிஞ்ச, அவளை நிதானமாக ஏறிட்டவன்,

“அப்போ என்னைப் பத்தி மத்தவங்களுக்குத் தெரிஞ்சாலும், உனக்கு ஆக்வர்டா இருக்குமா?” என வினவினான்.

“உங்களை அப்படித் தப்பாய் பார்த்தா நான் சும்மா இருக்க மாட்டேன் மகிழ்” மெலிதாய் சீறினாள்.

“சோ, நானும் அப்படித்தான்! எதையும் யார்கிட்டயும் மறைச்சு வைக்கணும்னு எனக்குத் தேவையும் இல்ல. எல்லாம் தெரிஞ்சு உன்னை ஆக்வர்டா பீல் பண்ண வச்சா, சைலண்டாடவும் இருக்க மாட்டேன் ருதி…” என்றவனின் குரலில் அழுத்தம் மிகுந்தது.

அதில் மனத்திலிருக்கும் அழுத்தமெலாம் மறைந்து போவது போலொரு மாயை பிரகிருதிக்கு.

நாள்கள் அதன் போக்கில் கரைய, இருவருக்கும் இருக்கும் நெருக்கம் அதிகரித்தது.

தினமும் ஒரு முறையாவது அவள் பரிசளித்த கைக்கடிகாரத்தில் இருந்து ஒரு காதல் வார்த்தையைக் கூறி அவளைக் குளிரச் செய்வான்.

அது ஒரு ஷெடியூலாக இருவருக்கும் மாறினாலும், திட்டமிட்டுக் காதல் செய்வதும் அவர்களைப் பொறுத்தவரை இனிமையாக இருந்தது.

அவர்களது உறவில் ஆச்சரியங்களுக்கு இடமில்லை.

“உன்னை வியக்க வைக்கப் போகிறேன்” என அவளைத் தயார்படுத்தி விட்டே அவளுக்குப் பரிசுகள் கொடுப்பான்.

“நாளைக்கு எனக்குக் கிஸ் குடுக்கணும். நோட் பண்ணிக்கோங்க.” என்று முந்தைய நாளே கணவனுக்கு அறிவுறுத்தி விடுவாள் பிரகிருதி.

அவளுக்கு அதீத நறுமணம் கொண்ட பெர்ஃபியூம்கள், உணவு வகைகள் பிடிக்காததால் அவனும் அவற்றை எல்லாம் தவிர்த்துக் கொண்டான்.
அவனுக்கு ஒரே உணவு முறையை வழக்கமாக்கி இருப்பதால், அவனது உணவுப் பழக்கத்திற்கு அவள் தன்னை மாற்றி இருந்தாள்.

நாள் செல்லச் செல்ல, தன்னைப் பற்றித் தனது உணர்வுகள் பற்றி அறிய அந்தக் கைக்கடிகாரம் தேவைப்படவில்லை ஷக்திக்கு.

“ருதிடா… இன்னைக்கு ஆபிஸ்ல நிறைய வேலை பெண்டிங்ல இருந்துச்சு. மனசு ஒரு மாதிரி எரியுது, என்ன செய்யுது எனக்கு?” என அவள் தோள்மீது சாய்ந்து கொண்டு கேட்பான்.

அவன் தலையின் மீது தானும் சாய்ந்து கொள்பவள், “ஒர்க் பெண்டிங்ல வச்சது யார் மகிழ்?” என வினவ, “என் மேனேஜர்…” என்றான்.

“அப்போ உங்களுக்கு அவர் மேல கோபம் வந்துருக்கு. அதைக் காட்ட முடியாம டிப்ரெஸ் ஆகிட்டீங்க. அந்த மாதிரி நேரத்துல டீப் பிரீதிங் எடுத்துக்கோங்க!”

“என் பிரீத்திங் எடுத்தா, எனக்கு எரிச்சல் குறைய மாட்டேங்குது. உன்னை ப்ரீத் பண்ணுனா இட்ஸ் பெட்டர்!” அவன் தீவிரத்துடன் கூற, பிரகிருதியின் வதனத்தில் சிவப்பின் சாயல்.

அதனை ரசித்தவன், “நான் உன்னை டெம்ப்ட் பண்ணிட்டேனோ. ஷை ஆகுற…” எனக் கேட்க, “அச்சோ!” என முகத்தை மூடி அவன் நெஞ்சில் வெட்கத்தை மறைத்துக் கொண்டாள்.

மேலும் சில நாள்கள் செல்ல, அவளது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த ஷக்தி மகிழவன், பிரகிருதியின் முகவடிவைக் கண்களால் அளந்து கொண்டிருந்தான்.

“ருதிடா!”

“ம்ம்…”

“லிப் டச்சிங், எப்ப லிப் கிஸ்ஸா மாறும்? யூ நோ அபவுட் ஃபிரென்ச் கிஸ்?” எனச் சாதாரணமாய் கேட்க, அவளுக்குத் தான் அவஸ்தையாகிப் போனது.

“சொல்லிக் கொடுங்க!” அவன் கண்ணைப் பாராமல் பிரகிருதி கூற,

“என் கண்ணைப் பார்த்தா கண்டிப்பா சொல்லித் தரேன்!” என்றான் ஷக்தி.

“ஃபீலிங்ஸ் இல்ல, இல்லனு சொல்லிட்டு, என்னை ரொம்ப நீங்க ஃபீல் பண்ண வைக்கிறீங்க மகிழ். டூ பேட் நீங்க!” எனச் சிணுங்கினாள்.

அந்தச் சிணுங்கலில் சிக்கிக் கொண்ட இதயத்தைப் பிரிக்க மனம் வராதவனாக, “நான் பீல் பண்ண மாட்டேன்னு சொல்லல. எக்ஸாட்டா எப்படி ஃபீல் பண்ணுவேன், அந்த ஃபீலிங்க்கு என்ன பேர்னு எனக்குச் சொல்லத் தெரியாது, அவ்ளோ தான். ஐ கேன் பீல் யூ!” என்றான் சின்னப் புன்னகையுடன்.

தெளிந்த நீரோடையாக நகர்ந்து கொண்டிருந்த நாள்கள், மகிழ்வை அள்ளிக் கொடுத்தது இருவருக்கும்.

அன்று ரேடியோ ஸ்டேஷனில் இருந்து சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்ட பிரகிருதியை, அதிர்ச்சியூட்டும் வண்ணம் லேகா வந்திருந்தார்.

பிறந்தநாள் விழாவில் இருந்து பாதியில் வந்தது முதல், மருமகளிடம் சரியாகப் பேசுவதில்லை அவர்.

அவரைக் கண்டதும் மெல்லத் திகைத்தவள், “என்ன திடீர்னு வந்துருக்கீங்க?” எனக் கேட்க வந்து விட்டு, அந்த வார்த்தையை விழுங்கிக் கொண்டாள்.

“வாங்க அத்தை…” என்றவளிடம் முகம் திருப்பிக் கொண்டவர்,

“பர்த்டே முடிஞ்சு எவ்ளோ நாள் ஆகுது? ஏன் எனக்கு போன் பண்ணல. நேர்ல வந்து பார்த்துச் சீக்கிரம் கிளம்புனதுக்கு விளக்கமும் சொல்லல.” எனக் கோபம் கொள்ள, அவள் திருதிருவென விழித்தாள்.

“அது வந்து அத்தை… உங்களுக்கு போன் பண்ணுனேன், நீங்க எடுக்கல.” அவள் எச்சிலை விழுங்க,

“கால் எடுக்கலைன்னா நேர்ல வந்து கேட்கணும்னு தெரியாதா உனக்கு? கோபமா இருக்கேன்னு தெரியுது தான?” எனச் சீறினார்.

“நான் என்ன தப்புச் செஞ்சேன் அத்தை? நீங்க ஏதோ வேலையா இருக்குறதுனால எடுக்கலைன்னு நினைச்சேன்.”

“உன்னை நம்பி ஒரு பார்ட்டி அரேஞ்சு பண்ணுனா, பாதில கிளம்புற. உனக்கு அவன் வேற சப்போர்ட்! ஏற்கெனவே சொந்தக்காரங்க உன் மகனுக்கு எப்படி நார்மல் பொண்ணு கிடைச்சான்னு கேட்டு…” என ஆரம்பித்தவர் அதனை விழுங்கிக் கொண்டார்.

அவர் சொல்ல வருவது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆகினும், தன்னை ஏமாற்றி உண்மையை மறைத்ததற்காகக் கோபம் கொள்ளத் தோன்றவில்லை.

அதேநேரம், தன்னைப் பற்றித் தெரிந்தால் என்னவாகுமென்ற பயமும் எழுந்தது.

அவள் பதில் பேசாது யோசனையில் இருக்க, “சரி சரி, 5 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன். கிளம்பு!” என்றார் லேகா.

புருவம் சுருக்கிய பிரகிருதி, “எதுக்கு அத்தை?” எனக் கேட்க,

“மேரேஜ் முடிஞ்சு நாலு மாசம் ஆகிடுச்சு பிரகா…” என்றார் சம்பந்தமின்றி.

அப்போதும் குழப்பத்துடன் நின்றாள்.

“நீயும் குட் நியூஸ் சொல்லுவன்னு ஒவ்வொரு மாசமும் எதிர்பார்த்துட்டு இருக்கேன். ஊட்டிக்கு ஹனிமூன் போயிட்டு வந்த மாசமே நான் எதிர்பார்த்தேன்.”

“என்ன எதிர்பார்த்தீங்க?”

“ப்ச்! நீ கன்சீவ் ஆகுவன்னு தான். எதுக்கும் டாக்டர்கிட்ட செக் பண்ணிட்டு வரலாம்… உங்களைத் தனியா இருக்க விட்டதே இதுக்குத் தான?” என்றவரை அதிர்ந்து பார்த்தாள்.

—————

அத்தியாயம் 15

 

நின் புரிதல்
நான் புரிந்தால்
நம் பிரிதல்
நேராதோ!

என் நேசம்
நீ நினைந்தால்
நம் நோவும்
தீறாதோ!

நம் நினைவில்
நாம் உழன்றால்
உள்நெஞ்சம்
உறவாடுமோ!

——————-

“ஹாஸ்… ஹாஸ்பிடலுக்கா?” திகைத்து விழித்தவள், கைகள் நடுங்க ஷக்திக்கு அழைக்கப் போக, அலைபேசியை வெடுக்கெனப் பிடுங்கினார்.

“அவனுக்கு எதுக்கு போன் பண்ற? ஷக்தி வர்றதுக்குள்ள நம்ம செக்கப் பண்ணிட்டு வந்துடலாம். அவனுக்குத் தெரியணும்னு அவசியம் இல்ல.” என்றவர், அவளது பயத்தை எல்லாம் பொருட்படுத்தாது வம்படியாக இழுத்துச் சென்றார்.

அச்சம் அதிகரிக்க நெஞ்சம் நடுங்கியது அவளுக்கு.

மருத்துவமனை வாசலுக்குச் சென்றதுமே இதயம் வேகமாகத் துடிக்க, “பயமா இருக்கு அத்தை, நான் வரல.” என மூச்சிரைத்தாள்.

“ஜஸ்ட் ஒரு செக்கப் தான் பிரகா… பயப்பட ஒன்னும் இல்ல. சத்து மாத்திரை ஏதாவது தருவாங்க. வா…” என அழைத்துச் சென்றவர், நேராய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

மருத்துவர் ரேணுகா, லேகாவின் தோழி. அதனால் காக்க வைக்க வேலையின்றி உடனடியாய் கேள்வியைத் தொடங்கினார்.

“உங்க பேமிலி லைஃப் எப்படி இருக்குமா?” பிரகிருதியிடம் வினவினார் ரேணுகா.

“ம்ம்…” தலையை ஆட்டியவளுக்கு வார்த்தைகளில் பஞ்சம்.

“ஒரு வெஜினல் ஸ்கேன் பண்ணிடலாம் லேகா. நீ வாஷ்ரூம் போயிட்டு வாம்மா…” என்றிடக் கைகள் வெளிப்படையாக உதறியது. அதனைக் கவனித்த ரேணுகா, “ரிலாக்ஸ்மா, லிட்டில் பிட் அசௌகரியமா இருக்கும். மத்தபடி பெயின் இருக்காது. இதெல்லாம் பழகித்தான ஆகணும்.” என மென்மையாய் கூறி விட்டு அவளைக் கழிவறைக்கு அனுப்பினார்.

லேகா தான், “நீ என்ன செய்வியோ தெரியாது ரேணு. அவளுக்கு மாத்திரை, மருந்தைக் குடுத்து பேபி பார்ம் ஆக ஹெல்ப் பண்ணு.” என்றிட, “நீ கவலைப்படாத லேகா, அதெல்லாம் பண்ணிடலாம்.” என்றவர் ஸ்கேன் அறைக்குச் சென்றார்.

அங்குப் பிரகிருதியும் வந்திட, அவளைப் பேண்ட்டைக் கழற்றச் சொல்லி விட்டுப் படுக்கச் சொல்ல, “எ எதுக்கு?” என்றாள் திக்கி.

“ஸ்கேன் பண்ணணும்ல பிரகிருதி?”

“வேணாம் டாக்டர்…” கண்ணில் நீர் நின்று விட, மீண்டும் பேசி அவளைச் சரி செய்தவர் அவளைப் படுக்க வைத்து, ஸ்கேனிங் எடுக்க முயற்சி செய்ய அவள் அரண்டு விட்டாள்.

இப்படி எல்லாம் ஸ்கேன் எடுப்பார்கள் என்ற தெளிவு அவளுக்கு இல்லை. திடீரென நேர்ந்த அதிர்வில் அதீத அழுத்தத்தில் அவள் பேச்சிழந்து போனாள்.

மாஸ்க்ட் ஆட்டிசம் உள்ளவர்கள் அதிகமாய் பாதிக்கப்பட்டால், மொத்தமாக அமைதியாகி விடுவார்கள். ஒரு வார்த்தையும் பேசாமல்.

அப்படித்தான் பிரகிருதிக்கும் ஆனது.

“உனக்கும், ஷக்திக்கும் எந்த இன்டிமேஷனும் நடக்கலையா?” ரேணுகா திகைப்பாய் கேட்க, அவள் பேச முயன்றும் முடியாதவளாக அமைதியாய் பார்த்தாள்.

“சொல்லு பிரகிருதி…” ரேணுகா மீண்டும் கேட்டும் அவளிடம் பதில் இல்லை.

அவளைத் தனதறைக்கு அழைத்து வந்தவர் லேகாவின் முன்னிலையிலும் இதே கேள்வியைக் கேட்க, அவள் மௌனமாய் நின்றதை அழுத்தம் என்றெண்ணிக் கொண்டார் லேகா.

“என்ன பிரகா இது? ஒருத்தரோட முகத்தை ஒருத்தர் பார்த்துக்கவா கல்யாணம் பண்ணி வச்சோம். நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துக் குடுத்தா இன்னும் ரெண்டு பேரும் சேராம இருக்கீங்க?” என்றார் கோபமாக.

கண்ணில் நீர் தளும்பி நின்றும் அவள் பேசவில்லை. கையைப் பிசைந்து கொண்டே நின்றாள்.

“வாயைத் திறந்து சொல்லு!” லேகா அதட்டிட, அந்த ஏசி அறையிலும் வியர்த்து மூச்சிரைக்கத் தொடங்கியவளுக்கு ரேணுகா தான் முதலுதவி கொடுக்கும்படி ஆனது.

அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய ஷக்தி மகிழவன், வீடு பூட்டப்பட்டு இருந்ததில் புருவம் சுருக்கினான்.

உடனடியாகப் பிரகிருதிக்கு அழைக்க, அவளது அலைபேசியை வைத்திருந்த லேகா தான் அழைப்பை ஏற்றார்.

“உடனே ரேணுவோட ஹாஸ்பிடலுக்கு வா…” என்று வைத்து விட்டார்.

அதிகம் யோசிக்கத் தெரியாதவனாக, மருத்துவமனைக்குச் சென்றவனைத் தீயாக முறைத்தார் லேகா.

“இங்க ஏன் வரச் சொன்னீங்க? ருதி எங்க இருக்கா?” என அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டவனின் விழிகள் அவளைத் தேடி அலைந்தது.

“உள்ள இருக்கா…” என ஒரு அறையைக் காட்ட, நொடி நேரத்தில் அறைக்குள் நுழைந்தவன் மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்த பிரகிருதியை உலுக்கினான்.

“என்னடா? இங்க ஏன் வந்த? பீவரா?” என அவள் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, அவளிடம் பதில் இல்லை. கண்களும் தாழ்ந்திருந்தது.

“ருதிடா, பேசு…” ஷக்தி மென்மையாய் கேட்க, மௌனமே தொடர்ந்தது.

திக் திக்கென உள்ளம் துடிக்க, அவளது பேரமைதி ஆடவனைக் கொன்று எடுத்தது.

“ருதிடா, பேசு ப்ளீஸ்!” என்றவன் பதற்றத்துடன் தனது கைக்கடிகாரத்தை ஆராய்ந்தான்.

“எதுவும் ப்ராப்ளமா ருதி? நீ பேசலைன்னா எனக்குக் கஷ்டமா இருக்கு. என்ன பிரச்சினைடா? தான் அதிக அழுத்தமானால் அமைதியாகி விடுவோமென்ற முன்னெச்சரிக்கையுடன், அவளது கடிகாரத்தில் வார்த்தைகளைச் சேர்த்திருந்தாள்.

அவன் கேட்டதும், மீண்டும் கண்ணில் நீர் கொப்பளிக்கப் பேச இயலாது திணறினாள்.

“என்னடா?” அவள் கன்னம் பற்றிக் கேட்டவனுக்கு உள்ளம் ஒரு நிலையில் இல்லை.

அந்நேரம் லேகா மடமடவென உள்ளே நுழைந்தார்.

“உன் பொண்டாட்டியைக் கொஞ்சுனது போதும் ஷக்தி… நான் உங்கிட்ட என்ன சொன்னேன்? கல்யாணம் பண்ணுனதும் ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்னு சொன்னேனா இல்லையா? ரெண்டு பேரும் இன்னும் சேரவே இல்ல. ஸ்கேன் எடுக்கப் போறப்ப தான் ரேணுவே அதைக் கண்டுபிடிச்சா. ஏன் சேரலைன்னு கேட்டா அவள் எவ்ளோ திமிரா அமைதியா இருக்கா?” என்றார் சினத்துடன்.

நடந்தது வெட்ட வெளிச்சமானது ஷக்திக்கு. ஸ்கேன் என்றதுமே, என்ன மாதிரியான ஸ்கேன் எனப் புரிந்து கொண்டவனுக்குக் கோபம் அதிகரித்தது.

அவனும், கடுகடுவெனக் கோபத்தைக் காட்டத் தெரியாமல் அமைதியாகி விட்டான்.

“ருதி, வா… வீட்டுக்குப் போகலாம்…” மனையாளை அழைக்க,

“நான் பேசிட்டே இருக்கேன், நீ உன் இஷ்டத்துக்குக் கிளம்புற?” எனக் கத்தினார்.

“ஏன் கத்துறீங்க?” ஷக்தி காட்டத்துடன் பார்த்தான்.

“என் குமுறல் உனக்குக் கத்துற மாதிரி இருக்கா ஷக்தி. இவள் கேட்குறதுக்கு பதில் சொல்லாம இப்ப வரை திமிர்த்தனமா உக்கார்ந்து இருக்கா… என்னைப் பார்த்து பதில் சொல்றாளான்னு பாரு முதல்ல.” என்றார் எகிறலுடன்.

“அவள் பதில் சொல்ல மாட்டா. ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகிட்டா சைலன்ட் ஆகிடுவான்னு தோணுது. என்கிட்டக் கேட்காம எதுக்கு அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தீங்க. பேனிக் அட்டாக் ஆகியிருக்கும். அவளுக்கு ஷாக் அண்ட் சர்ப்ரைஸ் எல்லாம் தாங்க முடியாது. இனி என்னைக் கேட்காம அவளை நீங்க பார்க்க வராதீங்க.” என முடிவாய் உரைத்தவனை வாயடைத்துப் பார்த்தார்.

“அவளைப் பார்க்க வர்றதுக்கு உங்கிட்ட நான் ஏன் பெர்மிஷன் வாங்கணும்?”

“அவளை என் பொறுப்புல விட்டிருக்கீங்க. அவளோட மனநிலை எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.”

“அவள் மனநிலைக்கு என்ன இப்போ?” பல்லைக் கடித்து லேகா கேட்க,

“அவளுக்கு மாஸ்க்ட் ஆட்டிசம்! அவளை கேர்புல்லா ஹேண்டில் பண்ணனும்.” என இயல்பாக உரைத்தவன், பின்வரும் விளைவுகளைச் சிந்திக்கவில்லை.

அதனைச் சிந்தித்து அனைத்தையும் மறைத்த பிரகிருதியும், தற்போது சுயநினைவில் இல்லை.

அதிர்ச்சியில் உறைந்து போனார் லேகா.

பெண் வீட்டார் தன்னை ஏமாற்றித் தனது மகனுக்குப் பிரகிருதியைத் திருமணம் முடித்து வைத்ததில் கட்டுக்கடங்காமல் ஆத்திரம் எழுந்தது.

“உன்னை ஏமாத்தி இருக்காங்க ஷக்தி. அது புரியாம அவளைத் தாங்கிட்டு இருக்க. அவள் ஆரம்பத்துல இருந்தே வித்தியாசமா இருந்தது புரிஞ்சுது ஆனா சிரிச்சு சிரிச்சே என்னை ஏமாத்திட்டா…” எனப் புலம்பித் தள்ளியவர், “ஏய்… நடிக்காதடி!” என்று பிரகிருதியின் அருகில் வந்து அவளது தோளைத் தொட்டுக் கத்தினார்.

அதில், பயந்து ஒடுங்கி அமர்ந்தவளைத் தனது கை வளைவினுள் வைத்துக் கொண்டான் ஷக்தி மகிழவன்.

“ம்மா கத்தாதீங்க, இட்ஸ் இரிடேட்டிங்! அவளுக்கும் பிடிக்காது. எங்களைத் தனியா விடுங்க.” என்றான் உத்தரவாக.

“அவளை விட்டுட்டு, நீ முதல்ல வீட்டுக்கு வா ஷக்தி” லேகா பணிக்க,

“இவளை விட்டுட்டு வீட்டுக்குப் போய் நான் என்ன செய்ய முடியும்? ஐ காண்ட் மா…” என அழுத்தமாக உரைத்தான்.

“நான் உன்னைக் கூப்பிட்டது நம்ம வீட்டுக்கு!”

“உங்க வீட்டுக்கு நான் இப்ப வர்ற மனநிலைல இல்ல. எனக்கும், இவளுக்கும் எங்க வீட்டுக்குப் போனால் தான் மைண்ட் ப்ரீ ஆகும். நீங்க கிளம்புங்க.” என்று முகத்தில் அடித்தது போலக் கூறியவன், “ருதிடா… பேபி… எந்திரி போலாம்.” என்றான் அவளிடம் மட்டும் குரலைத் தணித்து.

“பயமா இருக்கு மகிழ்!” தேம்பலாய் அவள் உதட்டைப் பிதுக்க, அவனுக்கு ஆறுதல் சொல்லக் கூடத் தெரியவில்லை.

அவளது கால்கள் நடுங்கியதில் தனது கையில் அள்ளிக் கொண்டான். அவளது நெற்றியில் அழுத்த முத்தமிட்டான். இந்தக் காயங்கள் நீங்க, அவனது செயல்கள் மட்டுமே அவளை அமைதியாக்குகிறது.

வார்த்தையால் சொல்ல முடியாத தனது காதலைச் செயலில் உணர்த்த முயன்றான்.

“புரியுதுலடா உனக்கு?” ஷக்தி தவிப்பாகப் பார்க்க,

அவனது மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவள் இருந்தாள்.

“புரியுது மகிழ்!” என அவளும் அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனை அமைதியாக்கினாள்.

தனக்காகத் தாயை ஒதுக்கித் தள்ளிய அவன் செயலும், பேச்சும் அவளை மெல்ல மெல்ல இயல்பிற்கு வரவைத்தது.

வீட்டிற்குச் சென்றதும் அவளுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தவன், அவள் ஓய்வெடுப்பதற்கு ஏதுவாகத் தலையணையைச் சாய்த்து வைத்து, அவளைப் படுத்து வைத்தான்.

“இதைக் குடிச்சுட்டுத் தூங்குடா” என்றவன் போர்வையையும் போர்த்தி விட்டு, “நான் டின்னர் ரெடி பண்ணிட்டு எழுப்புறேன்…” என அவள் கேசத்தைக் கோதி விட்டான். அறையை அவளுக்குத் தோதாக முழுதாய் இருட்டாக்கினான்.

இரவு உணவு தயாரித்து விட்டு அவளை எழுப்பியவன் தானே உணவு ஊட்டி விட்டான்.

பின் வாயைத் துடைத்துத் தண்ணீரைப் புகட்டியவன், மீண்டும் படுக்க வைத்து அவளை உறங்க வைத்திருந்தான்.

தனக்காக அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவளை நிதானப்படுத்தியது.

இல்லையென்றால், இந்தப் பேனிக் அட்டாக்கில் இருந்து அவள் வெளிவருவது அத்தனை எளிதல்ல.

ஒருமுறை அவள் பரீட்சையில் மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு அவளது தந்தை அவளை நன்றாகத் திட்டி விட, அப்போது ஏற்பட்ட பேனிக் அட்டாக்கில் பேச்சிழந்து போனாள் அவள். மீண்டும் அவள் சாதாரணமாகப் பேச ஒரு மாத காலமானது.

அதுவும் தீவிர கவுன்சிலிங் சிகிச்சையில் தான் இயல்பானாள்.

இதே தொடர்ந்தால், அவளுக்கென்று திருமணம் நடத்திப் பார்க்க இயலாது எனப் புரிந்தவர் அவளை எதுவும் சொல்வதில்லை.

பிரகிருதி முழுதாய் இயல்பாகும் வரை, அடுத்த ஒரு வாரத்திற்கு அலுவலகம் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து பார்த்துக் கொண்டான்.

முதல் வேலையாகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றவன், “என் வீட்டுச் சாவியைக் குடுங்க.” எனக் கேட்டு வாங்கினான்.

லேகாவின் தயவால், அவரது கணவனுக்கும் மருமகளின் பிரச்சினை தெரிந்தது. தாங்களும் அவர்களை ஏமாற்றித் தானே திருமணம் முடித்தோம் என்ற உண்மை குத்த அவரால் எதுவும் பேச இயலவில்லை.

ஆனால் லேகா ஆடித் தீர்த்து விட்டார். இந்த விஷயம், பிரகிருதியின் தாய் தந்தை வரை சென்றிட, அவர்களையும் ஆட்டிப் படைத்தார்.

நேராய்ச் சென்று பேசிப் பிரச்சினையை முடிக்க ஆர்த்தி எண்ணிட, “கொஞ்சம் பொறு, அவங்க கோபம் குறையட்டும். போகலாம்.” என்று தடுத்தார் பிரகாசம்.

ஷக்தி வேறு வீட்டுச் சாவி கேட்டதும் லேகாவின் பொறுமை காற்றில் பறந்தது.

“என்னடா நினைச்சுட்டு இருக்க? சாவி கேட்குற அளவுக்கு வந்துட்டியா?” எனக் குமுற,

“கீ குடுங்க, இனி வீட்டுக்கு வர்றதுன்னா, நான் இருக்கும்போது மட்டும் தான் வரணும்.” என்று நிலையாய் நின்றான்.

“தர முடியாது.” லேகா பிடிவாதம் பிடிக்க,

“கீ…” என்றான் விடாப்பிடியாக.

“தர முடியாதுன்னு சொன்னேன்.”

“கீ…” இம்முறை இன்னும் அழுத்தமாய் நின்றான்.

“ஷக்தி, அவள் உனக்கு வேணாம். சொன்னா கேளு.”

“கீ…”

“அவளால நார்மலா இருக்க முடியாது. எந்நேரமும் அவளைக் கவனிச்சுட்டே நீ வாழ முடியாது.”

“கீ…”

“யாராவது ஒருத்தர் நார்மலா இருந்தால் தான் குழந்தை பெத்து வளர்க்க முடியும். ரெண்டு பேருக்கும் ஆட்டிசம்னா, குழந்தை பிறந்தா எப்படிப் பார்ப்பீங்க?”

“கீ…”

“நான் தொட்டாலே அவள் நெர்வஸ் ஆகுறா. உங்களுக்குள்ள எல்லாம் நார்மலா நடக்காது ஷக்தி…” எப்படியாவது மகனைத் தன் பக்கம் இழுத்து விடப் பெருமுயற்சி செய்தார் லேகா.

சில நொடிகள் அமைதி கொடுத்து, “கீ…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“ஷக்தி… ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளு. அவளை விட்டுட்டு இங்க வந்துடு.” லேகா கெஞ்சத் தொடங்க,

“கீ!” நீட்டிய கையை அவன் இழுத்துக் கொள்ளவும் இல்லை. தனது பிடிவாதத்தில் மாற்றமும் இல்லை.

அவனது பிடிவாதம் பயத்தைக் கொடுத்தது லேகாவிற்கு.

வீட்டுச் சாவியை மகனின் கையில் கொடுத்த லேகா, ஏதோ பேச வரும் முன், “இனிமே எனக்குக் கால் பண்ணாம வராதீங்க.” என மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூறி விட்டே சென்றான்.

இதனை அறிந்த பிரகிருதிக்கு மனம் நிம்மதியடைந்தது. இனி அவனை மீறி யாரும் தன்னிடம் நெருங்க இயலாது என்ற நம்பிக்கை எழுந்திட, தனக்காக அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அதிகமாய் ரசித்தாள்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்க, அன்று எழுந்ததே தாமதம் தான்.

சோம்பல் முறித்துப் பார்வையைத் திருப்பியவள், பால்கனியில் நின்று காபியைப் பருகிக் கொண்டிருந்த கணவனைச் சிறு புன்னகையுடன் பார்த்தாள்.

சட்டென ஒரு யோசனை தோன்ற, தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

இரவு உறங்கும்போதும் நேர்த்தியாகக் குர்தி அணிந்து சடை பின்னி இருந்தாள்.

மெல்லப் போர்வையை விலக்கி விட்டு அவனருகில் சென்றவள், காலை வணக்கத்தைக் கூறி விட்டு அமைதியாக நிற்க, “உனக்கு காபி தரட்டா?” என்றான் ஷக்தி மகிழவன்.

“ம்ம்” அவள் தலையாட்டியதும் அவளுக்கும் ஒரு கப்பில் காபியை நிரப்பிக்கொண்டு வந்தான்.

அதைக் குடித்தபடியே, வெளியில் வேடிக்கை பார்ப்பது போல ஓரக்கண்ணில் அவனையும் ரசித்தாள்.

பின் தொண்டையைச் செருமிக்கொண்டு, “மகிழ்…” என ஆரம்பிக்கச் சில நாள்கள் கழித்துத் தானாக அவள் பேசியதில், சட்டெனத் திரும்பி மலர்ந்த முகத்துடன் பார்த்தான் ஷக்தி.

“சொல்லு ருதிடா!” அத்தனை ஆர்வம் அவன் குரலில்.

“இன்னைக்கு, நான் என் மாஸ்க்க ரிமூவ் பண்ணலாம்னு இருக்கேன். உங்க முன்னாடி இன்னைக்கு நான் நானா இருக்கணும்னு தோணுது. உங்களுக்கு ஓகேவா?” எனக் கேட்டாள் படபடப்புடன்.

“உனக்கு ஓகேன்னா, எனக்கும் ஓகேடா… எனக்கும் உன்னை ஒரிஜினாலிட்டியோட பார்க்க தான் ஆசை!” என்றான் மென்னகையுடன்.

அதில் அவளுக்கும் புன்னகை எழ, ஆகினும் ஒரு விதப் பதற்றம் தோன்றியதைத் தடுக்க இயலவில்லை.

ஒருவேளை, அவனுக்குப் பிடிக்காமல் போய்விட்டால்?

அப்படி அவன் தன்னை வெறுத்து விட மாட்டான் என்ற நம்பிக்கை உள்ளூர வேர் விட்ட பிறகே இந்த முடிவை எடுத்திருந்தாள். அவனை மாற்று மனிதனாகப் பிரித்துப் பார்த்தால் தானே நடிக்க வேண்டும்.

அவளுக்குள் தான் அவன் இருக்கிறான். அவனுக்குள் தான் அவளும் இருக்கிறாள்.

ஜீவன் ஒன்றான பின்னே, இங்கு உடல்கள் மட்டும் எப்படி வெவ்வேறாக இருக்கக் கூடும்?

ஓட்டமும், நடையுமாகக் குளியலறைக்குச் சென்றவள், குளித்து முடித்து வெளியில் வந்தாள்.

லூசான டீ ஷர்ட்டும், ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். நேர்த்தியாகச் சடை பின்னி இருப்பவள், இன்று ஏனோ தானோவெனப் போனிடெயிலில் கூந்தலை அடக்கி இருந்தாள்.

அவள் விரும்பும் தொளதொள உடை. அவளை இன்னும் அமைதியாக இருக்க வைத்தது.

முதன்முறையாக அவளை இயல்பான ஆடையுடன், கலைந்த கேசத்துடன் பார்த்திருந்த ஷக்தி மகிழவனின் உணர்வுகள் தானாய் தூண்டப்பட்டது.

பால்கனி வழியாய் அவளைத் தீண்டிய தென்றல், பாவையின் முன்னெற்றி முடிகளுடன் நளினமாக விளையாட, அதனை அவள் முகத்தைத் தீண்டாமல் ஒதுக்கித் தள்ள அவனது கரங்கள் பரபரத்தது.

முகத்தில் இருந்த நீரை ஒற்றிக்கொண்டே அவனை நோக்கி வந்தவள், ஒற்றை ஊஞ்சலில் அமர்ந்து காலை அங்கும் இங்கும் ஆட்டினாள். கூடச் சேர்ந்து அவளும் முன்னே பின்னே ஆடினாள். கரங்கள் ஒரு நிலையில் இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டே இருந்தது. பல நாள்கள் கழித்து யார் முன்னும் நடிக்காமல் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது போல அத்தனை இதமாக இருந்தது பிரகிருதிக்கு.

முன்னும் பின்னுமாக, ஆடிக்கொண்டே இருந்தவளின் செயல்முறைகள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தாலும், அவள் மீதிருந்த பார்வையை அவன் அறவே அகற்றவில்லை.

“வித்தியாசமா இருக்கேனா பார்க்க?” கண்களை அவனை நோக்கிப் பாராமல் கையை ஒரு மாதிரியாக உருட்டிக்கொண்டு கேட்டாள்.

“ம்ம்ஹும்!” அவன் குறுநகை மாறாது தலையசைக்க,

“என்னைப் பார்த்தா ஆக்வர்டா இருக்கா?” மீண்டும் ஐயத்துடன் கேட்டாள்.

“அழகா இருக்க!” இம்முறை கைக்கடிகாரம் பார்க்காமலேயே அவளுக்கான வாசகத்தைக் கூறி அவளைச் சிவக்க வைத்தான்.

“நிஜமாவா?”

“நீ பெர்பக்ட்டா ரெடி ஆகுறதை விட, இம்பெர்பெக்ஷன்ல பெர்பெக்ட்டா இருக்க ருதிடா!” ரசித்துக் கூறினான் ஷக்தி மகிழவன்.

“தேங்க்ஸ் மகிழ்! நான் இப்படி இருந்தா உங்களுக்குப் பிடிக்குமா? பிடிச்சிருக்கா…”

“என் கூட நீ நீயா இருக்கும்போது எனக்கு எப்படிப் பிடிக்காம போகும்? ஐ திங்க் ஐ லவ் திஸ்!” என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அப்பார்வையின் பொருள் உணர்ந்தவளாக அவளும் அவனைச் சிவப்புடன் ஏறிட்டாள்.

“ம்ம்?” கண்ணாலேயே அவன் உத்தரவு கேட்க, ஒற்றை விரலால் அவனை வரச் சொல்லி அழைத்தாள்.

மனையாளின் கண்ணசைவிற்குக் கட்டுப்பட்டவன் போல, காந்தமாய் ஈர்க்கப்பட்டு அவளருகில் நெருங்கி உதட்டில் முத்தமிட்டான்.

பின் நகர்ந்து, “பிரென்ச் கிஸ்?” எனக் கேட்டவனின் டீஷர்ட்டை இழுத்தவள், தானாகவே முத்தத்தை ஆரம்பிக்க, அவனே முடித்து வைத்தான்.

உறவு தொடரும்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!