15. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

4.8
(5)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

 

👀 விழி 15

இரு வருடங்களுக்கு முன்பு,

 

ரயிலின் தடக் தடக்’ ஓசை செவியினுள் தாளமிசைக்க கண்களை மூடி மூடியிருந்த யன்னலில் தலை சாய்த்திருந்தான் ருத்ரன் அபய்.

 

பிசினஸ் விடயமாக திருப்பூர் சென்றிருந்த ருத்ரன் வரும் போது இடையில் கார் பழுதாகவும் என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே ரயிலின் ஓசை கேட்கவும் காரை பழுது பார்த்து எடுத்து வருமாறு ட்ரைவரிடம் கூறி விட்டு தோள்பையை மாட்டியவன் புகையிரதப் பயணத்தைத் துவங்கினான்.

 

அவனுக்கு சொந்தமாக பைக் இருந்தாலும் கூட பிசினஸ் விஷயமாக காரில் தான் செல்ல வேண்டும் என்பது செல்வனின் கட்டளை. அதுவே பழக்கமாகி விட எங்கும் காரில் செல்வது வழமையாகிப் போனாலும் அவனுக்கு பஸ், ரயிலில் செல்வதென்றால் பிடிக்கும்.

 

அதே பிடித்தத்தோடு யன்னலோர இருக்கையில் அமர்ந்து இயற்கையை ரசித்தவாறு இருந்தவன் மழை வரவே யன்னலை மூடி சாய்ந்து கொண்டான்.

 

அவ்வேளை நிதினுக்கு அழைப்பு விடுக்க “கரடீஈஈஈ” எனும் அழைப்போடு துவங்கினான் நண்பன்.

 

“உன் ஆளு ஆலியாவுக்கு இப்படி செல்ல பெயரும் வெச்சிருக்கியா? வேண்டிய ஒரு பெயர் வெச்சுக்க. ஆனா அதையெல்லாம் என் கிட்ட சொல்லி ஒரு சிங்கிளோட சாபத்தை வாங்கிக் கட்டிக்காத” என்று சொல்ல,

 

“நீ இன்னும் மிங்கிள் ஆகலையா? நான் கூட யாரையோ பார்த்து உன் சிங்கிள் பதவியையும் மனசையும் பறிகொடுத்துட்டனு நெனச்சேன்” கடுப்படித்தான் நிதின்.

 

“என்னை ஓவரா தான் ஓட்டுற. நான் என்ன பண்ணுறது யார் மேலயும் ஒரு அட்ராக்ஷன் கூட வர மாட்டேங்குது”

 

“லவ் பண்ணுற ராசி உனக்கில்லனு சொல்லு. நீ முதல்ல பொண்ணை பார்க்கனுமே. அவளுங்க உன்னை பார்த்தாலும் நீ தலை குனிஞ்சிட்டு போயிடுற கல்யாண பொண்ணு மாதிரி. அப்பறம் எப்படி அட்ராக்ஷன் அட்டகாசம் எல்லாம் வரும்?” கேலி செய்த நிதினை முறைத்துப் பார்த்தான் ருத்.

 

“பார்த்தா என் வருங்கால பொண்டாட்டிய மட்டும் பார்க்கனும்னு இருக்கேன். இப்போ பாரு இங்கே காணுற வயல் வழியா எனக்காக ஒரு தேவதை ஓடி வருவா. அவளை காதலிச்சு உன் கண்ணு முன்னாடி ஒரு நாளைக்கி கூட்டிட்டு வரேன்” யன்னலைத் திறந்ததும் வெளித் தெரிந்த வயலைப் பார்த்துக் கொண்டு கூறினான்.

 

“வயல்ல கொக்கும் தவளையும் தான் இருக்கும். தேவதை எல்லாம் வர மாட்டா” அவன் பேச்சில் எகிறும் போது ஒரு தரிப்பிடம் வந்ததும் புகையிரதம் நிறுத்தப்பட்டது.

 

அந்த பக்கமாக இருந்த வயலைப் பார்த்த ருத்ரனின் விழிகள் அகல விரிந்தன.

 

கையில் பட்டமொன்றை எடுத்துக் கொண்டு அந்த வயல் வரப்புகளிடையே அவன் கூறிபடியே ஓடி வந்து கொண்டிருந்தாள் ஒரு பெண்.

 

அவளைத் தொடர்ந்து சின்னஞ்சிறுவர்கள் ஓடி வந்து கையிலிருந்த பட்டத்தை பிடிக்க எத்தனிக்க அவர்களுக்கு எட்டாமல் துள்ளிக் குதித்தாள் அவள். அவளது முடி முதுகில் அலைபாய, முத்துப் பற்கள் பளிச்சிட தேவதையாய்த் தான் அவன் கண்களுக்கு விருந்தளித்தாள். கல கல நகைப்பொலியுடன் ரயிலை அண்மித்து வந்து நின்றாள் அஞ்சனா!

 

அவனைக் கவர்ந்தவள் அத்தோடு நிற்காமல் ரயிலைப் பார்த்த குதூகலத்தில் கைகளில் முத்தமிட்டு அதனை நீட்டி வாயில் காற்றைக் குவித்து ஊதிப் பறக்க விட்டாள். சிறுவர்களும் அப்படியே செய்தனர்.

 

அவளைக் காண்கையில் உறைந்து போயிருந்த ருத்ரன் பறந்து வந்த முத்தத்தை யன்னல் வழியே கை நீட்டிப் பிடித்தான். அவனிதயத்தில் மலர் அம்புகளை எய்தி ஆழமாய் தைத்தாள் தையல்!

 

🎶 கண்மூடி திறக்கும் போது

கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண்

முன்னாடி

அவளே வந்து நின்றாளே… 🎶

 

🎶 குடை இல்லா நேரம் பாா்த்து

கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து

இது தான் காதல் என்றாளே… 🎶

 

🎶 தெரு முனையை தாண்டும் வரையில்

வெறும் நாள் தான் என்று இருந்தேன்

தேவதையை பார்த்ததும் இன்று

திருநாள் என்கின்றேன்🎶

 

🎶 அழகான

விபத்தில் இன்று ஹையோ நான்

மாட்டிக்கொண்டேன்

தப்பிக்க

வழிகள் இருந்தும் வேண்டாம்

என்றேன் ஓஹோ ஹோ ஓஹோ

ஹோ ஓ ஓஹோ ஓஓ………..🎶

 

அவன் விழிகள் அவளின் பளபளக்கும் விழிகளையே பார்த்து நிற்க, “அம்மு குட்டி” அவனறியாது உதித்தது ஓரழைப்பு. ஆறடி ஆண்மகனை ஆட்டம் காணச் செய்தன அவளின் அஞ்சன விழிகள்.

 

🎶 உன் பேரும்

தெரியாது

உன் ஊரும் தெரியாது

அழகான பறவைக்கு பேர் வேண்டுமா? 🎶

 

அவளையே இமைக்கவும் மறந்து போய் பார்த்தான் ருத்ரன். இத்தனை நாள் கண்ட பெண்களை விட ஆழ்ந்த தாக்கத்தை அவனுள் நொடிப் பொழுதில் ஏற்படுத்தினாள் ஏந்திழையவள்.

 

🎶 நீ என்னை பார்க்காமல்

நான் உன்னை பார்கின்றேன்

நதியில் விழும் பிம்பத்தை

நிலா அறியுமா? 🎶

 

🎶 உயிருக்குள் இன்னோர்

உயிரை சுமக்கின்றேன் காதல்

இதுவா இதயத்தில் மலையின்

எடையை உணர்கின்றேன் காதல்

இதுவா 🎶

 

“காதல்! காதல்!

எஸ் அந்தக் காதல் பூ என் ஹார்ட்டுல பூத்துருச்சி உனக்காக.

 

நித்தி! கண்டுபிடிச்சிட்டேன்டா என் தேவதையை! இதோ இவள் தான் என்னோட அம்மு. என் உசுரு, இவளுக்காக வாழ்வேன் இனி” நொடிப்பொழுதில் அவனுள் எப்படி வந்தாள் என்பது ஆச்சரியமே ஆனாலும் அவளுக்காகவே வாழ்ந்திட இமைப்பொழுதில் முடிவெடுத்து விட்டான்.

 

🎶 கண்மூடி திறக்கும்

போது கடவுள் எதிரே வந்தது

போல அடடா என் கண்

முன்னாடி அவளே வந்து

நின்றாளே 🎶

 

சட்டென தன்னுணர்விற்கு வந்தவன் எழுந்து வாயில் பக்கம் செல்ல, இவனுக்கு காதலுணர்வளித்த நொடியிலேயே பிரிவின் துயரையும் அள்ளிச் சேர்க்கும் நோக்கோடு ரயிலும் வேகமெடுத்தது.

 

அவளருகில் செல்ல, கரம் பற்றிக் காதலுரைக்க கோடான கோடி அணுக்களும் சிலிர்த்தெழுந்தன. ஆகினும் பணி நிமித்தம் தற்போது சென்றே ஆக வேண்டிய கட்டாயம் காதல் ஆசையைக் கட்டிப் போட்டு அவனை வெட்டிக் கூறு போட்டது.

 

இப்படி ஒருவன் தன்னைக் கண்டான், கண்ட நொடி காதலில் விழுந்தான், தன்னை உயிருக்குள் செலுத்திக் கொண்டிருக்கிறான் என்ற யாதொரு தகவலும் அறியாது வந்த வழியே திரும்பி நடந்தாள் அஞ்சனா.

 

மிதிபலகையில் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு “ஐ லவ் யூ அம்மூஊஊ” என்று கத்தியவனின் காதல் அஞ்சல் அஞ்சன விழியாளுக்கு கேட்டிராதது அந்தோ பரிதாபம் தான்.

 

ஆயிரம் கதைகளை கணப்பொழுதில் கதைத்து, ஆயுள் முழுவதும் அவளுக்காய் வாழுமாறு அக்கணமே காத்திருப்புக் கடிதம் வரைந்தவளை கண் மறையுமட்டும் பார்த்து இதயத்தில் சேமித்துக் கொண்டான் அந்த விசித்திரக் காதலன்.

 

நேரே கம்பனியில் இருந்த ஒருசில வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவன் நாணிக்கோணி தன் காதல் சரிதம் உரைக்க பெற்றோருக்கு அதிர்ச்சியே!

 

“சித்ரா! உளறாம இருக்க சொல்லு அவனை. ஊரு பேரு தெரியாதவள கண்டானாம். கண்டதும் காதல் வந்துச்சாம். இந்த கதையெல்லாம் சினிமாவுல வேணா நடக்கலாம். நிஜ வாழ்க்கையில் சாத்தியமே இல்லை” மனைவியிடம் காய்ந்தார் செல்வன்.

 

ஏதாவது முறுகல் வந்தால் சித்ராவை இடைநிறுத்தியே இருவரும் பேசுவர். இம்முறையும் செல்வன் அவ்வாறு மனைவியிடம் சத்தமிட வழமைக்கு மாறாக தந்தை முன் சென்று நின்றான் ருத்ரன்.

 

“எனக்கு எது வேணும்னாலும் அம்மா கிட்ட கேட்காம உங்க கிட்டயே கேட்டிருக்கலாமேனு சொல்லுவீங்களேப்பா. இன்னிக்கு முதல் தடவையா, இல்லை இல்லை ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்டா உங்க கிட்ட கேட்கிறேன்” என்றவன் தந்தையை நேர்ப்பார்வை பார்த்து,

 

“ஏன், எப்படி, இதெல்லாம் சாத்தியமானு கேட்காதீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு அவ இந்த வீட்டுக்கு என் பொண்டாட்டியா வருவானு. அவளை நான் காதலிக்கிறேன். அதே காதலோட காத்துட்டு இருப்பேன்.

 

நீங்க என் காதலுக்கு மறுப்பு சொல்ல வேணாம்பா. எனக்கு என் அம்மு வேணும். என் காதல் சாத்தியமானு ஒரு கேள்வி நீங்க கேட்காம இருங்க அது போதும்” அவர் கைகளைப் பிடித்துக் கேட்டவன் மேற்கொண்டு பேச முடியாது அறையினுள் நுழைந்தான்.

 

பிறந்ததில் இருந்தே அவன் கேட்க முன்னரே அவனுக்கு வேண்டியதை செய்து விடுவார் செல்வன். அவ்வாறு ஏதாவது தேவை என்றாலும் தந்தையிடம் கேட்க மாட்டான். தாயிடம் சொல்லி அவர் மூலமாக தந்தையிடம் கேட்டு வாங்குவான்.

 

இதில் செல்வனுக்கு மனக்குறை தான். “என் கிட்டயே நேரடியா கேட்க சொல்லலாமே சித்ரா” என மனைவியிடம் அங்கலாய்த்துக் கொண்டே அவன் கேட்டதை செய்வார்.

 

அப்படிப்பட்டவன் முதன் முதலாக தன்னிடம் கேட்ட விடயம் ‘அவன் காதல்’

அம்முவைக் காதலிக்க அனுமதி தாருங்கள் எனக் கேட்டான். கேட்டதை மறுப்பாரா அவர்? அதன்பிறகு வாயே திறக்கவில்லை.

 

ஆலியாவுக்கு திருமணம் செய்து வைக்க கோபாலுக்கு கொடுத்த வாக்கு மனத்தில் வந்தாலும் “என் பையன் சந்தோஷம் தான் முக்கியம். அவன் ஆசைப்பட்டபடி அந்த அம்மு கெடச்சா முறைப்படி கல்யாணத்தை செஞ்சு விட்றலாம்” என மனதினுள் எண்ண காலங்கள் தான் கடந்தனவே தவிர மகனின் காதலி கிடைக்கவேயில்லை.

 

இனியும் தாமதிப்பதில் பிரயோசனமில்லை. இல்லாத ஒன்றுக்காக காத்திருந்து வாழ்வைத் தொலைத்து விடப் போகிறான். அவன் நன்றாக வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் மீண்டும் ஆலியாவைப் பேச, அவர் மைந்தனோ காதலியை மனைவியாக்கி வீட்டிற்கே அழைத்து வந்து அத்தனையும் மாற்றம் கண்டது.

 

அம்முவின் விடயத்தை அன்றிரவே ருத்ரன் நிதினிடம் கூற முதலில் கேலியாக பேசியவன் பின்னர் நண்பனின் காதலின் தீவிரத்தை உணர்ந்து அமைதியானான்.

 

அவன் நம்பிக்கையோடு பேசும் போது அவள் கிடைக்காவிட்டால் ஏமாற்றத்தைத் தாங்க முடியாது போய் விடுமே என்று “உனக்கு முத்தி போயிருச்சுடா. இப்படி ஒவ்வொரு நியிஷமும் அவளையே நெனச்சிட்டு இருக்காத. லைட்டா எடுத்துக்க ருத்ரா. எனக்கு பயமா இருக்கு நீ இவ்ளோ டீப்பா போறத பார்க்கும் போது” என்பான்.

 

“என்னால முடியல நித்தி! ஒவ்வொருத்தரும் ஒருதலைக் காதல், அதுவும் ஒரு நாள் காதல் ஜெயிக்காதுனு சொல்லுறாங்க. அந்தப் பொண்ணு எனக்காக இல்லாம வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணி இருக்கவும் சான்ஸ் இருக்குனு சொல்லுறாங்க.

 

யார் என்ன சொன்னாலும் எனக்கு நூறு சதவீத நம்பிக்கை இருக்குடா. என் காதல் கண்டிப்பா அம்முவை என் கிட்ட கொண்டு வந்து சேர்க்கும். ஒவ்வொருத்தருக்கும் இதையே பதிலா கொடுத்தாலும் திடீர்னு ஒரு பயம் வருது ஒரு வேளை என்னால அவளோட சேர முடியாம போயிருமோனு.

 

அப்படி மட்டும் நடந்தா என்…என்னால நினைக்கவே முடியல. நான் செத்துருவேன் டா. கயித்த மாட்டிக்கிட்டு தொங்கவோ விஷம் குடிக்கவோ மாட்டேன்டா. ஆனால் அவ எனக்கில்லனு உறுதியா தெரியுற அந்த நிமிஷம் என் மூச்சு நின்னு அப்போவே உசுரு போயிடும். என் உசுரு அம்மு. என் மூச்சு அவள்” நிதினின் தோள் சாய்ந்து கண்ணீர் விடுவான் அவன்.

 

ஆண்மகன் அழக் கூடாது என்ற நியதி கூட அன்பென்னும் ஆயுதத்தின் முன் சரணடைந்து விடும். அத்தகு அன்பை ஒருத்தி மீது வைத்ததால் தன்னையும் மீறிய அழுகை அவனை ஆட்கொண்டது.

 

“இப்படிலாம் பேசாத! உன் காதல் கண்டிப்பா உன் அம்முவ உன்னோட சேர்த்து வைக்கும்” அவன் தோள் தட்டி ஆறுதல் கூறும் நிதினுக்கே இவனின் காதலில் மலைப்பு ஏற்படும்.

 

தொழில் வட்டாரத்தில் ருத்ரன் அபய்’ என்றால் எதிராளியும் நடுங்கி விடுவார். பார்த்த மாத்திரத்திலே எதிரிகளை வீழ்த்தி விடும் புலி எனப் பெயர் பெற்றவன். கம்பீரமும், திறமையும், தீட்சண்யப் பார்வையும், ஆளுமையும் அவனுக்கு அப்படியொரு உயர் அந்தஸ்தை வழங்கியுள்ளன.

 

அத்தகைய ஆண்சிங்கம் ஆண் கர்வம் கிஞ்சித்துமின்றி அஞ்சன மங்கை மீது காதலுக்காய் கெஞ்சி நிற்கும் நிலை ஆச்சரியத்தைத் தராதிருந்தால் ஆச்சரியம் தான்.

 

அவளுக்காகவே வாழ்ந்தான் நொடிதோறும். அவளையே நினைத்தான். அவளின்றி இயங்காது என் உலகு என்பது அவனது நிலைப்பாடு.

 

பாடசாலையில் மற்றைய பாடங்களில் அதிக புள்ளிகள் வாங்குபவன் சித்திரப் பாடமென்றால் அலறியடித்து ஓடுவான். வரைவது என்றாலே அலர்ஜி அவனுக்கு.

 

அப்படிப்பட்டவன் அவள் மீது கொண்ட காதலின் விளைவாக, அவளை வரைய ஆசைப்பட்டு தனக்குத் தெரிந்த ஒருவரிடம் சென்று ஓவியப் பயிற்சி பெற்றான்.

 

அவர் முன் காதல் கனவில் மூழ்கியிருப்பவனை “அம்முவ வரையனும்னு வந்து அவளையே நெனச்சிட்டு இருந்தா சரியா? குயிக்கா எழுது” என சாடுவார் பயிற்றுவிப்பாளர் மைக்கல்.

 

ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பிரசித்தி பெற்றவர் மைக்கல். ருத்ரனை விட கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மூத்தவர். எனினும் அவனோடு நட்பாக பேசுவார்.

 

“அவளும் நானும் மீட் பண்ணுற மாதிரி என் ஹார்ட்டுல வரைஞ்சி பார்த்துட்டு இருந்தேன் மைக்! அப்பறம் அவளை அம்முனு நீங்க சொல்ல கூடாது. நான் வெச்ச செல்ல பெயர் அது” சண்டை போடுவான் சிறுவனாக.

 

“அடேங்கப்பா அந்தப்பெயரை வெச்சுட்டு நீயே கொஞ்சு. இப்போ நான் தந்ததை வரைந்து முடிச்சிட்டியா?” அவனது ஓவியத்தைப் பார்த்தவரின் புருவங்கள் மேலேறின.

 

இத்தனை வடிவாக வரைந்திருப்பவனின் திறமையை மெச்சியவர் “இவங்களா உன் ஆளு? ஜோடிப் பொருத்தம் பிரம்மாதம்” அந்த போட்டோவை அவனருகே வைத்து புன்னகையோடு கூறினார்.

 

அதனை வாங்கிப் பார்த்தவனுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. அத்தனை அழகாக இதழ் விரித்து சிரித்தாள் அவனது அம்மு.

 

“அச்சோ மைக்! எனக்கு ஒரே ஹேப்பி. தாங்க்ஸ் ஃபார் யூர் சப்போர்ட்” அவரைப் பாய்ந்து கட்டிக் கொண்டு கத்தினான்.

 

“என்னை விட்டுட்டு அந்த பொண்ணை சீக்கிரமா கட்டிக்க” என சிரித்தவரிடமிருந்து விடைபெற்று வீடு வந்தவன் அப்படத்தையே நெடுநேரம் கன்னத்தில் கை வைத்து பார்த்து ரசித்தான்.

 

“நீ நேரில் இல்லை. உன் போட்டோவும் இல்ல. அதான் உன்னைப் பார்க்கனும்னு வரைய கத்துக்கிட்டேன். அய்ம் சோ ஹேப்பி அம்மு. இனி உன் முகத்தில் தான் எனக்கு நாளே ஆரம்பம்”

 

இனி என்ன?! விழிப்பதும் அவள் முகத்தில் தான். ஆகையால் அவனது விடியல்களே இனித்தன. முழு நாளும் அவள் ஞாபகமே. அந்த ஓவியத்தை ப்ரேம் செய்திருந்தவன் தூங்கும் போது எடுத்து பேசுவான். இன்ப துன்பங்களை அவளாக எண்ணி பகிர்ந்து கொள்வான். நெஞ்சோடு அணைத்துக் கொண்டு துயில்வான்.

 

நாளுக்கு நாள் காத்திருப்பும், ஏக்கமும் போலவே அவனது அதீத காதலும் வளர்பிறையாய் அதிகரித்துக் கொண்டு தான் சென்றது.

 

“அம்மு லவ் யூ” காதலோடு அவளிடம் கரைவான்.

 

“என் கிட்ட வர மாட்டியா அம்மு?” ஏக்கத்தில் துடித்துப் போவான் சில நேரம்.

 

“ஏன்டி என்னை கஷ்டப்படுத்துற? போடி போ” செல்லக் கோபத்தோடு முறுக்கிக் கொள்ளவும் செய்வான்.

 

அதனைக் கூட இழுத்துப் பிடிக்க முடியாமல் “சாரி! உன்னை திட்ட மாட்டேன். உன்னைப் பார்க்கனும் போல இருக்கு. உன்னோட நிறைய பேசனும். உன் மடியில் சாஞ்சுக்கனும்னு தோணுது. என் பக்கத்தில் வந்துரு அம்மு குட்டி. ரியல்லி மிஸ் யூ டி” தவிப்புடன் மொழிபவனுக்கு உறக்கமும் தொலைந்து போகும் சில சமயம்.

 

அவளில் தொலைந்தவன் அவளுக்காய் தன் இரவுகளை இரையாக்கினான். நினைவுகளில் ஊசலாட்டம் செய்ததோடு கனவையும் அவளே களவாடிச் சென்றாள் காதல் கள்ளி.

 

எத்தனை நாட்கள் கடப்பினும் உனக்காய் நானிருப்பேன் கண்ணம்மா என்றிருந்தவனை இரண்டு வருடங்களாக சோதித்த பின்பே தரிசனம் கொடுத்தாள் அவனவள்.

 

அதிரடியாய் காதலை வரமளித்தவள் அதே அதிரடியோடு அவனோடு தாரமாய் கரம் கோர்த்தாள்.

 

“இது தான் என் காதல் கதை” கைகளை விரித்துக் கூறியவனை அதிசயித்துப் பார்த்தாள் அஞ்சனா.

 

ஒருவனால் இப்படியும் காதலிக்க முடியுமா? கரம் கோர்த்து காதல் கதை பேசியவளை நொடியில் மறந்து மற்றொரு பெண்ணிடம் சல்லாபம் புரியும் ஆண்களும் உளர்.

ஆனால் இவன்?

 

ஒற்றை நொடியில் பார்த்த பெண் மீது தொற்றிக் கொண்ட காதலை பற்றிப் பிடித்து அவளுக்காக உறுதியாக காத்திருந்தவனின் அன்பு அவளை அடியோடு சாய்த்தது.

 

அதிரடிகள் பல புரிந்தவள் அவனை அதிரடியாய் அணைத்துக் கொண்டாள். அவனுக்குள் நுழைந்து சேமித்து வைத்த காதல் மொத்தத்தையும் அனுபவித்துத் திளைக்கும் உத்வேகம் அவளுக்கு.

 

“அதிரடி அம்மு! உனக்கு நான் தரப் போறேன் பதிலடி” அவள் கன்னத்தில் முத்தமொன்று வைத்தான்.

 

விழிகளை மூடி இதழ் விரியலால் மனம் பறித்த மனையாட்டிக்குத் தன் நெஞ்சாங்கூட்டில் அபமளித்தான் அபய்.

 

தொடரும்……..♡

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!