இருவரின் நட்புடன் நாட்களும் அதன் போக்கில் நகர்ந்தன. ஒருநாள் கூட சமரை பார்க்காமல் செம்பா இருந்ததில்லை. ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வீட்டுக்கு தெரியாமல் விளையாட செல்கிறேன் என சமரை பார்த்துவிட்டு வந்துவிடுவாள். ராசாத்திக்கு தோட்டத்தில் வேலை இல்லாத நேரத்திலும் கோகியை கட்டாயபடுத்தி அந்த இடத்திற்கு விளையாட அழைத்து செல்வாள். கோகியை கண்ணாமூச்சி ஆட விட்டு சமரை பார்க்க அவன் அறைக்குள் செல்வாள். சில நிமிடங்கள் அவனை பார்த்து பேசிவிட்டு மறுபடியும் கோகியுடன் கூட்டணி அமைத்து கொள்வாள். ஒருநாள் கூட அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. செம்பா வருவது சமரை பார்ப்பது பேசுவது எதுவுமே அவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. செம்பாவை பொறுத்த வரை அவர்களுக்குள் இருப்பது நட்பு மட்டும்தான். ஆனால் சமரின் மனதில் செம்பாவின் மீதான காதல் நங்கூரமாய் தனது தடத்தை பதித்துவிட்டது.
அன்று ஒருநாள் கோகியும் வராமல் போக திருட்டு தனமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் செம்பா. கற்பகமும் அங்கே இருக்க, அவள் கண்களில் சிக்காமல் மறைந்து மறைந்து சமரின் அறைக்குள் சென்றாள்.
சமர் கதவை திறந்து வைத்திருந்தான். இந்த நேரத்தில் செம்பா வருவாள் என்பதை அறிந்து. கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கியபடி நிற்க…
“ஹேய் பட்டாசு என்னாச்சி? ஏன் இப்படி மூச்சி வாங்குது” என்றவன் அவளை மேலூம் கீழும் பார்க்க,
“வெளியே அத்தை இருந்தாங்க ஜித்து. அவங்களுக்கு தெரியாமல் உள்ளே வந்தேன்ல, அதான் பயத்துல மூச்சி வாங்குது.”
“ஓஹ் அதான் எப்பவும் வர்ற நேரத்தை விட, மேடம் இன்னைக்கு தாமதமாக வந்திங்களோ!”
“ஆமா ஜித்து”.
“அவங்க இருந்தால் நீ கிளம்ப வேண்டியதுதானே பட்டாசு. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வரனும். அவங்க கண்ணுல மாட்டியிருந்தால் உன் நிலமையை யோசித்து பார்த்தியா?”
“மனசு கேட்கலை ஜித்து. நீ எனக்காக காத்திருப்பன்னு தோணுச்சி. அதான் அவங்க கண்ணுல சிக்காமல் வந்தேன்.” என கண்களை சிமிட்டினாள்.
தனக்காக செம்பா கஷ்டபட்டு வந்ததை நினைத்து சமரின் மனதிற்குள் இதமான தென்றல் வருடியது.
“சரி உட்கார். இன்னைக்கு நான் ஷாப்பிங் போனேன். உனக்கு ஒரு பரிசு வாங்கிட்டு வந்தேன்.”
“பரிசா? என்னது ஜித்து.”
அவளிடம் அந்த பரிசுபெட்டியை நீட்டினான்.
அதை வாங்கி திறந்து பார்த்தாள் செம்பா.
அழகிய வெள்ளி நிறத்தில் கைக்கடிகாரம் இருந்தது.
“எனக்கா ஜித்து.”
“ஆமா. இங்கே நீங்கதானே இருக்கிங்க மேடம்”
“ஆனால், என்னால் இதை போடமுடியதே. வீட்டில் கேட்டால் என்ன சொல்றது. எங்க அம்மாவுக்கு மட்டும் தெரிந்தது என்னை அடியிலேயே பிச்சி எடுத்துடும்.”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. இது முதல் தடவை நான் உனக்கு கொடுக்குற பரிசு பட்டாசு. மறுக்காமல் வாங்கிக்கோ! ப்ளிஸ்” என கண்களை சுருக்கி சமர் கெஞ்ச.
சரியென தலையசைத்தவள் கைகளில் வாங்க போகவும் கதவு வேகமாக தட்டப்பட்டது.
செம்பா பயத்தில் முழிக்க…. பயப்படாதே நான் யாருன்னு பாக்குறேன் “நீ கட்டில் கீழே போய் ஒழித்துக் கொள்” என்றதும் கட்டிலின் அடியில் சென்று படுத்துகொண்டாள் செம்பா.
சமர் சென்று கதவை திறக்க கற்பகம் நின்றிருந்தார்.
“என்னம்மா?”
“யார்கிட்டேயும் பேசிட்டு இருந்திங்களா தம்பி. பேசுற மாதிரி சத்தம் கேட்டது”.
“இல்லைம்மா. எங்க அம்மா போன் பண்ணாங்க, பேசிட்டு இருந்தேன். நீங்க என்ன விஷயமா என்னை தேடி வந்திங்கம்மா.”
“நீ சாப்பிட வரலையே தம்பி. அதான் கூப்பிட வந்தேன். பாலா அவங்க அப்பாகூட வெளியே போய்ட்டான். உனக்கு மட்டும் சாப்பாடு கொண்டு தர சொன்னான்.”
“இல்லைம்மா, எனக்கு பசிக்கலை அதான் நான் சாப்பிட வரலை.”
“சரி தம்பி. சாப்பாடு இங்கே வச்சிட்டு போறேன் மறக்காமல் சாப்பிடு” என்றவர் அவனுக்காக கொண்டு வந்த உணவுகளை அவன் அறையில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அறையை சுற்றி ஒரு பார்வை பார்த்தபடி சென்றார்.
அவர் சென்றதை உறுதிபடித்தி கொண்டவன். கதவை பூட்டிவிட்டு கட்டிலின் கீழே குனிந்து செம்பாவை “வெளியே வா” என்றான்.
மெதுவாக வெளியே வந்தாள்.
“நீங்க இன்னும் சாப்பிடலையா?”
“நீ வர லேட் ஆகிடுச்சில்ல, அதான் உனக்காக வெயிட் பண்ணேன்.”
“சரி சாப்பிடுங்க. நான் கிளம்புறேன்.”
“நீயும் வா பட்டாசு. சேர்ந்து சாப்பிடலாம்.”
“அதுலாம் வேணாம் ஜித்து. நீ சாப்பிடு. என்னை அம்மா தேடு வாங்க.”
“எனக்காக இன்னைக்கு ஒருநாள் என்கூட சாப்பிடேன் ப்ளிஸ்.”
சரி என்றவள் கை கழுவிவிட்டு அவனுடன் சாப்பிட அமர்ந்தாள்.
அவள் சாதத்தை கைகளில் எடுக்கவும் கை வீரல்கள் தீயாய் எறிந்தது. அப்போதுதான் கைகளை கவனித்தான் கையில் சில இடங்களில் சிராய்ப்புகள் இருந்தது.
“ஹேய்! இது எப்படி வந்தது?.”
“உங்களை பார்க்க வந்தேன்ல அப்போ ஒரு சுவர் ஓரம் ஒளிந்து நின்னேன். அங்கே இருந்த மரத்தூண்ல கையை வச்சிருந்தேன். கையை எடுக்கவும் அதுல உள்ள சிராய் கையை கிழிச்சிருக்கும்போல அதான் காயம்” என்றாள்.
“இரு மருந்து போடுறேன்” என அவள் கையை சுத்தம் செய்து மருந்திட்டான்.
“இப்போ நான் எப்படி சாப்பிடுறது ஜித்து. நீ சாப்பிடு நான் வீட்ல போய் சாப்பிடுறேன்”
“ஏன்..?”
“என்ன கேள்வி இது. கையெல்லாம் எறியிதுல்ல. அப்புறம் எப்படி ஜித்து நான் சாப்பிட?”
“அதான் நான் இருக்கேனே” என அவன் ஊட்ட போக சிரித்தபடியே மறுக்காமல் வாங்கிகொண்டாள் செம்பா.
சாப்பிட்டு முடித்து சில நிமிடங்கள் பேசியவர்கள் “நேரம் ஆகிடுச்சி நான் போறேன் ஜித்து” என கிளம்ப போக “ஹேய் பட்டாசு நில்லு’ என செம்பாவின் கரத்தை பிடித்து இழுக்க அவள் கால் தடுமாறி ஜித்து மீது விழ, இருவரும் அங்கிருந்த கட்டிலில் ஒன்றாய் விழுந்தனர். சமர் கிழேயும் செம்பா மேலேயும் இருந்தாள். இரூவிழிகளும் விழுந்த நொடி ஒன்றோடு ஒன்று போர் தொடுக்க… சமரின் சுவாசத்தில் பெண்ணவளின் வாசம் நுழைந்து ஆணவனின் உயிருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் சேதத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தது.
ஆனால் செம்பாவோ சாதாரணமாக “சாரி ஜித்து கால் தடுக்கிடுச்சி”. என்றவள் மெதுவாக அவனை விட்டு பிரிந்து எழுந்தாள்.
“எதுக்கு கூப்பிட்ட ஜித்து?”
நீ..நீ வாட்ச் மறந்துட்டு போன பட்டாசு அதான் கூப்பிட்டேன் என்றான். உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் திணறியபடி, அவனும் உணர்வுகள் தீண்டிச்செல்லும் பருவத்தில் இருப்பதால்,
“சரி கொடு” என்றவள் கையில் எடுத்துகொண்டு வெளியேற, அவள் சென்றதும் இடுப்பில் கரம் வைத்து பெருமூச்சை விட்டவன் “என்னடா பண்ணுற சமர்?, அவ சின்ன பொண்ணு, உன் மூளை ஏன் இப்படி யோசிக்குது. தப்புடா இது தப்பு, உன் மனசை மாற்ற பாரு” என தனக்குள் சொல்லிகொண்டு வீட்டில் இருந்தால் சரி வராது என வெளியே நின்றிருந்த காரில் ஏறி அங்கிருந்த ஆற்று பக்கம் வந்தான்.
அதை பார்த்ததும் செம்பா நியாபகம்தான் வந்தது.
அன்று ஒருநாள்.
“பாலா வீட்ல இருக்க போர் அடிக்குது வெளியே போகலாமா?”
“சரி எங்க ஊர் ஆற்றுக்கு போகலாம் வா” என இருவரும் ஆற்றிற்கு வந்தனர்.
அங்கே ஒரு பக்கம் ஆண்களும் மறுபக்கம் பெண்களும் குளித்த படி இருந்தனர்.
பெண்கள் பக்கம் பார்த்தவனின் விழிகளில் அதிர்ச்சி. செம்பா பாவாடையை மார்புக்கு மேல் வரை கட்டியபடி குளித்து கொண்டிருந்தாள். சந்திரா, ரஞ்சி, ராசாத்தி மூவரும் துணியை துவைக்க, கோகியும் செம்பாவும் தண்ணிரை ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடிய படி இருந்தனர்,
பாலா செம்பாவை பார்த்தும் “ஹேய் பாப்பா” என அழைக்க
“பாலா மாமா” என்றவள் அவனை நோக்கி கையை ஆட்டினாள்.
பெண்களும் ஆண்களும் சமமாய் குளித்து கொண்டிருந்தனர். அங்கிருந்த யார் பார்வையும் பெண்கள் மீது தவறாக படவில்லை. ஆச்சரியமாக இருந்தது
பாலாவிடம் சொல்ல, “சத்தியமா இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சமர். எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து எல்லாரும் இப்படிதான் குளிக்கிறாங்க. அதனால் இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றான் பாலா.
செம்பா சமர் இருப்பதை கண்டாலும் அவளை சுற்றி இருந்த தன் அம்மா, அக்கா, அத்தை என எல்லாரும் இருக்க அவர்கள் முன் அவனை தெரிந்தவன் போல காட்டிகொள்ளவில்லை. கண்டும் காணாதது போல கோகியுடன் விளையாடிகொண்டிருந்தாள்.
சமரின் கண்கள் அவனை அறியாமலே செம்பாவினை அளந்தது. ஈரத்தில் ஒன்றோடு ஒன்றாய் இணைந்து அவள் தோளில் தவழ்ந்த கார் கூந்தலும், நனைந்த உடையும் அவளின் அழகினை எடுத்துகாட்ட சமருக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அங்கே நின்றிருந்த வேறு யாரும் அவன் கண்களில் விழவில்லை. செம்பா மட்டுமே அவன் கண்களுக்குள் நின்றாள். அவளின் சிரிப்பு சத்தமும் கைகளால் தண்ணிரை தெளிக்கும் அழகும், அவள் உடலில் பூத்திருந்த நீர்த்துளிகளும் அவள் அழகினை வேறு விதமாக காட்ட, சமர் முற்றிலும் தடுமாறினான். அந்த நொடி தான் அவள் மீது முதல் தடுமாற்றம் துவங்கியது. இதுவரை எந்த பெண்களையும் ஒருநொடி கூட தவறான பார்வை பார்க்காதவன் தன்னிலை மறந்து ரசித்தான். விழிகள் அவனையும் மீறி செம்பாவை ரசிக்க, இதற்கு மேலூம் இங்கே இருந்தால் சரியாக இருக்காது என அங்கே சாதாரணமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாலாவை வம்படியாக அழைத்துகொண்டு கிளம்பினான் சமர்.
“ஏன்டா எருமை மாடு நான் செவனேன்னு வீட்ல உட்கார்ந்து இருந்தேன். வா வெளியே போகலாம்னு கூப்பிட்டு போய்ட்டு போன பத்து நிமிஷத்துல மறுபடியும் வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்ட, உன் மனசுல என்னதான்டா நினைச்சிட்டு இருக்க”
“மச்சி மனசு சரியல்லை அதான் அங்கே நிற்க விருப்பம் இல்லை.”
“ஏனாம்.?”
“உன் மனசு சரியில்லைன்னு நல்லா இருந்த என் மனசை நொருக்கிட்டியே”
“என்னடா சொல்ற?”
“ஆமா, அங்கே என் அத்தை பெத்த முத்து குளிச்சிட்டு இருந்தது. அவளை பார்க்க முடியாமல் கூப்பிட்டு வந்துட்டியே! படுபாவி”
“அடேய் சும்மா சொன்னேன்டா. அவ என் பாப்பா. எனக்கு தங்கச்சி மாதிரி. அவங்க வீட்ல யாரும் என்கிட்ட பேச மாட்டாங்க. எங்க அத்தை பார்த்தால் சிரிக்கும் அவ்வளவுதான். செம்பா மட்டும்தான் மாமா மாமான்னு சுத்தி சுத்தி வருவாள். அதனால் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
அப்போதுதான் போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது சமருக்கு.
“சரி சமர் நீ வீட்ல இரு, அப்பா தோட்டத்துக்கு உரம் வாங்க போக சொன்னாங்க. நான் போய்ட்டு வரேன்.”
“நானும் வர்றேன், இங்கே தனியாத்தானே இருக்கேன்.”
“அந்த வீட்ல வந்து என்கூட தங்குன்னு சொன்னாலும் கேட்கமாட்ற, எனக்கு இங்கே இருக்கத்தான் பிடிச்சிருக்கு, இயற்கையை ரசிக்கதான் பிடிச்சிருக்குன்னு, பினாத்திட்டு இங்கே இருக்க உன்னை என்ன பண்றதோ தெரியலை” என பாலா சமரை
முறைக்க…
“அதைபற்றி அப்புறம் பேசலாமா? இப்போ கிளம்புவோமா”
“மனுஷனை பேச விடமாட்டான்” என பாலா புலம்ப, கிளம்பினர் இருவரும்.