❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️
நிலவு 16
தன்னவனிடம் விடைபெற்று வீட்டிற்கு சென்று சுடிதாருக்கு மாறினாள் அதியா.
அவள் இதுவரை ஸ்கர்ட் அண்ட் ப்ளவுஸ் அணிந்ததே இல்லை. சுடிதார் வேலைக்கும் ஏற்றதாய் இருக்க அதுவே அவளது வழக்கமான ஆடையாகியிருந்தது.
புதிதாக ஒரு நாள் கடைக்கு சென்ற போது ப்ளூவும் பிங்க்கும் கலந்த ஸ்கர்ட் அண்ட் ப்ளவுஸ் கண்ணை ஈர்க்கவும் வாங்கி வந்தாளே தவிர அணியவில்லை. இன்று வர்ஷனுக்குத் தான் யார் என்று தெரியக்கூடாது என்பதற்காக அணிந்து கொண்டு போனாள்.
நேரே சென்று சுவரில் மாட்டப்பட்டிருந்த தந்தையின் புகைப்படத்துக்கு முன்னால் நின்றாள் அவள்.
“அப்பா…!! எனக்கு சின்ன வயசு இருக்கும் போதே நான் மட்டும் உங்களோட தனியா இருக்கும் நேரங்களில் அப்பாம்மா இல்லாத ஒரு பையன் தனியா ஆசிரமத்தில் வளர்ரதா தினமும் கதை சொல்லுவீங்க. அந்தப் பையன் பாவமேனு நான் அழுது கூட இருக்கேன். அது யாருன்னு அப்போ தெரியலப்பா! ஆனால் அது என் உதய்னு இப்போ தெரிஞ்சுகிட்டேன்.
அப்படி ஒருத்தன் என் வாழ்க்கையில வந்தால் என்ன பண்ணுவ என்று கேட்டப்போ அவனுக்கு எல்லாமாய் இருப்பேன், அப்பாம்மா மாதிரி அவனை சந்தோஷமா வச்சுப்பேன்னு சொன்னேன். அதே மாதிரி உதயா என் லைஃப்ல வந்துட்டான். உங்க கிட்ட சொன்ன மாதிரி அவனை நான் சந்தோஷமா பார்த்துப்பேன்.
எவ்வளவு வளர்ந்தாலும் மனசளவில் அவன் ஒரு குழந்தை. உறவுகளுக்காக ஏங்குறவன்! தாய் அன்பிற்காக தவிக்கிறவன். அவனை நான் மனசார ஏத்துக்கிட்டேன். எங்களுக்கு உங்க ஆசீர்வாதம் எப்போவும் வேணும்” என்று வேண்டிக் கொண்டாள் அதி.
உதய்யின் சிறு வயது ஃபோட்டோவை ராகவன் யாரிடமும் காட்டக் கூடாது என்று பத்து வருடங்களுக்கு கொடுத்திருந்தார். அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தவள் அவனைக் கோயிலில் கண்ட போது அது உதய் என்று அறிந்து கொண்டாள்.
நேரம் பதினொன்றைக் கடக்க ஷாலுவை அழைத்து வர ஆட்டோவில் அவளது பள்ளிக்குச் சென்றாள். “அத்து” என்று சந்தோஷமாக ஓடி வந்தாள் ஷாலு.
“பாப்பு மா! இப்படி ஓடி வரக்கூடாது டா” அவள் தலையைத் தடவி விட்டாள் அத்தை.
“இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்போட் மீட் வருதுனு டீச்சர் சொன்னாங்க. ஷாலுவுக்கு ஹேப்பி” கைகொட்டிச் சிரித்தாள் அவள்.
“கியூட்டி” என்ற அழைப்பில் இருவரும் நிமிர பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு வந்து கொண்டிருந்தான் உதயவர்ஷன்.
“அய் வர்ஷு அங்கிள்” என அதியின் கையை விடுவித்துக் கொண்டு ஷாலு அவனை நோக்கி ஓடிச் செல்ல, அவளைத் தூக்கி சுற்றினான் அவன்.
அதி தனக்கு கிடைக்காவிட்டால் ஷாலுவோடு நெருக்கமாகப் பழக முடியாது என்று சற்று விலகியே பழகியவனுக்கு அதி கிடைத்து விட்டாள். இனிமேல் ஷாலுவும் அவனோடு தான் இருப்பான் என நினைக்கும் போது மனம் குத்தாட்டம் போட அவளது கன்னத்தில் மாறி மாறி முத்தமழை பொழிந்தான் அந்த பாசக்காரன்.
அவனது மனதை அறிந்த அதியோ கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டி இருவரையும் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வைக்கு இருவருமே குழந்தையாகத் தான் தெரிந்தார்கள்.
“வர்ஷு…! நீங்க ரொம்ப ஹேப்பியா இருக்கீங்களா? அன்னிக்கு சொன்ன மாதிரி வராம இருக்காமல் தினமும் என்னைப் பார்க்க வருவீங்கள்ள? அத்துவை அழ வைக்க மாட்டீங்கல்ல?” என்று ஏக்கத்துடன் கேட்டாள் சிறுமி.
“யெஸ் பாப்பா! இனிமேல் அங்கிள் உங்க கூடவே தான் இருப்பேன். உன் அத்துவை அழ வைக்க மாட்டேன். அத்துவோட அன்பான மிரட்டல்! உன்னோட அழகான சிரிப்பு! வர்ஷுவோட கியூட்டி, பெண்டா பேபிங்குற அழைப்பு மூன்றும் ஒன்னா ஒரே வீட்டில் கேட்கும்” என்று கூறும் போதே அவனது உணர்ச்சிகள் கொந்தளித்தன.
“ஷாலு ஹேப்பி!அப்படினா அத்துவும் ஹேப்பி”
“நீங்க ரெண்டு பேரும் ஹேப்பினா வர்ஷுவுக்கு ஹாப்பியோ ஹேப்பி” என்று சொல்ல வர்ஷனின் கழுத்தை இறுகக் கட்டி அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் ஷாலு.
“அப்போ இந்த ஹேப்பியோட ஒரு பைக் ரைட் போகலாமா?” என்று அவன் அழைக்க,
“பைக்கா? உங்க கிட்ட பைக் இருக்கா வர்ஷு?” என்று துள்ளிக் குதித்தாள் குட்டிச் சிறுமி.
“இருக்கே! போகலாம் வரியா?” எனக் கேட்க, “போகலாம் அங்கிள். நான் இதுவரை பைக்ல போனதே இல்லே. என் ஃபிரண்ட்ஸ் அவங்க அப்பா கூட ஜாலியா ஹேப்பியா பைக்ல போகும்போது எனக்கும் ஆசையா இருக்கும். இப்போ என் ஆசை நடக்கப் போகுது” கன்னத்தில் குழி விழச் சிரித்தாள் ஷாலு.
அவளது கன்னக் குழியில் விரல் வைத்துச் சுழற்றி “கியூட்டி! உன் ஆசைகளை லிஸ்ட் போட்டு சொல்லு. எல்லாத்தையும் ஒவ்வொன்னா நிறைவேத்திடலாம்” என்று விட்டு, “உன் அத்து வரங்களானு கேளு டா” என்று தன்னவள் முகம் பார்த்தான் ஆடவன்.
“நான் வரலன்னு சொல்லு பாப்பா” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மங்கை.
“நான் லவ்வை ஏத்திக்கிட்டா ஜோடி போட்டு ஜாலி பண்ண வருவேன்னு யாரோ சொன்னாங்க. இப்போ என்னவாம்?” குறும்புடன் கேட்டான் உதய்.
“அதெல்லாம் ஒரு எமோஷன்ல சொன்னது. அப்படி எல்லாம் வர முடியாதுன்னு சொல்லு ஷாலு” அண்ணன் மகளிடம் சொன்னாள் அவள்.
“நீயே சொல்லு செல்லக் குட்டி! சொன்ன சொல் மாறக்கூடாதுல்ல?” என்று சின்னவளிடம் நியாயம் கேட்டான்.
“ஆமா ஆமா. நாம ஒருத்தர்கிட்ட ஒன்னு சொன்னா அதைக் கண்டிப்பா செய்யணும். வாக்கு மீறக் கூடாதுன்னு டீச்சர் சொல்லி இருக்காங்க. நீ குட் கேர்ள் தானே அத்து.எங்க கூட வரலாமே” கெஞ்சிக் கூத்தாடினாள் ஷாலு.
“நீ இவ்வளவு சொல்லுறதால வரேன்” என்று சொன்னவளைப் பார்த்து, “உன் பொய்க் கோபம் கூட என் இதயத்தில் பனிமலை பொழியச் செய்கிறதே செல்ல நிலவே” என்று கவி பாடினான் அவன்.
பல மாதங்களுக்குப் பிறகு தனக்காக கவி சொல்பவனை அந்த நொடி அழகான இதழ் விரியலுடன் ஏறிட்டாள் அவனது இதய தேவி.
வர்ஷன் ஷாலுவை முன்னால் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டு அவளுக்குக் கைநீட்டி “வரவேற்கிறேன் தேவி” என்று பணிவுடன் சிரம் சாய்க்க, “ரொம்பத்தான் பண்ணுற கிறுக்கா” என்று சிலுப்பிக் கொண்டாலும் அவனது கையைப் பிடித்துப் பின்னால் ஏறி அமர்ந்தாள் அதியா.
“பயமா இருந்தால் என்னைப் பிடிச்சுக்கலாம்” என்று அவன் அக்கறையுடன் கூற, “நான் அண்ணா கூட பைக்ல போயிருக்கேன். எந்த பயமும் இல்லை. நீ ரொம்ப சக்கரை காட்டாம வண்டியை எடு” என்று முறைத்தாள்.
“அக்கறையும் சர்க்கரையாய் மாறியதே என் பூக்கடை நிலவிடம்” அதற்கும் கவி மழை பொழிந்தான் அக்காதல் கிறுக்கன்.
உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே சிலுப்பிக்கொண்டு இருந்தாள் பெண்ணவள்.
அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய ஆனந்தக் கூச்சலிட்டாள் ஷாலு. அவள் இதுவரை பைக்கில் சென்றதே இல்லை. சிறு வயதில் ரமேஷுடன் சென்றிருக்கிறாளே தவிர அது அவளுக்குத் தெரியாது.
பள்ளி நண்பர்கள் தனது அப்பாவுடன், அண்ணாவுடன், மாமாவுடன் என்று பைக்கில் செல்வதைப் பார்க்கும் பொழுது இவள் விழிகளில் ஏக்கம் பெருகி வழியும். அவளது ஏக்கம் தவிப்பு அனைத்தும் இன்று வர்ஷனின் மூலம் விலகியது.
“வர்ஷூ ஜாலியா இருக்கு. காத்து வந்து முகத்தில் படும்போது சூப்பரா இருக்கு. ஐ லவ் யூ” என்று சத்தம் போட்டாள் அவள்.
அவளது மகிழ்வைக் கண்டு குறுநகையை வழங்கினான் உதய். யாருமில்லாமல் தன்னந்தனியாய் சென்றது இந்த வண்டி மட்டுமல்ல அவனது வாழ்வும் கூடவே! இன்று அவனுக்கென ஒரு குட்டி உலகம். அவனுக்கு அன்பு காட்ட ஒருத்தியாய் அதிய நிலா. அவனது அன்பில் உருகிப் போகக் கூடிய ஒருத்தியாய் ஷாலு. இந்த நொடி உலகையே வென்றதாய்த் தான் உணரலானான் காளை.
அவனோடு ஒன்றாக பைக்கில் செல்வதே, அதியாவுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவனது அருகாமை, கள்ளமாய் மேனி தீண்டும் காற்று, அவளவனின் பிரத்தியேக வாசம் அவள் நாசியில் உள்நுழைய பயணிப்பது இதத்தைக் கொடுத்திற்று.
வழியில் ஐஸ்கிரீம் தள்ளுவண்டி இருக்கவும் வண்டியை நிறுத்தினான் அவன். “எதுக்கு ஸ்டாப் பண்ணின? என்று கேட்டாள் அதி.
“ஐஸ்கிரீம் இருக்குல்ல. வாங்கலாம்னு நிறுத்தினேங்க” என பதிலளித்தான் உதய்.
“நீ தான் ஷாலுவைக் கெடுத்து வச்சிருக்கே. போற இடமெல்லாம் நிறுத்தி ஐஸ்கிரீம் கொடுக்கணும். சளி பிடிச்சா உனக்கு இருக்கு” என முறைத்துப் பார்த்தாள் அவள்.
“ஷாலு தினமும் அடம்பிடிக்க மாட்டா. க்யூட்டி சமத்து பாப்பா தானே?” என்று ஷாலுவின் நாடி பிடித்து கொஞ்சிய உதயிடம், “நீங்க சொன்னா ஷாலு கண்டிப்பா கேட்பா” என்று தலையை நாலாபக்கமும் உருட்டினாள்.
“அடியே அறுந்தவாலு. அப்போ நான் சொன்னா கேட்க மாட்டியா?” வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குச் சென்றது பெரிய குழந்தை.
“கேட்க மாட்டேன், கேட்க மாட்டேன், கேட்க மாட்டேன். நீ தினமும் என்னை திட்டுவ அதனால கேட்க மாட்டேன்
அப்படினு சொல்ல மாட்டேன் அத்து. நீ சொன்னாலும் கேட்பேன். ஆனால் உன் பேச்சைக் கேட்காம சேட்டை பண்ணி அடி வாங்குவதும் அப்புறம் என்னை நீயே வந்து ஹக் பண்ணுறதும் தான் ரொம்ப பிடிக்கும். உன்னையும் அங்கிளையும் எனக்கு ரொம்பப் ரொம்ப பிடிக்கும் ” தனது அத்துவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள்.
“ரொம்ப ஐஸ் வைக்காத டி” என்று அவள் தலையில் செல்லமாகத் தட்டினாள் காரிகை.
இருவரையும் நாடியில் கை குற்றிப் பார்த்திருந்த உதய்யை ஏறிட்டு, “என்ன பார்வை? ஓடிப்போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா” என்று மிரட்டினாள் அவள்.
“ஓவரா அதிகாரம் பண்ணுறீங்க ராணிமா! இருந்தாலும் இது கூட நல்லாத்தான் இருக்கு. நீங்க என்னை மிரட்டி முறைச்சு பார்க்கும்போது அழகா இருக்கீங்க” சிரிப்பினூடு சொன்னவன் இரண்டு ஐஸ்கிரீமை வாங்கி வந்து ஷாலுவுக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டு அதியிடம் மற்றையதை நீட்டினான்.
“உனக்கு வாங்கலையா?” என்று அவள் வினவ, “எனக்கு வேண்டாங்க. நீங்க சாப்பிடுங்க” என்றான்.
“இல்ல நீ வாங்கிட்டு வந்தா தான் நானும் சாப்பிடுவேன். அதுக்காக உன் மேல பாசம்னு நினைச்சுக்காத. நீ கண்ணு வச்சா எனக்கு வயிறு வலிக்கும்ல” என்று விழி விரித்தவளைக் கண்டு புன்னகையைச் சிந்தி இன்னொன்றையும் வாங்கி வந்தான்.
“பட், இப்பவும் நான் உங்க மேல கண்ணு வைக்கத்தான் போறேன் பெண்டா பேபி! இப்போ மட்டுமல்ல எப்போவும் கண்ணு வைப்பேன். என் கண்ணு உங்க முகத்தில மட்டும் தான் ஆடாமல் அசையாமல் நின்னுட்டு இருக்கும். அதுக்காக வயிறு வலி வந்தால் என்னை பொறுப்பாளியாக்கிடாதீங்க” என்று குறும்புடன் கூறினான் அவன்.
“எனக்கு வயிறு வலிக்கிறது இருக்கட்டும். உனக்கு கண்ணு வலி வராமல் இருந்தால் சரி. இல்லன்னா பேசிப் பேசி இருக்கிறதால வாய் வலிச்சுரும்” என்று கிண்டலடித்தாள் அவள்.
“வாய் வலித்தாலும் பரவாயில்லை இதயா! என் மனசுல இருந்த தீராத வலி போயிருச்சு. உங்க கூட தான் நான் இவ்ளோ பேசுறேன்.
முன்ன ராவ் அங்கிள் கூட பேசுவேன். அவர் நிலா பத்தி சொல்லுறதைக் கேட்டுட்டு இருப்பேன். அவர் என்னை விட்டு போனதுக்கு அப்புறம் ரெண்டு வருஷமா யார் கூடவுமே அவ்வளவா பேசமாட்டேன்.
ஹாஸ்பிடல் போவேன். அங்கிருக்கிற டாக்டர்ஸ்ஸை புன்னகையோட ஒரு தலையசைப்போட கடந்து வருவேன். ஈவ்னிங் பீச் போய் உட்கார்ந்திருப்பேன். வீக்கென்ட்ல பார்க் போய் அங்கே விளையாடுற குழந்தைகளை ரசிப்பேன்.
நான் வளர்ந்த ஆசிரமத்திற்கு போய் அங்கிருக்கிற பசங்க கூட கொஞ்சம் பேசி அவங்களுக்கு சாக்லேட்ஸ் வாங்கி கொடுப்பேன். அவ்வளவுதான் என் லைஃப்!” என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூறியவனைப் பார்த்தாள் அதியமங்கை.
நொடிப்பொழுதில் அவன் முகத்தில் மலர்ச்சி குடியேற உதடுகளும் புன்சிரிப்பைச் சிந்த பேசலானான்.
“என் கூட அன்பா பேச யாருமில்லையேன்னு ஒரு கவலை என் மனசுல உறுத்திட்டே இருந்துச்சு. இப்போ எனக்கு வாய மூடாம பேசுற அளவுக்கு நீங்களும், இந்த அழகான மழலைப் பேச்சையும் சிரிப்பையும் பார்த்துட்டே இருக்கலாம்னு சொல்லு அளவுக்கு கியூட்டியும் கிடைச்சு இருக்கீங்க! எனக்கு இந்த சந்தோஷம் போதுங்க”
“இது போதாது. இதை விட சந்தோஷத்தை, போதும் போதும்னு திக்கு முக்காட வைக்கிற அளவுக்கு அன்பை நான் உனக்கு கொடுப்பேன்டா. உன்னை அந்தளவுக்கு பிடிச்சது. எப்போ என் அப்பா எனக்காக பல வருஷமா பார்த்து வெச்ச அவருக்குப் பிடிச்ச மாப்பிள்ளை நீனு தெரிஞ்சதோ அப்போவே உன் மேல் இருந்தால் அன்பு நூறு மடங்கு அதிகமாயிடுச்சு” அவன் மீது பாசம் ததும்பும் நயனங்களை நிலை நாட்டினாள் மலர்விழியாள்.
அழகான தலையசைப்புடன் அவளைப் பார்த்தவன் அதியையும் ஷாலுவையும் வீட்டில் இறக்கி விட்டு ஹாஸ்பிடல் சென்றான்.
காலைக் கதிரவன் யன்னல் திரைச்சீலைகளைத் தாண்டி அறையை எட்டிப் பார்க்க, சோம்பல் முறித்தவாறு எழுந்தமர்ந்தாள் அதியநிலா. அவள் மனதில் மந்தகாசப் புன்னகையுடன் வந்து நின்றான் அவளின் கண்ணாளன்.
“உன் பேச்சு, கவிதை, சிரிப்பு ,அழகு, அன்பு அத்தனையும் எனக்கு உருக வெச்சிரும். இந்த அதியாவை ஒரு பார்வையாலேயே மயக்குற டா மாயக்காரா” என்று தன்னவனைக் கொஞ்சித் தீர்த்து விட்டு எழுந்து சென்றாள்.
கிட்சனில் இருக்கும் போது, “அத்து காபி” என்று கலைந்து கிடந்த முடி முகத்தில் கோலம் போட அவளை எட்டிப் பார்த்தாள் ஷாலு.
“காஃபி கேட்டா வாயிலே ஒன்னு போட்றுவேன். வா முதல்ல ப்ரஷ் பண்ணிட்டு வரலாம்” என்று அவளைக் குளியலறைக்குள் அழைத்துச் சென்று, குளிப்பாட்டி பூந்துவாலையை இடுப்பில் சுற்றி சோபாவில் வைத்தாள்.
“நிஜமாவே வர்ஷு அங்கிள் இனிமேல் நம்ம கூட இருப்பாரா அத்து?” தனக்கு கவுனை அணிவிக்கும் அத்தையிடம் கேட்டாள் ஷாலு பாப்பா.
அவளைத் தூக்கி மடியில் இருத்திக் கொண்டு “எஸ் பாப்பா! வர்ஷு இன்னும் கொஞ்ச நாள்ல உன் கூடவே இருப்பார்” என்றாள் அவள்.
“ஏன் இன்னும் கொஞ்ச நாள்லனு சொல்லுறே? இப்போவே வர சொல்லலாமே?” கொஞ்சலுடன் ஷாலு.
“அப்படிலாம் முடியாது டா. அதுக்கு சில விஷயங்கள் நடக்கனும்” மென்மையாக சொன்னாள் அதியா.
“என்ன நடக்கணும்? சொல்லு அத்துக் குட்டி” கேள்வியாய் அவளைப் பார்த்தாள் அண்ணன் மகள்.
“எனக்கும் உன் வர்ஷுவுக்கும் கல்யாணம் நடக்கணும் பாப்பு மா. அப்போதான் வர்ஷ் நம்மளோட இருப்பார்” என்று கூறும் போது அவள் முகம் நாணத்தில் செக்கச் சிவந்தது.
“கல்யாணம்னா என்ன? எங்க ஸ்கூல் ப்ரியாவோட அப்பாவும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டதா அவ சொல்லுவா. அதுவா?” என்று தோண்டித் துருவியது சிட்டு.
“அது தான். ஏய் சில்வண்டு பெரிய மனசு மாதிரி பேசாத. அப்பறம் நீ இதையெல்லாம் வர்ஷு கிட்ட சொல்லக்கூடாது. ஓகேவா?”
“ஏன் சொல்லக் கூடாது? சொன்னா அவரும் ஹேப்பி ஆயிடுவாருல்ல. நான் சொல்லட்டுமா அத்து” கெஞ்சலுடன் முகம் சுருக்கிக் கேட்டாள்.
“என் கன்னுக் குட்டில்ல! சொல்லிறாத தங்கம்” என்று தன் கன்னத்தைப் பிடித்து ஆட்டியவளிடம்,
“நான் சொல்லல! நீயே சொல்லிட்டியே அத்துக் குட்டி. ஹாஹா” என்று கிளுக்கிச் சிரித்தவளைப் புரியாது நோக்கிய அதி வாயில் பக்கம் திரும்பினாள்.
வாயில் கதவில் ஒற்றைக் காலை மடக்கி அவளைக் குறும்புப் புன்னகையுடன் பார்த்து, “சச் அ ஸ்வீட் மார்னிங் மை பெண்டா பேபி” என்று இரு விரலால் சல்யூட் வைத்தான் காதல் வர்ஷன்…!!
நிலவு தோன்றும்….!!🌛
✒️ ஷம்லா பஸ்லி🤍