16. சிந்தையுள் சிதையும் தேனே..!

4.8
(12)

தேன் – 16

கருணாகரனின் கண்கள் சில நிமிடம் அந்த ஆடை துண்டை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஏதோ ஞாபகத்துக்கு வர உடனே நிமிர்ந்து கமிஷனரை பார்த்து,

“இது எங்கிருந்து கிடைத்தது..?” என்று ஒருவித பதற்றத்துடன் கேட்க,

“கருணா உன்கிட்ட சொல்லனும்னு தான் இருந்தேன் ஆனா இது.. இது… வந்து…. அந்தக் காருக்குள்ள இருந்த பாடில கிடைச்சது..” என்று தடுமாற்றத்துடன் கூற,

கருணாகரன் ரௌத்திரத்திரம் பொங்க உரத்த குரலில்,

“என்னது பாடில கிடைச்சதா ஏன்டா என்கிட்ட ஏற்கனவே நீ இத சொல்லல.. ஏன்டா சொல்லல.. ஏன் சொல்லல… இது.. இ..து.. அவளோட அவளோட டிரஸ் மாதிரித் தான்..” என்று முதலில் கோபத்துடன் வந்த வார்த்தைகள் பின்பு துன்பத்தில் மூழ்கி அழுகையுடன் விம்மி விம்மி வெளிப்பட்டது.

கார்த்திகேயனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது உடனே கருணாகரனைப் பார்த்து,

“எப்படி சார் கன்ஃபார்மா சொல்றீங்க..?” என்று வினவ,

அழுதபடியே அவரது தொலைபேசியில் இருந்து புகைப்படம் ஒன்றை எடுத்து கமிஷனருக்கும், கார்த்திகேயனுக்கும் காட்டியவரது கண்களில் நேற்று நடந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.

பார்ட்டிக்கு செல்வதற்காக நிவேதா வேகமாக புறப்பட்டு கொண்டு மாடிப்படிகளில் இருந்து இறங்கி கீழே வர கருணாகரன் நிவேதாவைப் பார்த்து புன்முறுவலுடன் கடந்து சென்றார்.

அவரது புன்னகையை கவனித்த நிவேதா,

“அப்பா இங்க வாங்க ஒரு செல்பி எடுப்போமா..?” என்றாள்.

“இப்போ செல்பி எடுக்குறதுக்குத்தான் எனக்கு நேரமில்லாம இருக்கு நீ இன்னும் பார்ட்டிக்கு போகலையா உங்க அம்மா உன்னை பார்த்தான்னா மந்திரம் ஓதிக்கிட்டே இருப்பா அவ பாக்குறதுக்கு முன்னுக்கு போ ஓடிப் போயிரு..”

“அவங்கள விடுங்கப்பா வாங்க இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு..?” என்று அவள் அணிந்திருந்த ஆடையைக் காட்டிக் கருணாகரனிடம் கேட்க, மேலிருந்து கீழ் வரை பார்த்த அவரது விழிகள் இரசனையை தத்தெடுத்துக் கொண்டன.

“என்னப்பா அப்படி பார்க்குறீங்க சொல்லுங்க இந்த ப்ளூ கலர் சேர்ட்டும் வைட் கலர் ஜீன்ஸும் எப்படி இருக்கு .?”

“உனக்கென்னமா நீ எப்பவுமே எனக்கு பிரின்சஸ் தானே எப்பவுமே என் கண்ணுக்கு நீ தேவதை தான்..” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அந்த வழியாக எதனையோ எடுக்க வந்த காயத்ரியின் காதில் அந்த வார்த்தைகள் விழுந்துவிட்டன.

“நிவேதா இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ பார்ட்டிக்கு போகலையா..?”

“இதோ புறப்பட்டுட்டேன் அம்மா அப்பாவோட ஒரு செல்பி எடுத்துட்டு இதோ கிளம்புறேன்..”

“அப்பாவுக்கும் மகளுக்கும் வேற வேலை இல்லை எப்ப பார்த்தாலும் போட்டோ எடுக்கிறது தான் வேலை நேரம் காலம் புரியாம அவ தான் விளையாடுறான்னு பார்த்தா இவரும் அவளோட சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறாரு..” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு காயத்ரி எதனையோ தேட,

நிவேதாவோ அன்னையின் செயலைப் பொருட்படுத்தாமல் தந்தையின் புறம் திரும்பி,

“இந்த டிரஸ்ல ஒரு ஸ்பெஷல் இருக்கு என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்..” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

மீண்டும் மேலிருந்து கீழ் வரை கண்களால் ஆராய்ந்த கருணாகரனுக்கு எதுவுமே புலப்படவில்லை. தன் தோல்வியை ஒத்துக்கொண்ட கருணாகரன்,

“என்னம்மா எனக்கு எதுவும் தெரியலையே யூசுவலா போடுற ட்ரஸ் மாதிரி தானே இருக்கு..”

“இங்க பாருங்கப்பா இந்தக் காலர்ல கேன்னு (k) லெட்டர் பிரிண்ட் பண்ணி இருக்காங்க பாத்தீங்களா..?”

“ஆமாம்மா..”

“கேன்னா என்ன அர்த்தம் தெரியுமா மை லவ்லி கிரேட்டஸ்ட் டாட் கருணாகரன்..”

“அச்சோ என் அழகு பொண்ணு அப்பா மேல எம்புட்டு பாசம்..” என்று அவர் கட்டியணைத்து அவளது கன்னத்தில் முத்தம் பதிக்க,

அதனைப் பார்த்து இரசித்த காயத்திரிக்கு கண்களில் நீர் பூத்தது. நாளை திருமணமாகி இன்னொருவனுக்கு சொந்தமாகப் போகும் மகள் தங்கள் மீது வைத்துள்ள அன்பையும், இன்னும் சிறுபிள்ளைத்தனம் மாறாத அவளது பேச்சையும் கண்டு தாயின் மனம் அன்பில் இளகியது.

துளிர்த்த கண்ணீரை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டவர்,

“ஏன்டி நிவேதா கேன்னா காயத்ரின்னு வராதா இங்கே உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தவ பார்த்துகிட்டு இருக்காளே அதெல்லாம் இல்ல போடி போ அம்மானு ஒரு நாள் என்னைத் தேடி வருவா தானே அப்போ பார்த்துக்கிறேன்..” என்று மல்லுக்கு நிற்க,

“இல்லையே நான் வரமாட்டேனே நான் எப்போதும் அப்பா செல்லம் தான்..” என்று கூறிவிட்டு கருணாகரனைக் கட்டி அணைத்துக் கொண்டவள், தொலைபேசியை எடுத்து,

“அப்பா வாங்க நாங்க செல்பி எடுப்போம்..” என்று இருவரும் புகைப்படம் எடுக்க,

கருணாகரன் நிவேதாவிடம் கண்களால் காயத்ரியையும் அழைக்கும்படி கூற நிவேதா குறும்பாய் கண்ணடித்து விட்டு கருணாகரனை அழைத்துக் கொண்டு காயத்ரியின் அருகில் போய் நின்று அவர் சுதாரிக்கும் முன் புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.

“ஏய் அதுதான் நான் உங்க ரெண்டு பேருக்கும் தேவையில்லையே பிறகு ஏன் போட்டோ எடுத்தீங்க..” என்று கோபத்துடன் காயத்ரி திரும்ப,

“என்னம்மா சும்மா இதுக்கு போய் கோபித்துக் கொள்றீங்களே..! கடைசியா போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன் அதுக்கு போய்..” என்று நிவேதா சலித்துக் கொள்ள,

கருணாகரனும், காயத்ரியும் ஒன்று சேர அதிர்ச்சியுடன்,

“என்ன நிவேதா இது நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்படி எல்லாம் அபத்தமா பேசுற கடைசி என்ற வார்த்தை எப்பவுமே உன்னோட வாயிலிருந்து வரக்கூடாது வாயில போடு..” என்று கூறியதும்,

மழங்க மழங்க முளித்தவள், அடிக்காவிட்டால் இவர்கள் இரண்டு பேருமே சேர்ந்து அடித்து துவைத்து விடுவார்கள் என்று பயந்தவள் உடனே வாயில் அடித்துக் கொண்டாள்.

“என்னம்மா என்னப்பா இதுல என்ன தப்பு இருக்கு இன்னைக்கு நான் மிஸ் கருணாகரன் நிவேதா நாளைக்கு நான் நிவேதா மிஸஸ் கார்த்திகேயன் அப்போ நாளைக்கு நான் மிஸஸ் ஆனா மிஸ்சா இருக்கிற இந்த போட்டோ எப்பவுமே ஞாபகமா இருக்கும் அதுக்காகத்தான் செல்பி எடுத்தேன் அதைத்தான் இப்படி சொன்னேன் இதில என்ன தப்பு இருக்கு..” என்று கூறியதும் மீண்டும் ஒரு அழகான புன்னகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் அங்கு அவரது தொலைபேசியில் சேமிக்கப்பட்டது.

அந்த நிகழ்வு அவரது மனதில் மீண்டும் மீண்டும் வந்து ஞாபகமூட்ட அந்த காலரை கையில் எடுத்து திருப்பிப் பார்க்க அதில் கே என்ற பெயர் பதித்த முத்திரை அழகாக பதிக்கப்பட்டிருந்தது.

“கார்த்தி இத பாருப்பா கடைசியா என்கிட்ட பேசிட்டு போகும்போது இந்த லெட்டரை காட்டி கேன்னா கருணாகரன் என்று கட்டியணைத்து சொல்லிட்டு தான் போனாப்பா இது அவளோடது தான்..” என்று கூறியவர், தூக்கம் தொண்டையை அடைக்க கண்கள் சொருக கார்த்தி மீது சரிந்தார்.

கார்த்திகேயன் உடனே கருணாகரனைத் தாங்கிப் பிடித்து,

“சார் நாம கிளம்புவோம் இனிமே இங்க இருக்க வேணாம்..” என்று கருணாகரனின் நிலை கண்டு பரிதாபத்துடன் கூறினான் கார்த்திகேயன்.

கார்த்திகேயனை நிமிர்ந்து பார்த்து மறுப்பாக தலை அசைத்த கருணாகரன்,

“நா..நா..நான் அந்த நிவே… இ..ல்..ல்ல அந்த பாடிய பாக்கணும் கார்த்திகேயன் ப்ளீஸ் என்னை கூட்டிப் போ..” என்று நான் தழுதழுக்கக் கெஞ்சினார். கமிஷனரோ கருணாகரனின் நிலையறிந்து,

“இல்ல கருணா நீ அத பார்க்கத் தேவையில்லை இந்த ஆதாரமே இப்போதைக்கு போதும் நீ ரொம்ப வீக்கா இருக்க இந்த நிலைமைல நீ அதைப் பார்க்க வேணாம் கருகிய நிலையில அது ரொம்ப மோசமா இருக்கு..” என்று கடுமையாக மறுத்துவிட்டார்.

“இல்லடா நான் பார்க்கணும் ப்ளீஸ் ஒரு தடவை ஒரே ஒரு தடவை எனக்காக ப்ளீஸ் டா..” என்று கருணாகரன் கெஞ்ச அதற்கு மேல் கமிஷனரால் மறுக்க முடியவில்லை. உடனே அருகில் இருந்த ஆம்புலன்ஸின் கதவைத் திறந்து சடலத்தைக் காட்டினார்.

கருணாகரன் அந்த உடலைப் பார்த்ததும் இப்பொழுதே நிலம் வெடித்து நான் நிலத்துக்குள்ளேயே விழுந்து சாகக்கூடாது என்றெல்லாம் தோன்றியது. இப்படி ஒரு நிலை எந்த தகப்பனுக்கும் வரக்கூடாது. சில வருடங்களுக்கு முன் தான் கையில் சிறு மழலையாக ஏந்தியது போல் இருந்தது. இன்று கண்கள் முன்னே கருகிப் போய் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கிடப்பதை பார்க்க எந்த தகப்பனால்தான் தாங்கிக் கொள்ள முடியும்.

அவரது கண்கள் கண்ணீரில் நனைந்து சோர்ந்து போயின இனி கண்களில் இருந்து வழிந்து ஓடக் கண்ணீரே இல்லாமல் கண்கள் தனது அளவில்லாத் துன்பத்தை வெளிக்காட்ட கண்ணீருக்கு ஏங்கின.

தனது வயதையும் மீறி அவரது அழுகை பார்க்கும் அனைவரையும் இரக்கம் கொள்ளச் செய்தது.

சமூகத்தில் ஒரு தொழிலதிபராக திகழ்ந்தவர் இன்று தோல்வியுற்ற தந்தையாக, மகளை இழந்த தகப்பனாக அனைத்தையும் மறந்து அழுது பொழிந்தார்.

அவரது எண்ணங்கள் எல்லாம் அலைமோதி மனமோ இயலாமையுடன் கதறி அழுதது.

அடுத்து சிந்தனையோடு காயத்ரியின் பக்கம் திரும்ப இதனை எவ்வாறு காயத்ரியிடம் சொல்லி புரிய வைப்பது  என்னாலேயே இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லையே..!

அவள் எவ்வாறு இந்த நிலைமையில் இந்த விடயத்தை ஏற்றுக் கொள்வாள் என்று புரியாமல் மனம் கசந்து அழுதார்.

இதைக் கூறினால் காயத்ரியின் நிலை என்னவாகும் என்று எண்ணியவர் விபரீத எண்ணங்கள் கண் முன்னே தோன்ற அப்படியே சரிந்து விழுந்தார்.

அடுத்த அத்தியாயத்தில் கட்டாயமாக ஒரு ட்விஸ்ட் உங்களுக்காக காத்திருக்கின்றது என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!