🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 17
“இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டம் இல்லை. இப்போவே சொல்லி நிறுத்திடலாம்னு முடிவெடுத்துட்டேன்”
சாதாரண பேச்சு தான். ஆனால் அவை கூர்நெடும் வாளாக மாறி மெல்லியவளின் இதயத்தைக் குத்திக் கிழித்து கூறு போட்டன.
“நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சாச்சு. இன்னும் டூ வீக்ஸ்ல கல்யாணம் நிதின்” அடிக்குரலில் சீறினாள் ஆலியா.
“அது வரைக்கும் வெயிட் பண்ணிட்டு என்னால மறுப்பு சொல்ல முடியாது. அதான் இப்போவே என் முடிவை சொல்ல போறேன்” பார்வையை எங்கெங்கோ சிதற விட்டவனுக்கு அவளைப் பார்க்கும் தைரியம் இல்லை தான்.
“நீ வேணாம்னு சொல்லுறதுக்கான காரணம் என்னனு சொல்லு. நியாயமா இருந்தா நானே நம்ம ஃபேமிலி கிட்ட பேசுறேன்” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டாள்.
“காரணம் சொல்ல முடியாது. ஆனால் இந்த கல்யாணம் நடக்க கூடாது”
“உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருச்சா? நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன். ஒரு மார்க்கமா தான் சுத்துற. நம்ம கல்யாணம் பற்றி என்னை விட கனவு கண்டவன் நீ. இப்போ ஏன் கல்யாணம் வேணாங்குற?”
“வேணாம் ஆலியா. என்னை விட்று. நான் உன் கூட இருந்தா உன்னால சந்தோஷமா இருக்க முடியாது. என்னை விட்டு போய் நல்லா இரு” அவன் குரல் கவலை சுமந்து வெளிவந்தது.
“சந்தோஷம்? நீ இல்லாம? நான் இல்லனா நீ சந்தோஷமா இருப்ப. அதனால உனக்கு என்னை விடனும். அந்த காரணத்தை எனக்கு சந்தோஷத்தை தரனும்னு மாத்தியடிச்சு பேசுற. கரக்டா?” புருவம் உயர்த்திப் பார்த்தாள்.
“ச்சே! நான் அப்படி சொல்லுவேனா? நீ இல்லாம எனக்கு சந்தோஷம் இருக்குமா?” எனக் கேட்டவன் அத்தோடு மௌனமானான்.
இதனைத் தானே அவளுக்கும் கூறினோம்?! அவளுக்கு மட்டும் தான் இல்லாமல் சந்தோஷம் இருக்குமா? என்று மனம் கேட்ட வினாவுக்கு பதில் கூறிடத் தான் அவனால் முடியாது போயிற்று.
அவனருகில் நெருங்கி வந்து “நித்தி! உனக்கு என்ன தான் ஆச்சு? ஏன் இப்படி பண்ணுற? ஏன் என்னை விட்டு போகனும்னே நினைக்கிற” கெஞ்சுதலோடு கேட்டாள் ஆலியா.
அக்குரலில் அவள் பாதங்களில் சரணடையத் தோன்றிற்று அவனுக்கு.
அவள் கைகள் இரண்டையும் பிடித்து “ஆலி! நான் ஒரு இக்கட்டில் மாட்டிக்கிட்டு இருக்கேன். நான் இனி இந்த வயல்ல, வீட்டுல எல்லாம் இருப்பேனானு தெரியல” கண்களை மூடித் திறக்கும் போது,
“ஹலோ மிஸ்டர் நிதின்” எனும் அழைப்புடன் வந்து நின்றார் இன்ஸ்பெக்டர்.
ஆலியா அதிர்ந்து நிற்கும் முன்னே அவரோடு வந்த ருத்ரனைப் பார்த்து இன்னும் அதிர்ச்சியானது.
“மாமா! போலீஸ் எதுக்கு நிதினை தேடி?” காரணம் அறியா பேதை நெஞ்சம் பதைபதைத்தது.
“உங்க ஃபியான்சி ஒருத்தரை அடிச்சி போட்டிருக்கார். அவருக்கு எதிரா வாக்குமூலம் கொடுக்கப்பட்டிருக்கு. சோ அவரை அர்ரஸ்ட் பண்ண வந்திருக்கேன்” இன்ஸ்பெக்டரின் கூற்றில் சடாரென திரும்பியவளின் பார்வை அவனைத் தாக்கியது.
“இல்ல சார்! நிதின் மேல தப்பு இருக்காது. அவன் அப்படிப்பட்டவன் கிடையாது” நடுங்கும் கரங்களை ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டவளுக்கு நடுக்கத்தைக் கட்டுப்படுத்துவதே பெரும் சிரமமாக இருந்தது.
“ஆலியா ஒன்னும் பேசாத. நான் அடிச்சேன். இப்போ அதுக்கான தண்டனையை அனுபவிச்சு தான் ஆகனும்” தலையைக் குனித்துக் கொண்டான் நிதின்.
அவனது பங்காளி ஒருவன் வைக்கோல் போரில் தீ மூட்டி நெல்மூட்டைகளை சிதைத்து விட முயற்சிக்க, கோபம் எல்லை மீறிய நிதின் அவனை நையப்புடைத்து விட்டான். இதனை போலிஸில் சென்று தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக வாக்குமூலம் கொடுக்கவே இதையறிந்த நிதின் ஓய்ந்து போனான்.
எப்படி இவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை. அவனது செயல் நெல்மூட்டைகளை கொளுத்தி தனக்கு சேதாரம் விளைவித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அத்தீ குடோனில் இருந்த சிறுவனின் காலையும் இரையாக்கியதில் கோபம் எல்லை மீறி விட்டது.
என்ன இருந்தாலும் தான் செய்தது தவறு என எண்ணியவனுக்கு யாரிடமும் சொல்லவும் தோன்றவில்லை. சிறை, போலீஸ், நீதி மன்றம் இவையனைத்தும் வேப்பங்காயாய் கசந்தன. எப்படியும் தன்னை வழக்கு அது இதென்று அழைப்பர். இந்த குற்றவாளி பட்டத்தோடு ஆலியாவை திருமணம் செய்வது முடியாத காரியம் என்றே அவளை விட்டும் விலக முயற்சித்தான்.
“ஆமா ஆலியா. நிதின் அந்த பையனை அடிச்சுப் போட்டிருக்கான். ஐயா பெரிய தியாகச் செம்மல் மாதிரி அடிவாங்கியவன் பண்ணுன தப்பையெல்லாம் சொல்லிக் காட்டாம ஜெயிலுக்கு போக ரெடியாகுறார். களி தின்ன அவ்ளோ ஆசை” ஆலியாவிடம் சொன்னாலும் ருத்ரனின் பார்வை என்னவோ நண்பனின் மீதிருந்தது.
“ருத்ரா” நண்பனிடம் மறைத்து விட்ட குற்றவுணர்வில் அழைக்க, “பேசாதடா எரும! வர்ர கோவத்துக்கு ஏதாவது ஏடாகூடமா பேசிட போறேன்” பல்லிடையில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் ஆடவன்.
“ருத்ரா தம்பி கிட்ட நான் விஷயத்தை சொல்லவும் அவர் அந்த பையன் வீட்டுல போய் பேசிருக்கார். அவங்களுக்கும் கோர்ட்டு கேஸ்னு அலைய விருப்பம் இல்லை. அதோட கேஸை வாபஸ் வாங்கிட்டாங்க. இனி எந்த ப்ராப்ளமும் இல்லை நிதின். ஸ்டேஷன் வந்து ஒரு கையெழுத்து போட்டுட்டு போ” எனக் கூறி விடைபெற்றார் இன்ஸ்பெக்டர்.
ருத்ரனை நன்றிப்பெருக்கோடு நோக்கினான் நிதின். தான் கூறாமலே தன்னை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவித்தவனின் அன்பில் உருகிப் போனான்.
“தாங்க்யூடா” என்று நிதின் சொல்ல வாயெடுக்க, “ஆலியா! இங்கே இருந்தா நான் இவனை அடிச்சுத் துவைச்சிட்டு ஜெயிலுக்கு போயிருவேனோனு பயமா இருக்கு. நான் போறேன். நீ என் பங்குக்கும் சேர்த்து கொடுத்துரு” தலையசைப்புடன் நகர்ந்தான் ருத்.
தன்னை சளைக்காமல் முறைத்துக் கொண்டிருப்பவளை சமாதானப்படுத்தும் வழி தெரியவில்லை அவனுக்கு.
“சோ… நீ மாமியார் வீட்டுக்கு களி தின்ன போக நெனச்சு கல்யாணத்தை நிறுத்தி நான் என் மாமியார் வீட்டுக்கு போறத தடுக்க பார்த்த?” அவள் கேள்வியாகப் பார்க்க,
“ஆமா ஆலியா” தலையை மேலும் கீழுமாக ஆட்டியவனின் வாயில் பட்டென அடித்தாள் ஆலியா.
“வாயைத் திறக்காத. சரி நீ அப்படி போறதாவே இருந்தாலும் என் மேல நம்பிக்கை இல்லையா? நான் உனக்காக காத்திருப்பேன்னு தோணலயா? ருத் மாமாவை காதலிச்சிட்டு உன்னை லவ் பண்ணுன மாதிரி நீ போனதும் சட்டுனு வேற ரூட்டுக்கு தாவி இன்னொருத்தன் கூட ஜாலியா டூயட் பாடுவேன்னு நெனச்சியா?” கேட்கும் போதே அவளது குரல் உடைந்தது.
“ஏய் லூசு உன்னைப் போய் அப்படி நினைப்பேனா?” அவளது பேச்சில் கோபம் துளிர்க்கக் கேட்டான் காதலன்.
“அப்படி நினைக்கலனா எதுக்காக என்னை விட்டு போக போன?”
“நான் குற்றவாளியா நின்னா அது உனக்கும் கெட்ட பெயர்னு தான். என் பிரச்சினையில் நீயும் மாட்டிக்கிட்டு கஷ்டப்படனுமா?” தன்னைப் புரிய வைக்க முயன்றான் அவன்.
“உன் பிரச்சனையா ரைட் அதை விடு. கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு பிரச்சினை வந்தாலும் என்னை மாட்டி விடக் கூடாதுனு விட்டு போயிருவியா? நான் உன் கூட இருந்து கஷ்டத்துல தோள் கொடுப்பேன்னு நினைக்க மாட்ட. அப்போவும் என் கூட இருக்க முடியாதுனு சொல்லி டிவோஸ் கேட்பியா?” என்று கேட்டவளின் பேச்சில் அதிர்ச்சியாய் நின்றான் நிதின்.
அவனால் பேச இயலவில்லை. டிவோஸ்’ என்ற சொல்லில் ஆத்திரம் வந்தாலும் அவள் கேட்பதில் தவறில்லையே?!
“பெரிய இவன்னு நினைப்பு. எல்லாத்தையும் மறைக்கிறானாம்” கோபம் தீரவில்லை அவளுக்கு.
“ஆலி… கல்யாணம்?” அவன் இழுவையாகக் கேட்க, அவனருகே வந்து சர்ட்டை கைகளால் பிடித்து “கல்யாணம் நடக்கும். கோபமா இருந்தாலும் கஷ்டமா இருந்தாலும் உன்னைக் கட்டிக்கிட்டு உன் கிட்ட தான் இருப்பேன். திரும்ப கல்யாணம் பண்ண முடியாதுனு ஒரு வார்த்தை வந்தது ஊரைக் கூட்டி நான் உனக்கு தாலி கட்டுவேன்” கோபத்தில் என்ன சொல்வது என்றே யோசிக்காது படபட பட்டாசாய் வெடித்தாள்.
“அட சூப்பர் ஆலியா” என கத்தினான் நிதின்.
“இப்போ நான் படமா காட்டினேன்? சூப்பர் நியூஸ் பேப்பர்னு சவுண்டு விடுற”
“எனக்கு தாலி கட்டுவனு சொன்ன. அப்போ நீ வேஷ்டி கட்டுனா எப்படி இருப்பனு கற்பனை பண்ணுனேன். செமயா இருந்த போ” ரசனையுடன் சொன்னான்.
“கற்பனையில கரிய பூச! அப்படியே நான் உன்னை கடிச்சு வெக்கிற மாதிரியும் கற்பனை பண்ணிக்க” முறைப்புடன் நடந்தவளைக் கண்டவனின் விழிகளில் பழைய குறும்பு எட்டிப் பார்க்க இதழ்களும் அழகாய் விரிந்தன.
♡♡♡♡♡
“அம்மு குட்டி” தனது அழைப்புக்கு செவி சாய்க்காமல் நிற்கும் மனைவியின் அருகில் வந்து நின்றான் ருத்ரன்.
“பொம்மு குட்டி” மீண்டும் அழைக்க, “அம்மு குட்டி ஆட்டுக் குட்டினு வராதீங்க” மூக்கைச் சுருக்கிக் கொண்டவளைக் கண்டு அவனது உள்ளத்தில் ரசனை உணர்வு கூடியது.
“இப்போ ஏன் கோபம்? ஸ்கூல் போயிட்டு நல்லா தானே வந்த. உன் கடுப்புக்கு காரணம் யாரு?” நாடியில் கை வைத்துக் கேட்டான் கணவன்.
“என் ஹஸ்பண்ட் ருத்ரன் அபய்” இதழ் சுளிப்பும் அவனை ரசனைச் சுழியில் மேலும் ஆழமாய் ஆழ்த்தியது.
“அவன் நல்ல பையனாச்சே! அப்படி என்ன பண்ணுனான்?” ஆவலாய்த் தான் வினவினான் அவன்.
“ஸ்கூல் போகும் போது ஒரு சின்ன பையனையும் கூட்டிட்டு போனோமே. நீங்க அதை கூட யோசிக்காம ஸ்கூல் வந்ததும் நான் போகும் போது கிஸ் பண்ணிட்டீங்க” குறைப்பட்டுக் கொண்டாள்.
“என் பொண்டாட்டி நான் பண்ணுவேன். அந்த சில்வண்டை பார்த்துட்டு இருக்க முடியுமா?”
“இன்னொரு பக்கம் அம்மு குட்டினு சொன்னீங்க. அதைக் கேட்டுட்டு க்ளாஸ்ல வந்து என்னையே அம்மு குட்டி மிஸ்னு கூப்பிடறான்” புருவங்கள் வளைவு நெளிவுகளோடு அசைந்திட, தலையை அங்குமிங்கும் ஆட்டியபடி அவள் பேசிய கோலத்தில் அவனுள் ஓர் ஈர்ப்பு.
“அது எப்படி உன்னை அம்முனு கூப்பிடலாம்? எனக்கு மட்டும் தான் நீ அம்மு, அம்மு குட்டி எல்லாம்” உதடு பிதுக்கி பிஞ்சுக் குழந்தையாய் பார்த்த ஆடவனை கொஞ்சித் தீர்க்கத் தான் அவளுள் பெருத்த ஆவலும் கிளர்ந்தெழுந்தது.
“இப்படி சொல்லிட்டு நீங்களே அடுத்தவங்க முன்னால குட்டி போட்டுட்டு இருங்க” அவன் முடியைக் கலைத்து விட்டாள் வஞ்சி.
நாளுக்கு நாள் என்னைத் தன் பக்கம் கவிழ்க்கிறானே என உள்ளுக்குள் சிரித்தவளுக்கு அவனிடத்தில் தொலைந்து போவதே மகிழ்வு தான்.
காலை உணவு முடித்து விட்டு ருத்ரன் ஆபீஸ் செல்ல தனியாக அமர்ந்திருந்த அஞ்சனாவிடம் வந்தாள் நிரா.
“மிஸ் அஞ்சனா” சொடக்கிட்டவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
“மிஸ்ஸிஸ் அஞ்சனா ருத்ரன் அபய்” சட்டென இடைபுகுந்து திருத்தினாள் ருத்ரனின் மனைவி.
“அவ்ளோ நினைப்பா உனக்கு?”
“தன்னோட பெயரை சரியா சொல்லவும் நினைப்பு வேணும்னு நீங்க சொல்லி தான் தெரியும் நிரா” என்று சொல்லவும் முகம் கறுத்துப் போனாள் அவள்.
இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாதவளுக்கு அஞ்சனாவை ஏதாவது சொல்லி விட வேண்டும் என்ற வன்மம்.
மற்றவரை காயப்படுத்தக் கூடாது என்று தானே கஷ்டத்தை அனுபவிக்கும் சிலர் வாழும் உலகில், பிறரை வருத்தி வஞ்சமாய் சந்தோஷப்படும் சிலரும் இருக்கத் தான் செய்கின்றனர். அனைத்து வித உணர்வுடை மனிதர்களும் இருக்கின்றனர் அல்லவா?
“ஆமா அஞ்சனா! எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லை. மாமாவை உனக்கு சுத்தமா தெரியவே தெரியாது. கண்ட அந்த நிமிஷம் தாலியும் கட்டிட்டாருன்னா எந்த நம்பிக்கையில் அவரோட வந்த?” அஞ்சுவைத் திணற வைக்கும் நோக்கில் நிரா.
“கடவுளோட சன்னிதானத்தில் வெச்சு என் கழுத்தில் விழுந்தது இந்த தாலி. ஒன்னு கடவுள் மேல நம்பிக்கை. அடுத்தது அபய் மேல நம்பிக்கை”
“அது எப்படி திடீர்னு நம்பிக்கை வரும் அஞ்சனா? கொஞ்சம் ப்ராக்டிகலா பேசு”
“சில விஷயங்கள் ப்ராக்டிகலையே புட்பால் விளையாடிடும் நிரா. அப்படி ஒரு விஷயமா என் நம்பிக்கையை எடுத்துக்க. அப்பறம் கண்ட நிமிஷம்னு யார் சொன்னா? எனக்கு அவரை முன்னாடியே தெரியும். சாதாரணமா தான். பட் இப்போ லவ் பண்ணுறேன்.
இதை அவர் கிட்ட சொல்லிடாதீங்க. நானே சொல்லனும்னு ஆசைப்படுறேன். டவுட் எல்லாம் க்ளியராச்சுல்ல. அப்போ நான் வரட்டா?” சல்யூட் வைத்து விட்டு வெற்றிப் புன்னகையோடு நடந்த அஞ்சனாவின் செயலில் காலைத் தரையில் உதைத்தாள்.
ஆத்திரம் தீரவில்லை அவளுக்கு. அவளைப் போல் இன்னொரு ஜீவனும் ஆத்திரத்தில் பொங்கிச் சிலிர்த்தெழுந்தது அந்நிமிடம்.
அது செல்வன் தான்! மருமகளிடம் நிரா பேசிய வார்த்தைகள் ஒன்றும் பாகாய் இனிக்கவில்லை அவருக்கு. மாறாக வேப்பங்காயாய் கசந்தன. பதில் கூறாமல் பயந்து போவாளோ? இல்லாவிடின் ருத்ரன் வந்ததும் சொல்லிக் கொடுப்பாளோ? என்ற யோசனையை கோடாரி கொண்டு வெட்டிச் சரித்தது அவளது தக்க பதிலடி.
தைரியமான பெண் தான். எப்போவும் ஒரு பொண்ணு இதே தைரியத்தோடு நிமிர்ந்து நின்றால் வரும் பிரச்சனை கூட பின்வாங்கி சின்னாபின்னமாகி விடும் என அவளது இயல்பை மனதார மெச்சவும் தவறவில்லை.
அடுத்த நாளே நிராவை புத்தி சொல்லி பெட்டி படுக்கையோடு அனுப்பி விடவும் தவறவில்லை செல்வன்.
மகனை இவள் எப்படி முன்னதாகவே அறிந்தாள் என்பது மட்டும் புதிராக இருந்தது அவருக்கு. இத்தனைக்கும் புன்னகைப்பாரே தவிர அவளோடு பேசியதில்லை அவர். ஆகையால் கேட்க முடியாமல் நின்றார்.
அவரது மகனோ இது எதுவும் அறியாமல் இருந்தான். வழக்கம் போல் அவன் காதல் மழை பொழிவதும் அதில் நிறைவுடன் நனைபவள் அக்காதலை மறைமுகமாய் உணர்த்துவதுமாக நாட்கள் கரைந்தோடின.
மனதினுள் காதல் இருந்தாலும் அதை வாய்விட்டுக் கூறாத வரை அதன் முழுமையான உணர்வையோ பூரணத்துவத்தையோ அடையாது அல்லவா? தன் காதலுரைக்கும் தருணத்திற்காய் அஞ்சனா காத்திருக்க, அவள் வாழ்வில் மற்றோர் திருப்பத்தை ஏற்படுத்தும் நாளும் வெகு சீக்கிரமே புலர்ந்தது.
தொடரும்…….♡
ஷம்லா பஸ்லி