❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️
நிலவு 17
“ஸ்வீட் மார்னிங் பெண்டா பேபி…!!” என்று சல்யூட் வைத்த வர்ஷனைக் கண்டு கண்களை அகல விரித்தாள் வஞ்சிக் கொடியாள்.
“ஓய்! மார்னிங் சொன்னா பதிலுக்கு நீங்களும் சொல்லனுமே தவிர முட்டைக் கண்ணை விரிச்சிட்டு நிக்கக்கூடாது” என்றான் அவன்.
இன்னும் திகைப்பில் இமைகள் மூடவும் மறுத்து உறைந்து நிற்பவளின் முகத்தின் முன் கையை ஆட்டிட படக்கென சிந்தை கலைந்து, “நீ… நீ எப்போ வந்த?” என்று இழுவையாகக் கேட்டாள் அவள்.
“நானும் நீங்களும் கல்யாணம் பண்ணா தான் நான் ஷாலு கூட இருக்க முடியும் என்று நீங்க சொல்லி வெட்கப்படும் போதே வந்துட்டேங்க” அவளை ரசனை சொரியும் நேத்திரங்களால் பார்த்தான் அவன்.
“அச்சோ” என கைகளால் முகத்தை மூடிக் கொண்டவளைப் பார்த்து,
“நீங்க இன்னும் என் ஸ்வீட் மார்னிங்கு பதில் சொல்லல?” என்று அதிலே தொங்கினான் உதய்.
“இனிய காலை வணக்கம்! போதுமா டாக்டரே?” கரம் கூப்பினாள் அவள்.
“வர்ஷு” என்று உதய்யிடம் தாவினாள் சின்னவள்.
“கியூட்டி இந்த கவுன்ல பொம்மைக் குட்டி மாதிரி இருக்கா” என அவளது குண்டு கன்னங்களைப் பிடித்து ஆட்டினான்.
“வர்ஷு அங்கிள்! நீங்களும் அத்துவும் இழுத்து இழுத்து என்னோட கன்னம் பெருசாயிடுச்சு. எங்க கிளாஸ்மேட் வினய் என் கன்னம் கிரீம் வெச்ச பன்னு மாதிரி இருக்கு, கடிச்சு சாப்பாட்ட டேஸ்டா இருக்குமானு கேட்டு கிண்டல் பண்ணுறான்” முகத்தை உப்பிக் கொண்டு நிற்கலானாள் ஷாலு.
“அவனை நீ சும்மா விட்டு வச்சிருப்பியா? பதிலுக்கு என்ன சொன்ன பாப்பா?” அவளைப் பற்றி நன்கு அறிந்தவளாகக் கேட்டாள் அதியா.
“உன் மூஞ்சி மட்டும் என்ன? ஊதி வெச்ச பலூன் மாதிரி இருக்கு. குண்டூசி குத்தினா பொப்’னு வெடிச்சிரும் பத்திரமா இரு. என் கிட்ட இனி ஏதாச்சும் சொல்ல வந்தா என் வர்ஷு கூட்டிட்டு வருவேன்னு மிரட்டிட்டு வந்தேன்” கெத்தாக கூறினாள் அவள்.
“ஊதி வெச்ச பலூனா?” முத்துப் பல் தெரிய சிரித்தான் உதய்.
அதியும் அடக்க மாட்டாமல் சிரிக்க அவளைப் பார்த்து, “ஓஓ! உனது சிரிப்பினில் சிதறும் அழகினைப் பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ?” என்று பாடினான் காளை.
“உனக்கு பேசாம பாடகனாகி இருக்கலாம். அவ்வளவு அழகா பாடுற” என்று ரசனையுடன் சொன்னாள் மங்கை.
“பசிக்குது அத்து” என்று ஷாலு சத்தம் போட, கிட்சனுக்குள் நுழைந்து நூடுல்ஸ் எடுத்து வந்தாள்.
உதய்யின் அலைபேசியை எடுத்து கேம் விளையாடிக் கொண்டிருந்தாள் ஷாலு. அவளது அருகில் அமர்ந்து ஊட்டி விட்டு “நீ சாப்டியா உதய்?” என்று கேட்டாள் காதலி.
“நான் சாப்பிட்டுத் தான் வந்தேங்க. நீங்க சாப்பிடலையா?” என்றவன் அவள் கையில் இருந்த தட்டை எடுத்து அதிக்கு ஊட்டி விட்டான்.
அவனைப் புன்னகையுடன் பார்த்த அதியா கை கழுவச் செல்ல உதய் பின்னால் சென்றான். வேகமாக பின்னால் திரும்பியவள் அவன் மேல் மோதி விழ எத்தனிக்க, “பார்த்துங்க” என்று அவளைத் தாங்கிப் பிடித்தான் அவன்.
கருமணிகள் அங்கும் இங்கும் அலைபாய, இமைகளோ தத்தித் திமிக்கி தாளம் போட, அவளது விழிகள் பேசும் கவிதையாக இருந்தது.
காதல் வழியும் இருசோடி விழிகள் ஒன்றோடு ஒன்று உரசி உராய்ந்து கொள்ள பற்றி எரிந்தது காதல்த்தீ! அவள் கையில் இருந்து தம்ளர் நழுவி விழ அச்சத்தத்தில் தம்மை சிக்க வைத்த மாயவலையை விட்டும் வெளியே வந்தனர் இருவரும்.
இதயா வெட்கத்துடன் திரும்பிக் கொள்ள புன்னகையுடன் தன் தலையில் தட்டிக் கொண்டான் காதல் தேவன்.
“நீங்க ஷாலு கிட்ட சொன்னதை உண்மையாகிடலாம்னு ஆசைப்படுகிறேன். இதுல உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க?” என்று வெளிப்படையாக வினவினான் உதய்.
“என் முடிவு உனக்குத் தெரியாதா? எனக்கு இதுல சம்மதம். உன் கையால என் கழுத்துல தாலி ஏற தவம் கிடக்கிறேன் கண்ணா” அழகாய் இதழ் விரித்தாள் உதயனின் இதய நிலா.
“நம்ம கல்யாணம் பத்தி உங்க விருப்பத்தை சொல்லுங்க தியாம்மா! எப்படி எங்கே பண்ணலாம்?”
“பெருசா எல்லாம் பண்ணத் தேவையில்லை. சிம்பிளா ஏதாச்சும் கோவில்ல வச்சுக்கலாம், இதை எனக்கு அப்படி பண்ணனும் இப்படி பண்ணனும்னு ஆசையில்லை. என் லைஃப்ல நீ வரணும். எனக்கானவனா சகல உரிமையோடு கிடைக்கணும். உன் காதலுக்கு உரிமையானவங்கற அந்தஸ்து எனக்கு வேணும். நம்ம உறவை இந்த ஊர் உலகத்துக்கு தெரிவிக்கணும். அது போதும் எனக்கு” அவனிடம் தன் மனதில் உள்ளதைக் கூறினாள் அதி.
“இதைத்தான் நானும் நினைச்சேன். ஏதாச்சும் கோவில் தேவையில்லை இங்கே பக்கத்தில் இருக்கிற கோயில்ல பண்ணலாம். நமக்கு அப்பாம்மா இருந்து இருந்தால் எப்படி எல்லாமோ நடந்திருக்கும் நிலாம்மா! ஆனால் இப்படி நடக்கப் போகுது. அவங்க நம்ம கூட இல்லனா என்ன? எப்போவும் நம்ம கூட நம்ம நினைவுகளோட கலந்து நம்ம சுவாசத்தோட ஐக்கியமாகி இருக்காங்க. எங்கே இருந்தாலும் அவங்களோட ஆசீர்வாதம் நமக்கு உண்டு” அவள் மனதில் குடும்பம் பற்றிய கவலை தோன்றியதை கவலை படர்ந்த முகத்தினூடாகக் கண்டு அறிந்து அவள் கைகளைப் பிடித்து அழுத்தினான் ஆடவன்.
“என் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன் டா. என் கல்யாணத்தை பார்க்க ரொம்ப ஆசையா இருந்தாரு. இருந்தாலும் அந்தக் கவலையை போக்க எனக்கு உன்னைத் தந்திருக்காரு. என் முகத்தில் ராவ் அங்கிளை பார்த்தனு சொன்னேல. நான் உன் அருகாமையில் என் அப்பாவை உணர்ரேன் கண்ணா” அவனது கையை இன்னும் அழுத்திக் கொடுத்து தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தாள் மாது.
“கியூட்டி வரா. முகத்தை இப்படி வச்சுக்காதீங்க” என்று அவன் கூற, சட்டென முகபாவனைகளை மாற்றிக் கொண்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் பிரண்ட்ஸ் ஆயிட்டீங்களா? இப்படி பார்க்க நல்லா இருக்கு” மனம் குளிரச் சிரித்தாள் ஷாலு.
“ஆமாம் செல்லம்! நானும் அத்துவும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறோம். உனக்கு சந்தோஷமா?” என்று அவளிடம் உதய் கேட்க,
“ஜாலி ஜாலி! வர்ஷு அத்து ஷாலு மூணு பேரும் ஒரே வீட்டில் இருக்க போறோம்” துள்ளலுடன் மொழிந்தது மழலை.
“நாளைக்கே புது டிரஸ் வாங்க போகலாம் பாப்பா” என்று அதி சொல்ல, “சூப்பர் அத்து குட்டி” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள் சிறுமி.
அவளை பார்த்திருந்த வர்ஷனிடம் “வர்ஷுக்கும் உம்மா கொடுப்பேன்” என்று அவனுக்கும் முத்தம் கொடுத்தாள்.
“ஓகே டா டைம் ஆச்சு. அங்கிள் போயிட்டு வரேன். நாளைக்கு மீட் பண்ணலாம்” என்று விட்டு,
“போயிட்டு வரேங்க. பை இதயா” என்று விடை பெற்றவனுக்கு கையசைத்துக் காட்டினாள் அதிய நிலா.
செல்லும் அவனைப் பார்த்து “அடக்கடவுளே! இன்னும் அவன் நம்பர் வாங்கல. வேற பொண்ணுங்க கண்ட உடனே நம்பர் கேக்குறாங்க. இங்கே நான் லவ் பண்ணி கல்யாணம் கூட பண்ண போறேன். இன்னும் நம்பர் வாங்கல. அந்த டாக்டர் பயலும் இதைப் பற்றி ஞாபகப்படுத்தல. நாளைக்கு எப்படியாச்சும் வாங்கிடனும்” என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்து
கொண்டிருந்தது.
உதய்யின் கையையும் அதியின் ஒரு கையையும் பிடித்து உள்ளே சென்றாள் ஷாலு. இருவரினதும் கைகளைப் பிடித்து கால்களைத் தரையில் வைக்காமல் தொங்கிக் கொண்டு செல்ல,
“அடியே குட்டிக் குரங்கு மாதிரி சேட்டை பண்ணாம வா” செல்லமாக அதட்டினாள் அதியா.
“எனக்கு குரங்கு செல்லாத. நீ தான் பெரிய சிம்பன்சி குரங்கு. கொரில்லா” என சண்டைக்கு வந்தாள் ஷாலு.
இருவரின் பேச்சையும் ரசித்துக் கொண்டிருந்த உதைய்யைப் பார்த்து “வர்ஷு! நான் குரங்குக் குட்டியா?” என்று பாவமாகக் கேட்டாள்.
“இல்லடா நீ என்னோட செல்லக் குட்டி. துள்ளி ஓடுற மான்குட்டி! தாவிக் குதிக்கிற மீன் குட்டி. பஞ்சு மாதிரி புசுபுசுன்னு இருக்குற முயல் குட்டி. என் கன்னுக் குட்டி” என்று அழகாகப் புன்னகைத்தான் அவன்.
“எங்கிருந்து தான் பேசக் கத்துக்கிட்டனே தெரியல டா மாயக்காரா” மனதினுள் ரசித்தாள் அதி.
முதலில் ஷாலுவுக்கு உடை வாங்கச் சென்றனர். “நீங்க செலக்ட் பண்ணுங்க அது” என்று அவன் தன்னவளிடம் கூற,
“நீயும் வா. சேர்ந்தே செலக்ட் பண்ணலாம்” என இருவரும் சேர்ந்து ஒன்றாகப் பார்த்தனர்.
சிவப்பும் கோல்டும் கலந்த கவுனைக் கண்டு கண்கள் மின்ன அதைக் கையில் எடுத்த வர்ஷு “எப்படி?” என்று கேட்க, ‘சூப்பர்’ என்பதாக கண்களால் செய்கை செய்தாள் அவள்.
“உனக்கு இது பிடிச்சிருக்கா கியூட்டி?”
“வாவ்! நல்லா இருக்கு அங்கிள். இதைப் போட்டுக்கிட்டா கியூட்டி கியூட்டா இருப்பா” என்று சொன்ன ஷாலுவிற்கு அதனை அணிவித்துப் பார்க்க நன்றாகப் பொருந்திட அதையே எடுத்துக் கொண்டனர்.
அடுத்து சாரி செக்ஷனுக்குப் போக குவியலாக இருந்த சாரிகளைப் பார்த்து “வர்ஷ் எனக்கு சாரி எடுக்கத் தெரியாது டா. சும்மா ஒன்னு எடுக்கலாமா?” என்று சோகமாகக் கேட்டாள் பெண்.
“உங்களுக்குத் தெரியலனா என்ன? நான் என் பென்டா பேபிக்கு அழகான பிடவை எடுத்துத் தரேன்” என ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான்.
இது வேண்டாம், இந்த கலர் லைட்டா இருக்கு, அதிக்கு இந்த டிசைன் செட்டாகாது என அனைத்தையும் மறுத்து கடைப் பெண்ணை வாட்டி எடுத்துக் கொண்டிருப்பவனை நாடியில் கையூன்றிப் பார்த்திருந்தாள் அதியப் பெண்ணவள்.
“டேய்! உன் அலப்பறை தாங்கல. ஏதாச்சும் ஒன்னை எடு டா” புருவத்தை ஒற்றை விரலால் நீவி விட்டுக் கொண்டவளைப் பார்த்து, “ஐ லைக் இட்” என்று புன்னகைத்து விட்டு மறுபடியும் சாரி தேடும் வேலையைச் செவ்வனே செய்யத் தொடங்கினான்.
சிவப்பும் மஞ்சலும் கலந்த நிறத்தில் தங்க நிற வேலைப்பாடுகள் போடப்பட்ட சாரியை எடுத்து “இது பெர்பெக்ட் இது குட்டி…!!” என்று சொன்னவனின் தெரிவு அவளுக்கே வியப்பைக் கொடுத்தது.
“கலா ரசிகன் டா நீ” என்று வாய்விட்டே புகழ்ந்தவள் அதை மனத்திருப்தியோடு வாங்கிக் கொண்டாள்.
பின் வர்ஷனுக்கு வேட்டியும் மஞ்சள் நிற சட்டையும் அதியே பார்த்து எடுத்தாள். வாங்கிய உடைகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர் மூவரும்.
“தாகமா இருக்கு அத்து ஜூஸ்” என்று அதிகார தோரணையுடன் கூறிய ஷாலுவைப் பார்த்து, “இப்போல்லாம் உனக்கு மகாராணினு நினைப்பு டி வாயாடி” அவளது கன்னத்தைக் கிள்ளினாள் அதியா.
“நான் போய் ஜூஸ் போடுறேன்” என எழுத்து சென்ற உதய்யின் பின்னால் சென்றாள் அவள்.
“உன் கண்ணன் முகம் பார்க்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லையோ கண்ணம்மா?” என்று கேட்டான் கவி வர்ஷன்.
“க்கும் ஆசை தோசை. சுகர் பாட்டில் எதுன்னு தெரியாம நீ பதிலுக்கு உப்பை போட்டுட்டா என்ன பண்ணுறது? அதான் சொல்லிக் கொடுக்கலாமே என்று வந்தேன். வேறு எதுவும் இல்லை” தோளைக் குலுக்கினாள் காரிகை.
“என்னைப் பார்த்தா சுகருக்கும் சால்ட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவன் மாதிரியா தெரியுது? என் இமேஜ் ரொம்ப டேமேஜ் பண்ணுறீங்க இதயா” இதயத்தைத் தடவிக் கொண்டான்.
“ஏன் ஹார்ட்டைத் தடவுற? அதுக்குள்ள உன் இதய இருக்காளுன்னா?”
“ஆமா! என் இதயமே அவங்க தான். இதயத்துல மட்டுமல்ல உயிருல இன்னும் சொல்லப் போனா உடல்ல இருக்கிற ஒவ்வொரு அணுவிலும் கலந்து இருக்காங்க” என்று புன்னகைத்தவனைக் கண்டு இதழ் கடித்தாள் அவனின் காதல் கிறுக்கி.
அடிக்கடி அவனை ஏறிடுபவளைப் பார்த்து, “என் கிட்ட ஏதாவது கேட்க நினைக்கிறீங்களா?” என்று வினவினான் உதய்.
“எ…ன்ன? அது உங்களுக்கு எப்படி தெரியும்?”
“பட படன்னு மூடித் திறக்கிற இமைகள், லேசா துடிக்கிற உதடுகள், அங்கேயும் இங்கேயும் மீன் குட்டி மாதிரி நீந்துற கருமணிகள், முகத்தில விழுற முடியை அடிக்கடி ஒதுக்கி விடுற விரல்கள் எல்லாமே நீங்க ஏதோ கேட்க வரீங்கனு காட்டிக் கொடுக்குது”
தான் சொல்லாமலே தன்னைப் பற்றி முற்றிலும் அறிந்து வைத்திருப்பவன் மேல் நேசம் மென்மேலும் பல்கிப் பெருகியது அவளுக்கு. “உன் போன் நம்பர் கொடு உதய்” பட்டென்று கேட்டு விட்டாள்.
“நோ தர மாட்டேன். தரணும்னா ஒரு கண்டிஷன்” கண்டிஷன் போடுபவனைப் புருவ முடிச்சுடன் ஏறிட்டாள் அரிவை.
“என்ன கண்டிஷன்?”
“என்னை அழகா, உருக்கமா, காதலா, இதயமே கசிந்து உங்க காலடியில் விழக்கூடிய மாதிரி யஷுனு கூப்பிடுங்க நம்பர் தரேன்” என்று கண் சிமிட்டினான் அவன்.
“அது சும்மால்லாம் கூப்பிட வராதுடா. உணர்ச்சி வசப்படும் போது, இல்லனா காதல்ல மூழ்கித் தத்தளிக்கும் போது, அல்லது உச்சபட்ச சந்தோஷத்தில் இருக்கும் போது தான் கூப்பிடுவேன். அது என் வாயிலிருந்து வர அழைப்பு இல்லை, ஆழ்மனசுல இருந்து வெளிப்படற அழைப்பு” என்று உணர்ந்து சொல்ல புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்து, “எப்போது திரும்பக் கூப்பிடுவீங்கன்னு காத்துட்டு இருக்கேன் அதி” நிஜமான எதிர்பார்ப்பில் அவன் விழிகள் பளிச்சிட்டன.
“நம்பர் தா உதி” என்று சமையல் மேடையில் அவள் ஏறி அமர்ந்து கொள்ள, “அலைபேசி எண் கொடுக்கும் நான் உன் பிரத்தியேக அழைப்பிற்காய் ஏங்குகிறேன் பெண்ணே!” என்ற வரிகளுடன் நம்பரைக் கூறியவன்,
“என் போன்ல உங்க நம்பரையும் சேவ் பண்ணுங்க” என்று அலைபேசியைக் கொடுத்தான்.
அவனது கண்டக்ட் லிஸ்ட்டைப் பார்த்துத் திகைத்து நின்றாள் அதி. ‘ராவ் அங்கிள்’ என்ற அவளது தந்தையின் நம்பர் மட்டுமே சேவ் செய்யப்பட்டிருந்தது.
“அப்பா நம்பர் மட்டும்தான் சேவ் பண்ணி இருக்க. வேற யார் நம்பரும் இல்லையே?” அதிசயமாக அவனைப் பார்த்தாள் அதிய நிலா.
“என் லைஃப்ல அதி முக்கியமானவர் அங்கிள் மட்டும் தான் தியாம்மா. அதனால அவர் நம்பர் மட்டும் தான் சேவ் பண்ணி இருக்கேன். என் மனசுல மட்டும் அல்ல போன்லயும் அவர் நம்பர் மட்டும்தான் இருக்கு. பிரகாஷ், மற்ற அவசியமான டாக்டர்ஸ், செக்யூரிட்டி ஆசிரம நிர்வாகி அவங்க நம்பர் எல்லாம் ஞாபகத்துல வச்சிருக்கேன். சேவ் செய்யனும்னு தோணல” சாதாரணமாகக் கூறினான் உதய வர்ஷன்.
ஹாய் என்று மெசேஜ் போடும் ஒருவர் யார் என்று தெரியாமலே அவரது நம்பரைக் கூட அன்நோன் நம்பர் என்று சேவ் செய்யும் இந்த உலகத்தில் தன் மனதில் இருப்பவருக்கு மட்டுமே அலைபேசியிலும் முக்கியத்துவம் கொடுத்த வர்ஷன் புதுமையாகத் தெரிந்தான்.
‘அதியா’ என்று தனது இலக்கத்தைச் சேமித்தவளுக்கு “ம்ம்! ஜூஸ் ஃபார் யூ” என்று அவளிடம் நீட்ட வாங்கிக் கொண்டாள்.
ஷாலுவிடமும் ஒன்றைக் கொடுத்து விட்டு அவனும் அமர்ந்து பருகினான். “யம்மி ஜூஸ் வர்ஷு” ருசித்து அருந்தினாள் ஷாலு.
“நாம கண்ணாமூச்சி ஆடலாமா?” என்று அவள் கேட்க, இருவரும் ஒத்துக் கொண்டனர். ஷாலுவின் கண்களைத் துணியால் கட்டிவிட ஒற்றை விரலால் கண்கட்டை இழுத்து பார்த்தவளைக் கண்டு, “அடியே! போங்காட்டம் ஆடாத. பார்க்க கூடாது” என்று முறைத்தாள் அதி.
“கண்ணெல்லாம் ஒரே இருட்டா இருக்கு. நிறைய பேய் தெரியுது” பயந்தது போல் நடித்தாள் சின்னவள்.
“யார் என் கியூட்டிக்கு பயமா? அவ ரொம்ப தைரியமான பொண்ணாச்சே. எங்கே என்னைப் பிடி பார்க்கலாம்” வேண்டுமென்றே அவளது கைக்குள் அகப்பட நின்றான்.
“ஹூரே! நான் அங்கிளைக் கண்டு பிடிச்சிட்டேன்” என்று துள்ளிக் குதித்தாள்.
“ஆமா நீ ஜெயிச்சுட்ட டா! நான் தோற்றுப் போயிட்டேன்” என்று பொய்யாக முகம் சுருக்கினான் அவன்.
“அச்சோ ஃபீல் பண்ணாத வர்ஷு. அடுத்த தடவ நீங்க ஜெயிக்கலாம்” அவன் மூக்கோடு தனது மூக்கை வைத்து உரசினாள் ஷாலு.
“ஓகே டன்” என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டியவனின் கண்களைக் கட்டினாள் அதியா. ஷாலு மகிழ்வுடன் குட்டி பொனிடெயில் அசைய ஓடுவதை மனம் குளிரப் பார்த்து ரசித்தன அவள் விழிகள்.
அவள் ஷாலுவை எந்தவிதக் குறையும் கவலையும் இன்றி அன்பாகப் பார்த்துக் கொண்டாள். சொல்லும் இடமெல்லாம் அழைத்துச் செல்வாள் தான்! ஆனால் இவ்வாறு ஆடிப்பாடி, சந்தோஷமாக ஆட்டம் போட்டு அரட்டை அடித்து இல்லை.
வர்ஷன் எப்பொழுது அவகள் வாழ்வில் வந்தானோ கலகலப்பும் சிரிப்பும் ஓடோடி வந்து அரவணைத்தன. இவ்வாறு அவனை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை இடையூடு கையிட்டுப் பிடித்து “ஏஏ அவுட் அவுட்” என்று கத்தினான் உதய்.
“ஹே அத்துக் குட்டி சிக்கிட்டா” என்று ஷாலு கைதட்டிச் சிரிக்க, அவனது அணைப்பில் விரிந்த விழிகளுடன் நின்றவளைப் பார்த்து கண்கட்டை ஒரு பக்கமாக கீழிறக்கி வலது கண்ணை நளினமாக சிமிட்டினான் அந்த சில்மிஷக்காரன்.
அக்கண் சிமிட்டலில் படபடத்த இதயத்துடன் “விடுங்க டாக்டரே! பாப்பா பாக்குறா” என்று ரகசியமாக சொன்னாள்.
“முடியாது பெண்டா பேபி! இப்படியே ஒரு நிமிஷம் ம்ம் ம்ம்?” என்று விழிகள் ஆயிரமாயிரம் மொழி பேச வெட்கம் அவள் வெண்ணிற வதனத்திற்கு செம்மை சேர்த்தது.
“அங்கிள்! என்னை ஹக் பண்ண மாட்டீங்களா?” என்று கேட்டாள் சின்னவள்.
“உனக்கில்லாத ஹக்கா? க்யூட்டி வா வா” என்று ஒரு கையால் அதியைத் தோளோடு சேர்த்து அணைத்து மறு கையால் கியூட்டியை அணைத்து அவள் நெற்றி முட்டினான் மான்விழி மங்கையின் வேல்விழி வேங்கையவன்…!!
நிலவு தோன்றும்…!!🌛
✒️ ஷம்லா பஸ்லி🤍