அப்படியே சரிந்து விழுந்த கருணாகரனை தாங்கிப் பிடித்த கார்த்திகேயன் அப்படியே தனது மடியில் கிடத்தி கமிஷனர் உடனே ஓடிச் சென்று நீர் கொண்டு வர அதனை முகத்தில் தெளித்து எழுந்திரிக்கச் செய்தான்.
கண்களைத் திறந்து சுற்றும் மற்றும் பார்த்த கருணாகரனுக்கு இன்னும் என் உயிர் ஏன் போகவில்லை என்றிருந்தது.
இவ்வளவு துன்பத்தை தாங்குவதற்கு இறந் போவதே மேல் என்று இருந்தது. அவருக்கு வாழ்க்கையின் எல்லை வரை வெறுப்பு மட்டுமே மிஞ்சி கிடப்பது போல மனம் வெந்து தணிந்தது.
இப்படியான நிலையில் எப்படி காயத்ரியை எதிர்கொள்வது என்ற பதட்டம் வேறு அவரை மேலும் மேலும் மனதளவில் காயப்படுத்தியது.
கார்த்திகேயனைப் பார்த்து,
“கார்த்தி இது என் பொண்ணு இல்ல நீ சொல்லு உனக்கு அவளை பத்தி தெரியும் தானே பார்ட்டி அன்னைக்கு உன் கூட தானே இருந்தா சொல்லுப்பா இந்தப் பொண்ணு நிவேதா.. நிவேதா.. இது.. இல்ல இல்லன்னு சொல்லுப்பா என்னால அந்த கொடூரமான உடலை பார்க்க முடியல அப்படி எல்லாம் என் பொண்ணுக்கு நடந்திருக்காதுல்ல எனக்கு தெரியும் என் பொண்ணு இல்ல என் பொண்ணு இல்ல..” என்று கூறியவர்,
சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனைக்குள் அகப்பட்டவராக மீண்டும் உணர்வலைகளில் மாட்டி,
“இதை நான் எப்படி காயத்ரிகிட்ட சொல்லுவேன் காயத்ரிய எப்படி சமாதானப்படுத்துவன் என்னால முடியலப்பா ஒரு நாளிலேயே இத்தனை துன்பத்தை தாங்குற அளவுக்கு என் மனசுக்கு சக்தியே இல்லை..” என்று மீண்டும் அழுதார்.
“சார் ப்ளீஸ் சார் காம் டவுன் எதையும் நாம இப்ப முடிவெடுக்க முடியாது முதல் பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணி உறுதிப்படுத்திக் கொள்ளுவோம் அதுக்கப்புறம் எதனாலும் யோசிப்போம் இப்ப வரைக்கும் அது நிவேதா இல்ல என்னை நம்புங்க சார் அது நிவேதாவா இருக்க சான்சே இல்ல தைரியமா இருங்க நம்பிக்கையை கைவிடாதீங்க
நாம ஹாஸ்பிடல் விட்டு வந்து ரொம்ப நேரமாயிருச்சு காயத்ரி மேடத்தை ரொம்ப நேரம் தனியா விட்டுட்டு இருக்க முடியாது நீங்க அங்க போங்க உங்களை தானே அவங்க தேடுவாங்க நான் இங்கே இருந்து எல்லா விஷயத்தையும் கையோட பார்த்துக் கொள்றேன்
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததும் உங்களுக்கு உடனே அப்டேட் பண்றேன் இன்னைக்கு நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நான் எதுன்னாலும் உங்களுக்கு கட்டாயமாக கால் பண்ணி சொல்லுவேன்..” என்று அன்புடனும் அக்கறையுடனும் பேசிய கார்த்திகேயனை அன்புடன் கட்டியணைத்து விடுவித்தவர்,
“கார்த்தி நான் உன்ன எவ்வளவோ பேசி இருக்கேன் ஆனா நீ இந்த நிலையிலும் மகன் போல பக்கபலமா என் கூடவே இருந்து எனக்கு எல்லா உதவியும் செய்து தர்ரியேப்பா உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு..” என்று அவர் கைகள் இரண்டையும் எடுத்து கும்பிட போக கார்த்தி உடனே கைகளை பிடித்த வண்ணம்,
“என்ன சார் இப்படி சொல்றீங்க எனக்கு எவ்வளவு உதவி காயத்ரி மேடம் செய்திருக்காங்க அதெல்லாம் பார்த்தா இதெல்லாம் கால் தூசிக்கும் வராது இப்படி பேசி என்ன பெரிய மனுஷன் ஆக்காதீங்க சார் இது நம்மளோட குடும்ப பிரச்சனை நான் பார்த்துக்கிறேன் நீங்க முதல் கிளம்புங்க மேடமுக்கு நேரத்துக்கு சாப்பாடு மறந்து கொடுத்தாங்களோ தெரியாது
இதை பத்தி அவங்ககிட்ட மூச்சு கூட விடாதீங்க முடிஞ்ச அளவுக்கு அவங்கள சந்தோஷமா வச்சுக்க பாருங்க…” என்று கூற,
கருணாகரனோ இரு கைகளையும் விரித்து,
“எப்படிப்பா எப்படி இப்படி ஒரு இக்கட்டான நிலையில என்னால எப்படி அவகிட்ட சந்தோசமா பேசி சிரிக்க முடியும் நீயே சொல்லு..”
இப்படி கருணாகரன் கூறவும் கார்த்திகேயனுக்கு உண்மையிலேயே கருணாகரனை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
“என்ன சார் சீக்கிரமாக கிளம்புங்க காயத்ரி மேடம் என்ன செய்றாங்களோ தெரியல..” என்று கருணாகரனை அவ்விடத்தை விட்டு அகற்றுவதிலேயே கார்த்திகேயன் குறியாக இருந்தான்.
ஏனென்றால் இதற்கு மேலும் கருணாகரன் இங்கிருந்தால் அவரது உடல் நிலையும் மிகவும் மோசமாக போகக்கூடிய நிலை வந்துவிடும் என்று கார்த்திகேயனுக்கு நன்கு தெரியும்.
அதற்கு முன்பே அவரை பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதே உசிதம் என்று அவரை காயத்ரியின் பெயரைக் கூறி அவ்விடத்தில் இருந்து கிளப்ப முயற்சி செய்தான்.
“ஓகேபா எப்படியும் சீக்கிரமா போஸ்மட்டம் ரிப்போர்ட் வந்துடும் என்னன்னு கால் பண்ணி சொல்லிடு மறக்காத..!” என்று ஒரு தடவைக்கு நூறு தடவை திரும்பித் திரும்பி கூறிவிட்டு உடனே அவ்விடத்தை விட்டு கருணாகரன் புறப்பட்டார்.
சாலை ஓரத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தவருக்கு நினைவெல்லாம் அந்த ஆம்புலன்ஸில் இருந்த சடலத்தைப் பற்றியேதான்.
கண்களில் இருந்து நீர் கடலளவு வெளியேறியும் இன்னும் கண்களில் நீர் கசிந்து கொண்டுதான் இருந்தது.
எதனை நினைத்து துன்பப்படுவது என்று புரியாமல் மனமோ அல்லல்பட்டுக் கொண்டிருந்தது.
வைத்தியசாலைக்குள் நுழைந்தவர் காயத்திரி இருக்கும் அறை வாசலில் நின்று கைக்குட்டையை எடுத்து கண்களை நன்றாக அழுத்தி துடைத்து விட்டு முகத்தையும் நன்றாக துடைத்து விட்டு சிரிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அவரால் முடியவில்லை. சிறிது நேரம் கண்களை மூடி இருந்தவரது கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்க்கத் தொடங்கியது.
தாழ் போட்டு மூடி இருக்கும் இமைகளை மீறி கண்ணீர் வெளி வந்தது.
‘இறைவா..! என்ன இது சோதனை நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி தண்டனை..’ என்று மானசீகமாக கடவுளைத் திட்டித் தீர்த்தவர் கண்களை மீண்டும் அழுந்தத் துடைத்து விட்டு குரலை செருமிக் கொண்டு கதவை திறந்து காயத்ரியைப் பார்த்தார்.
காயத்ரியின் அருகில் இருந்த தாதியரோ,
“வாங்க சார் இவ்வளவு நேரமா உங்கள கேட்டுட்டு இருந்தவங்க இப்போதான் சாப்பிட்டு டேப்லெட் போட்டுட்டு தூங்குறாங்க
இந்த டேப்லெட்டுக்கு நல்லா தூக்கம் வரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் நீங்க போயிட்டு நாளைக்கு காலையில வாங்க சார் நான் பாத்துக்குறேன்..” என்று அந்த பணிப்பெண் மிகவும் அன்புடன் கூற,
கருணாகரனுக்கு காயத்ரி விட்டு விலக சிறிதும் எண்ணமில்லை.
“பரவால்லம்மா நான் பார்த்துக்கிறேன்..” என்று கூறியதும்,
“சரிங்க சார் இந்த மானிட்டர்ல இருக்கிற கவுண்டிங் கூடக் கூடாது அப்படி கூடினா உடனே என்ன கூப்பிடுங்க நான் பக்கத்துல இருக்க ரூம்ல தான் இருப்பேன்..”
“ஓகேமா..” என்று கூறிவிட்டு காயத்திரியின் அருகில் போய் அமர்ந்து அவளது கையைப் பிடித்து தனது கன்னத்தில் வைத்து அப்படியே இமைக்காமல் காயத்ரியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இவ்வளவு நேரமும் கட்டுக்குள் இருந்த கண்ணீரோ இதோ வருகிறேன் என்று வெளியே அணை திறந்த வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது.
காயத்ரியின் கைகளோ கண்ணீரில் நனையத் தொடங்கின. அதில் தூக்கம் களைந்து எழுந்த காயத்ரி, “என்னங்க..” என்று தூக்கத்தில் அழைக்க உடனே கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு,
“என்னம்மா..? என்ன ஆச்சு..? ஏதாவது வேணுமா..? உடம்புக்கு ஏதும் பண்ணுதா..? தண்ணி வேணுமா..? பசிக்குதா..?”
“இல்லங்க நீங்க சாப்பிட்டீங்களா..?” என்று அவள் கேட்கவும் கருணாகரனுக்கோ அழுகை அதிகரித்துவிட்டது.
‘இவ்வளவு மோசமான உடல் நிலையிலும் என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒரு ஜீவன் என்றால் அது காயத்ரி மட்டுமே என் உயிரானவள் அவளது உயிருக்கு ஆபத்தான நிலையிலுமே என்னைப் பற்றி மட்டும் தானே சிந்திக்கின்றாள் நான் உண்டு விட்டேனா இல்லையா நான் எப்படி இருக்கிறேன் அதை ஒன்றை மட்டுமே சிந்தனையில் வைத்து இப்படி கேட்கின்றாள்..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு காயத்ரியின் அன்பின் ஆழத்தை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
“இல்லம்மா எனக்கு பசிக்கல நீ தூங்கு ரெஸ்ட் எடு..”
“ஏங்க அழுகுறீங்க எனக்கு ஒன்னும் இல்ல நான் சீக்கிரம் குணமாயிடுவேன் அழாதீங்க ராத்திரியில எதுவும் சாப்பிடாம தூங்கக்கூடாது ஏதாவது கடையில வாங்கிட்டு வாங்க போங்க..” என்று அவரது கண்ணீரை கரங்களால் துடைத்து விட்டாள் காயத்ரி.
“நிவேதாவை பற்றி ஏதாவது தெரிந்ததாங்க கமிஷனர் கூப்பிட்டார்னு போனீங்களே ஏதாவது சொன்னாரா..? கார்த்திகேயன் எங்க..” என்று விடாமல் கேள்விகளை காயத்ரி அடுக்கிக் கொண்டு போக எப்படி அவளது கேள்விகளுக்கு பதில் கூறுவது என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்தார் கருணாகரன்.
“கமிஷனர் நிவேதா பத்தின தகவல் கேட்டு அறிந்து கொள்வதற்கு தான் கூப்பிட்டாரு ரெண்டு நாளைக்குள்ள எப்படியும் கண்டுபிடிச்சு தந்துவிடுவேன்னு சொல்லி இருக்காரு நீ ஒன்னும் கவலைப்படாதம்மா ..”
“அவ கல்யாணத்துக்கு விருப்பமில்லைன்னு எங்கேயாவது பிரண்ட்ஸ் கிட்ட போய் ஒழிஞ்சி இருந்து இருப்பா வரட்டும் உங்க மகளுக்கு வர வர சேட்டை ரொம்ப கூடிடுச்சு நீங்க கொடுத்த செல்லதான்
அதனாலதான் இப்படி ஆடிக்கிட்டு இருக்கா வரட்டும் கால் ரெண்டையும் உடைச்சு வீட்டை விட்டு வெளியே போகாத அளவுக்கு நல்ல பனிஷ்மென்ட் கொடுக்கணும்..” என்று கூறிவிட்டு குறும்பாக சிரித்தார் காயத்ரி.
அதற்கு பதில் கூற முடியாமல் கண்களை மெதுவாக மூடித் திறந்தவர்,
“ரொம்ப டயர்டா இருக்குமா தூங்குவோமா..” என்று மனதளவிலும் உடலளவிலும் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களின் தாக்கங்கள் தாங்க முடியாமல் நித்திரையை யாசித்தன கருணாகரனின் கண்கள்.
“அச்சச்சோ ரொம்ப நேரமாச்சுதா இந்த அரைகுள்ள இருந்தா விடிகிறது எப்போ ராத்திரியாவது எப்போன்னு ஒன்னுமே தெரியல காலையில இருந்து உங்கள பார்க்கவே இல்லையா அதுதான் சரி சரி நீங்க தூங்குங்க..” என்று அருகில் இருந்த கட்டிலைக் காட்ட,
“நான் இங்கேயே ஏற்படுத்துகிறேனே..!” என்று சிறு பிள்ளை போல கண்களால் கெஞ்சினார்.
முகம் எங்கும் புன்னகையுடன் கண்களில் தாய் அன்பு பொங்க “வாங்க..” என்று மடியில் அவர் தலை வைக்க, மெதுவாக தலையை தடவிட சிறு குழந்தையாக உறங்கிப் போனார் கருணாகரன்.
அப்படியே அவர் வதனம் பார்த்து அதிக மருந்து அருந்தியதன் தாக்கத்தினால் காயத்ரியும் சில நிமிடங்களில் உறக்கம் கொண்டார்.
இருவருக்கும் அமைதியான உறக்கம் அது. புயலுக்கு முன் தோன்றும் அமைதியாக நாளைய நாள் மாறப்போவது அறியாத இரு உள்ளங்களும் தனை மறந்து உறங்கின.