17. விஷ்வ மித்ரன்

5
(4)

 விஷ்வ மித்ரன்

💙 அத்தியாயம் 17

 

ஜூஸை வாயில் வைத்த மாத்திரத்திலே பூர்ணி அவன் மேல் வாந்தி எடுத்து விட, அதைத் தன் கையால் வாங்கிக் கொண்டான் ரோஹன்.

 

அவனைப் பார்த்து “ரோஹி! என்ன பண்ணுறே?” என்று பதறினாள் அவள்.

 

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றவன், டி-ஷர்டை மாற்றிக் கொண்டு வர அவளோ தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

“பூ என்ன பண்ணுது உனக்கு? உடம்பு சரியில்லையா? மாத்திரை சாப்பிட்டியா? ” என அடுக்கடுக்காக கேள்வி கேட்டவனை சோர்வுடன் பார்த்து, “இல்ல ஒன்னும் இல்ல ரோஹி.‌ லைட்டா தலை வலிக்குது” என்றவள் “உன் ட்ரெஸ்ல வாமிட் பண்ணிட்டேனே சாரி டா” என மன்னிப்பு வேண்டினாள்.

 

“இதெல்லாம் ஒரு ப்ராப்ளம்னு சாரி கேட்குற. விடுடி. ஒரு குழந்தை அவ அப்பா மேல வாமிட் பண்ணினா அவருக்கு இது அசிங்கமா இருக்குமா? இல்லல்ல” என்று கடிந்து கொண்டவனை விழியகற்றாமல் பார்த்தாள் பூர்ணி.

 

“கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சா சரியாயிடும். ரூம் எங்கனு காட்டு” என எழுந்து கொள்ள, சிறு தலையசைப்புடன் சென்ற ரோஹன் “இது தான் நம்ம ரூம்” என சொல்ல, அவனை முறைத்தாள் அவள்.

 

“ஹி ஹி சாரி. உன்னோட ரூம்” என்று கைகாட்ட, அவனை இடித்துக் கொண்டு அறையினுள் புகுந்தாள்.

 

“ஆவ்வ் குண்டூஸ்! இடிச்சுட்டு போறத பாரேன்” என தோளைத் தடவிக் கொள்ள, “நான் ஒன்னும் குண்டூஸ் இல்ல” என அவனது தலையில் கொட்டி விட்டு எதிரில் இருக்கும் கண்ணாடியில் அவன் அறியாமல் தனது பிம்பத்தை பார்த்துக் கொண்டாள்.

 

‘கொஞ்சம் கூடுதலா தான் சாப்பிடுறேன்.‌ நெஜமாவே குண்டாயிட்டேனோ?’ என மனதினுள் புலம்பியவளை ஓரக் கண்ணால் பார்த்தவன் “அப்போ மேடம்கே சந்தேகம் தான்” என்று சிரித்தான்.

 

“கடுப்ப கிளப்பாம போயிடு” அவனை வெளியில் தள்ளி கதவை மூடினாள்.

 

“இருடி ஒரு நாள் என் கிட்ட வசமா சிக்காமலா போவ? அப்போ இருக்கு கச்சேரி” என எச்சரித்து விட்டுச் சென்றான் ரோஹன்.

 

கட்டிலில் அமர்ந்தவளின் கைகளோ தனது வயிற்றை வருடின. அவளது எண்ணங்களும் பின்னோக்கி நகர்ந்தன.

 

காலேஜ் செல்வதற்கு துரிதமாக ரெடியாகிக் கொண்டிருந்தாள் பூர்ணி. கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டிருந்தவளின் கண்களோ கணவனைத் தேடியது.

 

அவன் அவளை ரசனையுடன் பார்ப்பதை கண்ணாடி வழியே பார்த்தவளின் கன்னக் கதுப்புகள் குங்குமமாய் சிவந்து போக, கழுத்தில் தொங்கிய தாலியை சுடிதாரினுள் மறைத்துக் கொண்டாள்.

 

 “ரோஹி” என அழைத்துக் கொண்டே அவனை முழுதாக பார்த்தவள் “ஐயோ” எனக் கத்திக் கொண்டு திரும்பி நிற்க,

“எதுக்கு இப்படி கத்துற?” என்று கேட்டான் அவன்.

 

“கருமம் பிடிச்சவனே! கொஞ்சம் குனிஞ்சு உன்னப் பாரு. ஒரு பொண்ணு முன்னாடி எப்படி நிக்கணும்னு மேனர்ஸ் கிடையாது. அறிவு கெட்டவன்” என்று பொரிந்து தள்ள, குனிந்து தன்னைப் பார்த்தவன் டவலை மட்டும் சுற்றிக் கொண்டு வெற்று மார்புடன் நிற்கும் தனது கோலத்தைக் கண்டு பாத்ரூமிற்குள் ஓடி ஒளிந்து கொண்டான்.

 

“விவஸ்தை கெட்டவன்” என அர்ச்சித்தவள் அவனுக்கும் தனக்கும் காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

அவனோ பேண்ட்டும், லாங் ஸ்லீவ் ஷர்ட்டும் அணிந்து காலரை சரி செய்து கொண்டிருக்க “ரோஹி காபி” என்று கொடுக்க, அதை வாங்கிக் குடித்தான் ரோஹன்.

 

அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் பாவை. அன்று முதலிரவு அன்று சொன்னது போலவே அவளுக்கு அட்மிஷன் வாங்கி பிரபலமான காலேஜில் சேர்த்து விட்டான் அவன். அப்போதிலிருந்து அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அவனது காதலில் உருகித்தான் போகலானாள் அவனது மனையாட்டியும்.

 

“ஓய்ய்! என்ன மேடம் பார்வை எல்லாம் பலமாயிருக்கு?” என புருவம் உயர்த்தியவனின் அருகில் சென்று அவனுக்கு டை கட்டி விடப் போனாள் பூர்ணி.

 

அவள் உரசி உரசி நிற்பது அவனது உணர்வுகளைத் தூண்டத் துவங்கிற்று. அவளை கட்டியணைத்து முத்தமிட்டு அவளில் மூழ்கி முத்தெடுக்கத்தான் அவனுள் ஆவல் கிளர்ந்தெழுந்தது.

 

“விடு பூ” என அவளை விட்டும் விலகப் போக, அவனது உணர்வுகளை அறியாதவளோ “என்னடா எல்கேஜி பாப்பா மாதிரி கட்ட விடாம நெளிஞ்சுட்டு இருக்க. ஒழுங்கா இருக்க மாட்டியா? நேத்தும் டை கட்ட மறந்துட்டுப் போனே. இன்னைக்கு நானே கட்டி விடுறேன்” என அவனது டையைப் பிடித்து இழுத்து எடுத்தாள்.

 

எதிர்பாராத இழுப்பில் நிலை தடுமாறியவன் அவளது இடையைப் பற்றிக் கொள்ள, அவளோ விழி விரித்து அவனை ஏறிட்டாள்.

 

விரிந்த விழிகளில் கருமணிகள் அலைபாய, சிட்டுக் குருவியின் சிறகுகளாய் படபடக்கும் இமைகளுடன் நின்றவளின் அழகில் மதி மயங்கிப் போய்த் தான் நின்றான் மன்னவன் அவனும்.

 

“ரோ..ரோஹி” என்ற அவளின் குரல் காற்றோடு கரைந்து செல்ல, அது அவளுக்கே கேட்கவில்லை என்பது தான் உண்மை.

 

பேசும் போது அசைந்த செவ்விதழில் சித்தம் தடுமாறிப் போனவனின் கரங்கள் அவளிடையை நெருக்க, அவன் கொடுத்த அழுத்தம் வலியைக் கொடுக்கலானது அவளுக்கு.

 

இதழ் நோக்கிக் குனிந்தவனுக்கு அப்போதே தான் செய்யப் போகும் காரியம் புத்தியில் உறைக்க, சடாரென விலகினான் ரோஹன்.

 

அவனது முத்தத்திற்காக கண்களை மூடியபடி இருந்தவளின் தோரணை அவன் மனதைப் பிசைந்தது. “என்னோட சுயநலம் பூவோட லைஃப பாதிச்சிரக் கூடாது. இனி தள்ளியே தான் இருக்கனும், படிப்பு முடியுற வரைக்கும். அது தான் அவளுக்கு நல்லது. இல்லனா அவளோட மைன்ட் அப்செட் ஆயிடும்” என மனதினுள் உறுதியெடுத்தவன் கரை தாண்டப் போகும் உணர்வலைகளை பிடரியை அழுந்தக் கோதி சமன்படுத்தினான்.

 

அவனது விலகலில் விலுக்கென நிமிர்ந்த பூர்ணி புரியாமல் பார்க்க “சாரி டி” என குற்றவுணர்வுடன் கூறி அறையை விட்டு வெளியேறினான்.

 

அவனது மனநிலை இவளுக்கு தெள்ளத் தெளிவாக புரியலானது. சில்மிசம், சீண்டல், கிண்டல், சிறு பார்வை என்று தான் இருந்தது இவர்களது உறவு! ஆயினும் இன்று உணர்வுகளை அடக்க முடிதாது தத்தளித்தான் அவன்.

 

நெருங்கிடது துடிக்கும் மனதை அவன் இழுத்துப் பிடித்து நிற்பதுவும், இப்போது நடந்து கொண்டதால் தனது உணர்வுகளைத் தூண்டியதற்கு அவன் குற்றவுணர்ச்சியில் மருகுவதும் புரிந்தது.

 

மனைவியின் மனநிலையை அறியாமல் அவளைத் தினம் தினம் நாடுபவர்களுக்கு மத்தியில், தனது மனைவிக்காக அவளது படிப்புக்காக தனது ஆசைகள் உணர்வுகளை மறைத்துக் கொண்டு நிற்கும் ரோஹன் அவள் மனதில் மென்மேலும் உயர்ந்து நின்றான்.

 

தனக்காக அவன் செய்பவை எத்தனை? ஆனால் அவனுக்காக அவள் இதுவரை என்ன செய்திருக்கிறாள்?

 

“ஏன் டா என் மேல இவ்ளோ பாசமா இருக்கே? வாய் திறந்து சொன்னா நான் என்ன வேண்டான்னா சொல்லிடப் போறேன். இப்போவே என்னை , என் மொத்தக் காதலையும் உனக்காக தந்துடனும் போல இருக்கு” என சொல்லிக் கொண்டாள் பூர்ணி.

 

பேக்கை மாட்டிக் கொண்டு வெளியில் வர பைக்கில் அவளுக்காக காத்திருந்தான் ரோஹன். எதுவும் பேசாமல் பின்னால் ஏறிக் கொள்ள என்றும் வளவளத்து சீண்டிக் கொண்டு வருபவன் இன்று வாயே திறக்காமல் தான் வந்தான்.

 

காலேஜில் இறக்கி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்திட அவன் முன்னே வந்து வழி மறித்தாள் அவள்.

 

“ஏய்ய் என்னடி பண்ணுற? திடுமுனு முன்னாடி வந்து நிக்கிற. செத்துட கித்துட போற” என்று கத்தினான்.

 

“தன்னோட புருஷனுக்கு எந்தவித சந்தோஷத்தையும் கொடுக்க முடியாதவளா இருக்குறத விட செத்துப் போறது எவ்ளோவோ மேல்” என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் சொல்ல, “ஒன்னு விட்டேன்னா தாங்க மாட்ட டி. என்ன பேச்சு பேசுற பூ” என்றவன் குரலில் வருத்தம் இழையோடியது.

 

“நீ என் கூட பேசாம இருந்தீனா இதுக்கு மேலயும் பேசுவேன் டா டால்டா” எனக் கூறி கையை ஓங்கியவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்து “பை டா புருஷா” என சிட்டாய் பறந்து விட, “லூசு குட்டி” என சிரித்துக் கொண்டவனின் கை அவள் முத்தம் கொடுத்த கன்னத்தை வருடியது.

 

……………………

அன்று விடுமுறை என்பதால் ஹாலில் இருந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன். அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர் பூர்ணியும், ரோஹனின் தங்கை துர்காவும்.

 

பூர்ணியின் சிரிப்பு சத்தம் கேட்கும் போதெல்லாம் அவளைப் பார்ப்பதும் முறைப்பதுமாக இருந்தான் ரோஹன். அதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்தவளைக் கண்டு “என்னண்ணி உங்க வீட்டுக்காரர் பார்வைல அனலடிக்குது? விட்டா நவீன கண்ணகியா மாறி பொசுக்கிடுவார் போல” என்று துர்கா நமட்டுச் சிரிப்புடன் கேட்க,

 

“துரு! என்னிக்கு தான் உங்கண்ணன் கூலா இருந்திருக்காரு? சரியான சிடுமூஞ்சு” என சத்தமாக சொன்னவளின் பேச்சு காதில் விழவும் அவளைப் பார்த்து, “ரூம்கு வாடி.. உனக்கிருக்கு” என அவன் வாயசைக்க “வர மாட்டேன் போடா” என அவளும் முறுக்கிக் கொண்டாள்.

 

ஸ்வீட் கொண்டு வந்த ரோஹனின் தாய் காமாட்சி “இந்தாடா! ஹேப்பி பர்த்டே” என்று அவனுக்கு ஊட்டி விட்டார்.

 

“அத்த எனக்கு இல்லையா” என்று பூர்ணி வாயைத் திறக்க, “உனக்கு பர்த்டே இல்லல்ல? ஸ்வீட் கொஞ்சூண்டு கூட கிடைக்காது. வாய மூடு கொசு போயிட போகுது” என கடுகடுத்தான் ரோஹன்.

 

“உனக்கெதுக்கு டா இவ்ளோ கடுப்பு? கேட்கலனாலும் நான் என் மருமகளுக்கு கொடுப்பேன்” என்று அவளுக்கும் ஊட்டி விட, அதை சப்புக் கொட்டி சாப்பிட்டவளோ அவனை மிதப்பாகப் பார்த்தாள்.

 

இரவாகியும் கூட அவனின் முறைப்பும் இவளின் கிண்டலும் குறைந்தபாடில்லை. அறையில் பூர்ணி ஃபோனை நோண்டிக் கொண்டிருக்க அவளை முறைத்துப் பார்த்தவனின் இதயத்தில் ஒரு வித வெறுமை சூழ்ந்து கொண்டது.

 

‘எதிர்பார்க்காத எல்லாரும் விஷ் பண்ணாங்க டி. ஆனால் ரொம்பவே எதிர்பார்த்த உன் விஷ் எனக்கு கிடைக்கவே இல்ல. எதையோ ரொம்ப மிஸ் பண்ணுற மாதிரி இருக்கு பூ. அப்படி என்ன கோவம் உனக்கு என் மேல? வாயத் திறந்து விஷ் பண்ணா குறைஞ்சா போயிடுவ’ என்று உள்ளுக்குள் பேசியவனின் இப்பொழுது ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது.

 

ஆனால் அவளோ அவனைக் கண்டுக்காமல் பப்ஜி விளையாடுவதிலேயே குறியாக இருந்தாள். காலைத் தரையில் உதைத்து விட்டு கட்டிலில் விழுந்தவனைப் பார்த்து விட்டு தானும் தூங்கிப் போனாள் பூர்ணியும்.

 

அலாரம் ஒலிக்கவும் “இப்போவே விடிஞ்சுருச்சா?” என முனகிக் கொண்டே கைகளை நீட்டி மடக்கி சோம்பல் முறித்தவன், நேரத்தைப் பார்க்க அதுவோ பதினொன்னு நாற்பத்தைந்து எனக் காட்டியது.

 

இந்த நேரத்தில் வைக்காத அலார்ம் ஒலித்ததில் புருவம் சுருக்கியவன் அருகில் பூர்ணி இல்லாததைக் கண்டு அதிர்ந்து போகலானான். டிங் டிங் ஒலியுடன் மேசேஜ் வர “கம் டூ பால்கனி” என்று அவளிடமிருந்து வந்திருந்தது குறுஞ்செய்தி.

 

அவசரமாக கதவைத் திறந்து பல்கோணிக்குச் செல்ல அங்கு நின்றிருந்தவளைக் கண்டு திகைத்துப் போய் நின்றான். கல்யாணத்துக்குப் பிறகு அவன் கேட்டும் கூட மறுத்து விட்ட பூர்ணி இப்போது ரோஜா வர்ண சாரியில் கூந்தலை விரித்து விட்டு விழிகளில் மை தீட்டி அழகோவியமாய்த் தோன்ற “வாவ் அமர்சிங்” தானாகவே முணுமுணுத்தன அவன் உதடுகள்.

 

அவளோ அவன் இதயத்தில் மேலும் உணர்வலைகளை உண்டு பண்ண அன்ன நடையிட்டுத் தான் அருகில் வரலானாள்.

 

“ஹேப்பி பர்த்டே டு யூ ரோஹி” என்று கண்களோடு கண் பார்த்துக் கூறி, அவனை இறுக அணைத்துக் கொண்டாள் பூர்ணி.

 

எங்கும் இருள். மேனியை சில்லிடச் செய்யும் குளிர் காற்று. அதிலும் மிக இறுக்கமான மனைவியின் அணைப்பு ரோஹனை வேறொரு உலகத்திற்கு இட்டுச் சென்றிட, அவளது வெற்றிடையில் பதிந்தன அவனது முரட்டுக் கரங்கள்.

 

“ரோஹி இந்தா” என அவனுக்குப் பிடித்த சாக்லேட்டை உடைத்து நீட்ட, கண்கள் பளிச்சிட வாங்கப் போனவனைத் தடுத்து, அதை தன் வாயில் வைத்துக் கொண்டு “இப்போ எடு” என்பதாக கண்களைக் காட்டினாள் அந்த சில்மிஷக்காரி.

 

அகல விரிந்த கண்களோடு அவனைப் பார்த்தவனின் பார்வை மாற, நெருங்கி அவள் இதழைச் சிறை செய்தான் அவன். அவள் இதழில் இருந்த சாக்லேட் அவனுள் இடம் மாற இருவரின் இதயங்களும் தடம் மாறத் துவங்கிற்று. சாக்லேட் போல அவன் கைகளில் உருகி, முத்தத்தில் கரைந்து போய்க் கொண்டிருந்தாள் பூர்ணி.

 

அவளிடமிருந்து விலகியவனோ அதற்கு மேல் தாமதிக்காது அவளை கைகளில் ஏந்திக் கொள்ள, அவனது கழுத்தைக் கைகளால் கட்டிக் கொண்டால் மாது. அவளை கட்டிலில் கிடத்தியவனோ ஏதோ ஒரு தவிப்புடன் அவளை நோக்க “இந்த பர்த்டே உனக்கு மறக்கவே கூடாது. உனக்கு லாஸ்ட் அண்ட் ஸ்வீட்டா நான் தர்ற கிப்ட் நானே தான். ஐ லவ் யூ டா! ஐ லவ் யூ சோ மச்” என கிறங்கிய குரலில் சொன்னாள்.

 

“ஆ..னால் படிப்பு?” என்று அவள் கன்னத்தை வருடிக் கொண்டே கேட்க, “இன்னும் டூ மன்த்ஸ் தானே இருக்கு. அதுக்குள்ள காலேஜ் முடிஞ்சிடும்” என்று கண் சிமிட்டினாள்.

 

மெலிதாக இதழ்கள் விரிய அவளை ரோஹன் தழுவிக் கொள்ள, அங்கு நிகழ்ந்தது ஒரு அழகிய காதல் சங்கமம்!

 

அன்றைய நிகழ்வை நினைத்துப் பார்த்த பூர்ணிக்கு இப்போதும் நாணம் வந்து குடி கொண்டது. கண்களும் கூட கலங்கித் தான் போயின. வயிற்றில் கையை வைத்து வருடிக் கொடுத்தாள்.

 

“பாப்பா! உன்ன பத்தி அப்பா கிட்ட சொல்லாததுக்கு என் கூட கோபமா இருக்கியா? சொல்லாமல் இருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன? ஆனா முடியல பாப்பா கஷ்டமா இருக்கு. உன் அப்பாவை என்னால ஏத்துக்க முடியல. நான் என்ன செய்வேன்? சீக்கிரமே என்கிட்ட வந்துரு டா. உனக்காக எப்படியாச்சும் அப்பா கிட்ட சொல்ல ட்ரை பண்ணுறேன். நீ வந்ததும் உன் அம்மாவ கஷ்டப்படுத்துனதுக்காக அவரை கதற விடலாம் சரியா?” என்று தனது குழந்தையுடன் பேசியவளுக்கு தலை வலிப்பது போல் இருக்க, படுத்து உறங்கிப் போனாள்.

 

…………………..

கார்டனில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அவள் மனமெங்கும் விஷ்வாவே நிறைந்திருந்தான். அவன் நேற்று பேசியதை நினைக்க நினைக்க மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.

 

“அவன் யாரோட பேசினா உனக்கென்ன?” என மனசாட்சி நக்கலாக கேட்க, “அதானே. நான் எதுக்கு அவனைப் பத்தி நினைச்சுட்டு இருக்கேன்” என்று சிலுப்பிக் கொண்டாலும் அவனது எண்ணங்களில் இருந்து மீள முடியவில்லை.

 

“எல்லாம் அவனால தான்” என வசை பாடியவளை நோக்கி “உனக்கென்னனு கேட்டுட்டு இப்போ திரும்பவும் அவனை நினைத்து திட்டிட்டு இருக்க? என்ன தான் உன் பிரச்சனை?” என்ற மனசாட்சியை முறைத்து,

 

“அவன் என்னைக் கூமுட்டை கூவாத மூட்டைன்னு எல்லாம் சொன்னது உனக்கு பொருட்டே இல்ல. நான் அவனைத் திட்டுறத மட்டும் பெருசா கேட்க வந்துட்டே. பேசாம போயிடு அவன் மேல் உள்ள வெறில உன்ன அசிங்க அசிங்கமா திட்டிடுவேன்” என முணு முணுத்தாள் கோபமாக.

 

“வைஷுமா” என்ற குரலில் திடுக்கிட்டவள், “சொல்லுங்க அண்ணா” என மித்ரனைப் பார்த்தாள்.

 

“ஒன்னுல்ல டா சும்மா தான் வந்தேன். என்ன பண்ணிட்டு இருக்கே?” என்று கேட்க, “பூரி இல்லாததுல போரடிக்குது. அதான் கார்டன்ல வந்து இருக்கேன்” என பதிலளித்தாள்.

 

அவளே நோக்கி “எனக்குமே செம போரிங்கா இருக்கு. நம்ம வெளியில எங்காவது போயிட்டு வரலாம். வரியா?” என்று கேட்டான்.

 

“இதெல்லாம் முடியாதுன்னு சொல்லுவேனா? போகலாமே ஜாலி” என்று சிறு குழந்தையாய் குதூகளித்தாள் வைஷு.

 

பின் அவளும் “எங்க போகலாம்? பார்க்? ஹூம் வேணாம் வேணாம் பீச் போகலாமா?” என ஆர்வமாக வினவினாள்.

 

சிறு வயது முதலே பீச் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் அவ்வளவாக அங்கு சென்றதில்லை. ஆசிரமத்தில் அழைத்துச் சென்றாலுமே அதிக நேரம் செலவிவிடாமல் அழைத்து வந்து விடுவர்.

 

” டபுள் ஓகே” என்றவனின் மனம் எதையோ நினைத்துக்கொள்ள இதழிலும் குறுநகை படர்ந்தது.

 

“என்ன மித்து டார்லிங்? பீச் என்று சொன்னவுடனே முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது. அக்ஷு கூட எப்பவும் போவியோ” என இடுப்பில் கைகோர்த்து பாவனையாக கேட்டாள் வைஷு.

 

“போடி வாயாடி! அப்படியே அவள் என்னோட ஜோடி போட்டு வந்துட்டாலும். காலேஜ் டேஸ்ல எல்லாம் நானும் விஷுவும் அடிக்கடி பீச்சுக்கு போவோம். மணல்ல உட்கார்ந்து, ஒருத்தர் தோள்ள ஒருத்தர் சாஞ்சு மனசு விட்டு பேசிட்டு இருப்போம். சின்ன வயசு ஞாபகங்கள பேசும் போது நாமளும் அந்த வயசுக்கே போயிட்ட மாதிரி ஃபீல் ஆயிடும்” என்றவன் குரலில் அத்தனை மென்மை.

 

அவன் சொல்வதைக் கேட்டு என்றும் போல் அவர்களது நட்பின் சிலிர்த்து நெகிழ்ந்து தான் போனாள் காரிகை. தனக்கும் இப்படி ஒரு நட்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கமும் கூட துளிர்த்தது அவளுள்.

 

“அடடே நான் கூட உங்க பிரகாசத்துக்கு பின்னால இருக்கிறது காரணம் அக்ஷுனு நெனச்சேன். ஆனா அது உங்க லவ்வர் விஷ்வாவா?” என போலியாக வியக்க, “அவன் என் லவ்வருக்கும் மேலடா” என்று சிரித்தான் மித்ரன்.

 

“நீங்க ரெண்டு பேரும் கிளப்புக்கு போவீங்களா” என்று வைஷு அவனை ஏறிட்டு நோக்க, “நோ! அவ்வளவா போனதில்ல. விஷுக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது. ஒரு தடவ பிரண்ட் பார்ட்டிக்கு போய் ஒரு பொண்ணு டான்ஸ் ஆடக் கூப்பிட்டு டார்ச்சர் பண்ணதிலிருந்து அவனுக்கு சுத்தமா பிடிக்காம போச்சு” என்று சொல்லி இதழ் விரித்தான் ஆடவன்.

 

“அட மக்கு அண்ணா! அவன் உங்களுக்கு தெரியாம போயிட்டு இருக்கான். இது தெரியாம அவனுக்கு புகழாரம் சூட்டுறீங்க” என்றவளைப் பார்த்து புருவம் சுருக்கி” என்ன சொன்னே?” என்று புரியாமல் தான் வினவினான் மித்ரன்.

 

“உங்க பிரெண்ட் எவ்வளவு நல்லவரு வல்லவரு என்று புகழ்ந்தேன்” பற்கள் முப்பத்திரண்டையும் காட்டி இளித்தபடி சொன்னாள் வைஷு.

 

“ஓஹ்” எனக் கூறி தலையசைத்தான் அவன்.

 

‘அவன் எமகாதகன்! கிளப்னாலே பிடிக்காதாம். ஆனா அங்க இருக்குற பொண்ணுங்கள பிடிக்குமாம். டான்ஸ் ஆடப் பிடிக்குமாம்.அவங்கள மறக்காம ஞாபகம் வெச்சு கொஞ்சிக் குலாவ பிடிக்குமாம். அண்டப் புளுகன்” அள்ள அள்ளக் குறையாமல் வசவு விழுந்து கொண்டிருந்தது விஷ்வாவுக்கு, அவனது வருங்கால மனையாளிடமிருந்து.

 

தனக்குள் பேசிக் கொண்டிருந்தவளை மித்து விசித்திரமாகப் பார்த்து புருவம் சுருக்க, அசடு வழிந்து கொண்டே போய் ஆயத்தமாகி வந்தாள். இளம் நீலநிற சுடிதாரில் தேவதையாக திகழ்ந்த வைஷுவைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தபடி மித்து பைக்கில் ஏற, அவள் பின்னே அமர்ந்து கொள்ள பைக்கை ஸ்டார்ட் செய்தான் அருள் மித்ரன்.

 

பெண்ணவள் கைகளை விரித்தபடி அந்த பயணத்தை ரசித்துக் கொண்டு வர “பாப்பா கை நீட்டாதடா. கவனமா பிடிச்சுக்கோ” என கண்டித்தவன், “ஏதாவது ஏடாகூடமா ஆச்சுனா விஷ்வாவுக்கு நான் தான் பொறுப்பு சொல்லணும்” என கிண்டலாக சொன்னான்.

 

“போங்கண்ணா. எதுக்கு அவனோட பேரை இழுக்குறீங்க? அவன் கிடக்குறான்” என இருந்த கடுப்பில் கத்தி விட்டாள் வைஷ்ணவி.

 

“ஏய் வாலு! என்ன தைரியம் இருந்தா என் முன்னாடியே என் மாப்ளய அவன் இவன்னு சொல்லுவ?” என பொய் கோபத்தில் கேட்டான் அவன்.

 

“அவனும் அவன் மண்டையும்” என நொடித்து விட்டு “அண்ணா எப்போ என் அண்ணிய கண்ணுல காட்டுவ? அவங்களை பார்க்க ஆசையா இருக்கு” என ஆர்வமானாள் மித்துவின் பாப்பா.

 

“நான் காட்ட மாட்டேன்னா சொன்னேன்? போன்ல போட்டோ இருக்குல்ல. எடுத்து பாரு” என்று தோளைக் குலுக்கினான் மித்ரன்.

 

இடம் வலமாக தலையாட்டி “இல்லணா! எனக்கு ஃபோட்டோ எல்லாம் வேண்டாம். நேர்ல தான் மீட் பண்ணனும். அப்புறம் உன்னை மிரட்டி அடக்கி வச்சுக்க சொல்லி சொல்லிடனும்” என அப்பாவியாக சொன்னவளைக் கண்ணாடி வழியாகப் பார்த்து முறைதான்.

 

“அப்போ நான் அவள காட்டவே மாட்டேன்” என்று பழிப்புக் காட்டியவன் பீச்சில் பைக்கை நிறுத்தினான்.

 

துள்ளி குதித்து அவள் ஓட “நீ உண்மையிலயே பாப்பா தான் வைஷுமா” என சொல்லிக் கொண்டே அவள் பின்னால் சென்றான் மித்து.

 

கடலலைகளில் காலை நனைத்து விளையாடிக் கொண்டிருந்த வைஷு மித்ரனின் அருகில் வந்து அமர்ந்திட, “என்னம்மா இப்போ தான் என்னோட ஞாபகம் வந்துச்சா?” என முகத்தைத் திருப்பிக் கொள்ள,

 

“சாரி மித்து! பீச்ச கண்ட உடனே எல்லாமே மறந்து போச்சு. இங்க வந்து, இப்படி எல்லாம் இருந்து எவ்ளோ நாள் ஆகுது தெரியுமா? அதுலயும் ஆசிரமத்துல கூட்டி வந்தா அங்க போகாத இங்க இரு இப்படி உட்காருனு எங்களை கண்ட்ரோல் பண்ணிட்டே இருப்பாங்க. ஆனா இன்னிக்கு எவ்வளவு சுதந்திரமா ஃபீல் பண்ணுறேன் தெரியுமா. என் அண்ணா கூட வந்திருக்கேனே. சொல்ல முடியாத சந்தோஷம் மனசுல” என கண்கள் மின்ன சொன்னவளின் கூற்றில் இருந்த ஏக்கமும் உண்மையும் இவன் மனதைச் சுட்டது.

 

அவளைத் தோளில் சாய்த்து “இது வரை நீ எப்படி இருந்தியோ தெரியல வைஷு மா. ஆனால் இனிமேல் ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமாக இருக்கணும். நான் இருக்க வெப்பேன்” உறுதியுடன் கூற, மகிழ்வுடன் அவளைப் பார்த்துச் சிரித்தாள் மித்ரனின் அன்புத் தங்கை.

 

அதே வேளை மித்துக்கு முக்கியமான கால் ஒன்று வர எழுந்து தூரமாக செல்ல, வைஷு தனது ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

 

வாட்ஸ் அப்பில் விஷ்வா ஸ்டேட்டஸ் போட்டு இருப்பதைக் கண்டு அதை டவுன்லோட் பண்ணியவளின் விழிகள் அதிலேயே நிலை குத்தி நின்றன. விஷு ஒரு பெண்ணின் கழுத்தில் கை போட்டு இருக்க, அவள் இவனைச் சிரிப்புடன் நோக்குவதாக இருந்த ஃபோட்டோவை ‘வித் மை டோலி’ என்று ஸ்டேட்டஸில் வைத்திருந்தான்.

 

இதுவரை இருந்த மனநிலை மாறி கோபம் சுறு சுறுவென ஏறத் துவங்கிற்று. அதில் உள்ள பெண் அக்ஷரா என்பது தெரியாமல் விஷ்வா மேல் கோபம் கொண்டாள் பேதையவள்.

 

“டோலியாமே டோலி! என் முன்னாடி மட்டும் வந்தா நீ காலி டா.கல்யாணம் முடியட்டும் அப்பறம் உன்னை என்ன பண்றேன்னு மட்டும் பாரு. ஆசை ஆசையா எனக்கு ஒரு பெயர் வெச்சு இருப்பியா? அதை விட்டுட்டு கண்டவள் எல்லாம் பேபிமா, டோலி, முட்டை போடுற கோழினு” என கண்டபடி சத்தமாக திட்டித் தீர்த்தாள்.

 

“யார இவ்ளோ பாசமா திட்டுற” என்று பின்னிருந்து ஒரு குரல் கேட்க, “வேற யாரு அந்த எருமைக் கடா. அதான் அந்த சீன் பார்ட்டி விஷ்வாவ தான்” என உளறியவள் சடாரென திரும்ப, எதிரில் நின்றவனைக் கண்டு அதிர்ந்து போய் நின்றாள் விஷ்வாவின் நவி!

 

பேன்ட் பாக்கெட்டினுள் கை விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தபடியே நின்றிருந்தான் வைஷ்ணவியின் இத்தனை நேர கோபத்திற்கும் இப்போதைய அதிர்வுக்கும் காரணமான விஷ்வஜித்.

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!