❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️
நிலவு 19
உதய்யின் வீட்டு வாசலில் நின்றிருந்தனர் உதய் அதியா மற்றும் ஷாலு மூவரும்.
ஏற்கனவே அங்கு வந்திருந்த சுமதி ஆரத்தி எடுக்க தன்னவள் பக்கம் திரும்பி “வெல்கம் மிஸ்ஸிஸ் உதய வர்ஷன்” என உள்நோக்கி கை காட்டினான் புன்னகையுடன்.
அவனைப் பக்கவாட்டாக பார்த்தவள் அவனது கையைப் பிடித்து மறு கையால் ஷாலுவைப் பிடித்து தன் புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள் அதியப் பெண்ணவள்.
சுமதி வேலை இருப்பதாகக் கூறி சென்று விட பூஜையறையில் விளக்கேற்ற வைத்து விட்டுத் திரும்பிய அதியாவை “வாங்க இதயா” என்று அழைத்து அவளுக்கு ஓரிடத்தில் கைகாட்டினான் உதய்.
அங்கு பார்த்தவளின் விழிகள் அகல விரிந்தன. அவளது தந்தையின் ஆளுயரப் புகைப்படத்தை ஃப்ரேம் செய்து வைத்திருந்தான் காதலன்.
“அப்பா….!!” என்று நாத்தழுதழுக்க அவனைப் பார்க்க, “ம்ம் உங்க அப்பா! என் ராவ் அங்கிள். அவர் கிட்ட ஆசீர்வாதம் வாங்கலாம்” என்றவனோடு சேர்ந்து அவர் தன் முன் நிற்பதாக நினைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.
“நல்லா இருங்க” என்ற அவளது தந்தையின் குரல் கேட்க கண்கள் கலங்க நிமிர்ந்து “உதய்…!!” என்று அவனை நோக்கினாள் அதி.
“எஸ் உதய்! உதய வர்ஷன். வாங்க போய் உட்காரலாம்” என இருவரும் சோபாவில் அமர்ந்தனர். ஷாலு உதய்யின் அலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
“அப்பா வாய்ஸ் எப்படி?” புரியாமல் கேட்டாள் அவள்.
“நான் ராவ் அங்கிள் கூட கால் பேசும் போது சம் டைம்ஸ் அவர் வாய்ஸ்ஸ கேட்கலாம்னு ரெக்கார்ட் பண்ணிப்பேன். அது அவருக்கும் தெரியும். அதுல ஒரு நாள் நல்லா இருங்கன்னு சொன்னதும் ரெக்கார்ட் ஆகி இருந்தது. அதை மட்டும் கட் பண்ணி உங்களுக்காக இந்த டைம்ல போட்டேன்”
“உன்னை பாசத்துல மிஞ்ச யாரும் இல்ல டா. எனக்காக எவ்வளவு யோசிச்சு இருக்கே. நான் எதிர்பார்க்காத சின்ன சின்ன விஷயங்களை நீயாவே செய்கிற. ஐ அம் வெரி லக்கி டு ஹேவ் யூ கண்ணா” அவனது கையைப் பிடித்து அழுத்தினாள்.
“நான் உங்க சந்தோஷத்துக்காக தான் பண்ணுறேன். என் கண்ணம்மா சந்தோஷமா இருக்கணும். அது போதும்” என்று முடியைக் கோதிக் கொண்டான் காளை.
“உன் கூட இருந்தா யாருமே துளி கூட கவலை இல்லாமல் ரொம்ப ஹேப்பியா இருப்பாங்க. அப்படி ஒருத்தன் டா நீ!” அவனை விழிகளில் அன்பு ததும்பப் பார்த்தாள் பாவை.
“அங்கிள்! இனிமேல் நானும் அத்துவும் உங்க கூட இருக்க போறோமா?” உதயினது மடியில் வந்தமர்ந்தாள் ஷாலு.
“ஆமா கியூட்டி! சூரியனும் நிலாவும் நட்சத்திரமும் எப்படி ஒரே வானத்தில் தோன்றுமோ அதே மாதிரி நாம மூணு பேரும் ஒன்னாவே இருப்போம்”
“சூரியன் நீங்க, நிலா அத்து, நான் ஸ்டார்! அப்படித்தானே?” மழலை மொழியில் கேட்டாள் சிறுமி.
“அச்சோ சோ ஸ்வீட் என் க்யூட்டி! அப்படியே தான். உன் ஸ்கூல்ல எப்போ ஸ்போர்ட் மீட் இருக்கு?”
“இன்னும் அஞ்சு நாள் இருக்கு அங்கிள்” என்று ஐவிரல்களையும் காட்டினாள் அவள்.
“பாப்பாவை ரன்னிங் ரேஸ்க்கு போட்டு இருக்காங்க. அவ போக முடியாதுன்னு அடம் பிடிக்கிறா உதய்” என சோகமாகக் கூறினாள் அதியா.
“ஏன் முடியாதாம்?” அவளை நோக்கினான் உதய்.
“அதை உன் நோட்டிக்கு கியூட்டிக்கிட்டே கேட்டுக்க” என்று கழுத்தை வெட்டிக் கொண்டாள் அவள்.
“கியூட்டி” என அவள் பக்கம் திரும்ப, முகத்தை உப்பிக் கொண்டு, “எனக்கு தூக்கமா வருது. நான் தூங்க போறேன்” என அவன் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்ட ஷாலுவைப் பார்த்து முகம் வாடினாள் அவளது அத்தை.
“கூல் அதிமா.. நான் அப்புறமா மெதுவா இருந்து என்னன்னு பேசிக்குறேன். அவளுக்கு டயர்டா இருக்கும்ல” என தன்னவளை சமாதானப்படுத்தினான் கணவன்.
இரவாக உதய் கடைக்குச் சென்று உணவு வாங்கி வர மூவரும் சாப்பிட்டு முடித்தனர். வானத்தைப் பார்த்திருந்த உதய்யிடம் வந்தமர்ந்தாள் அதி. ஷாலு பக்கத்து அறையில் தூங்கி இருந்தாள்.
அதி அவனைப் பார்ப்பதும் கைகளைப் பிசைவதுமாக இருக்க அவனும் அவளை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் வேறெங்கோ பார்வையைச் செலுத்தினாள்.
“டேய்..!! நான் பார்க்குறது புரியுதுல்ல. அப்புறம் ஏன் சும்மா இருக்க” உள்ளூர எழுந்த சிறு கோபத்துடன் கேட்டாள் காரிகை.
“சும்மா இருக்கேனா? நோ அதி குட்டி. உங்க பார்வையில் மெழுகு மாதிரி உருகி போய் நின்னுட்டு இருக்கேன்” அவளைப் புன்னகையுடன் நோக்கினான் வர்ஷன்.
“இன்னும் சொல்லு. ஐஸ்கிரீம் மாதிரி கரைஞ்சுட்டு இருக்கேன். பனிக்கட்டி மாதிரி குளிர்ந்துட்டு இருக்கேன்னு” எகிறினாள் அவள்.
“நீங்க எதுக்கு எரிமலை மாதிரி வெடிச்சுட்டு இருக்கீங்க?” என்று புருவம் தூக்கினான் அவன்.
“நான் உன்னை பார்த்துட்டு இருக்கிறது தெரிந்தும் ஏன் அமைதியா இருக்கே?”
“சூரியகாந்தி பூன்னா அது சூரியன் பக்கம் திரும்பி அதை மட்டுமே பார்த்துட்டு இருக்குறது வாஸ்தவம் அல்லவோ? அதே மாதிரி நிலவுப் பூவும் இந்த உதய சூரியனோட முகத்தை பார்த்துட்டு இருக்கிறது வழக்கம் தானே? அதனால கேட்காம விட்டுட்டேன்” அவனது முரட்டு அதரங்களில் குறும்பு மேடை போட்டு தாண்டவம் ஆடியது.
“நீ கவிஞனாகி எங்கேயோ போயிருக்க வேண்டியவன் டா” என்று கடுப்புடன் மொழிந்தாள்.
“புகழ்ந்தது போதும். என்ன சொல்ல வந்தீங்கன்னு சொல்லுங்க” என்று அவன் கேட்க,
சீரியசாக முகத்தை மாற்றியவள் “அது.. சுமதிக்கா இன்.. இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடத்தணும்னு சொன்னாங்க” ஒஒருவாறு வார்த்தைகளைக் கோர்த்து சொல்லி முடித்து விட்டாள்.
“அதுக்குன்னு இன்னைக்கே நடக்கனும்னு இல்லையே? இன்னும் நாம் நிறைய நிறைய காதலிக்கணும். காதலிச்சுட்டுத் தான் இதெல்லாம் நடக்கணும்னு சொல்லல. இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே! நமக்குள்ள இருக்கிற உறவை யாரும் ஒரு வார்த்தை தப்பா சொல்லி கொச்சைப்படுத்திடக் கூடாதுன்னு தான் இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணுனேன். இப்போ நீங்க என் மனைவி அதை இந்த ஊரு உலகத்துக்கு சட்டரீதியாக தெரிய படுத்திட்டோம். உங்க முடிவு என்ன?” அவளது கையைத் தன் கையில் சிறைப்படுத்திக் கொண்டான்.
“எனக்கும் உன் முடிவுல சம்மதம் தான். ஏதோ சுமதிக்கா சொன்னாங்கன்னு சொன்னேன்” என்றவனின் மடியில் தலை வைத்துக் கொண்டான் உதயன்.
அவளது கை தானாக உயர்ந்து அவனது அடர்ந்த முடிக் காட்டிற்குள் நுழைந்து மென்மையாகக் கோதி விட்டது.
“உனக்கு என்னை ஏன் பிடிச்சது கண்ணா?” அவன் நெற்றியில் புரண்ட முடியை மேலே தள்ளி விட்டாள்.
“சரியா சொல்ல தெரியலைங்க. பெண்டானு நெனச்சி என்னை ஓடி வந்து ஹக் பண்ணுன உங்க குழந்தைத்தனமான செய்கையா இருக்கலாம். நான் ஒரு பையன்னு தெரிஞ்சதும் அதிர்ச்சியோடு விரிந்த அந்த முட்டைக் கண்ணா இருக்கலாம். சாரி சொல்லி படபடன்னு அடிச்சுகிட்ட இமைகளா இருக்கலாம்.
நீங்க அந்த நேரம் ஷாலுவுக்குக் கொடுத்த அன்பான முத்தமாக இருக்கலாம். உங்க முகத்தில் நான் பார்த்த ராவ் அங்கிள் முகமா இருக்கலாம். இதயா இல்லை அதியான்னு திருத்தின அந்தக் கோபமா இருக்கலாம்” அவளது கையை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான் வர்ஷன்.
“எனக்கு உன்னை பிடிச்சது ஏன்னு கேட்டா இவ்ளோ விளக்கம் சொல்லிட்டு இருக்க மாட்டேன் வர்ஷ். ஏன்னா ஒரு கேள்வி கேட்டா வாய் மூடாம லொட லொடன்னு கொட்டுற இந்த பேச்சுதான் காரணம்னு பட்டுன்னு சொல்லிருவேன்.
அப்புறம் எப்போவுமே மறையாம இருக்குற இந்த அழகான புன்னகையும் மாய வர்ஷனை இந்த இதயத்தில மாயமா நுழைய வெச்சது” அவனது கன்னத்தைக் கிள்ளி விட்டாள் வஞ்சி.
“தூக்கமா வருதும்மா!என் வாழ்க்கையில் எனக்கான ஒரு உறவு என் பக்கத்துல கிடைச்சதாலயோ நிம்மதியா மன நிறைவோடு தூங்க போறேன்” என்று எழுந்து கட்டிலில் சரிந்தவனைக் காதலுடன் பார்த்தவளும் அவனருகில் தூங்கிப் போனாள்.
சூரிய கதிர்களின் சில்மிஷங்கள் வர்ஷனின் அறைக்குள்ளும் நாகரிகமின்றித் தொடர்ந்திட அதில் கண்கள் கூச எழுந்தமர்ந்தாள் அதியா.
“குட் மார்னிங் பாப்பு மா” என்று கண்களைத் திறந்த மறு கணம் அவளின் கைகளில் தட்டுப்பட்டது ஈரம் காயாத தாலி! அதுவே அவள் இருக்கும் இடத்தை அடித்துக் கூற தன்னவனை ஆவல் பொங்கத் தேடினாள்.
“வொன்டர்ஃபுல் மார்னிங் இதயா” என்று அறைக்குள் நுழைந்தான் அவளது தேடலின் நாயகன்.
“சேம் டு யூ டா! பாப்பா எங்கே?” என்று கேட்க, “இதுவும் இருக்கேன் அத்து” என்று உதய்யின் பின்னால் இருந்து எட்டிப் பார்த்தது வாலு.
குளித்துப் புது உடைக்கு மாறியிருந்த அண்ணன் மகளை வியந்து பார்த்தாள் அதி.
“இன்னைக்கு வர்ஷு என்னைக் குளிப்பாட்டி ட்ரஸ் போட்டு விட்டார். காபி கூட குடிச்சாச்சு” என்று சொன்ன ஷாலுவின் பேச்சில் கடிகாரத்தைப் பார்க்க அதுவோ ஒன்பது மணியைக் காட்டியது.
“காட்! இவ்ளோ நேரம் அசந்து தூங்கிட்டேனா? சாரி உதய்” என மன்னிப்பை யாசித்தாள் மாது.
“உங்களை மாதிரி அழகான பொண்ணு, அதாவது என் ஸ்லீப்பிங் பியூட்டியை சைட் அடிக்க ரொம்ப நேரம் கிடைச்சதுக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும். சாரி வேண்டாம்” என்று கண் சிமிட்டினான் ஆடவன்.
அவனது இந்த வார்த்தைகள் அவனை முதன் முதலில் பார்த்து அணைத்ததற்கு சாரி கேட்ட போது இது போன்று சொன்னதை நினைவுபடுத்த அன்று யார் என்றே தெரியாமல் அறிமுகமானவன் இன்று அவள் பிறரிடம் ‘மிஸஸ் உதய வர்ஷன்” என்று அறிமுகமாவதற்கு உரிமையான கணவனாகி விட்டதில் கடவுளின் விளையாட்டை வியந்தாள் அதிய நிலா.
“நாங்க ஹால்ல இருக்கோம். நீ டக்குனு வா அத்துக் குட்டி” என்ற ஷாலு துள்ளிக் குதித்து ஓட தலையசைப்புடன் எழுந்து முகத்தில் விழுந்திருந்த முடியை செவியோரம் சொருக எழுந்த தனது கையைப் பார்த்தவளின் இதயம் திக்கென அதிர்ந்தது இன்பமாக.
மெஹந்தி போடப்படாத ஒரு கையில் அவளது முகத்தை அழகாக, மிக நுட்பமாக மெஹந்தியால் வரைந்திருந்தான் காதலன். “டேய் உதி என்ன இது?” பொய்யான அதட்டலுடன் கேட்டாள் வர்ஷுவின் காதல் தேவதை.
“என் அழகியோட முகத்தை நான் ரசிச்சு எழுதினது” என்றான் அவன். அவள் தூங்கியதும் மெதுவாக எழுந்த உதய் அவளது முகத்தைப் பார்த்து அவள் கையில் அழகாக வரைந்தான். அது உலரும் வரைக்கும் அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவன் மீண்டும் தூங்கிப் போனான்.
“ஓஓ! இதற்காகத் தான் அன்னிக்கு இந்தக் கையில் மெஹந்தி போடலையா? அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கவே இல்லடா கேடி” அவனது மீசையைப் பிடித்து இழுத்தாள்.
“என்னை யஷுனு கூப்பிட மாட்டீங்களா பெண்டா பேபி?” என்று குரலில் ஏக்கம் துளிர்க்கக் கேட்டான் அவன்.
“கூப்பிட மாட்டேன்னு சொல்லலையே. கண்டிப்பா கூப்பிடுவேன். ஆனா இப்போ இல்லை” என்றதும், “ஓகே ஐ அம் வெயிட்டிங்” என்று குறும்புப் புன்னகையுடன் சொல்லிச் செல்ல அவனது முதுகைப் பார்த்து பறக்கும் முத்தத்தைக் கொடுத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இவ்வாறு இரண்டு நாட்கள் ஆணவனின் காதல் கலாட்டாவிலும், அழகுப் பதுமையவளின் அன்பான அதட்டலிலும், அழகிய குட்டி ராட்சசி ஷாலுவின் மகிழ்வான கண் சிமிட்டலிலும் அட்டகாசமாக நேரங்கள் நகர்ந்து சென்றன.
இன்னும் மூன்று நாட்களில் ஷாலுவின் பாலர் பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டி என்றிருக்க அறையில் விளையாடிக் கொண்டிருந்த ஷாலுவின் அருகில் வந்தமர்ந்தான் உதய். அதி கிட்சனில் சமைத்துக் கொண்டிருக்க “கியூட்டி” என்று மெதுவாக அழைத்தவனை திரும்பிப் பார்த்தாள் கியூட்டி.
“அங்கிள் ஒன்னு கேட்டா கேட்பேன். என் கூட பாசம் இருக்குனா உண்மைய சொல்லணும் சரியா?” என்று கேட்க தலையை ஆட்டினாள் அவள்.
“நீ எதுக்காக ரன்னிங் ரேஸ்க்கு போக மாட்டேன்னு சொல்லுற? என்னாச்சு டா? உனக்கு கால் வலி ஏதாச்சும் இருக்கா? இல்ல பயமா இருக்கா?”
“இல்லை எனக்கு கவலையா இருக்கு வர்ஷு”
“கவலையா? போன தடவை பார்டிசிபேட் பண்ண தானே?” கேள்வியாய் அவள் முகம் பார்த்தான்.
“ஆமா போனேன் அங்கிள். எங்க க்ளாஸ் பசங்க ஓடும் போது அவங்க அப்பா அம்மா எல்லோரும் கமான் கமான்னு அவங்க பெயர் சொல்லி சப்போர்ட் பண்ணுனாங்க.
ஆனா என் பெயரை யாருமே சொல்லல. எனக்கு யாரும் கை தட்டலை. எனக்கு அழுகையா வந்தது. எனக்குத் தான் அப்பா இல்லையே! கிரிஷ் அப்பா அவனைத் தூக்கி ஹக் பண்ணி கிஸ் பண்ணாரு தெரியுமா?” விசும்பலுடன் சொன்னாள் சிறுமி.
இத்தனை நாள் புதைந்து கிடந்த அவளது ஆழ்மன ஏக்கம் இப்போது வெளிவந்தது.
“பட்டுக் குட்டி” என்று அவள் கன்னங்களைக் கையில் ஏந்திய உதய் “உன் அத்தைக் குட்டி உனக்கு அம்மாவா அப்பாவா எல்லாமுமா இருக்கா. நீ சின்ன பொண்ணுல்ல அதான் உனக்குப் புரியல. நீ இதை அவங்க கிட்ட சொல்லாத. இனிமேல் நீ ஃபீல் பண்ண கூடாது! அங்கிள் மேல நம்பிக்கை இருக்கா?” என்று கேள்வி எழுப்பினான்.
“இருக்கு இருக்கு” என்று அவசரமாக தலையை உருட்டி ஒத்துக் கொண்டாள்.
“அப்படின்னா நீ ரன்னிங் ரேஸ்ல கலந்துக்கணும்! உனக்கு அப்பாவா நான் இருப்பேன் டா ப்ராமிஸ். அத்துவும் உனக்கு முன்னை விட சப்போர்ட் பண்ணுவா சரியா?” என்று கொஞ்சியவனிடம்,
“ஓகே டன் வர்ஷு” என சம்மதித்து விட்டு அவன் மடியில் சாய்ந்தவளின் கை வர்ஷுவின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள மெல்லமாய் உறக்கத்தைத் தழுவினாள் ஷாலு.
அவளது தலையை வருடி முத்தம் கொடுத்தான் அவன்.
“வர்ஷ்! பாப்பா தூங்கிட்டாளா?” என வந்தாள் அதியா.
“ஆமா டயர்டா இருந்திருப்பா அதான் டக்குனு தூங்கிட்டா. அப்புறம் ஒரு குட் நியூஸ். கியூட்டி ரேஸ்ல கலந்துக்க போறா”
“ஏன் முடியாதுன்னு சொன்னான்னு கேட்டியா?” என்றதும், “அது எதுக்கு இதயா? அவ தான் ஒத்துக்கிட்டால்ல அது போதுமே” தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு பதிலளித்தான் உதய்.
“எனக்குத் தெரியும் டா. அவள் பேசினது எல்லாம் நான் கேட்டேன். நான் அவளை சரியா பார்த்துக்கலையா டா? எனக்கு கில்டியா இருக்கு. அவளுக்குத் தேவையான எல்லாத்தையுமே கொடுத்துட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன். அப்படி இல்லல்ல? ஒரு அம்மாவால மட்டுமே தாய்ப் பாசத்தைக் கொடுக்க முடியும்” ஷாலுவின் தலை கோதியவளின் குரல் கரகரத்தது.
“எக்ஸாக்ட்லி…!! தாய்ப்பாசத்தை ஒரு தாயால மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் அதையும் மீறிய அளவில்லாத பாசத்தை நீங்க ஷாலுவுக்கு கொடுக்குறீங்க அதி. நீங்க கொடுக்கிறதால உங்களுக்குப் புரியல. உங்களை பற்றி தெரியாததால வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு புரியாது. உங்க பக்கத்துல இருந்து பார்க்கும் போது நான் உணருறேன். ஃபீல் பண்ண இதுல அவசியமே இல்லம்மா”
“நோ உதய்! நான் அன்னிக்கு அவளை என்கரேஜ் பண்ணி இருக்கணும். எனக்கு காய்ச்சல், தொண்டை வேற கட்டிக்கிட்டு வாய்ஸ் அப்செட் ஆயிருச்சு, இதுல என்னால எந்திரிக்க முடியல அதான் ஓரமா பெஞ்சில் உட்கார்ந்து அவளை பார்த்துட்டு இருந்தேன்.
அவ வின் பண்ணலனாலும் என் கிட்ட வந்து சந்தோஷமாத்தான் பேசினா. அவ மனசுல இப்படி ஒரு ஏக்கம் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சு” நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டாள் பெண்.
“ஓகே டா! இதில் உங்க தப்பு எதுவும் இல்லை. இதை விட்டு வெளியே வாங்க. ஷாலுவை கலந்துக்க வச்சு வின் பண்ண வைத்து விடலாம்” என்று ஆறுதல் கூறியதும் சற்று தெளிந்து தலையாட்டினாள்.
“அப்புறம் என்னை எப்போ வின் பண்ண வைப்பீங்க?” என்று வினவியவனை,
“நீ வின் பண்ணனுமா? உனக்கு ஏதாச்சும் போட்டி இருக்கா” என புரியாமல் ஏறிட்டாள் அதியா.
“அய்யோ என் அறிவுக்கொழுந்தே! என்னை யஷுனு கூப்பிட்டா போட்டியில் மட்டுமல்ல இந்த உலகத்தையே வெற்றி கொண்டதா ஃபீல் பண்ணுவேன். அதைத்தான் சொன்னேன்” கண்களை மூடித் திறந்தான் ஆடவன்.
“சைடு கேப்ல இதை எடுத்து விட்றுவியே கில்லாடி”
“இல்லனா? நான் உங்க புருஷன் மா! கொஞ்சம் கூட கண்டுக்காம இருக்கீங்க” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான் வேங்கை.
“இல்லையே தினமும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். நான் பார்க்காத நேரம் கள்ளமா பார்க்கிறது. பார்க்கற நேரம் கண்ணடிக்கிறது. தூங்குற நேரம் என்னை ரசிக்கிறது எல்லாமே தெரியும்.” என்றாள் அதி.
“நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். என்னை முன்னாடி போக விட்டு பின்னாடி இருந்து ஃப்ளையிங் கிஸ் கொடுக்கிறதை கண்ணாடி வழியா பார்த்திருக்கேன் கண்ணம்மா” என்று கண்களைச் சிமிட்டியவனைக் கண்டு,
“அச்சோ பார்த்துட்டியா?” என்று ஒற்றை கண்ணை மூடி நாக்கைக் கடித்துக் கொண்டாள் அக்கள்வனின் காதல் கள்ளி.
“யாஹ்! ஆனால் அது எனக்கு டைரக்ட்டா கிடைக்கலயேனு ரொம்ப ஃபீலிங்” உதடு பிதுக்கியவனை உதட்டுக்குள் உதித்த உவகையுடன் நோக்கினாள் ஊர்வசியவள்.
அடுத்த நாள், ஓரிடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய உதய்யுடன் ஆவலுடன் சென்றனர் அதியும் ஷாலுவும்.
அவன் வண்டியை நிறுத்தியது ஒரு ஆசிரமத்தில்! அன்று அவனது பர்ஸில் இருந்த ஃபோட்டோவில் பார்த்து அதே ஆசிரமத்தை கூறியது இது அவன் வாழ்ந்த இடம் என்று! ஷாலு குட்டி சிறுவர்களுடன் ஐக்கியமாகி விட அந்த இடத்தைச் சுற்றிக் காண்பித்தான் உதய்.
இங்கே நான் விளையாடுவேன், இங்கே சாப்பிடுவேன்
, இங்கே புக் படிப்பேன் என்று ஒவ்வொரு இடமாகக் காட்டிக் கொண்டு வந்தவனை வலி மிகுந்த புன்னகையுடன் ஏறிட்டாள் அதி.
அவள் முன் சொடக்கிட்டு “ஓய் பெண்டா பேப்ஸ்” என்று அழைத்தான் அவன்.
சிந்தனை கலைந்து அவனைப் பார்க்க, “எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப பிடிச்ச இடம் எது என்று கேட்டப்போ ஒரு நாள் காட்டுறேன்னு சொன்னேன்ல. அது இது தான்” என்று ஒரு மாமதத்தை காட்டியவன் மேலும் தொடர்ந்தான்.
“இங்கே உட்கார்ந்து யோசிச்சுட்டு, எனக்குனு யாருமே இல்லையான்னு கவலையா இருந்த என் தலையை ஒரு கை பாசமா தடவியது. வேகமா நிமிர்ந்து பார்த்தா என் பக்கத்தில் ஒருத்தர் நின்றிருந்தார். அவரோட கண்கள் என் மேல பாசமா அக்கறையா தழுவியது. உதய் கண்ணா என்று என்னை அன்போட கூப்பிட்ட அந்த ஆள் என் ராவ் அங்கிள்!
அப்போல இருந்து அவர் வந்தா இங்கே உட்கார்ந்துதான் பேசிட்டிருப்போம். அவர் தோளில் சாஞ்சிப்பேன். மடியில தலை வச்சுப்பேன். உங்களைப் பற்றி என் தோளில் கை போட்டு பேசுவாரு. நிலா நிலா நிலா அவர் பேச்சில் ஆயிரம் நிலா வந்து போவா. அந்த நிலா என் மனசுல ஆழமா பதிஞ்சு போனா. சம் டைம்ஸ் தூக்கம் வரலைன்னா இங்க வந்து மரத்தில் சாய்ந்து வானத்தை பார்ப்பேன். நிலாவைப் பார்க்கும் போது அங்கிளோட பொண்ணு நிலா எப்படி இருப்பானு யோசிப்பேன்” அவன் சொல்லச் சொல்ல உள்ளம் பூரித்து நின்றாள் நிலா.
அவள் யார் என்று காணாமலே அவளைப் பற்றி அறிந்து வைத்திருக்கின்றான். அத்தோடு தன் அப்பாவின் மீது அவன் கொண்ட பாசம் மெய்சிலிர்க்க வைத்தது.
“வர்ஷா! எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல டா. மனசுக்கு ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கு. என் அப்பானா எனக்கு உயிர். அவர் எனக்கு எல்லாமே பெஸ்ட்டா கொடுத்து இருக்கார். அவர் கொடுத்த எல்லாமே நான் முழு மனசோட ஏத்துக்கிட்டேன்.
உன்னை மட்டும் என் ஆசைப்படி நான் சிலெக்ட் பண்ணேன். அது அப்பாவுக்கு பிடிக்குமான்னு தெரியாம தவிச்சுட்டு கிடந்தேன். பட் என் அப்பா எனக்காக சிலெக்ட் பண்ணுன அவரோட கண்ணாவையே நானும் தேர்ந்தெடுத்ததை நினைக்கும் போது ஹாப்பியா இருக்கு. ஏதோ மேஜிக் மாதிரி இருக்கு டா” மாய உலகில் சஞ்சரிப்பது போல் உணர்ந்தாள் உதய்யின் இதய நிலா.
“எனக்கும் கூட நீங்க என் லைஃப்ல வந்தது மேஜிக் மாதிரி தான் இருக்குங்க. நான் காதலிச்ச பொண்ணு, அங்கிள் கட்டி வைக்க ஆசைப்பட்ட அவர் பொண்ணு ரெண்டுமே ஒருத்தர் தாங்குறது மெடிக்கல் மிராக்கில்”
“உன் சிரிப்பும் நீயுமே ஒரு அழகான மாயம் தான் என் மாயக்காரா” அவளவனைச் சிரிப்புடன் பார்த்தாள் பெண்.
“உங்களோட காதலும் வானவில் மாதிரி வண்ண ஜாலம் காட்டும் ஒரு மாயம்! உங்க கண்கள் வித்தை காட்டும் விந்தையான மாயஜாலம்!
மொத்தத்துல என்னை அழகால் மயக்கும் அன்பான மாயமோகினி நீங்க இதயா” ஒரு பக்கமாகத் தலை சரித்து மந்தகாசப் புன்னகையைச் சிந்தினான் மதிமுகத்தாளை வார்த்தையெனும் மதுவால் மயக்கிய மாயக்கண்ணன் அவன்…!!
நிலவு தோன்றும்….!!🌛
✒️ ஷம்லா பஸ்லி🤍