கரம் விரித்தாய் என் வரமே – 19
அலுவலகத்தின் உள்ளே வந்தவனின் கண்கள் அஸ்வினியை தேடியது. அவள் இடத்தில் அவள் இல்லையென்றதும் ரெஸ்ட் ரூமில் இருப்பாளோ…. அழுது கொண்டு இருக்க போகிறாள் என்று கோபமும் வருத்தமும் ஒன்றாக வந்தது அவனுக்கு.
அப்படி என்ன அழுகை? என் மேல் நம்பிக்கை இல்லாமல், நான் ஏதோ சொல்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று புரியாமல் இப்படி அழுது தவிக்கிறாளே…. என்று மனம் உருகி போனான் ராஜேஷ். அவன் பிரச்சனை எல்லாம் பின்னுக்கு போய் இருந்தது அவனுக்கு. மனமெங்கும் அஸ்வினி மட்டுமே இருந்தாள்.
சற்று நேரம் கழித்து வந்தவளின் முகச்சிவப்பே சொல்லிற்று அவளின் அழுகையையும் தவிப்பையும்.
வேகமாக மதனிடம் சென்ற ராஜேஷ், “மச்சான் காபி குடிக்க போலாமா?” என்றான். அவர்கள் இருவரும் கிளம்பி போவதை அஸ்வினியும் பார்வதியும் கண்டார்கள்.
பார்வதிக்கு, ராஜேஷின் சுயமரியாதை குணம் தெரியும் என்பதால் அவன் நிச்சயம் மதனிடம் சொல்ல மாட்டான் என்று நினைத்து கொண்டாள். சொன்னாலும் அவளுக்கு கவலை இல்லை. உண்மையில் ராஜேஷ் விஷயத்தை அஸ்வினியிடம் சொன்னால் கூட அவளுக்கு ஒன்றும் இல்லை…. அவளுக்கு வேண்டியது அவன் அனைவர் முன்பும் சிறுமை பட வேண்டும்! யாரும் குறை சொல்ல முடியாதபடி கெத்தாக, தனித்து தெரிபவனாக இருக்கும் அவன் அனைவர் முன்பும் கூனி குறுக வேண்டும். அவனின் தோழி என்பதால் அஸ்வினியை பிடிக்காததால் அவளுடன் பேசக் கூடாது, அவளும் வருந்த வேண்டும்! அந்த எண்ணம் தான் பார்வதிக்கு.
எந்த குணத்தை பார்த்து மயங்கினாளோ அதே குணத்தை இன்று அடியோடு வெறுத்தாள் பார்வதி. சிறந்த ஒருவன் அவளிடம் இளகி, அவளுக்கு ஏற்ப நடந்து கொண்டது எல்லாம் அவளை காதல் மயக்கத்திலேயே வைத்திருந்தது.
ஆனால் இப்போது அவனின் நடத்தையில் வேறுபாடு வந்தது, அவன் அவளை வேண்டாம் என்று சொன்னது, அவளிடம் காட்டிய இளக்கம் எல்லாம் காதலால் அல்ல, பரிவால் மட்டுமே என புரிய அவளின் மயக்கம் எல்லாம் விடுபட்டு அவனின் மேல் எவ்வளவுக்கு எவ்வளவு அன்பு வைத்திருந்தாளோ அவ்வளவும் வேறு விதமாக மாறி போனது. அவனுக்கு தன் மேல் காதல் வர வைக்க முடியவில்லையே என்ற இயலாமையாகவும், என்னை குறைவாக பேசி என்னை விட்டு விலகி நிம்மதியாக இருந்து விடுவானா என்ற ஆங்காரமாகவும் மாறி போனது! அந்த உணர்வுகளின் பிடியில் மனம் போன போக்கில் சென்றாள் பார்வதி. அது சாய்க்கு மிகவும் வசதியாகி விட அவன் இன்னும் அவளை அவனுக்கு ஏற்ப வளைத்து கொண்டான்.
ஆனால் பார்வதி அறியாதது, அவனின் சுயமரியாதையை விட அஸ்வினியின் மனதை பெரிதாக அவன் நினைப்பது தான். அந்த அளவிற்கு அவனுள் ஊறும் அவளுக்கான உணர்வுகள் அவனையும் மீறியது!
மதனிடம் நடந்ததை சொல்ல, அவன் கொதித்து போனான்.
“ஏண்டா, சும்மா விட்டே அவளை? இழுத்து நாலு அரை வைக்காம….? சே…. இவெல்லாம் மனுஷ பிறவியா டா….?”
“கூல் கூல் மச்சி, நாம இப்போ தான் பொறுமையா இருக்கணும்…. அவ என்னை அசிங்கபடுத்தி அதில் குளிர் காய பார்க்கிறா…. அவ வழியிலேயே போய் அவளை சமாளிக்கணும்….”
“இதில் எதுக்கு டா அஸ்வினியை இழுக்கிறா அவ? அவளையும் உன்னையும் மார்பிங் பண்ணுவேன்னு சொல்றது எல்லாம் டூ மச் டா….”
“ம்ம்…. சைக்கோ மாதிரி தான் பேசினா டா….”
“என்கிட்ட சொன்ன மாதிரி அஸ்வினி கிட்டே போன்ல பேச வேண்டியது தானே டா…. பார்வதிக்கு என்ன தெரியவா போகுது….?”
“அதெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா…. இப்போ நான் பேசினா அஸ்வினி முகம் நார்மல் ஆய்டும்…. பார்வதிக்கு தெரிஞ்சுடும்…. அவ ஏதாவது கிறுக்கு வேலை பார்த்து அஸ்வினிக்கு எந்த பிரச்சனையும் வந்துட கூடாது, எனக்குனா நான் எப்படியும் சமாளிச்சுடுவேன்….” என்றான் ராஜேஷ்.
“நீ சொல்றதும் கரெக்ட் தான். இப்போ நான் என்ன சொல்ல அஸ்வினி கிட்டே….?”
“எனக்கும் பார்வதிக்கும் இடையில் ஒரு சின்ன டீலிங், அதனால் ஒரு ரெண்டு மாசம் ஆபிஸிலும் வீட்டிலும் எங்க கிட்டே இருந்து தள்ளி இருக்க சொல்லு…. முக்கியமா என் மேல் நம்பிக்கை வைச்சு பொறுமையா என்ன நடந்தாலும் கண்டுக்காம இருக்க சொல்லு…. பிரச்சனை முடிஞ்ச அப்புறம் நானே அவளுக்கு எல்லாம் சொல்றேன் சொல்லு….” என்றான்.
சரி என்று ஒத்துக்கொண்ட மதனிடம், “தப்பித் தவறி கூட வேற எதையும் உளறிடாதே டா….” என்று எச்சரிக்கை செய்தான் ராஜேஷ். அவர்கள் தோழி தானே என்று மதன் எதுவும் கூடுதல் தகவல் கொடுத்து விட்டால், அவளின் காதல் மனம் என்ன பாடு படும்…? அதனால் அதை அழுத்தி சொன்னான் ராஜேஷ். அவனையும் பார்வதியிடம் எதையும் காட்டிக்காமல் நடந்து கொள்ள சொன்னான்.
மதனும் அஸ்வினியும் ஒரே ப்ராஜெக்ட் என்பதால் அன்றே அவளிடம் விஷயத்தை சொல்லி விட்டான் மதன். கேட்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை! உனக்கு வேற எதுவும் தெரியாதா….? என்று மதனை துளைத்து எடுத்தாள் அஸ்வினி. அவனும் பொறுமையாக அவளிடம், இப்படி தான் சொன்னான்…. நீ அவன் மேல் நம்பிக்கை வைச்சு பொறுமையா இரு என்றான்.
அடுத்தடுத்த நாட்களில் ராஜேஷ் பார்வதியிடம் பழகுவதையும், அவளை கவனிப்பதையும் கண்டவளுக்கு மனம் வலித்தது. அது அவள் முகத்திலும் தெரிய, பார்வதிக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது.
***********
அஸ்வினி மனதளவில் மிகவும் சோர்ந்து இருந்தாள். மதனின் பேச்சால் அவள் ராஜேஷிடம் பேச முயற்சிக்க வில்லை! ஆனால் அவர்களை கவனிப்பாள். வருத்தமாக இருக்கும்! அதே போல் பார்வதியும் அவளை கவனிப்பாள். பார்வதிக்கு ராஜேஷ் கணித்த மாதிரியே அஸ்வினியின் வருத்தமான முகம் திருப்தியாக இருந்தது.
அன்று மாலை, கடந்து போன நாட்களில் பார்வதி ராஜேஷிடம் நடந்து கொள்வதை கண்ட அவள் தோழி ஒருத்தி இவளை தேடி வந்து பேசினாள்.
“அஸ்வினி, ராஜேஷ் எப்படி இந்த மாதிரி பொண்ணை எல்லாம் லவ் பண்றான்…? உன் ஹவுஸ் மேட் தானே அவ…. அவளை பத்தி உனக்கு தெரிஞ்சு இருக்குமே…. நீ அவன் கிட்டே சொல்லி இருக்கலாம்ல…. அவன் பாவம்….” என்றாள்.
“ஏன்? என்னாச்சு?” ஒன்றுமே தெரியாத மாதிரி கேட்டாள் அஸ்வினி.
“பொண்ணா அவ, அவனை அதட்டி அதட்டி பேசுறதும், அவனை வேலை வாங்குறதுமா இருக்கா, இவ்ளோ நாள் அவனை இப்படி பார்த்ததே இல்லை, இப்போ ஏன் இப்படி?”
“பார்வதி அவன் மேல் ரொம்ப பொஸஸிவ், அதனால் எதுவும் இப்படி பண்றாளோ என்னவோ…. தெரியலையே….”
“என்னவோ போ….! பார்க்க நமக்கே கடுப்பா இருக்கு! அவன் எப்படி தான் பொறுமையா இருக்கானோ….” அலுத்து கொண்ட படி அவள் சென்று விட்டாள்.
அவள் பேசி சென்றதில் இருந்து குற்றஉணர்வு அவளை கொன்றது. எனக்கு பார்வதி பற்றி தெரிந்தும் நான் ராஜேஷிடம் சொல்லாமல் விட்டது பெரிய தப்பாகி விட்டது…. அவன் காதல் என்று சொல்லி இருந்தாலும் நான் அவனை தடுத்து இருக்க வேண்டும்…. ஒரு தோழியாக அவனை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தது என் தவறு தான் என்று மறுகினாள்.
அதே எண்ணத்தில் உழன்றவள், இம்முறை அவனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்து அவனை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
தெய்வா ஹனிமூன் சென்று இருப்பதால் அவளுடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது அஸ்வினிக்கு. இந்த எண்ணங்கள் அவளை பெரிதும் பாதிக்க, ஏதாவது செய்ய பரிதவித்தாள் அஸ்வினி.
அதே உடனே செயல்படுத்தும் விதமாக மறுநாளே அவளுக்கு வாய்ப்பு வந்தது . அன்று மாலை சாய்யுடன் வீட்டிற்கு வந்த பார்வதியை கண்டவளுக்கு மிகுந்த ஆத்திரம் வர, ராஜேஷின் வார்த்தைகளை மறந்து, அவளுடன் பேச முடிவு செய்தாள். அவளின் அறைக்குள் போகும் முன் பார்வதியை நிறுத்தினாள் அஸ்வினி. சாய் அதற்குள் அறையினுள் சென்றிருந்தான்.
“நீ என்ன நினைச்சுட்டு இருக்கே பார்வதி….? ராஜேஷை லவ் பண்றேன்னு சொல்லிக்கிட்டு இவன் கூட சுத்திக்கிட்டு இருக்கே…. நீ செய்றது எதுவும் சரியில்லை….” ஆத்திரமாகவே அவளிடம் கேட்டாள் அஸ்வினி.
“சரி இல்லையா…. ரொம்ப சந்தோஷம்….!” திமிராக வந்தது பதில்.
“நான் உன்னை பத்தி முன்னாடியே ராஜேஷ் கிட்ட சொல்லாம இருந்துட்டேன்…. சொல்லி இருந்திருக்கணும்….”
“இப்போ வேணா போய் சொல்லி பாரேன்….”
“சொல்றேன்…. கண்டிப்பா சொல்லி உன் ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டுறேன்….” என்றாள் அஸ்வினி வேகமாக உணர்ச்சிவசப்பட்டு.
அந்நேரத்தில் அஸ்வினியின் உணர்ச்சி வேகத்தில் பார்வதியும் தூண்டபட, அவளுள் அலை அலையா கோபம் பொங்க, “நீ என்ன முடிவு கட்டுறது எனக்கு….? உன் பிரண்ட்ஷிப்பிற்கு தான் நான் முடிவு கட்ட போறேன்…. நானும் ராஜேஷும் கல்யாணம் பண்ணிக்க போறோம்…. அது தெரியுமா உனக்கு? அதோட அவன் லைப்பில் உன் சாப்டர் க்ளோஸ்….” என்றாள் ஆவேசமாக.
“என்ன கல்யாணமா….?” பேச்சிழந்து அதிர்ந்து விழித்தாள் அஸ்வினி…. அவளின் அதிர்ந்த தோற்றத்தில் திருப்தி ஆனவளாக அவள் அறைக்கு சென்றாள் அஸ்வினி. தானாகவே திகைப்பில் இருந்து மீண்டவள், இருக்காது…. நிச்சயம் இருக்காது….ராஜேஷ் அப்படி எல்லாம் பண்ண மாட்டான் என்று அவளுக்கு அவளே நம்பிக்கை கொடுத்து கொள்ள முயற்சித்தாள் அஸ்வினி. அந்நேரத்தில் ராஜேஷை அழைத்து பேச முடியாமல் தனக்குள்ளேயே தவித்து போனாள் அஸ்வினி. மறுநாள் எப்போதடா விடியும், ராஜேஷிடம் பேசுவோம் என்று துடித்தது அஸ்வினியின் உள்ளம்.
**********
காலையில் மதனுக்கு அழைத்தவள், “ராஜேஷிற்கு போன் பண்ணி அவனை சீக்கிரம் ஆபிஸ் வர சொல்லு டா.”
அவள் குரலில் இருந்த பதட்டத்தில், “இப்போ என்ன டென்ஷன் உனக்கு? அவனை பத்தின விஷயம்னா, ப்ளீஸ் கவலைப்படாதே…. அவன் பார்த்துப்பான்….” என்றான் மதன்.
வெறும் தோழியாக இருந்தால் பரவாயில்லை, ஒரு தலை காதலாக இருந்தால் கூட சரி ஆனால் இங்கே இருவரும் நெருங்கி இருக்க அப்படி விட முடியவில்லையே….
“இல்லை….ப்ளீஸ்….நான் பேசணும்….” என்றவள் சட்டென்று உடைந்து அழுது விட்டாள் அஸ்வினி.
“சரி சரி நான் சொல்றேன், அழாதே….” என்றவன் ராஜேஷிடம் விஷயத்தை தெரிவித்தான்.
**********
அலுவலகத்தின் அருகே யாரும் இல்லாத தனிமையான இடத்தில் அமர்ந்து இருந்தார்கள் இருவரும். முகம் கசங்க அமர்ந்து இருந்தவளை கண்டு ஆத்திரமும் அன்பும் ஒரு சேர வந்தது ராஜேஷிற்கு.
“ஏண்டி உன்னை போட்டு இப்படி வருத்திக்கிறே….? என் மேல் நம்பிக்கை இல்லையா….?” என்றான். சற்று முன் தான் அவனிடம் அனைத்தையும் சொல்லி இருந்தாள் அஸ்வினி.
“இருக்கு டா…. ஆனா அவ நினைக்கிறதை செய்ய எந்த எல்லைக்கும் போவா…. நான் சொன்னேன்ல இப்போ…. சாய் மட்டுமில்லை அவ இன்னும் நிறைய பேரோட பழகி இருக்கா….”
“அதெல்லாம் இருக்கட்டும்…. நான் பார்த்துக்கிறேன்….”
அவன் அப்படி சொன்னதும், “கல்யாணம்னு அவ சொல்றதை கேட்ட அப்புறமும் நான் எப்படி அமைதியா இருக்க….முடியலை டா…. உன்னை அப்படி எல்லாம் விட முடியாது டா….” என்று அவள் அருகில் இருந்த அவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் உகுத்தாள் அஸ்வினி.
“நான் உன்னை மட்டும் தாண்டி கல்யாணம் பண்ணிப்பேன்…. நீதான் இந்த ஜென்மத்தில் என் பொண்டாட்டி…. என் தேவதைடி….” என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.
“ஓஹோ…. காதலிக்கிறதுக்கு ஒரு ஆள்….கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுக்கிறதுக்கு வேற ஆள்…. சூப்பர்….” கை தட்டியபடி வந்தாள் பார்வதி.
ராஜேஷிடம் எந்த சலனமும் இல்லை….சொல்ல போனால் இது வரை இல்லாத விதமாக அவளை கொலை வெறியுடன் பார்த்தான் அவன். அவனின் பார்வையில்,
“என்ன உன் மரியாதை காத்தில் பறக்கணுமா….? வேணாம்னா, கொஞ்சினது போதும்னு எழுந்து என் கூட வா…. இனிமே இவகிட்ட பேசுற வேலையெல்லாம் வைச்சுக்கிட்டே…. என்ன நடக்கும் தெரியும்ல….?” என்றாள் நக்கலாக.
அவளை நெருங்கி வந்தவன்,
என்னை என்ன கேணைப் பையன்னு நினைச்சுட்டியா….? என்று கேட்டு ஒரு நிமிடம் அவளை உறுத்து பார்த்து, அவள் எதிர்பார்க்காத நொடியில் ஓங்கி ஒரு அரை விட்டான் அவளுக்கு. அவளின் அதிர்ந்த முகமும் பயந்த பார்வையும் அவனுக்கும் அஸ்வினிக்கும் மிகுந்த சந்தோஷத்தை தந்தது. எப்படி எல்லாம் அவர்கள் உணர்வுகளுடன் விளையாடி அவர்களை ஆட்டி வைத்து இருந்தாள்!