19. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.5
(2)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 19

 

“யுகி கண்ணா! போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. நாம வெளியில் போயிட்டு வருவோம்” என்று சத்யா சொல்ல, “ஜனனியையும் கூட்டிட்டு போ சத்யா” என்றார் மேகலை.

 

“நான் எதுக்கு? அவங்க போயிட்டு வரட்டுமே” ஜனனி அவனைப் பார்க்காமல் சொல்ல, “விருப்பம் இல்லாதவங்களுக்கு ஏன்மா ஒரு விஷயத்தை செய்யச் சொல்லுறீங்க? அவங்க இஷ்டப்படி பண்ணுறவங்க பெரியவங்க பேச்சை கேட்க மாட்டாங்க” என்றான் அவன்.

 

ஜனனிக்கு பதிலுக்குப் பதில் பேச வாய் துடித்தது. இருந்தும் மேகலை முன்பு அப்படிப் பேச வேண்டாம் என்பதால் அமைதி காத்தாள்.

 

“ட்ரெஸ் எடுக்கனும்ல உனக்கு? அதனால தான் சொன்னேன்மா” என்று மேகலை கூற, “ஓஓ அப்படியா ஆன்ட்டி? சும்மா போக சொல்லுறீங்கனு நெனச்சிட்டேன். நான் போயிட்டு வர்றேன்” என அறையினுள் சென்று ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தாள்.

 

மூவரும் வெளியில் செல்ல, சத்யாவும் யுகனும் முன்னிருக்கையில் அமர்ந்தனர். ஜனனி பின்னால் ஏறிக் கொள்ள, காரைச் செலுத்தினான் அவன்.

 

கார் வாசம் அவளுக்கு ஒத்துக் கொள்வதே இல்லை. யன்னலைக் கீழிறக்கி விட்டு, அதன் வழியே வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.

 

‘எனக்கு கார் சரி வாறதில்ல. என்னை ஒரு முறையாவது பைக்ல கூட்டிட்டு போறியா ராஜ்?’ அவனிடம் கேட்டது நினைவுக்கு வந்தது.

 

‘எங்க ஊருக்கு வா. கண்டிப்பா கூட்டிட்டு போறேன்’ என்று ராஜீவ் சொன்னதைக் கேட்டு புன்னகைத்ததும் அடுத்தடுத்து தோன்ற, சட்டென விழித்துக் கொண்டது அவள் சிந்தனை.

 

தனக்கு இன்னொருவனுடன் கல்யாணமாகி விட்டதே. இனி ராஜ் பற்றிய சிந்தனைகளில் மூழ்குவது தவறு. வேண்டவே வேண்டாம் என உதறித் தள்ளினாள்.

 

யுகனும் சத்யாவும் பேசிக் கொண்டு வர, தனிமை உணர்வு அவளை ஆட்கொண்டது.

 

நந்திதா, மகிஷா, ஜனனி மூவரும் ஒன்றாக இருக்கும் இடத்தில் பேச்சுக்கும் சிரிப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஒருவரை ஒருவர் கலாய்த்து, மகியும் ஜனனியும் சண்டையிட நந்து சமாதானம் செய்து, பாட்டுப் பாடி நடனமாடி அவ்விடமே கலகலக்கும்.

 

இங்கு அவளுடன் பேச எவரும் இல்லாதது போல் தோன்ற, அது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. 

 

ஒரு கடையில் வண்டியை நிறுத்திய சத்யா ஜனனியைத் திரும்பிப் பார்க்க, அதன் அர்த்தம் உணர்ந்து இறங்கிக் கொண்டாள்.

 

“எங்க போறோம் டாடி?” யுகன் கேட்க, “அவங்களுக்கு ட்ரெஸ் எடுக்கனுமாம். அப்பறமா உன்னை பார்க் கூட்டிட்டு போறேன்” என்றதும் சம்மதமாக தலையசைத்தான்.

 

சத்யாவும் யுகனும் ஓரமாக நிற்க, ஜனனி தனக்குப் பொருத்தமான உடைகளைத் தெரிவு செய்தாள். என்றும் இல்லாத தனிமை உணர்வு அவளைக் கொல்லாமல் கொன்றது.

 

“யுகி! இங்கே வா” என்று கூப்பிட, அவனும் அருகில் வந்தான்.

 

“ப்ளேக் இருக்கு ப்ளூ இருக்கு. இதுல என்ன கலர் நல்லா இருக்கும்னு சொல்லுறியா?” பாவமாகக் கேட்க, “உங்களுக்கு புடிச்சத நீங்க தான் சிலெக்ட் பண்ணனும். நான் பண்ணுறது உங்களுக்கு பிடிக்கும்னு சொல்ல முடியாதே” அவனது பேச்சில் ஒருவித முதிர்ச்சியை உணர்ந்தாள் ஜனனி.

 

“எனக்கு ரெண்டும் பிடிச்சிருக்கு. ஆனால் ஒன்னு தான் எடுக்கனும். அதனால தான் உன் கிட்ட கேட்கிறேன்” என்று சொல்ல, “அப்படினா ப்ளூ எடுங்க” நீல நிற சாரியைக் காட்ட அதனை எடுத்துக் கொண்டாள்.

 

சத்யா இதையெல்லாம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் எதுவும் பேசவில்லை. யுகனோடு வெளியில் செல்ல ஜனனி உடைகளை பில் போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

“டாடி! பார்க் போகலாமா?” யுகன் துள்ளிக் குதிக்க, “ஓகே ஓகே டா” அவனது முடியைச் சிலுப்பி விட்டான்.

 

பார்க் சென்றதும் யுகன் விளையாடச் சென்று விட, சத்யா கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான். தான் எங்கு அமர்வது என்று ஜனனி யோசிக்க, “உட்கார்னு சொல்லனுமா? அப்பறம் கால் வலி கை வலினு அம்மா கிட்ட சொன்னா நான் பேச்சு வாங்கனும்” என்றவாறு அலைபேசிக்குள் மூழ்கினான்.

 

அவனருகில் அமர்ந்து கொண்டவள் “அம்மான்னா அவ்ளோ பயமா?” எனக் கேட்க, “பயம் இல்லை, அதுக்கு பெயர் மரியாதை. அதைக் காரணமா வெச்சு என்னை மிரட்டலாம்னு நெனச்சிடாத” என்றதும் சிரித்து விட்டாள் அவள்.

 

“என்ன சிரிப்பு?” அவன் கடுகடுக்க, “நீங்களே எனக்கு ஐடியா கொடுக்குறீங்களே அதான் சிரிப்பு வந்துடுச்சு. ஆனால் இது பழைய ஐடியா. நான் பார்க்கிற ஒரு சீரியல் இருக்கு. அதில் வர்ற ஹீரோவை அவன் பாட்டி, அக்காவை சொல்லி ஹீரோயின் பயம் காட்டுவா. நான் அப்படிலாம் பண்ண மாட்டேன்” தோளைக் குலுக்கினாள் ஜானு.

 

“கனவுல கூட அப்படி நினைக்காத. அப்படி மட்டும் ஏதாவது பண்ணே அவ்வளவு தான்” உர்ரென்று சொல்ல, அவள் அசட்டையாக மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

 

“டாடி! அந்தப் பொண்ணு என் கூட சண்டை போடுறா” முகத்தை சுருக்கிக் கொண்டு வந்து நின்றான் யுகன்.

 

“யார்?” என்று அவன் கேட்க, “நான் தான் அங்கிள்” அவன் முன்னால் வந்து நின்றாள் ஒரு சிறுமி.

 

“என்னாச்சு?” சத்யா புரியாமல் பார்க்க, “அங்கே ஒரு ஊஞ்சல் இருக்கு. என்னை ஆட விடாம, அவர் ஆடனும்னு சொல்லுறார்” என்றாள் சின்னவள்.

 

“நான் தான் டாடி அதை முதல்ல பார்த்தேன்” யுகன் சொல்ல, “நான் தான் முதல்ல உட்கார்ந்தேன்” என்றாள் அவள்.

 

“ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆடனும்னா எப்படி? ரெண்டு பேரு உட்காரவும் இடம் பத்தாது” என்றவாறு சத்யா யோசனைக்குச் செல்ல, “உட்கார்றதை விட நின்னுட்டு ஆடினா செம்மயா இருக்கும் யுகி. இங்கே வா” ஜனனி அவனை அழைக்க, யுகனும் அந்தச் சிறுமியும் ஒன்றாகச் சென்றனர்.

 

“உன் பெயர் என்ன பாப்பா?” ஜனனியின் கேள்விக்கு, “அய்ம் யாழினி” என்று பதிலளித்தாள்.

 

யுகனை ஊஞ்சலில் நிற்க வைத்து பிடித்துக் கொள்ளக் கூறி, யாழினியை உட்கார வைத்து ஊஞ்சலை ஆட்டி விட்டாள்.

 

“சூப்பர் ஆன்ட்டி” யாழினி கலகலத்துச் சிரிக்க, யுகனும் ஜனனியைப் பார்த்து சிரித்தான்.

 

இது அனைத்தையும் சத்யா பார்த்துக் கொண்டிருக்க, யாழியின் பெற்றோர் அழைக்க யுகனிடம் “பை யுகன்! உங்க மம்மி ரொம்ப ஸ்வீட்” என்று சொல்லி விட்டுச் சென்றாள் அவள்.

 

‘மம்மி’ எனும் விளிப்பு ஜனனியின் உள்ளத்தை மயிலிறகால் வருடிக் கொடுத்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை உணர்வொன்று இருக்கும் அல்லவா? அப்படித் தான் அவளுக்கும் யுகன் மீது உருவானது.

 

ஆனால் யுகனோ “நீங்க என் மம்மி இல்லனு தெரியாம சொல்லிட்டா அவ” என்று சொல்ல, அவள் மகிழ்வெல்லாம் அந்நொடியே மறைந்தது போன்ற உணர்வு.

 

அந்நேரம் சத்யாவுக்கு அழைத்த மேகலை, “ஜனனிக்கு ட்ரெஸ் வாங்கியாச்சா? இன்னிக்கு மாதிரி நீயே கொடுக்க முடியாதுல்ல. அவ கையில் பணம் கொஞ்சம் கொடுத்து விடு சத்யா” என்றிருந்தார்.

 

அப்போது தான் அவளிடம் பணம் கொடுக்கவில்லை என்ற விடயமே புத்தியில் உறைத்தது.

 

அவள் அருகில் வந்ததும், “பில் பே பண்ண உன் கிட்ட காசு இருந்ததா?” என்று கேட்க, “ஆமா. என் கிட்ட காசு இருக்கு” என பதில் கூறினாள்.

 

“ஓஓ! நல்லதாப் போச்சு. அங்கிள் கொடுத்து விட்டாரா?”

 

“கொடுத்தார். ஆனால் ட்ரெஸ் வாங்கியது நான் சம்பாதிச்ச காசால” என்றவள் அடுத்து கூறிய விடயத்தில் அவன் புருங்கள் இடுங்கின.

 

…………

எழிலின் அறையில் இருந்த நந்திதாவுக்கு அழுகையைத் தவிர வேறொன்றும் இல்லை.

 

நேற்று தாலி கட்டி அழைத்து வந்தவன் அவளுக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொண்டு வந்து தந்தான். தூங்கு என்றும் கூறி விட்டான். அவளுக்குத் தான் தூக்கம் தொலைதூரம் சென்றது.

 

அழுதவாறே அவனருகில் சாய்ந்து கொண்டாள். எப்போது தூங்கினோம் என்றே தெரியாதவள் அப்போது தான் எழுந்து அமர்ந்தாள். முகம் கழுவி வந்தவளுக்கு உடுத்த உடையும் இல்லை. எழில் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை. வெளியில் சென்று அவனது வீட்டாரை எதிர்கொள்ளவும் முடியவில்லை.

 

கண்ணீர் மாலை மாலையாக ஊற்ற, ஒரு பையுடன் உள்ளே வந்தான் எழிலழகன்.

 

“இதில் ட்ரெஸ் இருக்கு. சேஞ்ச் பண்ணிக்க” என்றிட, “எழில்” என்றழைத்தாள்.

 

“ப்ச்! முதல்ல அழுகையை நிறுத்து நந்து. உன் மனசுல நிறைய விஷயம் ஓடிட்டு இருக்குனு புரியுது. ஆனால் நடந்து முடிஞ்சதை யோசிச்சு எந்த பிரயோசனமும் இல்லை. ஆற அமர யோசிச்சு பண்ணி இருக்கனும். இப்போ யோசிக்கிறதால எதுவும் மாறப் போறதில்ல” என்று கூறியவனுக்கு உள்ளுக்குள் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

 

அவள் வந்து விட்டாள். இனி அவன் பொறுப்புக்களில் நந்திதாவும் ஒருத்தி. கல்யாணம் நடந்து முடிந்தது என்று அவனால் மகிழ முடியவில்லை.

 

தங்கை மலருக்கு என்று அனைத்தும் செய்ய வேண்டும். அவளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும். தாயின் மனதில் நந்திதா மீதான அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும். நந்திதாவை இந்த வீட்டில் சகஜமாக இருக்க வைக்க வேண்டும். எத்தனையோ எண்ணங்கள் அவனைக் குடைந்தன.

 

இதற்குள் நந்திதா அழுது கொண்டிருக்க அது வேறு அவனைப் பாதித்தது. 

 

“இதோ பார் நந்து! ஈசியா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. நீயும் அழுதா நான் உன்னைப் பார்க்கிறதா அதைக் கவனிக்கிறதா என்று ஒன்னும் புரியல” அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

 

“நா..நான் இனி அழ மாட்டேன். உங்களைப் புரிஞ்சு நடந்துப்பேன் எழில். சாரி” மென் குரலில் சொன்னவளுக்கு மீண்டும் அழுகை தான் வந்தது.

 

“இங்கே வா” அவளது கன்னம் தாங்கி கண்ணீரைத் துடைத்து விட்டான்.

 

“நான் தப்பு பண்ணிட்டேன்ல? அப்பா கேட்டப்போ கல்யாணம் வேண்டாம்னு உங்களை லவ் பண்ணுறதை சொல்லி இருக்கனும். இல்லேனா நீங்க சொன்ன மாதிரி உங்களை அப்பா கிட்ட பேச விட்டிருக்கனும். நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்” அவனது கைகளைப் பிடித்துக் கொள்ள,

 

“அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் நந்து. அதை விட்டுடு. இனிமே என்ன நடக்கப் போகுது? மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு மட்டும் யோசிப்போம். சரியா?” அன்பு நிறைந்த குரலில் சொன்னான் கணவன்.

 

“சரிங்க. நான் இனிமே அப்படி நடந்துக்கிறேன். முதல்ல உங்க அம்மாவைப் பார்க்கனும். அவங்க என் மேல கோபமா இருக்காங்கள்ல?” கவலையோடு கேட்டாள் அவள்.

 

“கோபம் இல்லாம இருக்காதே. ஒரு தாயா அது அவங்களோட ஆதங்கம். அவங்க பிள்ளையோட கல்யாணத்தை ஆசைப்பட்ட மாதிரி பண்ண முடியலைங்கிற வருத்தம். அதை நாம தான் புரிஞ்சிக்கிட்டு நடக்கனும். பொறுமையா இருக்கனும். உன் வீட்டுல என் வீட்டுல எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ண வேண்டியது நம்ம கடமை. நாம தான் அதை பண்ணனும்” 

 

அவன் கூறியதன் உண்மை உணர்ந்தவளோ மன அமைதியை நாடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!