வாடி ராசாத்தி – 19
கேபி, அன்று திருப்பூர் சென்று ஜெயராஜை நேரில் சந்தித்து, பல விஷயம் பேசி, நாராயணனுக்கும் வீட்டை ரிஜிஸ்டர் பண்ண ப்ரஷர் கொடுக்குமாறு சொல்லி வந்தான்.
மதிய உணவுக்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்தான். அங்கே அவன் ப்ரீமியம் கஸ்டமர். அவனுக்கு என்று உடனே அறை ஏற்பாடு ஆகி விடும், சாப்பாடும் அறைக்கே சென்று விடும்.
அவன் காரை பார்க் செய்து விட்டு வரும் போது, தோழிகளுடன் அங்கே சாப்பிட வந்திருந்த அம்முவிற்கு அவள் தோழி,
“ஹேய் அம்மு, உங்க அத்தான் வர்றார் டி….” என்றாள் உற்சாகமாக.
“நீ ஏண்டி இவ்ளோ எக்சைட் ஆகுற…. அவர் கண்ணு இவளை தவிர வேற யாரையும் பார்க்காது….” என்றாள் சலிப்பாக இன்னொருத்தி.
“அழகை ரசிப்போம் டி, இவ தான் ஓவர் ஆக்ட் பண்ணுவா, அவரை கண்டுக்காத மாதிரி….” என்றாள் மற்றவள்.
அப்போது சரியாக அவன் இவர்கள் இடம் அருகில் வந்துவிட்டான். அவன் உள்மனது அவன் பொண்டாடியை நியாபகப்படுத்த, வேகமாக கண்களை சுழல விட, இவர்களை கண்டுகொண்டான். அவனையே கவனித்து கொண்டு இருந்த பெண்களுக்கு, அவனின் செயல் மிகுந்த உற்சாகத்தை கொடுக்க, ஆரவார கூச்சல் எழுப்பினார்கள்.
“ஹேய் எப்படி டி, நீ இங்க இருக்கேன்னு கண்டுபிடிச்சுட்டார்….? சூப்பர் டி…!” மாய்ந்து போயினர் தோழிகள்.
அவர்களின் சத்தத்தில், அவன் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர பார்த்தான். ஆனால் காத்திருந்த பெண்கள் விடவில்லை….
“ஹலோ… ஹலோ… சார்! வாங்க… வாங்க…. இங்க கொஞ்சம் வாங்க என்ற அழைத்தனர்.
தோழிகள் அடித்த கலாட்டாவில் எதுவும் பேசாமல் அவனையே ரசித்தபடி அமர்ந்து இருந்த அம்முவை பார்த்தான் கேபி. தன்மையாக மறுத்து விட்டு அப்பிடியே அறைக்கு சென்று விடுவோம் என்று இருந்த அவன், அம்முவின் பார்வையில் இருந்த உணர்வில் அவர்களை நோக்கி வந்தான். ஆசை, அன்பு, ஏக்கம், சிரிப்பு என கலவையாக இருந்தது அவள் உணர்வு…. அவர்களை நோக்கி நடந்து வரும் அவனை கண்டு அவள் உள்ளம் எகிறி துடித்தது. அவள் மனது,
ஏன் இங்கு வந்தான்….?
என்னுள்ளே சென்றான்….!
உறங்கி கிடந்த புலன்களை
எல்லாம்
எழுப்பி விடுகின்றான்….
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றான்….
என்ற பாடலை ஹம் செய்தது….
க்ரீம் கலர் பேண்டும், பச்சை நிற சட்டையும் போட்டு இருந்தவனை மொய்த்து முழுங்கியது அவள் கண்கள்.
“என்ன சார், ஆளு இங்க இருக்கிறதை பார்த்தும் பார்க்காம போறீங்க….?”
“நீங்க என்ஜாய் பண்ணும் போது நான் ஏன் இங்க….?”
“நீங்க வந்தா நாங்க என்ஜாய் பண்ண மாட்டோம்னு யார் சொன்னா?” இன்று அவனை விடுவதில்லை என்று ஆளாளுக்கு ரவுண்டு கட்டினார்கள் கேள்விகளால்.
“அதை நான் எப்படிமா சொல்றது….? யாருக்காவது பிடிக்காம இருக்கலாம்….” எதுவும் பேசாமல் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அம்முவை பார்த்து தோளை
குலுக்கியபடி சொன்னான் கேபி.
“சான்சே இல்லை…. கோஹினூர் வைரம் மாதிரி இந்த காங்கேயம் வைரத்தை பிடிக்காம போகுமா யாருக்கும்….?”
“இருப்பாங்க…. வைரம் இருந்தாலும் தங்கத்தை மட்டுமே தேடி போறவங்க இருக்காங்களே….” அவன் குரலில் என்ன இருந்தது…. புரியவில்லை அம்முவிற்கு.
அவன் அதை சொல்லியபின் அவனை முறைத்தாள் அம்மு.
அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல், அவனை காண அந்த ஹோட்டல் மேனேஜர் வந்துவிட, அவனும் அவருடன் கிளம்பிவிட்டான்.
அவன் சென்று சற்று நேரம் ஆகியும், அவன் பேச்சிறகு பதில் கொடுக்க முடியவில்லையே, சே….. டயலாக் அடிச்சிட்டு போயிட்டான் என்றே இருந்தது. இவர்கள் கிளம்பும் நேரமும் வந்துவிட, தோழிகளை போக சொல்லிவிட்டு இவள் கேபியை பார்க்க சென்றாள். நடத்து நடத்து என்றபடி அவர்களும் கிளம்பி போனார்கள். அவன் எந்த அறையில் இருக்கிறான் என்று கேட்டு தெரிந்து கொண்டு நேரே அங்கேயே சென்றாள் அம்மு. கதவை தட்டாமல் திறந்து கொண்டு செல்ல, சர்வர் தான் வந்து இருக்கிறார் என்று நினைத்தவன், எனக்கு வேற ஒன்னும் வேண்டாம் என்றபடி நிமிர்ந்து பார்க்க, அம்மு!
அவளை சற்றும் அங்கே எதிர்பார்க்காததால். இனிதே திகைத்து போனான். ஆனாலும் மகிழ்ச்சியை கட்டிகொள்ளாமல்,
“ஆக்க்ஷுவலி, நீங்க கரெக்ட்னா இடத்துக்கு வந்துட்டீங்க…. ஆனா சரியான வேலை பண்றது உங்களுக்கு பிடிக்காது…. ஸோ கிளம்புங்க….” என்றான் சிரிப்பை அடக்கியபடி.
அவனின் வாய் ஜாலத்தில் சிரிப்பு வந்தாலும், அடக்கி கொண்டு,
“ரொம்ப ஓவரா போற…. உன்னால முடியாது, இருந்தாலும் கொஞ்சம் பேச்சை குறை….” என்றாள்.
“ஹ்ம்ம்கூம்…. அப்படியா….? எப்படி….?
“கீழே என்னவோ வைரம், தங்கம், தகரம்னு டயலாக் விட்டியே அதை சொல்றேன்…. உன்னை பத்தி நீயே பெருமையா சொல்லக் கூடாது பண்டி, மத்தவங்களுக்கு நீ எப்பிடி தெரியுறனு அவங்க தான் சொல்லணும்….”
“ஓஹோ, சரி நீ சொல்லு அப்போ…. உனக்கு எப்படி தெரியுறேன்….இல்லை இல்லை யார் உசத்தியா தெரியுறா….?”
“உன்னை பெருமை பேச வேண்டாம்னு தான் சொன்னேன்….என்னை கேட்காத….”
“பராவாயில்லை சொல்லு, உங்க அப்பா தான் உனக்கு உசத்தினு…. நீ நான் உனக்கு வேண்டாம், வேண்டாம்னு சொல்றதை கேட்டுகிட்டு தானே இருக்கேன் ரொம்ப நாளா…. இதையும் உன் வாயாலே சொல்லிடு….ஒன்னும் பிரச்சனை இல்லை….”
சட்டென்று மனம், முகம் இரண்டும் கூம்பி விட்டது அம்முவிற்கு. தன்னால் வருத்தபடுகிறானா….? இது மாதிரி பேசும் ஆள் இல்லையே இவன்….? ஏன் இப்படி பேசுறான் …. யோசித்தாள் அம்மு
அவள் முகம் பார்த்து கொஞ்சம் இரக்கம் வந்தாலும், இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது பேச என்று உணர்ந்து, அவளை இன்னும் காயப்படுத்தினான் கேபி. அவளை ஒரே மாதிரியான வழியில் சென்று சம்மதிக்க வைக்க முடியாது என்று உணர்ந்து ரூட்டை மாற்றினான். அவளின் உள்ளே அவள் அடைத்து வைத்து இருக்கும் அவனுக்கான அன்பை அவளின் குற்ற உணர்வை தூண்டி வெளிக்கொண்டு வர நினைத்தான். அவள் அவனின் எண்ணத்தை அனுமானிக்க வேண்டி அமைதியாக இருக்க,
“இப்போ நீ சொல்ற மாதிரி, நானும் நீ வேண்டாம் வேணவே வேண்டாம்னு சொல்லிட்டு போய்டவா….? உனக்கு அது தானே வேணும்….? ம்ம்ம்…. சொல்லு….?”
டுபாக்கூர்…. போறேன்னு சொன்னா நான் வேற சொல்வேன்னு பார்க்கிறான்…. ஏதோ பிளான் பண்றான், மாட்டிக்காத அம்மு, தனக்குள் சொல்லிகொண்டவள்,
“நீதானே இதெல்லாம் ஆரம்பிச்ச, அப்போ நீதான் சமாளிக்கணும், காரியம் சாதிச்சுக்கணும்…. மகனே உன் சமத்து….!” கையை தூக்கி அவனை ஆசீர்வாதம் செய்தாள் அம்மு சிரிப்புடன்.
என் பொண்டாட்டி ஆச்சே, எப்படி உஷாரா இருக்கா பாரு…. மனதினில் மெச்சி கொண்டவன்,
“சரி. ஆரம்பிச்ச நானே முடிச்சுடுறேன்…. நீயும் உங்க அப்பாவும் தான் ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களாமே…. என்னால யாருக்கும் மனக்கஷ்டம் வேண்டாம்…. நீயும் உங்க அப்பாவுக்கு எதிரா முடிவு எடுக்க கஷ்டப்பட வேண்டாம், உன் அப்பா சொல்ற பையனையே கட்டிக்க…. இனிமே நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன்….” சட்டென்று பின் வாங்கினான் கேபி.
அவன் அப்படி சொல்லவும் ஒரு நிமிடம் திருதிருவென்று முழித்தாள் அம்மு. பின் ஆத்திரம் அடைந்தவளாக,
“டேய் பாண்டி, இதெல்லாம் முன்னாடியே யோசிக்கலையா…. இப்போ தான் அறிவு வேலை செய்யுதா?” என்றாள்.
“நான் என்ன செய்ய, எல்லாரும் வேணா வேணா சொல்றீங்க…. நீ உங்க அப்பாவுக்கு வேண்டியதை செய்…. நான் எங்க வீட்டில கேட்கிறதை செய்றேன்…. அட்லீஸ்ட் மத்தவங்க சந்தோஷமா இருப்பாங்க…. என் அக்கா குடும்பத்துக்கே என்னை ரொம்ப பிடிக்கும்…. என் மாமா வீடு மாதிரி இல்லை அவங்க….”
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை, எங்களுக்கும் ரொம்ப….” சொல்ல வந்ததை சொல்லாமல் பாதியில் நிறுத்தி விட்டு எப்படி சமாளிப்பது என்று புரியாமல் முழித்தாள் அம்மு
அவள் முழிப்பதை கண்டவனுக்கு சிரிப்பு வந்து விட சிரித்து விட்டான். சிரித்தவன்,
“கேடி டி நீ! உங்க அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டே, என்கிட்டயும் எதையும் மனசு விட்டு பேச மாட்டே, ஆனா நான் மட்டும் எல்லா பிரச்சனையையும் சமாளிச்சு, உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்…. அதுவும் உங்க அப்பா சம்மதத்தோட…. அப்படிதானே….? என்னை பிடிக்கும்னு கூட சொல்ல முடியலை….ம்ம்….”
“எங்க அப்பா பாவம்…. ஏற்கனவே உடைஞ்சு போன மனசு….”
“அவருக்கு தங்கச்சி தான் இல்லை…. அவருக்கு இவ்ளோ பார்க்கிற…. தாய் இல்லை பிள்ளைடி நான்…. எவ்ளோ பேர் இருந்து யாருமே இல்லை எனக்கு…. உனக்கு எங்க அதெல்லாம் புரியும்….?”
அவன் சாதாரணமாக தான் சொன்னான், சுய பச்சாதாபம் கூட இல்லை அவனின் குரலில். அவளை வம்பு செய்ய மட்டுமே அவன் சொன்னான். ஆனால் அந்த வார்த்தை, அதற்கு பின்னால் தாயை இழந்த சிறு பிராயத்து பாண்டியன் அனைத்தும் அம்முவின் மன கண்ணில் வர பொல பொலவென்று கண்ணீர் கொட்டி விட்டது அவளுக்கு.
“அடியேய், நீ அழுதா உன்னை நான் ஏதோ செஞ்சுட்டேன்னு சொல்வாங்கடி…. நிறுத்து தாயே…. நான் சும்மா சொன்னேன்”
“நான் உன்னை நினைச்சு ஒன்னும் அழலை….பிள்ளை அந்த சின்ன பிள்ளையை நினைச்சு அழுதேன்….”
“அந்த சின்ன பிள்ளை மாதிரியே ஒரு பிள்ளையை பெத்து, நல்லா வளர்க்க சான்ஸ் கொடுக்கிறேன், வேணாம்னு சொல்ற…. நீ வளர்க்கிறதை பார்த்து அந்த சின்ன பிள்ளை சந்தோஷப்படும்ல….”
லேசான வெட்கத்தில் முகம் சிவந்தது அம்முவிற்கு.
“உன் ரியாக்ஷன் பார்த்தா நல்ல யோசனைனு உனக்கு புரிஞ்சுடுச்சு போல….” சிரித்தான் கேபி.
“ஆசை தான், அதுக்கு வேற ஆளை பாரு….”
“ஆள் நிறைய இருக்கு, பர்ஸ்ட் என் மாமா பொண்ணு உனக்கு சான்ஸ், நீ வேணானா, அடுத்து…. டக்குனு முடிவை சொல்லிட்டு நடையை கட்டு!”
“உன் மாமாவையே உன்னால சரிகட்ட முடியலை…. மாமாவை சரிகட்டிட்டு அப்பறம் மாமா பொண்ணுகிட்ட வா…. குறுக்கு வழியில மாமா பொண்ணை சரிகட்ட நினைக்க கூடாது பண்டி அவர்களே!”
“சரி தான்…. நீ ஒரு சரியாகாத அப்பா பைத்தியம்…. அவர் பொண்ணாவே இரு…. இந்த ஜென்மத்தில உனக்கு கல்யாணம் கிடையாது…. அவ்வையார் மாதிரி ஆய்டு….” என்றான் கோபமாக.
“அதை நீ சொல்லாத, உனக்கும் இந்த ஜென்மம் மட்டுமில்லை அடுத்த ஒரு ஜெனமத்தில் கூட ரொமான்ஸ் இருக்காது…. விரக்தியில் வெந்து போவே….”
அவர்கள் சண்டையிட்டு கொள்ளும் போது கேபிக்கு முக்கியமான அழைப்பு ஒன்று வர, அம்முவை பார்த்து, போதும் நீ பேசியது, விரல்களால் வாயை மூடிக் காட்டி, கிளம்பு என்று சைகை செய்தான்.
தன்னை அவமதித்து அனுப்புகிறான் என்று கடுப்பானவள், அங்கிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து தண்ணீர் மொத்தம் கீழேகொட்டி கவிழ்த்து விட்டு அவனை பார்த்து முறைத்து விட்டு சென்றாள்.