தாழ் போடாமல் சாற்றி இருந்த கதவை நாகரிகம் கருதிக் கூடத் தட்டாமல், வெடுக்கென்று உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள். ஐந்து நிமிடத்தில் முழு வீட்டையும் சுற்றி வந்துவிடலாம். அவ்வளவு சின்ன வீட்டைப் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
“என்ன சார் வேணும், யாரைத் தேடுறீங்க?”
தன் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களைக் கண்டு பதறிய சரளா இதயம் தடதடக்க விசாரிக்க, “உன் பையன் எங்க?” கேட்டார்கள் அதிகாரமாக.
“சின்னவன் ஹாஸ்பிடல்ல இருக்கான். பெரியவன் ஆட்டோ ஓட்டப் போயிருக்கான்.”
“ஏய்! பொய் சொல்லாம உண்மையச் சொல்லு. உன் பெரிய பையன் இப்ப எங்க?”
“சத்தியமா என் பையன் ஆட்டோ ஓட்டத்தான் சார் போயிருக்கான். அவனை எதுக்காகத் தேடுறீங்க?”
“எதுக்காகவா? கஞ்சா கேஸை அவன் மேல போட்டு ஆயுசுக்கும் உள்ள தள்ள…”
“ஐயோ! என்ன சார் சொல்றீங்க? அவன் அந்த மாதிரிப் பையன் இல்ல சார். இப்பத்தான், என் சின்னப்புள்ள உயிர் பிழைச்சு ஹாஸ்பிடல்ல படுத்திருக்கான். அதுக்குள்ள இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுறிங்களே.”
“உன் ஒப்பாரியக் கேட்க எங்களுக்கு நேரமில்லை. ஒழுங்கு மரியாதையா உன் பையன் எங்கன்னு சொல்லிடு.” என அவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுதே சரளாவின் கணவர் சத்யராஜ் உள்ளே நுழைந்தார்.
“என்னங்க! இவங்க என்னென்னமோ சொல்றாங்க, என்னன்னு கேளுங்க. நம்ம மகனைக் கஞ்சா கேஸ்ல பிடிச்சிட்டுப் போக வந்திருக்காங்களாம். அவன் அந்த மாதிரிப் பையன் இல்லைன்னு நீங்களாவது சொல்லுங்க.”
உள்ளே நுழைந்த சத்யராஜுக்கும் பெரும் பதற்றம் தான் என்றாலும், பொறுமையாக அவர்களிடம் காரணத்தைக் கேட்க, “உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உன் மகன் எங்க இருக்கான்னு சொல்லிட்டா நல்லது.” என்றார்கள்.
“ஒரு நிமிஷம் இருங்க சார். நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வரேன்.”
“நாங்க வந்த விஷயத்தைச் சொல்லித் தப்பிக்க வைக்கலாம்னு பார்க்கறியா. அவனை எப்படி ஸ்டேஷனுக்கு வர வைக்கனும்னு எங்களுக்குத் தெரியும்.” என்றவர்கள் சத்யராஜைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.
கணவனை விட்டுவிடச் சொல்லிக் கதறியப்படி, சரளா பின்னால் கெஞ்சிக் கொண்டு செல்ல, சிறிதும் மனம் இறங்காமல் அங்கிருந்து புறப்பட்டார்கள் அதிகாரிகள். அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரும், தங்களை வேடிக்கை பார்ப்பதில் கூனிக்குறுகிப் போனவர் உடனே தன் மகனுக்கு அழைப்பு விடுத்தார். பத்து முறைக்கு மேல் அழைத்தும் எடுக்காத மகனை எண்ணிக் கவலையில் ஆழ்ந்தவர் கணவனைத் தேடி காவல் நிலையத்திற்குச் சென்றார்.
பொறுமையாக வீட்டிற்கு வந்தவன் காதில் நடந்த சம்பவங்கள் விழ, அவனும் அடித்துப் பிடித்து ஓடினான். அவர்கள் ஏரியா காவல் நிலையத்தில் ஏற்கெனவே சரளா விசாரித்துக் கொண்டிருந்தார். அங்கு இப்படியான யாரும் வரவில்லை என்ற செய்தி இடியாக விழ,
“போலீஸ்காரங்க வந்துதான் சார், என் புருஷனைக் கூட்டிட்டுப் போனாங்க. கொஞ்சம் என்ன ஏதுன்னு விசாரிங்க சார். என் மகனை வேற, யாரோ அடிச்சுப் போட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான். இவரையும் யாருன்னே தெரியாதவங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க. எங்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுங்க சார்.” என அங்கிருந்த அனைவரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கும் நேரம் சரியாக வந்து சேர்ந்தான் கருடேந்திரன்.
“கருடா…” என ஓடிவரும் தாயைச் சேர்த்தணைத்துக் கொண்டவன் நடந்ததைக் கேட்டறிந்தான். உடனே தந்தை சத்யராஜைத் தொடர்பு கொள்ள, “கமிஷனர் ஆபீஸ்க்கு வாடா” என்றதோடு அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
எதனால்? என்பதைக் கண்டு கொண்டவன், தன்னுடன் வருகிறேன் என்ற அன்னையைச் சமாதானம் செய்து வீட்டில் விட்டுவிட்டுப் புறப்பட்டான். மகன் அழைப்பைப் பார்த்ததும்,
“என் பையன் ரொம்ப நல்லவன் சார். அவனை எதுவும் பண்ணிடாதீங்க.” எனக் கோரிக்கை வைத்தார்.
“நல்லவனா? நல்லவன் தான் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டுப் போவானா?” என்ற கரகரத்த குரலில் சத்யராஜ் திரும்ப, இறுகிப்போன முகத்தோடு நின்றிருந்தார் பொன்வண்ணன்.
“என்ன சார் சொல்றீங்க?”
“என் பொண்ணு கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்டிட்டுப் போயிருக்கான். உன் பையனைச் சும்மா விட மாட்டேன். வாழ்க்கை முழுக்க ஜெயில்ல தான் இருக்கப் போறான். இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்காக நீயும் இந்தத் தண்டனையை அனுபவி.”
“நீங்க சொல்ற மாதிரி என் பையன் ஒரு நாளும் பண்ணி இருக்க மாட்டான் சார். அவன் ரொம்ப நேர்மையானவன். அவனுக்கு ஒரு தங்கச்சியும் இருக்கா. அதனால நிச்சயம் பண்ணிருக்க மாட்டான்.”
“கூடப்பிறந்தவள் இருக்கும்போதே இப்படி ஒரு காரியத்தைப் பண்றான்னா, அவன் எப்படிப்பட்ட கேடுகெட்டவனா இருப்பான்.” என்ற பொன்வண்ணன் அங்கிருந்த அதிகாரிகளிடம்,
“அவன் வந்ததும் என்ன, ஏதுன்னு கேட்காம அடிச்சு நொறுக்குங்க சார். பல பேர் பார்க்க என் பொண்ணு கழுத்துல தாலி கட்டி அசிங்கப்படுத்தி இருக்கான். எங்களுக்கு இருக்க ஸ்டேட்டஸ்க்கு எப்படி வெளிய தலை காட்ட முடியும். இப்பவே ஆளாளுக்கு போன் பண்ணி, என்ன பொன்வண்ணன் இப்படி ஆயிடுச்சான்னு குத்தலா கேக்குறாங்க. இதுக்கெல்லாம் காரணமான அவன் நல்லாவே இருக்கக் கூடாது.” எனக் கட்டளையிட்டார்.
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார். இனி அவனை ஆண்டவனால கூடக் காப்பாத்த முடியாது.”
“வந்துட்டானா?” என்ற அதிகாரக் குரலுக்கு சத்யராஜ் திரும்ப, விரைப்பான முகத்தோடு உள்ளே நுழைந்தாள் ரிதுசதிகா.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் மேடம்.”
“கையோட இழுத்துட்டு வர்றதை விட்டுட்டு விளையாடிட்டு இருக்கீங்களா? இந்த விஷயத்துல நான்தான் ஜெயிக்கணும். தெரியாமல் தாலி கட்டிட்டேன், என்னை விட்டுடுன்னு என் கால்ல விழுந்து கதறனும். அப்படி நடக்கல… அவனோட சேர்த்து உங்களையும் கொன்னுடுவேன்.”
“ரிது…”
“பின்ன என்னப்பா? அவனைக் கூட்டிட்டு வராம அவன் அப்பாவக் கூட்டிட்டு வந்திருக்காங்க.”
“போலீஸ்காரங்களுக்கு மரியாதை கொடு. அவங்க டூட்டியை அவங்க கரெக்டா பார்ப்பாங்க.”
“என்னத்தப் பார்ப்பாங்க?”
“இந்த விஷயத்தை இவ்ளோ தூரம் எதுக்குப் போக விட்ட? ஒருத்தன் என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான்னு சொல்ல வேண்டியது தான.”
“எனக்கு என்ன தெரியும், அந்தப் பரதேசி இப்படிப் பண்ணுவான்னு. என்னென்னமோ வந்து உளறிட்டு இருந்தான். அது என்னன்னு கூட எனக்கு சரியாப் புரியல. அதுக்குள்ள இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டான்.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த கருடேந்திரன் பார்வையில் முதலில் விழுந்தது இவள்தான். பார்வையால் அவன் சுட்டெரிக்க, இவள் வெட்டிக் கொண்டிருந்தாள். இருவரின் பார்வையும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருக்க,
‘இவனா!’ எனத் திகைத்தார் பொன்வண்ணன்.
“வாடா வா…” என அன்பாக அழைத்த காவல் அதிகாரிகள், “இப்படி வந்து நில்லுடா” என்றிட, அவர்களைச் சிறிதும் கண்டு கொள்ளாது தந்தையிடம் சென்றவன்,
“உங்களை ஏதாச்சும் பண்ணாங்களாப்பா?” என அவர் நலத்தை விசாரித்தான்.
“அதெல்லாம் இல்லப்பா. நீதான் இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டன்னு பேசிக்கிறாங்க. என் புள்ள அப்படி எதுவும் பண்ணிருக்க மாட்டான்னு எவ்ளோ சொல்லியும் நம்பல.”
“இவங்கெல்லாம் பணத்துக்கு வேலை பார்க்குறவங்க. இவங்ககிட்ட நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாதுப்பா.”
“என்னடா, போலீஸ்காரங்களையே நக்கல் பண்றியா?”
“ஆமா சார். நீங்க பணத்துக்காகத் தான இவ்ளோ விசுவாசமா வேலை பார்க்குறிங்க. நேர்மைக்கு வேலை பார்க்குறவங்களா இருந்தா, ஒரு மாசமா போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடந்துட்டு இருக்க என் கேஸை எடுத்து இவளை உள்ள தள்ளி இருப்பீங்க.” என ரிதுவைக் கை காட்டினான்.
“யூ ராஸ்கல்! இன்னும் உன் கொழுப்பு அடங்கலையா? இப்பப் பாருடா, உன்னை என்ன பண்றன்னு.”
“தப்புப் பண்ணாதவன் கொழுப்பு அடங்காது. உன்னால இந்தப் போலீஸ்காரங்களைத் தான் விலை பேச முடியும், உண்மையை இல்லை.”
“என்ன சார், இவனப் பேச விட்டு வேடிக்கை பார்க்குறீங்க. நாய அடிக்கிற மாதிரி அடிச்சு உள்ள தள்ளுங்க.”
ரிதுசதிகா கட்டளையை ஏற்ற அதிகாரிகள், அவன் சட்டைக் காலரைப் பிடித்துச் சுவரில் தள்ளி விட்டு விசாரிக்க, “ஆமாம். நான்தான் தாலி கட்டினேன்.” என சத்யராஜை அதிரவிட்டான்.
“எவ்ளோ திமிரா சொல்றான் பாரு.” எனப் பல்லைக் கடித்தவள், “என்னை ஃபாலோ பண்ணி வந்து என் பேக்ல இருந்த இருபது லட்சத்தையும் திருடிட்டுப் போயிட்டான் சார். அதையும் என்ன ஏதுன்னு விசாரிங்க.” என ஏற்றி விட்டாள்.
“உன் வாயில உண்மையே வராதாடி களவாணி. இந்த மாதிரிப் பாவத்துக்கு மேலப் பாவம் பண்ணிக்கிட்டே போனா புழு பூத்து தான் சாவ…”
பேசிக் கொண்டிருந்த கருடேந்திரன் கன்னத்தில் ஓங்கி அடித்த அங்கிருந்த அதிகாரி, “எங்க முன்னாடியே இவ்ளோ திமிராப் பேசுற. வாய மூடிட்டுக் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும். இல்லன்னா உன்ன மட்டும் இல்ல, உன் அப்பாவையும் சேர்த்து உள்ள தள்ளிடுவேன்.” என்ற பின்னும் அவள் மீதான பார்வையை மாற்றவில்லை கருடேந்திரன்.
“எங்கடா அந்த இருபது லட்சம்?”
“நான் எடுக்கல சார்…” என்றவனை நம்ப மறுத்த அதிகாரிகள் அவர்கள் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
அடி வாங்கும் மகனைக் கண்ட சத்யராஜ் கதற, ஆனந்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ரிது. வாயிலிருந்து வழியும் ரத்தத்தைத் துடைக்க கூட நேரம் கொடுக்காதவர்கள், திருடிய பணத்தைக் கொடுக்கும்படி எச்சரிக்க, “முதல்ல இவ என்ன பண்ணான்னு கேளுங்க சார்” என்றான் வலிகளுக்கு நடுவில்.
“அவ இவன்னு பேசுவியா?” என நான்கு சுவர் அதிரும்படி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த அதிகாரி, “நீங்க கம்ப்ளைன்ட எழுதிக் கொடுங்க மேடம். ரெண்டு கேஸ் இல்லாம, ஆள் கிடைக்காம இருக்க மொத்தக் கேஸையும் இவன் மேல போட்டு உள்ள தள்ளுறேன்.” என்றார்.
புன்னகை முகமாகச் சரி என்று தலையசைத்தவளிடம் சத்யராஜ் கெஞ்சிக் கொண்டிருக்க, “அவகிட்டக் கெஞ்சாதிங்கப்பா. அவ அந்த அளவுக்கு வொர்த் இல்லை. நம்மளை மாதிரி ஆளுங்ககிட்ட பணத்தை வாங்கி வசதியா வாழற பிச்சைக்காரி.” என்றதும் வெகுண்டெழுந்தவள் அவனை அடிக்கப் பாய்ந்தாள்.
தன் மகனை அடிக்கப் போகும் அதிர்ச்சியில், சத்யராஜ் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிற்க, காவலர்கள் கையைப் பிடித்திருப்பதால் விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தான். எல்லாம் அவள் வசம் இருப்பதால், ஓங்கிய கையைக் கன்னத்தோடு “பளார்!” என்று சேர்க்கும் நேரம் யாரோ தடுத்தார்கள். ரிதுசதிகா யார் என்று பார்க்க, அவள் தந்தை பொன்வண்ணன்.
“அப்பா…” என்ற மகளின் கைகளை விட்டவர், “அவனை விடுங்க சார்.” என அனைவரையும் திகைக்க வைத்தார்.
“அப்பா…”
“ஒரு நிமிஷம் இரு.” என முன்னே நகர்ந்து கருடேந்திரன் முன்னால் நின்றார்.