2. நேசம் நீயாகிறாய்!

4.8
(6)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

 

நேசம் 02

இரவு நேரம். ப்ரீத்தியின் அழுகுரலில் பாஸ்கரின் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது.

படிக்கட்டில் துள்ளி இறங்கும் போது கீழே விழுந்து அடிபட, முழங்காலில் ஏற்பட்ட சிராய்ப்பில் இரத்தம் கசிந்தது.

“வாடா செல்லம். நான் மருந்து போட்டு விடறேன்” மரகதம், ரேஷ்மா, மாதவன் என யார் அழைத்தும் அவள் விடவில்லை.

“மாமா வரனும்” என்று அவள் அழுது கொண்டிருக்க, “மாமா ஹாஸ்பிடல் போயிருக்காரே டா. நீ தாத்தா கிட்ட வருவல்ல” அவளைச் செல்லம் கொஞ்சினார் பாஸ்கர்.

“மாமா வேணும்” ப்ரீத்தி வீறிட்டு அழும் போது கார் வரும் சத்தம் கேட்டது.

“ப்ரின்சஸ்” என ஓடி வந்து அவளைத் தூக்கிக் கொண்டான் ராகவேந்திரன். மாமனைக் கண்டதும் அழுகையை நிறுத்தியவளைக் கண்டு யாருக்கும் ஆச்சரியம் இல்லை‌.

ப்ரீத்தி மற்றும் ராகவ்வின் உறவு அத்தகையது. ப்ரீத்திக்கு ராகவ் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவனுக்கும் அவ்வாறே. அவளிடம் மட்டுமே தன் இயல்புக்கு மீறி விளையாடுவான், பேசுவான். அவளிடம் குழந்தையாகவே மாறிப் போவான்.

“வலிக்குது மாமா” முகத்தைச் சுருக்கிக் கொண்டு அவள் கூற, “மாமா வலிக்காம மருந்து போடுறேன்” ஊதி ஊதி மருந்து போட்டு விட்டான் அந்தப் பாசமிகு மாமன்.

“நான் கூப்பிட்டா வர முடியாது. மாமா கிட்ட மட்டும் ஓடிடுறல்ல” மகளின் கன்னத்தைக் கிள்ளிய ரேஷ்மா, “நீ நேற்று அவளைப் பார்க்க வரலனு அடம்பண்ணி உன்னைப் பார்க்க என்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டா. செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்க” தம்பியைத் திட்டினாள்.

“மாமாவைத் திட்டாதம்மா. மாமா பாவம்” ப்ரீத்தி ராகவ்வின் கழுத்தைக் கட்டிக் கொள்ள,

“மை கியூட் ப்ரின்சஸ்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான் அவன்.

“ராகவ்! நம்ம அண்ணாச்சி கடையில் கல்யாணப் பிடவை பார்த்து வெச்சிருக்கேன். நீயும் தேனுவும் நாளைக்குப் போய் அதைப் பார்த்து சிலெக்ட் பண்ணிட்டு வாங்க” என மரகதம் கூற,

“நான் எதுக்கும்மா? அவளுக்கு ஆன்ட்டி கூட போய் சிலெக்ட் பண்ண சொல்லுங்க” என்று சொல்லி விட்டான்.

“உனக்கென்ன லூசாடா? நானும் அப்போல இருந்து பார்க்கிறேன். கல்யாணம்னா இன்ட்ரெஸ்டே இல்லாம இருக்கே. ஏதோ லவ் பெய்லியரான மாதிரி” அவனின் போக்கு பிடிக்காமல் முறைத்தாள் ரேஷ்மா.

“எனக்கு தான் இந்த லவ் செட்டாகாது, அர்ரேன்ஜ் மேரேஜ் தான் வேணும்னு சொன்னேனே. நீங்களும் அதே மாதிரி தேனுவைப் பேசுனீங்க, ஓகே சொன்னேன். இன்ட்ரெஸ்ட் காட்டுறதுன்னா எனக்கு கல்யாண வயசு தான் வந்துருச்சுனு டான்ஸ் ஆடிக் காட்டனுமா?” என்று கேட்டான் அவன்.

“அதை விடு ரேஷு! இவன் ரஷ்யாவுக்குப் போனதே தான் போனான்‌. குடும்பத்தை தவிர சொந்த பந்தம்னு மத்த ஆட்களோட கலந்திருக்க பழகாம எதுலயும் ஒட்டுதல் இல்லாம இருக்கான். தேனு வந்தா எல்லாத்தையும் சரி பண்ணிடுவா” என்று மகளிடம் சொன்னவர்,

“ஆனா ராகவ்! நீ நாளைக்கு கண்டிப்பா போயே ஆகனும். சுசீ கிட்ட உன்னை அனுப்புறதா சொல்லிட்டேன். காலையில் தேனு எங்கேயோ போறாளாம். சாயங்காலமா பிடவை எடுத்துட்டு வா” தனது முடிவை மகனிடம் கண்டிப்பாக கூறி விட்டுச் சென்றார் மரகதம்.

தாயின் சொல்லை மறுக்க முடியாமல் சோஃபாவில் சரிந்தவனை அண்ணாந்து நோக்கினாள் ப்ரீத்தி.

“நான் ஒன்னு கேட்கவா மாமா?”

“தாராளமா கேளுடா. என்ன கேட்கனும் உனக்கு?” அவளை ஆவலுடன் ஏறிட்டான்.

“உங்களுக்கு தேனுவைப் பிடிக்குமா?” என்று சின்னவள் கேட்கவும், “பிடிச்சிரும் ப்ரின்சஸ். நீ இல்லாதப்ப உன்னைப் பற்றி தெரியாதுல்ல, ஆனா நீ பிறந்ததும் உன்னை பிடிச்சு போச்சுல்ல. அதே மாதிரி தேனு எனக்கு வைஃப் ஆகப் போறா தானே. சோ அவளையும் பிடிக்கும்” எனப் பதிலளித்தான் ராகவ்.

அவன் பேசுவதைக் கேட்ட ரேஷ்மாவுக்கு குழப்பமாகத் தான் இருந்தது. என்றாலும், ராகவ் அவளை யதார்த்தமாக மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்வான் என்பது மட்டும் உறுதியாகத் தெரிய ஆசுவாசமாய் பெருமூச்சு விட்டாள்.

“ஏன் திடீர்னு இப்படிக் கேட்ட?” தமக்கை மகளிடம் அவன் வினவ, “சும்மா கேட்டேன் மாமா. எனக்கு தேனுவை ரொம்ப பிடிக்கும். என் கூட நல்லா விளையாடுவா. பூ பறிச்சு என் தலையில் வெச்சு விடுவா” என்றாள், முகமெல்லாம் மகிழ்வுப் பூ பூக்க.

ராகவ் முகத்திலும் அம்மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. நமக்குப் பிடித்த ஒருவர் மீது அன்பு காட்டுபவர் மீதும் நமக்கு ஒருவகை அன்பு ஏற்படும் அல்லவா?

அத்தகையதொரு மெல்லிய நேசம் அவள்பால் அதிகரித்தது ஆடவனுக்கு.

அவ்வுணர்வுடனே அறையினுள் நுழைந்தவன் நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பார்த்தான். அவள் முகத்தில் சிரிப்பு இருந்தது.

ஆனால் அச்சிரிப்பு புகைப்படத்திற்காக, தன் குடும்பத்தினருக்காக அவள் பூசிக் கொண்ட போலிப் புன்னகை என்பதை அவனறியானே.

ஆனால் அடுத்த கணமே அவனுக்கு சற்று முன்னால் அவளிடமிருந்து வந்த குறுந்தகவல் நினைவுக்கு வர, “நடிப்பு! அத்தனையும் நடிப்பு. நான் நிறுத்தனுமா இந்த கல்யாணத்தை? இருடி வெச்சுக்கிறேன்” என கருவிக் கொண்டான் ராகவேந்திரன்.

அவனது கடுப்பிற்குக் காரணமானவளோ மறுநாள் காலையில் ஆர்டர் எடுத்துத் தைத்த ஆடைகளை ஒப்படைப்பதற்காக அடுத்த ஊருக்கு பயணப்பட்டாள்.

அவளது தையலின் நேர்த்தியைப் பார்த்த சொந்தக்காரப் பெண்ணொருத்தி அவரது மகளுக்காக தைத்துக் கேட்கவும் மறுக்க முடியாமல் சம்மதித்தாள்.

அங்கு சென்று அதைக் கொடுத்து விட்டு புகையிரதத்தில் ஏறினாள் தேன் நிலா. அவளுக்கு புகையிரதப் பயணம் என்றால் கொள்ளைப் பிரியம்.

யன்னலினூடே வீசும் சீதளக் காற்றை நுகர்ந்து நுரையீரலுக்குச் செலுத்தியவளுக்கு தனது திருமணம் பற்றிய நினைவு வந்தது.

“மெசேஜ் பார்த்து ரிப்ளையே காணோம். கல்யாணத்தை நிறுத்திடுவார் தானே? வேணாம்னு சொல்லுற பொண்ணைக் கட்டிக்க கிறுக்கு பிடிக்கலயே. டாக்டருக்கு ட்ராக்டர் கணக்குல பொண்ணுங்க வந்து நிற்பாங்க. நான் ஒரு பொருட்டே இல்லல்ல?” என உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.

விதவிதமாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டவளுக்கு ராகவ்வின் முகம் மனதில் பளிச்சிட்டது.

“எனக்கு ட்ரெயின்னா ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த ரஷ்ய ராக்கெட் பந்தாவா கார்ல போகும். அவரைக் கட்டிக்கிட்டா காலம் பூரா கன்றாவியான கார் வாசனையோட வாழனும். இப்படி காத்து வாங்கிட்டே ட்ரெயின்ல ஒரு நாளாவது போயிருப்பாரா? ரசனை கெட்ட மனுஷன். இந்த விஷயம் கூட ஒத்துப் போகல” சற்று சத்தமாகவே புலம்பினாள் அவள்.

அடுத்த நொடி அவள் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் மாறும் சம்பவம் நிகழ்ந்தது.

ஆம்! அவளது அருகில் நின்றவாறு கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த ஆடவன், அவள் முன்னால் இருந்த பெரியவர் எழுந்து சென்றதும் அவ்விடத்தில் அமர்ந்தான்.

அந்த ஆடவனைப் பார்த்தவளோ அதிர்ச்சியில் எழுந்தே நிற்க, “ப்ளீஸ் சிட் டவுன். எழுந்து நின்னு சல்யூட் அடிக்க தேவையில்லை” என்றவன் சாட்சாத் ராகவேந்திரனே.

அவன் சொன்னதைச் செய்தவளுக்கு இன்னும் அதிர்ச்சி மாறவில்லை. தனது முதல் கணிப்பு பொய்யாகிப் போனதை உணர்ந்தாள். அவன் புகையிரதத்தில் வந்து விட்டானே.

தான் பேசியதைக் கேட்டு விட்டானோ என்று உள்ளம் படபடத்தது. அவனோ அவளை ஏறெடுத்தும் பாராமல் அலைபேசியை நோண்டத் துவங்கினான்.

அவள் தொண்டையைச் செரும, நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் அலைபேசிக்குள் புதைந்தான்.

மீண்டும் பலமாக இருமத் துவங்க, “இருமல்னா ஹாஸ்பிடல் திறந்திருக்கு அங்கே வரலாம். இப்போ மெடிசின் கையில் இல்லை” என்றவனை கடுப்புடன் பார்த்தாள்.

தான் அனுப்பிய மேசேஜுக்கான பதில் என்னவென்று கேட்டு விட எண்ணி, “கல்யாணம்..” என ஆரம்பிக்கும் போது இடையிட்டு,

“அடுத்த வாரம் கல்யாணம்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள் நிலா” கையை நீட்டியவனைக் கண்டு அவள் கண்களில் தீப்பொறி.

“நான் அனுப்பின மேசேஜைப் பார்த்தும் எப்படி இப்படி சொல்லலாம்? என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று கடுப்பானாள் காரிகை.

“எனக்கு சுய புத்தி இருக்கு. உன் கட்டளைப்படி செயற்பட நான் ரோபோ கிடையாது” கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொள்ள,

“நீங்க ரோபோ இல்லை. ஆறறிவுள்ள மனிதன் தான். கல்யாணத்தில் விருப்பம் இல்லாத பொண்ணை கட்டிக்கிறதைப் பற்றி உங்க அறிவை பாவிச்சு யோசிக்க மாட்டீங்களா?” சலிப்போடு பார்த்தாள் அவள்.

“எனக்கு இந்த கல்யாணத்தில் பூரண சம்மதம். அன்ட் கல்யாணத்தை நிறுத்தவும் முடியாது. நீ வேணா நிறுத்திக்கோ” அவளைக் கூர்மையாகத் துளைத்தன, அவன் விழிகள்.

“ப்ளீஸ் ராகவ்! எனக்காக” என்ற கெஞ்சல் அங்கு எடுபடவில்லை.

“ஹனி மூன்” என்று அவன் ஆரம்பிக்க,

“என்னது ஹனிமூனா? கல்யாணமே வேணாங்குறேன். இதுல ஹனிமூன் ஒன்னு தான் குறை. பகல் கனவு காணாதீங்க மிஸ்டர்” படபட பட்டாசாக வெடித்தாள் அவள்.

“உன் பெயர் தேன் நிலா தானே? அதை இங்கிளீஷ்ல சொன்னேன்” அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தான் ராகவேந்திரன்.

‘அந்த இத்துப்போன இங்கிளீஷ்ல கூப்பிடலனு யார் அழுதா? ஹனி மூன் ஹோர்மோன்னு ச்ச. அவமானமாப் போச்சு குமாரு’ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் தேன் நிலா.

அவன் வேண்டாம் என்று சொல்லும்படி எதையாவது செய்ய நினைத்தவளுக்கு தனக்குப் பக்கத்தில் இருந்த முகம் தெரியாத ஆடவனைக் கண்டு மூளையில் மின்குமிழ் ஒளிர்ந்தது.

அலைபேசியில் மீராவுக்கு அழைத்தவள், “மீரு! ஒரு விஷயம் சொல்லனும். நாம வழக்கமா பார்க்கிறதை விட அழகான பையன் இருக்கான். செமயா இருக்கான் டி. அவன் கண்ணைப் பாரேன்.. அப்பப்பா! காந்தத்தை விட பவர். இதயத்தைக் கட்டி இழுக்குது ” அவனைப் பார்த்தவாறு ராகவ்வுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னவள் மேலும் தொடர்ந்தாள்.

“ஹேன்ஸம் பசங்களை சைட்டடிக்கிற விஷயம் நான் கட்டிக்க போறவருக்கு தெரிஞ்சா என்னவாகும்? பாவம்ல பாஸ்கர் அங்கிளோட பையன். டாக்டருக்கே டேமேஜ் ஆகிருமே”

மறுபக்கத்தில் மீராவோ “நான் சைட்டடிக்கிறது கூட ஓகே. ஆனால் நீ எப்போ மச்சி சைட் அடிப்ப? ரஷ்ய பீஸை வெட்டி விட யோசிச்சு யோசிச்சு மண்டை குழம்பிப் போச்சு போல” என சொல்லவும், அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான் அவன்.

ஏனென்றால், அவளது கையால் தவறுதலாக ஸ்பீக்கர் ஆன் செய்யப்பட்டிருக்க, மீரா பேசியது தெளிவாகவே அவன் காதில் விழுந்திருந்தது.

“எல்லாமே சதி செய்யுது ஷிட்” கேவலமாக இளித்து வைத்தவள் யன்னல் புறம் திரும்பிய பின் வாயே திறக்கவில்லை.

இறங்குமிடம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டனர்.

‘ஒரு வார்த்தை வாய் திறந்து பேசினாரா? வாழ்க்கை இப்படியே போயிடுமா? ஏன் கல்யாணம் வேணானு சரி கேட்கத் தோணாத மனுஷன் ஹூம்’ அவனை உள்ளுக்குள் வறுத்தெடுத்தாள் தேன் நிலா.

புகையிரத நிலையத்திற்கு அருகில் வீடு என்பதால் நடந்தே சென்றனர் இருவரும். ஆனால் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.

வீடு வந்ததும், “ஈவ்னிங் சாரி வாங்க கடைக்குப் போகனும்னு அம்மா சொன்னாங்க. ஷார்ப்பா மூனு மணிக்கு வருவேன்” என தகவல் தெரிவித்து விட்டு செல்ல,

“ஷார்ப்பா மூனு மணியாமே. ஈவ்னிங் எப்படியாவது டாக்டரை நோஸ் கட் பண்ணியே ஆகனும்” என சபதம் எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் வஞ்சி.

 

தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-07

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!