2. விஷ்வ மித்ரன்

4.6
(7)

விஷ்வ மித்ரன் 

 

💙 அத்தியாயம் 02

 

மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்த ஏர்போர்ட்டில், விழிகளில் எதிர்ப்பார்ப்பு மின்ன அங்கும் இங்கும் பார்வையை சுழல விட்டவாறு நின்றிருந்தாள் ஒரு பெண்.

 

“இன்னும் இந்த எருமய காணோம். உன்ன வெயிட் பண்ண வைக்காம டக்குனு வந்துடுவேன் பூரின்னு சொல்லிட்டு இப்போ இப்படி பண்ணுறான்” என தன் காத்திருப்பிற்கு காரணமானவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணி எனும் அவள்.

 

சுற்றிச் சுழன்ற கண்கள் ஓரிடத்தில் சட்டென நிற்க எதிரில் வருபவனை ஆர்வமாய் ஆராய்ந்தாள்.

 

ப்ளேக் ஜீன்ஸ், வயிட் சர்ட்டில் ஆஜானுபாகுவாக கம்பீரமாய் ஒரு கையால் தலையைக் கோதி விட்டு ட்ராவலிங் பேக்கை தள்ளியவாறு வந்தான் மித்ரன்.

 

மென்னடை போட்டு அவளருகில் வந்தவன் “ஹேய் பூரி” என்று குதூகலமாய் அழைக்க, “மித்து பேபி” கத்திக் கொண்டே அவனைக் கட்டிக் கொண்டாள்.

 

அதில் சிரித்து விட்டவன் “ஏய் விடு லூசு! அப்பாவும் இருக்கார். இப்படியா கட்டிப் பிடிப்ப?” என்று கேட்க அசடு வழிய விலகியவள், “அங்கிள்! நான் உங்க கூட ரொம்ப கோவமா இருக்கேன்” என்றாள்.

 

“என் செல்ல மருமகளுக்கு அப்படி என்ன கோவமாம்” என பாவமாக கேட்கவும் தான் செய்தார் ஹரிஷ்! மித்ரனின் தந்தை.

 

அவளோ தலை சிலுப்பிக் கொண்டு “யூ.கே போனது தான் போனீங்க. ஒரு கால் பண்ணுனீங்களா? அட்லீஸ் மித்து கிட்ட சொல்லி பேச சொன்னாலும் பேசல. அப்படி என்ன பிசியோ பிசியாம்? ” என்று இடுப்பில் கை வைத்துக் கூறிய பூர்ணியைக் கண்டு கப்சிப்’ஆன தந்தையைப் பார்த்தான் மைந்தன்.

 

அவனுக்கு இரண்டு வயது இருக்கும் போதே கேன்சரால் பீடிக்கப்பட்டு மனைவி அன்னபூர்ணி இறந்து விட, தந்தைப் பாசத்துடன் தாய்ப்பாசத்தையும் சேர்த்து ஊட்டி வளர்த்தார் ஹரிஷ்.

 

மனைவியை இழந்து வாழ்வே வெறிச்சோடியதாய் செல்ல, அவரது தங்கை நிர்மலா தான் ஈன்றெடுத்த பிஞ்சை அவர் கையில் கொடுக்க அதற்குப் பூர்ணி என பெயர் வைத்தவர் வெகுவாய் சோகம் மறந்து இயல்புக்கு திரும்பினார். அவருக்கு அன்றிலிருந்து பூர்ணி என்றால் கொள்ளைப் பிரியம்.

 

ஹரிஷைப் பார்த்து “போதும் ரொம்ப பம்மாத. என் கூட தானே இருக்க போற. அப்போ உன்ன வெச்சு செய்யுறேன் ஹரி” என அடக்கமாய் நகைக்க,

 

“அடிங்க என் முன்னாடியே டாடிய பெயர் சொல்லி கூப்பிடுறியா?” என அவள் காதைத் திருகினான் மித்ரன்.

 

“ஆவ்ச்சு வலிக்குது டா. விடு விடு” என்று கத்தியவள் “மாமா உங்க பையன் கிட்ட விடச் சொல்லுங்க” ஹரிஷிடம் கெஞ்ச, அவரும் சிரித்தபடி “விடு மித்து. பாவம் விட்டா அழுதுடுவா போல” என்க அவனும் கையை எடுத்தான்.

 

காரை நோக்கி சென்ற பூர்ணி ஓட்டுனர் இருக்கையில் அமரப் போக “நான் ட்ரைவ் பண்ணுறேன். நீ அந்த சீட் போ” என்ற மித்ரன் அதில் அமர்ந்து கொள்ள அவளும் அருகிலுள்ள சீட்டில் இருக்க ஹரிஷ் பின் சீட்டில் அமர்ந்தார்.

 

பூர்ணி மித்ரனைப் பார்த்தவாறு இருக்க அவள் பார்வையை உணர்ந்தவனோ “எதுக்கு அப்படி பார்க்குறே..? ஏதாவது ஆராய்ச்சி பண்ண போறியா” என்று வினவ, மறுப்பாக தலையசைத்தவள் “யூ.கே போன இந்த ஏழு மாசத்துல ரொம்ப அழகாகிட்ட. அதான் சைட் அடிச்சேன்” கண் சிமிட்டினாள் அவள்.

 

“இந்த வாய் மட்டும் குறையவே குறையாதே” என்றவனுக்கு “அத குறைச்சிக்க முடியல டா” என பதிலளித்தவள் வளவளத்துக் கொண்டே வந்தாள்.

 

காரை நிறுத்திய மித்ரன் பல மாதங்களுக்குப் பின் தன் வீட்டினுள் அடியெடுத்து வைத்தான்‌.

 

ஹரிஷ் தனதறைக்குச் சென்று விட சோபாவில் தொப்பென சரிந்தான் மித்ரன். ஓடிச் சென்ற பூர்ணி பழச்சாறு க்ளாஸை அவன் முன் நீட்ட என்ன என்பது போல் புருவம் உயர்த்தினான்.

 

பூர்ணி “டயர்டா இருப்பல்ல. ஜூஸ் குடி” என்றவள் குனிந்து க்ளாஸை நீட்டும் போது சட்டென விழுந்து அவன் கண்முன் தோற்றமளித்தது சுடிதாரினுள் மறைத்து வைத்திருந்த தாலி. அவள் கழுத்தில் தொங்கிய தாலியை வெறித்துப் பார்த்தான் காளை.

 

“என்னாச்சு?” என்று அவள் தட்டியதில் உணர்வாகியவன், “ஹா..ஹான்” என்று எழுந்து ஜூஸை வாங்கிக் கொள்ள, அவன் பார்வை போகும் திசையை உணர்ந்தவளோ தாலியை உள்ளே போட்டு மறைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினாள்.

 

இருந்த களைப்பில் பழச்சாறை ஒரே மிடரில் அருந்தி முடித்தவன் கைகளால் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

 

பற்பல எண்ணங்கள் அசுர வேகத்தில் அவன் உள்ளத்தில் புயலாய்த் தாக்க “வி… விஷு” மெல்லிய முணகலுடன் உச்சரித்தன அவனிதழ்கள்.

 

…………

மழலைகளின் சிரிப்பொலி எங்கும் கிண்கிணி நாதமாய் ஒலிக்க “அன்பு அநாதை ஆசிரமம் ” எனும் பெயர்ப்பதாகை அந்தச் சிறு கட்டிடத்தின் வாயிலில் தொங்கிக் கொண்டிருந்தது.

 

தாய் தந்தையரை இழந்த மற்றும் அவர்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டவர்கள் இருபது வயது வரையிலே அங்கு அனுமதிக்கப்படுவதுண்டு.

 

“சிட்டு இங்க வா” எனும் அதிகாரக் குரலில் “வந்துட்டேன் மேடம்”அடித்துப் பிடித்துக் கொண்டு அந்த நொடியே அவர் முன் ஆஜராகியது ஆறு வயதே நிறைந்த குட்டிச் சிறுமி.

 

அவளை ஏறிட்டு நோக்கி விட்டு “போய் வைஷுவ வர சொன்னேன்னு சொல்லு” என்று கட்டளை பிறப்பித்தார், ஆசிரமத்தின் உரிமையாளினியான ரேகா.

 

அதைக் கேட்டு “சரிங்க மேடம்” என்று உண்மையில் சிட்டாகத் தான் ஓடினாள் சிட்டு.

 

“அக்கா! வைஷுக்கா” என சத்தமிட்டவாறு தேடியவள் மனதில் மின்னல் வெட்ட சட்டென திரும்பி ஓடினாள் அந்த மரத்தடிக்கு.

 

அங்கு சென்றவளின் கண்களில் சிறு மின்னல், தன் தேடலுக்குரியவளைக் கண்டு விட்டதில்! முதுகு காட்டி நின்றவளின் கூந்தல் காற்றில் அலைபாய, வடிவாய் இருந்தாள் ஒரு மங்கை.

 

அந்தப் பெண்ணைக் கண்டு உற்சாகமடைந்த குட்டி வாண்டு “வைஷுக்கா” என சத்தமாக அழைக்க, “சிட்டுக் குருவி” என்று ஆர்வமாய்த் திரும்பினாள் அவள்.

 

ப்ளூ லெகின், பச்சை நிற சுடியில் துப்பட்டாவை இடது தோளில் வழிய விட்டு, நெற்றியில் சிறு பொட்டு வைத்து எவ்வித அலங்காரங்களும் இன்றி அழகே உருவாய் நின்றிருந்தாள்.

 

சிவந்த உதடுகளில் புன்னகை குடியிருக்க, விழிகளிலோ வெறுமை சூழ்ந்திருந்தது. கன்னத்தில் உரசிய முடியை ஒரு விரலால் எடுத்து காதுக்குப் பின்னால் சொருகிக் கொண்டவள் வைஷு எனும் வைஷ்ணவி!

 

அவளைப் பார்த்த சிறுமி “அக்கா! இன்னிக்கு ரொம்ப அழகா மாதிரி இருக்கீங்க” முட்டைக் கண்களை உருட்டிச் சொல்ல, தலை சாய்த்து புன்னகையைப் பரிசளித்தவள் “ரியல்லி! பட் என்னை விட சிட்டுக்குருவி ஏஞ்சல் மாதிரி ரொம்ப ரொம்ப அழகா இருக்கா” என பதில் கொடுத்தாள்.

 

“போக்கா. உனக்கு எத்தனை தடவை சொல்லுறது சிட்டுக் குருவி சொல்லாதன்னு. என் பெயர் சிட்டு ஸ்ரீ” சிணுங்கினாள்.

 

அவள் கன்னங்களைப் பிடித்து ஆட்டியவாறே “எப்படி வேணா இருக்கட்டும். எனக்கு நீ சிட்டுக் குருவி தான் வாலு” செல்லம் கொஞ்சினாள் பாவை.

 

திடீரென தன் தலையில் தட்டிக் கொண்ட சிட்டு “ஸ்ஸ்! க்கா ரேகா மேடம் உங்கள வர சொன்னாங்க. அத சொல்ல தான் ஓடி வந்தேன். டக்குனு போங்க இல்லனா எனக்கு திட்டுவாங்க” என்று சிறு பயத்துடன் சொல்ல, “சரிடா குட்டி ” என்றவள் வேக வேகமாக ரேகாவின் அலுவலக அறைக்குச் சென்றாள்.

 

ஏதோ வேலையில் மும்முரமாக இருந்த ரேகாவின் அருகில் சென்று “மேடம்” என்று அழைத்தாள் வைஷு.

 

அவரோ தலை தூக்காமலே இருக்கையில் உட்கார் என்பது போல சைகை காட்ட, அவளும் அமர்ந்து கொண்டாள்.

 

தன் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டே பேச்சைத் துவங்கலானார் ரேகா.

 

“வைஷு! நான் எதுக்கு கூப்பிட்டேன்னு உனக்கு நல்லாத் தெரியும்னு நெனக்கிறேன். இந்த ஆசிரமம் இருபது வயசுக்கு உட்பட்டவங்களுக்கு உரியது. எப்போ இருபது வயசு பூர்த்தியாகுதோ எங்க பொறுப்பு நீங்கிடுதுன்னு இருக்குற சட்டம் உனக்கும் தெரியும்ல..? நாலு வயசுல நீ இங்க வந்த. உனக்கு இன்னும் கொஞ்ச நாள்ள இருபது வயசு நிறைய போகுது. சோ நீ ஏதாச்சும் வேலை தேடிக்கிட்டு செட்டில் ஆகிடு. இல்லனா வேற ஏதாவது ஆசிரமத்துல சேர்ர வழியப் பாரு. என்ன புரிஞ்சுதா?” என்றவர் குரலில் கண்டிப்பும் அக்கறையும் ஒருங்கே சேர்ந்து ஒலித்தன.

 

“ஐ கான் அன்டஸ்டார்ன் மேடம்! நான் சீக்கிரமே ஒரு முடிவு எடுக்குறேன்” சுரத்தையற்ற குரலில் பதிலளித்து ஆமோதிப்பாக தலையசைத்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.

 

கிளை பரப்பி வளர்ந்திருக்கும் பெரும் மாமரத்தின் அடியில் சாய்ந்து விழி மூடியவளுக்கு மனம் கனத்துப் போயிற்று. தாய் இறந்து விட நான்கு வயதில் குடிகாரத் தந்தையால் ஒதுக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து விடப்பட்டவளுக்கு இந்த ஆசிரமமே யாதுமாகிப் போயிருந்தது.

 

பிஞ்சுகளின் மழலை மொழியே சுவாசமாகிப் போயிற்று. இனி இது கூட தனக்கு அந்நியமான வேற்றிடம் தான்.

 

இங்கிருந்து செல்ல வேண்டும், வெளியேறி விடுவது உறுதி தான். அது தான் எங்கே!? எங்கு செல்வது..? உறவுகள் இருந்தும் யாரென்று அறியாமல் அநாதைப் பட்டம் பெற்ற தனக்கு இனி கதியேது?

 

அன்பு எனும் பெரும் சோதி இல்லா விடினும் ஏதோ சிறுவருடன் கொஞ்சி அவர்களுடன் நேரம் செலவிட்டு மங்கலாக சென்ற வாழ்வில் இனி எதுவுமே இன்றி காரிருள் சூழப் போகின்றது என்பதை நினைக்க நினைக்க நெஞ்சு வலித்தது.

 

விழியோரம் கசிந்த கண்ணீரைக் கூட துடைக்க திராணியற்று இருந்தவளின் நிலை கண்டு அந்த வானமே வருந்தியது போலும், அவளுக்கு ஆதரவு அளிக்க எண்ணியோ என்னவோ மழையை பொழிவிக்க மழையில் நனைவதைக் கூட உணராதவளாய் உணர்வற்றுத் தான் போனாள் அந்தப் பேதை..!

 

…………….

 

கரையில் அமர்ந்து கடலலைகளை சலனமின்றி வெறித்துக் கொண்டிருந்தான் விஷ்வஜித். மனமும் அந்த அலை கடலாகவே கொந்தளிக்க மணலில் ஏதோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தான்.

 

நேற்று மித்ரனின் நினைவுகள் சூழ்ந்து கோபத்தைக் கிளறியதில் வாழவே வெறுப்பாய் இருந்தவனுக்கு இன்றோ மனம் படபடவென அடித்துக் கொண்டு புது உணர்வைத் தோற்றுவித்துத் தான் இருந்தது. தான் எதிர்பார்க்காத ஒன்று நடக்கப் போவதாய் உள்மனம் சொல்ல, சலனப்படும் மனதை அடக்கும் வழியறியாது ஆபீசுக்கும் செல்லாமல் பீச்சுக்கு வந்தான்.

 

திடீரென ஒரு பரிச்சயமான குரல் செவி தீண்ட, விலுக்கென நிமிர்ந்தவனின் பார்வை வட்டத்தினுள் விழுந்தது மித்ரனின் உருவம்.

 

“ச்சே எங்க பார்த்தாலும் இவன பார்க்குற மாதிரியே இருக்கு. எல்லாம் பிரம்மை” என சலித்துக் கொண்டவன் அதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்காது எழுந்து நின்றான்.

 

“மாப்ள” எனும் குரல் தொடர்ந்து கேட்க, பின்னால் திரும்பிப் பார்க்கவும் விருப்பமற்று வேக எட்டுகளுடன் காரை நோக்கிச் செல்லவும் தான் சித்தமானான். காரினருகில் சென்ற விஷ்வா அதிர்ந்து நின்றான். அங்கு நின்றிருந்தது அவன் தோழனே!

 

“விஷு” என்ற அழைப்பில் அவன் தன் முன் நிற்பது உண்மையே என்று உணர்ந்தவன் அவனை ஏறிட்டான்.

 

“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் தள்ளுறீங்களா?” என்று அடக்கப்பட்ட பொறுமையுடன் வாய் திறந்தாலும் உள்ளமோ எரிமலையாய் குமுறிக் குமுறி வெடித்துக் கொண்டு தான் இருந்தது.

 

“டேய் ஏன்டா யாரயோ மாதிரி பேசுற?” இயலாமையுடன் வினவ, “தெரியாதவங்க கூட அப்படி தானே பேச முடியும் மிஸ்டர்” அழுத்தமாய் வந்தது பதில்.

 

“விஷு! நான் உன் மித்து வந்திருக்கேன். என் கூட பேசுடா ” என்றவனின் குரலும் கலங்கித் தான் வெளிவந்ததோ!? விழிகள் கலங்கியே போயின.

 

“மித்துவா? யாஹ் யாஹ் அப்படி ஒருத்தன் என் லைப்ல இருந்தான். பட் எப்போவோ செத்து போயிட்டான். சோ இப்போ அப்படி யாரும் இருக்குறதா எனக்குத் தெரியல”

 

“மித்து சாகல டா. இதோ உன் முன்னாடி தான் நிக்கிறேன்”

 

“யாரு நீயா!?” நக்கலாக கேட்டவனின் இதழ்களோ கேலியாய் வளைந்தன.

 

“ம்ம்.. நான் தான் உன் நண்பன்” என்று சொல்ல, அவ்வளவு தான்.. இவ்வளவு நேரம் கடினப்பட்டு இழுத்துப் பிடித்த பொறுமை காற்றோடு பறந்து விட, பெரும் கோபம் உள்ளுக்குள் பொங்கியெழ “இல்ல இல்ல இல்ல! நீ என் நண்பன் இல்ல” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.

 

இது நாள் வரை கண்டிராத அவனது கோப முகத்திலும், புதிய பரிணாமத்திலும் அதிர்ந்தவன், “நண்பன் இல்லயா? அ..அப்போ? ” கேள்வியாய் அவன் முகம் பார்த்தான்.

 

“நண்பன் இல்லடா! நீ நண்பன் இல்ல. நீ துரோகி! என் நட்புக்கு துரோகம் செஞ்ச துரோகி” வெறுப்பு மண்டிக் கிடந்த குரலில் மொழிந்தவன் அவனைத் தள்ளி விலக்கி விட்டு காரில் ஏறிச் சென்றான்.

 

“நீ துரோகி! துரோகி” என்று விஷ்வா சொன்னதே காதில் மோதி மீண்டும் மீண்டும் எதிரொலிக்க “நோஓஓஓ” என கத்திக் கொண்டு அவ்விடத்தில் மண்டியிட்டு, தான் ஒரு ஆண்மகன் என்பதையும் மறந்து கதறியழுதான் அருள் மித்ரன். விஷ்வஜித்தின் ஆருயிர் மித்திரன்!

 

தொடரும்………!!

 

-ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!