🤍 *அபயமளிக்கும் அஞ்சன விழியே!* 🤍
👀 விழி 20
பகலவன் பரிதி மீது தன் பொன்மஞ்சள் கதிர்களை பாசமாய் பொழிந்த நேரமது.
அந்த மண்டபத்தின் வாயிலில் மாட்டியிருந்த ‘நிதின் வெட்ஸ் ஆலியா’ என்ற பேனர் காற்றின் ஊசாட்டத்தில் ஊஞ்சலாய் ஆடி வரவேற்றது.
மணமேடையில் பட்டு வேட்டியில் அமர்ந்திருந்தான் நிதின். அவன் மனதெங்கும் தன்னவளைக் காணும் ஆவல் நிரம்பி வழியலானது. தன்னவள் கரம் கோர்க்கும் தருணம். அவள் கழுத்தில் மங்கல நாணிட்டு தன் சரிபாதியாக ஏற்றுக் கொள்ளும் நேரத்திற்காய் கண்களில் சந்தோஷம் ஊற்றெடுக்க காத்திருந்தான்.
அது அவ்வாறிருக்க, இங்கு வாயிலில் நாணம் மேலிட நின்றிருந்தாள் அஞ்சனா. அந்நாணத்திற்குக் காரணம் அவள் கணவனாக இல்லாமல் வேறு யாராகத் தான் இருக்க முடியும்?
அவனின் கொத்தித் தின்னும் பார்வை தன் மீது அப்பட்டமாக பதிந்திருக்கையில் வெட்கம் இன்றி இருக்குமா என்ன?
அந்தப் பார்வையே அவளால் தானே வந்தது?
அடர் நீலநிற சாரி அணிந்திருந்தாள். கூந்தலை பின்னி விட்டு வந்தவளுக்கு மல்லிகைச் சரம் சூட்டியவனும் அவனே தான்.
கண்ணுக்கு மை தீட்டியதோடு முடிந்தது அவளின் அலங்காரம்.
சும்மாவே அந்த விழிகளில் வீழ்பவன் ருத்ரன். அவ்விழிகள் மை பூசி, கருமணிகள் அலைபாய, இமைகள் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளாக துடிதுடிக்கையில் அவனிதயம் இடம்மாறித் துடித்தது.
“அம்மு அழகா இருக்கே. கண்ணே பட்டுரும் போல” முத்தமிட்டு, நெட்டி முறித்து, செல்பீ எடுத்து பெரிய ஆர்ப்பாட்டம் போட்டுத் தான் வந்திருந்தான்.
“நீ வந்ததில் இருந்து என் பையனை கெடுத்து வெச்சிருக்க அஞ்சும்மா. சின்ன பிள்ளையா மாறிட்டு அலும்பு பண்ணுறான்” மகனின் முடியை வாரி விட்ட அஞ்சனாவிடம் குற்றம் சாட்டினார் சித்ரா.
“நான் என்ன அத்தை பண்ணினேன்? உங்க பையன் ரொம்ப குறும்பு பண்ணிட்டு இருக்கார். இவரெல்லாம் எப்படி பிசினஸ் பண்ணி கம்பனி நடாத்துராறோ” அலுத்துக் கொண்டாலும் இதழ் கடையோரம் புன்னகை முகிழ்த்தது.
“பிசினஸ்மேனாகுறது ஜுஜுபி மேட்டர். ஆனா ஹஸ்பண்டா இருக்கிறது அப்படி இல்லை. எவ்ளோ ரெஸ்பான்சிபிலிடி அது இதுனு இருக்கு தெரியுமா?” கன்னத்தில் கை வைத்து சோகப் பெருமூச்சு விட்டான் ருத்ரா.
“அந்த சிபிலிடி ஆட்டுக்குட்டி ஒரு பக்கம் இருக்கட்டும். சீக்கிரம் வா. நீ வரதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிரும்” என இழுத்துக் கொண்டு வந்திருந்தார் சித்ரா.
மண்டபம் வந்தவன் வருபவர்களை வரவேற்றானோ இல்லையோ தன்னவளை ரசித்து அவளுக்கு வெட்கம் வரவழைக்கும் பணியை மட்டும் சிறப்பாகச் செய்தான்.
“அபய்! வாங்க உள்ளே போகலாம்” அவனை இழுத்துக் கொண்டு செல்ல, மணமேடையிலிருந்து கையசைத்தான் நிதின்.
அவனருகில் சென்று குனிந்து “உன் அத்தை பொண்ணு சில்பாவுக்கு கை காட்டுனத ஆலி கிட்ட போட்டு கொடுக்கிறேன்” என்று கிசுகிசுத்தான்.
“நான் அவளுக்கு எப்போடா கை காட்டினேன்? உன்னை தான் கூப்பிட்டேன். ஏற்கனவே என் நிலமை அந்தோ பரிதாபமா கிடக்கு. நீ வேற இன்னொரு புட்பால் மேட்ச் ஆடிடாத. இந்த க்ரவுன்ட் தாங்காது” நெஞ்சைத் தடவிக் காட்டினான் நிதின்.
“பரவாயில்லை சொல்லி பார்க்கிறேனே. குழம்பின குட்டையில் கல்லடிச்சு கலங்க வைக்கிறது ஈசியோ ஈசி மச்சி” கண்ணடித்துக் கூறினான் ருத்ரன்.
“குழம்பின குட்டை? உன்னை வாயில குழம்பை சூடா ஊத்த” பல்லைக் கடித்தான் நண்பன்.
“உன் ஆளு வரா. கொஞ்சம் அக்டச்சூடு” ருத்ரன் கை காட்டிய திசையில் பார்த்தான் நிதின்.
தலை திருப்பிய ஆடவன் கண்ணிமைக்க மறந்தான். தன் காதலியின் அழகினில், அவளின் மணப்பெண் கோலத்தில் மணமகனும் மதி மயங்கி நின்றான்.
தலையைக் குனித்துக் கொண்டு கையில் மலர்ச்செண்டு ஏந்தி மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கச் சாயத்தை முகத்தில் அள்ளித் தெறித்து வந்தாள் ஆலியா.
“கொஞ்சம் வாயை மூடு. அக்கினி வாய் வழியே போய் காது வழியே புகையா வருது” கிண்டலாய் காது கடித்த நண்பனை முறைத்துத் தள்ளினான் நிதின்.
“இங்கே வாங்க. சும்மா போய் அண்ணா கிட்ட வம்பிழுத்துட்டு இருக்கீங்க?” தன்னவனின் கையைப் பிடித்து தனதருகே நிற்க வைத்தாள் அஞ்சனா.
“அம்மு….!” அவளிடம் ரகசியம் கொஞ்ச, “என்ன அபய்?” விழியுயர்த்திக் கேட்டாள் காரிகை.
“கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“ஆசையா இருக்கா? கோயில்ல வெச்சு தாலி கட்ட முன்னாடி யோசிச்சு இருக்கனும் மிஸ்டர்” முறைப்போடு பார்த்தாள் அஞ்சு.
“இல்லனா மட்டும் என்னோட வந்திருப்பியா? தாலி கட்டலனா உன் வீட்டு வேலி கிட்டிருந்து நானும் ஓணான் மாதிரி எட்டிப் பார்த்துட்டு ஒரு தடவை சொல்வாயா என்னை உனக்கு பிடிக்கும் என்று’ அப்படினு பாட்டு பாடிட்டு இருக்க வேண்டியிருக்கும்” உதடு பிதுக்கினான்.
“போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்குனு நானும் பதிலுக்கு பாடிருக்க வேண்டியிருக்கும்” பதிலுரை பகர்ந்தவளை,
“அபய்யோட கணக்கு என்னிக்கும் தப்பாது. தப்பாததால தான் நீ என் கிட்ட வந்து சிக்கின” காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
அவனை நோக்கிய பாவையின் விழிகளில் ரசனை. வெள்ளை வேஷ்டி கட்டி அவளை ஒத்ததாய் நீல நிறத்தில் சர்ட் அணிந்திருந்தான். அவனின் நிறத்திற்கு அந்த நீல நிறம் எடுப்பாக இருந்தது.
முடியை ஸ்டைல் எனும் பெயரில் வெட்டியிருந்தான். அது கூட இன்னும் அழகாக இருந்தது. எபபோதும் மாறாத புன்னகை அவன் உதட்டில் ஒய்யாரமாய் வீற்றிருந்தது. விழிகளில் எக்கச்சக்கமான குறும்பு துள்ளி விளையாடியது. நீண்டு அடர்ந்த புருவங்கள் அவனின் பார்வையைப் போன்றே ஒன்றையொன்று மோதும் வீரத்துடன் நெருங்கி நின்றன.
அன்பை வாரியிறைத்து மென்மையாக அபகரித்தவனின் கம்பீரக்களை சொட்டும் அழகில் தன் இதயம் தொலையக் கண்டாள் கெண்டை விழியாள்.
நிதினோ தன்னவள் பார்வை கிட்டாதா என்ற ஏக்கத்தில் அவள் பக்கம் தலை சரிப்பதும் மறு பக்கம் திரும்புவதுமாக இருந்தான்.
“தீஞ்ச சோறு” ரகசியக் குரலில் அழைக்க, “பன்னாட பயலே! இந்த நேரத்தில் கூட தீஞ்ச சோறு கேட்குதா உனக்கு?” அடிக்குரலில் யாருமறியாமல் சீறினாள் ஆலியா.
ஐயர் தாலியை நீட்ட அதனைக் கைகளில் வாங்கியவனுக்கோ அரிய வரமொன்று கிட்டிய பேரானந்தம். எத்தனை பிரச்சனைகள், சிக்கலுக்குப் பின்னால் தன்னில் பாதியாய் வரப் போகிறாள்.
தன் காதல் பூர்த்தியான சந்தோஷத்துடன் அவளைப் பார்க்க, அவளுக்கும் கிட்டத்தட்ட அதே நிலை தான். தன் மனதில் அரியாசனம் கொண்டவன் முறைப்படி முடிசூடப் போகிறான்.
பக்கவாட்டாகத் திரும்பி நிதினை நோக்க, புன்முறுவலுடன் அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் நிதின்.
கோபாலும் லீலாவும் மகிழ்ந்து போயினர். தம் மகளை பொருத்தமான, அவளுக்குப் பிடித்தவன் கையில் ஒப்படைத்ததில் ஏக திருப்தி.
நிதினின் தாயின் உள்ளம் விம்மித் தணிந்தது. தந்தையை இழந்து சிறு வயதிலேயே தொழிலுக்கு சென்று தனக்காக உழைத்துக் கஷ்டப்பட்ட மைந்தன் அவன். அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அவர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவன் இனி என்றும் இதே போல் மகிழ்வோடு வாழ வேண்டுமென கடவுளை வேண்டிக் கொள்ளவும் தான் செய்தார்.
அட்சதைகள் மழையாக மேனியில் விழ, புது மணத்தம்பதியின் நெஞ்சில் ஆனந்தக் கடல் நிரம்பி வழியலானது.
சடங்குகள் சம்பிரதாயங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. தம் காலில் விழுந்தவர்களுக்கு மனம் நிறைய ஆசிர்வதித்தனர் பெற்றோர்கள்.
தன்னவன் நெஞ்சில் மலர்த்தடம் பதித்த ஆலியா நிதினின் வீட்டில் வலது பாதம் வைத்து உள்நுழைந்தாள். பெற்றோரை விட்டு வருவது வேதனையாக இருப்பினும் அதனைக் காண்பிக்காதிருந்தவள் கலங்கிய கண்களை மறைக்க வெகுவாய் சிரமப்பட்டும் தான் போனாள்.
“இனி உன் பக்கத்தில் இருப்பேன். என்னை கன்னாபின்னானு திட்டி நல்லா வெச்சு செய்யலாம்னு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறியா பொண்டாட்டி?” அவளின் மனதை வேறு திசைக்கு மாற்றும் பொருட்டு இளித்து வைத்தான் கணவன்.
“வர்ற கோவத்துக்கு எதையாவது எடுத்து அடிச்சிட்டேன்னா அப்பா திட்டுவாரேனு பயத்துல அழுகை வருது” கண்களைத் துடைத்துக் கொண்டு காண்டாகினாள் ஆலியா.
“சப்பை மேட்டருக்காக அழறியா அழுமூஞ்சி?” அவள் போக்கில் சென்று தானும் சிரிக்க, “சப்பை மேட்டரை வெச்சு கல்யாணமே வேணானு சொன்னவன் தானே நீ? உனக்கு பொண்ணாட்டியானதுல நானும் சப்பை மேட்டரை ஊதிப் பெருசாக்கலனா நல்லாவா இருக்கும்?”
“ஊஃப்ப்! மறுபடி ஆரம்பிக்கிறியா அதை. ஏதோ நடந்துருச்சி. கல்யாண நாள் அதுவுமா இதையெல்லாம் ஞாபகப்படுத்திட்டு இருக்க? மீ பாவம்” அப்பாவித்தனம் வண்டி வண்டியாகக் கொட்டியது அவன் முகத்தில்.
“அப்போ கப்சிப்னு இருக்கனும். என் வாயை கிளறக் கூடாது”
“வாயா குப்பை மேடா? குப்பை மேட்டை தானே கிளற முடியும்?” சந்தேகம் கேட்ட கணவன் மீது அவளின் முறைப்பு முறைப்படி காரசாரமாக விழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
♡♡♡♡♡
சமையலில் ஆழ்ந்திருந்த சித்ராவின் பின்னால் ஒரு உருவம் அணைத்துக் கொள்ள, “ருத்ரா” என அழைத்தார் அவர்.
“நான் ருத்ரா இல்லை அத்தை” அவர் கையைப் பிடித்து முன்னால் வந்து முனகினாள் அஞ்சனா.
“ஓய் பார்த்தியா ? அம்மாவுக்கு எப்போவும் என் ஞாபகம் தான்” துள்ளலுடன் வந்து சமையல் அமர்ந்து கொண்டான் ருத்ரன்.
“சரி ஒத்துக்கிறேன்” என்று அவள் ஒப்புக் கொள்ளும் போது, “உன் புருஷன் கால் பண்ணி நீ வந்து பிடிச்சுக்கிட்டா அவன் பெயரை சொல்ல சொன்னான்” அப்போது அங்கு வந்து தண்ணீர் குவளையை எடுத்துக் கொண்டு சென்றார் செல்வன்.
“திருட்டு படவா! என்னையே ஏமாத்துறீங்களா?” கரண்டியை எடுத்து அவன் புஜத்தில் அடிக்க, கண்சிமிட்டிச் சிரித்தான் ருத்ரன்.
“போங்க அத்தை நீங்களும் இவர் கூட சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் பண்ணுறீங்க” அவர் தோளில் நாடியூன்றி பாசப் போராட்டம் நடத்தினாள் அஞ்சனா.
“அம்மா இருக்கட்டும். நான் உனக்கு தான் சப்போர்ட். நீ வா அம்மு” அவளைத் தன் பக்கம் இருத்திக் கொள்ள,
“அடிங்ங் கில்லாடி. அவளை என் கூட சேர்ந்து கலாய்ச்சிட்டு இப்போ நீ கூட்டு சேர்ந்துட்டு என்னை தனியாளாக்கிட்டது நல்லா இல்லை” அங்கலாய்த்துக் கொண்டார் சித்ரா.
“உங்கள சிங்கிளாக அப்பா விட மாட்டார். சோ அவரோட போய் ஜோடி போட்டு இருங்க” தன்னை வாரிய மகனின் காதைத் திருகி விட்டுச் சென்றார் சித்ரா.
“ஹா ஹா. நானும் அப்பாவும் இப்படி தான் ஜாலியா பேசிட்டு இருப்போம். அவர் ஞாபகம் வருது எனக்கு” தந்தையின் நினைவு மனதை ஆக்கிரமிக்க, அந்த அழகான நாட்களை எண்ணி பெருமூச்சொன்று அவளிடம் வெளிப்பட்டது.
“இன்னும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி உன்னை சந்தித்தித்து இருந்தா மாமாவை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கும்ல எனக்கும்” அவரை ஒரு முறையாவது காணக் கிடைக்காத கவலை அவனுக்கும் இருக்கத் தான் செய்தது.
சித்ராவுக்கு இரண்டு அண்ணன்கள் என்பதை ருத்ரா அறிவான்.
அறிந்த வயதிலிருந்து “பிரபாண்ணா” எனும் வார்த்தையை தாயிடமிருந்து கேட்டே வளர்ந்தவன் அவன்.
“ஏன்மா அவரு நம்மளை தேடி வரல? உங்களோட பாசம்னா ஏன் வராம இருக்கார்?” மழலையில் வினா எழுப்பும் அவனிடம் பதில் சொல்ல முடியாது திணறிப் போவார் சித்ரா.
“அவரைத் தேடி நாம வரலைனு அவரும் இப்படி தான் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பார். உன் பெரிய மாமா வருவாரு. அப்போ உனக்கு பெரிய கிப்ட்டா கேட்டு வாங்கு” மகனின் தலை வருடி கதை சொல்ல, அந்த இதத்தோடு தூங்கிப் போவான் சின்னவன்.
வளர்ந்து விட்ட போது அதிகம் அவரைப் பற்றி கேட்க மாட்டான். கேட்பதால் சித்ரா சங்கடப்படுவார் என விட்டு விட்டான். வருடாவருடம் பிரபாகரனின் பிறந்த நாளைக்கு கோயில் சென்று பூசை முடித்து அன்னதானம் வழங்குவதில் தவறாமல் கலந்து கொள்வான்.
கூடவே இருந்து வளர்த்ததால் சித்ராவுக்கு கோபாலை விட பிரபாகரனைத் தான் அதிகம் பிடிக்கும். அதே போல் ருத்ரனுக்கு அறிமுகமில்லாத அவர் மீது அன்பு இருந்தாலும் தன்னை தோளிலும் மாரிலும் போட்டு வளர்த்த கோபாலைத் தான் மிக விரும்பினான்.
ஆனாலும் அந்த பிரபாகரனின் எண்ணம் எழாமல் இல்லை. அவரும் இணைந்தால் குடும்பம் நன்றாக இருக்குமே என்று ஆசையோடு நினைப்பான்.
அவர் வருவார், பரிசு தருவார் என சிறு வயதில் நெஞ்சில் பூத்திருந்த ஆசையை வளர்ந்ததும் வெட்டிச் சாய்த்து விட்டான். அடியோடு வீழ்ந்திருந்த ஆசை நிராசையாகுமென நினைத்திருக்க எதிர்பாராமல் கிட்டிய பரிசை எண்ணி தற்போது வியந்தான்.
பரிசு?
சாதாரண பரிசா அது?
அவனை உயிர்ப்பித்த காதல் பரிசு.
அஞ்சனாவை தனக்கென தந்து விட்டாரே.
பரிசல்ல பெரும் பொக்கிஷம் அவள்!
கேட்காமல் கிடைத்த மாணிக்கத்தை கண்ணாகக் காத்திட கடும் ஆவல் கொண்டான்.
மறு நாள் பொழுது இனிதாய் விடிந்தது. எழும்பும் போது இருந்தவன் குளியலறை சென்று வரும் போது அறையில் இல்லாதது கண்டு புருவம் சுருக்கினாள்.
கட்டில் மீதிருந்த கவரை கையிலெடுத்தாள் அஞ்சனா. ‘ஃபார் யூ அம்மு’ என்ற வார்த்தைகள் கண்சிமிட்டி நகைத்தன. அதை வைத்திருந்தவன் யாரென அறிந்தவள் மனதில் ஆனந்தம் தேனிறைத்தது.
அதனைப் பிரித்துப் பார்த்தவள் உள்ளத்தை அளப்பரிய ஆச்சரியம் சிதறடித்தது. கொள்ளை அன்பும் அவன்பால் சிறகடித்தது.
ப்ரேம் செய்யப்பட்ட அப்படத்தை பார்க்கப் பார்க்க அவளால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. விழிகளோ அவளவனைத் தேடி அசுர வேகத்தில் பயணித்தன.
மனைவியின் எதிர்பார்ப்பை பொய்யாக்க விரும்பாமல் “வெர்ரி குட் மார்னிங் அம்மு குட்டி” என்று இதழ்களில் புன்னகையை கஞ்சமின்றி அப்பிக் கொண்டு வந்து நின்றான் ருத்ரன் அபய்.
“வெர்ரி குட் மார்னிங் அபய்” அவனைப் போன்றே காலை வணக்கம் தெரிவித்தவளின் பார்வை அவன் மீது அன்பை சரமாரியாக எய்தது.
அப்படத்தை கண்களால் காட்டி பிடித்திருக்கிறதா என கண்ணசைவில் கேட்க, மீண்டும் அதன் மீது பார்வையை நிலைநாட்டினாள்.
எது தன் வாழ்வில் நடைபெற ஆவலுடன் காத்திருந்தாளோ? எது நிகழவே மாட்டாது என தெரிந்து ஏமாற்றமாய் உணர்ந்தாளோ அதனை தன் கைவண்ணத்தில் ஓவியம் தீட்டி கற்பனையில் அவளது ஆசையை நிறைவேற்றி இருந்தான் அபய்.
அதில் கண்களில் நாணத்துடன் அவனைப் பார்த்திருந்தாள் அஞ்சனா. அவள் கண்களைக் கவர்ந்தவாறே கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன்.
அவர்களது திருமணம் கோயிலில் வைத்து திடுமென நடந்தது. சாதாரண உடையில், அதுவும் அவளுக்கு முழு சம்மதம் ஏதுமின்றி!
ஆனால் இப்படத்தில் இருவரும் மணமக்கள் கோலத்தில், மாலை சூடி மணவறையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தனர். இருவர் முகத்திலும் மகிழ்வு ஜொலித்தது. அத்தோடு மட்டும் விட்டு விடவில்லை அவன். ஒரு பக்கத்தில் செல்வனும் சித்ராவும் அர்ச்சதை தூவுவது போல் வரைந்திருந்தான்.
மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி!
மற்றைய பக்கத்தில் பிரபாகரனையும் ஆனந்தியையும் தத்ரூபமாக நிறுத்தியிருந்தான். நிஜத்தில் காண்பது போல் வரைந்து இருந்தவனின் திறமை அவளை வியக்கவும் தான் வைத்தது.
அதனையும் தாண்டி அவன் தனக்காக மெனக்கெட்டு இதனை வரைந்து பரிசளித்ததில் அவன் மீதான காதல் பல்கிப் பெருகிற்று. எவ்வாறு தனது குடும்பத்தினர் சகிதம் தனது கல்யாணம் நடைபெற வேண்டுமென நினைத்தாளோ அவ்விதம் அப்புகைப்படம் இருந்தது கண்டு, “ரொம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு” என்றவளுக்கு மேற்கொண்டு பேச நா எழவில்லை.
“உன் ஆசை இப்போ நிறைவேற்றிடுச்சா?” அவள் கரங்களைப் பிடித்துக் கேட்டான்.
“ம்ம்ம் ஆமா! என் ஆசையா இருந்தது இது. என் அப்பாம்மா இல்லையேனு ரொம்ப கவலைப்படு இருக்கேன். நிஜத்தில் இல்லனாலும் ஃபோட்டோல இப்படி பார்க்க மனசுக்கு சந்தோஷமா இருக்கு” அவனின் வலிய கரங்களை மெல்லமாய் அழுத்திப் பிடித்தாள் பாவை.
அவளின் மகிழ்வே அவனை சிறகின்றிப் பறக்க வைத்தது. எல்லாம் அவளின் சந்தோஷத்திற்காக தானே? அதனை கண்ணாறக் கண்டு, வாய் வழி கேட்பதைத் தவிர வேறேதும் தேவையா?
அவளுக்குத் தான் இவனை நினைக்க நினைக்க உள்ளம் உருகியது. இவனின் இத்தனை காதலுக்காக நான் என்ன செய்தேன்? என நினைத்தவளுக்கு இதற்கு கைம்மாறு செய்ய முடியாது என்றே தோன்றிற்று.
அவன் அன்பில் போதை கொண்டு அவனில் அபயம் தேடி விழி வழியே தன்னவனை சேமித்துக் கொள்ளலானாள் பேதை.
தொடரும்……..♡
ஷம்லா பஸ்லி