❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️
நிலவு 20
இன்னும் ஒரு முக்கியமான இடத்தையும் காட்ட வேண்டுமெனக் கூறியவன் தன்னவளை அழைத்து செல்ல அவனோடு சென்றாள் அதியா.
“இதோ இங்கே தான்” என்று ஓரிடத்தைச் சுட்டி காட்டினான். அது மிகப் பழமையான ஒரு கட்டிமாக இருந்தது. இதில் அப்படி என்ன இருக்கும் என்று மனதில் தோன்றிய சிந்தனையுடன் அவனை நோக்கினாள்.
“இது நான் வாழ்ந்த அறை இதயா! இதை என் வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கிட்டவங்க பார்க்கணும்னு ஆசைப்படுறேன்”
“நீ மட்டும் இல்ல டா நானும் அதைப் பார்க்க ஆசைப்படுகிறேன். என் உதய் வாழ்ந்த இடம் எனக்கு ரொம்ப முக்கியமானது” என்றதும் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
சிறு கட்டிலில் அழகாக மடித்து வைக்கப்பட்ட பெட்சீட்டும் குட்டி தலையணையும் இருந்தது. இன்னொரு சிறிய கப்போர்ட்டில் ஆறு செட் உடைகள் இருந்தன.
அதில் சிவப்பு நிற டிஷர்ட் அவள் கண்களை ஈர்க்க அதைக் கையில் எடுத்தவளின் கைகளில் பூரிப்பு.
“எதுக்கு இதை அப்படிப் பார்க்கிறீங்க?” என்றவனின் கேள்விக்கு,
“இதைப் பார்க்கும் போது எனக்கு ஏதோ ஞாபகம் வர மாதிரி இருக்கு. இந்த டெடிபியர் போட்ட டி-ஷர்ட்டை நான் இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி ஃபீல்” என பதிலளித்தவளின் மண்டையில் ஏதேதோ சிந்தனைகள் வண்டாகக் குடைந்தன.
“எஸ் யூ ஆர் ரைட்! இதை எனக்கு முன்னால தொட்டுப் பார்த்தது நீங்க தான். ராவ் அங்கிள் எனக்கு கிஃப்ட் வாங்க உங்களை கடைக்கு கூட்டிட்டு போனாராம்.
உங்க கிட்ட ஒரு பையனுக்கு கொடுக்க செலக்ட் பண்ணி தர செலவும் பத்து வயசு குட்டி அதிய நிலா எனக்காக செலக்ட் பண்ணி கொடுத்ததை ராவ் அங்கிள் எனக்கு கிப்ட் பண்ணினார். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பொக்கிஷம் இந்த ட்ரஸ். இதைப் போட்டுக்கிட்டு ஆசிரமத்தில் இருந்த எல்லார் கிட்டேயும் இது எனக்கு என் நிலா பாப்பா கொடுத்ததுனு சொல்லி சந்தோஷப்பட்டதா ரேகாம்மா சொல்லுவா” இதழ்களில் அழகாக அரும்பிய புன்னகையுடன் சொன்னான் ஆணவன்.
அதியால் நம்ப முடியவில்லை. அவளது தந்தையுடன் சென்று இந்த உடையைத் தெரிவு செய்து கொடுத்தது நினைவுக்கு வந்தது. அவளது வாழ்க்கை அத்தனை வருடங்களுக்கு முன்பே இந்த அன்பு வர்ஷனுடன் பிணைக்கப்பட்டு விட்டதை அறிந்தாள் அதியா.
அங்கிருந்த சிறு பெட்டியைக் கண்டு “இது என்னடா?” என்று கேட்டாள்.
“இது என் நிலாம்மாவோட பொக்கிஷங்கள்” என்றவாறு அதைத் திறந்தாள். சிவப்பு நிற குட்டி பொம்மை, தோடுகள், சின்ன பொட்டு, ஐஸ்கிரீம் குச்சிகள், சிறிய செருப்பு இரண்டு என்று இன்னும் உபயோகித்த பொருட்கள் நிறைந்திருந்தன.
விரிந்த விழி மூடாமல் அவற்றைப் பார்த்திருந்தாள் மாது. அவள் இதயம் குதிரை வேகத்தில் துடிக்கலாயிற்று. இவை அத்தனையும் அவள் சிறு வயதில் பயன்படுத்தியவை. இந்த செருப்பு அவள் எட்டு வயதில் மிகுந்த விருப்பத்துடன் அணிந்தது.
“அப்பா தான் இதையெல்லாம் கொண்டு வந்து தந்தாரா?” அவன் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டு கேட்டாள் அதியா.
“ஆமாங்க! அங்கிள் ஒவ்வொரு தடவை வரும்போது இப்படி ஏதாச்சும் உங்க சாமான்களை கொண்டு வந்து தருவார். நானும் அவர் வந்த உடனே நிலா பாப்பாவோட கிப்ட் தாங்கன்னு தான் முதல்ல கேட்பேன். அதையெல்லாம் பத்திரப்படுத்தி வெச்சுருக்கேன்.
என் நிலாவையும் பத்திரப்படுத்தித் தான் வெச்சிருக்கேன் பெட்டியில் இல்லை இங்கே” என்று தனது நெஞ்சைச் சுட்டிக் காட்டினான்.
“இந்த திங்ஸ் எல்லாம் அப்பா என்கிட்ட கேட்டு எடுத்தது. அவர் கேட்கிறதை எல்லாம் ஏன்னு கேட்காம கொடுத்தேன். அப்பறம் மறந்தும் கூட போயிட்டேன். அவர் கிட்ட இருந்திருக்கும்னு நெனச்சிட்டு இருந்தது உன் கிட்ட இருக்கு. இதையெல்லாம் நான் திரும்ப பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்த்ததில்லை. அவ்ளோ சந்தோஷமா இருக்கு.
இந்த சந்தோஷம் கிடைத்தது உன்னால. உதய்! நீ அந்தக் கடவுளோட ஒரு அதிசய படைப்பு. உலகத்தில் இருக்கிற மொத்த அன்பையும் உன் இதயத்தில் வச்சு படைச்சிருக்கான் அந்த பிரம்மன். உன் கூட இருக்கிற ஒரு நிமிஷமும் எனக்கு ஒரு யுகம் மாதிரி இருக்கு” உணர்ச்சி மிகுதியில் தத்தளித்தாள் அவள்.
“ரிலாக்ஸ் அதி. எதுக்கு இவ்வளவு மூச்சு வாங்குறீங்க? மெதுவா, மெதுவா பேசுங்க” அவளது முதுகை மெல்ல வருடினான் வேங்கை.
“எனக்குப் பேசணும் வர்ஷா. மனசுல வர சந்தோஷத்தை வெளியில கொட்டி தீர்க்க வேண்டும். இல்லைனா என்னால நிம்மதியா மூச்சு விட முடியாது. மூச்சு முட்டுற மாதிரி இருக்கும்” ஆழமான மூச்சை உள்ளிழுத்து விட்டவள்,
“நீ இன்னும் எதையாவது காட்ட நினைக்கிறாயா?” என வினவினாள்.
“இல்லை. நாம போகலாம்” என அவசரமாக மறுத்தான் உதய்.
“இல்லை ஏதோ இருக்கு. என்னன்னு சொல்லு” என்க வேறு வழியின்றி மூடி வைக்கப்பட்டிருந்த திரைச்சீலையை அகற்ற தன் முன் தோற்றமளித்த சுவரைக் கண்டு இன்பமாக அதிர்ந்தாள் காதலி.
சுவரில் அழகாக வரையப்பட்டிருந்தது அதிய நிலாவின் சிறுவயது ஓவியம். அதிலிருந்து சிறு சிறு சொதப்பல்கள் அவன் சிறுவயதில் இருந்தபோது வரைந்திருக்கிறான் என்பதை அப்பட்டமாக எடுத்துரைத்தது. ஆனால் மிக நுட்பமாக வரைந்திருந்தான். அதன் கீழ் உதய நிலா ராகவன் என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
“உதய நிலா ராகவன்” அதை உச்சரித்தவளின் உள்ளத்தில் ஒருவித சிலிர்ப்பு.
“யாஹ்! உதய் ப்ளஸ் நிலா ப்ளஸ் ராகவன்= உதய நிலா ராகவன். இது நான் பத்து வயசுல எழுதினது” மலர்ந்த முகத்துடன் கூறினான்.
அந்த எழுத்துக்களையும் மெல்லிய நடுக்கம் இழையோடிய விரல்களால் வருடினாள் அதியா. அந்தச் சிறு வயதிலேயே அவனுக்குத் தான் தன் மீது எத்துனைப் பாசம்?
முகத்தை எழுதி அதுவும் அவளை ஃபோட்டோவில் இருப்பது போன்று அப்படியே அச்சுப் பிசகாமல் எழுதி இருக்கிறான் என்றால் அவனது ஆழ்மனதில் அவள் அப்போதே குடி கொண்டு விட்டாள் என்பதில் மகிழ்ச்சிச் சாரல் அவளைத் தாக்கியது.
“நிலாம்மா” என்று அவள் தோள் தொட, கலங்கிய கண்களுடன் திரும்பி அவனை ஏறிட்டான் மனையாள்.
“பாருங்க கண்ணெல்லாம் கலங்கியிருக்கு? இதுக்குத்தான் வேணாம் போயிடலாம்னு சொன்னேன். நீங்க இவ்வளவு உணர்ச்சி வசப்படுவதை பார்க்க முடியவில்லை” என்றான் அவன்.
அவனது சர்ட்டைப் பிடித்து ஒரு கையால் தன்னை நோக்கி இழுத்தவள் அவன் இடையூடு கையிட்டு இறுக அணைத்து மார்பில் முகம் புதைத்தாள்.
“இது குட்டி” என்று அவள் தலையை தடவி விட்டான்.
“அப்பா அம்மா இல்லாத என் லைஃப்ல கவலை, வெறுமை, அழுத்தம் தனிமை மட்டுமே நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட என் வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வந்தவன் நீ. உன்னால சந்தோஷம், சிரிப்பு, குறும்பு, நிம்மதி, அன்பு, ஆறுதல் அப்படினு எல்லாமே என்னைத் தேடி வந்தது.
பெண்களை மட்டுமா தேவதைனு சொல்வாங்க? நான் உன்னை சொல்லுவேன் நீ ஒரு ஏஞ்சல் டா. எனக்கு மட்டுமே உரித்தான என் மாயக்காரன். என்னோட பாசக்காரன்” அவனது இதயத்துடிப்பைக் கேட்டவாறு சொன்னாள் அவள்.
“ஓய் பெண்டா பேபி! அன்னிக்கு என்னை ஃபர்ஸ்ட் டைம் ஹக் பண்ணப்போ என் ஹார்ட் பீட் இதே மாதிரி கேட்டுச்சா?” அவளது காதில் ரகசியமாகக் கேட்டான் அவன்.
“இல்லை இதை விட துடித்தது. இப்போ ஏன் அது?”
“இதைவிட அதிகமா கேட்டிருக்கும். ஏன்னா அது யாருன்னே தெரியாத ஒரு அழகான பொண்ணு சட்டுனு வந்து கட்டிக்கிட்டா எப்படி இருக்கும்? என் குட்டி ஹார்ட்டு ரயிலை விட வேகமா தடதடன்னு துடிக்க குளுகுளுன்னு இருந்தது” அவளது மனநிலையை மாற்ற குறும்புடன் கண்ணடித்தான்.
“ஓஹோ அப்போ நான் இல்லாம வேற யாராச்சும் அப்படி ஹக் பண்ணிருந்தாலும் உன் ஹார்ட் பீட் எகிறுமா? அது எனக்கா மட்டும் தான் துடிக்கணும். இல்லனா அவ்வளவுதான்” பழைய அதியாக மிரட்டியவளைப் புன்னகையுடன் நோக்கினான் அதியின் குறும்பு வர்ஷன்.
மாலைப் பொழுதில், ஹாஸ்பிடல் இருந்து நேரே சுமதி வீட்டுக்குச் சென்று ஷாலுவை அழைத்துக் கொண்டு அதியின் ஆஃபீஸ் வாயிலில் நின்றான் உதய்.
“இவ்வளோ நேரமாச்சு. இன்னும் வரலையே உன் அத்து?” ஷாலுவிடம் கேட்டான் அவன்.
“அவ அப்படித்தான் அங்கிள். ஆடிப்பாடி மெல்ல மெல்ல வருவா. இந்த அத்துக்கு பஞ்சு கரடியே இல்லை” பெரிய மனுஷி போல் அலுத்துக் கொண்டவளைப் பார்த்து,
“டேய் அது பஞ்சு கரடி இல்லை! பஞ்சுவாலிட்டி” என அவள் பேச்சில் சிரித்தான் காளை.
அடக்க மாட்டாது நகைப்பவனைக் கண்டு அப்பொழுது தான் வெளிவந்த அதி உறைந்து நின்று அவனை ரசிக்கலானாள்.
“அத்து வந்தாச்சு வர்ஷு” என்று ஷாலு கூறியதில் இன்னும் சிரிப்பை நிறுத்தாதவனை இன்னும் இரண்டு பெண்களும் பார்த்திருந்தனர். அதைக் கண்டு மூக்கு விடைக்க தன்னவளிடம் வந்து “டேய் மன்மதராசா! உன் சிரிப்பை நிறுத்து” என்று முறைப்போடு சொன்னாள் அவள்.
“ஹலோ மேடம் எதுக்கு வரும் போதே சுடுச்சுட வரீங்க? உங்க சொட்டத்தலை மேனேஜர் கூட காண்டுல இருக்கீங்களா?” புன்னகையுடன் கேட்டவனின் வாயைத் தன் கரம் கொண்டு மூடியவளைப் புரியாமல் பார்த்தான் அவன்.
என்ன என்பதாய் கண்களால் கேட்டவளிடம், “பேசாத! முக்கியமா சிரிக்காத” என்று எச்சரிக்கை விடுத்தாள் வஞ்சி.
அவளது கையைப் பிடித்து வாயிலிருந்து எடுத்து, “நான் சிரிச்சா உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே. அப்புறம் ஏன் வேண்டாங்குறீங்க?” என்று புரியாமல் கேட்டான்.
“அங்கிருக்கிற ரெண்டு பொண்ணுங்களும் ஏதோ காணாததைக் கண்ட மாதிரி வாயில கொசு போறது கூடத் தெரியாம வாயை விரிச்சு உன்னையே பார்த்துகிட்டு போஸ் கொடுத்துட்டு இருக்காளுங்க. உன் சிரிப்பைக் கண்டா இன்னும் பார்ப்பாங்க” சிறு குழந்தை போல உதடு பிதுக்கினாள்.
“ஹே மை பாசசிவ் குயீன்! உங்களுக்கு இவ்வளவு பாசசிவ்னஸ் இருக்குன்னு தெரியாம போச்சே” குறும்புடன் கண் சிமிட்டினான் உதய்.
“ஓஓ! தெரிந்து இருந்தால் என்ன பண்ணி இருப்ப? இன்னும் நிறைய பொண்ணுங்க பார்க்கிற மாதிரி போய் இருந்திருப்பியா” மூக்கு நுனி சிவக்க சீறினாள்.
“எனக்கான உன் செல்லக் கோபம் கூட கிள்ளை மொழியாய்க் கேட்கிறதே கொஞ்சும் நிலவே” தலை சாய்த்து அவளைப் பார்த்தவனை கண்டு அவளிதழில் கீற்றுப் புன்னகை மிளிர பைக்கில் ஏறி அமர்ந்தாள்.
உதய்யும் ஷாலுவும் வளவளத்துக் கொண்டிருக்க இருவரின் சம்பாஷணையில் சிரிப்புடன் வந்தவள் “உதய்! வீட்டுக்கு போகாம ஏன் இந்த பக்கம் போற?” என்று கேட்டாள்.
“நாம இப்போ போறது வீட்டுக்கு இல்லை. பீச்சுக்கு” என்றது தான் தாமதம் “ஹுரேஏஏ” என கூச்சலிட்டாள் ஷாலு.
கடற்கரையில் உதய் வண்டியை நிறுத்தினான். “அங்கிள்! இன்னைக்கும் என்னைத் தண்ணில தூரமா கூட்டிட்டு போவீங்களா?” சின்னவள் சிணுங்க,
“கண்டிப்பா கூட்டிட்டு போவேன். கியூட்டி அதுக்கு முன்னால ஒரு வேலை இருக்கு. நாளைக்கு ரன்னிங் ரேஸ் இருக்குல்ல. அதுக்கு பிராக்டிஸ் பண்ணலாம் வா” என்று அழைத்தான் ஆடவன்.
“அதி ரெடி கோ சொல்லுங்க” என்கவும் தலையசைத்து விட்டு அதி கை தட்டி இருவரும் ஓடினர்.
உதய் வேகத்தைக் குறைத்து ஓட ஷாலு முதலில் ஓடி வந்து “ஹே! நான் வின் பண்ணிட்டேன்” என்று துள்ளிக் குதிக்க, “எஸ்! யூ ஆர் த வின்னர் பாப்பா” அவள் நெற்றி முட்டினான் அவன்.
இதைப் பார்த்த அதியாவுக்கு சிறு வயதில் இதே போல் அவளும் ராகவனும் ஓடுவது நினைவுக்கு வந்தது. இந்தக் காலத்தில் தனது பிள்ளைகளைக் கவனிக்காது விடும் ஆண்களுக்கு மத்தியில் மனைவியின் அண்ணன் மகளைத் தன் குழந்தை போல் பார்க்கும் உதய் அவளை மேலும் கவர்ந்தான்.
நாளுக்கு நாள் அவன் மீது மதிப்பும் காதலும் பன்மடங்கு பெருகித்தான் வந்தது பெண்ணவளுக்கு. தன்னை நொடிக்கு நொடி மகிழ்வுடன் பார்த்துக் கொள்பவனுக்கு ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்று ஆவல் அவளுள் கிளர்ந்தெழுந்தது.
“பெண்டா வாங்க” என்றவன் அவள் என்னவென்று கேட்கும் முன் கையைப் பிடித்து நீரினுள் அழைத்துச் சென்றான். ஷாலு அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தோளில் அமர்ந்திருந்தாள்.
“உங்களுக்குத் தூரமா வரணும்னு ஆசைனு சொன்னீங்க தானே. இப்போ ஆசை தீர இருங்க” கைகளை விரித்தான் அவன்.
சிறு குழந்தை போல் நீரைக் கைகளில் அடித்துத் தெறிக்க வைப்பதும், அலைகள் மேலே வந்து மோதும் போது உதய்யின் கைகளைப் பிடித்து பயத்தைப் போக்குவதுமாக முகத்தில் உறைந்த புன்னகையுடன் விளையாடுபவளை ஆசை தீர ரசித்தான் கண்ணாளன்.
“கண்ணா…!! வானம் அவ்வளவு அழகா இருக்கு. நிலவுக்குப் பக்கத்துல நிறைய நட்சத்திரங்கள் அழகா இருக்குல்ல டா” விழிகளில் ரசனை வழியக் கேட்டாள் காரிகை.
“அந்த நட்சத்திரங்கள் ஒருவித மயக்கத்தில் தடுமாறிட்டு இருக்கு அதிம்மா” மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டி வானத்தைப் பார்த்தான் வர்ஷன்.
“மயக்கமா? என்ன மயக்கம்? காதல் மயக்கமா?”
“விடை தெரியாத ஒரு வகையான கலக்கம் நிறைந்த மயக்கம் என்று சொல்லலாம். உங்களைப் பார்த்து அதுங்களுக்கு அப்படி ஒரு மயக்கம்” என்றவனைப் புரியாமல் நோக்கினாள் நம் நாயகி.
“எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகத்துக்கு வருது.
மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். அதாவது இந்த வானத்து நட்சத்திரங்கள் அந்த நிலவையும் இங்கே இருக்கிற பெண்ணிடம் முகத்தையும் பார்த்து எது நிலவு எது முகம் என்று தெரியாமல் அதோட நிலையில் இருந்து மயங்கி திரிகின்றனவாம்” என்றவன்,
“நட்சத்திரங்களுக்கு இருக்கிற டவுட் எனக்கு சுத்தமா இல்லை. ஏன்னா அந்த வானத்து நிலவை விட என் இதய நிலா தான் பெஸ்ட்னு சொல்லுவேன். அந்த நிலா முழு உலகத்துக்குமே வெளிச்சத்தைக் கொடுக்கிறதால ஒருத்தருக்கு கொஞ்சம் ஒளி தான் கிடைக்குது. ஆனால் அதிய நிலா என் இதயத்தில் மட்டுமே எனக்காக தன்னோட முழுக் காதல் வெளிச்சத்தையும் தரா. சோ எனக்கு என்னோட நிலா தான் பெஸ்ட் என் ஸ்வீட்” அவனவளின் மதி முகத்தைக் காதல் சொரியும் விழிகளால் அளவிட்டான் அக்காதல் பித்தன்.
“நல்லா விளக்கம் சொன்ன டாக்டரே! நீ பேசாம நடிகனாகி இருக்கலாம். ஒரு ஆக்டருக்குத் தேவையான அத்தனை நவரசங்களும் பேச்சுத்திறனும் உன்கிட்ட பக்காவா இருக்கு. உன் பேச்சுல நான் விழுந்து ரொம்ப நாளாச்சு. ஆனால் இன்னைக்கு புது மாதிரி என்னை மயக்கிட்ட டா மாயக்காரா” அவன் புஜத்தை செல்லமாகக் கிள்ளினாள்.
அவ்வாறே சிறிது நேரம் நீரில் விளையாடிவிட்டு கரைக்கு வந்தமர்ந்தனர். உதய் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுக்க அதியும் ஷாலுவும் சண்டையிட்டுக் கொண்டே சாப்பிட்டனர்.
“இந்த பக்கமா யாரும் இல்லைல. நாம ரெண்டு பேரும் ரேஸ் ஓடலாமா உதய்?” என்று கேட்டாள் அதி.
“டபுள் ஓகே மேடம்” எனத் தலையாட்டியவன் அவளருகே வந்து நிற்க, “நீ மெதுவா ஓடி என்னை ஜெயிக்க வைக்கக் கூடாது ஓகேவா” என அவனது முகத்தைப் பார்த்தாள் பாவை.
“ஆர்டர் போடுறீங்களே இதயா!” என்றவன் அவளோடு சேர்ந்து ஓடினான். அவனோ அவளைப் பார்த்தபடி ஒட “முன்னால பார்த்து ஓடு டா ராஸ்கல். என்னை வின் பண்ண வைக்காத” அவனை முறைத்துப் பார்த்தாள்.
உதய் அவனால் முடிந்தளவு வேகமாக ஓடிட அவனை முந்திக்கொண்டு ஓடி வந்து கைகளை உயர்த்தித் துள்ளி ஆட்டம் போட்டவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“நீங்க வின் பண்ணிட்டீங்க. நல்லா ஓடுறீங்களே” என்று வாழ்த்தினான் அவன்.
“பின்ன நான் எங்க ஸ்கூல்ல சாம்பியன் டா” பெருமையுடன் சொன்னவள், “நீ ஏன் திடீர்னு ஸ்லோ ஆகிட்டே?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவன் முகம் சுருங்க, “ஏய் என்ன டா உன் முகம் வழக்கம் மாதிரி இல்லை. என்னன்னு சொல்லு” என்றவள் அவன் காலில் இரத்தம் வழிவதைக் கண்டு, “வர்ஷ் பிளட் டா” என்று பதறித் துடித்தாள்.
“கூல் அதி! பெருசா எதுவும் இல்லை. சின்னக் காயம் தான்” என அமர்ந்தான்.
“லூசு எல்லாம் அசால்ட்டா உனக்கு? இவ்ளோ ரத்தம் வருது” என கோபம் கொண்டவள் அவன் காலைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
உடைந்த கண்ணாடித் துண்டு காலில் குத்தியிருந்தது. அதை எடுத்து வீசும் போது “ஸ்ஸ்” என வலியில் முகம் கசங்கினான் காளை.
“அவ்வளவு வலி இருக்கும் போது பெரிய இவன் மாதிரி மறைக்கப் பார்த்திருக்க. நீ டாக்டருனா உனக்கு வலி வராதா” என்று முனகினாள் அவன் காலை வருடியபடி.
“திட்டாதீங்க. என் நெஞ்சுல முள் குத்துற மாதிரி இருக்கு”
“நீ இப்படியே பேசிட்டு இருந்தா நெஞ்சுல இல்ல உன் வாயில முள்ளைக் குத்திருவேன் ஜாக்கிரதை” முறைப்பைக் கஞ்சமில்லாமல் விசிறினாள் அவள்.
“வர்ஷு வலிக்குதா வர்ஷு?” அழுது விடுபவள் போல் கேட்டாள் ஷாலு.
“இல்லடா தங்கம்! எனக்கு ஒன்னுனா பதற, என் காயத்துக்கு மருந்தாக நீங்க இருக்கீங்கங்குறதை நினைக்கும் போது சந்தோஷமாத் தான் இருக்கு” மென்னகையுடன் கூறினான்.
வர்ஷனிடம் மறுத்து அதியே பைக்கி ஓட்டுவதாகக் கூற, அவனும் மறக்காமல் அவள் பின்னே அமர்ந்தான்.
“உங்க ஷோல்டரை பிடிச்சுக்கவா?” என்று கேட்டவனிடம், “இல்லை என் காலைப் பிடிச்சுக்க” என்று பாய்ந்தாள் அவள்.
“வாலா? குரங்குக்குத் தான் வால் இருக்கும். உங்களுக்கும் இருக்கா?” என பாவமாக சொன்னான்.
“கால்ல காயமானாலும் உன் குசும்பு குறையலல்ல டா கிறுக்கா” செல்லமாகக் கடிந்து கொண்டாள் அதி.
வீட்டுக்கு சென்று சாப்பிட்டதும் ஷாலு தூங்கி விட்டாள். உதய் காலில் கட்டுப் போட்டு சோபாவில் சாய்ந்திருந்தான். அவனது அருகில் அமர்ந்த அதி, “வலிக்குதா கண்ணா?” என பாசம் ததும்பும் குரலில் கேட்டாள்.
“நீங்க இப்படி வலிக்குதானு உங்க முகத்துல வலியோட கேட்கிறதைப் பார்க்கும்போது தான் வலிக்குது. உண்மையாவே நான் சொன்ன மாதிரி எனக்கு சந்தோஷம் தான். நான் சின்ன வயசுல இருக்கும்போது கீழே விழுந்ததுல காயமாகி ரத்தம் இரத்தமா வந்துச்சு. செக்யூரிட்டி என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் கொண்டு வந்து விட்டார்.
ஒருநாள் பார்க்கல ஒரு பையன் விழுந்ததும் அம்மா அவனைத் தூக்கி கையைத் தடவி கண்ணு கலங்கினாங்க. அவனோட அப்பா ஆறுதல அணைத்து ஒன்னும் இல்லடான்னு சொன்னாரு. எனக்கு அடிபட்டட்போ இது தான் என் மைண்ட்ல ஓடிக்கிட்டு இருந்தது” அன்று அனுபவித்த வலி இப்போதும் அவன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவளைப் பார்த்து மீண்டும் தொடர்ந்தான்.
“அதே மாதிரி எனக்கும் பாசம் காட்ட யாரும் இல்லையானு தோணுச்சு. என் தலையை தடவி விட கை இல்லாம, சாய்ச்சுக்க தோள்கள் இல்லாம, சுகமா சாஞ்சு தாய்ப் பாசத்தைத் தேட ஒரு உறவு இல்லாமல் தவிச்சப்போ நான் உடைந்து போனேன். காயம் எப்படி இருக்கு பரவாயில்லையானு ஒருத்தரும் என்கிட்ட கேட்கல.
அப்படி யாரும் கேட்க மாட்டாங்களான்னு ஏங்கினேன். மூணு நாளா சாப்பிடக் கூட பிடிக்காமல் ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன். அதுக்கப்புறம் தான் ராவ் அங்கிள் எனக்காக வந்தார். இருந்தாலும் என் கூட எப்போவும் இருக்கலல? எனக்கு சுகமில்லாமல் போகும் போது ஏதாவது காயமாகும் போது அவர் கூட இருந்ததில்ல.
அவர் இருக்கும் போது என்னைப் பாசமா பார்த்துகிட்டார். அவர் இல்லாத நேரங்கள் எனக்கு நரகத்தை விட கொடுமையா இருக்கும்” தன் கைகள் இரண்டையும் தானே ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கோர்த்துக் கொண்டான் உதய்.
என்னதான் இவன் இவ்வளவு வளர்ந்து விட்டாலும் அவனால் பழைய ரணங்களை மறக்க முடியாது என்பது புரிந்தது. அன்புக்காக ஏங்கும் ஒரு வளர்ந்த குழந்தைதே இந்த உதயவர்ஷன் என்பதை அவனது வார்த்தைகளில் உணர்வு பூர்வமாக உணர்ந்தாள் அதி.
“உதி ஃபீல் பண்ணாத! முன்ன எப்படி இருந்தியோ தெரியல டா. இனிமேல் உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன். இனியும் இருப்பேன்.
பிடிக்க கையில்லாமல் உன் கையை நீயே சேர்த்துக்கத் தேவையில்லை. உன் கை கோர்க்க என் கை இருக்கும்” அவனை நோக்கி தனது கையை நீட்டினாள் பெண்.
அவளை மெல்ல ஏறிட்டவனிடம், “ம்ம் பிடிச்சுக்க கண்ணா! உனக்காகத் தான் இந்தக் கை. உனக்கு சாஞ்சுக்க என் தோள்கள் இருக்கும். மடி சாய்ச்சு உன் தலையை தடவி விட உனக்காக அன்பை அளவில்லாமல் சுரக்க என் நெஞ்சம் இருக்கும்.
உனக்காகப் புன்னகைக்க என் இதழ்கள் இருக்கும். கவலைகளைப் பகிர்ந்துக்க, காயங்களுக்கு மருந்தாகி ஆறுதல் சொல்லி என் மனசு இருக்கும். வர்ஷுவுக்காக அவன் நிலாம்மா எப்போதும் இருப்பா. சந்தோஷமோ கவலையோ உனக்கு உறுதுணையா உன் பக்கத்தில் நான் இருப்பேன்” என்று காதலுடன் கூறினாள்.
அவளது நீட்டிய கையைப் பிடித்து தன் கண்களில் ஒற்றிக் கொண்ட உதய்யின் இதழ்கள் “நிலாம்மா…!!” என உணர்ச்சி மிகுதியில் புன்னகையுடன் துடித்தன.
நிலவு தோன்றும்…!!🌛
✒️ ஷம்லா பஸ்லி🤍