20. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 20

 

மதிய உணவுக்கு வீடு வரச் சொல்லி மேகலை அழைக்க, திரும்பி வந்து கொண்டிருந்தான் சத்யா.

 

யுகன் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருக்க, யன்னல் வழியே வேடிக்கை பார்த்த ஜனனி, சற்று முன் சத்யாவிடம் சொன்னதை மீட்டிப் பார்த்தாள்.

 

“நான் வேலைக்குப் போகனும். ஏதாவது வேலை பார்த்து தர முடியுமா?” அவளது கேள்வியில் புருவம் சுருக்கினான் கணவன்.

 

“எதுக்கு இப்போ? வேலைக்குப் போக என்ன அவசியம்?” எதிர்க் கேள்வி தொடுத்தவனை அமைதியாகப் பார்த்து, “எனக்குனு சில தேவைகள் இருக்குல்ல. அதைப் பண்ண பணம் வேணும்” என்று பதிலளித்தாள்.

 

அவனோ “வேண்டாம்” ஒற்றை வார்த்தையில் மறுப்பை வெளியிட்டான்.

 

“போக வேண்டாம். உன் தேவைகளை நான் நிறைவேற்றுவேன். எந்த தயக்கமும் இல்லாம கேட்கலாம்னு நீங்க சொல்லுற அளவுக்கு நமக்குள்ள எந்த உறவும் இல்லை. என் கூட வாழ மாட்டேன்னு சொன்ன உங்க கிட்ட கை நீட்டி பணம் கேட்கிற அளவு நான் சுயமரியாதை இழந்தவள் இல்லை. சோ எனக்கு வேலை முக்கியம்” அவள் உறுதியாகச் சொல்ல, அவன் அமைதியாக நின்றான்.

 

அவள் சொல்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று அவள் கையில் பணம் இல்லாவிடின் அவன் கண்டுகொள்ளாமல் வெளியில் வந்து விட்ட நிலையில் என்ன செய்திருப்பாள்?

 

ஆனால் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அவள் செல்வதிலும் அவனுக்கு உடன்பாடில்லை.

 

“பார்ப்போம்” எனும் சொல்லோடு நிறுத்திக் கொண்டான்.

 

வீடு வரவே ஜனனி இறங்கிக் கொண்டாள். யுகன் சத்யாவின் கையைப் பிடித்துக் கொள்ள, “என்ன கண்ணா?” எனக் கேட்டான்.

 

“அவங்க கூட நான் ஃப்ரெண்ட் ஆகிடவா?” ஜனனியைக் காட்டிக் கேட்க, “உன் இஷ்டம் டா” தோளைக் குலுக்கிக் கொண்டான்.

 

அவனுக்கு ஜனனியைப் பிடிக்கவில்லை தான். அதற்காக யுகனைப் பழக வேண்டாம் என்று கூறவும் அவனால் முடியவில்லை.

 

“இல்லை டாடி. தனியா இருக்காங்களேனு கேட்டேன். நாங்க மூனு பேரும் தனியா போறப்போ ஜானு மட்டும் ஒதுங்கி இருக்காங்க தானே. அப்படி ஒருத்தரை ஒதுக்கி வெச்சா அவங்க கஷ்டப்படுவாங்கனு நீங்க சொல்லி இருக்கீங்கள்ல?” பாவமாகக் கேட்டான் யுகன்.

 

சத்யாவுக்கு ஒரு பக்கம் பெருமையாக இருந்தது. அவன் சொல்லிக் கொடுத்த நல்ல விடயங்களை மகன் அப்படியே எடுத்து நடப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி.

 

“அது உண்மை தான் யுகி. அவங்க கூட பேச வேண்டாம்னு நான் உனக்கு சொல்ல மாட்டேன். உனக்கு தோணுச்சுனா தாராளமா பேசு” என்று அனுமதியளித்தான்.

 

“அவங்க என் அம்மானு சொல்லுறது தான் எனக்கு பிடிக்கல. ஆனால் நான் ஜானு கூட ஃப்ரெண்ட் ஆகுறேன். பாவம்ல?” 

 

“சரிடா சரி. நீ ஃப்ரெண்ட் ஆகிக்க. ஆனால் என்னை டீல்ல விட்றாத. அவ்ளோ தான்” எங்கே ஜனனியுடன் சேர்ந்து தன்னோடு முன்பு போல் பேச மாட்டானோ என்று நினைத்தான்.

 

“நீங்க தான் டாடி என்னோட பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்டு ஃப்ரெண்ட்! உங்களுக்கு அப்பறம் தான் எல்லாரும்” தந்தையின் கால்களைக் கட்டிக் கொள்ள, “என் உசுரு” அவனது உயரத்திற்குக் குனிந்து முத்தமிட்டான் சத்யா.

 

அறையினுள் இருந்த ஜனனிக்கு மகிஷா அழைப்பு விடுத்திருந்தாள். அதைப் பார்த்தவுடன் மகிழ்வோடு அழைப்பை ஏற்றாள் அவள்.

 

“அக்கா” என்ற அழைப்போடு தன்னைப் பார்த்து மலர்ந்து சிரித்த தங்கையை அன்புடன் நோக்கினாள் உடன்பிறந்தவள்.

 

“ஹே மகி! எப்படி டி இருக்கே?” தங்கையைப் பார்க்கும் போது அவளுக்கு கண்களில் நேசம் நிறைந்து நின்றது.

 

பிறந்ததிலிருந்து அவள் மகிஷாவை விட்டுப் பிரிந்ததே இல்லை. எப்போதும் அவளுடன் மகி மகி என்று சுற்றிக் கொண்டிருப்பாள். அவளும் அப்படித் தான் ஜானு அக்கா என்று வால் பிடித்துத் கொண்டு வருவாள்.

 

நந்து அதிகம் பேச மாட்டாள் அல்லவா? ஆனால் மகியும் ஜனனியும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டும், அடுத்த நொடியே சமாதானம் செய்து கொண்டும், வீட்டைக் கலகலப்பாக வைத்திருப்பார்கள்.

 

ஒரு நாள் சுற்றுலா சென்றாலே ஜனனியைப் பிரிந்து மகிஷா புலம்பித் தீர்ப்பாள். ஆனால் இனிமேல் இருவரும் சந்திக்கக் கூட நெருந்தூரம் செல்லும் அளவுக்கு ஊர் விட்டு ஊர் பிரிந்து சென்றது வேதனையைக் கொடுத்தது.

 

அக்காவைக் கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் மகிஷா. அவளுக்கு பேச வார்த்தை கூட வரவில்லை.

 

“மகி…!!” என்று அதட்டியவளுக்கும் கண்கள் கலங்கித் தான் போயின.

 

“என்னை விட்டுப் போக மாட்டேன். என் கூடவே இருப்பேன்னு சொல்லிட்டு இப்படி சட்டுனு பிரிஞ்சு போயிட்டியே அக்கா. நீ இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவளுக்கு இந்தப் பிரிவைத் தாங்கிட முடியவில்லை.

 

ஜனனிக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் உடைந்து அழுதால் விடயம் அறிந்து ஜெயந்தியும் கலங்குவார். எனவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தங்கையை சமாதானப்படுத்த முனைந்தாள்.

 

“நான் உன்னை விட்டு பிரிஞ்சு போகல. உன்னை மட்டும் வீட்டுல தனியா ஜாலியா இருக்க விட மாட்டேன். நான் மறு வீட்டுக்கு வர்றப்போ உன்னை பார்த்துக்கிறேன். 

 

அப்பறம் நீ என்னமோ முன் வரலாற்றுக் காலத்தில் வாழுற மாதிரி பேசுற. இது நவீன காலம்மா. நமக்கு தான் நினைச்ச உடனே ஃபோன் பண்ணலாமே. அதுவும் வீடியோ கால் பண்ணி தினமும் இந்த மூஞ்சை பார்க்கலாம். சோ கண்ணுல தண்ணிய கொட்ட வச்சிட்டு இருக்காத டி. அப்புறம் உன்னை அழ வெச்சேன்னு அப்பா என்னைத் திட்டுவாரு”

 

“சும்மா போக்கா. அப்பா இனி உன் மேல கோபப்படவே மாட்டாரு. அப்படி ஒரு காரியத்தை நீ பண்ணிட்ட”

 

“அதை விடு. நந்து எங்கேனு தெரிந்ததா?” என ஜனனி வினவ, “ஆமாக்கா. நேத்து நைட்டு நந்து வீட்டுக்கு வந்தா” என்றவள் நேற்று நடந்த சம்பவத்தை விவரித்துக் கூற, உள்ளுக்குள் மருகிப் போனாள் மற்றவள்.

 

“நான் கேட்டிருந்தப்போ எழில் பற்றி சொல்லி இருக்கலாமே. அப்போ இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காது. இப்போ நம்மளையும் கஷ்டப்படுத்தி அவளும் வேதனைப்படறா” என்ன தான் இருந்தாலும் உடன் பிறந்த பாசம் அவளையும் வேதனையில் ஆழ்த்தியது.

 

“அதைத் தான் நானும் சொன்னேன். ஆனால் எல்லாமே கையை மீறிப் போயிருச்சு. அப்பா நந்து அக்கா மேல ரொம்ப கோவமா இருக்காரு”

 

“சரி விடு மகி. எல்லாம் போகப் போக சரியாகிடும். அதற்கு காலத்தைத் தவிர வேறு எதனாலயும் மருந்து போட முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டாள் ஜனனி.

 

“நீ எனக்காக தானே இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்ட? எனக்கு அதே ஞாபகமா இருக்கு அக்கா. சத்யா மாமாவுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு தெரியும்ல? அப்படி தெரிஞ்சும் ஏன் அவரை கட்டிக்கிட்ட?” மகிஷாவால் இன்னமும் கூட ஜனனி செய்த செயலை ஏற்க முடியவில்லை.

 

“நான் அன்னைக்கே சொன்னது தான் மகி. யார் யாருக்குன்னு முடிச்சு போடுறது கடவுள். ஒன்னு நடக்கனும்னு இருந்தா அது நடந்தே தீரும். இது தான் என் வாழ்க்கைன்னு நான் ஏத்துக்கிட்டேன். இனி இப்படித்தான். நாம பழசை பேசுறதால நடந்தது எதுவுமே மாறப்போவதில்லை. சோ அதைக் கடந்து வந்து வட் நெக்ஸ்ட் என்று யோசிக்கிறது புத்திசாலித்தனம்.

 

அவருக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை தான். ஆனால் தெரிஞ்சு தானே நான் கல்யாணம் பண்ணுனேன். எனக்கு நம்பிக்கை இருக்கு, எந்த ப்ராப்ளம் வந்தாலும் நான் சமாளிச்சிடுவேன். நீ இதை நினைச்சு கஷ்டப்படாமல் அம்மா அப்பாவ பாத்துக்க. எனக்கு அது போதும்” என்று நீளமாகப் பேசினாள்.

 

ஜனனியின் தெளிவான பேச்சு தங்கையானவளுக்கு தெம்பை ஊட்ட, “சரிக்கா. நான் அப்பறமா கூப்பிடுறேன்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

 

மகி சென்றதும் இடிந்து போய் அமர்ந்தாள் ஜனனி. மாரிமுத்து கண்டிப்பாக இருப்பார் என்றாலும் அவர்களது குடும்பம் மற்றபடி மிக மிக சந்தோஷமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அனைத்தும் சிதைந்து விட்டதே என்பதை நினைக்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

 

கண்ணீர் ததும்பிய விழிகளைத் தன் பிஞ்சுக் கரத்தால் தொட்டான் யுகன். அவனைப் பார்த்த ஜனனி பின் நோக்கி நகர, “அழாத ஜானு” அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான் அவன்.

 

அவளுக்கோ நெஞ்சம் விம்மியது. யாரும் இல்லை என்று துவண்ட நேரம் அவளுக்கு யுகனின் சிறு அன்பும் பெரும் சக்தியாக அமைந்தது.

 

“யுகி! நீ என் கூட பேசுவியா?” என்று கேட்க, “பேசத் தான் வந்திருக்கேன்” என்றிட, அவள் புரியாமல் பார்த்தாள்.

 

“உனக்கு தான் என்னைப் பிடிக்காதே யுகி”

 

“உன்னைப் பிடிக்காதுன்னு நான் சொல்லி இருக்கேனா? இல்லல்ல. எனக்கு அம்மாவைப் பிடிக்காது. உன்னை என் அம்மானு சொல்லுறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல தான். ஆனால் நான் உன் கூட ஃப்ரெண்ட் ஆகலாம்னு நெனக்கிறேன்‌. என்னை உன் ஃப்ரெண்டா ஏத்துப்பியா?” கை நீட்டிக் கேட்டான் சின்னவன்.

 

அவளுக்கோ மனதில் ஆனந்தச் சாரல் வீசியது. அவன் தன்னோடு பேசியதே இப்போதைக்கு போதும் என்றிருந்தது.

 

“யாஹ் சூர். ஆனால் நீ என்னைத் தனியா விட்டு உன் டாடி கிட்ட மட்டும் பேசிட்டு வருவியே” பாவமாகக் கேட்டாள் காரிகை.

 

“ஆமா. அதான் எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அப்படி யாரையும் தனியா விடக் கூடாதுல்ல. அதனால தான் ஃப்ரெண்ட் ஆகுறேன்” என்றவனை அன்போடு நோக்கினாள்.

 

“பாவம் பார்த்து எல்லாம் யாரும் ஃப்ரெண்ட் ஆகத் தேவல. நான் போறேன்” பொய்யாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள, “அதுக்காக மட்டுமில்ல. எனக்கு விளையாடவும் யாரும் இல்லல்ல. அதுக்கும் சேர்த்து தான்” என்று கண் சிமிட்டியவனைப் பார்த்து சிரித்தாள் அவள்.

 

“அப்படினா ஓகே. எனக்கும் விளையாட யாரும் இல்லை. என் மகி குட்டி போல நீயும் என் கூட இருப்ப தானே?”

 

“மகி குட்டி போல எப்போவும் இருக்க முடியாது. டாடி கூப்பிட்டா அவர் கிட்ட போயிடனும். இல்லனா கோவிச்சுப்பார். அவர் தான் ஃபர்ஸ்ட்” என்று தலையசைத்து சொன்னவனைப் பார்த்து,

 

“சரிங்க டாட் லிட்டில் ப்ரின்ஸ். டாடி கூப்பிட்டா எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிப் போயிடுவீங்க. அப்படித் தானே?” எறக் கேட்க தலையாட்டினான்.

 

“ஓகே. அப்போ நாம ஃப்ரெண்ட்ஸ் ஆகிடலாம்” என்று அவன் கையை நீட்ட, “ஃப்ரெண்ட்” என்றவாறு கை கொடுத்தாள்.

 

“அப்போ இனிமேல் ஜானுவும் யுகியும் ஃப்ரெண்ட்ஸ்” அவளைப் பார்த்துச் சிரிக்க, “எஸ் ஃப்ரெண்ட்” கண் சிமிட்டிச் சிரித்தாள் ஜனனியும்.

 

யுகனின் நட்பும் நெருக்கமும் கிடைத்ததில் மகிழ்ந்து போனவள் அறியவில்லை, அந்த நட்பிற்கும் மகிழ்வுக்கும் ஆயுட்காலம் குறைவு என்று.

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!