20. வாடி ராசாத்தி

5
(1)

வாடி ராசாத்தி – 20

அன்று இரவு கேபியின் வீட்டில்,

“ராஜா, சாப்பாட்டை பார்த்து சாப்பிடு ராஜா…. போனையே ஏன் பார்க்கிற? நந்து, மாமா கிட்ட இருந்து போனை வாங்கு” என்றார் ஜெயந்தி.

நந்துவிற்கு தான் கேபியின் மீது ஏக போக உரிமை என்பதை சொல்லிகாட்டுவது போல். அன்று வந்திருந்த அவன், அக்கா, மாமா அவர்கள் முன்னிலையில் ஜெயந்தி முக்கியமாக அப்படி சொன்னார். நந்து இங்கே வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளும் கேபியும் உரசி கொள்வதை கவனித்து இருந்தாலும், அதை கேட்க வில்லை அவர். அவனிடம் கேட்டால், ஒத்துவரவில்லை என்பான் என்று தெரியும் அவருக்கு. அதே நேரம் நந்துவிடம்,

“அம்மா கிட்ட சொல்லாத, மாமா சீக்கிரம் நம்ம வழிக்கு வந்துடுவான்” என்றும் சொல்லி இருந்தார். ஆனாலும் நந்து லேசாக விஜியிடம் கோடு காட்டி இருந்தாள்.

இதே முன்பு போல் இருந்திருந்தால் ஜெயந்தி சொன்னாலும் நந்து வாங்கியே இருக்க மாட்டாள், ஆனால் இன்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள எண்ணி, கேபிக்கு கண்களை காட்ட, அவனும் புரிந்து கொண்டான்.

வேகமாக அவன் அருகில் வந்து,

“கொடுங்க மாமா போனை, எப்போதும் பிசினெஸ் நினைப்பு தானா….? ஒழுங்கா சாப்பிடுங்க….” என்றாள் உரிமையாக அவன் போனை அவனிடம் இருந்து வாங்க முயற்சி செய்து கொண்டே.

“ஹேய் நந்து, விடு முக்கியமான மெசேஜ் பார்த்துக்கிட்டு இருக்கேன்….”

“இப்போவே நான் சொல்றதை கேட்டு பழகிக்கோங்க மாமா…. கொடுங்க….” என்று வேகமாக பறித்தே விட்டாள் போனை.

“ஹேய்ய்ய்ய்ய்…. அறிவில்லை உனக்கு! அவங்க என்ன சொன்னாலும் செய்வியா…? படிச்சவ தானே நீ…. உனக்கா எதுவும் தெரியாதா….? புரியாதா….சே….!” என்றபடி எழுந்து மாடிக்கு விரைந்து விட்டான்.

நடிப்புக்காக என்றாலும் அனைவரும் முன்னிலையிலும் நந்துவை திட்டியது அவனுக்கு என்னவோ போல் ஆயிற்று. அதே போல் தான் நந்துவிற்கும்,

சிவகுமாரின் செல்ல பெண் அவள். விஜி திட்டினாலும் அதில் பெரிதாக கோபம் இருக்காது. இப்போது அவர்கள் முன் இது போலே எல்லாம் செய்ய வேண்டியது இருக்கிறதே என்ற கழிவிரக்கத்தில், அழுகை வந்து விட்டது அவளுக்கு.

“அவ்வளவு தான், அவளின் கண்ணீரை கண்டவுடன் வெகுண்டு எழுந்து விட்டான் சிவகுமார். விஜிக்கும் மிகுந்த கோபம்.

“என்னமா இது….? இது தான் என் பொண்ணை நீங்க பார்த்துக்கிற அழகா? அவ சொல்லிடே தான் இருக்கா, மாமாக்கு பெரிசா இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை மான்னு…. நான் உங்களை நம்பினேனே….”

“ஓ! உன் தம்பிக்கு இஷ்டம் இல்லைனா என் பொண்ணை திட்டுவானா? இப்போவே இப்படினா, உங்க அம்மா இஷ்டப்படி நடந்து இருந்தா என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்….? இப்போ உடனே நீ கிளம்புற, இனிமே உங்க அம்மா வீட்டில வந்து தங்குற வேலை எல்லாம் கிடையாது, அதுவும் என் பசங்களை இனி இங்க அழைச்சிட்டு வந்தே, நீ இங்கேயே இருந்திடு…. நந்து கிளம்புடா….” என்று அந்த ஹாலே அதிரும்படி சத்தம் போட்டான் சிவகுமார்.

“மாப்பிள்ளை மாப்பிள்ளை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை, என் தப்பு தான்….போகாதீங்க மாப்பிள்ளை, விஜி சொல்லு மா….”

“நீங்க ஏன் கேட்கிறீங்க, நாங்க இருக்கணும்னா கார்த்திக்கை வந்து மன்னிப்பு கேட்க சொல்லுங்க…. அதுக்கு அப்பறம் பேசுங்க எதுவா இருந்தாலும்…. பத்து நிமிஷம் தான் டைம் உங்களுக்கு…. அதுக்குள்ள துரையை வர சொல்லுங்க….” என்றவன் வேகமாக சென்று அலுவலக அறைக்குள் அமர்ந்து கொண்டான்.

“அச்சோ மன்னிப்பா, ராஜா கிட்ட எப்படி சொல்வேன்….?” பதறினார் ஜெயந்தி.

தனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனபது போல் இருந்தார் முருகர். விஜி பேச ஆரம்பித்த உடனேயே, தன் அறைக்கு சென்று விட்டார் ஞானம். தன் மகனிற்கு இந்த நிலை வர ஜெயந்தி தான் காரணம் என்று அவருக்கு ஜெயந்தி மேல் கடுங்கோபம். சிவகுமார் பேசியதை எல்லாம் அறைக்குள் இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார்.

முருகர் சென்று சொன்னாலும் கேபி கேட்பான், ஆனாலும் தான் சென்று அவரிடம் கையேந்துவதா என்ற எண்ணத்தில், ஞானத்திடம் வந்தார் ஜெயந்தி.

“என்னங்க, நடந்ததை எல்லாம்….” பதவிசாக தான் ஆரம்பித்தார் ஜெயந்தி.

ஆனால் ஏற்கனவே கடுமையான கோபத்தில் இருந்த ஞானம், “என் பையனுக்கு இந்த அவமரியாதை வர நீ தான் காரணம். அவன் மன்னிப்பு கேட்கிற நிலைக்கு கொண்டு வந்துட்ட….போதுமா” என்று சத்தம் போட்டார். அதிர்ந்து போயிட்டார் ஜெயந்தி.

“விஜியும் நம்ம பொண்ணு தானே….” ஆத்திரமாக கேட்க,

“கட்டிக்கொடுத்த பொண்ணை எங்க வைக்கணுமோ அங்க வைக்கணும்…. உன் இஷ்டம் தானே எல்லாம்….அப்போ யார் காரணம்?” சுருக்கென்று குத்துவது போல் சொல்லிவிட்டார்.

இப்போது எதுவும் பேசக்கூடாது என்பது போல் மௌனமாக திரும்பி செல்ல போனார் ஜெயந்தி. அவருக்கு எப்போதுமே காரியம் தான் பெரிது, யாரிடம் வீம்பு காட்டாலமோ அங்கே தான் காட்டுவார். திரும்பி நடந்தவரை, ஒரு நிமிஷம், என்று நிறுத்திய ஞானம்,

“இனிமே கார்த்திக் கல்யாணம் அவன் இஷ்டம். உன் தலையீடு இருக்க கூடாது. இது தான் என் முடிவு” என்றார் ஆணித்தரமாக. இப்போது தான் உச்சகட்டமாக அதிர்ந்து போனார் ஜெயந்தி.

“ஏன்….நான்….எனக்கு….”

“அது அவன் வாழ்க்கை…. அவ்ளோதான்….போ”

உள்ளே என்ன பேசினார்கள் என்று தெரியாவிட்டாலும் ஞானம் ஏதோ அதிருப்தியுட்ன் பேசி இருக்கார் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். தாங்கள் செய்தது மிகப்பெரிய விஷயம் ஆகி விட்டதே என்று பயந்து போன நந்து, கேபியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து வேகமாக படி ஏறினாள்.

“எங்க போற….?” என்றார் அப்போது வந்த ஜெயந்தி.

“நான் போய் மாமா கிட்ட ஸாரி சொல்றேன்….”

“ஒன்னும் வேண்டாம், நானே போறேன்….”

கீழே பேச்சுக்குரல்கள் கேட்டு கொண்டே இருக்க, இறங்கி செல்வோமா வேண்டாமா என்று இருந்தவன் ஜெயந்தியை கண்டதும் பதறினான்.

“முட்டி வலியோடு நீங்க ஏன் பெரியம்மா வந்தீங்க, என்னை கூப்பிட வேண்டியது தானே….”

“எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்த எனக்கு இந்த கஷ்டம் ஒண்ணுமில்லை பா….” மகனை ஆழம் பார்த்தார் ஜெயந்தி. இது போல் முன்பு பேசினால், ஜெயந்திக்காக அப்படி பரிந்து கொண்டு வருவான். திருமண பேச்சு எடுத்ததில் இருந்து யோசித்து யோசித்து வார்த்தைகளை விடுகிறான். அவ்ளோ ஆசையா அந்த கழுதை மேல்….ஆத்திரமாக வந்தது அவருக்கு.

“அத்தான் கிளம்புறேன் ஊருக்குனு சொல்றார் பா, நீ வந்து பேசு பா….” என்றார் வேறு எதையும் சொல்லாமல்.

“அப்படியா, நான் பேசுறேன் பெரியம்மா…. நீங்க மெதுவா இறங்கி வாங்க” என்றவன், அறை வாசலுக்கு சென்ற போது, ஒரு நிமிடம் தயங்கி, பின் ஒரு முடிவோடு,

“இந்த வீட்டுக்கு மருமக வந்தா அது அம்மு தான் பெரியம்மா, இனிமே நான் சொல்ற அப்போ என் கல்யாண வேலை பாருங்க. அதுவரை வேற பேச்சே வேண்டாம். இது தான் முடிவு” என்றான் உறுதியாக.

“மாப்பிள்ளை, நீ எல்லாரும் அவங்க அவங்க முடிவு சொன்ன பிறகு, நான் ஏன் பேச போறேன்…. வயசான என் பேச்சு எடுபடுமா? எனக்கு என் இடம் தெரிஞ்சுடுச்சு பா…. நீ போ….” என்றார் கசப்பாக.

“என் கல்யாணம் மட்டும் தான் பெரியம்மா, மத்தபடி நீங்க தான் எல்லாம் எனக்கு. நீங்க ரொம்ப முக்கியம் எனக்கு.”

“சரி ராஜா, உன் விருப்பம், சந்தோஷம் தான் எல்லாம். என் செல்லமே இப்போ போய் மாப்பிள்ளை கிட்ட பேசு”

இவர்கள் பேசியது எல்லாம் விட ஞானம் பேசியது தான் அவருக்கு வலி. இந்த குடும்பத்திற்கு எவ்வளவு உழைத்து இருப்பேன்…. என் பிள்ளை, அவனை என்னிடம் இருந்து விலக வைத்து விட்டாளே…. வரட்டும் …. இங்க தானே வரணும்! அவரின் அத்தனை வலியும் ஆத்திரமாக அம்முவின் மீது மாறியது.

சிவகுமாரை தேடி வந்தவனை,

“என்ன மாப்பிள்ளை எப்படி என் நடிப்பு….?” என்று கண்ணடித்து வரவேற்றார்.

“பின்னிட்டீங்க போங்க, இத்தனை நாள் முறுக்கி கிட்ட இருந்த பெரியம்மா ஒரே நாள்ல மாறிட்டாங்க. சூப்பர் மாமா…. சாரி மாமா…. நந்துவை திட்டுற மாதிரி ஆக்ஷன் பண்ணது கூட எனக்கு பிடிக்கலை தான்….ஆனா வேற வழியில்லை.”

“அது பரவாயில்லை, நீங்க தான் நந்து இங்க வந்த அடுத்த நாளே என்கிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களே. என்ன… முன்னாடியே சொல்லி இருந்தா இவ்ளோ டிராமா தேவையில்லை, நாங்களும் இவ்ளோ ஆசையா இருந்திருக்க மாட்டோம்!”

“ஸாரி மாமா, பல குழப்பம் எனக்கு….”

“காதல்னா அப்படி தான் விடுங்க, ஆனா, மாப்பிள்ளை உங்க அக்கா உங்க மேல செம கோபத்தில இருக்கா, அவளுக்கு இதெல்லாம் டிராமானு தெரியாது….தெரிஞ்சா உங்க பெரியம்மா கிட்ட சொல்லிடுவா….ஸோ அவளை கொஞ்ச நாளைக்கு சமாளிங்க…. உங்களை கட்டிகிட்டு வர போற பொண்ணு பாவம் ….”

“அவளா…. அவ ஒரு ஊரையே சமாளிப்பா மாமா…. பார்க்க தானே போறீங்க….”

“ஓ! உங்களை சமாளிக்கிறது வைச்சு சொல்றீங்க….” என்று அவனை வாரினார்.

“மாமா, நீங்க என் பக்கம், இப்படி எல்லாம் பேசக்கூடாது….”

“யோவ் யோவ் மச்சான், என்கிட்ட இப்படி எல்லாம் கொஞ்ச கூடாது,
கொஞ்ச நாளைக்கு நான் உங்க மேல கோவமா இருக்கணும்…. இல்லைனா உங்க அக்காவை சமாளிக்க முடியாது. போடுற வேஷத்தை ஒழுங்கா போடும்மையா….”

“ஓகே ஓகே மாமா டன்!”

வெளியே வந்த இருவரும், முகத்தில் உணர்வே இல்லாமல் இருந்தனர். சிவகுமார், விஜியிடம்,

“யார் எப்படி இருந்தாலும், நடந்துகிட்டாலும், நாம அக்கா மாமாங்கிற கடமையை ஒழுங்கா செஞ்சுடுவோம். நமக்குனு ஒரு மரியாதை இருக்குல்ல….” என்றான் சமாதானம் ஆகி விட்டேன் என்பதை காட்டிகொள்வது போல்.
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை” என்றார் ஜெயந்தி.

நடிப்பே என்றாலும் அனைவர் முன்பும் திட்டியதால், அனைவர் முன்பும் “ஸாரி டா நந்து குட்டி” என்றான் கேபி மனதார.

விஜியிடமும், “ஸாரி கா” என் சொல்ல,

“பேசாத டா என்கிட்ட நீ….” என்று கோபப்பட்டாள் அவள். கோபம் மட்டுமின்றி, அவன் மீது இருந்த அதீத பாசத்தில அழுகையும் சேர்ந்து கொண்டது அவளுக்கு, “உன்னை விட நல்ல மாப்பிளைக்கு நான் எங்க டா போவேன்?”

“நான் கொண்டு வருவேன் கா அவளுக்கு சூப்பர் மாப்பிள்ளை!” என்று அவனும் அக்காவோடு ஒரு பாச போராட்டம் நடத்தி, சமாதானம் செய்து கொண்டான்.

இனி அம்மு வரும் போது தான் மீண்டும் பாசப்போராட்டம் துவங்கும்! சமாளிப்பானா கேபி இதே போல் அப்பொழுதும்….?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!