20. விஷ்வ மித்ரன்

5
(3)

 விஷ்வ மித்ரன் 

 

💙 அத்தியாயம் 20

 

‘சிவகுமார் பேலஸ்’ என்று பொறிக்கப்பட்ட பொன்னெழுத்துக்கள் சூரிய ஒளியின் மாயாஜாலத்தில் பளபளத்துக் கொண்டிருக்க, பூவலங்காரங்களும் தோரணங்களுமாக கண்ணைக் கவர்ந்தது விஷ்வாவின் வீடு!

 

பேன்டும் சந்தன நிற சர்ட்டும் அணிந்து, சைட் சொட் வெட்டிய முடியுடன் பார்க்க அழகாக இருந்தான் விஷ்வா. மிக நெருங்கிய உறவுகள் ஒரு சிலரை மாத்திரமே நிச்சயதார்த்தத்திற்கு அழைத்திருக்க, மற்ற அனைவரையும் கல்யாணத்துக்கு அழைப்பதாக சிவகுமாரின் முடிவு.

 

சிவகுமாருக்கு அருகில் நின்று தனது அருமை மந்தன் விஷ்வாவின் மனைவிக்காக ஆவல் மேலிட எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் நீலவேணி.

 

“டேய் நீ என்ன தடுமாறிட்டு இருக்க? உள்ள போய் மாப்பிள்ளை மாதிரி இரு” என மகனுக்கு அதட்டல் போட்டார் தந்தை.

 

“மித்து இன்னும் வர்லப்பா. அவன் வந்ததுமே உள்ள போயிடுறேன்” என்றவனின் பார்வை வெளியில் பதிந்தது.

 

” எத்தனை நாளைக்குத்தான் மித்து பெயரை வெச்சு நடிப்ப? என் மருமகளை பார்க்கத்தான் வெயிட் பண்றேன்னு சொன்னா குறைஞ்சிடவா போற” நக்கல் வழிந்தது சிவகுமாரின் குரலில்.

 

“க்கும்! அவ பெரிய மகாராணி பாருங்க. அவளுக்காக நான் வெயிட் பண்ணுறேனாம். நீங்க தான் அவள மெச்சிக்கணும்” என்று விஷ்வா நொடித்துக் கொள்ள, மித்ரனின் கார் உள்ளே நுழைந்தது.

 

கார் கதவைத் திறந்து வெளிவந்தான் மித்ரன். அவனுமே சந்தன நிற சர்ட்டில் அசத்த, அவன் திறந்து விட்ட பின் கதவிலிருந்து இறங்கினாள் வைஷு.

 

சந்தன நிற லெஹெங்கா அணிந்து, கார் கூந்தலை தோளின் முன்னே வழிய விட்டு சிறிதான ஒப்பனையுடன் இமைகள் படபடக்க நின்றவளைக் கண்டு நீலவேணியும் சிவ குமாரும் உள்ளம் நிறைய புன்னகை பூத்தனர் என்றால் தேவதையவள் தரிசனத்தில் கண்கள் இமைக்க கூட மறந்து அவளை பார்த்திருக்கலானான் வைஷுவின் மணவாளன்.

 

“மாப்ள!” எனும் மித்துவின் அழைப்பில் சிந்தை கலைந்து “மித்து” என இதழ் பிரித்துச் சிரித்தவாறே அவனை அணைத்து விடுவித்தான் விஷ்வா.

 

ஒரே வர்ண காஸ்டியூமில் ஒரே உயரத்தில் தெரிந்த இவர்கள் இருவரும் இன்றுமே அனைவரையும் ஈர்த்துக் கொண்டனர்.

 

 “வாங்க மாப்பிள்ளை. ஹரி வைஷு மா வாங்க” சிவகுமார் வரவேற்க, மூவரும் உள்ளே நுழைந்தனர்.

 

“நீ தான் வைஷுவா? ரொம்ப அழகா இருக்க டா” பாசம் ததும்பும் விழிகளுடன் தன்னைக் கைப்பிடித்தவரைத் திரும்பி நோக்கினாள் வைஷு. விஷ்வாவின் சாயலில் நின்றிருந்த பெண்மணியைக் கண்டவனுக்கு அது யார் என்று புரிந்துவிட “ஆமா அத்தை நான் தான் வைஷு” கள்ளங்கபடமின்றி முத்துக்கள் தெரிய புன்முறுவல் கோட்டினாள்.

 

“அக்ஷு எங்கே?” என்று அவள் கேட்க, “ரெடியாகிட்டு இருக்காம்மா. நான் போய் கூட்டிட்டு வரேன்” என்று விட்டு நகர்ந்தார்.

 

மித்ரனுடன் பேசிக் கொண்டிருந்த விஷ்வாவை நன்றாகப் பார்த்தாள் அவள். பேன்ட் பாக்கெட்டினுள் ஒரு கையை விட்டு, மறு கையால் முடியை ஸ்டைலாக கோதியவனின் கம்பீரமும் அழகும் அவளை தன்னிலை மறக்க வைத்தது.

 

“ப்பாஹ் அழகன் தான் டா நீ. என் செல்ல ராட்சசா” என கொஞ்சிக் கொள்ள, “இப்போல்லாம் ரொம்பத் தான் அவனை பார்க்குறோம். அவனை பத்தி நினைக்கிறோம்… ” என்று ஒரு மனம் சொல்ல,

 

“அவன் என் புருஷன்! அப்படித் தான் பார்ப்பேன்” என்றாள் வைஷு. 

 

“ஓஓ புருஷனாமே?சரிம்மா நீ நடத்து” என்று விட்டு மறைந்தது மனசாட்சி.

 

தன்னை யாரோ பார்ப்பது போல் உள்ளுணர்வு உணர்த்த, பின்னால் திரும்பிய விஷ்வா வைஷ்ணவியின் பார்வை கண்டு சிரித்துக் கொண்டே மித்ரன் அறியாமல் உதடு குவித்து ஊதினான். முட்டைக் கண்களை விரித்துத் திகைப்புடன் மறு புறம் திரும்பிக் கொண்டாள் பாவையவள்.

 

“மேடம் பயந்துட்டாங்க போல. இனிமேல் இதை வச்சே உன்னை ஆஃப் பண்ணிடுறேன் வாயாடி” என மனதினுள் நினைத்தான் விஷ்வா.

 

மித்ரன் வைஷுவை “பாப்பா” என்று அழைக்க அவளுக்கு செல்லவும் வேண்டும். சென்றால் விஷ்வா ஏதாவது ஏடாகூடமாக பண்ணி விடுவானோ என்ற பயம் ஒரு புறம். வேறு வழியின்றி அண்ணனின் அருகில் நின்றவள் விஷ்வாவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

 

“பாப்பா இவன் பண்ணுனது நியாயமானன்னு நீயே கேளு” என பாவமாக சொன்ன மித்ரனிடம் “என்ன நியாயம்?” என்று புரியாமல் கேட்டாள் அவள்.

 

“நாம உன்னை கூட்டிட்டு வந்துட்டோம்ல. ஆனால் இன்னும் அம்முலுவ கண்ணுலையே காட்ட மாட்றாங்க” என உதடு பிதுக்கி சிறுவன் போல் சொன்னான் அருள் மித்ரன்.

 

“இப்போ காட்டினா உனக்கு இருக்கிற லவ்வுக்கு அவளை கண்ணாலே முழுங்கிடுவேன்னு பயப்படுறோம் மாப்பிள்ளை. கொஞ்சம் பொறு வருவாள்” என்ற விஷ்வாவை முறைத்தனர் அண்ணனும் தங்கையும்.

 

மித்துவின் விழிகள் தன்னவளைத் தேடி அலைபாய, வைஷு தன்னைப் பார்த்த சமயத்தைப் பயன்படுத்தி கண் சிமிட்டினான் அவன். அவளோ கடுப்புடன் சுட்டு விரலால் கழுத்தை வெட்டுவது போல் செய்கை செய்ய, விஷ்வாவின் நமட்டுச் சிரிப்புக்கு காரணம் அறியாமல் பார்த்தாள்.

 

மித்ரனின் முறைப்பைக் கண்டு அவன் தனது செயலைக் கண்டு விட்டான் என்பது புரிய இளித்து வைத்தவள் “இருடா உனக்கு இருக்கு ஒரு நாளைக்கு. அந்த கண்ணையும் அடிக்கடி குவிக்குற உதட்டுக்கும் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்” என கருவிக் கொண்டாள் வைஷ்ணவி.

 

அவ்வேளையில் அதே சந்தன நிற லெஹெங்காவில் பொம்மை போல் இமை தாழ்த்தி நடந்து வந்தாள் அக்ஷரா. அவளின் அழகிலும் கன்னச் சிவப்பிலும் ரசனை பொங்க அவளைப் பார்த்தான் அருள்.

 

ஹரிஷும் சிவக்குமார் தம்பதியும் தட்டை மாற்றிக் கொள்ள, நிச்சயதார்த்த ஓலையும் படிக்கப்பட்டது. இன்னும் இருபது நாட்களில் கல்யாணம் என்று முடிவாக, அக்ஷராவும் மித்துவும் காதலுடன் பார்வை பரிமாறிக் கொள்ள, மற்ற ஜோடியோ ஏதோ ஒரு உணர்வுடன் பார்த்துக் கொண்டனர்.

 

விஷ்வா பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்து மித்ரனிடம் கொடுக்க, அதே போல் மித்ரனும் பாக்ஸை அவனிடம் நீட்டினான். இருவரும் சிறு அதிர்வுடன் பார்த்து விட்டு, பின் சிரித்துக் கொண்டனர்.

 

விஷ்வா “மித்து ஃபர்ஸ்ட் நீ போட்டு விடு” என்க, தலையசைப்புடன் அப்பெட்டியைத் திறந்து பார்த்தான் அவன்.

 

ஏ எழுத்துக்கள் இரண்டு இதய வடிவினுள் ஒன்றாக கோர்க்கப்பட்ட இரண்டு ரிங் இருந்தன.

 

அக்ஷுவும், மித்ரனும் அதை எடுத்துக் கொள்ள, அக்ஷரா மித்துவிடம் கையை நீட்டினாள். அவளது மென்பஞ்சு விரலில் மோதிரத்தை அணிவித்து விட்டான் அவன். அவளும் தன்னவனுக்கு அணிவித்து விட்டாள்.

 

“விஷு! இட்ஸ் யூவர் டர்ன்” என்று மித்ரன் கூறிட, விஷ்வா பாக்ஸை ஓப்பன் பண்ணான்.

 

இரண்டு வி எழுத்துக்கள் இணைந்திருக்க அவற்றுக்கு வெளியே புறாவின் சிறகு போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. விஷ்வா வைஷ்ணவியைப் பார்க்க, அவள் தன் கையை அவனிடம் ஒப்படைத்தாள். அவள் விழிகளை ஊடுறுவிக் கொண்டே விரலில் போட்டு விட்டான் விஷ்வஜித். அவனின் ஸ்பரிசம் இவளை சிலிர்க்கத்தான் வைத்தது.

 

விஷ்வாவின் விரலிலும் அவள் மோதிரத்தை அணிவித்து விட்டாள். அனைவரும் கைதட்டி வாழ்த்தினர்.

 

“எப்போடா ரிங் வாங்குனீங்க எங்களுக்கே தெரியாம? இரண்டும் ஜில்லா கேடிங்க தான்” என்று சிவகுமார் செல்லமாக முறைக்க, “அவன் வாங்கினது எனக்கே தெரியலப்பா” என்ற மித்ரன் விஷ்வாவைப் பார்க்க, “எனக்கும் தான். இது தெரியாம எங்களை மூக்கு முட்ட முறைக்குறீங்களே டாட்! இது உங்களுக்கே அடுக்குமா?” என மித்ரன் தோளில் கை வைத்தான்.

 

“காந்தம் இரண்டும் ஒட்டிக்கிச்சு. வைஷு வா நாமளும் ஒன்னாயிடலாம்” என வைஷ்ணவி தோளில் கை போட்டாள் அக்ஷு.

 

“என்னடி இது? மரியாதை இல்லாம பேசுற. அவ உன் அண்ணி ஞாபகம் வச்சுக்க” கண்டிப்புடன் சொன்னார் நீலவேணி.

 

“அது எங்களுக்கும் தெரியும்” வெடுக்கென்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்ட அக்ஷராவைப் பார்த்து விஷ்வா மித்திரன் இருவருமே முறைத்தனர்.

 

“அத்தைம்மா! அக்ஷுக்கும் என் வயசு தான். அண்ணின்னு சொல்றது கொஞ்சம் விலகுற மாதிரி தோணுது. பெயர் சொல்லி கூப்பிட்டா பிரண்ட்ஸ் மாதிரி நெருக்கமா ஃபீல் பண்ணுவோம்ல? அதனால அப்படியே கூப்பிட்டுக்குறோம் ப்ளீஸ்” என்று நீலவேணியிடம் கெஞ்சலுடன் வைஷு கேட்க, அவருக்கும் மறுக்க தோன்றாமல் “சரிடா உன் இஷ்டம்” என ஒப்புக் கொண்டார்.

 

“பார்த்தியா அக்ஷு மா. உனக்கு திட்டிட்டு மருமக சொன்னவுடனே தலையாட்டிட்டா உன் அம்மா. இப்போவே கட்சி மாறிட்டாங்களே” ஹரிஷ் அக்ஷுவிடம் வம்பிழுக்க, “ஆமாப்பா. நீங்க என் கட்சிக்கு வர மாட்டீங்களா என்ன?” என்று அவள் அவர் தோளில் தொங்க, “கண்டிப்பா வருவேன். நான் என் பட்டுக் குட்டி சைட் தான்” அவள் தலையை வருடிவிட்டார் ஹரிஷ்.

 

விஷ்வா “போதும் போதும் உங்க பாசமலர் படத்தை ஓட்டாதீங்க முடியல” என்று கலாய்க்க, “உனக்கு பொறாமை” என பழிப்பு காட்டினாள் தங்கை.

 

“இன்னும் டுவென்டி டேய்ஸ்ல உங்களுக்கு கல்யாணம். இன்னும் சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க. குட்டிமா நீ இன்னொரு வீட்டுக்கு போகப் போறவ” என்று சிவக்குமார் சொல்ல,

 

“அவ உங்க வீட்டுல எப்படி இருந்தாளோ அப்படித்தான் கல்யாணத்துக்கு பிறகும் இருக்கப் போறா. யாருக்காகவும் எதுக்காகவும் மாற வேண்டிய அவசியம் இல்லப்பா. அக்ஷு அவளா இருக்கனும் அது தான் எனக்கு பிடிக்கும்” என்றுரைத்த மித்ரனைக் காதல் பொங்கப் பார்த்தாள் அக்ஷரா.

 

“காதல கண்ணுல தேக்கி பார்ப்பாளாம். ஆனா வாய் திறந்து சொல்லவே மாட்டாளாம். அந்த அழுத்தக்காரன் விஷ்வாவோட தங்கச்சியாச்சே அதே அழுத்தம் இருக்க தான் செய்யும்” என முணு முணுத்தான் மித்ரன்.

 

பெரியவர்கள் அகன்று விட, இவர்கள் நால்வரும் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

 

“செல்பீ எடுக்கலாமா அண்ணி” என்று அக்ஷு கேட்க, “அதானே பார்த்தேன் இன்னும் அந்த ஜிலேபியை எடுக்கலையேன்னு” என மித்ரன் வாயில் கை வைத்துச் சிரிக்க,

 

“மேக்கப் போட்டுட்டு வெள்ளை பன்னி மாதிரி விதவிதமா குரங்கு போல போஸ் கொடுக்கலனா இவளால இருக்கவே முடியாதே. எப்படித்தான் ஃபோன்ல அதே முகரைய பார்க்குறாளோ” என சல்லிக் காசுகள் சிதற நகைத்தான் விஷ்வா.

 

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? செல்ஃபி எடுக்குறதுல இருக்குற கிக்கே வேற. உங்க மூஞ்சுகளுக்கு அது செட் ஆகாது” பதிலுக்கு காலை வாரினாள் அக்ஷரா.

 

“அடிங்கு! என்னையே கழுதைன்னு சொல்லுறியா” என அவள் காதைத் திருகினான் விஷு.

 

“அப்பப்பா ஒரு செல்பீ எடுன்னு சொன்னதுக்கு இவ்வளவு அலப்பறையா” என தலை சிலப்பிக் கொண்ட வைஷு அக்ஷராவுடன் சேர்ந்து செல்பி எடுக்க, விஷ்வா பழிப்புக் காட்டியதில் அக்ஷரா அவனை முறைத்தது படமாகியது.

 

“அடியே அக்ஷு! ஒழுங்கா இரு டி” என்று வைஷ்ணவி கத்த, “நான் என்னடி பண்ணினேன்? எல்லாம் இந்த விஷு எருமையால தான்” என்று காலைத் தரையில் உதைத்தபடி சிணுங்கினாள் அக்ஷு.

 

“சரி ஒன்னு பண்ணு. நாம எதுவும் பண்ணல பட் அதுக்கு பதிலா எங்க ரெண்டு பேரையும் சூப்பரா போட்டோ எடுக்கணும்” என டீல் பேசினான் மித்து.

 

“ஃபோட்டோ தானே? கலக்கிடலாம்” என்றவள் அக்ஷுவோடு செல்பி எடுத்தாள்.

 

“அக்ஷு இப்போ எடு” என்றபடி விஷ்வாவும் மித்ரனும் ஒரு கையை மற்றவர் தொளில் வைத்து மறு கையை பேன்ட் போக்கெட்டில் விட்டவாறு போஸ் கொடுத்தனர்.

 

“ஓகே எடுக்கப் போறேன்” என்ற அக்ஷரா படபடவென்று கிளிக்கினாள்.

 

“எங்கே காட்டு பார்க்கலாம்” என விஷ்வா ஆர்வமாக ஓடி வர, “பார்த்தியா வைஷு பொண்ணுங்கள விட இவனுங்களுக்குத் தான் போட்டோ பைத்தியம்” என அவள் வைஷுவின் காதில் கிசுகிசுக்க, அவளும் தலையாட்டினாள்.

 

“அக்ஷு போட்டோ காட்டு” என்று மித்திரனும் எட்டிப் பார்க்க, அவளின் கள்ளச் சிரிப்பைக் கண்ணுற்ற விஷ்வாவுக்கு மூளையில் மணியடிக்க போனைப் பறித்தெடுத்துப் பார்த்தான்.

 

அதில் அவளது செல்ஃபி மாத்திரமே இருந்தது.

 

அவன் முறைக்க, “ஈஈஈ…!! உங்கள போட்டோ எடுக்காம நான் என்னயே செல்பி எடுத்துக்கிட்டேன் ஹி ஹி” என கேவலமாக பல்லைக் காட்டினாள் அக்ஷரா.

 

கொலைவெறியுடன் அவளை துரத்திச் சென்றான் விஷு. “அண்ணா வேண்டாம் விட்று” என்று கெஞ்சிக் கொண்டே அவள் ஓட, “மரியாதையா நில்லு. உன்னை விடவே மாட்டேன்டி” விஷ்வா அவளை துரத்திப் பிடித்தான்.

 

“அருள் உன் பிரண்டு கிட்ட விடச் சொல்லுடா. எனக்காக இதக்கூட பண்ண மாட்டியா” என அக்ஷரா மித்ரனிடம் பாவமாகக் கேட்க, “உனக்காக நான் சொல்ல மாட்டேனா?” என்றிட விகசித்த முகத்துடன் தன்னை நோக்கியவளைப் பார்த்துக் கொண்டு “விஷு! என் பங்கையும் சேர்த்து டபுளா கொடுத்துடு” என்றான் மித்து.

 

“டேய்ய்ய்” என பல்லைக் கடித்த அக்ஷராவின் தலையில் நங் நங்கென்று கொட்டினான் அண்ணன்.

 

அவனிடமிருந்து ஓடி வந்து தன்னவனுக்கு அடித்தாள், “காப்பாற்றுனு சொன்னா கோர்த்தா விடுற?” என்று.

 

“கோச்சுக்காத அம்முலு” மித்ரன் அவள் நாடி பிடித்துக் கெஞ்ச, “இப்படி அந்தர் பல்டி அடிச்சுட்டியே மாப்ள” என கிண்டலடித்தான் விஷ்வா.

 

இவர்களது கூத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. யாரென்று தெரியாத உறவுகளுடன் ஒன்றாக ஆசிரமத்தில் உடனிருந்தாலும் சிறு புன்னகை ஒரு தலையாட்டலுடன் கடந்து விடுவர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணவளுக்கு

இப்படி வம்பிழுப்பது, கொஞ்சுவது, கெஞ்சுவது, அண்ணன் தங்கைகளின் பாசப்போராட்டம் அனைத்தும் புதிதாகவும் மனதை நெகிழ்விப்பதாகவும் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் தானும் ஒருத்தியாகப் போவதை நினைத்து கண்கலங்கி கடவுளுக்கு நன்றி தெரிவித்தாள் அவள்.

 

அவள் காதருகில் “நவி” என்னும் குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினாள் வைஷு.

 

 

“என்னையா கூப்பிட்ட?” என்றவளுக்கோ அவ்வழைப்பு உயிர் வரை தீண்டிச் சென்றது.

 

“ஆமா டி! ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவன் கேட்க, “யாஹ்” என மெலிதாகச் சிரித்தாள்.

 

“வீட்டை சுத்தி பார்க்கலாமா?” என்று விஷ்வா அழைக்க, “பார்க்கலாமே” அவனுடன் சென்றாள் வைஷ்ணவி.

 

………………

 

அக்ஷராவின் அறையில் கட்டிலில் அருகருகே அமர்ந்திருந்தனர் அக்ஷராவும், மித்ரனும்.

 

அக்ஷு அவன் தோளில் தலை வைத்து “அருள்! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா. நமக்கு நிச்சயம் பண்ணது இன்னுமே கனவு மாதிரி தோணுது. நீ எனக்கு கிடைப்பேனு நம்புனது வீண் போகல “மகிழ்வுடன் கூறினாள்.

 

“எனக்கும் தான்டி. உன் கூட இப்படி இருப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. நீ வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்குவ என்று கூட பயந்தேன்” என்றவனின் கூற்றில் நிமிர்ந்து பார்த்தாள்.

 

“உண்மை இது தான் அம்முலு. ஏன்னா நம்மளோட காதல் சொல்லாத காதல். அதுக்கு உயிர்ப்பு நூறு வீதம் இருக்கும்னு நிச்சயம் நம்ப முடியாது. ஆனாலும் நாம ஒன்னு சேர்ந்திருக்கோம்னா அதுக்கு காரணம் நம்ம காதல் தான்” என்றான் மித்து.

 

“முன்னெல்லாம் என்ன வேணா நினைச்சு இருக்கலாம். இனிமேல் நீ என்னை விட்டுப் போக நினைக்கவே கூடாது. என் கூடவே தான் இருக்கணும்” பிடிவாதமான தொனியில் சொன்னாள் அக்ஷு.

 

அவளைக் குறும்பு கொப்பளிக்க பார்த்து “எனக்கு ஓகே தான். ஆனா உன் வீட்ல தான் ஏதாச்சும் சொல்லுவாங்க” என்றவளைப் புரியாமல் நோக்கினாள் அவள்.

 

“அவங்க என்ன சொல்லணும்?” என கேட்க, “நீ தான் உன் கூடவே இருக்க சொன்னியே. இப்போ ஓகேனாலும் பெட்டி படுக்கையோட ஓடி வந்துடுவேன்” என கண்ணடிக்க,

 

“அடப்பாதகா! அவ்ளோ தூரம் யோசிச்சிட்டியா நீ? ஆசையப் பாரு” என்று அவன் வாயிலேயே அடி போட்டாள் பெண்.

 

“வலிக்குதுடி ராட்சசி” அவளுக்கு அடிக்க கையோங்க எழுந்து ஓடினாள்.

 

“ஏய் ஓடாத. அப்புறம் சேதாரம் பலமா இருக்கும்” என்று கத்திக் கொண்டே அவள் கைப்பிடித்து இழுத்தான்.

 

அவனது திண்ணிய மார்பில் மோதி நின்றவளின் கைகள் அவன் தோளில் பதிந்தன. தன் வாள் விழிகளால் அவளது கயல் விழிகளை ஆழ்ந்து பார்த்தான் மன்னவன் அவனும். அவளோ அவன் பார்வையில் சிவந்து போய் பார்வையைத் தாழ்த்திட, அவளின் இமைகளில் இதழ் படித்தான் அவன்.

 

“நீ சொன்ன மாதிரி எப்போவும் உன் கூடவே இருப்பேன். உன்னை இனிமேல் தவிக்க விட மாட்டேன் டி. ஐ லவ் யூ அம்முலு” காதல் வழிய காதலியிடம் மொழிந்தான் அவளின் இதயக் காத(வ)லன்.

 

அவனது வார்த்தைகளில் உள்ளம் நிறைய என்றவள் “ஐ” என்று விட்டாள்.

 

“என்ன சொன்ன?” என அவன் ஆர்வமாகப் பார்க்க, “ஐ…” மெல்லிய குரலில் அவளிடம் வெளிப்பட்டது.

 

“ஐ….??” எதிர்பார்ப்பு சூழக் கேட்டான் அருள்.

 

“ஐ லைக் யூ” ரகசியம் கொஞ்சும் குரலில் சொன்னாள் அவள்.

 

கன்னத்தில் செல்லமாகத் தட்டி “போடி கள்ளி” என முறைத்தான் மித்து.

 

அவனின் முகம் போன போக்கைக் கண்டு கிண்கினி நாதமாய்ச் சிரித்தாள் அக்ஷரா.

 

“அவ்ளோ சீக்கிரம் உன் கிட்ட ஐ லவ் யூ சொல்ல மாட்டேன்” என்று கண் சிமிட்டி விட்டு ‘கூடிய சீக்கிரமே உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லுவேன் டா. அப்போ நீ முகம் முழுக்க சந்தோஷமா நிப்பேல. அந்த நொடி உன்னைக் கட்டிப் புடிச்சு ஐ லவ் யூ அருள்னு கத்தி சொல்லுவேன் மாமு’ என மனதினுள் கூறிக் கொண்டாள்.

 

அவள் ‘ஐ லவ் யூ’ சொல்லும் தருணம் கொடூரமாகவும் அவளது உயிரையே ஆட்டிப் படைத்து விடும் என்றும் தெரிந்து இருந்தால் இப்போதே சொல்லி இருப்பாளோ?

 

“நீ சொல்லலனா என்ன? நான் சொல்ல வைப்பேன்” என்று சொன்ன மித்ரனிடம், “ஏன் அருள்? அப்படி சொன்னாதான் லவ் பண்றேன்னு அர்த்தமா?” எனக் கேட்டாள் அக்ஷரா.

 

“ச்சே ச்சே இல்ல! இப்போ என் கூட நிற்கிற இந்த செயல். உன் கண்ணு என்ன பார்க்குற பார்வை. அருள்னு நீ சொல்லும் போது அதுல இருக்கிற அன்பு. இதெல்லாம் உன் காதலை எனக்குத் தெரிவிக்குது. அந்த மூணு வார்த்தை தான் லவ்வா இருக்கணும்னு சொல்லல. பட் அதுல ஒரு ஸ்பெஷல் கிக் இருக்கும். அதனால தான் இவ்ளோ கெஞ்சுறேன்”

 

“நீ கெஞ்சவும் வேணாம் நான் சொல்லவும் மாட்டேன்”

 

“அதெல்லாம் என் ஸ்டைல் உன் வாயில இருந்து வர வைக்குறேன்”

 

“இவரு ஸ்டைல சிவாஜி. ஹூம்ம்” என உதட்டைச் சுழிக்க, அவள் உதட்டை இரு விரல்களால் பிடித்தான்.

 

விஷமமாகச் சிரித்து அவன் விரலைக் கடித்து வைத்தாள் மித்ரனின் செல்ல ராட்சசி.

 

“ஏன் டி பசிக்குதுன்னா வெட்கம் ரோஷத்தை விட்டுட்டு எல்லார் முன்னாடியும் கேட்டு சாப்பிட்டு இருக்கலாம்ல. அத விட்டுட்டு உன் பசிக்கு என்னை இரையாக்க பார்க்குறே” விரலைத் தடவிக் கொண்டான் மித்ரன்.

 

“பாவமேனு மெல்ல கடிச்சு விட்டேன். உன்னை வலிக்க கடிச்சுருக்கனும் டோய்” என்றவளைப் பார்த்து,

 

“விஷு! உன் தங்கச்சி ராட்சசினு தான் சொன்னே. ஆனா மனுஷங்களை சாப்பிடற பிசாசுன்னு சொல்லாம போயிட்டியே டா” என்று அலறினான் அக்ஷுவின் மித்ரன்.

 

………………..

வைஷுவிற்கு விஷ்வா தனது வீட்டைச் சுற்றிக் காட்ட, துள்ளிக் குதித்தவாறு அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டு வந்தாள் அவள்.

 

“ஸ்விம்மிங் பூல் இல்லையா விஷு” என்று அவள் ஆசையோடு விழிகளால் துலாவ, “இல்ல வைஷு. யேன் கேட்குற” மறு கேள்வி கேட்டவனுக்கோ அவளது கண்களே விருப்பத்தைத் தெரிவித்தன.

 

“எனக்கு ஸ்விம்மிங் பூல்னா ரொம்ப பிடிக்கும். போட்டோஸ்ல தான் கண்டிருக்கேன். நேர்ல பார்க்க அவ்ளோ ஆசை” என்றாள், கண்கள் மின்ன.

 

ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளே இப்படித்தானே. பற்பல ஆசைகள் வானளவு இருந்தாலும் அவை யாவும் நிறைவேறாத ஆசைகளே! 

 

“என்ன ஒரு நாள் கூட்டிட்டு போவியா” அப்பா சாக்லேட் என்று தந்தையின் விரல் பிடித்து ஆசையும் ஏக்கமுமாய்க் கேட்கும் சிறுமியாய்த் தான் அவள் தோன்றினாள்.

 

“உனக்கு இத மித்து கிட்ட சொல்லி இருக்கலாமே. அவன் கூட்டிட்டு போயிருப்பான்ல” என விஷ்வா வினவவும் “அண்ணா கிட்ட சொல்லனும்னு தோணல. உங்க வீட்ட பார்க்கும் போது தான் ஞாபகம் வந்துச்சு” என்று கூறினாள் வைஷு.

 

“நீ என்னை இன்னும் எனிமியா பார்க்கல தானே?” என்றவனைப் புரியாமல் பார்த்து வைத்தவள் “எனிமி வர்ஷன் முடிஞ்சுருச்சு! இப்போ ப்ரெண்ட்ஸ் வர்ஷன்” எனப் பதில் கொடுத்தாள் வைஷு.

 

“அப்படினா உன் ஆசைகளை என் கிட்ட சேர் பண்ணிக்கலாம்ல” தன் மனதிலுள்ளதைக் கொட்டித் தீர்த்தால் அவள் மனப்பாரம் சிறிதாவது தீரும் என எண்ணினான்.

 

“கண்டிப்பா விஷு. பட் இன்னிக்கு வேணாம். இன்னிக்கு நம்ம நிச்சயதார்த்த நாள்! இப்போ நான் எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறேன். ஆசிரமத்து லைப் பற்றி சொல்லும் போது நான் கண்ணீர் டேங்க திறந்து விட்டேனா அதுல மூழ்கி நீங்க தான் தட்டுத் தடுமாற வேண்டி வரும். சோ இன்னொரு நாள் எனக்குத் தோணும் போது சொல்லுவேன்” தலையை உருட்டி உருட்டிச் சொன்னாள் வைஷ்ணவி.

 

விஷ்வா “சரி டி வாயாடி” என்க, “நான் எவ்ளோ அமைதியான பொண்ணுனு தெரியுமா? அதிர்ந்து கூட பேசத் தெரியாது. என்ன போயி வாயாடினு சொல்லுறியே இது உங்களுக்கே தகுமா?” இடுப்பில் கை குற்றி பாவனையாகக் கேட்டாள் வைஷு.

 

“இப்படி பொய்யா சொல்லுறதுக்கு உன் வாயிலயே ஒன்னு போட்டுக்க” என முறைத்தவன் “யாரு நீ அமைதியான பொண்ணா? அதுவும் அதிர்ந்து கூடப் பேசத் தெரியாதாமே. நீ பேசுற பேச்சுக்கு இந்த பூமியே அதிர்ந்து போய் நின்றாலும் நிற்கும்” என்று நமட்டுச் சிரிப்பை சிந்தினான் காளை.

 

“உங்க கிட்ட ஒன்னு கேட்கவா? உண்மைய சொல்லனும்” என பீடிகையுடன் ஆரம்பித்தவளைப் புருவம் சுருக்கிப் பார்க்கலானான் அவனும்.

 

“சரி கேளு! அதுக்கு பிறகு உண்மைய சொல்லுறதா இல்ல பொய்யா புளுகுறதானு யோசிக்குறேன்” 

 

“நீங்க என்னை அண்ணா அண்ணிக்காக தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சீங்களா விஷ்வா?” 

 

“ஆமா இதுல என்ன சந்தேகம்? மித்து அக்ஷுக்காக தான் உன்ன கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னேன்” என்க அவள் கண்கள் சட்டென கலங்கிப் போயின.

 

அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையா? அப்போது அவன் பேச்சிலும் பார்வையிலும் தெரியும் அன்பு? ஸ்தம்பித்த நிலையில் நின்றவளை உலுக்கி “வாட் ஹேப்பன்” என்று அவன் கேட்க,

 

“சொல்லுற எல்லாம் சொல்லிட்டு வாத்து கோழினு லண்டன் லோகநாதன் மாதிரி வளவளக்க வேண்டியது” என அவனை வறுத்தெடுத்தாள் வைஷு‌

 

“ஹேய் ஹேய் நோட்டி கேர்ள்! ஸ்டாப் ஸ்டாப். என்ன திட்டாதம்மா. நீ உள்ளுக்குள்ள திட்டும் போதும் மனசெல்லாம் சுள் சுள்னு வலிக்குது” என்று சொன்னான் அவன்.

 

“சுள் சுள்னு வலிக்க கூடிதுயா. உன் மனசு லொள் லொள்னு குரைக்கனும்” மனதினுள் கூறுவதாக நினைத்து வெளிப்படையாக சொல்லி விட்டாள் அவள்.

 

“அடியே அவசரத்துக்கு பொறந்தவளே! நான் சொல்ல வந்தத முழுசா கேளு. அப்பறம் திட்டுறதா ஹக் பண்ணுறதானு யோசி” 

 

“சொல்லுங்க சொல்லுங்க. உங்களை திட்டுறதா வெட்டுறதானு அப்பறம் நான் டிசைட் பண்ணுறேன்” கடுப்பானாள்.

 

“நான் மித்து அக்ஷுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்குறதா சொன்னது உண்மை! அந்த நிமிஷம் என் மனசுல உன்ன பற்றி எந்த நினைப்பும் இல்ல. பட் இப்போ முன்ன விட எனக்குள்ள ஏதோ ஒரு தாக்கத்தை நீ ஏற்படுத்துற.

 

அடிக்கடி உன் ஞாபகம் வருது. தனியா சிரிச்சுக்கிறேன். நவி’னு உன்ன மனசுக்குள்ள கொஞ்சிக்கிறேன். இது ஏன்னு எனக்குத் தெரில. அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கவும் நான் ஆசைப்படல. ஆனா இதெல்லாம் ரொம்ப புடிச்சிருக்கு. உன் கூட இருக்குற இந்த நிமிஷம் அத விட பிடிக்குது” 

 

அவன் பேசப் பேச சிறகின்றி வானில் பறக்கலானாள் விஷ்வாவின் நவி. “இப்போ உன் முடிவு என்ன? என்ன திட்ட போறியா இல்ல வெட்ட போறியா” விசமம் கூத்தாடியது அவன் பேச்சினில்!

 

“இதை முன்னாடியே சொல்லாம இருந்ததுக்காக உங்களை அடிக்கப் போறேன்” அவன் தோளில் பட் பட்டென்று அடித்தாள், செல்லமாக.

 

“பரவால்ல! தாராளமா அடிச்சுக்கோ. அடிக்குற கை தானே அணைக்கும்” என்று புருவம் உயர்த்தி அழகாய்ச் சிரித்தான் வேங்கை.

 

“நான் அடிப்பேனே தவிர அணைக்க மாட்டேன்” என பொய்யாக முகம் திருப்பினாள் மங்கை.

 

“ஆனா நான் அணைப்பேனே” என்றவன் எதிர்பாராத விதமாக அவளை லேசாக அணைக்கவும் தான் செய்தான்.

 

ப்ரீஸ் மோடில் நின்றவளின் செவியோரம் “ஐ லைக் யூ நவி” என கிசுகிசுக்கும் குரலில் கூறி விட்டு தானாகவே விலகி நின்றான்.

 

அவனது அணைப்பு இதமாய்த் தாக்க, மெல்லிய சாரல் அவளைத் தீண்டிச் செல்ல, அதில் விஷ்வாவின் வாசனையும் கலந்திருப்பதாக உணர்ந்து அவளவனை இமை சிமிட்டவும் மறந்து போய் பார்த்தாள் விஷ்நவியாக மாறிய வைஷ்ணவிப் பெண்ணவள்.

நட்பு தொடரும்………!!

 

✒️ Shamla Fazly💞

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!