🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 21
தட்டில் காபி எடுத்துக் கொண்டு வந்து டீப்பாயில் வைத்து விட்டு கணவனை எழுப்பினாள் ஆலியா.
“நிதின் எழுந்திரு. நிதின்” அவன் தோளில் தட்ட, அவளது கையைப் பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டு சுகமாய் துயில் கொள்ளத் துவங்கினான் நிதின்.
அவன் உறங்குவது கண்டு கடுப்பில் “எழும்ப போறியா? இல்லை காபியை மூஞ்சில அபிஷேகம் பண்ணவா?” அவனை மேலும் உலுக்க,
“நிஜத்துல தான் காரப்பொடி மாதிரி இருக்கேனு பார்த்தா கனவுலயும் சொர்ணாக்கா போஸ் கொடுக்குறியே டி” கண்களைக் கசக்கிக் கொண்டு எழும்பி அமர்ந்தான் அவன்.
“எதே நான் சொர்ணாக்காவா?” முந்தானையை இடுப்பில் அள்ளிச் சொருகி கட்டிலில் பாய்ந்து கேட்க, கண்களை இறுக மூடித் திறந்தவனோ “நீ எப்படி இங்கே?” ஒன்றும் புரியாத தோரணையில் தான் கேட்டான்.
“நானும் அதைத் தான் நிதின் யோசிக்கிறேன். நைட்டு வீட்டுல தூங்கினேன். ஆனா எழுந்து பார்த்தா இங்கே இருக்கேன். நீ தான் என்னை தூக்கிட்டு வந்தியா?” முகத்தில் அனுதாபத்துடன் பார்த்தவளின் பற்களோ ஒன்றுடனொன்று மோதி நறநறத்துக் கொண்டன.
“நெல் மூட்டைய தூக்கவே அந்த பாடு படுவேன். உன்னை தூக்கினா நான் நாலஞ்சுக்கு மடிஞ்சு போயிருப்பேனே. நான் எப்படி உன்னை தூக்குறது?” நாடியில் விரல் தட்டி நாசா செல்லும் ஆராய்ச்சியாளனாக தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
“டேய் உன்னைஐஐஐ” தலையணையை எடுத்து அவனுக்கு அடித்தவள் ருத்ரகாளியாக அவதாரம் எடுத்திருந்தாள்.
“ஹேய் நோ! நான் மகாத்மா காந்தியின் தீவிர விசிறி. அகிம்சை வழிப் போராட்டத்தை விரும்புபவன். இப்படி அடிதடி வெட்டு குத்து எல்லாம் கூடாது” கையை நீட்டி தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டு கத்தினான்.
“இதை மட்டும் வாய் கிழிய பேசு. ஆனா ஒன்னும் தெரியாத மாதிரி நான் இங்கே எப்படி வந்தேனு கேளு” முறைத்துத் தள்ளினாள் ஆலியா.
அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், “அடியே என் குட்டி பட்டாசு! கழுத்துல தாலி, நெற்றில குங்குமம், அதுவும் உரிமையா வந்து என்னை பேசுற. நமக்கு கல்யாணம் ஆச்சுனு எனக்கு தெரியாதா என்ன?” என்று கேட்டான் புருவம் உயர்த்தி.
“அப்பறம் ஏன்டா நடிக்கிற? உலக மகா நடிகன்” அவன் மார்பில் அடிக்க, “காலையிலயே உன்னை கடுப்பேத்தி பார்க்கும் ஆசையில் தான்” கண்சிமிட்டியவனை முறைக்க முயன்று தோற்றுப் போனாள்.
இந்தக் குறும்பும், சேட்டைகளும், ஓயாத பேச்சும் அப்பாவித் தனமும் அல்லவா அவனில் தன்னைத் தொலைக்க வைத்தது? அது போலவே அவனில் சுயத்தைத் தொலைத்து நின்றாள் பெண்.
நேற்றிரவும் இது போலத் தானே அவனில் தொலைந்து போனோம் என்பதை நினைக்க வெட்கம் பீறிட்டது. அலங்காரங்கள் செய்கையில் ஏதோ ஒட்டாத தன்மையை உணர்ந்தவளுக்கு மாமியார் கணவனின் அறையில் விட்டுச் சென்றதில் நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது.
உள்ளே சென்று கதவை மூடியவளுக்கு நிதினைக் கண்டதும் பதற்றம் இருந்த தடயம் இல்லாமல் அனைத்தும் வெருண்டோடி விட அருகில் சென்று அமர்ந்தாள்.
“வெட்கப்பட்டுட்டு குனிஞ்ச தலை நிமிராம வருவனு நெனச்சேன். இப்படி வந்து உட்கார்ந்துட்ட?” சாதாரணமாகத் தான் வினாத் தொடுத்தான்.
“உன் கூட கொஞ்சம் பேசனும் நிதின்” பீடிகை போட்டவளைக் கண்டு அவனும் விளையாட்டைக் கை விட்டு இயல்பு நிலைக்கு மீண்டான்.
“நமக்கு சின்ன வயசுல இருந்தே பழக்கம் தான். ஆனா ருத்ரா மாமாவோட ப்ரெண்டு அப்படிங்கிற ரீதியில் உன்னை பார்த்தேன். அப்புறமா நாம ப்ரெண்ட்னு சொல்லுற அளவுக்கு நம்ம பழக்கம் மாறிடுச்சு. அப்போ எனக்கு உன் பேச்சு, சிரிப்பு எல்லாம் பிடிக்கும்” என்றவள் சற்று நிறுத்தி நொடிக்கு ஈரைந்து மூச்சுகளை விட்டு இடைவெளி வாங்கிக் கொண்டு தொடர்ந்தாள்.
“ருத்ரா மாமாவை எனக்கு பிடிக்கும். ஏதோ அதை காதலா நெனச்சுக்கிட்டேன். நீ என்னை விரும்புறதும் தெரிஞ்சுது. அப்போ மாமா அஞ்சுவை லவ் பண்ணுறது தெரிய வந்துச்சு. உடைஞ்சு போயிட்டேன். என்னால அதை சடனா ஏத்துக்க முடியல. ஆனால் உன்னோட நினைவு எனக்கு அப்போ ரொம்ப ஆறுதலா இருந்துச்சு நிதின்” தொண்டையை பலமாக செருமிக் கொண்டாள்.
“காதல் தோத்து போச்சுனா அதிலேயே விழுந்துட்டு அழுது புரண்டு இருக்க விடாம உன் எண்ணம் எதுக்குனு என் கிட்ட கேட்டுக்கிட்டேன். அப்போ என் மனசு முழுக்க நீ இருந்த! எஸ் எனக்கே தெரியாம உன்னை லவ் பண்ணுறதை புரிஞ்சுக்கிட்டேன். உன் கிட்ட அதை சொல்லவும் செஞ்சேன்.
ஆனா உன்னோட லவ்வரா அவ்ளோ பேசி பழக முடியல. ஏன்னா அதுக்குள்ள எங்கப்பா, அப்பறம் நீ மறுத்ததுனு எத்தனையோ பிரச்சினைகள்” வலது புருவத்தை கட்டை விரலால் நீவி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர பகீரத பிரயத்தனம் செய்தாள் ஆலியா.
“புரியுது ஆலி! அப்பறம் நடந்ததுக்கு எல்லாம் நான் தான் பொறுப்பு. என்ன இருந்தாலும் கல்யாணம் வேணானு நான் சொல்லிருக்க கூடாது. உன்னை நிறைய கஷ்டப்படுத்திட்டேன்” அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
“ப்ச் விடு நித்தி! இனி இதைப் பற்றி பேச கூடாதுனு தான் கடைசியா சொல்ல வரேன். என்னென்னமோ நடந்துருச்சு. எல்லாம் நன்மைக்கேனு விட்டுறலாம். நீ தாலி கட்டும் போதே எல்லாம் தூக்கி ஒரு பக்கம் வெச்சுட்டேன். அதை பேசி பேசி இருக்கிற நேரத்தை சண்டையோட கழிக்க நான் விரும்பல” நிதானமாக ஒவ்வொரு வார்த்தைகளும் வெளிவந்தன.
அவன் முகமோ சூரியனைக் கண்ட தாமரையாக மலர்ந்து விட, “அதுக்குனு சண்டை வராதுனு நினைக்க கூடாது. நிறைய சண்டை போடுவேன். தொட்டதுக்கெல்லாம் சண்டை, ரொம்ப பாசசிவ்னஸ், அடிதடி வரை போகும்” என்றவளை இடைமறித்து,
“சண்டை எவ்ளோ வேணா போடலாமே. உன்னை சமாதானப்படுத்துறதை தவிர வேறென்ன வேலை எனக்கு?” புன்னகை விரிய உரைத்தான் நிதின்.
“டபுள் ஓகே! அப்போ வா சண்டை போடலாம்”
“என்னடி சொன்ன உடனே சண்டையா?”
“சும்மா பயந்துட்டியா?” அவன் தோளில் கை வைத்துக் கேட்க, அவள் முகத்தை மிக அருகாமையில் காண அவனுக்குத் தான் பெரும் சோதனையாக இருந்தது.
“சண்டை போடலாமா?” அவள் கன்னத்தில் இதழ்களால் வரைந்தபடி கேட்டான் அவன்.
“ஓஓ போடலாமே. எனக்கு சம்மதம்” கண்களை மூடித் திறந்து அவனது கேசம் அடர்ந்த நெற்றியில் வைத்த முத்தம் இரட்டை சம்மதம் சொன்னதோ?
அவளே சம்மதம் சொன்ன பின் இனி ஏது தாமதம்? அவள் இதழ்களில் மோதி முதல் சண்டையை ஆரம்பிக்க, மோதலில் காதல் முகிழ்க்க, சண்டையிட்டவனே சமாதானப் புறாவையும் பறக்கவிட, சண்டைகளும் சமாதானங்களும் இனிதே தொடர்ந்தன.
அதனை நினைக்க தற்பொழுதும் வெட்கம் காட்டாற்று வெள்ளமாய் பொங்கிப் பிரவாகித்தது ஆலியாவுக்கு. அவளைப் பார்த்தவனுக்கும் அவ்வினிய நினைவுகள் தோன்றியதோ பிடரியைக் கோதி சிரித்துக் கொண்டான்.
பின் ஏதோ ஞாபகம் வந்தவளாக “மறுவீட்டுக்கு போகனும்னு அத்தை சீக்கிரமா ரெடியாக சொன்னாங்க. ப்ரெஷ்ஷாகிட்டு வா” என்றாள் ஆலியா.
“அப்போ காபி?”
“காபி? பெட் காபி கேட்குதா உனக்கு? பல்லு தேய்க்காம பச்சதண்ணி கூட இல்லை” விரலை நீட்டி எச்சரித்தாள் மனைவி.
“நீ என் அம்மாவை விட மோசமா இருக்கடி. பெட் காபி கிடைக்கும்னு எவ்ளோ கனவு கண்டேன். எல்லாம் போச்சு” புலம்பினான் அவன்.
“அந்த கனவெல்லாம் இங்கே பலிக்காது. டைம் ஆச்சுடா” இடுப்பில் கை வைத்து நிற்க,
“என்னையும் உன்னையும் பிரிக்கிறதுல அப்படி என்ன சந்தோஷமோ இவளுக்கு? இரு சீக்கிரம் வந்து உன்னோட மிங்கிள் ஆயிடுறேன். மிஸ் யூ காபி டார்லிங்” காபி கோப்பையை ஏக்கத்துடன் பார்த்தபடி நடக்க,
“லவ்வரை பிரியுற சோகம் பாரு” அவனின் செய்கையில் சிரிப்புத் தான் பீறிட்டது அவளுக்கு.
♡♡♡♡♡♡
“ருத் எங்கேமா?” மாடிப் படிகளில் இறங்கி வந்த அஞ்சனா சித்ராவின் கேள்வியில் புருவம் சுருக்கி நின்றாள்.
“என் கூட தானே வந்தார்னு நெனச்சேன்? ஓ மை கடவுளே! இவரை” உள்ளுக்குள் பல்லைக் கடித்தவள், “இருங்க அத்தை உங்க குட்டி பையனை கூட்டிட்டு வரேன்” அத்தையிடம் இளித்து வைத்து விட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்.
அவள் வாழ்ந்த ஊரிற்கு அழைத்துச் செல்வதாக நேற்றிரவு அவன் கூறியதில் இருந்தே கால்கள் தரையில் நிற்கவில்லை. இதயம் இறக்கை விரித்துப் பறந்தது.
அதே குதூகலத்துடன் எழுந்து பீச் கலர் சாரியை அணிந்து ஆயத்தமாகி நிற்க, அவனும் அவளுக்கு முன்னதாகவே ரெடியாகி விட்டான். இப்போது ஏன் வராமல் இருக்கிறான் என்று சென்று பார்க்க அறையின் தடுப்புச் சுவரருகே நின்றிருந்தான்.
“அபய் இங்கே என்ன பண்ணுறீங்க?” யோசனையூடு அவன் முகத்தைப் பார்த்தாள் பாவை.
கண்களைச் சுருக்கி கன்னத்தை உப்பிக் கொண்டிருந்தவனின் பாவனையில் நொடியும் தாமதிக்காமல் நகைப்பு துளிர்க்க, “என்னவாம் சாருக்கு? கோபமா?” சிரிப்பில் உதடு துடிக்க கேட்டாள்.
“அதான் தெரியுதுல்ல, அப்பறம் என்ன?” இன்னும் முகத்தை சுருக்கியவன் அவளுக்கு விசித்திரமாகத் தான் தெரிந்தான்.
பிசினஸில் புலியாய் சீறுபவன் தன்னிடம் பூனையாய் மாறி விடும் மாயை தான் என்ன? மாயைகள் நிகழ்த்துவதில் காதலை மிஞ்ச வேறேதும் இல்லை அன்றோ?!
“தலை வலிக்குதுனு சொன்ன. இதுல போயே தான் ஆகனுமா? சரியானதும் போகலாம்னு சொன்னா கேட்கிறியா?” இது தான் அவன் கோபத்திற்கான காரணமாம்.
“தலையாலயா நடக்கிறது? அது இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகிடும். கூட்டிட்டு போங்க ப்ளீஸ் ப்ளீஸ்” அவனது கைகளைப் பிடித்து கெஞ்சலும் கொஞ்சலுமாக உரைத்தாள் அஞ்சனா.
“ஏதோ சொல்ற. நான் சொன்னத கேட்கிறதா இல்லை நீயி. சரி வா போகலாம்” அவன் முன்னே நடக்க,
“வேண்டாம் தேவையில்லை. இவ்ளோ சலிச்சுக்கிட்டு போக வேண்டாம்” மறுப்புத் தெரிவிக்க,
“அம்மு குட்டி! அப்படி எதுவும் இல்ல டி. நான் ஹேப்பியா தான் வரேன் இங்கே பாரு என் முகத்தை” அவளை தன்னைப் பார்க்க வைத்தான்.
அவள் பார்க்கும் போது அவன் புன்னகைக்க அவள் முகத்திலும் அதே புன்னகை படர்ந்தது.
இருவரும் வரவேற்பறைக்கு வர, “கிளம்பிட்டீங்களா? அஞ்சுமா என் பையனை பத்திரமா பார்த்துக்க. பொத்தி வளர்த்த பையனை உன் கிட்ட ஒப்படைச்சு இருக்கேன்” சிரிப்புக் குரலில் கூறினார் சித்ரா.
” உங்க குட்டி பையன் எங்கேயும் தொலைஞ்சு போயிடாம இப்படி கையை பிடிச்சுட்டு போறேன் அத்தைமா” கணவனின் கையைப் பிடித்துக் காட்டினாள் அவள்.
“ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து என்னை கலாய்க்கிறீங்கள்ல?” ருத்ரன் கோபித்துக் கொள்ள,
அங்கு வந்த செல்வனைப் பார்த்த அஞ்சனா “மாமா! நீங்க யாருக்கு சப்போர்ட்?” என்று கேட்டாள்.
“என் பையனுக்கு தான்” மகனைப் பார்த்து சொல்ல அவனுக்கோ தத்தையின் பேச்சில் உள்ளம் குளிர்ந்து “அய்ய்! தாங்க் யூ ப்பா” என அவர் தோளில் கை போட்டுக் கொண்டான்.
அவருக்கோ அளவு கடந்த ஆச்சரியம். அவரருகில் சென்றவனுக்கும் தன் செயலில் திகைப்பு. தந்தை மீது பாசம், நேசம் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடந்த போதிலும் இவ்வாறு தோளில் கை போட்டு நண்பர்கள் போல் நடந்து கொண்டதில்லை என்றும்.
பாசம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளத் தெரியாத சராசரி அப்பாக்களுள் ஒருவர் அல்லவா இந்த செல்வனும்? அவர் தூரமாக இருந்ததால் ருத்ரனும் எட்டாமலே நின்று பழகி விட்டான்.
இன்று மனைவியோடு சேட்டை செய்யும் நோக்கில் தந்தையை அணைத்தவனை அவரும் தான் தோளில் கையிட்டு அணைக்க அஞ்சனாவின் கையிலிருந்த செல்போனில் அது க்ளிக்’ ஓசையோடு சேமிக்கப்பட்டது.
“அப்போ கிளம்புறோம்மா. அப்பா போயிட்டு வரோம்” இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.
நேரே ரயில்வே ஸ்டேஷன் அழைத்துச் சென்ற கணவனை விழி விரிய நோக்கினாள் அஞ்சு.
“வாவ்! ட்ரெயின்லயா போக போறோம்?” துள்ளலுடன் பேசியவளுக்கு ரயில் பயணம் தொடர்ந்தும் கூட களிப்பு ஓயவில்லை.
பலருக்கு ரயில் பயணம் என்றாலே கொண்டாட்டம் தான். அதன் நாதமும், யன்னலோர ஆசனமும், இயற்கைக் காட்சிகளில் லயிப்பதும், காதில் ஹெட்செட்டில் மெல்லிய இசையும் இருந்தால் சொர்க்கம் தான் சிலருக்கு, வேறு சிலருக்கு அத்தனையோடும் கையில் ஒரு நாவலும் இருந்தால் அப்பப்பா அதை விட பரவசம் ஏது?
“ம்ம்ம் ஹ்ஹா” மேனி தீண்டிய சுகந்தமான காற்றை உள்ளிழுத்து நாசி வழியே கடத்தி சுவாசப்பையை குளிர்வித்துக் கொண்டாள் அஞ்சனா.
அவளைத் தான் இதழ்களில் மறையாத புன்னகையோடு பார்த்திருந்தான் கணவன்.
“செம ஜாலியா இருக்குல்ல அபய்” கைகளை பரபரவென தேய்த்து கதகதப்பை கன்னத்திற்கு வழங்கினாள்.
“எஸ் அம்மு! இயந்திரம் மாதிரி பயணிச்சிட்டு இருக்கிற நம்ம வாழ்க்கையில் இப்படிப்பட்ட சில பயணங்கள் மனசுக்கு இதமா, சுகமா இருக்கும்” தன்னவள் அருகாமையுடனான இந்த ரயில் பயணம் அவனுக்கு கரும்பாய் இனித்தது.
பிரதான புகையிரத நிலையமொன்றில் புகையிரதம் தேங்கி நின்றது. பதினைந்து நிமிடங்கள் இங்கு தரித்த பின்பே பயணம் தொடருமென அறிவிக்கப்பட்டது.
சிலர் இறங்கி சிற்றுண்டிச்சாலையில் தஞ்சம் புகுந்தனர், இறங்க வேண்டியவர்கள் இறங்கிச் சென்றனர். கண்களை மூடி சாயந்திருந்தான் அபய். அவன் தோளில் தலை சாய்த்திருந்தாள் அஞ்சனா.
கண் அயர்ந்திருந்த ருத்ரனுக்கு ரயில் கிளம்பும் பொருட்டு ஊளையிட்டதில் விழிப்புத்தட்ட யன்னலினூடு நோக்கியவனுக்கு அந்த அழகான வயல் கண்ணைக் கவர்ந்தது.
அத்தோடு தன்னவளை முதன் முதலாக கண்ட தருணமும் நினைவடுக்கில் உல்லாசமாய் உலா வர, தலை திருப்பி அவளை பார்த்தவனுக்கு ஏகப்பட்ட திகைப்பு.
அவள் இருந்த இடம் காலியாக இருக்க, முன்னிருக்கையில் இருந்தவரோ அவள் சில நிமிடங்களுக்கு முன் எழுந்து சென்றதாக தெரிவித்தார்.
ஒரு கணம் தன் துடிப்பை நிறுத்தியது இதயம். கைகள் பதற்றத்தில் உதற ஆரம்பித்தன.
நொடியும் தாமதிக்காமல் “அம்மு…!” எனும் அழைப்புடன் அங்குமிங்கும் அவளைத் தேடினான். கண்களும் கூட கலங்கிப் போயின அவனுக்கு.
எந்த ரயிலில் அவளில் தன்னைத் தொலைத்தானோ, இன்று அதே ரயிலில் அவளைத் தொலைத்து நிற்பதில் செய்வதறியாது நின்றான் ருத்ரன் அபய்.
என்ன செய்வது, எங்கே செல்வது எனத் தெரியவில்லை. கதறி அழத் தோன்றியது. அவளின்றிய ஒரு நொடியைக் கூட அவனால் ஏற்க முடியவில்லை.
“அம்மு எங்கே டி இருக்க?” பின்னந்தலையில் இரு கைகளையும் வைத்து அழுந்தக் கோதிக் கொண்டு வயல் தெரியும் மறுபக்க கதவருகே எட்டிப் பார்க்க,
“அபய்…” எனும் அழைப்புடன் ஓடி வந்தாள் அவனின் தேவதையானவள்.
செயலற்றுக் கிடந்த இதயம் அசுரவேகத்தில் இயங்கத் துவங்க, கை நீட்ட அதனைப் பற்றி மேலேறி வந்து அவனை நோக்கியவளை நொடியும் தாமதிக்காமல் இறுகி அணைத்திருந்தான்.
அவனால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதிருக்க, அவளோ “அபய் ஐ ல…” என சொல்ல வருகையில்,
சடாரென விலகி நின்று அவள் கன்னத்தில் பளாரென ஐவிரல் தடத்தையும் பதித்திருந்தான் ஆடவன்.
தொடரும்……♡
ஷம்லா பஸ்லி