❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️
நிலவு 21
இன்னும் பத்து நிமிடங்களில் ஷாலுவின் ரன்னிங் ரேஸ் ஆரம்பமாவதாக ஒலிபெருக்கி அறிவிப்பு கொடுத்தது.
குட்டி மாணவர்கள் ஆசையோடு இருக்க அதை விட துடிப்புடன் பெற்றோர் அவர்களுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தனர்.
மற்ற குழந்தைகள் முகத்தில் இருந்த மகிழ்வு கொஞ்சம் கூட இல்லாது வாட்டமுற்ற முகத்துடன் நின்றிருந்தாள் ஷாலு. அவளைச் சமாதானப்படுத்தி ஓய்ந்து போயிருந்த அதி “பாப்பு மா! இங்கே பாருடா” என அவள் தோள் தொட்டாள்.
“முடியாது. எனக்கு வர்ஷு வேணும் அத்து. அவர் வரலைனா நான் போக மாட்டேன்” உதடு பிதுக்கி அழுகைக்குத் தயாரானாள் சின்னவள்.
“வர்ஷு கால்ல காயமானதை நீ பார்த்தல்ல. அதை வெச்சுட்டு நடந்து வர முடியுமா? பாவம்ல அவருக்கு வலிக்குமே” சமாதானம் செய்யும் நோக்கில் அதி.
“நானும் பாவம் தானே அத்துக் குட்டி. என் கூட இருப்பேனு அங்கிள் சொன்னார். அவர் வருவார்னு ஆசையா இருந்தேன். ஆனா அவர் வரலை. என் மேல் அவருக்கு பாசம் தானே?” மூக்கை உறிஞ்சினாள் ஷாலு.
“டேய் நான் சொல்லுறதைக் கேளு. நாம வரும் போது வர்ஷு தூங்கிட்டு இருந்தார்னு எழுப்பலை. அவர் எந்திருச்சாலும் எப்படி வருவார்? நான் வேணா நீ ஓடுறதை வீடியோ பிடிச்சு காட்டுறேன் சரியா?” என அவளது தலையை வருடிவிட்டாள் அதியா.
“முடியாது. என் பக்கத்தில் அவர் இருந்தால் தான் ஃபாஸ்ட்டா ஓடுவேன். அங்கே பாரு கவின் அப்பா அவனை தூக்கி கொஞ்சிட்டு இருக்கார். வெண்ணிலாவோட அப்பா அவ தலையை தடவுறார்.
எல்லோரும் அப்படித்தான் அப்பா கூட ஜாலியா இருக்காங்க. ஆனா என் கூட அப்பா இல்லை. என் வர்ஷுவும் இல்லை” கலங்கிய கண்களில் விழி நீர் வெளியேற முற்படும் போது “கியூட்டி” என்ற குரல் செவி தீண்டியது.
அவள் கண்கள் விரைவாக அங்கும் இங்கும் அலைபாய “வர்ஷ்” என்று கத்தியவளின் கண்களில் விழுந்தான் வர்ஷன்.
அனைத்தும் மறந்து ஓடிச் சென்று அவன் கால்களைக் கட்டிக் கொண்டாள் ஷாலு. “செல்லம்! என்னைத் தேடுனியா?” என்று கேட்டுக் கொண்டே அதியிடம் வந்தான்.
“தேடினாளா? அலப்பறையே பண்ணிட்டாள். நீ வரலைனா ரேஸ்க்கு போகவே மாட்டேன்னு அடம் பிடிச்சாள்” தலையில் கை வைத்தாள் அதி.
“நீங்க போய் கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு வரலாம்னு பார்த்தப்போ ஹாஸ்பிடல்ல கால் வந்துச்சு. நாளைக்கு சர்ஜரி இருக்குன்னு அதுக்கு சைன் போட்டுட்டு வந்தேன்” என்று சொன்னவனிடம்,
“கால் வலி சரியாகிடுச்சா அங்கிள்?” என்று வினவிய பிஞ்சிடம், “எஸ் டா ஃபைன்” என்று பதிலளித்தான் அவன்.
அவளது கையில் வெள்ளை நிற காகிதம் ஒன்றை வைத்து அழுத்தமாக விரலால் நீவி விட்டு அதை எடுத்தான் உதய். அழகான குழந்தை ஒன்று ஓடுவது போன்று அதில் இருக்க ஆல் தி பெஸ்ட் என்று எழுதப்பட்ட டாட்டூ அவள் கையில் பதிந்திருந்தது.
“வாவ் சூப்பர் வர்ஷு” என்று கன்னக்குழி விழ சிரித்தது சிட்டு.
ஓட்டப் போட்டிய ஆரம்பமாக அதியும் உதய்யும் அவள் பெயர் சொல்லி உற்சாகமூட்டினர்.
“கியூட்டி ஃபாஸ்ட். உன்னால முடியும்” என்றவாறு தன் காலில் உள்ள காயத்தையும் பொருட்படுத்தாது அவளது வேகத்திற்கு இணையாக ஓடினான் உதய்.
ஷாலு வெற்றிக் கோட்டைத் தாண்டி முதலிடம் பெற அவளைக் கைகளில் அலைகாகத் தூக்கி “யூ ஆர் த வின்னர் பட்டு” என அவளை மேலே தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தவனின் கழுத்தை கட்டி கன்னத்தில் எச்சில் தெறிக்க முத்தம் வைத்தாள் ஷாலு.
அதியும் அவளை அணைத்துக் கொண்டாள். வெற்றி கோப்பையை மகிழ்வுடன் பெற்றவளை ஆசை தீர ரசித்தனர் அவளைப் பெறாத பெற்றோர்.
கிண்ணத்தைக் கையில் எடுத்து மேடையில் இருந்தே “அத்து தேங்க்யூ. எனக்கு நீங்க தான் டாடி வர்ஷு. தேங்க்யூ லவ் யூ” என்று வர்ஷனுக்கு பறக்கும் முத்தத்தைக் கொடுத்தாள் ஷாலு குட்டி.
இவ்வாறு காதலும் செல்ல சண்டைகளும், ஷாலுவின் குறும்புகளுமாக மூவரது வாழ்வும் நகர்ந்தன. ஆப்பரேஷன் ஒன்றை செய்து முடித்து ஹாஸ்பிடலில் தனது கேபினுக்கு வந்து அமர்ந்தான் உதய்.
காலை பத்து மணிக்கு வந்ததற்கு இன்னும் வீடு செல்லவில்லை. அதிக்கு அழைத்து வீடு திரும்ப தாமதமாகும் என்று கூறி வைத்திருந்தான். அவளோடு பேசலாம் என்று நினைத்து அலைபேசியைக் கையில் எடுத்தவன் அதிர்ந்து நின்றான்.
நேரம் அதிகாலை ஒரு மணியைக் காட்டியது. “காட்! இவ்வளவு நேரமாச்சா? அதிம்மா தூங்கி இருப்பாங்களா? க்யூட்டி என்னைத் தேடி இருப்பாளோ?” என்று சிந்தித்தவன் வேகமாக காரில் ஏறி வீட்டை அடைந்தான்.
வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. அவனிடமுள்ள அடுத்த சாவியின் மூலம் கதவை திறந்து சென்று ரூம் லைட்டைப் போட்டவன் தூங்கும் தன்னவளைக் கண்டான்.
கன்னத்தில் கை வைத்து உறங்குபவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தவன் கையில்லாத டிஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து வெளியே வந்தான். கட்டிலில் அதி இல்லாததால் திகைத்தவன் அவளைத் தேடிச்செனாறு ஷாலுவின் அறையை எட்டிப் பார்த்தான்.
அவளும் அங்க இருக்கவில்லை.
“எங்கே போயிட்டாங்க ரெண்டு பேரும்? அதுவும் இந்த டைம்ல?” புரியாத புதிராக இருந்தது அவர்களது செய்கை.
கார்டனில் இருந்து வெளிச்சம் வருவதை அறிந்து அங்கே சென்றவனின் விழிகள் பெரிதாக விரிந்தன. தோட்டத்தில் சூரியனும் நிலவும் இணைந்தது போன்ற அழகிய வடிவத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. “இது குட்டி” என்று மேல் அழைக்க திடீரென அவ்விடமே ஒளிர்ந்தது.
மேசையில் நீல நிற கேக் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஹாப்பி பர்த்டே உதய வர்ஷன் என்றும் எழுதப்பட்டு மெழுகுவர்த்திகள் ஒளிர்ந்தன. அவனுக்கு அப்போதுதான் இன்று தனது பிறந்த நாள் என்பதே நினைவுக்கு வந்தது.
இத்தனைக்கும் ஒரு வருடம் கூட அவன் பிறந்த நாளைக் கொண்டாடியது இல்லை. அவனது பிறந்த நாளுக்கான வாழ்த்து இத்தனை வருடங்களுக்கும் ராவ்விடம் மட்டுமே கிடைத்திருக்கும். முக்கியமாக அது வரை அவனது பிறந்த நாள் அவனுக்கே நினைவிருக்காது என்பதுவே உண்மை.
“எதுக்கு நின்னுட்டீங்க? சீக்கிரம் வாங்க அங்கிள். கேக் வெட்டனும்” என்று ஷாலு அழைக்க, அவனது பார்வையோ தன் நிலவுப் பெண்ணிடமே வட்டமிட்டது.
விழிகளாலே அவனைப் பார்த்து சிரித்தாள் அவளது இதய நிலவானவள். ஷாலுவின் கையைப் பிடித்து கேக்கை வெட்டினான் உதய். அதியும் ஷாலுவும் ஹாப்பி பர்த்டே டூ யூ பாட்டுப் பாடி வாழ்த்தினர்.
ஷாலுவுக்கு ஊட்டியவன் அதிக்கு ஊட்டினான். அவளும் அவனுக்கு ஊட்ட, இதெல்லாம் அவனுக்குப் புதிது. அவன் வாழ்நாளில் கொண்டாடிய முதல் பிறந்தநாள் இது.
உணர்வு மிகுதியில் அவள் கையைப் பிடித்து ஊட்டியதை வாங்கிக் கொண்டான். “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதய்!நீ எப்போவும் சந்தோஷமா இருக்கனும். அதுதான் எனக்கு வேணும்” என்று கூறி அவனுக்காக அர்ச்சனை செய்து கொண்டு வந்திருந்த விபூதியை நெற்றியில் வைத்த மனைவியைப் பார்த்து மெலிதாக சிரித்தான் காளை.
“வர்ஷு என் கிப்ட்” என்று மடிக்கப்பட்ட காகிதத்தைக் கொடுத்தாள் ஷாலு. அதைப் பிரித்தான் ஆர்வமாக. ஒரு சிறுமி அப்பாவின் கைப்பிடித்து நடப்பது போல் வரைந்திருந்தாள். அதன் கீழே ஹேப்பி பர்த்டே டு யூ வர்ஷு என்று எழுதியிருக்க, “தேங்க்யூ கியூட்டி மா” என அவளை அணைத்துக் கொண்டான்.
“அத்து நீ கிப்ட் கொடுக்கலையா?” என்று ஷாலு கேட்க அதே எதிர்பார்ப்புடன் தன்னவளை ஏறிட்டான் உதய்.
“கண்டிப்பா கொடுப்பேன்” என்று ஒரு கைக்கடிகாரத்தை எடுத்து அவன் கைகளில் கட்டி விட, “தேங்க்யூ அதி” என்று சொன்னவனிடம்,
“என்னை மட்டும் ஹக் பண்ணி தேங்க்யூ சொன்னீங்கள்ள. உங்க பெண்டாவுக்கும் அப்படி சொல்ல மாட்டீங்களா? வர்ஷு ஹக் பண்ணுங்க” என்று சத்தமிட்டாள் ஷாலு.
“அப்படியா? ஹக் பண்ணிட்டா போச்சு” என்று கண்ணடித்து அதியைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஆனவன்.
கேக் சாப்பிட்ட சிறுமி உதய்யுடன் தூங்குவதாக அடம் பிடிக்க உதய்யும் சம்மதிக்கவே இருவருக்கும் நடுவில் தூங்கினாள்.
அந்த நாள் முழுவதும் அவன் வீட்டில் இருப்பதாகக் கூறிவிட ஒரே குத்தாட்டம் தான் கியூட்டிக்கு. பீச், ஹோட்டல், ஷாப்பிங் மால் என்று சுத்தினார்கள். மிக சந்தோஷமாக உணர்ந்தான் ஆடவன்.
வரும் வழியில் சுமதி வீட்டில் ஷாலுவை விட்ட அதி “பாப்பா! இன்னைக்கு எங்களுக்கு ஒரு சின்ன வேலை. நீ சுமதி ஆன்ட்டி கூட சமத்தா தூங்குவியாம். காலையில வருவோம்” என்று கூறி விடை பெற்றாள்.
அவளைப் புருவம் முடிச்சுடன் ஏறிட்டான் உதய். காரில் வரும் போது “எதுக்கு கியூட்டியை சுமதிக்கா வீட்டில் விட்டீங்க? என்ன வேலை?” என்று கேட்டான் அவன்.
“சொல்லுறேன். அதுக்கு முன்னாடி நான் சொல்லுற இடத்துக்கு வண்டியை விடுங்க” என்று பூடமாக பேசியவளின் பேச்சு அவனுக்குப் புரிபடவில்லை.
தோளைக் குலுக்கிக் கொண்டு அவள் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்தினான். “இது என்ன ஸ்கூல்? இங்கே யார் படிச்சது?” என நெற்றியை அழுந்த நீவிக் கொண்டு வினவினான் உதய்.
“சொல்லுறேன் வா” என அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். இங்கே எதற்கு அழைத்து வந்திருக்கிறாள் என்று நினைத்து நினைத்து மண்டை சூடாகியது அவனுக்கு.
அதிபர் அறைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்த பெண்மணி “வாங்க அதியா. உதய் தம்பியா நீங்க?” அதியாவை அழைத்தவர் உதய்யை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.
“வணக்கம்மா” யார் என்று தெரியாவிட்டாலும் கரம் கூப்பி வணங்கினான் அவன்.
“வணக்கம் தம்பி. நல்லா இருங்க” அவன் தோளில் தட்டி விட்டுச் செல்ல,
அவனைத் திரும்பிப் பார்த்து, “உனக்கு ஒரே குழப்பமா இருக்கும்னு தெரியும். எல்லாம் கொஞ்ச நேரத்துல தெளிஞ்சிரும். வெயிட் பண்ணுடா” என்றாள் மங்கை.
சுவரில் தொங்க விடப்பட்டிருந்த முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் ஃபோட்டோவைக் காட்டினாள் அவள். “இவங்க பெயர் சாரதா! இந்த ஸ்கூல்ல கிட்டத்தட்ட ஆறு வருஷம் டீச் பண்ணிருக்காங்க. ஓலைக் கூரையும் களிமண் சுவருமா இருந்த இந்த சின்ன ஸ்கூல்லை எப்படியோ போராடி பெரிய இடத்தில் பேசி இப்படி ஒரு ஸ்கூலா மாத்தினது இவங்கதான்.
இருபத்து ஐந்து வருஷங்கள் ஆகினாலும் இன்னும் இவங்க ஃபோட்டோவை ஆபீஸ்ல வச்சு தெய்வமா நினைக்கிறாங்க” என்று சொன்னாள் அவள்.
அந்தப் பெண்மணியின் முகம் உதய்யை ஏதோ உணர்வில் ஆழ்த்தியது. “நிஜமாவே இந்த டீச்சர் கிரேட்ல நிலா? பொண்ணுங்கனா இப்படித்தான் தைரியமா இருக்கணும். எனக்கு இவங்களைப் பார்க்கும் போது ஒரு மாதிரி ஃபீல் ஆகுது” என சாரதாவின் முகத்தையே உற்றுப் பார்த்தான்.
“ம்ம். சரி வா போகலாம்” என்று மைதானத்தில் போடப்பட்டிருந்த பழைய கல் பெஞ்சின் அருகே அழைத்துச் சென்றாள் அதி.
அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் அவள்.
“அப்பாம்மாவை இழந்து தன்னந்தனியா எதுக்காக வாழ்கிறோம் என்று தெரியாமல், வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன சின்ன சந்தோஷங்களை மறந்துட்டு வாழ்ந்தேன். ஒரு நாள் எனக்கு தெரியாமல் உன்னை ஹக் பண்ணேன். வீட்டுக்கு போனதும் மறந்தும் கூட போயிட்டேன். ஆனா எனக்கு அப்போ தெரியல இனிமேல் மறக்கவே முடியாத உறவா நீ மாற போறனு.
ஒரு பையன் வந்து என் வாழ்க்கையை புரட்டிப் போடுவான் என்று முன்னாடி சொல்லி இருந்தா நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அது நடந்தது .என் வாழ்க்கையை வசந்தமா, பூச்சோலையா, சந்தோஷங்களின் இருப்பிடமா மாற்ற வந்து அழகான சாரல் காற்று நீ! உதயவர்ஷன்…!! புன்னகையோட முகவரி அந்தப் பெயர்.
உன்னால நான் புதுசா பிறந்தேன்டா. என்னை முழுசா மாற்றி துளி கூட கவலை தீண்டாம ஒரு தாயா பார்த்துகிட்டே. உனக்குள்ள நான் என் அப்பாவை பார்த்தேன். எனக்கு இதுக்கு மேல சொல்லத் தெரியல. உன்னைப் பற்றி நினைத்தாலே என் இதயம் தாறுமாறா துடிக்க ஆரம்பிக்குது.
என்னுடைய இதயத்தைப் பிரகாசிக்க வைக்க வந்த உதயசூரியன் என் வர்ஷ். நீ என் கூட எப்போவும் இருக்கணும். பக்கபலமா பிடிச்சுக்க உன் கை வேணும். ஒரு குழந்தையா மாற உன் மடி வேணும்
எனக்கு எப்போவும் நீ வேணும்டா” என்று நீளமாக பேசிய அதி, “ஐ லவ் யூ யஷு கண்ணா!” என்று கயல் விழிகளில் காதலும் கசிந்துருக நோக்கினாள் அக்கண்ணாளனின் காதல் கண்மனி.
அவளது வார்த்தைகளில் உள்ளம் உருகி நின்றவன் யஷு எனும் அழைப்பில் உச்சி முதல் உள்ளங்கால் வரை புதுவகை உணர்வு ஊற்றெடுக்க அவளது முகம் பார்த்தான்.
“என்ன? இன்னொரு வாட்டி திரும்பவும் சொல்லுங்க” ஆசையோடு அவன் கேட்க,
“யஷு ஐ லவ் யூ டா! நீ இந்த இதயாவோட இதயத் திருடன் யஷு. யூ ஆர் மை எவ்ரிதிங் டா” என்று கூறினாள் பாவை.
சட்டென அவள் தோள்களில் கை வைத்து அவளை நோக்கியவனின் கைகளில் இருந்த அழுத்தம் கூடிக் கொண்டே சென்றது. “என்னை யஷுனு கூப்பிட்டீங்களே ரொம்ப ஹேப்பியா இருக்கு. என் பர்த்டேவிற்கு கிடைத்த பெரிய கிஃப்ட் இதுதான். தாங்க் யூ மை பெண்டா பேபி”
“இதுக்கே இப்படி சொல்லிராத. உன் பர்த்டேவிற்கு நான் ஸ்பெஷல் கிப்ட் வச்சிருக்கேன்” என்றவளைப் பார்த்து, “இதைவிட ஸ்பெஷலா இங்கே வேண்டாமே. அப்புறம் நான் எமோஷனல்ல ஹக் பண்ணிட்டேனா யாராச்சும் ஸ்கூல் பசங்க பார்த்தா சரியில்லல?” என்று சொன்னான் ஆணவன்.
“அப்படி எல்லாம் இல்லை. பிரின்சிபல் மேடம் கிட்ட பர்மிஷன் கேட்டுத்தான் உன்னைக் கூட்டி வந்தேன். இங்கே யாரும் வரமாட்டாங்க”
“அப்போ ஓகே. என்ன கிஃப்ட்?” சிறு குழந்தையொன்று வேலைக்குச் சென்று வீடு திரும்பும் தந்தையிடம் ‘எனக்காக என்ன கொண்டு வந்தீங்க பா’ என்று கேட்பது போல் இருந்தது இந்த வளர்ந்த குழந்தை உதய்யின் செய்கை.
“இன்னும் டுவென்டி செகண்ட்ஸ் இருக்குஃ நீ பிறந்தது நான்கு முப்பத்து அஞ்சுக்கு. சோ அந்த டைம்க்கு தருவேன்” என்ற தன் தேவதையைக் காதலுடன் பார்த்தான் வேங்கை.
சரியாக 4.35 க்கு தனது ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாள் அதி. அதனைப் பிரித்தவனின் விழிகள் அவளை இப்போதும் புரியாத பாவனையுடம் தான் பார்த்தன.
அவள் போட்டோவில் காட்டிய அந்த சாரதா என்கிற பெண்மணியுடன் ஒரு ஆணும் நின்றிருந்த போட்டோ ஃப்ரேம் செய்யப்பட்டிருந்தது. அந்த ஆண் அவரது கணவனாக இருக்க வேண்டும் என மனம் வாதிட்டாலும் இதை ஏன் தனக்குக் கொடுத்தாள் என்பது மட்டும் புரியவில்லை.
“இவங்க யார் என்று தெரியுமா உதி?”
“ஆமா. சாரதா மிஸ்சும் அவங்க ஹஸ்பண்டும் தானே” என்று சாதாரணமாகக் கூறினான் கணவன்.
“எஸ் கரக்ட்! பட் உனக்கு அவங்க சாரதா மிஸ் இல்லை. அம்மா…!! இவர் உன் அப்பா ராஜசேகர். உன் அப்பாம்மாவுக்கு உன்னைப் பார்க்க முடியாமல் போச்சேனு வருத்தப்பட்டல்ல. ஆனால் உனக்கு உன் அப்பாம்மா முகத்தைப் பார்க்கிற சான்ஸ் கிடைச்சிருக்கு.
உன்னைப் பத்து மாதம் சுமந்து உன்னையே நினைச்சுட்டு வாழ்ந்த உன் அம்மாவைப் பாரு. இந்த ஸ்கூலுக்காக கடினமாக உழைத்தது இவங்கதான். இந்த பெஞ்சுல தான் அதிகமா அவங்க உட்கார்ந்து இருப்பாங்களாம். சம் டைம்ஸ் ஹாலிடேஸ்க்கு கூட வந்து தனிமையில் உட்கார்ந்து உன்னையும் இந்த ஸ்கூல்ல படிக்க வைக்கணும்னு சொல்லுவாங்களாம். உங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர் இல்லாத வீட்டுக்கு போக பிடிக்காம இங்கே ரொம்ப நேரம் இருப்பாங்களாம்” என்று கூறினாள் அதியா.
அவளது வார்த்தைகளில் இன்பமாய் அதிர்ந்தான் உதய வர்ஷன். ஒற்றைக் கையால் தன் அம்மாவின் முகத்தை வருடுகையில் அவன் உள்ளம் பூரித்தது.
“அம்மா…!!” என்று வார்த்தைகள் தந்தியடிக்கச் சொல்லி இனம் புரியா உணர்வுடன் அவர் நெற்றியில் முத்தமிட்டுத் தாயின் புகைப்படத்தை மார்போடு சேர்த்து அணைத்து மறு கையால் தன் தாரத்தைத் தோளோடு சேர்த்து அணைத்தான் எல்லையில்லா மகிழ்வில் பூரித்த புன்னகை வர்ஷன்…!
நிலவு தோன்றும்….!!🌛
✒️ ஷம்லா பஸ்லி❤️