கரம் விரித்தாய் என் வரமே – 21
அம்மா! என்று மகன் கூவ, கொஞ்சம் நிதானத்திற்கு வந்தார் மீனா. இந்த அழைப்பு வந்ததில் இருந்து அவர் மனம் பட்ட பாடு அவருக்கு தான் தெரியும்! வயசு பெண்ணை வைத்து இருக்கும் பெற்றோர் மட்டும் தான் காதலை குறித்து பயப்படுவார்களா….? பையன்களை வைத்திருக்கும் பெற்றோருக்கும் பயம் இருக்கும்! அதுவும் ராஜேஷ் போல் குடும்ப பொறுப்பை தலையில் சுமந்து இருக்கும் ஆண்களின் பெற்றோருக்கு கூடுதல் பயம்!
இங்கே ராஜேஷ் தலையெடுத்து தான் அந்த குடும்பம் நிமிர வேண்டும், பெண்ணை கட்டி கொடுக்க வேண்டும் என்ற நிலையில் மீனாவிற்கு அவன் காதல் என்ற போதே மிகுந்த பதட்டம். இன்றோ நானும் உங்கள் மகனும் விரும்புகிறோம், கல்யாணம் செய்து கொள்ள போகிறோம்…. உங்களிடம் மறைக்க நினைக்கவில்லை, எங்கள் சந்தர்ப்பம் அப்படி…. என்னை மன்னித்து நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றதும் அரண்டு விட்டார்.
பயந்து கொண்டே, இன்றைக்கு திருமணமா என்று கேட்க,
இல்லை, தேதி முடிவான பின் சொல்கிறேன்…. நீங்கள் அவசியம் வரவேண்டும்…. இப்போதைக்கு ராஜேஷிடம் காட்டி கொள்ளாதீர்கள் என்றிருந்தாள் அந்த பெண்!
அப்போதே அவனை அழைக்கிறேன் என்றவரை செந்தில் தான் படாதபாடு நிறுத்தி வைத்தார். “யாரோ ஏதோ சொன்னாங்கனு ஆபிஸ்ல இருப்பவனை தொந்திரவு செய்யாதே….”
“யாரோ இல்லைங்க, அன்னைக்கு வந்த பொண்ணு தான் பேசுது….”
“நம்ம மகன் வந்து சொல்லட்டும்! அந்த பொண்ணு இப்போ யாரோ தான்…. அமைதியா இரு முதல்ல….” என்று அழுத்தமாக ஒரே போடாக போட்டார்
அதற்கு பின் அவரை மீற முடியாமல் இருந்தாலும் நாளெல்லாம் புலம்பி கொண்டே தான் இருந்தார். அதனால் தான் அவரின் கோபம், ஏமாற்றம், ஆற்றாமை என அனைத்தும் ராஜேஷ் வந்ததும் வெடித்து விட்டது.
வீட்டிற்குள் வந்தவன்,
“யார் என்னை பத்தி என்ன சொன்னாலும் நம்புறியே மா….? உன் மனசுக்கு இத்தனை நாளும் உன் பிள்ளை எப்படி இருக்கான்னு தெரியாதா….? என்னை இவ்ளோ கேவலப்படுத்துறே….? ஆதங்கமாக கேட்டான் ராஜேஷ்.
தங்கை, பெற்றோர் அவர்களின் நல்வாழ்வு என்று எப்போதும் அதே சிந்தனையில் இருந்தவனை அவரின் இந்த பேச்சு மிகுந்த காயத்தை கொடுத்தது. அவன் நினைத்து இருந்தால் பதிலுக்கு பதில் திமிராக பேசி இருக்கலாம்! ஆனால் பேசவில்லை.
“ஒரு பொண்ணு சொல்லும் போது நான் என்ன பண்ண?”
“சீரியல்ல மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் வில்லி இருக்காங்க மா….! அதை புரிஞ்சுக்கோ….”
“அப்போ அது பொய்யா….? ஆனா அன்னைக்கு அந்த பொண்ணு தேடி வந்தப்போ நீயும் சொன்னே…. ஒழுங்கா என் மேல் சத்தியமா சொல்லு….” அழ ஆரம்பித்தார் மீனா.
“அய்யோ! அம்மா நான் அன்னைக்கு சொன்ன மாதிரி அந்த பொண்ணுக்கு தான் ஆசை இருந்துச்சு, எனக்காக சாப்பிடாமல் இருந்து ஹாஸ்பிடல்ல போய் படுத்துருச்சு…. அதனால் பார்க்கலாம்னு சொன்னேன்…. அப்புறம் இப்போ நிச்சயமா முடியாதுனு சொல்லிட்டேன்….”
“ஓ!” நிம்மதியாக இருந்தது மீனாவிற்கு.
அதற்குள் சுகுணா, “எங்களுக்காக வேணாம்னு சொல்லிட்டியா அண்ணா? அப்போ உன் லவ் பெய்லிரா ஆய்டுச்சா….?”
“ச்சீ…. வாயை மூடுடி…. லவ்வாம் லவ்….! பேசாம போ அந்த பக்கம்….” மகளை அதட்டினார்.
“நீ படிப்பை முடிச்சு, உன்னை வேற வீட்டுக்கு பேக் பண்ணாம நான் கல்யாணம் பத்தி யோசிக்கவே மாட்டேன்…. நீயும் ஒழுங்கா படி….” என்றான் ராஜேஷ் உறுதியாக.
“நம்பலாமா டா…. இல்லைனா அமைதியா அந்த பக்கம் காரியத்தை முடிச்சிட்டு எங்களை அம்போனு விட்ற மாட்டியே….?”
அதுவரை அமைதியாக இருந்த செந்தில், “ஏய் மீனா! நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்….ரொம்ப பேசுறே…. நீ முதல்ல வாயை மூடிக்கிட்டு அந்த பக்கம் போ….” என்றார் கோபமாக.
முகத்தை திருப்பி கொண்டு அறைக்குள் போனார் மீனா. ராஜேஷ் மிகவும் காயப்பட்டவனாக, மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டான். இரவு உணவுக்கு கூட கீழே வராமல் மேலேயே இருந்த அவனை முதலில் சுகுணா சென்று அழைத்தாள்.
“வாண்ணா, அம்மா பேசுறது பத்தி தெரியாதா என்ன உனக்கு?”
அவளிடம் எதுவும் கூறாமல், “நீ போ நான் வரேன்….” என்றான் மனம் விட்டு போனவனாக. அவள் சென்று சற்று நேரத்திற்கு எல்லாம் செந்தில் வந்து விட்டார்.
“வாப்பா சாப்பிடலாம்!”
“இவ்ளோ பேச்சு கேட்டுட்டு நான் எப்படி பா சாப்பிடுறது?”
“நீ சம்பாரிச்ச காசுய்யா அது…. நீ சாப்பிடாம….?”
“நான் என்னைக்கும் அப்படி நினைச்சதே இல்லை பா….”
“எனக்கு தெரியும்! ஏன் உங்க அம்மாவுக்கும் தெரியும்….! ஆனா கையாலாகாத புருஷனை கட்டிக்கிட்டு ரெண்டு பிள்ளைங்க வேற பெத்து வைச்சு இருக்கோமே…. அதுவும் முக்கியமா பொம்பிளை பிள்ளையோட எதிர்காலம் உன்னை நம்பி இருக்கே…. அந்த பயம் பா அவளுக்கு….”
“நீங்க அம்மா அப்பானா…. நான் சுகுணாவுக்கு அண்ணன் பா…. அதோட நீங்க ஒன்னும் கையாலாகாத அப்பா இல்லை….. என்னை நீங்க தான் படிக்க வைச்சீங்க….” அப்பாவின் மனதை குளிர்வித்தான் ராஜேஷ்.
“உனக்கு வரபோற பொண்ணு எப்படி இருக்குமோ…. சுகுணா வை கட்டி கொடுத்த அப்புறம் இந்த மாதிரி விஷயம் நடந்து இருந்தா உங்க அம்மா ஒண்ணுமே சொல்லி இருக்க மாட்டா டா….”
“நான் எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பேன் பா….”
“எங்களுக்கு அப்போ உரிமை குறைஞ்சு போயிரும் பா…. உனக்கு புரியாது…. விடு…. அம்மா பேசினது தப்பு தான்…. இப்போ சாப்பிட வா….”
மகனை ஒருவாறு சமாதானம் செய்து அழைத்து போனார் செந்தில்.
“உம்மென்று தட்டில் அளந்தவனிடம், நீ ஒன்னும் என் சக்காளத்தி பெத்த பிள்ளை இல்லை…. நான் பெத்த பிள்ளை…. தப்பு பண்ணா நல்லா திட்டுவேன், நீயும் திருப்பி திட்டு…. சண்டை போடு…. அதை விட்டுட்டு சப்பாட்டை ஒதுக்குவியோ…. ஒழுங்கா சாப்பிடுறா….”
ஒரு தாயாக அவன் வயிற்றுக்கு உண்ணவில்லை என்றதும் கோபத்தை விட்டு அவனிடம் பேசினார் மீனா.
“சக்காளத்தியா….? ஏண்டி ஒத்த குடும்பத்துக்கே முடியலை எனக்கு…. அவளுக்கு செலவு பண்ண காசுக்கு நான் எங்கே போவேன்….?” சிரித்தார் செந்தில்.
“ஓ! அப்போ காசு இருந்தா போய் இருப்பீங்களோ….!” மீனா ஆரம்பிக்க, திரு திருவென்று முழித்தார் செந்தில். இவ தானே ஆரம்பிச்சா…. நான் நல்லவிதமா தானே சொன்னேன்…..
“ம்ம்….பேசுங்க….மனசுக்குள்ள அந்த ஆசையெல்லாம் இருந்துச்சா…. உங்க கடைக்கு பக்கத்தில் புளி விப்பாளே அந்த மாரியம்மா, சும்மா சும்மா உங்க கடைக்கு வரும் போதே எனக்கு சந்தேகம் தான்….”
அம்மாவை அடக்க முடியாது என்று சுகுணாவும் ராஜேஷும் செந்திலை மீனாவிடம் தனியே விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகினர்.
****************
மறுநாள் அலுவலகம் வந்தவன், ஆத்திரத்துடன் பார்வதியை தேடினான். ஆனால் அவள் நீளமான மருத்துவ விடுப்பு எடுத்து இருப்பதாகவும் அதன் பின்னரும் வேலையை ராஜினாமா செய்ய போவதாகவும் கூறினார்கள்.
ஓடிட்டா போல் என்று நினைத்தவன், சாய்யிடம் சென்றான்.
அவகிட்ட போய் சொல்லு, போகும் போது கூட அடுத்தவனுக்கு பிரச்சனை பண்ணி விட்டு போய் இருக்கால்ல, அவ்வளவு காண்டுல இருக்கேன் அவ மேல்…. என் கண்ணிலே பட்டா சும்மா விட மாட்டேன் சொல்லு என்றான் உறுமலாக.
அவன் ஆத்திரத்தில் லேசாக அரண்டாலும், எனக்கு ஒன்னும் புரியலை நீ சொல்றது. நீ அவளை வேண்டாம் சொல்லிட்டே, சோ நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்…. அவ்ளோ தான்! உனக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை…. நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்….. நீ உன் வேலையை பாரு! என்றான் சாய்.
“ரொம்ப சந்தோஷம்…. இதை அவ கண்டிப்பா பாலோ பண்ணனும்…. சொல்லி வை அவகிட்டே” என்று வேறு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான் ராஜேஷ்.
************
ஹனிமூன் முடிந்து தெய்வாவும் ஷிவாவும் திரும்பி வந்திருந்தனர். அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். வழக்கம் போல் அந்த வார இறுதி அனைவரும் வெளியில் சந்தித்துக் கொண்டனர். அஸ்வினியின் முகத்தில் இருந்த உற்சாகமும் ராஜேஷ் முகத்தில் இருந்த தெளிவும் அவர்களுக்கு புரிந்தது. ஆனால் ராஜேஷ் சொல்லாமல் எதுவும் கேட்க வேண்டாம் என்று ஆண்கள் இருவரும் இருந்தனர். பார்வதி கிளம்பியது, சாய் பேசியது அனைத்தையும் அனைவரிடமும் சொன்ன ராஜேஷ், இவர்கள் விஷயம் பற்றி வாயே திறக்கவில்லை. அவனுக்கு சங்கடமாக இருந்தது. முதலில் ஒரு பெண், அது முடிந்ததும் உடனே இன்னொன்றா என்று மற்றவர் நினைக்க கூடும் என்று நினைத்தான்.
ஆண்கள் தான் அப்படி இருந்தார்கள், தெய்வாவிற்கும் அஸ்வினிக்கும் எந்த தடையும் இல்லையே…. அவர்களுக்கு தனிமை கிடைத்தவுடன்,
“என்னடி இன்னைக்கு தியேட்டரில் நீ என்ன பண்ணேன்னு உன் ஆளு சொல்லவே இல்லை….?” சீண்டினாள் தோழியை.
“இன்னைக்கு நான் ஒன்னும் பண்ணலை…. அவன் பண்ணினதை அவன் எப்படி சொல்வான்?” கிளுக்கி சிரித்தாள் அஸ்வினி.
“ம்ம்…. நடத்து நடத்து…. ஐயம் வெரி ஹாப்பி பார் யூ டி….” தோழியை அணைத்து கொண்டாள் தெய்வா.
“நீ இல்லைனா என் காதல் எனக்கு கிடைச்சே இருந்திருக்காதுடி….” கண் கலங்கினாள் அஸ்வினி.
“கண்டிப்பா கிடைச்சு இருக்கும்…. ஆனா வீணா பல பிரச்சனை ஆகி அப்புறம் நடந்து இருக்கும்…. இப்போ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு! இனிமே உனக்கு எப்போதும் சந்தோஷமா தான்…”
****************
அடுத்த இரண்டு மாதங்கள் வேகமாக உருண்டோட, தெய்வா கருவுற்று இருந்தாள். நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அன்று அனைவரும் அவர்கள் வீட்டில் குழுமி இருக்க, ஒரே உற்சாகமும் குதூகலமும் தான். அதோடு சேர்ந்து இன்னொரு சந்தோஷமான விஷயமும் தெரிய வந்தது அனைவருக்கும். ராஜேஷை அமெரிக்கா அனுப்புகிறார்கள் அவன் கம்பெனியில். இனிமே விசா வாங்க ஏற்பாடு செய்ய போகிறார்கள். மூன்று மாதத்திற்குள் கிளம்புவது போல் இருக்கும் என்றான். அனைத்து சந்தோஷத்தையும் சேர்த்து கொண்டாடி விட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள் மதன், ராஜேஷ் மற்றும் அஸ்வினி.
அஸ்வினியை கொண்டு போய் வீட்டில் விட்டு போகிறேன் என்று மதனை கிளம்ப சொல்லி விட்டான் ராஜேஷ். இவர்கள் வீட்டிற்கு வந்த பின், அஸ்வினியை அணைத்து கொண்டவன்,
“என்ன என் பூனைக்குட்டி கண் ஒளி இழந்து இருக்கு….? என்னை பார்க்கும் போதே எனக்கு கரெண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கும்…. ஆனா இன்னைக்கு அந்த பீல் மிஸ் ஆகுதே….?” என்றவன் அவள் கண்களின் மேல் முத்தமிட்டான்.
“இப்போ நீ யுஎஸ் போனா மூணு வருஷம் ஆகும்னு சொன்னியே வர, உன்னை எப்படி டா அவ்ளோ நாள் பிரிஞ்சு இருப்பேன் நான்?” குரல் நடுங்க, அழுகையை அடக்கி கொண்டு சொன்னாள் அஸ்வினி.
“நாம் லைப்பிலே நல்லா செட்டில் ஆகணும்னா இந்த பிரிவு அவசியம் டா செல்லம்! எனக்கு நிறைய பொறுப்பு இருக்குனு உனக்கு தெரியும்ல்ல, அது எல்லாம் நிறைவா செஞ்சு முடிச்சிட்டா நான் நம்மளை பத்தி தைரியமா எங்க வீட்டிலே பேசுவேன்…. ப்ளீஸ் மா….” பொறுமையாக சொன்னான் ராஜேஷ்.
“ஆனா எங்க வீட்டில், பெரியப்பா அம்மாவுக்கு ஒரு வருஷம் ஆன பின்னே எனக்கு மாப்பிள்ளை பார்க்கணும் சொல்றார் டா….”
“நான் வேணா வந்து உங்க பெரியப்பா கிட்டே, இலை அண்ணன் கிட்டே பேசவா….?”
“என்ன சொன்னாலும் ராஜேஷ் இப்போது திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டான் என்று புரிய, இல்லை நானே சமாளிச்சுக்கிறேன்….” என்றாள் அரைமனதாக.
அவளின் மன வருத்தம் புரிய, “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்….” என்றவன், அவன் வீட்டில் நடந்ததை மிகவும் வருத்தப்பட்டு பகிர்ந்து கொண்டான்.
“எங்க அம்மாவுக்கு என் மேல் இருந்த நம்பிக்கையை அடியோடு அழிச்சிட்டு போய்ட்டா அந்த பிசாசு…. நான் என் கடமையை முடிச்சா தான் எனக்கே என் மேல் மரியாதை வரும் அஸ்வினி….” என்றான் தீவிரமாக.
அவளின் வெளிறிய முகத்தை கண்டவன்,
“நீ ஏண்டா இவ்ளோ பயந்து போயிட்டே….? நான் சீக்கிரம் அதெல்லாம் முடிச்சுடுவேன்…. நிச்சயமா நம்ம கல்யாணத்தை ரொம்ப தள்ளி போட மாட்டேன்…. எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டு இருக்க ஆசையா என்ன?” என்றான் சமாதானமாக.
“இல்லை ஆன்ட்டி பேசினது எல்லாம் பயமா இருக்கு…. ரொம்ப ஸ்ட்ரிக்டா அவங்க….?”
“நான் இருப்பேன் உன் கூடவே…. நீ எதுக்கும் பயப்பட வேண்டாம் என் செல்லம்….” என்றவன் அவள் நெற்றியில் லேசாக முட்டி பின் முத்தமிட்டான். முத்தம் அதோடு நிற்காமல் முகமெங்கும் தொடர்ந்து இதழில் வந்து நின்றது.
அவனின் நெருக்கத்தில் அவளின் பயம் சற்றே பின்னுக்கு போயிற்று. அவனுடன் இன்னும் ஒன்றினாள் அஸ்வினி. என்னை விட்டு விடாதே என்பது போல் இருந்தது அவளின் செய்கை. அதை புரிந்து கொண்ட அவனும் அவளை எப்போதும் விடவே மாட்டேன் என்னும் விதமாக இறுக்கி அணைத்து கொண்டான்.
அவன் நினைப்பது போல் அவள் கூடவே இருக்க முடியுமா அவனால்?