அத்தியாயம் 21
அன்று அவர்கள் சாப்பிட்டு முடித்து விட்டு செல்லும் போது, பார்த்தீவ் உடன் வாகினியும் தான் வந்தாள்.
அவளை பார்த்ததும் விக்ரம் மற்றும் விஜய் இருவரின் கண்களும் சுருங்கியது.
“இந்த தடவை நம்ப ஹவுஸ் மிடில் ஸ்கூல்ல கப் அடிக்கணும்”, என்றவள் விஜயையும் விக்ரமையும் பார்த்து, “அடிச்சே ஆகணும்”, என்று மட்டும் சொல்லி விட்டு சென்று விட்டாள்.
பாரதீவுக்கோ, “இத தானே டி நானும் சொல்லிட்டு இருந்தேன்.. இதையே சொல்லிட்டு போறா”, என்று நினைக்கவும், “நான் ரிலேல பார்ட்டிசிபேட் பண்றேன்”, என்று விக்ரமும் விஜயும் சொல்லவும், பார்த்தீவின் கண்கள் வெளியே வந்து விழவில்லை அவ்வளவே!
“அட பாவிங்களா! இவளோ நேரம் தோண்ட தண்ணி தீரும் வரைக்கும் கத்துக்கிட்டு இருந்தேன்… அப்போல்லாம் சண்டை போட்டுட்டு அவ வந்து ஒரே ஒரு வார்த்தை சொல்லிட்டு போனதும், இப்படி பல்டி அடிக்கிறானுங்க”, என்று நினைத்து கொண்டான்.
ஒரு வாரம் தீவிர பயிற்சி தான் மேற்கொண்டனர்.
ப்ளூ ஹவுஸ் கூட கடின போட்டியாளர்கள் தான்.
ஆகையால் கஷ்ட பட வேண்டிய நிலை தான்.
இதே சமயம் ரிலேவிற்காக நின்று கொண்டு இருந்தனர் நால்வரும்.
முதலில் துவங்க போவது பிரணவ் தான். அவன் ராகவிடம் கொடுக்க வேண்டும், அடுத்து ராகவ் விஜயிடம், விஜய் விக்ரமிடம், இது தான் வரிசை.
விக்ரம் ஸ்ப்ரின்ட் அடிப்பதில் தேர்ச்சி பெற்றவன் என்பதால் தான் அவனுக்கு கடைசியாக முறை இருந்தது.
போட்டி துவங்கியது.
சான்வி மற்றும் வர்ஷா, இருவரும் வாகினியுடன் அமர்ந்து இருந்தனர்.
பிரணவ் ஓட ஆரம்பித்தான்.
அவன் எப்படியோ முதலில் சென்று ராகவ்விடம் கொடுத்து விட்டான். ராகவும் சென்று விஜயிடம் கொடுத்து விட்டான்.
அடுத்து தான் பிரச்சனை ஆரம்பித்தது.
விஜயை வேண்டும் என்றே தட்டி விட்டு இருந்தான் அங்கே ஓடிக்கொண்டு வந்து இருந்த ப்ளூ ஹவுஸ் மாணவன்.
விஜய் விழுந்ததும் வாகினி மற்றும் பார்த்தீவ் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“அச்சோ நம்ப தோக்க போறோம்”, என்று சான்வி சொல்லவும், வர்ஷாவிற்கும் கூட அதே மனநிலை தான்.
விஜய் ஒருவழியாக ஓடிவந்து விக்ரமிடம் கொடுத்து விட்டான். அவனின் காலில் இரத்தம் வழிந்தது.
விக்ரம் அதை வாங்கி கொண்டு ஓடினான். அவனை தாண்டி மற்றவர்கள் கால் வாசி தூரம் தாண்டி விட்டார்கள் தான்.
ஆனால் புயல் வேகத்தில் ஓடினான். அவனால் இதற்கு மேல் ஓடவே முடியாது என்கிற அளவுக்கு ஓடினான்.
ப்ளூ ஹவுஸ் அந்த ரிப்பனை கடப்பதற்கு சரியாக ஒரு விநாடிற்கு முன் கடந்து விட்டான்.
“ஹுர்ரே!”, என்று ரெட் ஹவுஸ் மாணவர்கள் கத்தவும், வாகினியும் பார்த்தீவும், வர்ஷா மற்றும் சான்வியை அங்கேயே இருக்கும் படி சொல்லிவிட்டு விஜயை பார்க்க தான் சென்றனர்.
விஜய் சிறிது நொண்டி கொண்டு வரவும், “உட்காரு”, என்று வாகினி சொல்ல, அவனும் சேரில் அமர்ந்தாள்.
பயோலஜி மாணவி அவள், முதல் உதவி எல்லாம் திறம்பட செய்வாள் தான்.
அருகே இருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து அவனது காலை தொடவும், விஜய் சட்டென காலை இழுக்கவும், அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவனே காலை கொடுத்து விட்டான்.
அவனது ஷார்ட்ஸை சிறிது தூக்கி முட்டியில் வழிந்த இரத்தத்தை அவள் சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போதே, பார்த்தீவ் பேண்ட் எயிட் மற்றும் காட்டன் என்று எடுத்து கொண்டு வந்தான்.
அவளும் அந்த காயத்தை சுத்தம் செய்து முடித்து பேண்ட் எயிட் போடவும், அப்போது விசாலாட்சியும் வந்து சேர்ந்தார்.
அவரை பார்த்ததும், “கீழ விழுந்துட்டான் ஆண்ட்டி”, என்று சொல்லி அவள் எழுந்து கொண்டாள்.
விசாலாட்சி அவனின் காலை பார்த்து விட்டு, “ஏதும் பிரக்ச்சர் இல்ல, சிராய்ப்பு மட்டும் தான்… சரி ஆகிடுவான்”, என்று சொல்லவும் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது.
அடுத்து வந்த போட்டிகள் அனைத்திலும் ரெட் ஹவுஸ் தான் வென்றது.
நினைத்தது போல, பார்த்தீவ் அந்த வருட கோப்பையை தட்டி சென்று விட்டான்.
அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஏனென்றால் இது வரை ஒரு முறை கூட ரெட் ஹவுஸ் ஜெய்த்ததே இல்லை.
கோப்பையை வாங்கி விட்டு, அவனின் கண்கள் தேடியது என்னவோ வாகினியை தான்.
கோப்பையை மற்றவர்களிடம் கொடுத்து விட்டு, விக்ரமிடம் வந்தவன், “வாகினி எங்க டா?”, என்று கேட்கவும், “அக்கா ஏதோ ரெகார்ட் நோட் எடுக்க கிளாஸ் ரூம் போயிருக்கா”, என்று சொல்லவும், அவளின் வகுப்பறைக்கு தான் விரைந்தான்.
அன்று தான் ஸ்போர்ட்ஸ் டே என்பதால் வகுப்பறையில் மாணவர்கள் யாரும் இல்லை.
வாகினி அப்போது தான் அவளின் ரெகார்ட் எடுத்து வைத்து கொண்டு திரும்பிய சமயம் அங்கே நின்று கொண்டு இருந்தான் பார்த்தீவ்.
மூச்சு இறைக்க ஓடி வந்து இருந்தான்.
“என்ன டா?”, என்று வாகினி கேட்டு முடிக்கும் முதல், அவளை காற்றே புக முடியாத அளவு இறுக்கி அணைத்து இருந்தான்.
இது தான் அவளை முதல் முறை அணைக்கிறான்.
இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் தான். ஆனால் ஒரு வயதிற்கு மேல் இருவரும் தொட்டு பேசுவதை நிறுத்தி தான் இருந்தார்கள்.
வாகினிக்கோ உடல் சிலிர்த்து அடங்கியது.
பதினேழு வயது பூம்பாவை அவள், வேதாந்தத்தை கூட அவள் இப்போதெல்லாம் அவ்வளவாக அணைப்பது இல்லை. விக்ரம் அவளுக்கு குழந்தை தான்.
ஒரு ஆடவனின் தீண்டல், அவளுக்குள் பல ஹார்மோன்களை சுரக்க வைத்தது.
இங்கு பார்த்தீவ் மகிழ்ச்சியின் உச்சியில் அவளை அணைத்து விட்டான். ஆனால் அணைத்த பின்பு அவனுக்குள்ளும் ஆயிரம் மாற்றங்கள்.
அவளின் கழுத்தில் முகம் புதைக்கவும், அவனது இதழ்கள் அவளது மேனியை உரசின.
இருவருக்குமே நடுக்கம். காதல் என்று சொல்ல முடியாது, ஆனால் இப்போது நட்பு மட்டும் என்றும் சொல்ல முடியாத நிலை.
“ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் வீட்டுக்கு கிளம்பலாம்”, என்கிற ப்ரின்சிபாலின் குரலில் சட்டென இருவரும் விலகி விட்டனர்.
இருவராலும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவே முடியவில்லை.
பார்த்தீவோ தலையை கொதி கொண்டு, அவளை பார்க்க, அவளின் கன்னங்களோ நாணத்தில் சிவந்து இருந்தது.
“ஐ அம் சாரி வாகினி… அது ஏதோ ஒரு எமோஷன்ல”, என்று அவன் தடுமாறவும், “இட்ஸ் ஓகே”, என்று வாகினி அங்கிருந்து செல்ல முற்படவும், அவளின் பள்ளி சீருடையின் குர்த்தியின் முனையை யாரோ பிடித்து இருப்பது போன்ற உணர்வு.
பார்த்தீவாக இருக்குமோ என்று மனதில் எண்ணம் தோன்ற, திரும்பி பார்த்தவளுக்கு தென்பட்டது என்னவோ அவளின் குர்த்தி நாற்காலி ஒன்றில் மாட்டி இருப்பது தான். அவள் அதை எடுக்கும் முன், பார்த்தீவின் கை எடுத்து விட்டு இருந்தது.
இருவரும் கண்களும் உரசி கொண்டன.
வாகினி புன்னகைத்து செல்லவும், அவனும் அவளை பின்தொடர்ந்தான்.
இப்போது தான் வாகினியை நெற்றி முதல் பதம் வரை கவனிக்கிறான்.
இவ்வளவு நாள் நல்ல தோழியாக இருந்தவள் தான். இன்று ஏனோ அதையும் தாண்டி அவனின் மனம் அவளை பார்க்க தூண்டியது.
நல்ல நட்பில் இருந்து தானே நல்ல காதலும் தொடரும். அதற்காக நண்பர்கள் அனைவரும் காதலர்கள் ஆகி விடுவதும் இல்லை.
வாகினி அழகானவள், அறிவானவள் அதை விட ஆளுமையானவள். அவளை பார்த்து எப்போதும் அவன் பிரம்பித்தது உண்டு.
அன்னை இல்லாமல் விக்ரமிற்கு அன்னையாகவே இருப்பவள்.
இன்று வரை தோழி மட்டும் தான். இனி எப்படியோ என்று அவனின் மனம் கேள்வி கேட்க, அவனுக்கே விடை தெரியவில்லை.
இதே சமயம், இருவரும் அங்கே வந்து விட, “கிளம்பலாமா?”, என்று விசாலாட்சி கேட்கவும், “போலாம் அம்மா”, என்று பார்த்தீவ் சொல்லிவிட்டு வாகினியை ஒரு பார்வை பார்க்க, அப்படியே சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்த பார்த்தீவ் அவனின் அறையில் அவன் சட்டையை கழட்டி பார்க்க, வாகினியின் பொட்டு அவனின் சட்டையில் இருந்தது.
அவன் அதை எடுத்து பார்க்க, இப்போது அவளை அணைத்து இருப்பது போல ஒரு உணர்வு.
சட்டென தலையை உலுக்கி சமன் செய்து கொண்டான்.
வாகினிக்கும் இதே நிலை தான். ஆனால் அவள் மனதை நிலை படுத்தி கொண்டாள்.
அடுத்து வரும் நாட்கள் இப்படியே நகர, அவர்கள் இருவருக்கும் பரிச்சையும் நெருங்கி இருந்தது.
வாகினி கஷ்ட பட்டு படித்து கொண்டு இருந்தாள். அன்று அவளுக்கு பிராக்டிகல் தேர்வு இருக்கவும், பார்த்தீவ் அவளை பார்ப்பதற்காகவே அவளின் வகுப்பறையை நோக்கி வரவும், அங்கே வாகினி அவளது வகுப்பு தோழன் விஷாலுடன் பேசி கொண்டு இருந்தாள்.
அவள் சிரித்து சிரித்து பேசுவதை இவன் பார்க்கவும், பார்த்தீவின் மனதிற்குள் ஒரு நெருடல்.
அவளை நெருங்கி விட்டான்.
“ஹாய் பார்த்தீவ்”, என்று வாகினி கூறவும், “ஹாய்”, என்றவனின் விழிகள் இன்னும் விஷாலிடம் தான் இருந்தது.
“சரி வாகி நம்ப அப்புறம் பார்க்கலாம்… நாளைக்கு வீட்ல மீட் பண்ணலாம்”, என்று அவன் சொல்லிவிட்டு செல்லவும், பார்த்தீவிற்கு பொறாமை தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது.
“சொல்லு பார்த்தீவ்”, என்றவளிடம், “நாளைக்கு அவன் உன் வீட்டுக்கு வரானா?”, என்று கேட்கவும், “ஆமா பார்த்தீவ்! நானும் விஷாலும் சேர்ந்து படிக்கலாம்னு இருக்கோம்”, என்று கூறினாள்.
“நானும் வரலாமா?”, என்று அவன் கேட்கவும், “நாங்க பயோ படிக்க போறோம் டா”, என்று அவள் சொல்ல, “நான் காமர்ஸ் படிக்கிறேன் டி இதுல என்ன இருக்கு”, என்று சொல்லவும், “இப்போ எதுக்கு கோவ படுற? வந்து படி… நான் கிளம்புறேன்”, என்று சொல்லி அவள் நகர பார்க்க, அவளின் கையை பிடித்து இழுத்து இருந்தான்.
“ஆல் தி பெஸ்ட்”, என்று அவளுக்கு வாழ்த்து சொல்லவும், “ரொம்ப தேங்க்ஸ்”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
அடுத்த நாள், அவள் சொன்ன மணிக்கு ஒரு நேரத்திற்கு முன்னவே கிளம்பி விட்டான் பார்த்தீவ்.
“நானும் வரேன் அண்ணா”, என்று பிரணவ் சொல்லவும், “அவனையும் கூட்டிட்டு போ டா.. அவன் அங்க விக்ரம் கூட விளையாடிகிட்டு இருப்பான்”, என்று விஸ்வநாதன் சொல்ல, டிரைவர் உடன் தான் அனுப்பி வைத்தார்கள்.
அவர்கள் வந்து வீட்டிற்குள் நுழைய, கண்ணம்மா தான் இருந்தார்.
அவருக்கு பார்த்தீவ் மற்றும் பிரணவ் நல்ல பழக்கம் தான்.
“பாப்பா உங்கள ஸ்டடி ரூம்க்கு வர சொல்லுச்சு தம்பி”, என்று பார்த்தீவை பார்த்து அவர் சொல்லும் போதே, விக்ரம் வெளியே வந்து விட்டான்.
“பிரணவ் வா டா புது வீடியோ கேம் விளையாடலாம்”, என்று இருவரும் விக்ரமின் அறையில் நுழைந்து கொண்டனர்.
பார்த்தீவ் ஸ்டடி ரூம் செல்ல, அங்கு அவன் பார்த்த காட்சியில் அவனுக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.