🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 22
சற்று முன் நடந்த நிகழ்வை யூகிக்க முடியாது போனது பெண்ணவளுக்கு. அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் கூடவே!
அவளது பட்டுக் கன்னத்தில் அறைந்து விட்ட கையை வெறித்துப் பார்த்த ருத்ரனுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போயிற்று.
கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்த்தவளுக்கு கண்ணீர் துளி கூட வெளியே வரவில்லை. மாறாக கன்னத்தைப் போலவே கண்களும் சிவப்பேறின.
“வாய் இருக்குல்ல. எங்கேயாவது போறதுனா சொல்லி விட்டு தொலைய வேண்டியது தானே? ஏன் உசுர எடுக்குற. கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன் டி” பிடரியை அழுந்தக் கோதிக் கொண்டவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு சென்று இருக்கையில் அமர்ந்தான்.
வரும் போதிருந்த உற்சாகம், சந்தோஷம் அனைத்தும் ஒட்டு மொத்தமாக வடிந்து விட்ட நிலை. அவன் கற்பாறையாக இறுகி நிற்க, அவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
அவளது ஊரை அடையும் வரை மௌனமே இருவரிடையே ஆட்சி செய்தது. இறங்கியதும் “ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்” என்று சொல்லியபடி ரெஸ்ட்ரூம் நுழைந்தவளுக்கு கண்ணீர் ஆறாகப் பெருகியது.
இத்தனை நாளாக அன்பைக் கொட்டியவனின் நொடி நேர மௌனமே அவளைச் சுட்டு விட வல்லது. அப்படி இருக்கையில் அவனது பராமுகம் இனம் புரியாத வலியை ஊடுறுவச் செய்தது, நெஞ்சினில்.
வாயை மூடி அழுது தீர்த்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனருகே வர, அவளையே ஆழ்ந்து நோக்கினான் ருத்ரன்.
“அழுதியா?” பார்வையால் ஊடுறுவி நின்றவனின் குரல் வெகு நிதானமாக வெளிப்பட்டது.
பதில் பேச முடியாமல் திணறிப் போனவள் ‘ஆம்’ என மட்டும் தலையசைத்தாள். அவனிடம் பொய் சொல்லும் தைரியம் இல்லை, அதை விட அவன் கண்களைப் பார்க்கும் திராணியில்லை என்பதே சாலப் பொருந்தும்.
ஆட்டோவில் அவளது வீட்டை அடைந்ததும் அவளுள்ளம் துள்ளிக் குதித்தது. ஆயினும் ருத்ரன் கோபமாக இருக்கையில் அவளால் முழு மனதோடு இங்கு வந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை.
மல்லிகைப் பூ வாசம் மூக்கைத் துளைக்க, அதனை ஆழ்ந்து முகர்ந்தவாறு கதவைத் திறந்தான் ருத்.
அவன் உள்நுழையும் போது அனிச்சை செயலாக அவளும் ஒன்றாகவே காலெடுத்து வைத்து நுழைந்தாள். இருவரும் அமைதியோடு தான் உடைமாற்றி வந்தனர்.
நீண்ட நேர பயணம் என்பதால் ருத்ரனுக்கு பசிக்க ஆரம்பித்தது. மதிய உணவை சிற்றுண்டிச் சாலையிலிருந்து பொதி செய்து வாங்கிக் கொண்டு வந்ததனால் நேரே சமயலறைக்குச் சென்றவன் தட்டில் உணவை வைத்து எடுத்துக் கொண்டு வந்தான்.
அவளைக் கண்களால் அலசி ஆராய, ஓரமாக இருந்த கட்டிலில் தூங்கிப் போயிருந்தாள் அஞ்சனா. உணவுத் தட்டை மேசையில் வைத்து விட்டு அவளருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தான் ருத்ரன்.
வெண்கன்னம் அவனின் கைத்தடத்தால் சிவந்து போயிருந்தது. தன்னவளை சிறு துரும்பும் தீண்டி வலிக்கச் செய்யக் கூடாது என நினைக்கும் தானே இன்று அவளை அறைந்து காயப்படுத்தியதை நினைக்க தன் மீதே கோபம் வந்தது.
நடுங்கும் கைவிரல்களால் அவள் கன்னத்தை வருடிக் கொடுக்க, “மாமா” எனும் அழைப்புடன் கை நீட்டி அவனது டிசர்ட்டைப் பிடித்துக் கொண்டு உறங்கினாள் அஞ்சு.
அவ்வழைப்பில் மண்டையை வண்டாகக் குடையும் யோசனையில் ஆழ்ந்தது அவன் மனம்.
“மாமாவா? யாரு அது?” அவன் யோசனைக்குத் தடா போட்டு அதற்கான தெளிவை அள்ளிச் சேர்த்தது அவளின் அடுத்து வந்த பேச்சு.
“நான் வேணும்னே பண்ணலங்க. அந்த வயலை கண்டதும் நீங்க என்னை பார்த்தனு சொன்னது ஞாபகம் வந்துச்சு. அன்னிக்கு எப்படி கண்டு காதலிச்சீங்களோ அதே மாதிரி உங்களுக்கு என் காதலை சொல்லனும்னு நெனச்சி தான் ட்ரெயின்ல இருந்து இறங்கி போனேன்.
நீங்க என்னை தேடுவீங்க. பதறிப் போவீங்கனு நான் கொஞ்சம் கூட யோசிக்கல. பைத்தியக்காரத்தனமா நடந்துக்கிட்டேன். சாரி அபய்” தூக்கத்தில் முனகியவளின் பேச்சில் அதிர்ந்தது அவனுள்ளம்.
அவள் இதற்காகத் தான் சென்றிருப்பாள் என்பதை அப்போதே ஊகித்து விட்டான். ஆனால் அத்தனை நேரமிருந்த பதற்றம், அவளைக் காணாத தவிப்பு அனைத்தும் ஒருசேர வந்த ஆற்றாமையில் அறைந்து விட்டான்.
அவளை இழந்திருப்பேனோ? எனும் எண்ணமே அவனை உருக்குலைத்து தன்னையும் மீறி நடக்க வைத்தது. அவள் மன்னிப்பு கேட்டதில் அவனுள்ளம் உருகியது.
அவள் தலையை தடவ, மெல்ல எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கியபடி தன்னருகில் இருந்தவனைப் பார்த்தவளுக்கு புரிந்தது இத்தனை நேரம் பேசியது கனவில் அல்ல, நிஜத்தில் என்று.
அவளிரு கைகளையும் இறுக்கிப் பிடித்து, “சாரி அம்மு குட்டி. ஏதோ டென்ஷன்ல அடிச்சிட்டேன். என்ன இருந்தாலும் நான் அப்படி பண்ணி இருக்க கூடாது. சாரி சாரி” மன்னிப்பை இறைஞ்சி நின்றான் ஆடவன்.
“இல்லை என் மேல தான் தப்பு. சொல்லாம போய் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்” கலங்கிய கண்களில் வெளிவரத் துடித்த விழிநீரை வெகு சீக்கிரம் இதழ் கடித்து அடக்கிக் கொண்டாள்.
தன் கண்ணீர் அவனைக் கஷ்டப்படுத்தும் என்பதை அறிந்தவள் இனி அழக் கூடாது என்று முடிவெடுத்திருந்தாள். அதனால் தான் அவன் அடித்த போதும் அழவில்லை. கட்டுப்படுத்த முடியாத சமயம் ரெஸ்ட்ரூமில் கொட்டித் தீர்த்து விட்டு வந்தாள்.
“அதை விடு! வா சாப்பிடலாம்” தட்டிலிருந்த உணவை அவளுக்கும் ஊட்டி தானும் சாப்பிட்டு முடித்தான் அவன்.
“உங்க வீட்டுல எனக்கு ஊட்ட சொல்லுவீங்க. இங்கே வந்ததும் என்னை பேபியாக்கி நீங்க ஊட்டுறீங்க. இது கூட நல்லாத் தான் இருக்கு” அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டாள் அஞ்சனா.
“அப்பா போனதுக்கு அப்பறம் என் வாழ்வே பாழடைந்த பங்களா மாதிரி வெறிச்சோடி போய் கிடந்தது. சந்தோஷம்னு பெருசா எதுவும் இல்லாம டைம்டேபிள்படி இயங்குற ஸ்டுடன்ட் மாதிரி என் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருந்தேன்” சற்று நிறுத்தி மூச்சை உள்ளிழுத்து நுரையீரலை ஸ்பரிஷிக்க விட்டாள்.
“அப்போ தான் என் வாழ்க்கையில் அதிரடியா, தடாலடியா நீங்க வந்தீங்க. கொஞ்சமும் எதிர்பார்க்காம வந்து, நான் எதிர்பார்த்ததையும் விட அதிகமா காதலை அள்ளிக் கொட்டினீங்க. இப்படி ஒரு காதலை எங்கேயும் பார்த்ததில்லனு சொல்வேன். என் வாழ்க்கையில் வந்து வாழ்க்கையே நீங்களா மாறிட்டீங்க.
இப்போ என் மனசு முழுக்க உங்களுக்கான காதல் பொங்குது. அதை உங்க கிட்ட கொட்டனும். உங்க அளவுக்கு இல்லேனாலும் என்னால உங்கள அவ்ளோ காதலிக்க முடியும் அபய்” என்றவள் அவனது முகத்தருகே தன் மூச்சு மோதும் அளவிற்கு நெருங்கி வந்தாள்.
இரு மூச்சுகளும் ஒன்றரக் கலக்க, ஈரிதயங்களும் அதிவேகமாய்த் தான் துடிக்க ஆரம்பித்தன.
அவன் விழிகளோடு தன் அஞ்சன விழிகளை உறவாட விட்டு ஒவ்வொரு எழுத்தாக நிதானத்துடன் மொழிந்தாள்.
“ஐ லவ் யூ மாமா…!!” அசையும் இதழ்களில் காதல் மொழி படித்தவனது உணர்ச்சிகள் கலவையாய் கிளர்ந்தெழ அவளை இறுகக் கட்டிக் கொண்டான் கணவன்.
காதல் வசனம் ஒரு பக்கம் என்றால், அவளின் மாமா என்ற பிரத்தியேக அழைப்பு அவனை ஆனந்தப் பள்ளத்தாக்கில் முங்கியெழ வைத்தது.
அவளையே காதலித்து தினம் தினம் மனதிற்குள் காதல் கதை பேசி வாழ்ந்தவன், கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்தில் துவண்டு போய் ஏங்கியவன், அவள் கிடைத்ததும் அவளைத் தன் காதலில் குளிப்பாட்டுவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவனுக்கு அவளிடமிருந்து செவியேற்கக் கிடைத்த அந்த “ஐ லவ் யூ” இதயத்தை பனிமழைச் சாரலாய் நனைத்தது.
மயிர்க்கால்கள் பூரிக்க, ஒரு முறை சலேரென சிலிர்த்து அடங்கியது அவனின் கட்டுடல்.
“திரும்ப கூப்பிடு.. மாமா சொல்லு” சிறு மழலை தன்னை முதலில் அழைப்பது கேட்டு அதனிடம் மீண்டும் அழைக்க சொல்லி கெஞ்சிக் கூத்தாடும் அன்பனாய்த் தான் மாறிப் போனான் காதலனும்.
“மாமா! என் செல்ல மாமா” அவன் மீசையைப் பிடித்து செல்லம் கொஞ்சியவளுக்கு வெட்கம் வெள்ளமாய் பீறிட்டுப் பாய, அவன் மார்பிற்குள் புதைந்து கொண்டாள் பூம்பாவை.
“அச்சோ அம்மு! என்னடி இப்படி கொல்லுற? ப்ப்பாஹ் அந்த வார்த்தையை கேட்குறதே மாமாவுக்கு செம ஹேப்பியா இருக்கு” அவளைக் கைகளில் ஏந்தி சுற்றினான் அபய்.
“அஞ்சுக்கா! உங்க லவ்வரைத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?” வாயிலில் வாயும் கண்ணும் விரிய நின்றிருந்த சின்னவனைக் கண்டு அபய்யின் கையிலிருந்து துள்ளி இறங்கினாள் அஞ்சனா.
அவனை அள்ளித் தூக்கி “அடேய் பெரிய மனுஷா! யாரு லவ்வர்?” என்று அவனிடம் கேட்டான்.
அபய்யால் அன்று ஆக்சிடன்ட்டில் காப்பாற்றப்பட்ட அஞ்சனாவின் அடுத்த வீட்டு பையனோ “அன்னிக்கு இந்த ஊருக்கு வந்தப்போ அஞ்சு டீச்சர் உங்களை லவ் பண்ணுறதா என் கிட்ட சொன்னா. நான் கேட்ட மாதிரி நீங்க இவங்களை கட்டிக்கிட்டீங்களா? அய்ம் சோ ஹேப்பி அங்கிள்” அபய்யின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் சிறுவன்.
“உனக்கு என்னை கல்யாணத்துக்கு முன்ன ஆல்ரெடி தெரியுமா அம்மு?” தன்னவளிடம் கேட்டவனுக்கு புரியாத புதிராக இருந்தது.
“நீங்க ஊருக்கு வந்தப்போ தான் தெரியும். ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி” என்றவள் சொல்ல ஆரம்பித்தாள்.
♡♡♡♡♡
“அப்பா!” ஓடி வந்து தன்னை அணைத்துக் கொண்ட மகளின் தலை வருடி, “வாங்க மாப்பிள்ளை” நிதினையும் வரவேற்று அமர வைத்தார் கோபால்.
தாயைத் தேடி சமையலறை சென்ற ஆலியா அவரை “ம்மா” என அணைத்துக் கொள்ள, “ஆலி கண்ணு” அவள் உச்சி முகர்ந்தார் லீலா.
“மிஸ் யூ மா” தாயைக் கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்ச, “ஒரு நாளைக்கே இவ்ளோ பந்தா பண்ணுற? என்னை எப்போவாவது கண்டுக்கிறியா நீ. இப்போ மட்டும் சும்மா” லீலா முறுக்கிக் கொள்ள,
“உன்னை கண்டுக்காம இருப்பேனா லீலு குட்டி! எங்கே உன் பின்னாடி சுத்தினா உங்க ஆளு, அதான் எங்கப்பா மனசு நோகுமே அவருக்கு பாசசிவ்னஸ் வருமேனு ஒரு நல்லெண்ணத்தில் உன்னை கண்டுக்காத மாதிரி டீல்ல விட்டுட்டேன்” கண்சிமிட்டி காவியம் படைத்த மகளை முறைக்க முயன்று முடியாது போகவே சிரித்து வைத்தார்.
“என் கிட்ட இவ்ளோ பேசு. இப்படி கத்தி கத்தி மாப்பிள்ளை காதையும் டேமேஜ் பண்ணிடாதம்மா தாயே” அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்டினார் லீலா.
“உனக்கும் மாப்பிள்ளை தான் பெருசா போயிட்டானா? அப்பாவும் என்னை கழற்றி விட்டுட்டு அவனை பிடிச்சுக்கிட்டார். நீயும் அப்படி தானே? பெரிய சீமராஜா அவன்” கைகளை இடுப்பில் குற்றி சண்டைக்கோழியாய் சிலிர்த்து நின்றாள் ஆலியா.
“என்னடி மாப்பிள்ளைய அவன் இவன்னு மரியாதை இல்லா பேசுற? இப்படி பேச கூடாது” மகளை அதட்டினார் சராசரி தாயாக.
“அப்பறம் வேற எப்படி? அதெல்லாம் நமக்கு செட் ஆகாது மாதாஜி. அந்த முறுக்கு மீசை மாப்பிள்ளைக்கு” என சொல்ல வந்தவள், “அம்மா மாப்பிள்ளைக்கு சாப்பிட முறுக்கு கொடுங்க” பவ்வியமாக கூறவே,
“என்னாச்சு உனக்கு?” என திரும்பிய லீலா அங்கு கோபாலும் நிதினும் நிற்பது கண்டு மகளின் அளவில்லாத அடக்கத்திற்கான காரணத்தை அறிந்தவராக புன்னகைத்தார்.
“என்னம்மா ஏதோ மாப்பிள்ளைக்கு முறுக்குனு ஏதோ சொன்ன மாதிரி விளங்கிச்சு” புருவம் உயர்த்திப் பார்த்தார் கோபால்.
“ஆ..ஆமாப்பா உங்க மாப்பிள்ளை இருக்காரே, ஐ மீன் நிதினுக்கு முறுக்குனா ரொம்ப இஷ்டம். அதை சாப்பிட கொடுக்க சொன்னேன்” அசடு வழிய சிரித்தாள் பெண்.
“அப்போ மீசைனு சொன்ன மாதிரி விளங்கிருச்சு” நிதின் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, “இல்லைங்க. உங்களுக்கு முறுக்கு தின்ன ஆசைனு சொன்னேன். ஆசைங்குறது உங்க காதுக்கு மீசைனு கேட்டுருச்சு” முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி இளித்து வைத்து விட்டு நழுவி ஓடி விட்டாள்.
“நான் போய் உங்க வீட்டை சுத்தி பார்த்துட்டு வரேன் மாமா” கோபாலிடம் சொல்லி விட்டு அவளைப் பின்தொடர்ந்து சென்றான் நிதின்.
இருவரது சேட்டையிலும் சிரித்த கோபாலுக்கும் லீலாவுக்கும் மகளின் வாழ்க்கை மீதிருந்த கவலைகள் அத்தனையும் பறந்து போய் மனம் நிறைந்தது.
அவளைத் துரத்திக் கொண்டு ஓடியனுக்கு அழகு காட்டி விட்டு மொட்டை மாடியில் ஏறி ஓட, “அடியே விழுந்துருவ பார்த்து” அவளைப் பிடித்து காதுப்பிடியில் அறைக்கு அழைத்து வந்தான்.
அதற்குள் அவன் கையைக் கடித்து விட்டு கட்டிலின் பின்னால் மறைய, அவன் துரத்த இவள் ஓடவென அறையே ஒலிம்பிக் மைதானமாகத் தான் மாறியது.
கட்டிலின் மேல் ஏறி துள்ளி இறங்கப் போன ஆலியாவை எட்டிப் பிடிக்க எத்தனித்த நிதின் சமநிலை தடுமாறி அவள் மீது விழுந்தான்.
“ஆஆ அம்மாஆஆ” என கத்தியவளின் வாயைத் தன் இதழ்களால் அடைத்திருந்தான் நிதின்.
அகல விரிந்த கண்களால் தன்னை ஏறிட்டவளைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியவவாறு அவளிதழில் கவி வடிக்க ஆரம்பித்தான்.
அதனைப் படித்து சண்டைக்காரியும் தலையாட்டும் சைனா பொம்மையாகி விட, ஓட்டப் போட்டி முடித்து அழகிய மல்(இதழ்) யுத்தமொன்றுக்கு அங்கு அடித்தளம் இடப்பட்டது.
விலகியும் அவளை விடாமல் கைவளைவுக்குள் நிறுத்தி “எது முறுக்கு மீசையா நான் ஆஹ்?” புருவம் தூக்கிப் பார்த்தான் நிதின்.
“ஆமாடா! இந்த மீசை தான் உனக்கு அம்சமா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று மீசையைச் சுட்டிக் காட்டியவள், “உன் முறுக்கு மீசை மேல் எனக்கு கிறுக்கு ஆசையடா” மெல்லிய நகைப்பொலியுடன் சொன்னாள் ஆலியா.
“முறுக்கு மீசை, கிறுக்கு ஆசை அடடா ரைமிங்ல கலக்குற ஆலி. இப்போ தான் நீ என் பொண்டாட்டினு நிரூபிக்கிற” அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டான்.
“இல்லனா வேற யாரு உனக்கு பொண்டாட்டியாம்? ஆமா, உன் அத்தை பொண்ணு ரம்யா கால் பண்ணிருந்தா. அது பத்தாதுன்னு நித்தி டார்லிங்னு கொஞ்சல் வேற” அடிக்கண்ணால் முறைப்பாகப் பார்த்தாள் மனைவி.
“அவள் அப்படி தான் கூப்பிடுவா. மத்தவங்க மாமா, அத்தான்னு பேசுவாங்க. இது மெட்ராஸ் போய் படிச்சிட்டு வந்தது. அதான் டார்லிங் பேபினு கூப்பிடுவா” புன்னகையோடு கூறினான் நிதின்.
“டார்லிங்கே கதகதனு கொதிச்சிட்டு இருக்கு. இதுல பேபி பூபினு சிரிக்கிற. ஐயாவுக்கு பெரிய கோகுல கண்ணன்னு நினைப்பு. அத்தை பொண்ணுங்களுக்கு நிதின்னா உயிருனு சொல்றா” முறைத்துப் வைத்தாள்.
“அவ உயிருனு சொன்னதைக் கேட்டு உனக்கு எரியுதா வயிறு” டைமிங்கில் பஞ்சு டயலாக் தோரணையில் சொல்ல,
“போடா தயிரு. ஏதாவது வந்துட போகுது வாயில. என்னைத் தவிர எவளையாச்சும் நீ பார்த்த, சிரிச்ச கொன்றுவேன்”
“ஹா ஹா வசீகரா படம் பார்த்தியா? விஜய் கிட்ட ஸ்னேகா சொல்லுற மாதிரியே ஃபீல் ஆகுது”
“நான் ஸ்னேகா மாதிரி சொல்லிட்டு எல்லாம் இருக்க மாட்டேன். கத்தியை எடுத்து சொருகிட்டு சத்தம் இல்லாம போயிட்டே இருப்பேன்” கத்தியால் குத்துவது போல் செய்கை செய்ய,
“அம்மா! உன் அப்பாவி மகனை கொலைகாரி கிட்ட கோர்த்து விட்டுட்டீங்களே. உங்களுக்கு இருக்கிற ஒரே பையன் நானு” வராத கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டான் அவன்.
“வாய் வாய்! எடக்குமடக்கா பேசிட்டே இரு” அவன் கன்னத்தில் தட்டினாள் ஆலி.
“ஆலி எனக்கொரு சந்தேகம்” பீடிகை போட்டவனிடம் என்ன என்பதாக பார்வையை செலுத்தினாள்.
“ஆலியா நீ ஆவியா?” கடும் யோசனையோடு கேட்டவனின் கேள்வியில் ஏகத்துக்கும் கடுப்பாகி, “ஆவி தான். அது என்னல்லாம் பண்ணும்னு காட்ட வேணாம்?” அவன் கன்னத்தில் கடித்து வைக்க,
“ஆவ்ச்சு, வலிக்குது டி” கன்னத்தை பிடித்துக் கொள்ள, “வலிக்க தான் கடிக்கிறேன்” அடுத்த கன்னத்தில் வலிக்காமல் கடித்து அவனைப் பார்த்தாள்.
“என்னடி பசி வெறில என்னை கடிக்கிறியா? இந்தா” அடுத்த கன்னத்தை மீண்டும் காட்ட,
அவ்விடத்திற்கு முத்தத்தால் ஒத்தடம் கொடுத்து மதுரமாக நகைத்தாள் நங்கை. அவளை அள்ளி அணைத்துக் கொண்டு அம்முத்தத்தை அவள் கன்னத்திற்கு இடம் மாற்றியவனின் இதழ்களிலும் நீங்காத புன்னகை.
தொடரும்…….♡
ஷம்லா பஸ்லி