Home Novelsஇதய வானில் உதய நிலவே...!!22. இதய வானில் உதய நிலவே!

22. இதய வானில் உதய நிலவே!

by Shamla Fasly
5
(2)

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️

 

நிலவு 22

 

தன்னை வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த தாயைப் பார்க்க முடியவில்லை என்று உதய் ஏங்கிய பொழுதுகள் ஏராளம். இன்று அவன் கைகளில் புகைப்படமாக அவரைப் பார்த்தவனின் உள்ளம் சில்லிட்டு அடங்கியது.

 

தன் பெற்றோர்களை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும் அவன் அவர்களை காண எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர்களை தேடிப்பிடிக்கலாம் என ஒரு சில சமயம் தோன்றினாலும் அதற்கான எந்த முயற்சியிலும் இறங்கவில்லை.

 

முயற்சிக்கவில்லை என்பதை விட முயற்சி செய்து  எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக முடிந்தால் அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதுவே உண்மை. என்னதான் உடலளவில் வன்மை பொருந்தியவனாக இருந்தாலும் அன்பு என்று வருகையில் மனதளவில் பலவீனமான ஒரு குழந்தை போல் மாறிவிடுகிறான் இவன்.

 

அவனைச் சுமந்த தாயை அவனிதயத்தில் சுமந்திருக்கும் அதியா கண்டு பிடித்து விட்டாள். அவள் கூறியது போல் இது மிகப்பெரிய பரிசு தான்!

 

வெறுமனே பரிசு என்று கூட கூறி விட முடியாத விலை மதிக்கவே முடியாத பெரும் பொக்கிஷம். அவனது உள்ளத்து உணர்வு!

 

“பிடிச்சிருக்கா கண்ணா…??” என தன்னவன் முகம் பார்க்க, “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பிடிச்சிருக்கு. இதுக்கு எத்தனை தடவை தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது. ஐ லவ் யூ டா நிலாம்மா” அவளை அன்புடன் பார்த்தான் காளை.

 

அவனது இந்த மகிழ்வுக்காகத் தானே அத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் தேடிக் கண்டுபிடித்தாள். கல்பெஞ்சில் அமர்ந்தவனுக்கு தன் தாய் மடியில் அமர்ந்த சுகம்.

 

அந்த பெஞ்சை வருடியவனுக்கும் தாயை ஸ்பரிசிக்கும் உணர்வு! மீண்டும் தன்னவளுடன் அந்த பாடசாலையை சுற்றிப் பார்த்தான். தன் தாய் கற்பித்த பாடசாலை என்பதை அறிந்த பின்பு அவ்விடமே புது மாதிரி தோன்றியது.

 

“இதயா…!!” என்று அழைத்தவன் அவன் பக்கம் திரும்பியவளின் கையைப் பிடித்து விரல்களோடு விரல் கோர்த்துக் கொண்டான் இறுக்கமாக.

 

“என்னடா? வேற நேரத்துல வளவளனு வாய் மூடாம பேசுவியே. இப்போவும் பேசு” என்றாள் அதி.

 

“பேசத்தான் நினைக்கிறேன். ஆனாலும் பேச முடியாமல் இருக்குங்க. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் அதி. உணர்வுகள் என்னைக் கட்டிப்போட்டு ஆட்டிப்படைத்து பேச விடாம பண்ணுது.

 

என் அப்பாம்மாவை நேரில் பார்க்க முடியல. ஆனா இப்படி போட்டோ மூலமாக பார்த்துட்டேன். அம்மா அதிகமா இருந்த இந்த ஸ்கூலைப் பார்க்கும்போது அவங்க ஒவ்வொரு இடத்திலும் நிற்கிறா மாதிரி ஃபீல்” புன்னகை தவழ்ந்தது அவனது அதரங்களில்.

 

இப்பொழுது பேசினான். நிறையப் பேசினான். உள்ளத்து உணர்வுகளை வடிக்கும் வடிகாலாக வாய் வழியே வார்த்தைகள் வெளிப்பட்டன.

 

வகுப்பறைகளைக் கண்டு “அம்மா இங்கே நின்னு படிச்சு கொடுத்திருப்பார்ல? இந்த போர்டில் எழுதி இருப்பாங்க இல்ல?” என்று ஓயாமல் பேசிக்கொண்டே வந்தான்.

 

சிறு குழந்தை போல் இருந்தன அவனது செய்கைகள். அவற்றைப் புன் சிரிப்புடன் பார்வையால் வருடிக் கொண்டு வந்தாள் பெண்ணவள்.

 

இருள் சூழ இருவரும் வீட்டை அடைந்தனர். குளியலறைக்குள் புகுந்து அலுப்புத் தீர குளித்தவன் டி-ஷர்ட் ஷார்ட்சில் தலையைத் துவட்டிக் கொண்டு வெளியே வந்தான். 

 

ஏதோ பாட்டை முணுமுணுத்தவனை  பார்த்திருந்தாள் அதியா. அவனோ புருவம் தூக்கியவாறு அருகில் வர “ஏ…ஏன் அப்படி பார்க்கிறே?” பின்னால் இரண்டடி நகர்ந்தாள் அவள்.

 

“ஏன் பார்க்க கூடாதா? என் பெண்டா பேபியை நான் அன்பா, பாசமா, காதலா, அழகா, ம்ம் இன்னும் வித விதமா பார்க்கலாம்” குறும்புடன் அவன் கண்ணடிக்க,

 

“ஓகே பாரு. பட் இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வெளியில போய் இரு வரேன்” என்று கெஞ்சலுடன் தலை சாய்த்தாள்.

 

“ஒன்லி ஃபைவ் மினிட்ஸ் தான். இல்லனா உள்ளே வந்துருவேன்”

 

“உனக்கு அவ்ளோ தைரியம் எல்லாம் கிடையாதுன்னு தெரியும். சும்மா சீன் போடாமல் இடத்தை காலி பண்ணு” என கிண்டலடித்தாள் காரிகை.

 

“அடிப்பாவி! பாவமேனு விட்டு வெச்சுட்டு என் பாட்டுல இருந்தா சீண்டி விடுவீங்களா?” என அவளை நோக்கி வேகமாக வர “போடா போடா” என அவனைத் தள்ளி விட்டு குளியலறைக்குள் நுழைந்தவளைப் பார்த்து புன்னகையுடன் ஹாலிற்கு சென்று சோபாவில் சாய்ந்து கொண்டான்.

 

ஒரு சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட அவனை அழைத்தாள் அதி. உள்ளே சென்று அவளை நோக்கிப் பார்வையை திருப்பியவன் விரிந்த விழி மூடத்தான் மறந்தும் போனான்.

 

மயில் தோகை வர்ண பிளவுஸும் இளம் சிவப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்து முடியை விரித்து கிளிப்பிற்குள் அடக்கி அழகோவியமாக நின்றவளைக் கண்டவன் இதயத்தில் இரட்டிப்பான துடிப்பு!

 

அவன் பார்வை உணர்ந்து “டாக்டரே! என்ன பார்வை?” என்று இடுப்பில் கை குற்றி ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிக் கேட்ட தோரணையில் சுற்றும் உணர்ந்து அவளை இதழ் கடித்து கீழ்க்கண்ணால் நோக்கியவன் அவள் மடியில் தலை வைத்துக் கொண்டான்.

 

அவனோ தன் நிலாப் பெண்ணை இமைக்காமல் பார்க்க “என்ன டா கண்ணா?” என்று கேட்டாள் அதி.

 

“என் அப்பாம்மா போட்டோவை எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்றவனின் கேள்விக்குப் பதிலளிக்கத் துவங்கினாள்.

 

“உனக்கு பர்த்டேக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ உன் அப்பாம்மா போட்டோவை கண்டுபிடிக்கலாம்னு தோணுச்சு. ஆனா எப்படி? எங்கன்னு போய் தேடுறதுனு எதுவுமே புரியல. உன் பர்த் சர்டிபிகேட்டை எடுத்துட்டு நீ பிறந்த ஹாஸ்பிடல்கு போனேன். உனக்கு டெலிவரி பார்த்த டாக்டர் பத்தி விசாரிச்சா அவங்க வீட்டு அட்ரஸ் கிடைச்சது.

 

அவங்க கிட்ட கேட்டேனா அந்த ஸ்கூல் பிரின்சிபல் மேடம் இரண்டு தடவை அத்தையை கூட்டிட்டு வந்ததா சொன்னாங்க. பிரின்சிபல் மேமைக் கண்டுபிடித்துக் கேட்கவும் உன் அப்பாம்மா போட்டோ கிடைச்சது. அவ்வளவுதான்” என்று சொன்னவளின் அன்பு அவனை மூழ்கடித்தது அணை கடந்த வெள்ளமாக.

 

“அவ்வளவு தான்னு அசால்ட்டா சொல்லுறீங்க. ஆனா இது எனக்கு மிகப்பெரிய விஷயம் இதும்மா! நீங்க எனக்காக செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு ஒரு யுகம் மாதிரி அவ்ளோ பெறுமதியானது. என் லைஃப்ல இதை விட சந்தோஷமா இருந்ததே இல்லைன்னு சொல்லும் அளவுக்கு என் இதயம் சந்தோஷத்தில் தத்தளிச்சுட்டு இருக்கு” எனக் கூறி உளமாறப் புன்னகைத்தான் அதியாவின் உதயா.

 

அவனது புன்னகையைப் பார்த்து, “டேய் எனக்கு உன்கிட்ட பிடிச்சதே இந்த சிரிப்பு தான். அதுல அப்படி ஒரு காந்த சக்தி இருக்கு. இட்ஸ் எ மேஜிக் டா மாயவர்ஷா” அவன் கள்ளம் கிள்ளினாள் மங்கை.

 

அவளது மென் ஸ்பரிசத்தில் மேலெழுந்த அவன் கை அவளது மாம்பழக் கதுப்புக் கன்னங்களை வருடிக் கொடுக்க “என்ன யஷு..??” என்று அவன் தொடுகையின் வித்தியாசம் உணர்ந்து கேட்டாள் அவள்.

 

“தெரியல நிலா. இன்னைக்கு நான் வித்தியாசமாக ஃபீல் பண்ணுறேன்” என்றவன், “அஞ்சன விழியால் நெஞ்சம் தீண்டும் உன்னை கொஞ்சத் தான் வஞ்சகமில்லா ஆசை எனக்கு மஞ்சள் நிலவே” என்று கவி பாடியபடி அருகில் வந்தான்.

 

“உன் நெஞ்சை மஞ்சமாக்கி தஞ்சம் கொண்ட என் செய்கை உணர்ந்தும் கொஞ்சாது இன்னுமே கெஞ்சிக் கொண்டிருப்பதும் ஏனோ என்னவனே?” இன்று பதிலுக்கு சொன்னவள், “எப்படி கவிதை? உன் ரேஞ்சுக்கு இல்லாட்டியும் ஏதோ நல்லா இருக்கா?” என வினவினாள்.

 

“நல்லா இருக்காவா? சும்மா கலக்கிட்டீங்க பேபிமா” என்றவன் கண்கள் அவளிடம் சம்மதம் வேண்டி நிற்க,

 

சம்மதத்திற்கு அறிகுறியாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டவளின் செய்கையைத் தனதாக்கி அப்பெண் மானைத் தன் வசப்படுத்தியது ஆண் சிங்கம்!

 

வானில் ஒளிரும் நிலவோ தன் தலைவன் கதிரவனோடு என்றுமே சேர முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டது.

 

இங்கு உதய சூரியனும் அதிய நிலவும் ஒரு போர்வைக்குள் இனிதாய் ஓருயிராகக் கலந்தனர். 

“யஷு கண்ணா…!!” என்ற சிணுங்கலோடு பெண்டா பேபி, இதயா, அதி, நிலாம்மா எனும் வர்ஷனின் விதவிதமான கொஞ்சல்கள் சங்கமிக்க உதய வர்ஷனின் பிறந்த நாள் மிக அழகாக முடிவுற்றது.

 

இவ்வாறு மிக இனிமையாக இருவரது வாழ்வும் நகர்ந்து சென்றன. நாட்கள் மாதங்களாகி ரெக்கை கட்டிப் பறக்க இருவரின் காதலும் கூடிக்கொண்டே தான் செல்லலாயிற்று.

 

அன்றொரு நாள் கட்டிலில் சரிந்து விட்டத்தை வெறித்துப் பார்த்திருந்தாள் அதிய நிலா. அவள் மனதில் கலக்கம் சூழ்ந்திருக்க விழிகளிலும் ஒருவித வெறுமையை குடி கொண்டிருந்தது.

 

சுவரில் புகைப்படமாக சிரித்துக் கொண்டிருந்த உதய்யைப் பார்த்தவள் வழக்கம் போல அவனை ரசிக்க முயல ஆனால் முடியாமல் தான் போனது. கடந்த இரு வாரங்களாகவே அவனது நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருந்தன.

 

நன்றாக சிரித்துப் பேசுகிறான். அவளோடு கை கோர்த்து மடியில் தலை சாய்கிறான். கவி பாடுகிறான். ஆனாலும் முன்பு இல்லாத ஏதோ ஒரு விலகலை அவனிடம் உணர்ந்தாள் அதி. இருந்தாலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளவும் இல்லை.

 

“அதிம்மா” என்னும் குரலில் சிந்தை கலைந்து எழுந்தவளைப் பார்த்து புன்னகைத்த வர்ஷன், “என்ன பலமான யோசனை மேடமுக்கு?” என அவளிடம் கேட்கவும் தான் செய்தான் ஆணவன்.

 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை” நலிந்து ஒலித்தது அவள் குரல்.

 

“நோ! உங்க வாய்ஸ் ஏதோ இருக்குன்னு காட்டிக் கொடுக்குது. சொல்லுங்க”

 

“ஆமா! நான் மட்டும் எல்லாம் சொல்லணும். நீ எதுவும் சொல்ல மாட்டல்ல?” முறுக்கிக் கொண்டாள் அவள்.

 

“நான் என்ன சொல்லணும்? கேட்டால் சொல்லுவேன். இதுக்கு ஏன் கோபப்படுறீங்க?” அவளருகில் அமர்ந்தான்.

 

அவளோ, “சரி கேட்கிறேன் சொல்லு. இப்போ எங்க போயிட்டு வந்த?” அழுத்தமாகத் தான் வினவினாள்.

 

“நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்ல. கொஞ்ச நாளைக்கு நான் எங்கே போறேன் வரேன்னு கேட்க வேணான்னு”

 

“ஏன் கேட்கக்கூடாது? அப்படி எங்கே போற?” அவள் குரலில் சினம் தெரிந்தது.

 

“ப்ளீஸ் இது குட்டி! என்னை எதுவும் கேட்காதீங்க” என்று சொல்லியும் இன்னும் தெளியாமல் இருந்தாள்.

 

“என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு?” யாசிக்கும் குரலில் கேட்டவனைக் கண்டு அவளுள் தானாகவே பதற்றம் தொற்றிக் கொள்ள,

 

“நம்பிக்கை இருக்கு. ஆனா….?” என இழுத்தவளைத் தடுத்து, “இருக்குல்ல. அப்போ நோ மோர் கொஸ்டின்ஸ் ஓகேவா?” என அவளது வாயை அடைத்து விட்டு குவியலறைக்குள் நுழைந்தவனைப் புரியாத புதிராக ஏறிட்டாள் நிலா.

 

ஏன் அவன் இவ்வாறு சொன்னான் என நினைத்தும் விடை கிடைக்கவில்லை. அவன் தாமதமாக வீடு திரும்புவதன் காரணம் அறியத் துடித்தாலும் அவனிடம் மீண்டும் கேட்கவில்லை. ஷாலுவுடன் நேரத்தைக் கழித்தாள் பெண்ணவள்.

 

“அங்கிள் எங்கே அத்து? எதுக்கு என் கூட சரியா பேச மாட்டேங்கிறார்?” கேள்விக் கணைகளால் அவளைத் துளைத்தெடுப்பாள் ஷாலுவும்.

 

அன்று அதிக்கு அழைத்து வீடு திரும்ப தாமதமாகும் என்று கூறிவிட்டிருந்தான் உதய். ஏனோ அன்று பலவீனமாக உணர்ந்தாள் அவள். கண்கள் ஏனென்றே தெரியாமல் கலங்க சட்டென அதைத் துடைத்துக் கொண்டாள் அவள் கண்களில் கண்ணீர் வருவதை அவளவன் விரும்ப மாட்டான் என்று!

 

அவன் பரிசளித்த பெண்டா பொம்மையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். “பெண்டா! இப்போல்லாம் உதி யேன் வித்தியாசமா நடந்துக்கிறான்? அவன் எந்த தப்பும் பண்ணல. ஆனால் எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிறான். அவனுக்கு ஏதாவது பிராப்ளமா? என்னன்னே தெரியல. பிரச்சனை எதுவும் இருந்தா அதை இல்லாமல் பண்ணிடுங்க கடவுளே. ஐ மிஸ் மை யஷு” அதை அணைத்துக் கொண்டே தூங்கிப் போனாள்.

 

காலையில் கண்விழித்தவள் கையில் ஏதோ அழுந்த பக்கவாட்டாக திரும்பினாள். அவளது ஒரு கையைப் பிடித்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டு மறு கையில் தலை வைத்து படுத்திருந்தான் கணவன்.

 

கையை மெல்ல உருவி எடுத்தவள் அக்கையைத் தன் தலைக்கு கொடுத்து சாய்ந்தவாறு அவனை நோக்கினாள்.

 

அடர்ந்த புருவங்கள், வடிவான இமைகள், செதுக்கி விட்ட மூக்கு, கிள்ளத் தோன்றும் கன்னங்கள், அழகான மீசையுடன் குறுந் தாடியும் அரும்பியிருக்க அவன் எழிலை இமைக்காமல் ரசித்தாள் அவனின் காதல் ராட்சசி.

 

“என்னை அழ வெச்சிட்டு நீ பச்சப்பிள்ளைக் கணக்கா தூங்குவியா ராஸ்கல்?” என அவன் புஜத்தில் வலிக்காமல் அடித்தாள் அதி.

 

பின் குளித்து உடை மாற்றி கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருக்க பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பியவளின் அருகில் வந்தான் உதய்.

 

“எந்திருச்சிட்டியா உதய்? போய் ஃபிரஷ் ஆகிட்டுவா காபி தரேன்” என்று வேலையில் மும்முரமாக, “காபி தாங்க அதி” என்றான் கண்களை மூடிக்கொண்டு.

 

“டேய் இது என்ன புதுப்பழக்கம்? வரவர சோம்பேறியாகிட்டு வரே. பல்லு தேய்க்காம காஃபியா? நோ வே” மறுத்தாள் அவள்.

 

“நீங்களும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் ஆகிட்டே வரீங்க” முகத்தை தூக்கிக் கொண்டு சென்றவனின் செய்கையில் அவள் உதட்டில் குறுநகை அரும்பியது.

 

காஃபி போட்டு எடுத்துக் கொண்டு போய் டீப்பாவில் வைத்தவள் தனக்கு ஒன்றை எடுத்து அருந்த உதய்யும் வந்தமர்ந்தான்.

 

“இப்போ காபி எடுத்துக்கலாமா மேடம்?” எனக் கேட்டவனிடம், “யாஹ் ஷூர்” என்று தோளைக் குலுக்கினாள் மனைவி.

 

ஷாலு எழுந்து வந்து “வர்ஷு” என்று அவன் மடியில் சாய்ந்து கொள்ள, “மை கியூட்டி” என்று அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்டினான் அவன்.

 

“கொஞ்சல் ஸ்டார்ட் நவ்” என்று அதி சொல்ல, “உங்களையும் கொஞ்சனுமா? எனக்கு ஓகே தான். நீங்களும் ஓகே சொன்னால் தாராளமா கொஞ்சலாம். என்ன சொல்றீங்க?” என்ன காதருகே கிசுகிசித்தவனை முறைத்துப் பார்த்தாள்.

 

“உன் இதழ் சுழிப்பில் என் இதயம் ஆழிச்சுழியாய் ஆட்டம் காண்கிறதே முறைக்கும் நிலவே” என்றவனின் பேச்சில் மலர்ந்த சிரப்பை கடினபட்டு இதழுக்குள் அடக்கினாள் அதியா.

 

“ஹேய்! சிரிக்கிறீங்கல்ல?” அவளைக் கண்டு கொண்ட உதய் கத்தினான்.

 

“நான் எப்போ சிரிச்சேன்? சும்மா கனவு காணாத” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

 

“அத்துவை நம்பாதீங்க வர்ஷ். அவ சரியான பொய்காரி” என்று சொன்னாள் சிறுமி.

 

“எதே நான் பொய்காரியா? நீ தான்டி வாயாடி. அவனுக்கு சப்போர்ட் பண்ணுறியா” ஷாலுவின் கன்னத்தில் செல்லமாக அடித்தாள் பெண்.

 

“ஆமா நான் வர்ஷு அங்கிளுக்குத் தான் சப்போர்ட்” பழிப்புக் காட்டினாள் ஷாலு.

 

“போடி போ! அத்துக்குட்டி ஆத்துல மீன் குட்டின்னு வருவல்ல. அப்போ வச்சுக்குறேன் உன்னை” சின்னவளுக்கு நிகராக பழிப்பு காட்டினாள் முகத்தை திருப்பினாள் பெரியவள்.

 

இருவரின் செல்ல சண்டையில் சிரித்தான் ஆடவன். அவனது சிரிப்பில் சகலமும் மறந்து அவனைப் பார்த்தாள் காரிகை.

 

“டுடே என்ன பிரேக்பாஸ்ட் அத்துக் குட்டி?” என்று ஷாலு கேட்க, “அதான் சொன்னேன்ல பேசாதனு. பிரேக்ஃபாஸ்ட்கு மட்டும் என்கிட்ட வருவியா. உன் வர்ஷு கிட்டயே கேட்டுக்க வேண்டியது தானே?” சிலுப்பிக் கொண்டாள் அவளது அத்து.

 

“ஓகே பரவால்ல. வர்ஷு! எனக்கு தோசை செஞ்சு தா” என்றாள் ஷாலு.

 

“ஏய் நான் பண்ணித் தரேன் டி. சும்மா சொன்னதுக்கு உடனே கேட்றுவியா?” என அதி கேட்க,

 

“அதான் வர்ஷு கிட்ட கேட்க சொன்னல்ல. நான் கேட்டுட்டேன்” மீண்டும் இருவரும் சண்டைக்கு தயாராக,

 

“அச்சோ நிறுத்துங்க. கியூட்டி ஆசை படுறால்ல. நான் பண்ணித் தரேன்” என்று சமையலறைக்குள் நுழைந்தவனின் பின்னால் சென்றனர் இருவரும்.

 

“நீங்க வர வேண்டாம். ஹால்லேயே இருங்க” என்றவாறு கைகளைக் கழுவினான்.

 

“நான் உங்க கூட இருப்பேன் அங்கிள். அத்துவை போக சொல்லுங்க” வர்ஷுவின் கையை பிடித்துத் தொங்கினாள் சிறுமி.

 

“ஏய் நானும் போக மாட்டேன் டி. என் உதய் கூடத் தான் இருப்பேன்” அவனது மறு கையைப் பிடித்துக் கொண்டாள் அதியா.

 

“ரெண்டு பேருக்கும் அடி போடப் போறேன். என் கையைப் பிடிச்சா நான் எப்படி தோசை செய்றது?” என்றதும் பட்டென கையை எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்தவர்களைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான்.

 

முன்பெல்லாம் விசில் அடித்துக் கொண்டும் பாட்டை ஓட விட்டு பாடிக்கொண்டும் தனிமையைப் போக்கிக் கொண்டு சமைப்பான். இப்பொழுது மனைவியுடன் வம்பிழுத்துக் கொண்டும் ஷாலுவுடன் அரட்டை அடித்துக் கொண்டும் சமைத்தான் உதய்.

 

ஷாலு வாசம் பிடித்து கொண்டிருக்க அதியோ அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஷாலுவிற்கு பூனையின் முக வடிவிலும் நட்சத்திர வடிவிலும் தோசை செய்து கொடுக்க, “வாவ் சூப்பர் சூப்பர். நான் போய் சாப்பிட்டு வரேன்” என்று ஓடினாள் துள்ளலுடன்.

 

“அப்போ எனக்கு….??” என்று கேட்ட அதியைத் தூக்கி சமையல் மேடையில் இருத்தியவன் அவளுக்கு இதய வடிவில் தோசை செய்து அதில் சோஸால் ஐ லவ் யூ என்று எழுதிக் காட்டினான்.

 

அதைக் கண்டு அழகாக இதழ் பிரித்தவளுக்கு அதனைப் பிய்த்து ஊட்டி விட்டான் உதய். “இதை நானும் சாப்பிடணும். ஏன்னா உங்க அரைவாசி ஹார்ட்டையும் என் அரைவாசி ஹார்ட்டையும் சேர்த்து தான் இந்த முழு ஹார்ட். சோ ஊட்டி விடுங்க” என வாயைத் திறந்தவனுக்கு புன்னகையுடன் ஊட்டி விட்டாள்.

 

“நான் தோசையில் எழுதுனதுக்கு பதில் கிடைக்காதா?” ஆசையோடு பார்த்தவனிடம்,

 

“இல்லாமலா? கண்டிப்பா கிடைக்கும். ஐ லவ் யூ டூ யஷு” என்ற தன் இதயாவைப் பார்த்து இன்பமாய் தலை சாய்த்தான் அதியாவின் இதய வர்ஷன்….!

 

நிலவு தோன்றும்….!!🌛

 

✒️ஷம்லா பஸ்லி🤍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!