விஷ்வ மித்ரன்
அத்தியாயம் 22
தர்ஷனின் மிரட்டல் அழைப்பு வந்ததிலிருந்து அக்ஷராவுக்கு மனது வெடவெடத்துப் போயிருந்தது.
“அது யாராக இருக்கும்? அண்ணாவுக்கு யாரும் எதிரிங்க இருக்குறதா எனக்கு தெரியாதே. அவனால விஷு மித்துக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்துருமா?” என்ற நினைப்பே அவள் உடலைச் சில்லிட வைத்தது.
“கடவுளே! அப்படி எதுவும் நடந்திடக் கூடாது. ஏதாவது சோதனை வந்தாலும் அதை எனக்கு கொடுத்திரு” என வேண்டியவளுக்கு “எனக்கு நீ வேணும்” என்ற குழையும் குரல் நினைவுக்கு வர, காதைப் பொத்திக் கொண்டாள் காரிகை.
தனக்கே தெரியாமல் தன்னை அடையத் துடிப்பவன் யாராக இருக்கும் என பல திசைகளில் யோசித்தவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். தலையைக் கைகளால் தாங்கி கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
“அருள் அருள்” என அவள் இதயம் காற்றாடியாக அடித்துக் கொண்டது. அவளது போன் அலற, ‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ என்று ரிங்டோன் அழைத்திருப்பது அவளவன் என்பதைக் காட்டிக் கொடுத்திற்று.
முகத்தை நீரால் அடித்துக் கழுவி விட்டு வந்து அழைப்பை ஏற்று “ஹலோ அருள்” என்று பேச, “அம்முலு என்னடா பண்ணுற? தூங்கிட்டு இருந்தியா. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? அப்புறமா பேசட்டுமா?” படபடவெனக் கேட்டான் அவன்.
“எப்பா போதும் சாமி! எடுத்த உடனே மூச்சு விடாமல் பேசாதே. நான் தூங்கல. ஒருத்தனைப் பற்றி நினைச்சுட்டு இருக்கேன்”
“அடிப்பாவி. ஒருத்தன நினைச்சுட்டு இருக்கேன்னு என் கிட்டயே சொல்றியே. என்ன தைரியம் உனக்கு?” செல்லமாகக் கடிந்து கொண்டான் மித்ரன்.
“இவர் கிட்ட இது சொல்ல என்ன தைரியம் வேணுமாம்? ஓவராத்தான் சீன் போடுற” என்றாள் அக்ஷரா.
“என்னடி சொன்ன? நான் சீன் போடறேனா. சம்பவம் பண்ணிடுவேன் டி. வேட்டிய மடிச்சு கட்டுனா என்ன நடக்கும்னு தெரியும்ல? கலவரம் நடந்திடும்” நாக்கைக் கடித்துக் கொண்டு வீர வசனம் பேசினான் அவன்.
“அடச்சை அன்பறிவு பட அன்புன்னு நினைப்பு. வேட்டிய மடிச்சு கட்டினால் நீ சம்பவன் பண்ண மாட்டே. யாராச்சும் உனக்கே சம்பவம் பண்ணிட்டு போயிடுவாளுங்க” நக்கலாகத் தான் சொன்னாள் அக்ஷு.
“ஏய் ச்சீ…!! என்ன பேசுற? முதல்ல வாயைக் கழுவு”
“பெஸ்டுக்கு உன் வாயை அடக்கி வாசி” முன்பிருந்த மன அழுத்தம் எல்லாம் எங்கோ ஓடிப்போன உணர்வு அவளுக்கு.
“அம்முலு” என்று காதலுடன் அழைக்க, “ம்ம்” கண்களை மூடி அவன் அழைப்பை ரசித்தாள் அவளும்.
“எப்போடி ஐ லவ் யூ சொல்லுவ? வெய்ட் பண்ண முடியல” என்று வினவினான் அவன்.
“சொன்னா என்ன பண்ணுவே?” என எதிர்க் கேள்வி கேட்டாள் அக்ஷரா.
“நீ சொன்ன உடனே ஓடி வந்து இறுக்கமா அணைச்சு முகம் முழுக்க முத்தம் கொடுப்பேன் டி. அந்த நிமிஷத்துல அவ்ளோ சந்தோசத்துட உச்சியில் இருக்குற முதல் ஆளு நானா தான் இருப்பேன். கூடவே வெட்கப்படற ஆளு நீயா இருப்ப” என கிசுகிசுப்பாகக் கூறினான் அக்காதல் கண்ணாளன்.
அக்ஷு “நான் அவ்வளவு சீக்கிரம் எல்லாம் சொல்ல மாட்டேன் பேப்ஸ்” என்றிட, “போடி ஏமாற்றுக்காரி” என சிரித்தான் மித்து.
“அண்ணி என்ன பண்ணுறா?” என அவள் விசாரிக்க, “உன் நொண்ணி பற்றி விசாரி. எனக்கு மட்டும் எதுவும் சொல்லாத” என அவன் முறுக்கிக் கொள்ள,
“நீ எதுக்கு எப்போ பாரு ஐ லவ் யூவ பிடிச்சு தொங்கிட்டு இருக்க. விட்றா” என பொய்யாக கோபத்துடன் கூறினாள்.
“சரி சரி கோவிச்சுக்காத செல்லம். என் புஜ்ஜி குட்டில்ல?” என செல்லம் கொஞ்சலானான் ஆடவன்.
“நான் உன் கூட கோபமா இருக்கேன்”
“ஏனாம்? என் உசுருக்கு என்ன கோபம்?”
“நான் ஒன்னும் உன் உசுரு கிடையாது”
“அப்போ உன் பின்னாடி சுத்திட்டு இருந்தான்ல ரவுடி ராகேஷ் அவனுக்கு உயிரோ” என்க பத்ரகாளியாகி விட்டாள் அக்ஷரா.
“அவன பற்றி மட்டும் பேசாத. கிறுக்கு பய! நான் அவன லவ் பண்றேன்னு காலேஜ் முழுக பத்த வச்சு விட்டிருக்கான்” எனப் பொரிந்து தள்ளினாள் அவள்.
“ஹஹ்ஹா..! உனக்கு தேவைதான் அவனை வச்சு வாட்டி எடுத்தல. ஐஸ்கிரீம் பாப்கார்ன்னு வாங்கி கேட்டல்ல அனுபவி” என கேலி செய்தான் மித்ரன்.
“வேணாம் கெட்ட கெட்ட வார்த்தையா பேசிடுவேன்”
“நீ நல்லா பேசினாலே கேட்க முடியாது. இதுல கெட்டதா பேசினா நான் செத்துடுவேன்”
“நீ இப்படி நக்கல் விக்கலா பேசிட்டு இருந்தா நானே கொன்றுவேன்”
“நான் செத்தால் உனக்கு சந்தோஷம் தான்னா அப்படியே சாகுறேன் உன் கையால” என்று பேச்சு வாக்கில் உளறினான் அருள்.
“டேய் எருமை மாடு. உன் வாயில நல்ல வார்த்தையே வராதா? உன் வாய தச்சு வெச்சா தான் சரிப்பட்டு வருவ” என பல்லைக் கடித்தாள் அக்ஷரா.
“சாரிடி சாரி”
“சாரி பூரிலாம் எனக்கு வேணாம். நீயே வச்சுக்கோ போடா”
“அம்முலு குட்டி”
“போ பேசாதே”
“என்ன பண்ணால் உன் கோபம் போகும்?”
“எப்போவும் சொல்லுவியே ஒன்னு அதைச் சொல்லு” என்று சிறு பிள்ளை போல சொல்ல, அவன் இதழ்களில் கீற்றாய் புன்னகை.
“சொல்ல மாட்டேன்” இம்முறை மறுத்தான் அவன்.
“ஏன் முடியாது?” என்று கேட்க, “ஒரு கிஸ் குடு. சொல்லுறேன்” என தோளைக் குலுக்கினான்.
“ஒன்னும் வேணாம்” என்று முறுக்கிக் கொண்டாலும் அவன் கேட்டதைக் கொடுத்தாள் அக்ஷு.
“ஐ லவ் யூ அம்முலு” என்று காதலுடன் மொழிந்தான் மித்து.
“இன்னொரு தடவை” என அவள் கெஞ்ச, “ஐ லவ் யூ டி. லவ் யூ சோ மச் அம்முலு” முத்தங்களை வாரி இறைத்தான் அருள் மித்ரன்.
அவனது ஐ லவ் யூவில் உருகிப் போய் முத்தத்தில் சிலிர்த்துப் போய் நின்றாள் ஊர்வசியவள்!
……………….
போதையில் இருந்த தர்ஷனின் விழிகள் ஏதோ போட்டோவை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தன. அவனின் செயல்களையே கன்னத்தில் கை வைத்துப் பார்த்தான் மானஸ்.
“டேய் தர்ஷா! நானும் அப்போல இருந்து பார்க்குறேன். போனையே உத்து உத்து பார்த்துட்டு இருக்க” ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கேட்டான் மானஸ்.
சிவந்த கண்களால் அவனை நோக்கி “பொக்கிஷம் டா! பெரிய பொக்கிஷம்” என்று கைகளை விரித்துக் காட்டினான்.
“பொக்கிஷமா? அப்படி என்ன பொக்கிஷம் அதுல இருக்கு” மண்டை குழம்பிப் போனது மற்றவனுக்கு.
“இதோ நீயும் பாரு. ஒரு அதிர்ஷ்டம் என்னை தானா தேடி வந்திருக்கு” என்று விட்டு அலைபேசியில் இருந்த புகைப்படத்தைக் காண்பித்தான்.
“வாவ்…!! யார் இது செம பிகரா இருக்காளே” அந்தப் பொல்லாதவனின் கண்களிலும் போதை ஏறத் துவங்கிற்று.
“ஏய் ச்சு ச்சு. இவளை நீ பார்க்கக் கூடாது. இந்த தர்ஷன் அதிர்ஷ்டசாலி டா. பார்த்தியா என்னையே தேடி வரப் போறாள்” என்றவன், “இன்னும் புரியலல இவள் யாருன்னு? என் எதிரி விஷ்வாவோட உயிர்க் காதலி வைஷ்ணவி” எனக் கூறினான் வன்மத்துடன்.
“வாட் லவ்வரா? அவளோட சிஸ்டருக்கு தானே நீ ரூட்டு போட்டுட்டு இருந்தே?” யோசித்து யோசித்து மண்டை சூடாகிப் போனது மானஸிற்கு.
“எஸ் மை டியர். அவளுக்கு ரூட்டு விட்டேன். அவளுக்கு போட்ட ஸ்கெட்சுல இவள் சிக்கிக்க போறாள் அவ்வளவு தான். அதுக்காக அக்ஷுவ விடுறதா ஐடியாவே இல்ல. நான் ஆசைப்பட்ட அக்ஷராவ, அந்த திமிரழகிய இந்த வைஷ்ணவியை வச்சே அடையப் போகிறேன். அவளோட சேர்த்து இவளையும். ஒரு கல்லுல ரெண்டு மாங்கா. எப்படி நம்ம பிளான்” என காலரை தூக்கி விட்டுக் கொண்டான் அந்த அரக்கன்.
தர்ஷனை மெச்சுதலாகப் பார்த்த மானஸ் “வர்ரேவா கலக்கிட்ட தர்ஷா. இப்படி எல்லாம் மாஸா பிளான் பண்ண உன்னால மட்டும் தான் முடியும். நீ கலக்கு” என சிரித்தான்.
“நான் கலக்குறேனோ இல்லையோ இவளுங்கள வைத்தே அந்த விஷ்வ மித்ரனோட வயித்த கலக்க வைக்க போறேன் டா. எவ்வளவு ஆட்டம் ஆடினானுங்க. இது என்னோட ஆட்டம் சும்மா விட்றுவேனா? புகுந்து விளையாடிடுவேன்” வெற்றிக் களிப்பு அவன் முகத்தில் தாண்டவமாடியது.
“அந்த அக்ஷராவுக்கு நிச்சயம் முடிஞ்சு போச்சுலல். உனக்கு அதுக்கு முன்னாடியே இதை பண்ணி இருந்திருக்கலாமே. அத விட்டுட்டு எதுக்கு கோயம்புத்தூர் போயிட்டு வந்த” என்று தனது சந்தேகத்தை வினவினான் மானஸ்.
பின்னந்தலையை நீவி விட்டு சோபாவில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டு “மடையா! நான் என்ன கோயமுத்தூருக்கு ஜாலியா ஊர் சுத்தி கும்மாளம் அடிக்கவா போனேன்? மினிஸ்டர் பொண்ணு லியாவை ரேப் பண்ணி கொலை பண்ணேன்ல? அதை தற்கொலைனு நம்ப வச்சாலும் அவள் என் கூட சுத்திட்டு இருந்ததால என் மேல டவுட் வருமோனு பயந்து கொஞ்ச நாளைக்கு தலை மறைவாகியிருந்தேன் ஒரு சேப்டிக்காக” ஏதோ சாதனை செய்துவிட்ட நினைப்பில் பேசினான் ஈவிரக்கம் அற்ற அக்கயவன்.
“ஓ சாரி தர்ஷா! மறந்துட்டேன். அக்ஷராக்கு நீ கால் பண்ண தானே? அவள மிரட்டி வர வைக்க முடியாதா” என்று அவன் வினா எழுப்ப, “நோ சும்மா மிரட்டினா மட்டும் பத்தாது. ஏன்னா அவள் விஷ்வாவோட தங்கச்சி. வெரி டேஞ்சரஸ் ஃபெலோ. நான் வர வெச்சா கூட ஏதாவது தில்லுமுல்லு பண்ணிட்டு தான் வருவா. சோ அதை விட வைஷ்ணவி ஈசி. அவள வாட்ச் பண்ண என் ஆட்களை களத்தில் இறக்கி விட்டு இருக்கேன். தூக்கிட்டாங்கனா அவளை வெச்சே இவள வர வைக்கலாம். அப்போ எதுவும் பேச முடியாம அண்ணி நொண்ணினு ஓடி வந்துடுவா” என்று சரியாகக் கணித்து திட்டம் தீட்டினான்.
“சபாஷ். வில்லாதி வில்லன் நீ. இனி உனக்கு நல்ல காலம் தான்” என அவனுக்கு பாராட்டு பத்திரம் நீட்டினான் மானஸ்.
தர்ஷனின் மனதிலோ குரோதம் கொழுந்து விட்டெரிய, தக்க தருணத்திற்காக காத்திருக்கலானான், நச்சுப் பாம்பு போல!
…………………..
விஷ்வாவின் வீட்டின் முன் பைக்கை நிறுத்தி ஹாரன் அடித்தான் அருள் மித்ரன். அந்த சத்தத்தில் வேக எட்டுக்களுடன் அவனை நோக்கி வந்தான் நண்பன்.
சைட் கண்ணாடியைப் பார்த்து முடியை கோதி விட்டுக் கொண்ட மித்ரனை பார்த்து “போதும்டா மாப்ள! எப்படி ஸ்டைலா வந்தாலும் உன்னை யாருமே சைட் அடிக்கப் போறதில்ல” என்ற விஷ்வாவைப் பார்த்து, “ஏனாம்? எனக்கு என்ன குறைச்சல்?” என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான் மித்ரன்.
“ஏன்னா உன் கூட நான் வரேன்ல. எல்லா பொண்ணுங்க பார்வையும் என் மேல தான் விழுகும்” இரு கைகளாலும் காலர் நுனியைப் பிடித்து தூக்கி விட்டுக் கொண்டான் காளை.
“நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குமாம் டா மன்மதக்குஞ்சு” என அவன் காலை வாரினான் மற்றவன்.
“உனக்கு பொறாமை” என்றவன் மித்ரனின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான்.
என்ன தான் கலகலப்பாக பேசினாலும் எப்பொழுதும் இருக்கும் வழமையான விஷ்வா இவனல்ல என்பதை ஒற்றைப் பார்வையிலேயே கண்டு கொண்டான் தோழன். அதிலும் அவன் காரணம் இன்றி அழைக்கவும் மாட்டான். இன்றோ கால் பண்ணி ‘உன்ன பாக்கணும் மித்து. பைக் எடுத்துட்டு வீட்டு பக்கத்துல வா. நான் வெயிட் பண்றேன்’ என்று சொன்வன் குரலிலும் எதுவோ மாற்றம். அதனால் பயந்து போய் ஓடோடி வந்திருந்தான்.
விஷ்வா மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகவே வர, மித்ரனும் நிசப்தத்தைக் கலைக்காமல் மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினான்.
அவன் பைக்கை நிறுத்தியதில் இத்தனை நேரமாக தன்னைச் சுற்றி இருந்த மாயவலை அறுபட்ட தோரணையில் அவ்விடத்தை பார்த்து அதிர்ச்சியானான் விஷ்வா.
ஆம்! அது அவர்கள் கற்ற காலேஜுக்கு பின்னால் இருக்கும் மாந்தோப்பு. அதைப் பராமரிக்கும் வயதான தாத்தா இருவருக்கும் மிக நெருக்கமானவர். காலேஜ் நாட்களில் இருவரதும் நேரங்களும் கூடுதலாக இந்த தோப்பில் கழிவதுண்டு. அதன் பின்னரான காலங்களிலும் கூட மனம் தெளிவில்லாத சமயங்களில் இங்கு வந்து பேசிக்கொண்டும் மாமரத்தினடியில் சாய்ந்து கொண்டும் இருந்துவிட்டு செல்வர் விஷ்வ மித்ரர்கள்.
மித்ரன் முன்னே நடக்க அவனைத் தொடர்ந்து சென்றான் விஷ்வா. “மித்து! ஏன் நீங்க கூட்டிட்டு வந்த?” எனக் கேட்டவாறு அவனோடு இணைந்து நடந்தான் விஷு.
“எனக்கு தெரியும் உன் மனசு சரியில்லைன்னு. ஏதோ கவலையில நீ இருக்க. என் கிட்ட எதையும் மறைக்க நினைக்காத விஷு. நீ மறைச்சாலும் உன் முகமும் குரலுமே எனக்கு அதை காட்டிக் கொடுத்திடும்” என்றபடி அங்கிருந்து கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
“மாப்ள! உன் கிட்ட நான் எதையாவது மறைப்பேனா டா? நீ சொன்ன மாதிரியே மனசுக்குள்ள ஏதோ பிரளயமே நடக்குது. அதை சொல்லி உன் தோள்ள சாய்ந்துக்கனும் போல இருந்துச்சு. அதான் உன்னை பார்க்க வர சொன்னேன்” என்றவனை பக்கவாட்டாகத் திரும்பி ஏறிட்டான் மித்து.
விஷ்வா “என்னனே புரியல. ஏதோ தப்பா நடக்க போற மாதிரி பீல் ஆகுது” என்று கூற, “திடீரென்று அப்டிலாம் தோணும் தான்டா. அதை பெருசா எடுத்து அலட்டிக்காத” என் சாதாரணமாக சொன்னான் மித்ரன்.
“என்னால முடியல மித்து. இதே மாதிரி எனக்கு முன்னாடி ஒரு நாளும் தோனிச்சு நான் உன் கூட கிட்ட சொன்னேன் இல்லையா. அதுக்கு அடுத்த நாளே நீ என்ன விட்டு போயிட்டல்ல” அன்றைய நாளின் தாக்கத்தில் முகம் சுருங்கியது அவனுக்கு.
“அதே மாதிரி இப்போவும் உன்ன விட்டு போயிடுவேன்னு பயப்படுறியா? அது கண்டிப்பா நடக்காது விஷு. இனிமேல் எத்தனை ப்ராப்ளம் வந்தாலும் தாங்கி நிற்பேனே தவிர, உன்னை விட்டு தூரமா போற முடிவெல்லாம் எடுக்க மாட்டேன். இட்ஸ் அ ப்ராமிஸ்! அப்படியும் நான் உன்னை விட்டு போவேனா இருந்தா அது நான் செத்தா தான் உண்டு” என்று மித்து சொல்ல,
“மித்தூஊ” என அலறினான் விஷ்வஜித்.
அப்போதே தான் சொன்னதை உணர்ந்து “சாரி டா இனிமேல் இந்த மாதிரி எதுவும் பேச மாட்டேன்” என கெஞ்சுதலோடு பார்த்தான் அவன்.
“இனிமேல் பேசினால் பார்த்துட்டு இருக்க மாட்டேன். செவில்ல நாலு விட்றுவேன் ராஸ்கல். எப்போ பாரு உனக்கு அதே பேச்சுல்ல…?” என்று முறைத்தான் விஷு.
“இந்த ஒரு வாட்டி மன்னிச்சு விட்றேன்”
“போனாப் போகுதுன்னு விடறேன். தங்கச்சி புருஷனாச்சே” என்று பெரிய மனது பண்ணி மன்னித்து விட்டான் அவன்.
“அது சரி! நீ என் தங்கச்சியை பற்றி என்ன நினைக்கிற விஷு?” என்று வினவினான் மித்து.
விஷ்வாவின் முகத்தில் ஓர் ஒளி வட்டம் தோன்றிட, இதழ்களும் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டன. அவனையே விழியகற்றாமல் பார்த்தான் நண்பன். அவனது முகமே அவன் மனதில் வைஷு இருப்பதைக் காட்டிக் கொடுத்தது.
“என்ன நினைக்கணும்? அவள் சரியான வாயாடி. சரவெடி! எப்போ பாரு பட படன்னு வெடிக்குறா. என் கூட சண்டைக்கு தான் வருவாள்” என்று அவன் சொல்ல,
“ஒரு அண்ணன் கிட்ட அவன் தங்கச்சியை பற்றி இப்படி சொன்ன முதல் ஆளு நீயா தான் இருப்பே” இது மித்ரன்.
“ஆனா அதெல்லாம் எனக்கு புடிச்சிருக்கு மித்து. என்ன தான் சண்டை புடிச்சாலும் டக்குனு சிரிச்சிடுவா. ரொம்ப சைல்டிஷ்ஷா, நீ சொல்லுற மாதிரி பாப்பா போல கியூட்டா இருக்கா” சிறு சிரிப்புடனே கூறிவிட்டு “ஐ லைக் ஹர்” என்றான் விஷு.
‘அடேய் மக்கு பையா! இது லைக் இல்ல லவ்’ என மனதினுள் நினைத்தவன் அதை அவனை உணரட்டும் என்று வெளியில் சொல்லவில்லை.
விஷ்வா மித்ரனின் தோளில் சாய்ந்து கொள்ள “டேய் அம்மாவ பார்த்து பேச ஆசையா இருக்குடா. அவங்க என் கூட பேசுவாங்களா?” என்ற மித்ரனின் குரலில் ஏக்கம் தெறித்தது.
அது விஷ்வாவை தாக்கிச் செல்ல “அந்த கொழுப்பு பிடிச்சவங்க கூட பேசலனா நீ ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டே”என்க, அவனோ பாவமாகப் பார்த்தான்.
“உனக்கு இருக்குற பாசம் அவங்களுக்கு இல்லையே டா. நீ பேசப் போய் உன்ன காயப்படுத்தி அனுப்பினா என்னால பாத்துட்டு இருக்க முடியாம ஏதாவது பேசிடுவேன். அம்மாவோட நான் உனக்காக சண்டை போடுறேன்னு அதுக்காகவும் நீ தான் கஷ்டப்படுவ. உனக்கு கஷ்டத்தை தர எந்த விஷயமும் எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல? அவங்களுக்கு ஏன் தான் மனசு கல்லாகிப் போச்சோ தெரியல” சற்றே கோபமாக வந்தது அவன் குரல்.
“விஷு ப்ளீஸ்! அப்படி எல்லாம் பேசாத டா. அம்மாவுக்கு கல்நெஞ்சம் இல்லை. அவங்க கோபத்துக்கு பின்னால எதுவோ ரீசன் இருக்கு. அம்மா கண்ணுல உண்மையான தாய்ப்பாசத்தை நான் கண்டிருக்கேன். அது ஒரு நாளும் பொய்யாகாது” நீலவேணியின் தவிர்ப்பில் கண்கள் கலங்கினாலும், அதை வெளிக்காட்டாமல் மறைத்து அவருக்காக பரிந்து பேசினான், அவர் பெறாத புதல்வன்..
“என்ன பெரிய ரீசன் இருக்கப் போகுது? உன் அம்மாவுக்கு நம்மள பார்த்து பொறாமை அதான்” என்று விஷ்வா கூற, “விஷு! உன்கிட்ட சொன்னேன்ல அம்மாவ எதுவும் பேசாதன்னு” என்று கடிந்து கொண்டான் மித்து.
“சரிப்பா சரி. உன் மாதாஜி பற்றி ஒன்னும் பேசல போதுமா” என முகத்தைத் திருப்பிக் கொள்ள, மித்ரனோ “டேய் நம்ம இந்த மாந்தோப்புக்கு வந்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா?” என்றான்.
“ஆமால்ல ரொம்ப நாளாச்சு. அப்படின்னா மாங்காய் சாப்பிடலாமா?” என்று மித்ரனைப் பார்த்தான்.
அவனும் வாயில் எச்சில் ஊற “அதானே பார்த்தேன் இன்னும் மாங்காய் சாப்பிடலாம்னு கேட்கலையேனு. சரி ஏறு” என்று மித்ரன் குனிந்து கொள்ள,
விஷு அவன் தோள்களில் அமர்ந்திட, மித்து நிமிர்ந்தான். விஷ்வா மாம்பழங்களைப் பறித்துக் கீழே போட்டு விட்டு துள்ளிப் பாய்ந்து கீழ இறங்க, இருவரும் மாங்காய்களை புசிக்கத் துவங்கினர்.
“எத்தனை தடவை வந்து சாப்பிட்டாலும் இந்த மாங்காக்கு இருக்கிற ருசியே வே” என்று மித்ரன் சப்புக் கொட்ட, “அத பறிச்சது நானாச்சே. என் நட்பு தான் அந்த மாங்காக்கு ருசியை சேர்த்து இருக்கு” என்று மிதப்பாகப் பார்த்தான் விஷ்வா.
“உன் அலம்பல் தாங்கல டா”
“நான் பெருமைப்படுறத பார்த்து உனக்கு வயித்தெரிச்சல்”
“ரொம்ப பீத்திக்காத மாப்ள. வைஷு உன்ன நோஸ் கட் பண்ணி விட்ருவா” என்றவனை நோக்கி, “ஆமாடா அதையும் பண்ணக் கூடிய ராட்சசி அவள்” என்றவன் இன்று அவளுடனான உரையாடலை நினைத்து கலகலவென சிரித்தான்.
சிரிக்கும் அவனை பாசம் ததும்பும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வாவின் மித்திரன்.
………………..
மாலையில் குட்டித் தூக்கம் ஒன்றை போட்டு விட்டு எழுந்த வைஷ்ணவிக்கு மனது சரியில்லாமல் இருந்தது.
ஏதோ தவறு நடக்கப் போவதாய் உள்மனம் படபடவென அடித்துக் கொள்ள, “கடவுளே! என்னாச்சு எனக்கு? மனசெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. ஏதோ தப்பா நடக்க போற மாதிரி ஃபீல் ஆகுது” என சொல்லியவளுக்கு கோயிலுக்கு சென்று வந்தால் மனது நிம்மதி அடையும் என்று தோன்றிற்று.
வேகமாக சுடிதாருக்கு மாறியவள் ஹரிஷுக்கு அழைப்பு விடுத்து கோயிலுக்கு செல்வதாகத் தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.
வீட்டிற்கு சற்று தூரமாகத் தான் கோயில் இருப்பதினால் நடந்து செல்ல முடிவு செய்தவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்க, இரையை கவ்விப் பிடிக்கக் காத்திருக்கும் கழுகு போல காத்திருந்த தர்ஷனின் ஆட்களது கண்ணுக்கு சரியாகச் சிக்கினாள் பாவையவள்.
கருப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கட்டிய ஒருவன் அவள் முன் வந்து வழி மறித்து நிற்க, அவன் கையில் இருந்த கத்தியைக் கண்டு சகலமும் உறைந்தது அவளுக்கு.
“யா..யார் நீங்க?” என திக்கல் திணறலாகக் கேட்டவளின் பின்னிருந்து மற்றொருவன் மயக்க மருந்து அடித்த கர்ஷிப்பை முகத்தில் வைக்க, “ஜித்து” என முணு முணுத்துக் கொண்டே மயங்கி சரிந்தாள் ஜித்துவின் நவி!
அவளை அலேக்காக தூக்கி தோளில் போட்டுக் கொண்ட ரவுடி தர்ஷனுக்கு அழைத்து விடயத்தை கூறிவிட்டு காரில் ஏறி பறந்தான்.
கொடியாய்த் துவண்டிருந்த பெண்ணவளின் உதடுகளோ “மித்து அண்ணா” “ஜித்து” என முனகிக் கொண்டே இருந்தன.
நட்பு தொடரும்………!!
ஷம்லா பஸ்லி