23. வாடி ராசாத்தி

5
(4)

வாடி ராசாத்தி – 23

“என்னடி பொண்டாட்டி, சொல்லு….” என்றான் கேபி அம்மு அவனை தொலைபேசியில் அழைத்த போது.

“அந்த கிஷோர் வீட்டில ஏதோ பிரச்சனை போல், அவனுக்கு மட்டும் தான் இந்த கல்யாணத்தில் இஷ்டம் போல….” என்று நடந்ததை கூறினாள். செல்வராஜ், அவர்களின் புறக்கணிப்பில் மனம் நொந்ததையும் கூறினாள்.

“அவங்களா தானே வந்தாங்க, எவ்ளோ கொழுப்பு டா அவங்களுக்கு….” பொருமினாள் அம்மு.

“விடு விடு அவங்களை கவனிச்சுடலாம்…. நீ அத்தானை எப்படி கவனிக்கலாம்னு மட்டும் யோசி”

“உனக்கு எப்போ பார்த்தாலும் உன்னை பத்தி மட்டும் தான் கவலை போடா பண்டி”

“சில்மிஷம், நமக்கு பிள்ளை பொறக்கிற வரை நீ என்ன வேணா சொல்லிக்க, அப்பறம் கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்.”

“இன்னும் கல்யாணமே ஆகலை, அதுக்குள்ள பிள்ளைக்கு போயிட்டியா….”

“உனக்கு தான் எல்லாத்திலும் சந்தேகம், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, நம்ம கல்யாணம், குழந்தை எல்லாம் நடக்க தான் போகுது…. பார்க்கத்தான் போறே நீ”

“உன் வாழ்க்கையோட லட்சியம் ரொம்ப நல்லா இருக்குடா….!” கிண்டல் அடித்து சிரித்தாள் அம்மு.

“அடியே, அதெல்லாம் ஒரு பீல், வாயாடி உனக்கு அதெல்லாம் புரியாது…. வாழ்கையில, நல்ல விஷயம் நடந்தாலும், இருந்தாலும், நடக்கலைனாலும், இல்லைனாலும் ஒருத்தரை மட்டும் மனசு தேடும்டி, அந்த ஒருத்தர் தான் உன் வாழ்க்கைத்துணை, வாழ்க்கை முழுசுக்கும்….” கிண்டலாக ஆரம்பித்தவன் குரலில் உணர்ச்சி குவியல் இறுதியில்.

இவனுக்குள் இத்தனை உணர்வுகளா என்ற ஆச்சர்யம் அடைந்தாள் அம்மு. வெளியில் இருந்தால் அவனை பார்த்தால், அவனுக்கு மென்மையான உணர்வுகள் இருக்கும் என்று யாராலும் யோசிக்க கூட முடியாது. அவ்வளவு ஆளுமையும், எந்நேரம் வேலை வேலை என்றே இருப்பான். ஆனால் அவனின் தொழிலாளிகள் அவர்களின் நலன், குடும்பம் அனைத்திற்கும் சரியான வழிமுறைகள் வைத்து இருந்தான். அதனால் தான் அவன் இழுத்த இழுப்பிற்கு, அவன் வேகத்திற்கு வேலை நடக்கிறது.

“நீ இப்படி எல்லாம் பேசுனா, நீ நல்லவன்னு நான் உன்னை தப்பா நினைச்சுற போறேன் பார்த்துக்க….”

“நான் நல்லவன் தாண்டி ஆனா உனக்கு மட்டும் ரொம்ப நல்லவன்….” சொல்லிவிட்டு அவன் சிரிக்க, இவளும்

“அந்த ரொம்ப நல்லவனை எனக்கும் தெரியும்டா….” என்று அழைப்பை துண்டித்தாள்.

@@@@@@@@@@

கிஷோர் வீட்டில்,

மகன் கோபமாக சொன்னதை கேட்டு, அவன் அம்மா, உடனே

“பார்த்தீங்களா பார்த்தீங்களா…. இவனுக்கு ஏதோ மருந்து போட்டா அந்த பொண்ணு” என்று கத்தினார்.

அவன் அம்மா கத்தியதும், உள்ளே சென்ற கிஷோர் வெளியே வந்து,

“உங்க பையன் ஒரு பொண்ணை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிறதை ஒத்துக்க முடியலை, ஏதோ பிளான் பண்ணி அதை நிறுத்த பார்க்கிறீங்க…. அப்படித்தானே? சே!….” அவனும் சேர்ந்து கத்தினான்.

“என்னடா விட்டா பேசிட்டே போறே…. உன் ஆட்டத்துக்கு எல்லாம் நாங்க ஒத்துபோனதுக்கு எங்க மேல இப்படி ஒரு பழி போடுறே….”

“ஆமா, அம்மா என் மாமனாரை பார்க்கவே இல்லைனு ஏன் பொய் சொன்னீங்க….?”

“அதுக்குள்ள அந்தாளு உன்கிட்ட எங்களை பத்தி ஏத்திவிடுறாரா…. நீயும் என்னவோ மாமனார் மாமனார்னு உருகுறே…. இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலை பா, நியாபகம் வைச்சுக்க.” படபடவென்று பொரிந்து தள்ளினார் கிஷோரின் அம்மா.

“அவர் அப்படி எல்லாம் எதுவும் சொல்லலை, சாதாரணமா பேசிட்டு போனார்…. அது கூட வழியில் பார்த்து நான் தான் நிறுத்தி பேசினேன்.”

நாராயணனை பார்த்து, “நான் இதுக்கு மேல பொறுமையா இருக்க மாட்டேன்….” என்று சொல்லி விட்டு மகனை பார்த்து,

“இங்க பாருடா கிஷோர், நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணுங்கிற எண்ணத்தை விட்ரு…. மீறி பண்ணனும் நினைச்சா அவங்க வீட்டோட போய் இருந்துக்க. எங்களுக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சமும் எங்களுக்கு இஷ்டம் இல்லை….” என்றார் கடுமையாக.

“என்ன புதுசா இப்போ சொல்றீங்க…. இப்போ என்ன பிரச்சனை இதில உங்களுக்கு….?”

“நீதான் பிரச்சனை, நீ ஊரு உலகத்திலேயே இல்லாத பொண்ணை கட்டிக்க போற மாதிரி பண்றது தான் எங்க பிரச்சனை…. எனக்கு சுத்தமா பிடிக்கலை…. அதுக்கும் மேல எதுக்கும் வக்கில்லாத வீடு வேற….”

“நம்ம கிட்ட இல்லாத பணமா? அவ தான் கொண்டு வரணுமா….?”

“அதெல்லாம் உங்க அப்பா சம்பாரிச்சது, நீ இல்லை…. அதனால் உனக்கு வர வரதட்சணை வேணும் எனக்கு….”

தன் அம்மாவிற்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா? அம்மா பேசுவதை எல்லாம் வேடிக்கை பார்க்கிறாரே என்று அப்பாவை பார்த்தான். அவர் எங்கேயோ பார்த்தார்.

“ஊரெல்லாம் அவர் பொண்ணை தான் எடுக்க போறோம்னு சொல்லியாச்சு….” கேலியாக சொன்னான் கிஷோர்.

“ஊரை பத்தி எல்லாம் கவலை இல்லை எனக்கு, என் வீட்டை பத்தி தான்….”

“என்ன அப்பா, நீங்க அமைதியா இருக்கீங்க….”

“அம்மா சொல்றதில எனக்கு உடன்பாடு தான் பா….நமக்கு சரியா வராது இந்த கல்யாணம்.”

“முன்னாடி சரியா வந்துச்சு….”

“இனிமே அதை பேசாதே….”

“இதுக்காக தானே அவங்க வீட்டை வாங்கினோம்….”

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை, காசு கொடுத்து தானே வாங்கினோம், அவங்களுக்கும் ஆரம்பத்திலே இருந்தே இந்த கல்யாண பேச்சில் விருப்பம் இல்லையே…. அதனால் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.”

“அதெல்லாம் இப்போ அவங்களுக்கு ஓக்கே தான்….”

ஒரு நிமிஷம் இரு, என்றவர், செல்வராஜ்ஜிற்கு அழைத்தார்.

“எங்க இருக்கீங்க….? வீட்டுக்கு போய்ட்டீங்களா….?”

“ஆமா, இப்போ தான் வந்தேன்….”

“ஸ்பீக்கர்ல போட்டு, உங்க வைப், பொண்ணு எல்லாரையும் கூப்பிடுங்க…. முக்கியமான விஷயம் சொல்லணும்….”

“சொல்லுங்க…. எல்லாரும் இருக்காங்க….”

“என் பையனுக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் வேண்டாம், இப்போ எங்களுக்கு அதில் இஷ்டம் இல்லை…. தப்பா நினைச்சுக்காதீங்க….”

“ஓ….! என்ன தீடீர்னு….” செல்வராஜ் கேட்க,

“இப்போ சூழ்நிலை வேற மாதிரி இருக்கு….”

“பரவாயில்லை விடுங்க, அவங்களுக்கு ஏதோ யோசனை…. நாங்க ஓன்னும் தப்பா நினைக்கலைங்க, நீங்க கவலைப்படாதீங்க…. தம்பி ஒரு செயின் கொடுத்தாங்க, அதை அப்பறம் கொடுத்து விடுறேங்க….” வாசுகி வேக வேகமாக பேசினார்.

குடும்பத்தினர் மனது தெரியும் என்பதால், செல்வராஜும்,

“சரிங்க உங்க மனசு போல் செய்ங்க” என்று சொல்லி முடித்து கொண்டார்.

“பார்த்தியா அவங்க குரலில் எவ்ளோ ஆசுவாசம்னு…. இது உனக்கு தேவையா….? உனக்கென்ன குறை….? நாம நல்ல பொண்ணு பார்க்கலாம்.” என்றார் நாராயணன் கன்றி போன முகத்துடன் இருந்த கிஷோரின் தோளில் தட்டி.

அனைவரும் அவரவர் எண்ணத்தை வெளிப்படுத்தி விட இவன் எதுவும் பேசாமல் அமைதியாக அறைக்குள் சென்று விட்டான்.

வாசுகி, வேகமாக அந்த செயினை கொடுத்து விடுகிறேன் என்றது கிஷோருக்கு மிகுந்த அவமதிப்பாக இருந்தது. அவர்களுக்கு தன் மேல் எந்த அபிப்பிராயமும் இல்லை, அதை விட இவர்களுடனான சம்மந்ததை முடித்து கொள்ள வேகமாக பேசியது மிகுந்த அவமானமாக இருந்தது அவனுக்கு.

இவர்களுக்கு பாடம் புகுட்டுகிறேன் பார், அம்முவை சும்மா விட போறதில்லை…. என்று அந்த நிமிடம் திருமணம் எண்ணத்தை தூக்கி போட்டு விட்டு பழிவாங்கும் உணர்ச்சியை கையில் எடுத்தான் கிஷோர்.

அவனுடையது ஆத்மார்த்தமான காதலாக இருந்திருந்தால், வருத்தப்பட்டு இருப்பான், தன்னை விளக்க முயன்று இருப்பான், ஏதேனும் நல்ல முயற்சி எடுத்து இருப்பான், இது வெறும் ஆசைப்பட்ட பொருளின் மீது இருந்த மோகமும், ஆளுமையும் தான். அதனால் எவ்வாறு அவர்களை வருந்த செய்யலாம் அல்லது அவர்களை வருத்தி அதில் இவனின் ஈகோவை அமைதி படுத்தி கொள்வது என்று பார்த்தான்.

இரவெல்லாம் தூங்காமல், என்ன செய்வது, எப்படி செய்வது என்று சிந்தித்தவன், சில ஐடியா தோண, அப்பாவிடம் வந்து நின்றான்.

“நீங்க மட்டும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருந்தா நான் நிச்சயமா கேட்டு இருக்க மாட்டேன், ஆனா அவங்களும் சேர்ந்து சொல்லிட்டாங்க…. அவங்களை என்னால சும்மா விட முடியாது…. நான் யாருன்னு காட்டுறேன்…. என்னை ரொம்ப இளகாரமா நினைச்சுட்டாங்க….”

“டேய், இதெல்லாம் தேவையில்லாத வேலை. என்ன இருந்தாலும் அவங்க அந்த கேபியோட சொந்தக்காரங்க, பேசாம விட்டு தள்ளு. வேணா அந்த பொண்ணு சரியில்லைனு சொல்லி விடுவோம் மார்க்கெட்ல….” என்றார் நாராயணன்.

“அதுவும் தான், அதுக்கு முன்னாடி, அவங்களை நடுத்தெருவில் நிறுத்த போறேன். வீட்டை காலி பண்ண சொல்லுங்க, அதுவும் ஒரு நாள் தான் டைம் சொல்லுங்க…. இல்லைனா நம்ம ஆளுங்களை எல்லாம் அனுப்புவேன்னு சொல்லுங்க. சீக்கிரம் போன் பண்ணுங்க பா.”

“அது …. அது…. அப்படி எல்லாம் செய்ய முடியாது டா….”

“ஏன் செய்ய முடியாது, வீட்டுக்கு சொந்தகாரங்க நாம தானே….? நம்ம இஷ்டம் தான்! இப்போ நீங்க சொல்றீங்களா…. நான் சொல்லவா?”

“டேய், வேற வழி யோசி டா….இது சரியா வராதுடா….” சொன்னால் மகன் எப்படி ரியாக்ட் பண்ணுவானோ என்று தடுமாறினார் நாராயணன்.

“சொல்லுங்க பா, ஏன் சரியா வராது? கல்யாணமும் வேண்டாம், இதுவும் வேண்டாம் னா…. நான் என்ன கேனை பயலா….?” ஆக்ரோஷமாக கத்தியவனை கண்டு பயந்து போனார் நாராயணன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!