❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤
நிலவு 24
உதய சூரியன் கிழக்கில் செந்நிறப் பூச்சை அள்ளித் தெறித்து விளையாடிக் கொண்டிருந்தது.
பல்கோணியில் நின்று அதன் கம்பியில் முழங்கையை ஊன்றி முகத்தைத் தாங்கியவாறு வீதியில் விளையாடும் அண்ணன் தங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அதிய நிலா.
அவளும் இவ்வாறு சிறு வயதில் அண்ணனுடன் குறும்பு செய்வதை நினைத்திட அகம் குளிர்ந்தது. ஷாலு நர்சரி சென்றிருக்க உதய் ஹாஸ்பிடல் சென்றிருந்தான்.
அதி வேலையிலிருந்து நின்று இருந்தாள். உதய்யிடம் இது பற்றி கூறவும், ‘உங்க விருப்பம் அதி. பிடித்தா வேலைக்கு போங்க இல்லனா வேண்டாம். இதுல என் முடிவைக் கேட்க அவசியமில்லை’ என்று விட்டான்.
வேலை வேலை என்று பறந்து ஷாலுவைத் தினமும் சுமதி வீட்டில் விட்டு அவர்களுக்கும் இனி தொந்தரவாக இருக்கத் தேவையில்லை என்று வேலையை ரிசைன் பண்ணி விட்டாள்.
உதய்யும் ஷாலுவும் இல்லாமல் வீட்டில் இருப்பது ஒரு மாதிரி இருந்தது. இருவரும் இருந்தால் சத்தத்திற்கும் சிரிப்பிற்கும் பஞ்சமே இருக்காது என நினைக்கும் போது இதழில் புன்னகை அரும்பியது.
“இன்னைக்கு மனசு ஒரு மாதிரி இருக்கு. ஒரு வேலையும் பண்ணத் தோணல. என்னாச்சு எனக்கு?” என்று கேட்டவள் கீழே சென்று சோபாவில் கால்களை நீட்டி சாய அப்படியே அசந்து விட்டாள்.
காலிங் பெல் அலற கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து உதய் வந்து விட்டானோ என நினைத்து ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். அங்கு கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தான் ஒரு சிறுவன்.
அவள் என்னவென்று கேட்கும் முன்னரே “இது உங்களுக்கானது க்கா” என அவள் கையில் பொக்கேவைத் திணித்து விட்டு ஓடினான்.
புரியாமல் நின்றவள் அதில் தொங்கிய கார்ட்டை பார்க்க இலக்கம் எட்டு பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே “எட்டே மாதங்கள் காத்திருப்பில் கிடைத்திடும் உன் கைகளில் ஒரு மாபெரும் பொக்கிஷம்…! இட்ஸ் ஃபார் யூ அதிய நிலா” என்றும் இருந்தது..
“யாரு அனுப்பி இருப்பாங்க? ஒரு வேளை உதய்யா? அவன்னா எதுக்கு இப்படி கண்ணாமூச்சி ஆடணும்?” என நினைத்தவள் அதைத் தூரமாக வைத்து விட்டு டிவி பார்க்க சற்று நேரத்தில் மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டது.
கதவைத் திறந்திட அவள் கையில் சிறு பையை கொடுத்துவிட்டு சென்றான் மற்றொரு சிறுவன். அவளோ அதைப் பிரித்துப் பார்க்க அதனுள் பிறந்த குழந்தைக்கு அணிவிப்பது போல் நீல நேரத்தில் ஆண் குழந்தைக்கான உடையும், இளஞ்சிவப்பு நிறத்தில் பெண் குழந்தைக்கான உடையும் இருந்தது.
“இதை அணிவிக்கும் போது தோன்றும் உன் மனதில் இனம் புரியாத சிலிர்ப்பு!” என எழுதி இருந்த கார்டும் அதில் இருந்தது.
யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது. அதையும் பொக்கே இருந்த இடத்தில் வைத்து விட்டு சோபாவில் சரிய மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டதில், “இப்போ யாராச்சும் வரட்டும் எதையாவது தூக்கிக்கிட்டு. சும்மாவே விட மாட்டேன்” என்று கடுப்பில் கதவைத் திறந்தவளின் முகம் பூவாக மலர்ந்தது சிறுவனின் கையில் இருந்த அழகான குழந்தையின் போட்டோவில்.
அதி இமைக்க கூட மறைந்தவளாய் பார்த்தாள். கொழுக் மொழுக்கென்ற கன்னங்களும், அழகான கண்களும், அவளை வெகுவாய்க் கவர்ந்தன.
அவள் மெய்மறந்து நிற்கையிலே அதனைக் கொடுத்து விட்டு ஓடினான் வந்தவன். அந்த ஃபோட்டோவின் பின்னால் “முகம் பார்க்கும் தருணம் மீண்டும் பிறப்பாய் தாயாகவும் சேயாகவும்” என்று எழுதியிருந்தது.
அதை வாசித்தவளுக்கு ஏதேதோ உணர்வுகள். தொடர்ந்து என்ன வரும் என்று காத்திருந்தாள் இம்முறை கடுப்புடன் அல்ல அதையும் மீறித் துளிர் விட்ட சிறு ஆவலுடன்!
காலிங் பெல் அலறவே இல்லை. ஏமாற்றம் அடைந்தவளாய் கதவைத் திறக்க கதவருகே சிறு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தாள் பெண்.
சிவப்பு நிறத்தில் இதய வடிவ தலையணை வீற்றிருந்தது உள்ளே. அதைக் கையில் எடுக்கும் போது அதிலிருந்து காகிதம் கீழே விழுந்தது.
“இவ் அழைப்பில் உன்னை மறப்பாய், இன்பமாய் உணர்வாய் பெண்ணே” என்று எழுதியிருந்தது.
“அழைப்பா? என்ன அழைப்பு? எதுவும் புரியலையே” நெற்றியைத் தேய்த்து விட்டவளுக்கு கடுப்பாக வர கையைப் பொத்தி அதற்குக் குத்தினாள்.
“அம்மா! ம்மா” எனும் அழைப்பு அதிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டது. அவ்வழைப்பு அவளை உணர்வுக் குவியலாக மாற்றியது.
“ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்? இதை அனுப்புறது உதய் தானோ?” என்று நினைத்தவளுக்குப் பதில் கிடைக்கவில்லை.
அனைத்துப் பொருட்களையும் அள்ளிக் கொண்டு போய் கட்டிலில் போட்டவள் தலையைக் கைகளால் தாங்கியவாறு அமர்ந்து கொண்டாள். “இதய நிலா” என்று செவியோரம் கேட்ட அழைப்பில்,
“நாட் இதய நிலா! ஐ ஆம் அதியநிலா” என முறுக்கிக் கொண்டவளுக்கு ஏதோ தோன்ற பட்டென எழுந்து நின்றாள்.
அவளது முன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான் இதயாவின் கண்ணாளன்.
“உதய்! இந்த கிப்ட் எல்லாம் அனுப்பினது நீயா?” கேள்வியாய் அவன் முகம் நோக்கினாள்.
“யாஹ் அஃப்கோர்ஸ். நானே தான்”
“என்ன இதெல்லாம்? சடனா எதுக்கு பேபி டிரஸ், ஃபோட்டோ எல்லாம்?” குழப்பத்துடன் கேட்டாள் காரிகை.
“இப்படி யோசிச்சா குழப்பமாத் தான் இருக்கும். தனித்தனியா அனுப்பினது எல்லாம் கிடைத்த ஆடர்க்கு வைங்க. அப்புறம் சொல்றேன்” தோளைக் குலுக்கியவனின் பேச்சு புதிராக இருந்தாலும் அவன் சொன்னவாறு வரிசையாக வைத்தாள்.
ஒவ்வொன்றாக விரலால் சுட்டிக் காட்டியவாறு சொல்லத் துவங்கினான் அவன். “இன்னும் எட்டு மாசத்துல இது இரண்டாலேயும் ஒரு ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு ஒரு கியூட்டான பேபி உங்களை அம்மானு கூப்பிட வரும். சோ…?” என இழுத்தவன் தன் பின்னால் மறைத்து வைத்திருந்த ஓவியத்தை வரிசையில் இறுதியாக வைத்தான்.
அதைப் பார்த்து அவளின் நயனங்கள் பெரிதாக விரியும் போதே அவள் கன்னங்களைத் தன் வலிய கரங்களில் தாங்கி “எஸ்! யூ ஆர் ப்ரெக்னன்ட்! என் நிலாம்மா அம்மாவாக போறா” அவள் பிறை நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் அதியின் டாக்டர் கணவன்.
இன்பமாய் அதிர்ந்தாள் அவள். அவனவள்! உதயனின் உயிரானவள்!
தன் காதில் கேட்ட வார்த்தைகள், அதுவும் அந்த வார்த்தைகளை தன் மணாளனின் வாயால் கேட்டதில் உச்சி முதல் உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்தது பாவைக்கு.
கண் கலங்கினாள் ஆனந்தமாக. அவன் கைகளைப் பிடித்தாள் இனிதாக. அவளது உணர்வுகளை அறிந்தவன் அவள் தலையை வருடினாள் இதமாக.
“வர்ஷ் நான் அம்மாவாக போறேன். நீ அப்பா! நமக்குன்னு ஒரு குழந்தை. ரொம்ப சந்தோஷமா இருக்கு டா” அவன் மார்பில் சாய்ந்தாள் மலர்க் கொடியாள்.
“ஆமாங்க. என்னையும் அப்பானு கூப்பிட எனக்கே எனக்கென இன்னொரு உறவு வரப்போகுது. சந்தோஷம்னு ஒரு வார்த்தையில் அடக்க முடியாத அளவுக்கு என் மனசுல சந்தோஷம் நிரம்பி வழியுது. உங்களை அப்படியே இறுக்கி அணைச்சுக்கனும்னு தோணுது கண்ணம்மா” அவள் கன்னத்தை வருடினான் வேங்கை.
“உனக்கு எப்படி நான் கன்சீவ்வா இருக்கிற விஷயம் தெரியும்?” அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள் அதி.
“இதே கேள்வியை ஒரு டீச்சர் கிட்ட கேட்டா கூட தாங்கிக்கலாம். நான் டாக்டர்மா! என் கிட்ட போய் இப்படி கேக்குறீங்களே. நிஜமாவே நீங்க மக்கு சாம்பிராணி தான்” அவள் தலையில் லேசாக தட்டியவனிடம்,
“ஷ்ஷ்! மறந்தே போயிட்டேன். சாரி டாக்டரே. நீ எப்போ பார்த்தாலும் வீட்டில் வெட்டியா இருக்கியா அதான் அடிக்கடி மறந்து போயிடறேன்” நாக்கைத் துருத்திக் காட்டினாள் அக்கண்ணாமூச்சி ஆட்டக்காரனை கண்ணசைவில் ஆட்டிப் படைக்கும் அக்குறும்பழகி.
அவன் இறுதியாக கொடுத்த பொருளை கையில் எடுத்துப் பார்த்தான். அதியா நிறை மாத கர்ப்பிணியாக இருப்பது போலும் அவளது கையைப் பிடித்து உதய் தோளோடு சேர்த்து அணைத்து இருப்பது போலும் அழகாக வரையப்பட்ட ஓவியம் ஃப்ரேம் செய்யப்பட்டிருந்தது.
“வாவ்! ரொம்ப அழகா இருக்குடா. சில ஆர்டிஸ்ட் ஒருத்தர வரையனும்னா அவர்களை நேரில் பார்த்து தான் வரைவாங்க. நீ எப்படி இவ்ளோ நுட்பமா கற்பனை பண்ணி வரைஞ்ச?” ரசனையுடன் அந்த ஓவியத்தில் இருந்த உதய்யின் முகத்தை தடவினாள் வஞ்சியவள்.
“எதுக்கு நேரில் பார்க்கனும்? என் மனசுல நீங்க ஆழப்பதிந்து இருக்கீங்க. கண்ணை மூடி இதயத்தைத் திறந்தா உங்களை என் கண்ணுக்குள்ள அப்படியே பார்க்கிறேன். சோ ஈசியா ட்ராவ் பண்ணிருவேன்” கண்களைச் சிமிட்டியவனின் பேச்சில் மயங்கியும் தான் போகலானாள் அதிய நிலா.
வீடு திரும்பிய ஷாலுவிடம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது இளஞ்சிட்டு.
“வாவ்! தாங்க் யூ அத்து. லவ் யூ” என தன் அத்துவின் கன்னத்தில் முத்தங்களை இடைவிடாது வழங்கியவள் அவள் வயிற்றருகே குனிந்து,
“பாப்பா! எப்படி இருக்கீங்க? நான் தான் உங்க அப்பாவோட கியூட்டி. என் கிட்ட சீக்கிரம் வந்துருங்க” என்று பேசியவளைக் கண்டு சிரித்தனர் இருவரும்.
உதய்யிற்கும் முத்தங்களை வழங்கி தன் மகிழ்வைப் பரிமாறிக் கொண்ட ஷாலு அவனிடம் முத்தத்தைப் பெற்றுக் கொள்ளவும் தவறவில்லை.
“அத்து! உனக்கும் ஹேப்பி தானே. சோ நீ வர்ஷுக்கு கிஸ் பண்ணி அதை ஷேர் பண்ணு” முதலில் மறுத்தும் அடம்பிடித்து நின்ற சின்னவளின் ஆசையில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அதி.
உதய் அழகாய் புன்னகைக்க, அதி வெட்கத்தில் சிவக்க, கைகளைத் தட்டி கிளுக்கிச் சிரித்தவாறு இருவரையும் அணைத்துக் கொண்டாள் ஷாலு பாப்பா.
சும்மாவே அதியை உள்ளங்கையில் வைத்துத் தாங்குபவன்; இப்போது தலை மேல் வைத்து தாங்கு தாங்கு என தாங்கினான். அவளை ஒரு வேலை கூட செய்ய விடாமல் அவனே அனைத்தையும் செய்தான்.
“டேய்! இதெல்லாம் டூ மச் டா” பொய்யாக சலித்துக் கொண்டாலும் அவன் தனக்காக செய்யும் ஒவ்வொன்றிலும் தெரியும் அளவில்லாத அன்பில் உள்ளுக்குள் மகிழ்ந்து தான் போவாள் அஞ்சன விழியாள்.
அவளை இன்னும் இன்னும் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டான் உதய். தன் குழந்தையுடன் குறைந்தது ஒரு மணி நேரமாவது பேசுவான். அவ்வாறு பேசும் போது அவனது முகத்தில் தெரியும் பிரகாசத்தை இமைக்காமல் பார்த்திருப்பாள் அதி.
கதைகள் கூட சொல்வான் தன் பிறக்காத குழந்தைக்கு. அதி சாப்பிட மறுத்தால் அதைப் பற்றியும் செல்லமாக முறையிடுவான்.
காதலும், சிணுங்கலும், சிரிப்புமாகவே நாட்கள் கடந்தன. அதியைத் தினமும் எங்காவது அழைத்துச் செல்வான். பீச், பார்க் என்று சென்று அவள் கையைப் பிடித்து நடப்பான்.
இவர்களது சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் விதமாக அறியக் கிடைத்தது அதியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளரும் செய்தி! உச்சி குளிர்ந்தனர் தம்பதியினர்.
“அய்யோ! அவ்ளோ ஹாப்பியா இருக்கு நிலாம்மா. நமக்கு ரெட்டைக் குழந்தைங்க. கால் தரையில் பட மாட்டேங்குது” அவளை அணைத்துத் தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டான் வர்ஷன்.
கவலையை மட்டுமே அனுபவித்த ஆணின் வாழ்வு முற்றிலும் எதிராய் மாற்றம் கண்டது. இன்பமும் மனநிறைவுமே அவனை நாடி வரலாயின.
மழலைகளின் கீச்சுக் குரலில் அமர்க்களமாய் இருந்தது அந்த பார்க்! அது அவர்கள் வழக்கமாக செல்லும் இடம் தான். ஷாலு குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருக்க கணவனின் தோளில் சாய்ந்து அண்ணன் மகளைப் பார்த்திருந்தாள் அதிய நிலா.
“ஓய் பெண்டா பேபி” என்று ரகசியம் கொஞ்சும் குரலில் அழைத்தான் உதய்.
“என்ன டா?” பக்காவட்டாகத் திரும்பி அவனை நோக்கினாள்.
“என் பசங்க என்ன சொல்லுறாங்க? அப்பாவை தேடுறாங்களா?” அவனது நேசம் பீறிடும் பார்வை அதியாவின் ஆறு மாத வயிற்றின் மீது படிந்தது.
“அப்பாவை எதுக்கு தேடனும்? அவர் தான் அவங்க பக்கத்துலயே இருந்து எப்போவும் அவங்க கூட பேசிட்டு பாசமா இருக்காரே” அவளின் பார்வையோ அன்புடன் அவன் வதனத்தில் படிந்தது.
“ஓ அப்படியா! ஆனாலும் அவங்க என்னைத் தேடணும். தேடிட்டே இருக்கணும்னு மனசு அடிச்சிக்குது இதயா”
“போதும். உன் பாசத்தை அடக்கி வை டா என்னால தாங்கிக்க முடியல” கும்பிடு போட்டவளின் குரலில் குறும்பு கூத்தாடிற்று.
“உங்களுக்கு பொறாமையாக்கும்” என நொடித்துக் கொண்டவனைக் கண்டு சிரித்தாள்.
“அதிம்மா! நான் உங்களை சந்தோஷமா பாத்துக்குறேனா? இந்த டைம்ல மனசுல விதவிதமா ஆசை தோணும்னு சொல்லுவாங்க. அந்த ஆசைகள் எல்லாத்தையும் நான் நிறைவேற்றுறேனா? உண்மையை சொல்லுங்க” சற்று பதற்றத்துடன் அவளை ஏறிட்டான்.
“எனக்குள்ள தோணும் ஆசைகளை நீ நிறைவேற்றல. எனக்கே தோணாத என் ஆழ்மனசுல இருக்குற ஆசைகளைக் கூட அறிந்து நிறைவேத்துற. என்னையே நினைச்சு என் பக்கத்துல இருந்து எனக்காகவே வாழும் ஜீவன் நீ!
என்னை வேற யாராலையும் இவ்வளவு அன்பா அக்கறையா பார்த்துக்க முடியாது” அவன் கையோடு தன் கையைக் கோர்த்தாள் மங்கை.
🎶 உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே!
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே 🎶
🎶 உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……🎶
🎶உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே🎶
🎶விடிந்தாலும் வானம்
இருள் பூச வேண்டும். மடி மீது சாய்ந்து
கதை பேச வேண்டும்🎶
🎶முடியாத பாா்வை
நீ வீச வேண்டும்
முழு
நேரம் என் மேல் உன்
வாசம் வேண்டும்🎶
🎶 இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை.
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
ஓஹோ…. ஓ… ஓ… 🎶
🎶 உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே!
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே🎶
🎶 ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்.
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும் 🎶
🎶 ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும் 🎶
🎶 காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா?
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
ஓ… ஓ……. ஓ…… ஓ… 🎶
அவள் சொன்னதில் மனம் நிறையப் புன்னகைத்தான் உதய். ஓடி வந்த ஷாலு கால் தடுக்கி கீழே விழ “கியூட்டி” என பதற்றத்துடன் ஓடிச் சென்று அவளைத் தூக்கினான்.
“ஆஆ கால் வலிக்குது” என அழுகைக்குத் தயாரானவளை, “கொஞ்சம் வெயிட் பண்ணு டா. வீட்டுக்கு போனதும் மருந்து போடலாம். பெருசா ஒன்னும் இல்ல” என ஆறுதல் படுத்தினான்.
“ஓடி வராதன்னு எத்தனை தடவை சொல்லுறது? அப்புறம் எதுக்கு சும்மா துள்ளிக் குளிச்சிட்டு வரே?” என்று அதட்டினாள் அதி.
“ஸ்ஸ்! அவளை ஒன்னும் சொல்லாதீங்க. பாவம் அழுதுருவா” அவளிடம் மெதுவாக சொன்னான் அவன்.
“நீ தான் ஓவர் செல்லம் கொடுத்து அவளைக் கெடுத்து வெச்சி இருக்கே” என்று கடிந்து கொண்டாள்.
“என் வர்ஷூவைத் திட்டாத அத்து. திட்டினா என் செல்ல குட்டீஸ் கிட்ட அவங்க அப்பாவைத் திட்டுறனு போட்டுக் கொடுத்துருவேன்” முகத்தை உப்பிக் கொண்டு மிரட்டினாள் ஷாலு.
“உனக்கு வாய் மட்டும் குறையாது டி. இவன் கூட பழகி அவன் பேச்சு உன் கிட்டயும் வந்திருக்கு” செல்லமாக அவள் கன்னத்தைக் கிள்ளினாள் அதியா.
பஞ்சுமிட்டாய் வாங்கி வந்த உதய் அதிக்கும் ஷாலுவுக்கும் கொடுத்து விட்டு தன் கையிலும் ஒன்றை வைத்திருந்தான். தன்னுடையதை சீக்கிரம் சாப்பிட்டு முடித்த அதி அவனைப் பார்க்க தன் கையில் இருந்ததையும் கொடுத்தான் காதலன்.
“யஷ்! நான் என்ப்பா கூட சின்ன வயசுல பார்க் போவேன். அவரும் இப்படித்தான் எனக்கு ஒன்னை தந்துட்டு இன்னொன்னை கையில வச்சிருப்பார். அப்புறம் நான் சாப்பிட்டு முடித்து அவரைப் பார்த்தா அவர் கையில் இருக்கிறதை எனக்கு கொடுப்பார்” தந்தையின் நினைவில் சொன்னவளை அன்புடன் நோக்கினான் காளை.
அதி எழுந்து உதய்யின் கையைப் பிடித்துக் கொள்ள அவளை ஒரு கையால் தோளோடு சேர்த்து அணைத்து அடுத்த கையால் ஷாலுவின் கையைப் பிடித்து நடந்தான் அவன். தன்னவளுடன் பேசிக் கொண்டே நடந்தவனைக்கு முன்னொரு நாள் அதியை இந்த இடத்தில் சந்தித்த போது இதே போன்ற காட்சியைக் கற்பனை செய்து பார்த்தது பளீரெனப் பளிச்சிட்டது.
அன்று கனவில் நினைத்தது இன்று நனவாகி நிஜத்தில் நடந்ததை எண்ணிப் பூரித்துப் போகலானான் அவன். நாட்களும் மாதங்களாகி அசுர வேகத்தில் பறந்தன. தன்னவனின் அன்பில் மூழ்கிக் கரைந்து தித்திப்புடன் இருந்தாள் அதியா.
நேரம் காலை பத்தைத் தாண்டி இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு ஹாஸ்பிடலில் இருந்து கால் வரவும் சென்ற உதய் இப்போது தான் வீட்டை வந்தடைந்தான்.
சோபாவில் அமர்ந்த வாக்கிலே தலையை சரித்து உறங்கி இருந்த அவனவளைக் கண்டு வேகமாக வந்தவன் “அதிம்மா” என்று மெதுவாக அவள் கன்னம் தட்டிட, முகம் சுருக்கியவாறு அவனது கையைப் பிடித்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டு தூங்கலானாள் அவனின் மனையாட்டி.
அவளது இச்செய்கையில் இதழ் கடையோரம் குறுநகை பூக்க அவனைக் கைகளில் ஏந்தி கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் கூந்தலை மென்மையாக வருடிக் கொடுத்தான்.
அழுந்த மூடியிருந்த இமைகளை மெல்லப் பிரித்த அதியின் விழித்திரைக்குள் விழுந்தான் அவளை அன்பு கனியப் பார்த்திருந்த கணவன்.
“வந்துட்டியா யஷு?” எனக் கேட்டவாறு வயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவனிடம், “இப்போ தான் டா வந்தேன். சாப்டீங்களா?” என்று வினவ இல்லை என்பதாகத் தலையை இடம் வலமாக ஆட்டியவளின் முகம் சொன்னது அவளுக்குப் பசிக்கிறது என்று.
“ஏன் அதி இப்படி பண்ணுறீங்க? நான் தான் சொல்லி இருக்கேன் எனக்காக காத்திருக்க வேண்டாம்னு. உங்களுக்கு பசிச்சா சாப்பிடலாம் இல்லயா?” சற்று கடினமாகக் கேட்டவனின் செய்கையில் தலையைக் குனித்து கொண்டாள்.
தன் சிறு கோபம் கூட அவளைப் பாதித்து விட்டது என்பதை உணர்ந்து சிகையைக் கோதி விட்டு,
“சாரி இது குட்டி! நீங்க சாப்பிடாம இருக்கீங்கனு தெரிஞ்சு கொஞ்சம் கோபப்பட்டுட்டேன். மன்னிச்சுடுங்க ப்ளீஸ்” என நாடி பிடித்துக் கொஞ்சினான்.
“ப்ச்! பேசாத. என்னை திட்டுறல்ல நீ. கொஞ்சம் கோபம்னாலும் அது என்னை ரொம்பப் பாதிக்கும். உன் விஷயத்துல எனக்கு சின்ன விஷயம் கூட பெருசு தான். பசிச்சுது. ஆனாலும் நீ இல்லாம சாப்பிட பிடிக்கல” என அவள் முகத்தைத் தவறு செய்த குழந்தையாக ஏறிட்டாள் அவனுக்கு சேயானவள்.
“இட்ஸ் ஓகேங்க!” என எழுந்தவன் உடை மாற்றிவிட்டு சமையலறைக்குள் நுழைய அவன் பின்னால் சென்றாள் அதி.
அவளை கதிரையில் அமர வைத்து விட்டு தானே சமைக்கத் துவங்கினான். அடங்க மாட்டாமல் புரண்டு நெற்றி தொட்டு விளையாடிய முடிக் கற்றையை ஒற்றை விரலால் தள்ளி விட்ட அவனது செய்கையை ரசித்துக் கொண்டிருந்தாள் அதியா.
சுமதியின் உதவியுடன் அவளுக்கு வளைகாப்பு நிகழ்வையும் தானே முன் நின்று நடத்தினான் உதய். இவன் சாதாரணமான வர்ஷன் அல்ல! அழகான உள்ளம் கொண்ட அன்பு வர்ஷன்! அவன் கரம் கோர்க்கத் தான் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் என மனதில் நினைத்தாள் மிஸ்ஸிஸ் அதிய வர்ஷன்.
சமைத்து முடித்து உணவைத் தட்டில் போட்டு அவனே அவளுக்கு ஊட்டி விடவும் தான் செய்தான். தன்னையே பார்த்தவாறு சாப்பிடும் நிலவுப் பெண்ணின் தலையில் செல்லமாகத் தட்டினான் உதய சூரியன்.
தானும் சாப்பிட்டு விட்டு சோபாவில் அமர அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அவனவள். அவன் எவ்வளவு பேசியும் மௌனமாகவே இருந்த அவளின் செய்கை வித்தியாசமாக பட்டது உதய்க்கு.
“பெண்டா பேப்ஸ்….!!”
அதற்கும் அமைதியாகவே இருந்தவள் அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். பின் தலை தூக்கி, “உதய்! என்னமோ மாதிரி இருக்குடா டெலிவரி டைமுக்கு என் பக்கத்துல இருப்பல்ல?” என்று கேட்டாள்.
“எஸ் கண்டிப்பா! நான் ஸ்பெஷல் பர்மிஷன் கூட வாங்கியாச்சு. உங்க கூடவே இருப்பேன்” அவள் தோள் பற்றினான் ஆதுரமாக.
இப்போது பேசினாள், இன்று நிறையப் பேசினாள், அவன் மௌனியாகி அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“நம்ம பேபிக்கு பெயர் வைக்கணும் தானே? என்ன பெயர் வைக்கலாம்?” என அவள் கேட்க,
“வைக்கலாம். நல்ல பெயரா வைக்கலாம்” என்று அவன் கூற அவள் முகம் சுருங்கியது.
“என்னாச்சு?” என்று அவன் பதற அவளுக்கு சுரீர் என்ற வலி வயிற்றில் ஊடுறுவியது.
“ஆஆ! வயிறு வலிக்குது டா” வயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறினாள். பிரசவ வலி ஏற்படத் துவங்குகிறது என்பதைப் புரிந்து அவளைக் கையில் ஏந்தியவன் தன் மடியில் தலையை வைத்துப் பிடித்துக் கொண்டு காரை செலுத்தினான்.
“ஸ்ஸ்! கண்ணா முடியல” அவனது சேர்ட்டை இறுகப் பற்றினாள்.
“பொறுத்துக்கோ ப்ளீஸ். சீக்கிரமே ஹாஸ்பிடல் போலாம்” என்றவனின் பேச்சில்,
“என்ன சொன்ன? பொறுத்துக்கோனு தானே? என்னை இப்போ மரியாதை இல்லாம கூப்பிட்டல்ல. கேட்க நல்லா இருக்குடா. அப்படியே பேசு இன்னைக்கு மட்டும், எனக்காக” என்றதும் மறுக்க முடியாமல் சரியென தலையாட்டினான்.
“முடியலையா அதி?” அவள் வலியை தன் முகத்தில் தேக்கி வினவினான் வேங்கை.
“ஆ…ஆமா என்னால முடியல. வர்ஷு எனக்காக ஒரு கவிதை சொல்லேன்”
“அதெல்லாம் அப்புறமா நிறைய நிறைய சொல்லிக்கலாம்” என்றவன் கைகளில் கார் இன்னும் வேகமாகச் சீறிப் பாய்ந்தது.
“ப்ளீஸ் டா…!!” அவனது கையைப் பிடித்து உலுக்கினாள் மாது.
“உன் வலி உணர்ந்தும் அதில் சிறு பங்கையாவது ஏற்க முடியாத துரதிஷ்டசாலியாய் நிற்கும் என்னை மன்னிப்பாயோ என் நிறைமாத நிலவே?” அவள் கையைத் தன் முகத்தில் வைத்துக் கொண்டான் காளை.
“இப்படிலாம் பேசாத டா” என்று சொல்லும் போது ஹாஸ்பிடல் வந்தது. அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினான் உதய்.
பிரசவ அறையினில் அனுமதிக்கப்பட்டாள் அதி. அவள் வலியில் துடியாய்த் துடிப்பதை காணத் தாங்க முடியாது டாக்டர் கோட்டை அணிந்தான் அதியின் உதய். இன்னும் சில தாதியரும் அதிக்கு பிரசவம் பார்க்கும் லேடி டாக்டரும் வந்து சேர்ந்தனர்.
தன் மகவுகளை இவ்வுலகத்திற்கு கொண்டு வர தன் உயிரானவள் அலறும் அலறலில் அவன் இதயம் தட்டுத் தடுமாறித் தாளம் தப்பித் துடிக்கலாயிற்று.
“ஆஆ வலிக்குது யஷு” அவனது கையில் தன் நகம் பதியும் அளவிற்கு அழுத்தினாள் பெண்ணவள்.
“நான் இருக்கேன் நிலா. என்ன பெண்டா பேபில்ல? கொஞ்சம் பொறுத்துக்க” அதியின் தலையைத் தடவினான் ஆடவன்.
தன் ஒட்டுமொத்த பலத்தையும் தேக்கி, “கண்ணா…!!” என அவள் வைத்த சத்தம் அவள் மீது தீராக் காதல் கொண்டவனின் இதயத்தை உலுக்கியது.
அவன் கண்களில் முதல் தடவையாக கண்ணீர் துளிர்த்து அதியின் கையில் பட்டுத் தெறித்த சமயம் இவ்வுலகை எட்டிப் பார்த்த தன் மகளைக் கையில் ஏந்திய வர்ஷனைப் பார்த்தாள் நிலா.
தன்னவன் அழுகின்றான் தனக்காக! தன் வலியில் துடித்துக் கண்ணீர் விடுகின்றான்! அவன் விழிகளில் கண்ணீரைப் பார்ப்பதே இதுவே முதல் முறை.
குழந்தையைக் கொடுத்து விட்டு அவளிடம் திரும்ப, “நீ அழுவுறியா உதய்? அழாத. நீ எப்போவுமே சிரிச்சுட்டு இருக்கணும். எங்கே சிரி” அத்தனை பொறுக்க முடியாத வலியிலும் அவனின் புன்னகைக்காக ஏங்கினாள் உதய்யின் இதய தேவதை.
“நீ அழுது துடிக்கிறதை பார்த்து எனக்கு எப்படி சிரிப்பு வரும்? என்னால முடியல” என்றான் வேதனையுடன்.
“இல்ல நீ சிரிக்கனும். உன் புன்னகையை நான் பார்க்கனும் வர்ஷா” என்றதும் அவளுக்காக, தன் இதயத் துடிப்பானவளுக்காக, மிகவும் கடினப்பட்டு அவன் புன்னகைத்த மறுநொடி, அவளின் உயிரை உலுக்கும் குரலுடன் இணைந்து ஒலித்தது ‘ம்மா’ எனும் அவர்களது தவப்புதல்வியின் அழுகுரல்.
ஆம்! ஆண் குழந்தை பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தாள் அதியா. அப்படியே கண்களையும் மூடி மயக்கத்துக்கு சென்றவளை கசந்த முறுவலுடன் நோக்கினான் ஆணவன்.
அவள் விழிப்பதற்காகக் காத்திருந்தான். சற்று மணி நேரங்களில் கண் விழித்தாள் அதி.
அவளைக் கண்டு இரு கைகளிலும் தன் இரு பிள்ளைகளுடனும் வந்தான் அவன். “உதி! நம்ம குழந்தைங்க” என கேட்டவளின் மடியில் பிஞ்சுகளைத் தூக்கி வைக்க அழகிய பூவாக மலர்ந்தது அவள் வதனம்.
“இவ அப்படியே உன்ன மாதிரியே இருக்கா” தன் மகளின் முகத்தை வருடிக் கொடுத்தாள் அவள்.
“நம்ம பையன் அச்சு அசல் ராவ் அங்கிள் மாதிரி இருக்கான் பாரேன்” என்றவனின் கூற்றை நூறு வீதம் உண்மையாக்கும் விதத்தில், எங்கோ இரு துருவங்களில் இருந்த அதியாவையும் உதயாவையும் வாழ்வில் ஒன்றாக இணைத்த ராகவன் போலவே இருந்தான் அவரது அன்புப் பேரன்.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உதய்! இவ்வளவு அழகான உறவுகள் எனக்குக் கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை” பூரிப்பில் விம்மித் தணிந்தது அவள் நெஞ்சம்.
“நானும் கூட எதிர்பார்க்கலை. தன்னந்தனியா அனாதையா இருந்த எனக்கு அன்பான மனைவி, கியூட்டான ஷாலு, அழகான குழந்தைங்க. ப்பாஹ்! எனக்கு இது தவிர வேறு என்ன வேணும்? எல்லாம் என் இதயாவால். ஐ லவ் யூங்க”
“இன்னைக்கு ஃபுல் ங்க’ போட்டு கூப்பிடாதன்னு சொன்னேன்ல. சோ அதைக் கட் பண்ணிட்டு சொல்லு” என அவன் கையில் அடித்தாள் அவள்.
“ஓகே ஓகே! நீ மட்டும் இல்லைனா நான் இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கவே மாட்டேன். ஐ லவ் யூ டி! ஐ லவ் யூ சோ மச் நிலா” அவள் நெற்றி முட்டினான் மாயவர்ஷன்.
“லவ் யூ டூ டா வர்ஷ்” அண்ணாந்து அவன் நெற்றியில் தன் ரோஜா இதழால் முத்திரை பதித்தாள் உதய தேவனின் இதய தேவி…!!
நிலவு தோன்றும்…..!!🌛
✒️ ஷம்லா பஸ்லி❤️