கரம் விரித்தாய் என் வரமே – 24
“நீ கால் பண்றியா…. இல்லை நான் கால் பண்ணவா….?” அஸ்வினியின் மௌனம் தெய்வாவின் பொறுமையை உடைக்க குரலை உயர்த்தினாள் அவள்.
“ப்ளீஸ் ப்ளீஸ் தெய்வா, நீ டென்ஷன் ஆகாதே! எனக்கு ஏற்கனவே உன்னை அலைய வைக்கிறேன்னு கவலையா இருக்கு….ப்ளீஸ் ….”
“ஓக்கே ஓக்கே நான் அமைதியா இருக்கேன்….ஆனா நீ அமைதியா இருக்க கூடாத நேரம் இது அஸ்வினி…. ப்ளீஸ் ஆக்ட் பாஸ்ட்….” தோழிக்கு புரியவைத்து விடும் வேகத்தில் படப்படத்தாள் தெய்வா.
“கண்டிப்பா நான் ராஜேஷ் கிட்டே சொல்றேன்…. ஆனா நீ நினைக்கிற மாதிரி உடனே இப்பவே இல்லை…. இது…. இந்த…. குழந்தை முழுக்க முழுக்க என்னோட தப்பான முடிவாலா…. அதனால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…. ஆனா நான் அவன் போறதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்….என்னை நம்பு தெய்வா….ப்ளீஸ்….”
“ஹேய் லூசு…. உன் வாழ்க்கைகாக தாண்டி நான் தவிக்கிறேன்…. நீ என்னை ஏன் சமாதானம் செய்ய பார்க்கிறே….”
“எனக்கு புரியுதுடி…. ஆனா என் நிலைமையை உன்னால புரிஞ்சுக்க முடியுமானு தெரியாம தான் இவ்ளோ சொல்றேன்….” என்று முகத்தை மூடி கொண்டு அழுதாள் அஸ்வினி.
தானும் ஒரு வகையில் அவர்கள் நெருக்கத்தை ஆதரித்தோம் தானே என்ற குற்றவுணர்வு தெய்வாவையும் வருத்த,
“அழாதே…. எனக்கு புரியுது…. சரி மா…. விடு…. ரொம்ப லேட் பண்ணாம சீக்கிரமா சொல்லிடு….” என்றவள் தன்னுடன் வருமாறு அழைத்தாள். ஆனால் அஸ்வினி எனக்கு நிறைய யோசிக்கணும் அதனால் இன்னொரு நாள் வர்றேன் எனவும், அவளை டிராப் செய்து விட்டு அவள் வீட்டிற்கு சென்றாள். தெய்வா கிளம்பும் முன்,
“ஷிவா கிட்டே சொல்லிடாதே தெய்வா ப்ளீஸ்….ராஜேஷ் பாவம்….ரொம்ப பீல் பண்ணுவான்….நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு என்ன பண்ணலாம்னு பிளான் பண்ணின அப்புறம் பார்க்கலாம்” என்றாள் அஸ்வினி தடுமாறியபடி.
“ஓக்கேடி நான் சொல்லலை….நீ கவலைப்படாதே” என்று அவளை அணைத்து விடைப்பெற்றாள்.
***************
மறுநாள் அலுவலகம் வந்தவளின் களையிழந்த முகத்தை கண்டு அதிர்ச்சி ஆனான் ராஜேஷ்.
“என்ன டா….? மறுபடி உடம்பை கெடுத்துக்க போறே….! ஒழுங்கா தூங்கலையா….? நான் ஊருக்கு போறதையே நினைச்சு கவலைப்படுறியா?” என்றான்.
சமீபமாக அவள் அடிக்கடி இதை பற்றி தானே அதிகம் பேசுகிறாள்…. அவனுக்கு தெரிந்து அவளுக்கு வேறு ஒன்றும் பிரச்சனையில்லையே அதனால் அவனாகவே இப்படி கேட்டான்.
“ம்ம்…. ஆமா…. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா…. எங்கேயாவது போலாமா….?”
“உனக்கே தெரியும்…. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு…. ஆபிஸ்ல பயங்கர டைட்டா இருக்கு…. பேக்கிங் பண்ண திங்க்ஸ் நிறைய வாங்கணும்…. டையமே இல்லை மா….”
“ம்ம்ம்…..”
தன்னுடன் இருக்க, நேரம் செலவழிக்க விரும்புகிறாள் அஸ்வினி என்று புரிய தவித்தான் ராஜேஷ். அப்போது தான் அவனுக்கு ஒரு விஷயம் நியாபகம் வந்தது.
“பூனைக்குட்டி, சீக்கிரமே அம்மா, அப்பா, சுகுணா எல்லாரும் ஒரு இரண்டு நாள் திருப்பதி போறாங்க….அப்போ நான் தனியா தான் இருப்பேன் வீட்டில…. நீ வந்து என்கூட ஸ்டே பண்ணிக்க….ஓக்கே வா…?”
“ஓக்கே டா….”
********************
அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் நத்தை வேகத்தில் போனது அஸ்வினிக்கு என்றால் ராக்கெட் வேகத்தில் போனது ராஜேஷிற்கு. அலுவலகத்தில் கூட அவனால் அஸ்வினியுடன் நின்று ஒரு வார்த்தை சரியாக பேசமுடியவில்லை…. இதில் எங்கே அவளை கவனித்து பார்ப்பது. அவனிடம் சொல்லவும் முடியாமல், என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமலும் புரியாமலும் தவித்து கிடந்தாள் அஸ்வினி.
அவ்வப்போது தெய்வா அவளிடம் பேசினாலும் இந்த விஷயத்தை பற்றி எதுவுமே கேட்கவில்லை. அன்று அஸ்வினி அவ்வளவு அழுது பேசிய பின் அவளாகவே சொல்லட்டும் என்று இருந்தாள் தெய்வாவும்.
அடுத்த பத்து நாள் கழித்து ராஜேஷ் வீட்டினர் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதி கிளம்பினர். ஞாயிறு இரவு திரும்பி விடுவதாக பிளான். அதை அஸ்வினியிடம் தெரிவித்து இருந்தான் ராஜேஷ். சனிக்கிழமை அதிகாலையிலேயே ராஜேஷ் வீட்டிற்கு வந்து விட்டாள் அஸ்வினி. அந்த காலை நேரத்தில் அவளை அங்கே எதிர்பார்க்காதவன்,
“ஹேய் வா வா…. பத்து மணிக்கு மேல் வருவேன்னு நினைச்சேன்….” என்றான்.
தயங்கி கொண்டே வந்தவளுக்கு அவனின் ஆர்வமான வரவேற்பு நிம்மதியாக இருந்தது.
“வலது காலை எடுத்து வைச்சு வா….” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, இருந்த மனக்கவலையில் குபுக்கென்று கண்ணீர் கொப்பளித்தது.
“ஹேய் என்னடா பூனைக்குட்டி இப்படி சென்சிட்டிவ்வா ஆய்ட்டே….?” என்று அவள் அருகில் வந்து அவளை அணைத்து கொண்டான்.
மேல் சட்டை இல்லாமல் குட்டியாக ஒரு ஷார்ட்ஸ் போட்டு இருந்தவன் அவளை அணைத்தவுடன் அவனின் உடல் சூடு அவளின் குழப்பமான மனதிற்கு இதமாக இருந்தது. தற்காலிகமாக அவள் கவலை எல்லாம் மறந்து அவன் நெஞ்சில் ஒன்றினாள் அஸ்வினி. அவனின் பூனைக்குட்டி அவனை உரச, அவன் சட்டென்று கிளர்ந்தான். அவள் முகத்தை அவன் நெஞ்சில் இருந்து நிமிர்த்தி அவள் இதழ்களை மென்மையாக முத்தமிட்டான் ராஜேஷ். அவளின் மனஉளைச்சலுக்கு அவனின் அருகாமை அருமருந்தாக இருக்க, அவனுடன் இன்னும் இழைந்து, அவனின் பிடறி கோதி அவனை இன்னும் தூண்டினாள் அஸ்வினி. அவளின் மனம் புரிய, அவளை கைகளில் அள்ளினான் ராஜேஷ். அந்த சின்ன அறையில் இருந்த ஒற்றை கட்டிலில், அவளை விட்டவன், அவளை நெருங்கி படுத்து அணைத்தவன் மெதுவாக அவள் உடையை நெகிழ்த்தியவாறு அவளை முத்தமிட்டான். முத்தமிட்டு முத்தமிட்டு அவளின் ஆடைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை கொடுத்தான். என்னை என்ன வேண்டுமானலும் செய்து கொள் ஆனால் என்னை விட்டு பிரியாதே என்பது போல் அவனை உணர்ந்தபடி நெகிழ்ந்து இருந்தாள் அஸ்வினி. அவனே அவளுக்கு போர்வையாக, அவனை இறுக்க பற்றி கொண்டாள் அஸ்வினி. அவளை உரசி, உறிஞ்சி துடிக்க வைத்தவன், மொத்தமாக அவளுள் ஊடுருவும் முன் அன்று போல் அவளை கேள்வியாய் பார்த்தான். மொத்தமாக அவர்கள் நிலை மூழ்கி விட்டது தெரியாமல் கேட்கிறானே என்று வருத்தமாக நினைத்தவள், சன்னமான முறுவலுடன் சம்மதமாக தலையசைத்தாள். அதே சமயம் வெளிப்படையாக அவனை எச்சரிக்கை செய்ய முடியாமல், அன்னைக்கு மாதிரி இல்லாமல் கொஞ்சம் மெதுவாவே ராஜேஷ்…. என்றாள் விழிகளை தாழ்த்தி கொண்டு.
“அன்னைக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சா?” என்றான் அவள் பதிலில் திகைத்து.
“சே…. சே…. கொஞ்சம் டையர்ட்டா இருக்கு டா…. வேற ஒன்னுமில்லை…. உன் வேகம் எனக்கு தெரியுமே…. அப்புறம் நான் நாள் முழுக்க தூங்கிட்டே இருப்பேன்…. உன் கூட எப்படி பேசிட்டு இருக்கிறது….?”
“அவ்ளோதானா…..! பயந்துட்டேன்…. போன்ல பேசிட்டே இருக்கலாம்…. இந்த மாதிரி சான்ஸ் இனி மூணு வருஷம் கழிச்சு தான்…. சோ இப்போ இப்படி தான் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்….” என்று அவளை சீண்டினாலும் அவள் சொன்னதை நினைவு வைத்து கொண்டு அவளை கொஞ்சி தீர்த்தான். அவள் அவனுக்கும் மேல் அவனை விடாமல் அவன் தேக சூட்டிலேயே இருக்க விரும்பினாள். அவளை அணைத்து கொண்டு படுத்து இருந்தவன், அஸ்வினி,
“ஏண்டா இப்படி தவிக்கிறே…. மூணு வருஷம் ஓடிப்போய்டும்…. அப்புறம் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் டா…. உன்னை இப்படி பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு மா….” தவித்தவனாக அவள் இதழில் முத்தமிட்டான் ராஜேஷ். அவளின் தவிப்பு புரிந்த அவனுக்கு எதனால் அவள் தவிப்பு என்று தெரியாததால் அவனுக்கு தெரிந்த விதத்தில் ஆறுதல் சொன்னான்.
சற்று நேரம் அவனின் மூழ்கி இருந்தவள், அவளை மீட்டு கொண்டு அவனிடம் இருந்து விலகி தன்னை சரி செய்து கொண்டாள். அவனிடமும்,
“எழுந்து வா ராஜேஷ், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்….” என்று அவனையும் அழைத்து கொண்டு ஹாலில் சென்று அமர்ந்தாள்.
“சொல்லு டா, என்ன?” என்றான் ராஜேஷ்.
“அது வந்து ராஜேஷ், ப்ளீஸ் என் மேல் கோபப்பட கூடாது நீ…. ஓக்கே எனக்கு கஷ்டமா தான் இருக்கு இப்படி ஆனது….” என்று அவள் ஆரம்பிக்கும் அதே நேரத்தில், வீட்டின் முன்பக்கம் அரவம் கேட்டது.
யார் வருகிறார்கள் என்று ராஜேஷ் பார்க்க, பார்த்தவன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானான். திருப்பதி சென்ற அவன் குடும்பம் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார்கள். அஸ்வினியை திரும்பி பார்த்தவன்,
“அம்மா அப்பா எல்லாம் திரும்ப வந்துட்டாங்க…. என்னனு தெரியலை….” என்றவாறு பதட்டமாக வேகமாக சென்று கதவை திறந்தான். எதிர்பாரா பிரச்சனையாக இப்போது அஸ்வினி வேறு இங்கு இருக்கிறாள்! அவளை என்னவென்று அறிமுகப்படுத்துவது என்ற யோசனையோடு அவர்களை எதிர்கொண்டான்.
உள்ளே அமர்ந்திருந்த அஸ்வினிக்கு உடலே நடுங்கியது. மீனாவை பற்றி ராஜேஷ் சொன்னதே அவளுக்கு நடுக்கம் வர போதுமானதாக இருந்தது. இதில் நேரில் அவரை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்று பயந்தபடி நின்றிருந்தாள் அஸ்வினி.
*************
“என்ன மா…. என்ன ஆச்சு…..? ஏன் திரும்ப வந்துட்டீங்க….?”
“உன் தங்கச்சிக்கு தீடீர்னு கோயிலுக்கு போக முடியாம போச்சு டா…. என்னைக்கு ஒழுங்கா வந்து இருக்கு அவளுக்கு….? எப்போ பார்த்தாலும் விசேஷ நாள் பார்த்து தான் ஆவா….அதே மாதிரி இப்போவும் ஆச்சு…. இந்த வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறேன், கோயிலுக்கு போக ஆசைப்பட்டா கூட நடக்க மாட்டேங்குது…. எல்லாம் என் தலையெழுத்து….” வாசலில் இருந்து நாலு அடி நடந்து வீட்டுக்குள் வருவதற்குள் இத்தனை புலம்பி விட்டார் மீனா.
அவர் பின்னாலே முகத்தை தூக்கி கொண்டு சுகுணாவும், அமைதியாக செந்திலும் வந்தார்கள்.
உள்ளே வந்த மீனா, நின்று கொண்டு இருந்த அஸ்வினியை கண்டு அதிர்ச்சி ஆனார். ஏற்கனவே எரிச்சலில் புலம்பி கொண்டே வந்தவர், நாகரிகம் கருதி கூட முகத்தை மாற்றி கொள்ளாமல், அதே எரிச்சலுடன்,
“யார் டா இது?” என்றவாறு சட்டை போடாத மகனை முறைத்தார். அவனிடம், “போய் முதல்ல சட்டை போட்டுட்டு வா….” என்றார்.
“என் பிரண்ட் மா, நீங்க வர ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் அவங்க வந்தாங்க….” என்றவன் வேகமாக அறைக்குள் ஓடி, மெத்தை எல்லாம் சரி செய்து, சட்டை போட்டு கொண்டு ஓடி வந்தான்.
அவன் அறைக்குள் செல்ல,
“உன் பேர் என்ன?”
“அஸ்வினி”
“என் பையன் கூட வேலை பார்க்கிறியா….?”
“ஆமா மா….”
“எதுக்கு வந்தே….? என்ன விஷயம்….?” இத்தனை கேள்விக்கும் அவர் குரலில் கொஞ்சம் கூட சினேக பாவம் இல்லை. இவனைத் தேடி எதுக்கு தான் பொண்ணுகளா வருதுகளோ? என்று கடுப்பாக இருந்தது அவருக்கு. அந்த கடுப்பில் அப்படியே பேசினார்.
அய்யோ! என்ன பதில் சொல்வது தெரியவில்லையே….? ராஜேஷ் என்ன சொல்ல யோசித்து இருக்கிறான் என்று தெரியாமல் எப்படி சொல்வது என்று அவள் தடுமாறி நிற்கையிலேயே வேகமாக வெளியே வந்து சூழ்நிலையை கையில் எடுத்து கொண்டான் ராஜேஷ்.
ஆனால் அவள் யோசித்த அந்த ஓரிரு நொடிகள் கூட மீனாவிற்கு பிடிக்கவில்லை. அதென்ன பதில் சொல்ல அப்படி யோசிக்குது இந்த பொண்ணு. இது முகமே சரியில்லையே….
“நான் அமெரிக்கா போறதால் என்னோட இங்க இருக்க வேலை எல்லாம் இவங்க தான் பார்க்க போறாங்க மா. அதுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க தான் வர சொன்னேன். அவங்க வீட்டுக்கு நான் போறது சரியா வராது தானே மா….?” வாய்க்கு வந்ததை அடித்து விட்டான் ராஜேஷ்.
“ம்ம்ம்….” என்றவர், “என்னடி வேடிக்கை பார்த்திட்டு நிற்கிறே….போ…. அலசி கொண்டு வந்த துணியை எல்லாம் துவைச்சு போடு…..!”என்று மகளை அதட்டினார்.
சுகுணா அஸ்வினியை பார்த்து நட்பாக புன்னகைத்து விட்டு போனாள். செந்திலும், “நீங்க உங்க வேலையை பாருங்க பா…. நாங்க கொஞ்சம் படுக்கிறோம்….” என்றபடி மனைவியை தொடர்ந்து அறைக்குள் போனார்.
அம்மாவிடம் சொன்னதை நிறைவேற்ற, லேப்டாப்பை எடுத்து வைத்து கொண்டான் ராஜேஷ். அவளும் அவள் லேப்டாப் கொண்டு வந்ததால் இருவரும் சற்று நேரம் வேலை பார்த்தனர். கொஞ்சம் நேரம் அவர்களுக்குள் மெஸேஜ் செய்து கொண்டு வேலை பார்ப்பது போல் பாவ்லா செய்தனர்.
இப்போதைக்கு அஸ்வினியின் கட்டம் சரியில்லை என்பதை நிரூபிப்பது போல் அன்று மற்றொரு பெரிய பிரச்சனை வந்தது.
மதிய நேரம் ஆக, யாருமே எதிர்பாரா வண்ணம் சாய்யுடன் தன் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்தாள் பார்வதி!!!
அவளை அடித்து விடும் வெறி வந்தாலும் ஏற்கனவே வீட்டில் நிலைமை சரியில்லை என்பதால் எதையும் காட்டிக்கொள்ளாமல் வரவேற்றான் ராஜேஷ்.
அவள் விஷயத்தை சொல்லவும், இவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்ற எரிச்சல் வந்தது அஸ்வினிக்கும் ராஜேஷிற்கும்.
“என்ன மா, என் பையனை ரிஜெஸ்டர் மேரேஜ் பண்ற அளவுக்கு பேசினே…. இப்போ உடனே இன்னொரு ஆளை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு வந்து நிற்கிறே…. இவ்ளோ தானா உன் லவ்….?” என்றார் மீனா நக்கலாக. அவளை மட்டம் தட்ட நினைத்து அவர் பேசியது ராஜேஷிற்கும் அஸ்வினிக்கும் எதிராக வந்து நின்றது.
“உங்க பையனை விட எனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன் இவன்! அவனுக்கு தான் நஷ்டம் என்னை வேண்டாம் சொன்னது! என்றாள் மீனாவிடம் கெத்தாக. நீ இல்லாவிட்டாலும் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவனிடம் பெருமை பட தான் அவள் அவன் வீடு தேடி வந்ததே.
மீனாவிற்கு கோபம் ஏற, “அப்புறம் ஏன் அன்னைக்கு போன்ல அவ்ளோ கெஞ்சி கேட்டே…. என் பையன் தான் வேணும்னு…. அவனை திட்டாதீங்கனு சொன்னே….” என்றார் காட்டமாக.
“என்ன நானா….? உங்ககிட்ட போன்ல பேசினேன்னா…. குட் ஜோக்!” என்றாள் பார்வதி.
ராஜேஷ் ஏதோ கோபமாக பேச வர, அவனை இடையிட்ட மீனா,
“ஆமா டா, அன்னைக்கு இந்த மாதிரி தமிழ் பேசலை இந்த பொண்ணு, நல்ல தெளிவான தமிழ் தான் பேசிச்சு!” என்றார்.
வேகமாக அஸ்வினியை திரும்பி பார்த்தான் ராஜேஷ். அவள் முகம் வெளிறி நின்றாள்!!!