💕 ஜீவனின் ஜனனம் நீ…!!
ஜனனம் 24
யோசனையோடு அமர்ந்திருந்த ஜனனியின் முன்னால் வந்து, “என்னாச்சு ஜானு?” என்று கேட்டான் யுகன்.
“நாளைக்கு நாம ஊருக்கு ட்ரெயின்ல போகலாமா?” ஆசையோடு வினவினாள் ஜனனி.
“ஏன் ஜானு? உனக்கு ட்ரெயின்ல போக பிடிக்குமா?” எனக் கேட்கும் போது, “சோ உனக்கு ட்ரெயின்ல போகனும்?” எனும் கேள்வியில் இருவரும் திரும்பினர்.
கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்றிருந்தான் சத்ய ஜீவா.
“எனக்கும் ட்ரெயின்ல போகனும்னு ஆசை வருது டாடி. ப்ளீஸ் ட்ரெயின்ல போகலாமா?” தந்தையிடம் கெஞ்சலோடு கேட்க, “எனக்கு ட்ரெயின்ல போக பிடிக்காது யுகி. காத்துட்டு இருக்கிறது, சீட் இல்லாம நின்னுட்டு வாறது, நெரிசல்ல போறதை எல்லாம் நெனச்சு கூட பார்க்க முடியல. வேண்டவே வேண்டாம்” உறுதியாக மறுத்து விட்டான் அவன்.
“ட்ரெயின்னா அப்படி தான் இருக்கும். ஆனால் ரயில் பயணத்தை மாதிரி எதுவும் வராது” ரசித்துச் சொன்னாள் அவள்.
“அப்படியே இருக்கட்டும். ஆனால் நம்ம மினி வேன்ல போறோம். அதுல எல்லாரும் போகலாம்” தனது முடிவு இது தான் என்று சொல்லி விட்டான் சத்யா.
‘காரை விட வேன் நமக்கு சுத்தமா செட்டாகாது. அதில் எப்படி போறது? இவர் மேலேயே வாந்தி எடுத்துடனும் ஒரு நாளைக்கு. அப்போ தான் அடங்குவார்’ கடுகடுப்பாக நினைத்துக் கொண்டாள்.
“நாம வேன்லயே போகலாம் ஜானு. உனக்கு பரவாயில்லை தானே?” யுகன் அவளைப் பாவமாகப் பார்க்க, “பரவாயில்லை டா. அதிலேயே போகலாம்” என்று அவன் கன்னம் தட்ட, தலையசைப்போடு நகர்ந்தான்.
அவன் சென்றவுடன், “என் கிட்ட கேட்க முடியாதுன்னு என் பையனை வெச்சு காரியம் சாதிக்க பார்க்கிறியா? எவ்ளோ தைரியம் உனக்கு?” என்று சீறிப் பாய, “நான் ஒன்னும் காரியம் சாதிக்க பார்க்கல. யுகிக்கும் பிடிக்குமானு தெரிஞ்சுக்க கேட்டேன். எனக்கு வேணும்னா உங்க கிட்டவே வந்து கேட்பேன். உங்களை நெனச்சி எந்த பயமும் இல்லை எனக்கு” அலட்சியமாக உரைத்தாள் பெண்ணவள்.
“ஓஹ்ஹோ! அந்தளவுக்கு போயிட்டியா?”
“இன்னிக்கு நேற்று இல்லை, அந்தளவுக்கு எப்போவோ போயாச்சு. நான் எதுக்கு உங்களை நெனச்சு பயப்படனும்? நீங்க சிங்கமா புலியா? என்னைக் கடிச்சு சாப்பிடவா போறீங்க?” என்று வினவ, “ஏய்ய்ய்” விரல் நீட்டி சீறினான் ஆடவன்.
“எதுக்கு அடிக்கடி உஸ்ஸு உஸ்ஸுனு சீறுறீங்க?” அவளும் பதிலுக்கு கேட்க, “இதோ பார். இந்த மாதிரி மத்தவங்க முன்னால பேச வந்துடாத. அவ்ளோ தான் உனக்கு” என்றிட,
“அது நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தது. மத்தவங்க முன்னாடி நீங்க ஒழுங்கா நடந்துக்கிட்டா நானும் அப்படி நடந்துப்பேன். இல்லனா தான் பிரச்சினை” அவளுக்கு இப்போதெல்லாம் சத்யாவின் கோபத்தில் கோபம் தான் வந்தது.
அவளைப் பொறுத்தவரை அவனுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. அப்படியென்றால் ஒதுங்கி நின்றால் சரி. ஆனால் எதற்கு இப்படி வெறுப்பையும் கோபத்தையும் அள்ளிக் கொட்ட வேண்டும்? அவளுக்குப் புரியவே இல்லை.
அவன் ராஜீவ்வின் விடயத்தினால் அவள் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியாது அல்லவா?
“எனக்கு நீ நிபந்தனை போடுறியா?”
“எப்படி வேணா வெச்சுக்கோங்க. ஆனால் நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்து தான் நானும் நடந்துப்பேன். அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்கங்க” என்றவள், “வேலை பார்த்து தருவீங்களா? அந்த பேச்சையே காணோம்” என்று கேட்டாள்.
“வேலை கடையில் விற்கல, நீ கேட்ட உடனே வாங்கி கொடுக்கிறதுக்கு. ஆனால் எனக்கு அதில் சம்மதமும் இல்லை. நீ வேலைக்கு போனா உங்க வீட்டுல என் கிட்ட கேள்வி கேட்க மாட்டாங்களா?” யோசனையோடு வினவினான் சத்யா.
“இல்லை. நான் அவங்க கிட்ட இதை எப்போவோ சொல்லியாச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்பறமும் நான் வேலைக்கு போறதை ஒத்துக்கிற ஆளைத் தான் கட்டிப்பேன்னு சொல்லி இருக்கேன்” என்று சொல்ல, “வேலைக்கு போக என்ன அவசியம்?” அவனுக்கு அதில் உடன்பாடு இல்லை.
“நான் அன்னிக்கு சொன்னது தான். உங்க கிட்ட கை நீட்டி பணம் வாங்க முடியாது. என் தேவைகளுக்கு எனக்கு பணம் வேணும். என் அப்பாம்மாவுக்கு மாசாமாசம் நான் சம்பாதிக்கிறதுல ஒரு தொகையை அனுப்பனும்கிறது என் ஆசை. நான் உழைச்ச காசால அவங்களுக்கு கொடுக்கனும். சோ நான் வேலைக்கு போகனும்.
நீங்க வேண்டாம்னு மட்டும் தடுக்காதீங்க. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு இருக்கிற ஆள் நான் கிடையாது. ஆனால் அம்மா கேட்டா உங்க சம்மதத்தோட தான் போறேன்னு உண்மையை சொல்ல விரும்புறேன். ப்ளீஸ் அதை மட்டும் உங்க கிட்ட கேட்கிறேன்” அவள் குரல் மிகவும் தாழ்ந்து ஒலித்தது.
“ஓகே. நான் பார்க்கிறேன்” என்று தலையசைத்தவனுக்கு அவளைத் தடுக்க மனம் வரவில்லை.
தனது சம்பாத்தியத்தால் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள விரும்புகிறாள். அந்த எண்ணத்திற்கு அவன் மனம் மதிப்பளித்தது.
“ரொம்ப தாங்க்ஸ்” என கையை நீட்ட, “இருக்கட்டும்” கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தவனை பார்வையால் எரித்து விட்டுச் சென்றாள்.
‘என் கையை பிடிச்சா அழகு போயிடுமோ?’ இனி அவனுக்கு கை கொடுக்கவே கூடாது என நினைத்துக் கொண்டாள்.
மறுநாளும் இனிதென விடிந்தது. அன்றும் ஜனனி அயர்ந்து உறங்க, “இந்த கும்பகர்ணியை எழுப்புறது எனக்கு பொழப்பா போச்சு” தலையில் அடித்துக் கொண்டு அவளை எழுப்பினான்.
“ஜனனி” என்று அழைத்தும் அவள் எழவில்லை.
தண்ணீர் ஊற்றினால் சண்டைக்கு வருவாள் என்பதால், சற்று யோசித்தவன் அவளது முழங்கையைப் பிடித்து உலுக்கி “ஜனனி எழுந்திரு” என்றான்.
எழுந்து அமர்ந்தவளோ கண்களைத் திறவாமலே “அம்மா” என அவனை அணைத்துக் கொண்டாள்.
திடீரென்ற அணைப்பில் விழி விரித்தவனோ ஒரு கணம் மௌனமாக இருந்து விட்டு பின்னர் விலக எத்தனிக்க, அணைத்தவளுக்கு அது தாய் இல்லை என்று புரிந்திருக்க வேண்டும். சட்டென விலகி நின்றாள்.
அவன் ஏசுவதற்கு வாய் திறக்கும் முன், கை நீட்டித் தடுத்து “சாரி! அம்மா என்னை இப்படித் தான் முழங்கையில் தட்டி எழுப்புவாங்க. அதனால நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். சாரி” முகத்தைச் சுருக்கி கெஞ்சினாள்.
அவளைப் பார்க்கும் போது அவனுக்கு ஏதோ போல் இருந்தது. ஜெயந்தியை மிஸ் பண்ணுறாள் என்று புரிந்தவன் அமைதியாக சென்று யுகனை எழுப்ப, அவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் வந்ததும் யுகனைக் குளிப்பாட்ட செல்ல, ஜனனி ஹாலுக்கு வந்ததும், மேகலை காஃபி போட்டு வைத்திருக்க, அதை எடுத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தாள்.
“என்னண்ணி முகத்துல தௌஸண்ட் வாட் பல்பு எரியுது. அம்மா வீட்டுக்குப் போற சந்தோஷமா?” காஃபி அருந்தியவாறு கேட்டான் ரூபன்.
“இல்லாமல் இருக்குமா? அவங்களை விட்டு நான் இருந்ததே இல்லை ரூபன். ஒரு நாளைக்கு மேல அவங்களைப் பார்க்காம இருந்தது கிடையாது. இன்னுமே அவங்களைப் பார்க்காம இருக்கிறதை ஏத்துக்க முடியல. அம்மாவும் நான் இல்லாம கஷ்டப்படுறாங்கனு நினைக்கும் போது தான் ரொம்ப வேதனையா இருக்கு” முகம் வாடக் கூறினாள் ஜானு.
“அம்மான்னா அப்படித் தான் ஜானு. தன் பிள்ளைகள் தன்னை விட்டு தூரமா போனா வருத்தப்படுவாங்க. அந்த வருத்தத்துக்கு காரணம் அவங்க வெச்சிருக்கிற அளவு கடந்த பாசம் தான்” என்ற மேகலைக்கு சத்யா தன்னை விட்டு யூ.எஸ் சென்று இரு வருடங்கள் இருந்த நினைவு.
அங்கு வந்த சத்யாவுக்கும் அது புரியவே செய்தது. யுகன் ஓடி வந்து ஜனனியின் அருகில் அமர, “என்ன யுகி ஊருக்குப் போறோம்னு சந்தோஷமா இருக்கா?” என்று கேட்டான் தேவன்.
“ஆமா சித்தா. ஜானு என்னை வயலுக்கு கூட்டிப் போறதா சொல்லி இருக்கா. மாங்கா தோட்டத்துக்கும் கூட” ஆர்வமாகச் சொல்லியவன் முகத்தில் ஆனந்தம் குமிழிட்டது.
“வாவ்! எனக்கும் கேட்கும் போது ஆசையா இருக்கு. நானும் மாங்காய் பறிக்க வர்றேன்” ரூபனும் ஆவலோடு கூற, தேவனுக்கு ஏதேதோ நினைவுகள்.
“மாங்கா பறிச்சு தர்றியா தேவ்? காலேஜ் பின் பக்கமா போகலாம்” என்றவளைத் தூக்கியதும், அவளை மடியில் அமர்த்தி மாங்காய் ஊட்டியதும் நினைவுக்கு வர, கண்களை இறுக மூடித் திறந்து தன்னை சமப்படுத்திக் கொண்டான்.
“நீ என்னடா கண்ணை மூடிட்டு மந்திரம் ஓதுற?” ரூபன் கேள்வியாக நோக்க, “பேசாம இரு டா” மேகலை கண்களால் எதுவும் பேச வேண்டாம் என்று செய்கை செய்ய, அவனும் அமைதியானான்.
தேவன் வினிதாவின் நினைவில் ஆழ்ந்ததை அவரால் உணர முடிந்தது. அவளோடு அடிக்கடி காலேஜ் பின் புறமிருக்கும் மாங்காய் தோப்பிற்கு செல்வதை அவரிடம் சொல்லி இருக்கிறானே.
மற்ற இருவரையும் விட தேவனுக்கு மேகலையோடு ஒட்டுதல் அதிகம். வினிதாவைச் சந்தித்தது முதல், அவளை விரும்பியது உட்பட பிரிந்தது வரை அனைத்தையும் அவர் அறிவார். அவரிடம் சம்மதம் வாங்கிய பின்னரே வினிதாவிடம் காதலைக் கூறினான்.
வாழ்நாளில் தேவன் இதுவரை அவரிடம் எதையும் மறைத்ததில்லை என்பது மேகலையின் எண்ணம். ஆனால் எவ்வெண்ணத்திற்குப் புறம்பாக அவன் ஒரு விடயத்தை மறைப்பதை அறிந்தால் தாயவளின் மனநிலை எவ்வாறிருக்குமோ?
“நாம போகலாமா?” என்று சத்யா கேட்க, “போகலாம் போகலாம்” அவசரப்படுத்தினான் ரூபன்.
“நீ ஓவராத் தான் துள்ளுற. எங்கே விழப் போறேனு பார்க்கிறேன்” தேவன் கூற, “துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் சித்தா” என்றான் யுகி.
“டேய் டேய்! என் இமேஜை டேமேஜ் பண்ண நீ ஒருத்தன் போதும் டா” அவனது கன்னத்தை ரூபன் கடிக்க, “நீங்க தான் ரூபி என் கன்னத்தை எப்போவும் டேமேஜ் பண்ணுறீங்க” கடித்த இடத்தைத் தடவிக் கொண்டான் சின்னவன்.
“ஆமா ரூபன். உங்களுக்கு மாங்கா பறிச்சு தர்றேன். அதை விட்டுட்டு யுகி கன்னத்தைக் கடிக்க கூடாது” என்று ஜனனி சொல்ல, “ஸ்வீட் ஜானு” அவளது கன்னத்தில் முத்தமிட்டான் யுகன்.
“யூ டூ ஸ்வீட் செல்லக் குட்டி” அவனது கன்னத்தில் முத்தமிட்டவளுக்கு யுகனின் அன்பு இதமாக இருந்தது.
“அப்போ எனக்கு?” ரூபன் கேட்க, தேவனின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“அழுதுடுவான் யுகி. ரூபிக்கும் கொடு” என்று தேவன் சொல்ல, “சைடு கேப்ல நீயும் ரூபினு சொல்லுறல்ல” என முறைத்தவனுக்கு முத்தம் கொடுத்தான் அண்ணன் மகன்.
“பாட்டிக்கு?” என ஜனனி அவனைப் பார்க்க, மேகலையின் கன்னத்திலும் முத்தமிட, “என் கண்மணி” அவனுக்கு நெட்டி முறித்தார் அவர்.
இறுதியில் தந்தையிடம் வந்து கைகளை நீட்ட, சத்யா அவனைத் தூக்கினான்.
“லவ் யூ டாடி” ஒன்றுக்கு இரண்டாக தன் அன்புத் தந்தைக்கு முத்தங்களை வாரி இறைத்தான் யுகன்.
அவனை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்ட சத்யாவின் இதழ்கள் “லவ் யூ டூ கண்ணா” என மொழிந்தன, ஈடில்லா பேரன்போடு.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி