24. விஷ்வ மித்ரன்

5
(1)

விஷ்வ மித்ரன்

 

அத்தியாயம் 24

 

தோழனைக் கையில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிடல் வாயிலினுள் நுழைந்து, “டாக்டர்ர்ர்” என்று அக்கட்டிடமே அதிரும் வண்ணம் கத்தினான் விஷ்வா.

 

அவனது அலறலைக் கேட்டு ஓடி வந்த தாதியர் உடனடியாக மித்ரனை டாக்டரின் உதவியோடு ஐ.சி.யூவில் அனுமதித்தனர்.

 

விஷ்வா அவ்விடத்திலேயே தொப்பென அமர்ந்து கொள்ள, அவனருகில் வைஷுவும், அக்ஷுவும் பதறிக் கொண்டு வந்தனர்.

 

“அண்ணா எந்திரிண்ணா” அழுகையூடே சொன்னாள் அக்ஷரா.

 

தன்னவன் நிலையைக் கண்டு பதறிய வைஷ்ணவி “விஷு! இங்கே பாருங்க. நீங்க இப்படி இருக்கிறது பார்த்து அண்ணியும் அழுறா” என அவன் தோளில் கை வைத்தாள்.

 

“முடியலையே! என்னால தாங்க முடியல நவி. மனசு வலிக்குது. எனக்காகத் தானே அவன் இப்படி செஞ்சுக்கிட்டான். அவனுக்கு முன்னால நானே என்ன சுட்டுட்டு இருக்கனும். நான் செத்து இருந்தாலும் பரவாயில்லை. என் மித்து இந்த நிலைமையிலே இருந்திருக்க மாட்டான்” தலையில் கை வைத்துக் கதறினான் விஷ்வா.

 

அக்ஷராவுக்கு அவன் ஐ லவ் யூ சொல்லு என்று கேட்டதே திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து உயிரோடு கொன்று புதைத்தது.

 

“அருள் எனக்கு நீ வேணும் டா! எனக்கு தெரியும் நீ கண்டிப்பா திரும்பி வருவ. என்னை அம்முலுனு கூப்பிடுவே. உனக்காக ஜடமா காத்துட்டு இருக்கேன்” என உள்ளுக்குள் அழுது கரைந்தாள்.

 

வைஷ்ணவி ஹரிஷிற்கு அழைக்க அவரது போன் சுவிட்ச் ஆஃப் இல் இருந்தது. சிவகுமாருக்கு அழைத்து விடயத்தைக் கூறி விட்டு வைத்தாள்.

 

யாருமே இல்லாமல் போக்கிடம் அற்று அனாதையாக இருந்த தனது வாழ்வில் சாரல் காற்றாய் வந்த உறவு தான் மித்ரன்! அண்ணன் என்ற உறவாக வந்து, தன்னை அவன் குடும்பத்தில் ஒருத்தியாக்கினான். அதை விட விஷ்வா எனும் பொக்கிஷத்தை அவளுக்கு வழங்கினான். அத்தகைய உறவு இன்று வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் அல்லாடுவதை எண்ணி கண்ணீர் விட்டாள் நவி.

 

விஷ்வாவுக்கு காணும் இடமெங்கும், பொருள் எங்கும் மித்ரன் மட்டுமே தெரிந்தான்.

 

“உன் கூட பிரண்டாக முடியாது” என சிறுவயதில் மறுத்த மித்து!

“ஓகே பிரண்ட்ஸ்” நட்புக்கரம் நீட்டிய குட்டி மித்து!

“சாரி” என்று விஷ்வாவுக்காக மன்னிப்புக் கேட்ட சுட்டி மித்து!

“மாப்ள” அன்புடன் அழைத்திடும் மித்து!

கண்ணடித்துச் சிரித்திடும் மித்து! என விதம் விதமாய் அவன் மனக்கண்ணில் வந்து போனான் மித்து.

 

கூடவே மார்பில் குண்டு பாய்ந்து விழுந்திருந்த மித்துவும், இறுதியாக “மை விஷு” என்று புன்சிரிப்புடன் இதழ் விரித்துக் கண் மூடிய மித்துவும் தோன்றி மறைந்தான்.

 

மூவரும் வலியுடன் நின்றிருக்க, சிவகுமார் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார்.

 

“என் பையன் எங்கடா? அவனுக்கு என்ன ஆச்சு” அழுகையில் குலுங்கியது அவருடல்.

 

“டாட் காம் டவுன். அவன் நல்லாத்தான் இருக்கான். அவனுக்கு எதுவுமே ஆகாது. ஆகவும் நான் விடமாட்டேன்” என்று உறுதியாக சொன்னான் விஷ்வா.

 

அவர் தோள் தொட்டு சமாதானம் செய்துவிட்டு “மாமா! அத்தை எங்கே?” எனக் கேட்டாள் வைஷ்ணவி.

 

நீலவேணிப் பற்றிக் கேட்டதும் “அவள் எங்கே போனா நமக்கு என்னமா? விஷயம் தெரிஞ்சா மட்டும் அழுதுட்டு ஓடி வரவா போறா? கொஞ்சம் கூட நெஞ்சுல ஈரமே இல்லாத கல்நெஞ்சகாரி . மித்துவை நம்மள விட்டு பிரிச்சவ தானே” கோபமானார் சிவக்குமார்.

 

“மித்து மேல பாசம் இல்லைனா சொல்லுறீங்க? அவங்களுக்கு அவன்னா உயிர்” கம்மிய குரலில் அக்ஷரா கூற, புரியாமல் பார்த்தார் தந்தை.

 

“என்னடா சொல்லுற? நீயும் தானே நீலா மேல கோபமா இருந்த” புருவ முடிச்சுடன் கேட்டார்.

 

தலையை அசைத்து ஆம் என்றவள் “உண்மை தெரியாமல் இருக்கும் போது கோபமா இருந்தேன். எப்போ அம்மாவுக்கும் இதற்கும் இந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிய வந்ததோ அப்போவே கோபம் எல்லாம் மறைஞ்சு போயிருச்சு. அவங்கள அவாய்ட் பண்ணதுல குற்ற உணர்ச்சியா இருக்கு டாட்” என்று விட்டு, தர்ஷன் சொன்ன அனைத்தையும் கூறி முடித்தாள்.

 

திகைத்து விழித்தவருக்கு நீலவேணியின் நிலை புரிவதாய்! அவளைத் தவறாக நினைத்ததை எண்ணி நொந்து போனார்.

 

“நீலா சாரி மா! உண்மை தெரியாம உன்ன கஷ்டப்படுத்திட்டேன்” என மனதில் மனைவியிடம் மன்னிப்பு வேண்டினார்.

 

மித்துவுக்கு ஆப்ரேஷன் நடந்து கொண்டிருக்க கதவில் சாய்ந்து கண்ணை மூடி “மித்து, மித்து” என வாய் ஓயாது சொல்லிக் கொண்டிருந்தான் தோழன்.

 

நேரமாக ஆக அனைவருக்கும் திக் திக் நொடிகள் தான். அக்ஷுவோ தலையைக் கைகளால் தாங்கியவாறு அமர்ந்திருக்க,, சிவகுமார் ஹரிஷிற்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார்.

 

வைஷ்ணவி விஷ்வாவின் அருகில் செல்ல, அவனோ சலனமின்றி எங்கோ வெறுத்திருந்தான். அவனது வெள்ளை டி-ஷர்ட் முழுவதும் மித்ரனின் இரத்தத்தில் நனைந்து சிவப்பாக மாறியிருந்தது.

 

“விஷு” என்று மெதுவாக அழைக்க “நவி மா….!!” சட்டுனு பார்வையை அவள் மீது வீசினான் விஷ்வா.

 

எப்பொழுதும் குறும்பு மின்னும் அவன் விழிகள் இன்று கலங்கிச் சிவந்து ஜீவனின்றி இருந்தன.

 

“உன் மடியில கொஞ்சம் சாஞ்சுக்கவா?” சிறு பிள்ளையாகத் தான் வினவினான் அவன்.

 

மௌனமாக அவனை ஏறிட்டவள் அங்கிருந்து கதிரையில் உட்கார்ந்து கொள்ள, அவள் மடி மீது தலை சாய்த்தான் விஷு. தானாகவே உயர்ந்து அவன் சிகையைக் கோதி விட்டது அவள் கரம்.

 

“பார்த்தியா? எப்போதுமே மனசு கஷ்டமா இருந்தா அவன் தோள்ளயோ மடியிலையோ சாய்ந்து இருப்பேன். அவனோட ஒற்றைப் பார்வையும், விஷுங்குற பாசமான அழைப்பும், சுகமான தலை கோதலும் என் கவலையை மறக்கடிக்கும். என் காயத்துக்கும் அவன் தான் மருந்தாக இருப்பான். ஆனால் இன்னைக்கு அவனே என்னை கஷ்டப்பட வெச்சுட்டான். அந்த கஷ்டத்துல தோள் தர அவன் இல்லாம போயிட்டான்..” சொல்லி முடிக்கும் போதே குரல் மங்கிக் கரைந்தது.

 

உடைந்து போய் நிற்கும் தன்னவனைக் கண்டு கண்கள் கலங்கியது அவளுக்கு. எப்பேர்பட்ட நட்பு இவர்களுடையது! இப்பொழுது மட்டுமல்ல, ஏழேழு ஜென்மங்களுக்கும் இவர்களது நட்பும் பந்தமும் தொடர வேண்டும் என வேண்டுதல் வைத்தாள் காரிகை.

 

“உங்களுக்காக! உங்க நட்புக்காக அண்ணா கண்டிப்பா பிழைச்சு வருவாரு. உங்களை விஷுனு கூப்பிடுவாரு. என் மாப்ளயை ஏன் அழ விட்டீங்கன்னு எங்க கிட்ட சண்டை போடுவாரு. வந்ததுக்கு அப்புறமா ஏன்டா என்ன பயமுறுத்தின ராஸ்கல்னு உங்க பாணியில கேளுங்க” அழுகையை மறைத்து சிறு சிரிப்புடன் சொன்னாள் வைஷ்ணவி.

 

அவளது வார்த்தைகளில் உள்ளம் புத்துணர்வு பெற “நிஜமாவே மித்து வந்து என் கூட பேசுவான்ல?” என கண்கள் மின்னக் கேட்டான் அவன்.

 

நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கி விட்டு “ம்ம்” என கண்களை மூடித் திறந்தாள்.

 

நீலவேணி கண்களில் நீரோடு ஓடி வரவும், டாக்டர் கதவைத் திறந்து கொண்டு வரவும் சரியாக இருந்தது.

 

“டாக்டர் மித்துக்கு என்னாச்சு? அவன் நல்லா இருக்கான்ல? அவனுக்கு எதுவும் இல்லல்ல?” படபடப்புடன் கேட்கலானான் விஷ்வா.

 

“யாஹ் மிஸ்டர் விஷ்வஜித்! ஹீ இஸ் ஃபைன். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும் தோட்டா இதயத்தை தாக்கியிருக்கும். கடவுள் புண்ணியத்துல அப்படி எதுவும் நடக்கல. அவருக்கு கான்சியஸ் வர டுவென்டி ஹவர்ஸ் ஆகும். அதுவரை வெயிட் பண்ணுங்க” என்று பதிலளித்தார் டாக்டர்.

 

அவர் சொன்னதைக் கேட்டு அனைவரது உள்ளங்களும் பூரித்துப் போயின. “ரொம்ப நன்றி டாக்டர். தெய்வம் மாதிரி வந்து எங்க பையன காப்பாத்துனீங்க” அவர் கரங்களைப் பிடித்தவாறு தழுதழுத்தார் சிவகுமார்.

 

“மிஸ்டர் சிவகுமார்! அந்தப் பையனுக்கு நான் ஆப்பரேஷன் செய்யல. தருணத்துக்கு வேற ஒரு டாக்டர் வந்து காப்பாத்திட்டாரு. நீங்க அவருக்குத்தான் நன்றி சொல்லனும்” என்றவர் பின்னால் திரும்பி இருந்த டாக்டரை கைகாட்டி “அதோ அவர் தான் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட்” என்று கூறிவிட்டு சென்றார்.

 

விஷ்வா அவரிடம் விரைந்து சென்று “டாக்டர்” என அழைக்க, “எஸ்” என்றவாறே திரும்பினார் அவர். டாக்டர் ஹரிஷ்! அருள் மித்ரனின் அன்புத் தந்தை!

 

“அ… அப்பா” என்று விஷ்வா அதிர்ந்தான்.

 

“விஷு” என்று திணறியவர் அவனைக் கட்டிக் கொண்டு இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வெளியிட்டார்.

 

“என் மித்து டா! என் பையனுக்கு என் கையாலே ஆபரேஷன் பண்ணேன். தாங்க முடியல கண்ணா. கால் பண்ணி இமீடியட்டா வர சொன்னாங்க ஏதோ சீரியஸ்னு புரிஞ்சுகிட்டு ஓடி வந்தேன். அங்க.. அங்கே இரத்தத்தில் மூழ்கி இருந்தான். டாக்டரா மனசல தெம்பாக்கிக்கிட்டேன்.இருந்தாலும் நானும் ஒரு அப்பன் டா. எனக்குனு இருந்த என் மித்துவ பிழைக்க வைக்கும் வரை உயிரை கைல புடிச்சு வச்சுட்டு இருந்தேன்” என கண்ணீர் விட்டார் ஹரிஷ்.

 

அங்கு வந்த வைஷ்ணவி அக்ஷராவுக்குக் கூட ஹரிஷைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

 

“அப்பா! அண்ணாவுக்கு எதுவும் இல்லப்பா. நல்லா இருக்காரு” ஹரிஷின் கைகளைப் பற்றிக் கொண்டாள் வைஷ்ணவி.

 

நீலவேணிக்குத் தான் பெறாத மகனின் நிலை எண்ணி இதயமே வெடித்து விடும் போல இருந்தது. தனது மகனுக்காக தன்னுயிரை கொடுக்கத் துணிந்திருக்கின்றான். தர்ஷனின் மிரட்டலுக்காக அவனை வார்த்தைகளால் வதைத்தது அப்போது மனக்கண்ணில் தோன்றி உறுத்தியது.

 

கண்ணீரைத் துடைக்கக் கூட மறந்தவராய் நின்றிருந்தவரைத் தோளோடு சேர்த்து அணைத்தது ஒரு கரம். நிமிர்ந்து பார்க்க விஷ்வா நின்றிருந்தான், தாயைப் பார்த்துவாறு.

 

“விஷு கண்ணா” என்று ஆச்சரியமாய் நோக்கி “என் மேல கோபம் எதுவும் இல்லையா..?” என்று மெதுவாகக் கேட்டார்.

 

“சாரிமா! ஐ அம் ரியலி சாரி. எனக்கு எல்லாமே தெரியும். உங்களுக்கு மித்து மேல எந்தக் கோபமும் இல்லை தர்ஷன் தான் எல்லாத்துக்கும் காரணம். அது தெரியாம உங்களை ஹர்ட் பண்ணிட்டேன். ஏன் மாம் இதை என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல?” வருத்தத்துடன் உரைத்தான்.

 

அவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்பது புரிந்து “எதுக்கு முடிந்து போனதை பற்றி பேசுற. அதெல்லாம் விடு. இன்னையுடன் நம்மள புடிச்ச சனி எல்லாம் ஓடிப்போச்சு. இனி நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்கனும். என் மித்து நல்லபடியா வந்துருவான்” என்றார் நீலா.

 

“உன் மித்து இல்லை. என் மித்து” வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு தயாரான அண்ணனைப் பார்த்து, “இல்லை என் மித்து” என்று தன் உரிமைக் கொடியை நிலை நாட்டினாள் அக்ஷரா.

 

“போடி குள்ள கத்திரிக்காய்”

 

“நீ போடா தென்னை மரம். அவன் என் அருள்”

 

“உனக்கு உன் அருள்! எனக்கு என் மித்து. ஓகேவா?” என விஷ்வா தலை சாய்த்துக் கேட்டான்.

 

“ஓகே. அப்படியே வச்சுக்கலாம்” என்று சொல்லி அவன் தோளில் தொங்கினாள் அவள்.

 

அப்படியே நேரமும் கழிந்து கொண்டே சென்றது. நர்ஸ் வந்து ஒருவருக்கு மட்டும் இருக்க சொல்லிவிட்டு சென்றார். அனைவரையும் அக்ஷரா வற்புறுத்தி அழைத்துக் கொண்டு செல்ல மனமே இன்றி புறப்பட்டனர் மற்றவர்கள்.

 

விஷ்வா மட்டுமே தனியாக இருந்தான். தனிமையில் இருக்கும் போது மித்ரனின் ஞாபகம் மீண்டும் வந்து குவிந்தது. அவன் கண் விழிப்பதற்காக வெளியே காத்திருக்கலானான்.

 

மித்ரனைப் பார்த்து விட மனம் துடியாய்த் துடித்தது. அனுமதி பெற்றுக்கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான் விஷ்வா.

 

கைகளில் ட்ரிப்ஸ் ஏற வாடிய மலராக கண் மூடி இருந்தவனைக் கண்ட தோழனின் இதயமும் ஓர் நொடி நின்று தான் துடிக்கலாயிற்று.

 

எப்பொழுதும் சிரித்த முகமாகவே கலகலப்பாக இருப்பவனை இந்நிலையில் காண மனம் வலித்தது. அருகில் இருந்த ஸ்டூலை இழுத்து கட்டில் அருகில் போட்டு அமர்ந்து கொண்டு, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

 

“மித்து நான் பேசுறது கேக்குதா? கேட்கலனாலும் உன்னால எப்போவுமே என்னை உணர முடியும்னு எனக்குத் தெரியும். நான் உன் விஷு வந்திருக்கேன். உன் மாப்ள! சீக்கிரமா எந்திரிச்சு வா டா. கண்ணை திறந்து பாரு. நீ மை விஷுனு சொன்னேல. அதே விஷு தான் இப்போவும் சொல்லுறேன், என்னைப் பாருடா ப்ளீஸ் டா..” கண்களில் நீர் துளித்தது அவனுக்கு.

 

“உன் அம்முலு உனக்காக துடிச்சுப் போய் இருக்கா. மனசே இல்லாமல் வீட்டுக்கு போயிருக்கா டா. அவளுக்கு நீன்னா உயிருல்ல. நீ கண்ணை திறந்தால் ரொம்ப சந்தோஷப்படுவா. அம்மாவும் உன்ன பார்க்க வந்துட்டு போனாங்க” விஷ்வா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான்.

 

எப்பொழுதும் விஷ்வா தான் அதிகம் பேசுவான். மித்ரன் அவனைக் கலாய்ப்பான். அது சின்ன செல்ல சண்டைகளாகக் கூட தொடரும்.

 

இப்போது விஷ்வா மட்டுமே பேசினான். அவன் பற்றியிருந்த கைய மெல்லமாக அசையத் துவங்கியது.

 

அவன் சட்டென்று நண்பனை ஏறிட்டு நோக்க,,

 “வி..விஷு…!!” என்று முணு முணுத்தான், மித்து விழி மூடியே.

 

“ஆமா விஷு தான் டா. நான் தான்” அவன் இதழ்கள் ஆனந்தத்தில் துடித்தன.

 

“எனக்குத் தெரியும். ஹா” என்று கூறிக் கொண்டே இமைகளைப் பிரித்தான் ஆடவன்.

 

அவன் விழித் திரையில் விழுந்தது நண்பனின் முகம். இதழ்கள் அழகாய் விரிய, “மாப்ள! எப்படிடா இருக்க?” என்று வினவினான் மித்ரன்.

 

“அது நான் கேட்க வேண்டிய கேள்வி. என்னைப் பயமுறுத்திட்டு எப்படி இருக்க நொப்படி இருக்கன்னு சாவகாசமா கேளு” பொய்யாக முறைத்தான் அவன்.

 

மித்து பாவமாகப் பார்க்க “அய்யோ பாத்துடா பார்க்க பால் வாடிப் பாப்பா மாதிரியே மூஞ்ச வெச்சுகாதே” என்றான் விஷ்வா.

 

“இப்போ என்னடா உன் பிரச்சனை?” எனக் கேட்டான் மற்றவன்.

 

அவன் விழிகளோடு தன் விழிகளை உறவாட விட்டு “நிஜமாவே இத்தனை நேரமா என் உசுரு என் கிட்ட இல்லடா. நானே சாவோட விளிம்பைத் தொட்டுட்டு வந்த மாதிரி ஃபீல்” என்று மனம் கலங்கத் தான் கூறினான்.

 

“அவ்ளோ சீக்கிரமா எல்லாம் நான் உன்னை விட்டு போக மாட்டேன். கூடவே இருந்து உன்னை டார்ச்சர் பண்ணுவேன். சோ இனிமேல் ஃபீல் பண்ணாத விஷு” என்றவனுக்கு விஷ்வா நெற்றியில் துப்பாக்கியை வைத்து நின்ற காட்சியை மனதில் வந்து போனது.

 

“நீ ஷூட் பண்ணிக்க போறத கண்டு எதுவுமே புரியல டா. உயிரே போன மாதிரி இருந்துச்சு. அதனால தான் கொஞ்சமும் யோசிக்காம அப்படி பண்ணிட்டேன். அக்ஷு எங்கே?” அவளைத் தேடி விழிகளால் எங்கும் துலாவினான்.

 

“நீ முழிச்சிட்டேன்னு மேசேஜ் பண்ணிட்டேன். எல்லோரும் வருவாங்க. வெயிட் பண்ணு” அவன் தலையை வருடினான், அன்போடு.

 

“என்ன மாப்ள பாசம் பொங்குது” கேலியாக வந்தது அவன் குரல்.

 

“இந்த மாதிரி நக்கல் பண்ணிட்டு இருந்தேன்னு வையேன் பாசம் பொங்காது. நானே பொங்கி எழுந்திருவேன். பாவம் பையன் இந்த நிலமைல இருக்கான்னு பார்க்குறேன். இல்லனா பிச்சுடுவேன் பிச்சு” முறைத்துப் பார்த்தான் விஷ்வஜித்.

 

“ஹி ஹி கோச்சுக்காத டா. உனக்கு பாப்பா சிடுமூஞ்சுனு சொல்லுறது கரக்டா தான் இருக்கு”

 

“ஆமாடா என்ன போய் சிடுமூஞ்சிங்குறா. உன்ன மட்டும் ஸ்மைலி கிங் ரேஞ்சுக்கு பேசுறாள். நானும் உன்ன மாதிரி எப்போ பாரு மொத்த பல்லையும் காட்டி டூத் பேஸ்ட் ஆட்கு போஸ் கொடுத்துட்டு இருக்கனும் போலையே” 

 

“நான் இளிச்ச வாயன்னு இன்டீரக்டா சொல்லுறியா குரங்கே?” புருவம் உயர்த்தினான் மித்ரன்.

 

“ச்சே ச்சே இல்ல மாப்ள. டைரக்ட்டாவே சொல்லுறேன். ஒளிச்சு மறைச்சு பேசுற பழக்கம் எல்லாம் இந்த விஷ்வா கிட்ட இல்ல” காலரைப் பின்னால் இழுத்து விட்டுக் கொண்டான்.

 

அவனை முறைத்தவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் சிரித்தே விட்டான். அவன் சிரிப்பதைப் பார்த்த நண்பனின் அதரங்களும் மலராய் விரிந்தன.

 

“தட்ஸ் மை டியூட்” என அவன் முடியைச் செல்லமாகக் கலைத்து விட்டான் விஷ்வா.

 

“அப்பப்பா போதும். வந்த உடனே உங்க கொஞ்சல்ஸ் தாங்க முடியல ராமா” என குரல் கேட்க இடுப்பில் கையூன்றி நின்றிருந்தாள் அக்ஷரப் பெண்ணவள்.

 

“ஹய் குட்டிம்மா எப்போ வந்த?” என்று விஷ்வா கேட்க, “உங்க கொஞ்சல்ஸ் ஸ்டார்ட் ஆனப்போவே வந்துட்டோம். வா வைஷு டார்லிங்” என்றவள் தலை திருப்பி அழைக்க, வைஷ்ணவி சிவகுமார் ஹரிஷ் நீலவேணி அனைவரையும் வரிசை கட்டி வந்தனர்.

 

மித்துவின் அருகில் சென்று “அருள்” என்று அழைத்தாள் காதலோடு.

 

“அம்முலு. நீ எனக்கு ஐ லவ் யூ சொன்னல்ல?” யாருக்கும் விளங்காமல் கிசுகிசுப்பாக கேட்டவனின் முகத்தில் அத்தனை ஜொலிப்பு.

 

“ஆமா” என பதில் கொடுத்தாலும் அந்த நொடியை நினைத்து கண் கலங்கியது அவளுக்கு.

 

“ஃபீல் பண்ணாதடி” என அவளை சமாதானம் செய்தான்.

 

“உங்க ரொமான்ஸ்ஸ அப்பறமா தள்ளி வெச்சுக்கோங்க” என விஷ்வா சத்தமிட, அக்ஷரா நாணத்துடன் தள்ளி நின்று கொண்டாள்.

 

ஹரிஷ், சிவகுமார், வைஷ்ணவி என்று அனைவரும் அவனை நலம் விசாரித்தனர். புன்முறுவலுடன் பதில் கூறிக் கொண்டிருந்தான் அருள்.

 

நீலவேணி ஓரமாக தயக்கத்துடன் நிற்க, “அம்மா” என ஏக்கமாகக் கூப்பிட்டான் அருள் மித்ரன்.

 

“நானா?” என கேள்வியெழுப்பிய நீலவேணியைப் பார்த்து தலையை மேலும் கீழுமாக ஆசைத்து “நீங்க தானே என் அம்மா. ஏன் என் கூட பேசாம இருக்கீங்க?” என்று கேட்டான், நீலவேணியின் ஆசைப் புதல்வன்.

 

வேக எட்டுக்களுடன் சென்று “கண்ணா” என கர கரத்த குரலில் பேசினார்.

 

பல நாட்களுக்குப் பின்னால் கேட்ட அவரது பாசமான அழைப்பு! அவனது துயரங்களை மறக்கடிக்கச் செய்தது.

 

“அம்மா! என் கூட பேசிட்டிங்களா? தேங்க்ஸ் மா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என நெகிழ்ந்து போனான் அவன்.

 

“இப்போ இல்லப்பா இனி எப்போவுமே உன் கூட பேசுவேன். சீக்கிரமா என் வீட்டுக்கு மருமகனா வந்துரு” என்றார் நீலா.

 

பூர்ணி ரோஹனுடன் உள்ளே நுழைந்தாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஹரிஷ் ரோஹனுக்கு அழைத்து விடயத்தை கூறவும், பூர்ணியோ ஷாக் அடித்தது போல் நின்று விட்டாள்.

 

ஓயாமல் அழுது கரைய, அவனாலும் கூட அழுகையை நிறுத்த முடியாமல் அழைத்து வந்து விட்டான்.

 

“மித்து பேபி” என்றவளுக்கு கண்ணீர் இன்னுமே நின்றபாடில்லை. தனக்கு பாசம் காட்ட அண்ணனாக, தோள் கொடுக்க தோழனாக இருந்தவனை இப்படிக் காண முடியவில்லை.

 

“ஹே அழாத பூரி. நான் ஒன்னும் பேபி கிடையாது. நீ தான் பேபி! உனக்குள்ள ஒரு பேபி இருக்கு. அத மறந்துடாத. எமோஷனல் ஆகக் கூடாது டா” என்று மித்ரன் கூற, கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு விஷ்வாவைப் பார்த்தாள் பூர்ணி.

 

“என் விஷுக்காக உயிரைக் கூட கொடுப்பேன்னு என் கிட்ட அடிக்கடி சொல்லுவான். அதை இன்னிக்கு ப்ரூப் பண்ணிட்டான் விஷ்வா” என்றாள் அவள்.

 

“ம்ம் ஆமா பூர்ணி. அவன் எனக்கு ப்ரெண்டா கிடைக்க நான் கொடுத்து வெச்சுருக்கனும்” என மித்(தி)ரனைப் பார்த்தவாறு சொன்னான் விஷ்வா.

 

மித்து எழுந்து அமரப் போக, அவன் போர்த்தியிருந்த போர்வை சற்றே விலகி மார்பு தெரிந்தது. இடது மார்பில் விஷ்வாவினதும் அக்ஷராவினதும் பெயரை டாட்டூ குத்தியிருந்தான் அவன்.

 

அக்ஷரா விழி விரித்துப் பார்க்க, விஷ்வாவும் கூட அந்த டாட்டூவைக் கண்டது இல்லை.

 

“எப்போ இதை குத்தின?” என்று கேட்டான்.

 

“யூ.கேல இருக்கும் போது” என்று விடையளித்தவன் வெட்கத்துடன் போர்வையை இழுத்து மூடிக் கொள்ளப் போன தருணத்தில் அக்ஷுவின் கண்களில் தென்பட்டது ஒரு அடையாளம்!

 

ஆம்! அவனது மார்பு பிளக்கப்பட்டதற்கான சான்றாக தொப்புளுக்கு மேலாக இருந்து கழுத்துக்கு சற்றுக் கீழே வரை தையல் அச்சு இருந்தது.

 

“அ…அருள்! உனக்கு ஏதாவது ஆப்பரேஷன் பண்ணாங்களா இதுக்கு முன்னாடி?” என்று திக்கித் திணறிக் கேட்டாள் அக்ஷு.

 

“எஸ் குட்டிம்மா! அவனுக்கு இதய மாற்று சிகிச்சை செஞ்சு இருக்கு” பதில் விஷ்வாவிடம் இருந்து வந்தது.

 

ஹரிஷைத் தவிர அனைவரும் அதிர்ந்து நிற்க, மித்ரன் இவனுக்கு எப்படித் தெரிந்தது என்று அதிர்ச்சியாகப் பார்த்தான்.

 

கண்ணை மூடித் திறந்து அதை ஆமோதித்த ஹரிஷ் “மித்து விஷுவை விட்டுப் போகக் காரணம் நீலாவோட மிரட்டல் மட்டும் இல்லை. அவனுக்கு நீலா விஷயம் பாதிப்பை ஏற்படுத்தலனு சொல்லல. பட் மித்து யூ.கே போக மெயின் ரீசன் அவனுக்கு பண்ண ஆப்பரேஷன்” என்றிட, இம்முறை எல்லோருடனும் சேர்ந்து அதிர்வது விஷ்வாவின் முறையாயிற்று….!!

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!