🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 25
“காதலின் கைகளில் பொம்மையாய் உடைகிறேன்…” எனும் பாடல் வரியை இதழோரம் உச்சரித்தவாறு கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன் அபய்.
“என்ன சார் காலங்காத்தால பாட்டு?” தலை துவட்டிக் கொண்டு கேட்டாள் அஞ்சனா.
அவளைத் திரும்பி நோக்கியவன், “தேவதை இவள் ஒரு தேவதை. அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமா?” பாடியதோடு மட்டும் நில்லாமல் அவள் பூமுகத்தை ரசனை பொங்க பார்த்தான்.
“என்னங்க” சிணுங்கலுடன் தன்னை ஏறிட்ட விழிகளில் விரும்பியே தொலைந்து போனான் ஆடவன்.
விழிகளா அவை?
சூரியன் முதற்கொண்டு நிலா வரை அனைத்தினது பிரகாசத்தையும் களவாடி தன்னுள் புதைத்துக் கொண்ட விண்மீன்கள் அல்லவோ இவை?
ஒளிரும் விழிகள் மீளும் வழியறியாது அவனை அதனுள்ளே புதைந்து போக வைத்தன.
“இன்னும் ஒரு சாங் அம்மு” கட்டை விரலையும் சுண்டு விரலையும் இணைத்துக் காட்டிய ருத்ரனின் உதட்டில் வசீகரா படத்தின் பாடல் தாளமிசைக்க ஆரம்பித்தது.
🎶 வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஒரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய் 🎶
🎶 கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா 🎶
🎶 கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும் 🎶
🎶 வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா 🎶
🎶வளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது 🎶
🎶 மடியினில் தலையணை செய்தாய்
மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய்
ஓரு கண்ணில் வன்முறை செய்தாய்
பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய் 🎶
அவளின் கயல் விழிகளை ஆழ்ந்து பார்த்தவனின் பார்வை அதிலிருந்து மீள்வதாகத் தான் இல்லை.
“போதுமப்பா. இதுக்கு மேல முடியல” என நகைத்து, “இருந்தாலும் அழகா பாடுறீங்க” என்று பாராட்டவும் தான் செய்தாள்.
கோபால் வீட்டில் செல்வன் குடும்பத்தை விருந்துக்கு அழைத்திருந்தனர். செல்வனும் சித்ராவும் சென்று விட்டனர். ருத்ரனுக்கு ஏதோ வேலை இருந்ததில் சற்று தாமதமாகி விட்டது.
முன்பெல்லாம் அங்கு செல்ல ஆசையாக இருக்கும். செல்வனைக் காட்டிலும் கோபால் அன்பாக பேசினார் அல்லவா?
ஆனால் தற்போது அவரின் விலகல் அத்தனை வேதனையைக் கொடுத்தது உண்மையே.
“உங்க அண்ணா அம்மு கூட பேசாம இருக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அவளை கஷ்டப்படுத்துறது எனக்கு பிடிக்கலம்மா” இன்று தாயிடம் குறைப்பட்டுக் கொண்டான் ருத்ரன்.
“அண்ணாவைப் பற்றி உனக்கு தெரியுமே கண்ணா. அவர் கோபம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். அப்புறம் இந்த மனுஷனா இப்படி இருந்தார்னு ஆச்சர்யப்படற அளவுக்கு மாறிடுவார். கொஞ்சம் பொறுத்திரு ருத். அவர் கிட்ட எதுவும் கோபமா பேசாத” என்று சமாதானம் செய்து விட்டு சென்றிருந்தார் சித்ரா.
“அம்மு போயே ஆகனுமா?” தன்னவளிடம் கேட்டு முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டான்.
“சித்தப்பா வர சொல்லி அவ்ளோ சொன்னார் தானே? போகாம உதாசீனப்படுத்தக் கூடாதுங்க. போகலாம் ப்ளீஸ்” அவனைக் கெஞ்சிக் கொஞ்சி தலையாட்ட வைத்தான்.
காரில் கிளம்பினர் இருவரும். தன்னவளுடன் கதையளந்து கொண்டு வந்தான் ருத்ரன்.
“அம்மு! இந்த கடையை பார்” காரின் வேகத்தைக் குறைத்து ஒரு கடையைக் கை காட்டினான்.
“அம்மு ரெஸ்டாரன்ட்” அதனை வாசித்தவளின் இதழ்களில் மென்னகை.
கடையின் முன்னால் இருந்த இருபது வயது மதிக்கத்தக்க பையன் ஓடி வந்தான்.
“அண்ணா!” காரின் யன்னல் வழியே எட்டிப் பார்க்க, “ஹாய்டா எப்படி இருக்க?” என்று கேட்டான் ருத்ரன்.
“நல்லா இருக்கேன். எக்ஸாம் ரிசல்ட் வந்துச்சு. நான் பாஸ் பண்ணிட்டேன் அண்ணா. ஸ்வீட் கொடுத்துட்டு இருக்கும் போது நீங்க கூட இல்லையேனு நெனச்சேன். அதுக்குள்ள வந்து நின்னுட்டீங்க” என்று சொன்னதும் கதவைத் திறந்து வெளியில் வந்து அவனை அணைத்து விடுவித்தான்.
தானும் வெளியிறங்கி வந்து எதுவும் புரியாத நிலையில் பார்த்தாள் அஞ்சனா.
“அண்ணி! ஸ்வீட் எடுத்துக்கோங்க. அண்ணனுக்கு முதல்ல கொடுத்தா என் அம்முக்கு கொடுங்கனு சொல்லுவாரு. அதான் உங்களுக்கே பர்ஸ்ட்டா தந்தேன்” என்று இனிப்பை நீட்ட,
“தாங்க் யூ தம்பி. இன்னும் நல்லா படிச்சி முன்னேறனும். ஆல் தி பெஸ்ட்” அதனை வாங்கி மனதார வாழ்த்தினாள்.
“அண்ணியை கண்டதும் என்னை மறந்துட்டியே. ஆமா இது அம்முனு உனக்கு எப்படி தெரியும்?” யோசனையாகக் கேட்டான் அபய்.
“இங்கே வந்தா போற வரைக்கும் அம்மு புராணம் பாடி எனக்கே காதல் மேல ஆசை வர வெச்சிட்டீங்களே. உங்க தெய்வீக காதலை பார்த்து புல்லரிச்சு போன பிறகும் உங்க கூட ஒரு பொண்ணு இருக்கிறதைப் பார்த்து அது உங்க அம்மு இல்லைனு நெனச்சா அபத்தம் இல்லையா?” தன் இரு கன்னத்திலும் அடித்துக் கொண்டான்.
“உனக்கு வாயி மட்டும் குறையவே இல்லை சிவாஜி” அவன் தோளில் செல்லமாக அடித்தான் ருத்ரன்.
“ஜியை கட் பண்ண சொன்னா கேட்கிறீங்களாண்ணா? எங்கம்மா சிவாஜி ரசிகையாகி என் பெயரை இப்படி பண்ணி வெச்சிட்டாங்க. சிவானு கூப்பிடுங்க” என்று அங்கலாய்த்தான் அவன்.
“ஆலியா வீட்டுக்கு அடிக்கடி போவேனே. அப்போ போகும் போது அம்முங்கிற பெயரைக் கண்டு வந்தேன். அப்போ தான் இவனை மீட் பண்ணேன். கண்டதும் ஒட்டிக்கிட்டான். அன்னையில் இருந்து எப்போ போகும் போதும் வந்து இவனோட பேசிட்டு போவேன்” தன்னவளிடம் கூறினான் ருத்ரன்.
“அங்கே மட்டும் தான்னு பார்த்தா அம்முவை இங்கேயும் ஃபேமஸாக்கி வெச்சிருக்கீங்க” மெல்ல சிரிக்கவும் தான் செய்தாள் அம்மு.
“நீங்க வேர்ல்ட் ஃபேமஸ் அண்ணியாரே. நம்ம அண்ணன் அப்படி” சிவா பெருமையாக சொல்ல, “போதும்டா என்னை ஓட்டாத” அவன் முதுகில் தட்டி விட்டு விடைபெற்றுச் சென்றான்.
“நல்ல பையன்ல அபய்? எவ்ளோ நல்லா பேசுறான்”
“நல்லா பேசுவான். ஆனா அவனுக்குள்ள நிறைய வலிகள் இருக்கு டி. அவனோட அப்பாம்மா போன வருஷம் ஆக்சிடன்ட்ல இறந்துட்டாங்க. எவ்ளோ பெரிய இழப்பு. ஆனாலும் அதை காட்டிக்காம வாழ்றான். நல்லா படிக்கிறான். அப்பா மாதிரி டாக்டர் ஆகனும்கிறது அவனோட கனவு”
“பார்த்தா தெரியாததற்கு ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் வலிகளும் இழப்புகளும் இருக்க தானே செய்யுது” கசந்த முறுவலை தவழ விட்டாள் அஞ்சனா.
ருத்ரனின் மனம் சிவாவின் நினைவில் தோய்ந்திருந்தது. சிலர் நம் வாழ்வில் திடீரென வருவார்கள். காரணங்கள், இலக்கணங்கள் ஏதுமின்றி அவர்களை சட்டென பிடித்து விடும். அவர்கள் மீது அன்பு சுரக்கும். அவர்களது நல்வாழ்விற்காக பிரார்த்திக்கும். சுயநலத்திற்கும் அப்பாற்பட்ட சில அழகான உறவுகள் அவை. அப்படித் தான் ருத்ரனுக்கு இந்த சிவாவும்.
கோபால் இல்லத்தை அடையும் போது வாயிலில் நின்று அழைத்தார் லீலா.
“வா ருத்ரா. அஞ்சு உள்ள வாம்மா” முகம் மலர வரவேற்க, உள்ளே நுழைந்தனர் இருவரும்.
“அடேய் மாப்ள” தன்னைக் கண்டு எழுந்து வந்த நிதினைக் கண்டு “புது மாப்பிள்ளை செம குஜாலா இருக்க போல. மாமனார் வீட்டுல கவனிப்பு பலமோ?” அவன் தோளில் கை போட்டுக் கேட்டான்.
ஆலியாவுடன் அஞ்சனா ஐக்கியமாகி விட குடும்பங்கள் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? ஒரே அமர்க்களம் தான்.
அஞ்சனா கோபாலுக்கு முன்னால் அமர்ந்திருந்தும் அவளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை அவர்.
“ஆலியா! ஆலியா” என்று கோபால் அழைக்க, “ஆலியா பக்கத்து வீட்டுக்கு போயிருக்கா” என்று பதிலிறுத்தினாள் அஞ்சு.
அவரோ ஒன்றுமே பேசாமல் இருக்க இவளுக்கு முகம் வாடி விட்டது. அவர் எழுந்து செல்லவும் தானும் பின்னால் சென்ற ருத்ரன் “மாமா” என அழைத்தான்.
“சொல்லு டா”
“உங்க பார்வையில் தப்பு பண்ணுனது யாரு பிரபா மாமா தானே? அப்படியே பார்த்தா அவங்க மேல கோபம் இருக்கிறது நியாயம். ஆனால் அவங்களுக்கு ஓடி போக வழி காட்டின மாதிரி நீங்க அம்முவை ஹர்ட் பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்?” நேரிடையாகக் கேட்டான் ருத்ரன்.
“அவ மேல எனக்கு கோபம்னு யார் சொன்னா? அப்பா சொல்லைக் கேட்டு பிரபா மேல கோபத்தை வளர்த்துக்கிட்டேன். நம்ம குடும்பத்தை அவமானப்படுத்தியதை விட, எங்க உறவை தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டாரேனு தான் கோபம். அத்தனை நாள் ஒன்னா உறவாடிட்டு திடீர்னு உறவே இல்லைனு ஆச்சுனா அதை ஏத்துக்க முடியாது டா.
அதே மிச்சம் மீதி கோபத்தை வெச்சுக்கிட்டு இருக்கும் போது அண்ணன் பொண்ணுனு ஒருத்தி வந்து நின்னா அதை சட்டுனு மறந்து சகஜமா பழக முடியல. ஆனால் உண்மையான சம்பவம் எனக்கு நேற்று தெரிஞ்சுது” நெற்றியை அழுத்தமாக நீவி விட்டுக் கொண்டார் கோபால்.
“லீலாவோட அம்மா ஊருக்கு நேற்று போனேன். அப்போ அங்கே பரணில் இருந்து அவங்க சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்தேன் . அது என் அம்மா தன் கைப்பட எழுதினது. அப்பாவுக்கு பயந்து அங்கே கொடுத்திருந்தாங்க. அதில் பிரபா கல்யாண விஷயம் எழுதப்பட்டு இருந்துச்சு” தான் வாசித்ததை சொல்லத் துவங்கினார்.
ஆனந்தி மீதான காதலை வீட்டில் சொல்ல வந்த சமயத்தில் லீலாவோடு திருமணம் எனக் கேள்வியுற்று அதிர்ச்சியானார் பிரபாகரன்.
ஒரு கட்டத்தில் ஓடிப் போகலாம் என்று எண்ணம் உதித்தாலும் தந்தை மீதான பயமும், தான் சென்றால் தாய் உடைந்து விடுவார் என்பதனாலும் அவ்வெண்ணத்தைக் கைவிட முடிவு செய்தார்.
ஆனால் அவரது தாயோ உண்மையில் உடைந்து தான் போயிருந்தார். பிரபாகரன் மட்டுமல்ல கோபாலின் வாழ்வும் இதில் சிதைவுறும் என்பதுவே அதற்கான காரணம். ஆம்! கோபால் லீலாவை ஒருதலையாக விரும்பினார். இதை தாயானவளும் அறிவாள்.
கணவனின் கூறினால் நிச்சயமாக தனக்கு அடி விழும். காரியம் நடைபெறுவதாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கலாம். ஆனால் ஆணாதிக்க சிந்தனையும், வறட்டு கௌரவமும் கொண்ட கணவன் தான் சொல்வதைக் காது கொடுத்தும் கேட்க மாட்டார். பிரபாகரனுக்கு லீலாவை மணம் செய்வதே அவரது எண்ணம்.
இனி என்ன செய்வது என்று யோசித்தவருக்கு ஒரு எண்ணம் உதயமாகியது. ஒரு தாயாக இவ்வாறு செய்வது தவறு என உள்ளம் குறுகுறுத்தது. ஆயினும் மகன்களை மகிழ்வாக வாழ வைக்க வேறு வழி தெரியவில்லை.
எனவே, மனதை சரிகட்டிக் கொண்டு மூத்த புதல்வனை அழைத்து நிலவரத்தை எடுத்துரைத்து “நீயும் சந்தோஷமா வாழனும், கோபியும் சந்தோஷமா இருக்கனும். வேறு வழி இல்லை பிரபா! ஒரு அம்மாவா சொல்ல கூடாது இருந்தாலும் இதற்கு மேல் தாமதிக்க முடியாது. நீ இங்கிருந்து போயிடு. ஆனந்தி கூட சேர்ந்து நல்லா வாழனும்” கண்களில் கண்ணீர் வழிந்தது.
தாயின் பேச்சு உண்மையாக பட்டதில் மறுக்காமல் அவரை அணைத்து விடுவித்து விட்டு யாருமறியாமல் ஊரை விட்டு சென்று விட்டார்.
விடயமறிந்து கணவன் வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் போது குற்றவுணர்வு மனதை அரிக்கத் தான் செய்தது மனைவிக்கு.
“கோபியை லீலாவுக்கு கட்டிக் கொடுக்குறேன். அந்த ஓடுகாலி கழுதை எதற்கு?” என்ற தந்தையின் கூற்றில் தன் காதலியின் கைப்பிடிக்க வாய்ப்புக் கிடைத்தில் கோபாலுக்கு மகிழ்ச்சியே ஆனாலும் அண்ணன் இல்லாத குறையால் முழுதாக ஈடுபட முடியவில்லை.
திருமணம் முடிந்த பிறகும் கூட, லீலாவுக்கு தன்னையன்றி அண்ணனைப் பிடித்திருந்தால் என்ன செய்வது என்ற பயமும் உறுத்தியது.
ஆனால் அவ்வாறன்றி லீலா சாதாரணமாகவே இருக்க, அவரோடு ஆரம்பித்தது கோபாலின் இல்லறம்.
இளைய மகனின் வாழ்வில் மனம் குளிர்ந்தாலும் மூத்தவன் பற்றிய சிந்தனை அத்தாயை நொடிக்கு நொடி கொன்றது. கணவனின் இறப்பில் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றியது அவருக்கு.
தந்தை விட்டுச் சென்ற வறட்டுப் பிடிவாதமும் கோபமும் கோபால் மனத்தில் எஞ்சி நின்றது. ஆதலால் தாய் கூற வரும் எதனையும் கேட்கவில்லை.
அதே துயருடன் அவருயிரும் பிரிந்தது. இறப்பிற்கு முன் இதையெல்லாம் எழுதிய புத்தகத்தை தன் நண்பியான லீலாவின் தாயிடம் சேர்த்திருந்தார், என்றாவது ஒரு நாள் பிரபாவின் குடும்பத்தில் யாராவது வந்தால் கொடுக்குமாறு.
அதனை நினைவு கூர்ந்து அவரும் கோபாலின் கையில் ஒப்படைக்க, அதனை வாசித்தவருக்கு குற்றவுணர்ச்சி நெருஞ்சி முள்ளாக நெஞ்சைத் தைத்தது.
“பிரபா மேல எந்த தப்பும் இல்லை. எனக்காகவும் தான் அம்மா சொல்லி போயிருக்கார். ஆனா நான் ஒன்னும் தெரியாம இத்தனை நாள் வாழ்ந்திருக்கேன். அதை வெச்சு இப்போ அவர் பொண்ணை கஷ்டப்படுத்திட்டேன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு. என்னால அவ முகத்தை பார்க்க முடியல ருத்ரா”
“அப்போ அவ முகத்தையே பார்க்காம இருக்க போறீங்களா?” கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்தான் அவன்.
“இல்லை டா” அவர் தயங்க, “அப்படினா இப்போவே பாருங்க” அவரது தோளைப் பிடித்து திருப்பினான்.
அங்கு கண்கள் கலங்க நின்றிருந்தாள் அஞ்சு. அவள் அனைத்தையும் கேட்டு விட்டாள் என்பது புரிந்தது.
“அஞ்சுமா என்னை மன்னிச்சிடு” அவர் குரல் பிசிறடிக்க, “சித்தப்பா” என்று ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள் அவள்.
“நான் தேவை இல்லாம உன்னை கஷ்டப்படுத்திட்டேன். பிரபா இப்படி எனக்காக பண்ணி இருக்கலனாலும் நான் உன் மேல கோபப்பட்டிருக்க கூடாது. ஏன்னா உனக்கும் அவங்க போனதற்கும் சம்பந்தம் இல்லையே” அவள் தலையை அன்பாக வருடி விட்டார்.
“இல்ல சித்தப்பா. அதை விடுங்க” அவரது அன்பே போதுமென இருந்தது அவளுக்கு.
“என்ன ருத்ரா! சந்தோஷமா?” சித்ரா கேட்க, ஆமோதிப்பாக தலையை உருட்டினான் மைந்தன்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். மனக்கசப்புகள் யாவும் நீங்கியிருந்ததில் விருந்து களைகட்டியது.
பெரியவர்கள் ஒருபுறம் கதைத்துக் கொண்டிருக்க நிதினும் ருத்ரனும் தம் மனைவியருடன் கார்டனில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.
“போரடிக்குதுல்ல ஏதாச்சும் படம் பார்க்கலாமா?” என்று ஆலியா கேட்க, “டிவி போட்டா மிஸ்டர் செல்வனும் கோபாலும் காளி அவதாரம் எடுப்பாங்க” என்றான் நிதின்.
“ஆமா ஆலியா. அவங்க பேசிட்டு இருக்கும் போது டிவி போட்டா காண்டாகிருவாங்க. இந்த அப்பாவுக்கு டிவி போன் மேல ஏன் இவ்ளோ அலர்ஜியோ தெரியல”
“அப்போ நாம டிவியை இங்கே தூக்கிட்டு வந்துரலாமா?” என்று கேட்ட நிதினை முறைத்து, “தூக்கிட்டு வந்தா கார்டன்ல இருக்கிற காற்றை வெச்சு நீ கரண்ட் கொடுப்பியா?” என்றாள் ஆலியா.
அவன் இளித்து வைக்க எழுந்து சென்ற அஞ்சனா “உங்களை மாமா கூப்பிடுறாங்க” என்றதும் நல்ல பிள்ளையாக தந்தை முன் சென்று அமர்ந்தான்.
“எனக்கு திட்டுனியாம் டிவி போட விடுறதில்லனு. வந்து கேட்டா ஓகே சொல்ல போறேன்” என்றார் செல்வன்.
“டிவி போடவும் சின்ன பிள்ளை கணக்கா கேட்கனுமா? நாங்க இவ்ளோ வளர்ந்து இருக்கோமே” புறுபுறுத்தான் நிதின்.
“அதான்டா சொல்றேன். இவ்ளோ வளர்ந்து இருக்கியே தவிர, அறிவும் மூளையும் ஒரு மில்லிமீட்டர் கூட வளரல. முன்னாடி சின்ன பிள்ளையா இருக்கும் போது பர்மிஷன் கேட்கனும்னு சொல்லிருக்கேன். இன்னமும் அந்த பர்மிஷன் ஈர வெங்காயத்தை பிடிச்சு தொங்கிட்டு இருந்தா நான் என்ன செய்றது?” முறைத்து வைத்தார் செல்வன்.
“நாங்க சொல்பேச்சு கேட்கிற பையனுங்கோ” உடனே எழுந்து டிவியை ஆன் செய்ய, “பழைய படம் போடு நித்தி” என மருமகனை சுரண்டினார் கோபால்.
“புதுசு பார்ப்போம் மாம்ஸ்! உடனே பழசு தான் நல்லம். புது படம் எல்லாம் மொக்கயா கன்றாவியா இருக்கும்னு சொல்ல கூடாது. அப்பறம் பழைய படமா? புது படமா? அப்படினு பட்டி மன்றம் நடாத்த வேண்டி வரும்” நீளமாக நீட்டி முழக்கினான் நிதின்.
“இவன் கூட எப்படி ருத்ரா நிக்கிற? ஒரு தடவை இருந்ததுக்கே பேசுற பேச்சுல காதுக்குள்ள கொய்ங்னு சத்தம் வருது. என்னா சவுண்டு” நிதினை வாரினார் செல்வன்.
“இத்தனை நாளா இந்த நக்கல் பேச்சை எல்லாம் சித்து பேபி கிட்ட மட்டும் அவிழ்த்து விட்டுட்டு இருந்தீங்களா?” அவனும் பதிலுக்கு கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு கூற, “டேய் டேய்” தந்தையை கிண்டல் செய்ததில் அவன் முதுகில் அடித்தான் அபய்.
அனைவரும் இந்த பேச்சில் சிரிக்க, பெரியவர்கள் விட்டுக் கொடுத்ததில் புதிதாக வெளிவந்த ‘ஹாய் நன்னா’ படத்தை தெரிவு செய்து ஓட விட்டான் ருத்ரன்.
கேலியும் சிரிப்பும் கலகலப்புமாக அவ்விடம் புதுத் தெம்பு பெற்றது.
தொடரும்…….!
ஷம்லா பஸ்லி