கரம் விரித்தாய் என் வரமே – 25
ராஜேஷ் ஏதேச்சையாக தான் அஸ்வினியின் புறம் பார்த்தான். இவள் சொல்லவில்லை என்றால் யார் சொல்லி இருப்பார்கள்? இந்த விஷயத்தில் வெளியாட்களுக்கு வேலை இல்லையே என்று தான் பார்த்தான். ஆனால் வெளிறிய அவள் முகமும், இவனை போல் குழப்பத்திற்கு பதிலாக இருந்த அவள் முகத்தில் இருந்த பதட்டமும் அவனுக்கு வேறு கதை சொல்லியது. ஓரளவிற்கு அவனுக்கு புரிய, அவன் தாடை இறுகியது ஆத்திரத்தில்.
மீனா சொன்ன பதிலை கேட்டு மேலே பார்வதி ஏதோ பேச வர,
“பத்திரிக்கை கொடுத்தாச்சுல்ல…. நீ கிளம்பு….” என்றான் ராஜேஷ் அவளிடம் எந்த உணர்வும் இல்லாமல்.
அவளா அடங்குவாள், அவனை முறைத்தவள், “என்னை கழட்டி விட்டு அதோ நிற்கிறாளே அவளை தான் உங்க மருமகளா கொண்டு வரப்போறான் உங்க பையன்…. பார்த்துக்குங்க….” என்று வேகமாக சொல்லி விட்டு, “வா சாய்…. நாம போலாம்….” என்று வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் அவ்வாறு கூறியதும், மகனை முறைத்தவர், “என்னடா இது….? ஒன்னும் சரியில்லை எதுவும்….! மத்தது நியாபகம் வரலைனாலும் மத்ததுங்க போல் இல்லாம நம்ம வீட்டில ஒரு நல்ல பொம்பிளை பிள்ளை இருக்குனு தெரிய வேண்டாம்….? கருமம் கருமம்….!”
“அம்மா….!” ஆத்திரமாக அவன் அழைக்க,
அவனை கண்டுகொள்ளாமல் அவர் நகர்ந்தார். அதில் மிகவும் காயப்பட்டு போனான் ராஜேஷ். எவ்வளவு இளக்காரமாக நடத்துகிறார் என்னை அம்மா…. என் மேல் எந்த பாசமும் இல்லையா….? வெறுத்து போனான் ராஜேஷ்.
அங்கிருந்த அனைவருக்குமே அது மிகுந்த சங்கடமான சூழ்நிலையாக இருக்க, அஸ்வினியை பார்த்த ராஜேஷ்,
“கிளம்பு போலாம்….” என்றான்.
அஸ்வினியும் அமைதியாக அவனுடன் கிளம்பினாள். அவள் வீடு வரும் வரை இருவரும் எதுவுமே பேசவில்லை. அவள் கதவை திறந்து அவர்கள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம், கதவை அடித்து சாற்றியவன்,
“நீ தான் போன் பண்ணி எங்க அம்மா கிட்டே பேசினியா….?” என்றான். குரலின் கடுமையில், மிகவும் தயக்கமாக மெதுவாக ஆமாம் என்பது போல் தலை அசைத்தாள் அஸ்வினி.
“கடைசியில் என்னோட இத்தனை மனகஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் நீ தான் காரணமா….?”
“ப்ளீஸ் டா நான் வேணும்னே பண்ணலை டா…. உன்னை பார்வதி கிட்டே இழந்திட கூடாதுங்கிற பயத்தில தான் இப்படி பண்ணேன் டா….”
“ஓ! எனக்கு அறிவே இல்லை…. நான் அவ பின்னாடியே போயிடுவேன்…. என்னை எங்க அம்மா அப்பா வந்து தான் என்னை காபாத்தணும்னு நினைச்சியா….?” நக்கலாக கேட்டான் ராஜேஷ்.
“அவளை பத்தி உனக்கு புல்லா தெரியாது ராஜேஷ்…. அவளோட ஆசைக்கு அவ எந்த எல்லைக்கும் போவா….”
“இவ்ளோ அக்கறை இருக்கவ, நாங்க லவ் பண்றோம்னு தெரிஞ்சவுடனேயே அவளை பத்தி என்கிட்ட வந்து சொல்லி இருக்கணும்….அதை செய்யலை அப்போ வேடிக்கை பார்த்திட்டு இருந்துட்டு கடைசியிலே மட்டும் எதுக்குடி உனக்கு அந்த மண்ணாங்கட்டி….?” எரிந்து விழுந்தான் ராஜேஷ்.
“நீ லவ்னு சொல்லும் போது நான் எப்படி டா….?”
அந்த பாழாய் போன லவ்வுங்கிற விஷயம் நடந்ததே உன்னால தாண்டி…. அப்போ பிடிச்ச சனி இப்போ வரை என் வாழ்க்கையே நாசம் பண்ணிடுச்சு….”
அவனின் மனஎரிச்சலை எல்லாம் அவன் இவள் மீது கொட்ட துடித்து போனாள் அஸ்வினி. ஆனாலும் சமாளித்து கொண்டு,
அதனால் தான் அப்புறம் உன்னை விட்டுற கூடாதுனு உன்கிட்ட க்ளோஸா வந்தேன்….பேச தெரியாமல் பேசி அவனை இன்னும் ஆத்திரம் அடைய வைத்தாள் அஸ்வினி.
அவளை தீயாய் முறைத்தவன், “அது இன்னும் எவ்ளோ கேவலம் தெரியுமா….? நேரடியா உன் மனசில என் மேல் இருக்க லவ்வை சொல்லாம, என் உணர்வுகளை தூண்டி விட்டு நான் மாறணும்னு நினைச்சுது….? நான் அன்னைக்கு எல்லாம் எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா….? நீயும் அந்த பார்வதியும் ஒரு விதத்தில ஒன்னு தாண்டி…. உங்க இஷ்டத்துக்கு தான் என்னை வளைக்க பார்த்தீங்களே தவிர என்னை பத்தி எதுவுமே யோசிக்கலை….” என்றான் கசப்பாக.
“அவளோட என்னை கம்பேர் பண்ணி சொல்லாதே ராஜேஷ்…. நான், நீ கஷ்டப்பட்டுற கூடாதுனு தான் அப்படி செஞ்சேன்…. நீ லவ்னு சொன்ன அப்போ ஒரு வேளை உண்மையாகவே அவளும் நீயும் விரும்பினா நாம அதை கெடுக்க கூடாதுனு தான் அமைதியா இருந்தேன்….” என்றாள் அழுகையை அடக்கி கொண்டு.
“அதே மாதிரி நான் பார்த்துகிறேன்னு சொன்னப்போ நீ சும்மா இருக்க வேண்டியது தானே….? என் மரியாதையை குழி தோண்டி புதைச்சுட்டியே இப்படி….இன்னைக்கு பார்த்தியா….? எங்க அம்மா எப்படி பேசினாங்கனு….இதுக்கு எல்லாம் காரணம் நீ தான்….நீ மட்டும் தான்….”
அவன் முகம் அளவு கடந்த வேதனையை காட்ட, வேகமாக அவன் அருகில் சென்று அவனை அணைத்து கொண்டாள் அஸ்வினி. “அதை நினைக்காதே ராஜேஷ், நீ உன் கடமை எல்லாம் செஞ்ச அப்பறம் ஆன்ட்டி அவங்க பேசினது தப்புனு பீல் பண்ணுவாங்க பார்!” என்று அவனுக்கு கன்னத்தில் முத்தம் வைக்க, வெறி வந்தவன் போல் ஆனான் ராஜேஷ்.
“தள்ளு…. தள்ளுடி….என்னை பார்த்த உனக்கு எப்படி தெரியுது…. ஆசையில் அலையுறவன் மாதிரியா….? இப்போ எதுக்கு இப்படி பண்ணே…. இதை பத்தி நான் மேலே பேச கூடாதுனா…. அப்போ அன்னைக்கு உங்க வீட்டிலும் நீ பண்ணின தப்பை பத்தி அதுக்கு அப்புறம் நான் பேச கூடாதுனு தான் அவ்ளோ க்ளோஸா வந்து இருக்கே….அதென்ன எப்போ பார்த்தாலும் இதை வைச்சு என்னை டைவேர்ட் பண்ண ட்ரை பண்றது….? வெட்கமா இல்லை உனக்கு….? அசிங்கமா இல்லை….?” நெருப்பு அள்ளி அவள் தலையில் கொட்டுவது வார்த்தைகளை கொட்டி அவளை துடிக்க வைத்து விட்டான் ராஜேஷ்.
“ப்ளீஸ் டா…. என்னை இவ்ளோ மோசமா பேசாதே…. நான் தான் எல்லாம் ஆரம்பிச்சேன்….ஆனா நீ சொல்ற அர்த்தத்தில் இல்லை…. உன்னை அவ்ளோ கேவலமாவா நான் நினைப்பேன்….? உன்னை நெருங்கி வந்ததில் உன் மேல் நான் வைச்சு இருக்க அன்பு, நம்பிக்கை, ஆசை எதுவும் உனக்கு தெரியலையா….?”
“தெரியலை டி உண்மையாவே தெரியலை…. நீயே நல்லா யோசிச்சு பாரு…. நமக்குள்ள ஒவ்வொரு தடவையும் நடந்த நெருக்கத்திற்கு பின்னாடி உன்னோட மாஸ்டர் மைண்ட் இருக்கு…. இப்போ எனக்கு என்ன நினைச்சாலே அசிங்கமா வெட்கமா இருக்கு…. ஒரு பொண்ணு இல்லை, ரெண்டு பொண்ணுங்க என்னை முட்டாள் ஆக்கிட்டாங்க…. சே! என்னை லவ் பண்றேன் பண்றேன் சொல்லி என் மானம், மரியாதை எல்லாத்தையும் காற்றில் பறக்க வைச்சுட்டே அஸ்வினி! என் சம்பாத்தியத்தில் தான் எங்க வீட்டில் எல்லாம் பண்றோம், ஆனா எனக்கு மரியாதை இல்லை! அதுக்கு காரணம் பொண்ணு விஷயம்…. அதுக்கு காரணம் நீ!” என்றான் ராஜேஷ் ஆணித்தரமாக.
நாற்காலியில் தொய்ந்து அமர்ந்தாள் அஸ்வினி.
“நான் செஞ்சது எல்லாமே உன் நன்மையை மனசில் வைச்சு தான்! ஆனா சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எல்லாத்தையும் இப்போ உனக்கு வேற விதமா காட்டுது. என் லவ் கூட உண்மை இல்லை சொல்லுவியா ராஜேஷ்?” வருத்தமாக கேட்டாள் அஸ்வினி.
அவள் அப்படி தொய்ந்து போய் வருத்தமாக பேசியது அவனுக்கு ஒரு மாதிரி ஆக அமைதியாக இருந்தான் ராஜேஷ்.
“சொல்லு ராஜேஷ், எனக்கு பதில் வேணும்….? நிறைய சொல்லிட்டே கோபத்தில்…. உன் மனசில என் லவ் பத்தியும் என்ன இருக்கு சொல்லிடு….!”
“நீயும் ஒரு செல்பிஷ்ஷா தான் எனக்கு தோணுது அஸ்வினி. பர்ஸ்ட்டே லவ் சொல்லலை….இன்னொரு பொண்ணு என்டர் ஆனப்போவும் அவளை பத்தியும் எனகிட்ட சொல்லலை, உன் லவ் பத்தியும் சொல்லலை…. அப்புறம் ஏதோ ஒரு பாயின்ட்ல உனக்கே ஏதோ தோணி அப்போவும் நேரா லவ்வை சொல்லாம குறுக்கு வழியில் என்னை யூஸ் பண்ணி காரியம் சாதிக்க ட்ரை பண்ணே…. எங்க அம்மா கிட்ட போன்ல சொல்லிட்டு நான் வருத்தப்படுறதுக்கு பிராயச்சித்தம் போல் நமக்குள்ள ஒரு உறவை நீயே ஸ்டார்ட் பண்ணே…. எல்லாத்தையும் யோசிக்கும் போது இதில நான் இல்லவே இல்லை…. எல்லாரும் சேர்ந்து என்னை உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைச்சு இருக்க பீல் தான் வருது! உனக்கு நான் வேணும், எங்க அம்மாவுக்கு என் சம்பளம் வேணும்…. யாருக்கும் என் மனசு புரியலை…. அதில் இருக்க உணர்வுகள் புரியலை….. என் வாழ்க்கையை என்னை வாழ விடாமா எல்லாரும் அதை அவங்கவங்க கையில் எடுத்துக்கிட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டிங்க….” என்று தலையை பிடித்து கொண்டான் ராஜேஷ்.
“சரி இப்போ என்ன செய்யலாம் ராஜேஷ்…? என்னால் உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் ராஜேஷ்.என்னை மன்னிச்சுடு…. ஆனா என் லவ் உண்மையானது டா!” என்றாள் அமைதியாக அஸ்வினி.
“உண்மையை சொல்லணும்னா, எனக்கு ஒரு மாதிரி எரிச்சலா இருக்கு அஸ்வினி. எல்லாருமே அவங்க அவங்க காரியத்துக்கு தான் பார்க்கிறீங்க தோணுது…. இது எதுவுமே வேண்டாம்னு தோணுது…. என்னை விட்றேன் ப்ளீஸ்….” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
“ரா…. ராஜேஷ்…..!” இப்படி சொல்வான் என்று எதிர்பார்க்காதவள் அதிர்ந்து விழித்தாள். அனைவரும் செல்பிஷ், அவளின் விருப்பத்திற்கு அவனை வளைத்து விட்டாள் என்றெல்லாம் சொல்லும் போதே நெஞ்சு வலித்தது அவளுக்கு. அந்த உறவில் வந்த குழந்தையை இவன் எப்படி ஏற்று கொள்வான் என்று. இப்போது மொத்தமாக என்னை விட்ரு என்பவனிடம் சொல்வதா வேண்டாமா?
“அப்போ நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா ராஜேஷ்….?”
அவளுக்கு நேராக பதில் சொல்லாமல்,
“உன்னைனு இல்லை எனக்கு இப்போதைக்கு பொண்ணுங்கனாவே அலர்ஜி ஆன மாதிரி இருக்கு….! ஏதோ ஒரு விஷயத்தை மனசுக்குள்ள வைச்சுக்கிட்டு வெளியே சொல்லாம அதை நடத்திக்க நீங்க எல்லாம் எப்படி வேணா செய்வீங்க…. அதே சமயம் நீங்க நல்லவங்க போலவும் இருப்பீங்க…. எதிராளியோட குற்ற உணர்ச்சியை ஈசியா தூண்டி விடுவீங்க…. அதனால் எனக்கு காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம்….”
“அவ்ளோ தானா ராஜேஷ்….? எல்லாம் முடிஞ்சு போச்சா….?” கண்ணில் கண்ணீர் வழிய கேட்டாள் அஸ்வினி.
இப்போதைக்கு அனைவரையும் வெறுத்து, யாருடனும் பேசவே விரும்பாதவன் எப்படி வேறு சொல்வான்? அமைதியாக இருந்தான் ராஜேஷ்.
முகத்தை மூடிக் கொண்டு அழுதாள் அஸ்வினி. அழும் அவளை பார்க்க முடியாமல் எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்று நின்று கொண்டான். சற்று நேரம் அங்கே நின்றவன் பின் அவளிடம் சொல்லி கொள்ளாமலேயே கிளம்பி விட்டான். அவளிடம் வீம்பாக பேசியவனுக்கும் வலி தான்! ஆனால் காதல் வலியை விட அவள் செய்த செயல் அவனுக்கு முதுகில் குத்தியது போல் தான் தெரிந்தது. அதை தாண்டி வர முடியவில்லை அவனால்.
சற்று நேரம் அழுதவள், அவனை காணோம் என்றதும் தேட அவன் சென்றது புரிந்தது. நம்பவே முடியாமல் போனது அஸ்வினிக்கு. இனி ராஜேஷ் தன் வாழ்வில் வருவானா இல்லையா என்று தெரியாமல், புரியாமல் தடுமாறி நின்றாள்.
**************
பதினைந்து நாள் கழித்து,
ஏர்போர்ட்டில் நின்றிருந்தான் ராஜேஷ். அவன் அருகில் மதன், ஷிவா, இன்னும் சில அலுவலக நண்பர்கள் இருந்தார்கள். அனைவருக்கும் பிரியா விடை கொடுத்து கொண்டு இருந்தான் ராஜேஷ். கடந்து போன நாட்கள் மிகவும் கொடுமையானவை அவனுக்கு.
மீனாவிடம் இருந்து சுத்தமாக ஒதுங்கி கொண்டான் ராஜேஷ். செந்தில் கேட்டால் பதில் சொல்வான். சுகுணா மட்டுமே ராஜேஷ் ஒதுங்கி போனாலும் விடாமல் சென்று பேசுவாள்.
அலுவலகம் மிகுந்த பிசியாக சென்றதால் அங்கே அவன் வருத்தப்பட நேரம் இல்லை. அதோடு முக்கியமாக அஸ்வினி ஒர்க் பிரம் ஹோம் எடுத்து கொண்டு அவள் ஊருக்கு சென்று விட்டாள். அவளின் வருத்தமான முகத்தை பார்த்திருந்தால் இன்னும் கஷ்டமாக இருந்திருக்கும்! இப்போது அது இல்லை என்பதால் தன்னை சமாளித்து கொண்டான் ராஜேஷ். மனம் வெறுத்த நிலையில் ஒரு வழியாக அமெரிக்கா கிளம்பி விட்டான் ராஜேஷ்.
அவன் கண்ணில் படாத தூரத்தில் நின்றிருந்த அஸ்வினி துடைக்க துடைக்க பெருகிய கண்ணீரை தள்ளி விட்ட படி ராஜேஷை பார்த்து கொண்டு நின்றாள். அவள் அருகில் தெய்வா.
அப்படி பேசிட்டு அவன் மனசு மட்டும் தான் முக்கியம்னு ஒடுறவனை பார்க்க எதுக்குடி வந்தே….? வந்தது மட்டுமில்லாமல் இவனுக்காக அழ வேற செய்றே…? திட்டினாள் தெய்வா.
“அவன் சொன்னது ஒருவிதத்தில் உண்மை தெய்வா! எல்லாரும் அவனை ஆட்டி வைச்சுட்டோம்! போகட்டும்! அவன் இஷ்டப்படி இருந்துட்டு வரட்டும்!”
“நீங்க மேடம் இங்க சிலுவை சுமக்க போறீங்க! அப்படி தானே….? இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை…. என்ன நம்பிக்கையில் நீ அவன் இல்லாம இந்த குழந்தையை பெத்துக்க போறியோ தெரியலை…. ஊருக்கு போயிட்டு நீ வெளிநாட்டுக்கு போறேன்னு வேற சொல்லிட்டு வந்து இருக்கே….!”
“சொல்லிட்டு மட்டும் வரலைடி…. எங்க அண்ணன் வந்து வழியனுப்பி வைக்கிறேன்னு சொன்னதால், ஏர்போர்ட் வந்து கோயம்புத்தூர் வரை பிளைட்ல போயிட்டு வந்தேன். நல்ல வேளை அவங்களுக்கு இன்டர்நேஷனல் டொமெஸ்டிக் வித்தியாசம் எல்லாம் தெரியாது!” என்றாள் வருத்தமாக அஸ்வினி.
“இவனுக்காக இதெல்லாம் தேவையா….?”
“எனக்காகடி! எங்க குழந்தைகாக…. அவனுக்காக இல்லை!”
“உள்ளே இருக்க குழந்தைகாக மட்டும் தான் நான் நீ சொல்ற எல்லாத்துக்கும் தலை ஆட்டிக்கிட்டு இருக்கேன்…. எனக்கு அப்புறம் இரண்டு மாசத்தில் உனக்கும் டெலிவரி ஆய்டும். டாக்டர் ஆன்ட்டி உன் பொறுப்பை எடுத்துகிட்டதால எனக்கு ரொம்ப நிம்மதி! இல்லைனா நான் உன்னை எப்படி பார்த்துக்க முடியும்னு கவலையா இருந்துச்சு.”
தோழியின் அன்பில் நெகிழ்ந்தவள், “நம்மளை மாதிரியே நம்ம பேபிசும் பிரண்ட்ஸ்! அதை மட்டும் நினை, வேற எதையும் நினைக்காதேடி….” என்றவள், ராஜேஷ் உள்ளே செல்ல, அவனில் கவனம் வைத்தாள்.
இவள் பார்ப்பதை உணர்ந்தவன் போல், திரும்ப திரும்ப அந்த சுற்றுப்புறத்தை விழிகளால் துழாவியபடி உள் நோக்கி நடந்தான் ராஜேஷ்.
இந்த இரு வாரங்கள் கல் மனதாக இருந்தது போல் இல்லாமல் இன்று அவன் மனம் அஸ்வினியை தேடியது! அவன் தேடுவதை வெறித்து பார்த்தபடி நகர்ந்தாள் அஸ்வினி. அவளை கொஞ்சமாகவா பேசினான்! பேசியவர்களுக்கு ஆத்திரத்தை கொட்டியவுடன் அனைத்தும் மறந்து விடும்! ஆனால் அந்த வார்த்தையை வாங்கி கொண்டவருக்கு காலத்துக்கும் அழியாமல் நிற்கும் கல்வெட்டு போல் நெஞ்சில் நிற்குமே….!
ஒரு பிரிவின் பின் இருவரின் மனமும் எப்படி மாறி இருக்கும்? காத்திருங்கள்!