25. ஜீவனின் ஜனனம் நீ

4
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 25

 

🎶 ஒரு கல் ஒரு கண்ணாடி 

உடையாமல் மோதிக் கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசிக் கொண்டால் காதல் 🎶

யுவனின் இசை காற்றில் கரைந்து உயிரை உருக்க, வீதியில் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த மினி வேன்.

 

சத்யா ஓட்டுனர் இருக்கையில் இருக்க, அவனருகில் யுகன் அமர்ந்திருந்தான். அதற்குப் பின்னிருக்கையில் தேவன் மற்றும் ரூபன் இருக்க, பின் சீட்டில் மேகலையோடு ஜனனி உட்கார்ந்தாள்.

 

உள்ளே ஏறி அமர்ந்தது முதல் அவளுக்கு வேன் வாசனை அசௌகரியத்தைக் கொடுக்க, அதை வெளியில் சொல்ல முடியாமல் இருந்தாள். பின் சீட்டில் அமர்ந்தது இன்னும் ஒரு‌ மாதிரி இருந்தது.

 

“டேய் பாட்டை மாத்து டா. நல்லாவே இல்ல” என்று தேவன் சொல்ல, “சாருக்கு காதல்னு சொன்னதைக் கேட்டு எகிறுதோ?” என்ற ரூபன் ஜனனியிடம் திரும்பி “உங்களுக்கு காதல்னா பிடிக்குமா அண்ணி?” எனக் கேட்டான்.

 

“காதல் யாருக்குப் பிடிக்காது. அதை உணர்ந்த ஒவ்வொவருவருக்கும் காதல் அழகான உணர்வு. உணராதவங்களுக்கும் கூட. காதலைப் போல இதமான உணர்வும் இல்லை. அதே சமயம் காதலைப் போல உயிர் போற வலியைத் தரக் கூடிய உணர்வும் வேற எதுவும் இல்லை” என்பதற்குள் உணர்ச்சி வசப்பட்டுப் போனாள்.

 

“சூப்பரா சொன்னீங்க அண்ணி” ரூபன் முன்னால் திரும்பிக் கொள்ள, சத்யாவின் பார்வை ஜனனி மீதிருந்து விலகவில்லை.

 

அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகள், ராஜீவை அவளுக்கு நிறைவுறுத்தி இருக்க வேண்டும் என்பதை அப்பட்டமாக எடுத்துரைக்க அவனுக்கு ஏனோ கோபமாக வந்தது.

 

அவன் கைகளில் வேன் வேகமெடுக்க, பாதையில் இருந்த குழியைக் காணாமல் செல்ல வண்டி குலுக்கலோடு நின்றது.

 

“சத்யா வண்டியை நிறுத்து” என மேகலை சொல்ல, “என்னம்மா?” திரும்பிப் பார்த்தவன் ஜனனி வாயைப் பொத்திக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஓரமாக நிறுத்தினான்.

 

இறங்கிச் சென்றவள் வாந்தி எடுக்க, “தண்ணி குடி ஜானு” தண்ணீர் போத்தலை நீட்டினார் மேகலை.

 

அதனால் வாயைக் கழுவிக் கொள்ள, “டாடி! ஜானுவுக்கு என்னாச்சு?” தந்தையிடம் கேட்டான் சத்யா.

 

“சிலருக்கு வேன் எல்லாம் ஒத்துக்காது யுகி. ஜானுக்கும் அப்படினு நினைக்கிறேன்” என்றவனுக்கு அப்போது தான் அவள் ஏன் ரயில் பயணம் பற்றி பேசினாள் என்பது புரிந்தது.

 

“ஆர் யூ ஓகே?” அவளிடம் கேட்க, “ம்ம்” என்று மட்டும் தலையாட்டி வைத்தாள்.

 

மீண்டும் பயணம் ஆரம்பமாக, மூன்றே நிமிடங்களில் ஜனனியின் வீட்டை அடைந்தனர்.

 

வாயிலில் நின்ற மகி அக்காளைக் கண்டதும் “ஜானுக்கா” என்று துள்ளலுடன் ஓடி வர, “மகி” அவளை அணைத்து விடுவித்தவளுக்கு இதயம் உருகியது.

 

“வாங்க வாங்க” ஜெயந்தி அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல, ஜனனியின் பார்வை எதிர் வீட்டைத் தொட்டு மீண்டது.

 

“காலேஜ் ஸ்டார்ட் ஆச்சா மகி?” என்று மேகலை கேட்க, “இல்ல ஆன்ட்டி. இன்னும்‌ ரெண்டு நாள்ல போகனும்” என்றவளுக்கு காலேஜ் செல்வதை நினைத்து மனம் குதூகலித்தது.

 

தன் வாழ்வில் படிப்பு, காலேஜ், கனவு என்பதெல்லாம் இனி இல்லை என்று நினைத்திருந்தாள். ஆனால் அது சாத்தியமானதை அவளால் நம்ப இயலவில்லை. இதற்குக் காரணமான ஜனனியை நன்றியோடு நோக்கினாள்.

 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது, உணவு வேளை வரவே அனைவரும் உட்கார்ந்தனர்.

 

“மாப்பிள்ளை எங்கே ஜானு?” என்று மாரிமுத்து வினவ, “இருங்க, பார்க்கிறேன் பா” என சத்யாவைத் தேடிச் சென்றாள்.

 

கார்டனில் நின்று யாருடனோ கதைத்துக் கொண்டிருக்க, அவன் வரும் வரை அவ்விடத்தில் ஜனனி. அவளைக் கண்டும் தனது போக்கில் பேசியவன் இறுதியில் வைத்து விட்டு வந்து “என்ன?” எனக் கேட்டான்.

 

“சாப்பிட கூப்பிட வந்தேன். எல்லாரும் உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க” என்றவளுக்கு கோபமாக வந்தது.

 

“அதை எதுக்கு இப்படி சொல்லுற?”

 

“ஒரு வீட்டுக்கு வந்தா அவங்க கூட பேசிட்டு இருக்க கத்துக்கங்க. அதை விட்டுட்டு தேவை இல்லாம ஃபோன் எடுத்து அதுல யாரோடயோ கதைக்க வேண்டியது. உங்களுக்கு அங்கே பேச விருப்பம் இல்லேங்கிறதால தானே இப்படி பண்ணுறீங்க?” படபடவென பொரிந்தாள் பாவை.

 

“ஆமா! எனக்கு அங்கே நின்னு பேச விருப்பம் இல்லை அதனால வந்தேன். என்ன உனக்கு? சும்மா அட்வைஸ் பண்ண வராத” அவனுக்கும் கடுப்பானது.

 

“அடுத்தவங்களைப் பற்றி யோசிக்க வேண்டாமா?”

 

“அடுத்தவங்களை பற்றி யோசிச்சு யோசிச்சு வெறுத்துப் போயிட்டேன். இதோ உன்னைக் கல்யாணம் பண்ணுனது கூட எனக்காக இல்ல, மத்தவங்களுக்காக. இப்போ அது பேசனும் இப்படி பேசனும்னு எல்லாம் ரூல்ஸ் போடறியா?” வெறுப்போடு பேச,

 

“என்னைக் கட்டிக்கங்கனு நான் ஒன்னும் சொல்லல. மணமேடையில் உட்கார்ந்துக்கிட்டு என்னை போகச் சொன்ன ஆளு தானே நீங்க?” அவள் கோபமாக சொல்லவும், அவனுக்கு பொறுமை கரை கடந்தது.

 

“அப்படி சொல்லியும் போகாம ஒருத்தனை ஏமாத்திய சுயநலவாதி நீ” சுட்டு விரலால் அவளைச் சுட்ட, “ஓஓ! நீங்க சொன்னதைக் கேட்கலனா நான் சுயநலவாதியா?” சீற்றத்தோடு பிறந்தது அவள் வினா.

 

ஒருத்தன் என்று ராஜீவைச் சொன்னதை ஜனனி சத்யாவைச் சொன்னதாக நினைத்துக் கொண்டாள். அவன் ராஜீவை ஏமாற்றியதை நினைத்துக் கொண்டு சொன்னான். இது தெரியாதவளுக்கு அவன் மீது எல்லையற்ற கோபம் எழுந்தது.

 

“உன் கூட சண்டை போட என்னால முடியாது. உங்களுக்கெல்லாம் சொன்னா கேட்கிற புத்தியும் இல்ல” அவன் சென்று விட, “அப்படி என்ன பண்ணுனேன்னு என் மேல அவ்ளோ கோபம்?” என்று கேட்டுக் கொண்டாள் ஜானு.

 

ஜெயந்தியும் மகியும் உணவு பரிமாறினர். மாரிமுத்து கதிரையில் அமர்ந்து, “சாப்பிடுங்க. ஜெயா! இன்னும் வை” என்று மனைவியை ஏவிக் கொண்டிருந்தார்.

 

மகி ரூபனின் அருகில் வர, “எனக்கும் வைங்க” என்றான் அவன்.

 

தன்னை முறைத்துக் கொண்டே பரிமாறிய மகிஷாவை கடைக்கண்ணால் பார்த்து ரசித்தான் அவன்.

 

“என்ன இப்படி பார்க்குறீங்க? கண்ணை நோண்டிருவேன்” யாருக்கும் கேட்காமல் ரகசியக் குரலில் சொல்ல, “உன் கண்ணு தான் என் கண்ணை காந்தம் போல இழுக்குது” அவனும் மென்குரலில் சொன்னான்.

 

“என்ன இழுக்குது ரூபி?” யுகன் மெல்லக் கேட்க, “நீ என் பக்கமா இழுபடாம சாப்பிடு டா சில்வண்டு” அவனுக்கு ஊட்டி விட்டான் ரூபன்.

 

“எங்களுக்கும் கேட்குது ப்ரோ. கொஞ்சம் அடக்கி வாசிங்க” என தேவன் சொல்ல, “போடா. உங்களுக்கு பொறாமை” முறைத்துப் பார்த்தான் அவன்.

 

சாப்பிட்டு முடிந்ததும், “நீங்களும் சாப்பிடுங்கம்மா” என ஜனனி சொல்ல, “அப்பறம் சாப்பிடுறோம்” என்றார் அவர்.

 

“அதெல்லாம் முடியாது. நீங்க உட்காருங்க. நான் பரிமாற போறேன்” என்றவளின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து ஜெயந்தி, மாரிமுத்து, மகிஷா மூவரும் அமர்ந்து கொள்ள அவர்களுக்கு நெகிழ்வோடு பரிமாறினாள் மகள்.

 

“ஜானுவுக்கு ஊட்டி விடுங்க தாத்தா. டாடி எனக்கும் ஊட்டி விடுவார்” என்று யுகன் சொல்ல, மாரிமுத்துவின் பார்வை மகளில் நிலைத்தது.

 

சிறுவயதில் கூட அவளுக்கு ஊட்டியதாக நினைவில் இல்லை. மிஞ்சிப் போனால் ஓரிரு முறை ஊட்டியிருப்பார். மற்றபடி அவர் அமர்ந்திருக்க ஜெயந்தியே பிள்ளைகளுக்கு அனைத்தும் செய்வார்.

 

தாய் தான் அந்த வேலைகள் செய்ய வேண்டும் என்பது அவரது எண்ணம். சமைப்பது, பிள்ளைகளைக் கவனிப்பது என்று எந்த வேலைகளையும் செய்ததில்லை. வேலைக்குப் போவார். பணம் கொடுப்பார் அவ்வளவே.

 

ஆனால் அந்தப் பணத்தையன்றி அரவணைப்பையே ஒரு மனைவி தன் கணவனிடம் நாடுவாள் என்பதை அறியாதோர் இன்றும் இருக்கவே செய்கின்றனர். காலம் மாறினாலும் மாற்றமுறாத சில வழக்கங்கள் அடியோடு ஒழியும் வரை சமூகத்தில் சமத்துவம் ஓங்கப் போவதில்லை.

 

“சரிப்பா” யுகனின் சொல்லுக்கு மறுப்புக் கூறாமல் ஜனனிக்கு ஊட்ட, வாய் திறந்து வாங்கிக் கொண்டவளுக்குக் கண்கள் கலங்கின.

 

அவளது நண்பிகள் தம் தந்தையின் கையால் சாப்பிடுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறாள். அப்போதெல்லாம் தனக்கு இது என்றும் நடக்காது என்று விரக்தியோடு நினைத்தாலும் மறுபுறம் நடக்காதா என்ற ஏக்கமும் இருக்கும்.

 

நடக்காது என்றிருந்த அவளது ஒரு ஏக்கம் இன்று தீர்ந்தது. அன்போடு தந்தாரோ யுகனுக்காக செய்தாரோ, ஆனால் அவர் கையால் சாப்பிட்ட அந்தத் தருணம் அவ்வளவு அழகாய் இருந்தது.

 

“அப்பா மகி” தங்கையைக் கண்களால் காட்டினாள் ஜனனி.

 

அவரும் அவளுக்கு ஊட்டி விட, மகியின் கண்களிலும் கண்ணீர். ஜனனியைப் பார்த்து சிரித்தாள். ஜெயந்திக்கு ஜனனியைப் பார்க்க பெருமையாக இருந்தது. அவள் அப்படித் தான். தனக்குக் கிடைக்கும் சந்தோஷமெல்லாம் தன் அன்புக்குரியவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென நினைப்பாள்.

 

சாப்பிட்டு முடிய வெளியில் வந்த ஜனனி தன்னிடம் வந்த யுகனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 

“என்னாச்சு ஜானு?” ஒன்றும் புரியாமல் கேட்டான் அவன்.

 

“நீ என் வாழ்க்கையில் கெடச்ச பொக்கிஷம் யுகி. உன்னால கெடச்ச இந்த சந்தோஷத்தை நான் மறக்கவே மாட்டேன்” என்றவளுக்கு தனது ஆசை யுகன் மூலம் நிறைவேறியதில் நெஞ்சம் விம்மித் தணிந்தது.

 

“உனக்கு தாத்தா கையில் சாப்பிட ஆசைன்னு எனக்கு தெரியும் ஜானு. டாடி எனக்கு ஊட்டும் போது நீ ஆசையா பார்த்ததை நான் பார்த்திருக்கேன். அதான் சொன்னேன். ஆர் யூ ஹேப்பி?” என்று அவன் கேட்க,

 

“அய்ம் சோ ஹேப்பி டா. தாங்க் யூ சோ மச்” அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், சத்யா யுகனை நன்றாக வளர்த்திருக்கிறான் என நினைத்துக் கொண்டாள்.

 

மறுபுறம் ஜானுவைத் தேடிய மகியின் அருகில் வந்து “ஓய் காரப்பொடி” என்றழைத்தான் ரூபன்.

 

“என்ன? என்ன வேணும் உங்களுக்கு? நானும் பார்த்துட்டே இருக்கேன். என் பின்னால வர்றீங்க? இதெல்லாம் வேணாம் சொல்லிட்டேன்” வேக மூச்சுகளோடு பேசினாள்.

 

“நீயா ஒன்னை கற்பனை பண்ணிக்காத. அப்பறம் எப்படி நீ வாய் கூசாம பொய் சொல்லுற? நான் பின்னாடி வரல. உன் முன்னால தானே வந்தேன்” இடுப்பில் கை வைத்துக் கூறியவனை ஏறிட்டு,

 

“புத்திசாலித்தனமா பேசுறதா நெனப்போ? எனக்கு அப்படி தான் தெரியுது. இதுவரை யாரும் என் கிட்ட வந்து இப்படி பேசுனதில்ல”

 

“நீ யார் கூடவும் பேசி இருக்க மாட்ட. அதுக்கு நான் என்ன செய்றது? உன்னைப் பார்க்கும் போது பிடிச்சிருக்கு. ஐ மீன்.. உன் கூட பேசனும்னு தோணுது பேசுறேன். இதில் என்ன இருக்குனு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரேஞ்சுக்கு பேசுற?” அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான்.

 

“எனக்கு அதெல்லாம் தெரியாது. என் கூட இப்படி வந்து வந்து பேச வேணாம். தேவை இருக்குனா பேசுங்க. நானும் பேசுறேன். அவ்ளோ தான்” உறுதியாக சொல்லி விட்டாள் மகிஷா.

 

“தேவை இருக்கா இல்லையாங்குறது எனக்கு முக்கியம் இல்லை. எனக்கு தோணுச்சுனா நான் பேசிடுவேன். உன் கூட பேச ஆசையா இருக்கு. நான் நிறைய பொண்ணுங்க கூட பேசிருக்கேன். ஆனால் நீ வேணாம்னு சொல்லுற பார்த்தியா, அது என்னை வேணும் வேணும்னு கட்டியிழுக்குது. வரட்டா மகி பட்டாசே” அவளது கன்னம் தட்டி விட்டுச் செல்ல,

 

“என்ன இவன் இவ்ளோ பேசுறான்?” தலையில் கை வைத்து உட்கார்ந்தவளுக்கு ரூபனைப் பார்க்கும் போது மனதினுள் பரவசம் தோன்றியது உண்மை தான்.

 

தொடரும்……!!

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!