26. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

5
(2)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

👀 விழி 26 (இறுதி அத்தியாயம்)

நான்கு மாதங்கள் கழித்து,

 

இரவு மணி ஒன்பதைத் தாண்டியிருக்கும். பைக்கை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தான் நிதின். அறுவடை காரணமாக வேலைப்பளு அதிகமாகி இருந்ததில் வழமைக்கு மாறாக தாமதமாகி விட்டது.

 

தன்னவளைத் தேடி அலைபாய்ந்த விழிகளை அங்குமிங்கும் சுழற்ற சோஃபாவில் தூங்கி விட்டிருந்தாள் ஆலியா.

 

சோர்ந்து போயிருந்த முகம் அவன் மனதைத் துளைத்தது. அருகினில் அமர்ந்து அவள் தலையை தனது மடியில் சாய்த்துக் கொண்டான்.

 

அவனது முரட்டுக் கரமொன்று மேலெழுந்து மனைவியின் கூந்தலை மென்மையாக தடவிக் கொடுத்தது.‌ கன்னத்தில் வைத்திருந்த கையைத் தூக்கி தன்னவனின் சர்ட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டு துயில் கொள்ளலானாள் காரிகை.

 

சிறிது நேரம் பார்த்தவன் “ஆலி.. ஆலியா” அவள் தோளில் தட்டி எழுப்ப, கண்களை சுருக்கி விரித்து எழுந்தவளோ நிதினைக் கண்டு விலகி அமர்ந்தாள்.

 

“ஆலி.. அம்மா எங்கே போயிட்டாங்க, உன்னை தனியா விட்டுட்டு?” கேள்வியெழுப்பினான் அவன்.

 

“அத்தையோட அண்ணன் பொண்ணுக்கு உடம்புக்கு முடியலயாம் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களாம்னு கால் வந்துச்சு. அங்கே அந்த பொண்ண பார்த்துக்க யாரும் இல்லையாம். உனக்கு கால் பண்ணி நேரத்தோட வீட்டுக்கு வர சொல்ல சொல்லிட்டு போனாங்க” விளக்கம் கூறினாள் ஆலியா.

 

“கால் பண்ண இருந்துச்சே டி. தனியாவா இருப்ப இவ்ளோ நேரமா?”

 

“உன் வைப்னு ஓசில கால் பண்ண தருவாங்களா? அத்தை போன‌ பிறகு பார்த்தா போன்ல பேலன்ஸ் இல்லை. அதான் இருந்துட்டேன்” முறைத்துக் கொண்டு கூறினாள்‌ அவள்.

 

“சாரிமா.‌ கொஞ்சம் வேலை அதிகம்‌ அதனால தான் லேட் ஆகிடுச்சு.‌ இனிமே லேட்டாகாம வர ட்ரை பண்ணுறேன்” அவளிடம் மன்னிப்பு யாசித்தான் கணவன்.

 

“நேற்றும் சொல்லிட்டு இப்படி தான் பண்ணுன.‌‌ உனக்காக காத்திருந்து என்னால முடியல நித்தி” 

 

“சரி சாப்பிட்டியா?”

 

“நான் என்ன பேசுறேன். நீ என்ன கேட்கிற? என் பேச்சை கேட்கவே மாட்டியா?”‌ வம்பு வளர்த்தவளுக்கு அவன் குறித்த நேரத்திற்கு வராத ஏமாற்றம் இவ்வாறு பேசுமாறு ஏவியது.

 

“கேட்டுக்கிட்டு தான் இருக்கேன். நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு” 

 

“பசிக்கல. சாப்பிடல” என்று சொன்னவளுக்கு வயிறு பசியை உணர்த்திக் கொண்டு தான் இருந்தது.

 

“சரி உனக்கு வேணாம்னா விடு. எனக்கு கொலைப்பசியா இருக்கு. உன் பங்கையும் நானே சாப்பிட போறேன்” சமயலறைக்குள் புகுந்து‌ இருந்ததை எல்லாம் தட்டில் கொட்டிக் கொண்டு வந்தான்.

 

“பசிக்கலனு சொல்லிட்டோமே. பசியால வயித்துல விதவிதமா மியூசிக் எல்லாம் கேட்குது.‌ என்ன பண்ணுறது” ஆலியா மனதினுள் புலம்பி விட்டு, “நித்தி” என அவனது தோளை சுரண்டினாள்.

 

“பசிக்குதா?” ஒற்றைப் புருவம் உயர்த்த, அவசரமாக தலையை ஆட்டினாள்.

 

“அப்புறம் என்னடி வெட்டி கோபம். பசிச்சா சாப்பிடனும்னு சொல்லி இருக்கேனா இல்லையா?” அவள் தலையில் கொட்டு வைத்து விட்டு ஊட்டினான்.

 

“தனியா சாப்பிட போரடிக்காதா?” தலையை தடவிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“பாப்பா வேற இருக்குல்ல. சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது? பசியோட இருக்காத சரியா” 

 

தலையசைத்தவளை நோக்கிய நிதினின் விழிகள் மூன்று மாத கருவைச் சுமக்கும் அவளின் வயிற்றின் மீது அன்போடு படிந்தன.

 

சாப்பிட்டு முடித்து இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ஒலித்தது ஆலியாவின் அழைப்பு‌.

“நித்தி”

 

“என்னவாம் என் செல்ல குட்டிக்கு. இப்போ சண்டை போடுறதே இல்லை?” அவள் கழுத்தில் நாடி வைத்துக் கேட்டான்.

 

“சண்டை போட கூடாதாம். அது பேபியை பாதிக்குமாம். நான் சண்டை போட்டு நம்ம பேபியும் சண்டைக் கோழியா வந்தா என்ன பண்ணுறது?”

 

“வருங்காலத்தில் சண்டைக் கோழிக்கு ஏற்ற சேவலை தேடி கண்டு பிடிச்சு ஒப்படைக்கனும். அதை பண்ணு” அவனில் சிரிப்பு துள்ளி விளையாடியது.

 

“போடா காஞ்ச பிஸ்கட்”

 

“நீ தான்டி தீஞ்ச சோறு”

 

“எங்கேனு இருக்க அந்த பெயரை சொல்ல” முறைப்போடு பார்த்தாள்.

 

“எத்தனை பெயர் வந்தாலும் இப்படி கலாய்க்கவோ, கொஞ்சிக்கவோ நாம வைக்கிற ஏதாச்சும் ஒரு பெயர் நமக்கு ஸ்பெஷலா இருக்கும் டி. அப்படி தான் எனக்கு இதுவும்”

 

“அதுவும் சரி தான்” அவன் பேச்சை ஆமோதித்து, “சண்டை போட்டு ரொம்ப நாளாச்சுல” என்றாள் அவள்.

 

“அடியே! நான் வந்த உடனே போட்டது சண்டை இல்லை‌‌யா?”‌ 

 

“அது சப்ப மேட்டர் டா.‌ பெருசா சண்டை போடனும். வா வா”

 

“சண்டை போடுற தெம்பு இல்லை‌ தாயே ஆளை விட்று. ஆனா இப்படி காரணமே இல்லாம சண்டை போடுவாங்களா யாராவது?” பாவமாகப் பார்த்தான் நிதின்.

 

“சரி விடு. நான் கூப்பிட்டா வர மாட்ட தானே?”

 

“இப்போ யாரோ சொன்னாங்க பேபி இருக்கு.‌ சண்டை போட கூடாதுன்னு” 

 

“ஆமால்ல‌ மறந்துட்டேன் பார்” நாக்கைக் கடித்துக் கொள்ள, “கியூட் பேபி” அவள் நெற்றியில் முத்தமிட்டான் நிதின்.

 

“நான் பேபியா?” என்ற கேள்விக்கு, “ஆமா. குட்டி பேபி. என் அழகான சண்டைக்காரி” அவள் மூக்கைக் கிள்ளி விட இதழ் விரியலுடன் அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் மனையாள்.

 

•••••••••••••••••

“பூ வாங்கிக்கம்மா பூ”‌ எனும் பூக்கடைப் பெண்ணின் குரலில் இரண்டு ஜோடி கால்கள் தம் நடையை இடைநிறுத்தம் செய்தன.

 

“பூ கொடுங்கக்கா” பணத்தைக் கொடுத்து அதற்கு ஈடாக கையில் தவழ்ந்த மல்லிகைச் சரத்தைப் பார்த்து தனதருகே நிற்பவளிடம்‌ கண்களால் திரும்புமாறு செய்கை செய்தான் ருத்ரன்.

 

தலையில் பூச்சூடியதும் பின்னால் திரும்பி கணவனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள் அஞ்சனா.

 

இன்று அதிகாலை ரயிலேறி அஞ்சனாவின் ஊரிற்கு வந்திருந்தனர். குறைந்தது மாதத்தில் மூன்று தினங்களாவது இங்கு வந்து விடுவர்.

 

அவளின் வீட்டுத் தோட்டத்தையும் மல்லிகைச் செடிகளையும் பராமரிக்க ஒரு தாத்தாவை வைத்திருந்தான் ருத்ரன். குடும்பத்தை இழந்து இருப்பவர் அஞ்சனாவின் வீட்டிலே தங்கிக் கொண்டார்.

 

அதில் அஞ்சனாவுக்கும் மகிழ்வு தான்.

“வீட்டை சும்மா பூட்டி வைக்கிறதுக்கு பதிலா தாத்தா இருக்கிறதும் நல்லது” என்பாள் அவள்.

 

ருத்ரனும் அஞ்சுவும் வந்து விட்டால் தாத்தாவுக்கு கொண்டாட்டம் தான்‌. தனக்கு தெரிந்ததை எல்லாம் சமைத்து அசத்தி விடுவார். நல்ல நிலமைக்கு வந்ததும் தன்னை உதறித் தள்ளிய பிள்ளைகளை விட, தனக்கு தங்க இடமளித்து சுயநலமின்றி அன்பு காட்டும் ருத்ரனும் அஞ்சனாவும் அவர் மனதில் ஒருபடி மேலாக இருந்தனர். அவர்களது நல்வாழ்வுக்காக எக்கணமும் பிரார்த்திப்பார்.

 

அவரை தடுத்து விட்டு கணவனும் மனைவியும் தோட்டத்தை சுத்தமாக்கி வைப்பர். அந்த மல்லிகைப் பூக்கள் என்றால் அத்தனை உயிர் அவளுக்கு.

 

இன்று ஊருக்கு வந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் நேரே கோயிலுக்கு செல்லுமாறு கூறிய மனைவியை வித்தியாசமாக பார்த்து வைத்தாலும் அவள் சொன்னவாறே காரை நிறுத்தினான் ருத்ரன்.

 

அவளோடு சேர்ந்த கோயிலுக்குள் நுழைந்தவனுக்கு மனம் ஏனோ படபடத்தது. அவளைக் கரம் பிடித்த கோயில் அல்லவா இது? இத்தனைக்கும் அதன் பிறகு இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறார்கள் தான். ஆனால் இன்று ஏனிந்த துள்ளல்?

 

மனதோரம் எழுந்த வினாவை மனைவியிடம் வாய் விட்டு நவின்றான் ருத்ரன்.

 

“அம்மு குட்டி! மனசு ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கு. ஏதோ நடக்க போறது போல”

 

“அப்படி என்ன நடக்க போகுது?” புருவம் சுருக்கித் தான் கேட்கலானாள் அவள்.

 

“முதல்ல இந்த கோயிலுக்கு வந்தப்போ இப்படி இருந்துச்சு. அது உன்னை பார்க்க போற உள்ளுணர்வால ஏற்பட்டுச்சு. இப்போவும் அப்படி இருக்கு. ஒரு வேளை இன்னும் ஒரு பொண்ணை பார்த்து கட்டிக்க போறேனோ? ஒரே குளுகுளுனு இருக்கு அம்மு” நெஞ்சைத் தடவிக் கொண்டான் ஆடவன்.

 

“போய் கட்டிப் புடிச்சி தாலியையும் கட்டி கூட்டிட்டு கிளம்புங்க” விறுவிறுவென நடக்கத் துவங்கினாள் அஞ்சனா.

 

“எங்க போற?”

 

“அதான்‌ உங்களுக்காக குதிரை பூட்டிய தங்கத் தேரில் பொண்ணு வந்துட்டு இருக்கே.‌ நான் எதுக்கு இடைஞ்சலா?” முறுக்கிக் கொண்டு முன்னேறியவளை அவனும் பின் தொடர்ந்தான்.

 

“தங்கம் இல்லை வைரம் வைடூரியத்தால செஞ்ச தேரில் எனக்காக வானலோகத்தில் இருந்து தேவதையே வந்திருக்கா. அவ இருக்கும் போது தங்கம் என்ன வேற எந்த தேர்ல எத்தனை பொண்ணு வந்தாலும் திரும்பி ஒத்த பார்வை பார்க்க மாட்டேன்” அவளை இடைமறித்து தடுத்தான்.

 

“அப்புறம் யாருக்கோ மனசு குளுகுளு ஜிலுஜிலுனு இருக்குனு சொன்னாங்க. அதுக்கு என்ன அர்த்தமாம்?” அனல் பறந்தது பாவையின் பூவிழிகளில்.

 

“என் பொண்டாட்டியை கொஞ்சம் சூடாக்கி கதகதன்னு கொதிக்க வெச்சு பார்க்கலாம்னு ஒரு குறைந்தபட்ச ஆசை இருந்துச்சுனு அர்த்தமாம்” 

 

“அதுக்காக கோயில்ல போய் இப்படி பேசலாமா?” அவள் குரலில் ஏதோ மாற்றம்.

 

“சாரி அம்மு‌! இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்” அவள் முகத்தைப் பாவமாக ஏறிட்டான்.

 

மௌனமாக நடந்தவள் ஓரிடத்தில் தன் நடையை நிறுத்தி “அதை விடுங்க. இந்த இடம் ஞாபகம் இருக்கா?” எனக் கேட்க அவன் விழிகள் சட்டென விகசித்தன.

 

தன் உயிரானவளைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்த இடம்!

சர்வமும் மறந்து அவளைத் தனக்குள் அடக்கி காற்றும் இடைபுகா வண்ணம் அணைத்துக் கொண்ட இடம்!

அவளைக் கண்டு கொண்ட ஆனந்தத்தை காதலுடன் ஒருசேர்த்து துளி கண்ணீரால் அவளைப் பூஜித்த இடம்!

ஆயுளில் மறக்கவும் முடியுமோ இதனை?

 

“ம்ம்ம் தேடி அலைந்த பொக்கிஷத்தை அடைஞ்சு என் காதலின் வலிமையை நானே உணர்ந்த இடம் இது” என்றான் அவன்.

 

“அந்த பொக்கிஷம் இதே இடத்தில் உங்களுக்கு இரட்டிப்பு பொக்கிஷமா மாறி நிக்கிறது தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க?” அவன் போக்கிலே சென்று பேசியவளின் பேச்சு புதிராக இருந்தது அவனுக்கு.

 

“புரியல அம்மு. என்ன சொல்லுற?”

 

“கொஞ்சம்‌ வாங்க” என அவனது கையைப் பிடித்து ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

 

அது அவன் அஞ்சனாவைத் தன் மனைவியாக்கிக் கொண்ட இடம். அன்றைய நாளின் நினைவு மனதில் பசுமையாக மணந்தது.

 

“இந்த இடத்தில் எனக்கு தாலி கட்டி என் ஹஸ்பண்ட் ஆனீங்க. இந்த ஸ்பெஷலான இடத்தில் உங்களுக்கு வர போற இன்னொரு பதவியை சொல்ல போறேன்” சற்று நிதானித்து நிமிர்ந்து “நீங்க அப்பாவாக போறீங்க அபய்” என்று கூறினாள்‌.

 

சடாரென விழியுயர்த்திய வேங்கையின் உள்ளத்தில் உணர்ச்சிகள் எரிமலைப் பிளம்பாக வெடித்தன. 

 

“அம்…அம்மு நா‌‌..ன்… அப்பா.. அப்பாவாக போறேன்னா‌, நமக்கு பே..பேபி?” வார்த்தைகளை தொண்டைக் குழிக்குள் உருண்ட உணர்வுப்பந்து சிறை செய்து கொண்டது.

 

“எஸ் குட்டி பேபி இருக்கு உன் அம்மு குட்டி கிட்ட” தன் கையால் வயிற்றைத் தொட்டுக் காட்டினாள். 

 

தாய்மை உணர்வில் உள்ளம் சிலிர்த்தது. இதனை டாக்டரிடம் கேட்கும் போது அவள் நிலையும் கணவனின் தற்போதைய நிலையை அல்லவா ஒத்திருந்தது?

 

ஈரடியில் அவளை நெருங்கி கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான்‌. அந்தப் பற்றுதலின்‌ இறுக்கமே அவனின் ஆழ்மன உணர்ச்சி வேகத்தை மெல்லியவளுக்கு அப்பட்டமாக உணர்த்தி நின்றது.

 

கோயிலுக்கு வரும் போது மனம் பட்டாம் பூச்சியாக சிறகடித்து இதனாலா?

தந்தையாக கிரீடம் சூடப் போகிறேன் எனும் சந்தோஷத்தை உள்ளம் உணர்த்தியதாலா?

மனதின் இனம்புரியா உணர்வுக்கு காரணம் இது தானா?

 

நினைக்கையில் இறக்கை கட்டிப் பறந்தது ஆணவனுக்கு. ஒரு ஆணுக்கு தந்தையாகப் போகும் செய்தி அத்தனை உன்னதமானது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று நாவல்களில் வாசித்து அறிந்திருக்கிறாள்.

 

அதனை நிஜத்தில் தன்னவன் வாயிலாக கண்டு கொண்டாள் அஞ்சு. ஒருபடி மேலாக இன்பம் கொண்டவனின் கண்களும் கலங்கி இருந்தனவோ?!

 

“இந்த கோயிலே எனக்கு ஸ்பெஷலாகிட்டு டி‌. எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? இது பாரு கால் தரையில் நிற்கல” அவன் கால்கள் தரையில் நிலையாகப் பதியாமல் கதகளி ஆடியது.

 

அத்தனை ஆனந்தத்திலும் களுக்கென நகைத்தாள் அஞ்சனா.

 

“என்ன?” சிரிப்பின் காரணம் அறியாது வினவினான்.

 

“அஞ்சான் படம் நினைவுக்கு வந்துச்சு. அதுல ஒரு சீன்ல சூர்யாவும் அப்புறம் சமந்தாவும் கால தரையில வெச்சுக்க முடியாம வைப்ரேட் மோட்ல இருப்பாங்க இல்லையா?” பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னாள்.

 

“எனக்கு தெறி மூவி ஞாபகம் வந்துச்சு. அதில் மித்ராவை விஜய் எப்படி பார்த்துப்பார். அந்த கற்பனையை விட நிஜத்தில் என் அம்மு தங்கத்தை நல்லா பார்த்துக்கனும். உள்ளங்கையில் வெச்சு தாங்குறதா சொல்லுவாங்களே. உன் விஷயத்தில் அதுவும் இல்லை.‌ இதயத்தில் இருக்கிற உன்னை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்க போறேன்” அவள் முகத்தை மென்மையாக வருடி விட்டான் ருத்ரன் அபய்.

 

சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவன் அதை விடப் பன்மடங்கு செய்வான் என்பதை அறியாதவளா அவள்? தலை சரித்துச் சிரித்தாள்.

 

‌ஏதோ நினைவு வரப் பெற்றவனாக பேன்ட் பாக்கெட்டினுள் கையை விட்டு எதையோ எடுத்தான். பைக்கற்றினுள் வளையல்கள் இருந்தன.

 

இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் ஜொலித்த வளையல்களை அவளின் தளிர்க் கரத்தில் அணிவித்தான்.

 

“அழகா இருக்கு மாமா” கைகளை ஆட்டி புன்னகையோடு குதூகலிக்க, “பிடிச்சிருந்தா சரி” அவனிலும் புன்னகை வாடகைக்கு அமர்ந்தது.

 

“என்ன திடீர்னு கிப்ட்?”

 

“நேற்று கடைக்கு போனப்போ கண்டு வாங்கினேன். தர முடியாம போச்சு. இன்னிக்கு கொடுக்கலாம்னு பாக்கெட்ல போட்டேன் மறந்துருச்சு. அதுவும் நல்லது தான்ல? இப்போ உனக்கு ஸ்வீட் தர்ரதுக்கு பதிலா இதை தந்துட்டேன்” என்றவன் அவளோடு சேர்ந்து சாமி கும்பிட்டான்.

 

என்றும் போல் தன்னவளுக்காக நெடுநேரம் வேண்டியவனுக்கு குழந்தையின் நினைவு வரவே முகம் மலர்ந்தது. 

 

வீடு சென்றதும் தாத்தா சமையலறையில் எதையோ செய்து கொண்டிருக்கக் கண்டனர்.

 

“தாத்தா…!!” ருத்ரனின் கூவலில், “வந்துட்டியா பேராண்டி? வா அஞ்சுமா. வாடா. இந்தா ஆஆ காட்டு” என்று லட்டை ஊட்டி விட்டார்.

 

“வாவ் நீங்க செஞ்சதா? சூப்பர் தாத்தா. என்ன ஸ்பெஷல்?” அவர் கையில் இருந்ததை வாங்கி சுவைத்துக் கொண்டே கேட்டாள்.

 

“என் அஞ்சு பாப்பாவுக்கு குட்டி பாப்பா வர போகுது‌. அது ஸ்பெஷல் இல்லையா?”

 

“ஸ்பெஷல் தான் தாத்ஸ்!” தலையை உருட்டி ஆமாம் சாமி போட்ட ருத்ரனைப் பார்த்ததும் புரிந்து விட்டது தாத்தாவுக்கு அழைத்து விடயத்தைக் கூறி ஸ்வீட் செய்ய சொன்னது இவன் தான்‌ என்று.

 

“பதினாறும் பெத்து சந்தோஷமா வாழனும் ரெண்டு பேரும்” மனதார வாழ்த்தி விட்டு வெளியில் சென்று வருவதாகக் கூறி கிளம்பினார் தாத்தா.

 

அவர் செல்லும் வரை எட்டி பார்த்துக் கொண்டிருந்த ருத்ரன் கண்களுக்கு மறைந்ததும் தன்னவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

“அபய்!” திடீர் அணைப்பில் உறைந்து பார்க்க, “ம்ம் கொஞ்சம் இப்படியே இரு. கோயில்ல வெச்சு சொன்னா என் அம்மு குட்டியை எப்படி அணைச்சுக்குறதாம்? வீட்டுக்கு வந்தாச்சுல. அதான் கப்புனு சிக்க வெச்சுட்டேன்” அவளை மேலும் இறுக்கிக் கொண்டவனது இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டிருக்கக் கூடும்.

 

ஆனந்தக் கூக்குரலிட்டு தாளம் தப்பித் தான் துடித்தது அவன் இதயம்.

 

ஏதோ பேச வந்தவளை “ஷ்ஷ் பாப்பா கூட பேச போறேன்” என்று வாயில் விரல் வைத்துத் தடுத்தான். 

 

மெல்ல குனிந்து அவள் வயிற்றில் வைத்த கையில் மின்சாரம் பாய்ந்ததாய் உணர்வு. நுண்ணிய நடுக்கமும் உருவெடுத்து அணுவெல்லாம் இழையோடியது.

 

“பாப்பா! உன் அப்பாவுக்கு இந்த உலகத்தில் ரொம்ப பிடிச்சது அம்முவை தான். அதாவது உன் அம்மா தான் என்னோட செல்ல அம்மு குட்டி. இப்போ நீயும் எங்க குட்டி உலகத்திற்குள் வந்துட்ட. இனி எங்க ரெண்டு பேரோட உசுரும் நீ தான்.‌ இப்போவும் எப்போவும் என்னை மாதிரி, என்னோட சேர்ந்து அம்முவை நீயும் சந்தோஷமா பார்த்துக்கனும் சரியா?” 

 

தற்போது உருக்கொண்ட குழந்தைக்கும் அவனைப் பற்றி அல்லாமல் தன்னைப் பற்றி கூறும் கணவனின் தீராக் காதலில் உள்ளம் உருகி நின்றது பாவை மனம்.

 

“அபய்” என்ற அழைப்பில்‌ எழுந்து நின்று தன்னைப் பார்த்தவனின் நெற்றியை அன்பு வழியும் முத்தத்தால் ஸ்பரிஷித்தாள் அஞ்சன விழியாள்.

 

தொடரும்……!

எபிலாக் கூடிய சீக்கிரம் வரும். வெயிட் கரோ!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!