Home Novelsகரம் விரித்தாய் என் வரமே26. கரம் விரித்தாய் என் வரமே

26. கரம் விரித்தாய் என் வரமே

by Ambika ram
5
(1)

கரம் விரித்தாய் என் வரமே – 26

நான்கு ஆண்டுகள் கழித்து,

“ஹலோ என்ன அண்ணா இப்படி பண்றே….? என் கல்யாணத்துக்கு தான் வரமுடியலை சொல்லிட்டே…. நான் பர்ஸ்ட் அனிவெர்சரியும் கொண்டாடிட்டேன்…. அம்மா மேல் உள்ள கோபத்தில் எங்களையும் கஷ்டப்படுத்துறே நீ…. உனக்கு வேணா எங்களை பார்க்க ஆசையில்லாம இருக்கலாம்…. ஆனா எங்களுக்கு இருக்குண்ணா….” கடைசியில் முடிக்கும் போது சுகுணாவின் குரல் தழுதழுத்தது.

“வரேன் சுகுணா, சீக்கிரம் வரேன்…. டிக்கெட் பார்க்கிறேன்….” என்றான் ஒருவழியாக. ஆனால் அந்த குரலில் எந்த உணர்வும் இல்லை. கடமைக்காக பேசுகிறான் என்று தெளிவாக தெரிந்தது.

இன்றில்லை அவன் அமெரிக்கா சென்றதில் இருந்து மீனாவுடன் பேசுவது இல்லை. செந்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்வான். சுகுணா மட்டும் விதிவிலக்கு. அவளிடம் ஓரளவிற்கு பேச்சு வரும்.

அமெரிக்கா போய் இரண்டு வருடத்திலேயே இவர்கள் இடத்தில் புது வீடு கட்டி விட்டார்கள். ஓரளவிற்கு பணமும் சேர்த்து விட்டான். இவர்கள் இடத்தின் பக்கத்திலேயே வாடகைக்கு இருந்து கொண்டு புது வீடு கட்டினார்கள். பின் அடுத்த வருடத்தில் சுகுணா படிப்பை முடித்து இருக்க, அவளுக்கு திருமணம் பேசினார்கள். அப்போது தான் மீனா மகன் தங்களை விட்டு முழுவதுமாக விலகி விட்டான் என்று புரிந்து கொண்டார். யார் சொல்லியும் தங்கையின் திருமணத்திற்கு வரமுடியாது என்று சொல்லி விட்டான் ராஜேஷ்.

அதுவரையிலும் அவன் பிடிவாதம் பிடித்தால் நானும் பிடிப்பேன் என்றிருந்த மீனா அவனுடன் பேசினார்.

“தங்கச்சி கல்யாணத்துக்கு கூட வரமாட்டியா டா….?”

“தங்கச்சி கல்யாணம் தான் என் பொறுப்புனு சொன்னீங்க…. என் பொறுப்பை நிறைவேத்திட்டேன்…. நான் வர்றதுக்கு செல்வு பண்ற பணத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்….உபயோகமாக இருக்கும்!” என்றான் பட்டென்று.

“நான் என் மகன் பணம் அனுப்பினா மட்டும் போதும்னு நினைக்கலை, மகனும் வந்து எங்களோட சபை நிறைய நிற்கணும்னு தான் நினைக்கிறேன்….”

“இத்தனை வருஷம் இப்படி எல்லாம் பேசினது இல்லையே நீங்க…. என்னை வீட்டிற்கு முக்கியமானவனாவும் உணர வைச்சதில்லை. சம்பாதிக்கணும் பொறுப்பை நிறைவேத்தணும் தான் சொல்வீங்க…. செஞ்சுட்டேன்…. இனி என்னை என் வழியில் விடுங்க…. உங்க பேர்ல உங்க வாழ்நாளில் நீங்க கஷ்டப்படாத அளவு பணம் போட்ருவேன்…. அதை பத்தி நீங்க கவலைப்படவே வேண்டாம்” என்றான் கொஞ்சமும் இளக்கம் காட்டாமல்.

“ஏண்டா இப்படி எல்லாம் பேசுறே….” என்று மீனா வருத்தமாக பேச,

“வேற ஒன்னுமில்லையே அவ்ளோதானே….? வைச்சுடவா….?” என்று உடனே வைத்து விட்டான் ராஜேஷ். அவன் வைத்ததும் மிகவும் புலம்பி அழுத மீனாவிடம், அவரின் தவறை எல்லாம் செந்திலும் சுகுணாவும் சொல்ல, அவர் அதை ஏற்று கொள்ளவே இல்லை. நல்லத்துக்கு தான் நான் சொன்னேன் என்றே வாதிட்டார்.

“சரி நீ எப்படிவேணா வைச்சுக்க, ஆனா உன் மகன் இனி உனக்கில்லை, அதை தெரிஞ்சுக்க…. முக்கியமா நீயே தான் உன் பிள்ளையை ஒதுங்கி போக வைச்சே…. அதையும் நியாபகம் வைச்சுக்க” என்றார்.

டிக்கெட் பார்க்கிறேன் என்று தங்கையிடம் சொன்னவன் ஏற்கனவே டிக்கெட் போட்டு இருந்தான். போன முறை பேசும் போது ஷிவாவும் மதனும் மிகவும் திட்டி இருந்தார்கள். வரச்சொல்லி வற்புறுத்தினார்கள். அதனால் அப்போதே டிக்கெட் போட்டு இருந்தான். தெய்வா மட்டும் ராஜேஷிடம் பேச மாட்டாள். அஸ்வினியுடன் ஆண்கள் இருவருக்கும் தொடர்பு இல்லை. தெய்வாவிற்கு உண்டு, அது மூன்று ஆண்களுக்கும் தெரியும். ஆனால் ஷிவாவிற்கே தெய்வா சொல்லவில்லை. அஸ்வினிக்கு விருப்பம் இல்லை என்று மட்டும் சொல்லி இருந்தாள். ஷிவாவும், மதனும் அஸ்வினியும் ராஜேஷும் பிரிந்து விட்டதால் அஸ்வினி அவர்களுடனான தொடர்பையும் சேர்த்து முறித்து கொண்டாள் என்று தான் இன்று வரை நினைத்து இருக்கிறார்கள். சொல்ல போனால் மதன் அஸ்வினி மேல் கோபமாக இருக்கிறான். அவன் என்ன செய்தான்? அவனிடம் ஏன் பேசுவது இல்லை என்று. தெய்வா ராஜேஷிடம் பேச மாட்டேன் என்று சொன்னதை முதலில் ஷிவா ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அவள் பிடிவாதம் பிடிக்கவே விட்டு விட்டான். இப்போதும் அடிக்கடி சொல்வான், “அவங்க பிரிஞ்சது அவங்க முடிவு, அதை நாம ஒன்னும் சொல்லக் கூடாது. ராஜேஷும் சந்தோஷமா எல்லாம் இல்லை….” என்பான்.

ராஜேஷ் அமெரிக்கா சென்று ஒரு மாதத்திலேயே வேலையை விட்டு நின்று விட்டாள் அஸ்வினி. டாக்டர் ஆன்ட்டியின் தோழியிடம் அவரும் ஒரு மகப்பேறு மருத்துவர் தான், திருமதி கமலா, அவரிடம் அனுப்பி வைத்தார் ஆன்ட்டி. அங்கே கமலா அவர்களின் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியில் சேர்ந்து வேலை பார்த்தாள். கமலா டாக்டரின் கணவர் காலமாகி இருந்தார். அவரின் ஒரே மகளும் அமெரிக்காவில் டாக்டராக இருந்தார். அதனால் அஸ்வினி, கமலா, அவரின் அசிஸ்டெண்ட் பாமா அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர். பாமாவிற்கு ஐம்பது வயது. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அடைக்கலமாக வந்தவள் இப்போது ஆஸ்பத்திரியிலும் பள்ளியிலும் முக்கியமான நபர். அஸ்வினியின் டெலிவரி அதற்கு பின்னான கவனிப்பு அனைத்தும் பாமா தான் பக்குவமாக செய்தார். சொந்த மகளை போல் தான் பார்த்து கொண்டார். டாக்டரும் அதற்கு எந்த தடையும் சொல்ல மாட்டார். முதலில் பிடிக்காமல் தோழிக்காக தான் பார்த்துக் கொள்ள சம்மதித்தார். ஆனால் குழந்தை ஒன்று அந்த வீட்டில் இருக்க தொடங்கிய பின் அவரும் அவர்களுடன் மிகவும் ஒன்றி விட்டார். டாக்டரின் பேத்தி அமெரிக்காவில் இருந்து அஸ்வினியின் பிள்ளையுடன் வீடியோ கால் செய்து விளையாடும் அளவு இப்போது அவர்கள் அனைவரும் நெருக்கம்!

சேலத்தில் இருக்கும் தன் சொந்தங்கள் யாரிடமும் தொடர்பு இல்லை அஸ்வினிக்கு. தஞ்சாவூர் வந்த கொஞ்ச நாளிலேயே தான் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டேன் என்று சொல்லி விட்டாள். அதன் பின் தொடர்பு முற்றிலும் கட்! இப்படி தொலைபேசி வாயிலாக திமிராக பேசிய ஒன்று விட்ட சொந்தக்கார பெண்ணை யார் தேடி வருவார்கள்?

*************

சென்னை வந்திறங்கிய ராஜேஷிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் போகும் போது இருந்த மனநிலை அங்கு சென்ற கொஞ்ச நாளிலேயே மாறி விட்டது. அஸ்வினியின் நம்பரை டையல் செய்து செய்து ஓய்ந்து போனான். அதன் பின் தன் தயக்கத்தை விட்டு மதனிடம் அவள் நம்பர் மாத்தி விட்டாளா என்று கேட்க, அவள் வேலையை விட்டு சென்றது தெரிய வந்தது. மதன் அவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்று கேட்க, பார்வதி என்று மட்டும் சொன்னான் ராஜேஷ். அதற்கு மேல் அவனும் தோண்டவில்லை.

அன்றிலிருந்து இன்று வரை அவளுடன் மிகவும் கோபமாக பேசி சண்டை போட்ட குற்றவுணர்வு, அமெரிக்கா வந்த பின் அவளை அழைத்து பேசாமல் விட்ட பிழை எல்லாம் சேர்ந்து அவனை கொல்லும். அவள் எங்கு சென்றால், என்ன ஆனாள் என்ற கவலை இல்லை அவனுக்கு. ஏனென்றால் தெய்வாவும் அஸ்வினியும் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்று அவனுக்கு ஷிவா சொல்லி இருந்தான். ஆனால் அவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தான் தவித்தான் அவன். திருமணம் செய்து கொண்டு இருப்பாளா….? இல்லை என்னை போலவே தனியே இருக்கிறாளா….? இதை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது? சந்திக்க முடியுமா அவளை….? மீண்டும் சந்தித்தால் என்ன நிலைமை….? இந்த கேள்விகளுக்கு விடை இல்லாமல் தான் இத்தனை நாள் அவனின் இந்திய பயணத்தை தள்ளி போட்டான்.

**************

சென்னை வந்திறங்கியவனை வரவேற்க ஷிவாவும் மதனும் வந்திருந்தார்கள்.

“ஹேய் மச்சி, ஆளே மாறி போயிட்டே, சூப்பரா இருக்கே டா….” என்றான் மதன்.

இங்கு இருக்கும் வரை பெரிதாக ஜிம் சென்றது இல்லை ராஜேஷ். அங்கு சென்ற பின் வேலையை தவிர அவனுக்கு பொழுது போக்கும் எண்ணமே இல்லை என்பதால் பிரைவேட்டாக ப்ரொஜெக்ட் வேலைகள் செய்தான். அதை தவிர ஓடுவது, நீந்துவது, ஜிம் போவது மட்டுமே என்று அவன் பொழுது போகும். அங்கே யாருடனும் அவன் பெரிதாக நட்பு பாராட்டிக் கொள்ளவில்லை.

சின்ன சிரிப்புடன் நண்பர்களை அணைத்து கொண்டவன், “கல்யாண வாழ்க்கை எப்படி போகுது மச்சி?” என்றான் மதனிடம். அவனை வற்புறுத்தி ஒரு வருடம் முன்பு வீட்டில் திருமணம் செய்து கொள்ள வைத்து விட்டார்கள். உண்மையில் அவன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட காரணம் அவனுக்கு பார்த்த பெண்ணிற்கும் காதல் தோல்வி,அந்த பெண் இவனை அழைத்து திருமணத்தை நிறுத்துங்கள் என்றது. அதன் பின் அவர்கள் பேசிஒரு புரிதலோடு திருமணம் செய்து கொண்டார்கள். நன்றாக பழகி, இப்போது ஆறு மாதம் முன்பு தான் வாழ்க்கையை தொடங்கினார்கள்.

“நல்லா போகுது டா…. கடவுளா பார்த்து தான் எனக்கு அவளை அனுப்பி வைச்சு இருக்கார்….” என்றான் மனதில் இருந்து.

என்னோட தேவதையை நானே வேண்டாம் சொல்லி அனுப்பிட்டேனே…. மனதிற்குள் குமைந்தான் ராஜேஷ்.

“அவர்கள் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்ப, என்னை ஏதாவது ஹோட்டல்ல இறக்கி விடு ஷிவா….” என்றான் ராஜேஷ்.

“என்னடா உளர்றே….? உள்ளூரில் வீட்டை வைச்சுக்கிட்டு இதென்ன பேச்சு….?”

“எனக்கு அந்த வீட்டுக்கு போக வேண்டாம் டா…. என்னை பெத்தவங்களுக்கு நான் என் கடமையை முடிச்சிட்டேன்…. அவ்ளோ தான். அதை என்னால என் வீடுனு நினைக்க முடியலை டா….” என்றான் வருத்தமாக.

மதன் சின்ன அபார்ட்மெண்ட்டில் பெற்றோருடன் இருக்கிறான். அதனால் அவன் அழைத்து செல்ல முடியாது. ஷிவாவிற்கு தெய்வாவை நினைத்து யோசனையாக இருந்தது, ஆனாலும் நண்பனை அப்படி எல்லாம் விட முடியாது என்பதால், “சரி வா நம்ம வீட்டுக்கு போலாம்….” என்றான்.

“இல்லைடா ப்ளீஸ், இன்னைக்கு மட்டும் விடு….நாளைக்கு நான் எப்படியும் குட்டீஸ் பார்க்க வரலாம் தான் இருக்கேன்…. அப்புறம் ஸ்டே பண்ரது பத்தி முடிவு எடுக்கலாம்.”

ஷிவா, தெய்வானைக்கு இரண்டாவது குழந்தை பையன் சரண் பிறந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. பெரியவள் பெண்ணிற்கு நாலு வயதாக போகிறது. பெயர் ஷிவானி.

மறுநாள் சொன்னது போலவே ஷிவாவின் வீட்டிற்கு வந்தான் ராஜேஷ். தெய்வா பேச மறுப்பாள் என்று அவன் எதிர்பார்க்க அவள் கொஞ்சமாக முகத்தை தூக்கி கொண்டு என்றாலும் வரவேற்றாள். என்ன தான் ராஜேஷ் மிகவும் அழகாக மாறி இருந்தாலும் அவன் முகத்தில் ஜீவனே இல்லை என்பது பார்த்தவுடன் அவளுக்கு புரிந்தது.

குழந்தைகளுடன் ஆசையாக விளையாடியவனை பாவமாக பார்த்தாள் தெய்வா. மற்ற விஷயங்களில் அவன் மேல் கோபம் இருந்தாலும் அஸ்வினி இத்தனை வருடங்கள் குழந்தையை பற்றி சொல்லாமல் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை, அஸ்வினியிடம் எடுத்து சொல்லியும் அவள் கேட்கவில்லை.

தன்னையே பார்க்கிறாள் தெய்வா என்று உணர்ந்த ராஜேஷ், மனதினில் பல வருடங்களாக இருக்கும் தவிப்பால் தெய்வா திட்டினாலும் பரவாயில்லை என்று கேட்டு விட்டான்.

“எப்படி இருக்கா அஸ்வினி….?”

“அவளுக்கு என்ன, ஆதிஷ் கூட செம ஹாப்பியா இருக்கா….!” இனிமேலும் இவர்களை சும்மா விடக் கூடாது என்று நினைத்தவள் வேண்டுமென்றே சொன்னாள்.

என்னிடம் கூட இத்தனை நாள் சொல்லவில்லையே என்று அவளை முறைத்தான் ஷிவா!

ஆதிஷ் யார் என்று கேட்காமல், “ஓ!” என்றதோடு நிறுத்தி கொண்டான் ராஜேஷ்! திருமணம் செய்து கொண்டாளா என்ற எண்ணம் அவனை புரட்டிஅல்லவா போட்டு விட்டு இருந்தது. அவனால் அதற்கு மேல் எந்த விஷயமும் சிந்திக்கவே முடியவில்லையே…. அது அவர்களின் குழந்தை என்று எப்படி தெரியும் அவனுக்கு!

அட லூசு பயலே…. எப்போ பார்த்தாலும் நீயா ஒரு முடிவுக்கு வருவியா…. அவஸ்தை படு நல்லா…. கிறுக்கன்….! மைண்ட் வாய்ஸில் அவனை திட்டினாள் தெய்வா!

அன்று மாலை வரை இருந்தவன், “நாளைக்கு அங்கே வீட்டுக்கு போய் எல்லாரையும் பார்க்கலாம்னு இருக்கேன்…. அப்புறம் நான் இங்கே வரேன் ஷிவா….” என்று ஷிவாவிடம் சொல்லியவன், தெய்வாவின் புறம் திரும்பி,

“நான் இங்கே தங்கிக்கலாமா தெய்வா ப்ளீஸ்….? எனக்கு இந்த குட்டீஸ் கூட இருக்க பெர்மிஷன் கொடு மா….” என்றான் கெஞ்சலாக.

“தாராளமா….” என்றவளின் மனம் வேக வேகமாக சில கணக்குகளை போட்டது.

அன்று இரவு

“மேடம், உங்க ஆள் வந்தாச்சு! நீயும் ஆதிஷும் எப்போ வரீங்க….? வந்து மரியாதையா அவன் கூட சேர வழி பாரு….” என்றாள் தெய்வா அஸ்வினியிடம்.

“ம்ம்ம்….” என்றவள் மேலே எதுவும் பேசாமல் இருக்க,

“அவன் உன்கூட பேட்ச் அப் பண்ணிக்க ரெடியா இருக்கிறது மாதிரி தான் தெரியுது…. இன்னைக்கு நான் ஆதிஷோட நீ ஹாப்பி யா இருக்கேனு சொன்னவுடன் அவன் மூஞ்சியை பார்க்கணுமே…. பாவம்…. ஆதிஷை உன் பாய் பிரண்ட் இல்லை புருஷன்னு நினைச்சுக்கிட்டான் டி!” என்றாள் கிண்டலாக.

அவசரமா உன்னை யாருடி இதெல்லாம் பேச சொன்னாங்க….

ஆமா இப்போவே பிள்ளைக்கு மூணு வயசாச்சு…. இன்னும் பொறுமையா இரு…. அறிவு கெட்டவளே ஒழுங்கா சென்னைக்கு வா….

“வரேன்…. முதல்ல நான் மட்டும் வரேன்…. ஆதீஷை அழைச்சுட்டு வரமாட்டேன்…. அவனுக்கு ராஜேஷை நல்லா தெரியும், அப்பானு சொல்லிடுவான் டக்குனு…. அதை அப்புறம் பார்ப்போம்….” என்றாள் அஸ்வினி.

இவர்கள் இப்படி பிளான் போட்டு கொண்டு இருக்க, அஸ்வினி தஞ்சாவூரில் இருக்கிறாள் என்று எதிர்பாரா இடத்தில் இருந்து அவனுக்கு தெரிய வர, மறுநாள் இரவு அவன் தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் இருந்தான்!

அப்பாவும் பிள்ளையும் சந்தித்து கொள்வார்களா….?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!