வாடி ராசாத்தி – 26
“என்னை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே…? நீயெல்லாம் ஒரு அப்பாவா? முழுசா விஷயத்தை சொல்லி இருந்தா நான் அதுக்கு ஏத்த மாதிரி நான் எதாவது ஐடியா பண்ணி இருப்பேன்ல, முழுசா விஷயத்தையும் சொல்லாம, தப்பு தப்பா யோசனையும் சொல்லி என்னை இப்படி எல்லார் முன்னாடியும் கேவலப்படுத்திட்டியே….” அன்று நாள் முழுவதும் நாராயணனை திட்டி தீர்த்து கொண்டே இருந்தான் கிஷோர். இவன் இதையே பேசி பேசி பைத்தியம் ஆகி விடுவானோ என்று பயந்து போனார் அவர்.
இரண்டு நாட்கள் செல்ல, கொஞ்சம் தெளிந்தான் கிஷோர். ஆனால், அதற்கு பின் வீட்டிலே தங்காமல், வெளியில் அவர்களுக்கு இருந்த வேறு வீட்டில் தங்கி கொண்டான். பெற்றவர்களிடம் சரியாக பேசுவது கூட இல்லை. கடைக்கும் சரியாக செல்வதில்லை. ஒரு நாள் கடைக்கு வந்த மகனிடம்,
“டேய், ஏண்டா இப்படி ஆயிட்டே ….? அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னா கூட சொல்லுடா, நான் போய் பேசி முடிக்கிறேன்!” என்றார்.
“வேண்டிய அளவு சொதப்பிட்டு, இப்போ வந்து பேசுறியா? ஒன்னும் தேவையில்லை…. இனி அவங்க வந்து என் கையில கால்ல விழுந்தாலும் நான் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…. ஆனா….” அதற்கு மேல் பேசாமல் நிறுத்தி கொண்டான் கிஷோர்.
“டேய்…. டேய்…. பழிவாங்குகிறேன்னு போய் உன் வாழ்க்கையை தொலைச்சுடதே டா…. ரொம்ப கோபமா இருந்தாலும் சரி, ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் சரி அப்போ எடுக்கிற முடிவு எதுவும் சரியா வராது டா…. கொஞ்சம் நிதானமா யோசி…. நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம் டா” கெஞ்சினார் நாராயணன்.
அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவன் அவரின் பேச்சை கொஞ்சமும் காதில் வாங்கி கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
@@@@@@@@@@@@
கேபியின் உள்ளுணர்வு சஞ்சலமாகவே இருந்தது. அவனால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. அவன் அம்முவை எங்கும் வெளியில் செல்ல அனுமதிப்பது இல்லை. அவர்கள் வீட்டிற்கும் பாதுகாப்பு போட்டு உள்ளான். இருந்தாலும் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது அவனுக்கு. கிஷோரின் மேலும் கண் வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் அவன் ஆட்கள்.
அம்முவிற்கு புகைப்படம் எடுக்கும் வேலை வந்தால், அவனே அழைத்து சென்று விட்டு அழைத்து வருகிறான். செல்வராஜ் அன்று கிஷோரின் நடத்தையை பார்த்ததால், கேபியின் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை ஏற்று கொள்ள முடியாமல் ஏற்றுக்கொண்டார்.
நேற்று அவளை அழைக்க செல்லும் போதும் கூட, முணுமுணுத்தார்.
“நாளைக்கு வேற ஒருத்தர் வீட்டில வாழ போற பொண்ணு, நான் சொன்னா யார் கேட்கிறா?” அவரின் முணுமுணுப்பை சட்டை செய்ய தான் அங்கே ஆள் இல்லை.
தாத்தா வேண்டுமென்றே பாட்டியிடம், “இந்த கொசு தொல்லை தாங்கலை….!” என்றார். அம்முவும் வாசுகியும் சிரிப்பை பெரும் முயற்சி செய்து அடக்கி கொண்டார்கள். கேபி தான் வேறு சிந்தனையில் இருந்தானே, அதனால் அவன் அமைதியாகவே இருந்தான்.
காரில் ஏறியவுடன் அம்மு கேட்டாள்,
“என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கே?”
அவன் மனதை சொல்லிவிட்டால் அவன் கேபி அல்லவே….
“வேற என்ன நம்ம கல்யாணம் நடக்க போகுது, அந்த பயம் தான்! நான் வேற விடாப்பிடியா, தெரிஞ்ச பிசாசையே கல்யாணம் பண்ணிக்க போறேன்…. எனக்காக ஏதும் தெரியாத தேவதை காத்திருந்து அதை மிஸ் பண்றேனோனு கொஞ்சம் கவலையா இருக்கு!” என்றான் குறும்பாக.
அவன் சொல்வது கிண்டலுக்கு தான், அவன் எதையோ மறைக்கிறான் என்று அவளுக்கும் தெரியும்!, ஆனாலும், அவள் மனம் சற்று வாடி தான் போனது!
அட, நம்ம சில்மிஷம் இவ்ளோ சென்சிட்டிவ்வா என் விஷயத்தில, உள்ளுர குளிர்ந்தவன், “என்ன யோசிக்கிற? சொல்லு!” என்றான்.
“எத்தனை லிட்டர் ரத்தம் குடிக்கலாம்னு யோசிக்கிறேன்? பிசாசமே…. ஐயாவுக்கு தேவதை வேணுமா தேவதை…. கடிச்சு வைக்கிறேன் இரு…”
“பிசாசுகிட்டே இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்? லிப் லாக் எல்லாம் என் கனவு தான் போல…” சொல்லியபடி பெருமூச்சு விட,
“காரை நிறுத்து, நான் இறங்கிக்கிறேன், உன் தேவதையை தேடி, லிப் லாக், பாடி லாக் எல்லாம் செஞ்சுக்கோ, என்னை விடு” கதவு ஹேன்டிலை போட்டு ஆட்டினாள் அம்மு.
“ஹேய், உன்னால முடியாதுனு யாராவது சொன்னா, செஞ்சு காட்டணும்டி, அதை விட்டுட்டு இப்படி ஓடுற…. அழுமூஞ்சி!” என்றவன், மெதுவாக காரை ரோட்டில் இருந்து இறக்கி ஒரு மரத்தின் கீழே நிறுத்தினான். ரோட்டில் இருந்து பார்த்தால், இவர்கள் தெரிய மாட்டார்கள், அந்த தைரியத்தில், கதவில் சாய்ந்து கொண்டு இருந்தவளின் பக்கம், நன்றாக சாய்ந்து அவளை தன்னோடு சேர்த்து முடிந்தவரை அணைத்து அவள் இதழை பற்றினான். அவள் கொஞ்சம் முரண்ட,
“ப்ளீஸ் டா, நீட் யூ, என்னமோ மாதிரி இருக்கு மனசு….” என்றான் மெதுவாக.
அவள் அவனுடன் அமைதியாக ஒன்ற, அவன் தவிப்பை எல்லாம் அவள் இதழில் காட்டினான். அந்த அசௌகரியமான இடத்திலும் அவளை முடிந்தவரை உணர்ந்தான் கேபி. அம்முவிற்கு தான் மிகவும் தவிப்பாக இருந்தது.
“அத்தான், ப்ளீஸ், இது வீடில்லை….” என்றாள்.
“உன்னை விட உன் மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம்! நம்ம கார் கண்ணாடியில் கருப்பு ஷீட் ஒட்டி இருக்கு, வெளியில் இருந்து பார்த்தா எதுவும் தெரியாது, கவலைப்படாதே” என்றவன், விலகி சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, “தேங்க்ஸ் டி…” என்றவாறு காரை கிளப்பினான்.
அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு செல்லும் போது ஆயிரம் பத்திரம் சொன்னான். “நீ இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை?” என்றாள் அம்மு.
என் பொறுப்புங்கிறது தான் ரொம்ப கவலையா இருக்கு, எனக்குனா கூட நான் இவ்ளோ கவலைப்பட மாட்டேன் என்று நினைத்துக் கொண்டவன்,
“சின்ன விஷயமா இருந்தாலும் உனக்கு டவுட் வந்தா யோசிக்காம எனக்கு கால் பண்ணிடு” என்றபடி கிளம்பினான்.
இப்போதும் அதையே தான் யோசித்து கொண்டு இருக்கிறான், கிஷோர் அமைதியாக இருப்பது தான் கேபிக்கு மிகுந்த சந்தேகம், நிச்சயம் அவன் ஏதோ பெரிசா யோசிக்கிறான் என்று அவனுக்கு தோன்றியது. அவன் தொலைபேசி அழைப்பை கண்காணிக்க முடியுமா என்று அவனின் காவல் துறை நண்பனை கேட்க, யார் யாருக்கு அழைக்கிறான் என்று நம்பர் லிஸ்ட் வேண்டும் என்றால் வாங்கி தர முடியும், அதுவே உனக்கு என்பதால் தான், அழைப்பை எல்லாம் கேட்க முடியாது, பிரச்சனை ஆகி விடும் என்று சொல்லி விட்டான். அதோடு கிஷோர் எத்தனை நம்பர் வைத்திருக்கிறான், இல்லை யார் போன் மூலம் பேசுகிறான் எதுவும் ஈசி இல்லையே கண்காணிப்பு செய்ய! அதெல்லாம் சட்டத்தின் மூலம் மட்டுமே முடியும்!
கடைசியில் அவன் பயம் உண்மையானது! வாசுகியை காணவில்லை! அவருக்காக சூப்பர் மார்க்கெட் வெளியில் காத்திருந்த வழக்கமான ஆட்டோ ட்ரைவர், அம்முவை அழைத்து,
“உள்ளே போன அம்மாவை ரொம்ப நேரமா காணுமேனு கடைக்குள் போய் பார்த்தேன், ஆளையே காணும். போன் பண்ணா கடைக்குள்ள ஒரு செல்பில் அடிக்குது” என்றார். அனைவரும் பயந்து போயினர். அழுது கொண்டே கேபிக்கு அழைத்தாள் அம்மு.
உடனே அவன் அவனின் ஆட்களிடம் அப்டேட் கேட்க, கிஷோர் அன்று கடைக்கு வந்திருப்பதாகவும், அங்கேயே தான் இருப்பதாகவும் கூறினார்கள். அதுவே அவன் செயல்பட ஆரம்பித்து விட்டான் என்று உணர்ந்து கொண்டான் கேபி. அத்தனை நாள் கடைக்கு வராதவன் அன்று வரக் காரணம் என்ன? அவன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி, அவன் இருப்பை உறுதி செய்ய தானே?
அது புதிதாக இடம் மாற்றம் செய்த சூப்பர் மார்க்கெட், அங்கே இன்னும் சிசிடிவி பொருத்தப்படவில்லை. இதையெல்லாம் கவனித்து தான் செயல்பட்டு இருக்கிறான் கிஷோர். சந்தேகப்படும்படி யாருக்கேனும் வாக்குவாதம் நிகழ்ந்ததா என்று விசாரிக்க, அப்படி ஏதும் நடக்க வில்லை என்று சொல்லி விட்டனர். அந்த கடை இருக்கும் வரிசையிலும் சிசிடிவி வைக்கும் அளவிற்கு பெரிய கடைகள் இல்லை! பக்காவாக பார்த்து, காத்திருந்து செய்து இருந்தான் கிஷோர்.
அவர்களுக்கு எப்படி தெரியும், ஒரு சின்ன பெண்ணை வாசுகியிடம் பேச வைத்து, ஒரு புர்காவையும் கொடுத்து இருந்தனர். அதை அணிந்து கொண்டு அவராகவே வெளியே வந்து கிஷோரின் ஆட்கள் நிறுத்தி இருந்த காரில் ஏறி இருந்தார் வாசுகி. அதனால் தான் அங்கு யாருக்கும் சந்தேகம் எழும்படி ஏதும் நடக்கவில்லை.
கேபியின் கவனம் முழுவதும், அம்முவின் பாதுகாப்பில் மட்டுமே இருந்தது. செல்வராஜ் வெளியில் செல்லும் போது கூட அவருக்கு ஆள் வைத்திருந்தான். வாசுகி தெரிந்த ஆட்டோவில் மட்டுமே சென்று வருவதால், ஏதேனும் பிரச்சனை என்றால் அவரை தகவல் சொல்ல சொல்லி இருந்தான். ஆனால் இப்படி வாசுகியை கடத்துவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
கிஷோருக்கு செல்வராஜ் மீது எந்த கோபமும் இல்லை, அவரால் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அம்முவை தொட முடியாத அளவு கேபி அவளை தன்னுடனே வைத்து கொண்டு அலைகிறான்… வாசுகியின் மீது அவனுக்கு மிக கோபம் இருந்தது, ஆரம்பம் முதலே, வாசுகிக்கு விருப்பம் இல்லை என்பதை காட்டிக்கொண்டே தானே இருந்தார்! அம்மாவை தூக்கி, மகளை தன்னை தேடி வர வைக்க எண்ணினான் கிஷோர்.
கேபி, தனக்கு தெரிந்த எல்லா வகையிலும் தேடுதல் வேட்டையை தொடங்கி இருந்தான். ஆட்களை மட்டுமே வைத்து அது வரை காய் நகர்த்தி கொண்டு இருந்தான் கிஷோர். அவன் உள்ளுரிலேயே தான் இருந்தான். கேரளாவில் மரம் வாங்க செல்லும் போது அவனுக்கு சிலரோடு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் மூலம் ரவுடிகள் இறக்கி இவர்களின் மரக்கடையில் கூலி என்ற போர்வையில் வைத்து கொண்டு தான் இது அத்தனையும் செய்கிறான் கிஷோர்.
கேபிக்கு புரிந்தது, என்று அம்முவை தூக்குகிறார்களோ, அன்று கிஷோர் காணாமல் போவான். ஆனால் அதற்கு முன்பு அவன் மேல் சந்தேகம் வராதவாறு ஏதேனும் ஏற்பாடு செய்வான் என்று உறுதியாக நம்பினான் கேபி. அதனால் அம்முவிடம், உனக்கு நிச்சயம் போன் வரும், நேரா விஷயத்தை சொல்றானா, இல்லை வேற மாதிரி டைவேர்ட் பண்ணி பிளான் பண்றானா தெரியலை…. நீ தைரியமா இரு, நான் இந்த தடவை அவனை சும்மா விட போறதில்லை. அவனுக்கு டார்கெட் நீ தான், ஸோ அத்தையை ஏதும் செய்ய மாட்டான் என்று அவளுக்கு தைரியம் ஊட்டினான். அதே போல் வீட்டினருக்கும் தைரியம் சொன்னான். விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டனர். அனைவரும் இறைவனை பிராத்தித்தபடி இருந்தனர்.
கிஷோரின் அடுத்த நடவடிக்கைக்காக காத்திருந்தனர் அனைவரும்!